திங்கள், அக்டோபர் 25, 2010

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் பூதங்கள்..

தமிழகம் முழுவதும் புறநகர்த் தனியார் பேருந்துகளில் சத்தமில்லாமல் பயணச்சீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாய் வீதம் விலை அதிகரித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இம்மாதிரி கட்டணம் உயர்த்தப்பட்டதே தெரியாதது போல தமிழக அரசு மாய்மாலம் செய்கிறது.

டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, மொத்தக் கட்டணத்தில் ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை தனியார் பேருந்துகள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் கருணாநிதி கண்டித்தார். அரசு அனுமதியின்றி தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்து ஒரு மாதமாகிவிட்டது. இதுவரை எந்த ஒரு தனியார் பேருந்து மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதில் கைவைத்தால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால்தான், அரசு போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தாலும் கண்டுகொள்ளாது இருக்கிறது அரசு.

உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் டீசல் விலை அதிகரிப்பு 30 சதவீதமாக உள்ளது. தவிர ஊழியர் சம்பளம், உதிரிபாகங்களின் விலை உயர்வு போன்றவையும் போக்குவரத்துக் கழகங்களின் கழுத்தை நெரிக்கின்றன. எனவே தான், நகரப் பேருந்துகளில் 'சொகுசுப் பேருந்து', 'தாழ்தளப் பேருந்து' என்ற பெயரில் பேருந்துகளைப் பிரித்து அவற்றிற்கு மட்டும் கட்டணங்களை நாசூக்காக உயர்த்தியது தமிழக அரசு. சிறிது சிறிதாக பழைய பேருந்துகளை மாற்றும்போது அவற்றை 'சொகுசுப் பேருந்து'களாக மாற்றுவதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இவை பார்ப்பதற்கு மட்டுமே அழகாகவும் லட்சணமாகவும் காட்சி அளிக்கின்றன. இதில் பயணம் செய்தால் முதுகுவலி வருகிறது என்கின்றனர் பயணிகள். ஆனால், போக்குவரத்துக் கழகங்களின் முதுகுவலியைப் போக்குவனவாக இவைதான் தற்போது விளங்குகின்றன.

அரசு போக்குவரத்து நிறுவனங்களே மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியதைக் கண்ணுற்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள், தாங்களும் கூடி ஆலோசித்து, கட்டணச்சீட்டு ஒன்றிற்கு ஒரு ரூபாயாவது அதிகரிக்கத் திட்டமிட்டு அதிரடியாக விலையை (ஜூலை மாதம் துவங்கி) ஏற்றினர். இது குறித்து அரசிடம் முறையீடு செய்யவோ, வேண்டுகோள் விடுக்கவோ அவர்கள் தயாரில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் பார்த்து 'கவனித்து விட்டதாக' தகவல். அதனால் தான், தனியார் பேருந்து உரிமையாளர்களின் அத்துமீறலை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்கிறார்கள், தனியார் பேருந்து நடத்துனர்கள்.

ஒரு சிறு கணக்கு போட்டுப் பாருங்கள். தனியார் பேருந்துகள் இந்த ஒரு ரூபாய் அதிகரித்த கட்டணத்தால் பெறும் லாபம் புரியும்.

தனியார் புறநகர்ப் பேருந்துகள் சிறு நகரங்களை இணைப்பவை. உதாரணமாக கோவை- திருப்பூர், கோவை- பொள்ளாச்சி, ஈரோடு- கோவை, ஈரோடு- சேலம் என்று நகர்களை இணைப்பவையாகவே அவை இயங்குகின்றன. நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ஆறு முறை (ட்ரிப்) இரு நகரங்களிடையே அவை சென்று வருகின்றன. ஒரு முறைக்கு குறைந்தபட்சம் 48 பேர் பயணிக்க முடியும். தவிர செல்லும் வழியில் இடை நிறுத்தங்களில் பயணிகளை அனுமதிக்கின்றன. அந்த வகையில் குறைந்தபட்சம் 40 பயணிகள் பயணிக்கின்றனர். அதாவது மொத்தத்தில் ஒரு முறைக்கு குறைந்தது 80 பயணிகள் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதுவே 120 வரை அதிகரிப்பதும் உண்டு.

ஆக ஒரு நாளுக்கு, குறைந்தபட்சம் (6 X 2 X 80) ரூ. 960 கூடுதலாக (பயணச் சீட்டிற்கு ஒரு ரூபாய் என்ற கணக்கீட்டில்) வசூலாகிறது. இதுவே, பயணச் சீட்டிற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 வரை கூடுதலாக வசூலிப்பதைக் கணக்கிட்டால் இந்த லாபம் இன்னும் அதிகமாக இருக்கலாம். தவிர ஐம்பது பைசா சில்லறை கொடுக்காமல் இருப்பதன் வாயிலாகவும் தனியார் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயாவது தேறும்.

இதன்மூலம் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒவ்வொரு தனியார் பேருந்தும் குறைந்தபட்சம் (4 X 30 X ரூ 960.00 ) ரூ. ஒரு லட்சம் வரை கூடுதலாக சம்பாதித்துள்ளன. இதில் பிச்சைக்காசுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கையூட்டாகத் தரப்பட்டுள்ளது.

கைநீட்டி வாங்கியதன் நன்றிக்கடனாகவே அரசு தனியார் பேருந்துகளின் அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதற்கு, முறையாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டுப் போக வேண்டியது தானே? ''தமிழகத்தில் மட்டுமே பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை; நாட்டிலேயே இங்குதான் பேருந்துக் கட்டணங்கள் குறைவாக உள்ளன'' என்று தம்பட்டம் அடிக்காமல் இருக்கலாமே!

தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டிற்கு பல உதாரணங்கள் கூற முடியும். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையிலும் இவ்வாறுதான் நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைப்படி தலையிட்டது அரசு. ஆனால் ஒரு பிரயோசனமும் மக்களுக்கு இல்லை. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தனியே அமைச்சரைச் சந்தித்து 'கவனித்து விட்டதாக' தகவல். தற்போது நீதிபதி கோவிந்தராஜர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது பரிந்துரைக்கு அவர் பொறுப்பில் இருந்தபோதே மரியாதை இல்லை. தனியார் பள்ளிகள் இஷ்டம் போல ரசீதின்றி கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தன. இனி எந்தக் கட்டுப்ப்பாடும் இல்லாமல் வசொல் வேட்டை தொடரும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இக்குழு சமர்ப்பிப்பதாக இருந்த மறுபரிசீலனை அறிக்கை இனி எப்படி வருமோ, அந்த கோபாலபுரத்தில் எழுந்தருளியுள்ள மாயக் கண்ணனுக்கே வெளிச்சம்!

திரையரங்க கட்டணங்களும் (புதுப்படங்களுக்கு மட்டும் பிரத்தியேக கட்டண உயர்வு) இதேபோலத் தான் அரசின் சால்ஜாப்பு மிரட்டல்களால் கட்டுப்படாமல் இருக்கிறது. ஆசிரியர் பனி நியமனத்தில் நடந்த களேபரங்கள் அனைவரும் அறிந்தவை. உணவகங்களுக்கு விடுக்கப்பட்ட ''குறைந்தவிலை சாப்பாடு போடாவிட்டால் நடவடிக்கை'' என்ற மிரட்டலுக்கு நேர்ந்த கதியும் அனைவரும் அறிந்தது தான்.
இவ்வாறாக, தமிழக அரசு நடத்தும் நாடகங்களில் பலனுறுவது அமைச்சர்களும், முறைகேட்டில் ஈடுபடுபவர்களும் மட்டுமே என்ற நிலை நிலவுகிறது. பேய் ஆட்சி செய்யும் நாட்டில் பூதங்கள் பிணம் தின்னுவது (சாத்திரங்களே சாப்பிடும்போது) அதிசயமாக இல்லை.
.
ஆனால், தமிழகத்தில் மட்டுமே கருத்துரிமை மதிக்கப்படுகிறது என்றும் மார் தட்டிக் கொள்கிறார்கள். யார் சொல்வதையும் கேட்டால் தானே, அதனால் கோபமோ, அச்சமோ வரும். இந்த அரசு தான் எதையும் காதில் வாங்கும் அரசு இல்லையே. கைகளில் வாங்குபவர்களுக்கு காதுகள் கேட்பது நல்லதல்ல என்பது - உண்மைதான் உடன்பிறப்புக்களே...
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக