புதன், அக்டோபர் 31, 2012

இறைவன் அளித்த அரிய வாய்ப்பு


நமது நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்த மாபெரும் ஊழல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். வெறும் ரூ.  64 கோடி ஊழலுக்காக ஆட்சியையே இழந்த ராஜீவ் காந்தி இருந்த அதே காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும் மத்திய கூட்டணி ஆட்சியில் தான், ரூ. 1.76 லட்சம்  கோடி மதிப்புக்கு நாட்டின் கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது. இதை முன்னின்று நடத்தியவர்  திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா. அவருடன் இணைத்து கொள்ளை அடித்தவர் திமுக தலைவரின் மகள் கனிமொழி. இவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊழல் புரிந்தவர்கள் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் கபில் சிபல், பிரதமர்  மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோர்.

இந்த ஊழல் குறித்து சில பத்திரிகைகளில் லேசாக விஷயம் கசிந்தவுடன் அரசியல் அரங்கில் சூடு பிடிக்கத் துவங்கியது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும், இடதுசாரிக் கட்சிகளும் ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் தீவிரமாகப் போராடினர். ஆனால், அதிகார மமதையில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்புகள் ஒரு பொருட்டாக இருக்கவில்லை தவிர,  ஊழலில் ஈடுபட்டவர்கள் யாரும் அதை ஒப்புக்கொள்வது வழக்கத்திலும் கிடையாதே?

இந்த நேரத்தில் தான், ஆபத்பாந்தவனாக களத்தில் வந்து குதித்தார் 'அரசியல் தரகர்' என்று வசை பாடப்படும் சுப்பிரமணியன்சுவாமி. அவரது கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்வதற்காகவே ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து தனி மனிதராகப் போராடினாரோ  என்று எண்ணத் தோன்றுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஒரு நுனியைப் பிடித்துக் கொண்ட அவர் அது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதமே ஊழலை அம்பலப்படுத்துவதற்கான முதல்  நடவடிக்கை. வழக்கம் போல நமது மௌன சாமி மன்மோகன் சுவாமியின் கடிதத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக  நீதிமன்றத்தின் படிகளை சுவாமி தொட்டபோது, ஊழலுக்கு எதிரான குரலின் ஆவேசம் ஒலித்தது.

சுவாமியின் இடையறாத சட்டப் போராட்டம், வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை சேகரித்தல், அவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்துதல் என்று ஸ்பெக்ட்ரம் வழக்கு சூடு பிடித்தது. பிறகு நடந்ததை நாடு அறியும்.

ஊழலுக்கு எதிராக தனியொரு மனிதராக, எள்ளல்களையும் ஆசைகாட்டல்களையும் பொருட்படுத்தாமல்  போராடிய சுப்பிரமணியன் சுவாமியால் தான், ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் தொடர்புடைய அமைச்சர் ஆ.ராசா பதவி இழந்தார்; திமுக குலக்கொழுந்து சிறை செல்லவும் நேர்ந்தது; முறைகேடாக ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள்  அனைத்தையும் நீதிமன்றம் ரத்து செய்தது. 2 ஜி ஊழல் அம்பலப்பட்டதால், 3 ஜி அலைக்கற்றைகளை முறைப்படி ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய  காங்கிரஸ்  அரசுக்கு ஏற்பட்டது.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரிய ஊழல்கள் - நிலக்கரி ஊழல் போல- அம்பலப்பட்டு நிற்கின்றன. இதற்கு அடிகோலியது சுவாமியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் தான் எனில் மிகையில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை அற்புதமான ஓர் ஆவணமாக '2G   Spectrum Scam' என்ற தலைப்பில்ஆங்கிலத்தில்,  2011 ல் சுவாமி வெளியிட்டார். ஊழலுக்கு எதிராகப் போராடுவோருக்கு இந்நூல் பல திறப்புகளை அளிக்கக் கூடியது. இந்நூலை தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு நண்பர் திரு ஹரன் பிரசன்னா மூலமாகக் கிடைத்து. இது ஓர் அரிய வாய்ப்பு தான். கடவுளுக்கும் நண்பர் ஹரனுக்கும் நன்றி.

தமிழ் ஹிந்து இணையதளத்தில் நான் எழுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த கட்டுரைகளே இந்த வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்தன. ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாகவே இருந்தது. சுவாமி போன்ற மேதை எழுதிய புத்தகத்தை, அதுவும் பெரிய அளவிலான,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புத்தகத்தை என்னால் மொழி பெயர்க்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. எனினும் சவாலாக இதை மேற்கொள்ள முடிவு செய்தேன்.

கிட்டத்தட்ட 4 மாதங்கள் தினசரி குறைந்தபட்சம் 3 மணிநேரம் இப்பணியில் ஈடுபட்டேன். உண்மையிலேயே சவாலான பணி தான். ஏனெனில், இந்நூலில் வரும் பல சொற்கள் வர்த்தகம், பொருளாதாரம் சார்ந்தவை. பல சொற்களுக்கு தமிழில் வார்த்தையே இல்லை. தவிர சுவாமியின் ஆங்கிலம் கலப்பு வாக்கிய அமைப்பாக இருந்தது; பல இடங்களில் அவரது மேதா விலாசமும் வெளிப்பட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் அல்லவா?

இந்த கடும் உழைப்புக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டுமே வெளியான சுப்பிரமணியன் சுவாமியின் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த நூல இப்போது தமிழிலும் வெளியாகி இருக்கிறது. கிழக்கு பதிப்பகம் இந்நூலை சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கிறது. இதில் என் பங்கும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது- தேசத்துக்கு என்னால் ஒரு சிறு பணி ஆற்றப்பட்டுவிட்டது.

இந்நூல் குறித்த அறிமுகம் மட்டுமே இது... இந்நூலின் பல அம்சங்கள் குறித்து விரிவாக எழுத உத்தேசம் இருக்கிறது. ஏனெனில், இந்நூல் ஓர் அற்புதமான கருவூலம். இதில் உள்ள மூல ஆவணங்களைக் கொண்டு மேலும் பல நூல்களை எழுத முடியும். நூலின் பக்கங்கள் யாவுமே ஊழலுக்கு எதிரான  தீப்பிழம்புகள் போலவே இருப்பதை, படித்தால் தான் உணர முடியும்.

இந்நூலை தமிழ் மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும். இந்நூலை  வெளியிட்ட கிழக்குப் பதிப்பகத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நாம் அனைவரும் நாட்டின் புதல்வர்கள் என்ற முறையில், ஊழலை எதிர்ப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. சுப்பிரமணியன் சுவாமியின் அற்புதமான இந்நூலை தமிழில் எழுத வாய்ப்பளித்த கிழக்கு பதிப்பகம் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு எனது நன்றிகள் என்றும்  உண்டு.


நூல் குறித்த விவரங்களுக்கும், நூலை வாங்கவும்...

                 தொடர்பு கொள்க: கிழக்கு இணையதளம் 

------------------------------------------------

நூல் முகவரி:

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் 

ISBN 978-81-8493-703-9
Genre Politics
Book Title 2G Spectrum Uzhal
Pages 240
Format PB
Year Published 2012
Price :              Rs 195.00



.

புதன், அக்டோபர் 17, 2012

அரசுக்கு ஓர் ஆலோசனை




நூல் அறிமுகம் 

நூல்விவசாயிகளைப் பாதுகாப்போம் 
ஆசிரியர்சு.சண்முகவேல்,  
பக்கங்கள்: 80விலைரூ. 40.00
வெளியீடுதிருப்பூர் அறம் அறக்கட்டளை,    
          எண்: 97/98 , மிஷன் வீதி, திருப்பூர்- 641604.


விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சு.சண்முகவேல் ஈரோட்டில் பதிப்புத் துறையில் பணி புரிபவர். தொழில் மாறினாலும், தனது பாரம்பரிய வேரை மறக்காமல்தற்போது நலிவடைந்து வரும் விவசாயத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து, தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதி இருக்கிறார்.

விவசாயம் என்பது நமது நாட்டில் இப்போது துக்கமான ஒரு சுமையாக மாறி வருகிறது. பல நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி கூட, தனது நிலத்தை கூறு போட்டு   விற்றுவிட்டு வேறு தொழிலில் புகுவது சாதாரணமாகி விட்டதுபெரு விவசாயிகளின் நிலைமையே இப்படி என்றால், சிறு விவசாயிகளின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லைஇயற்கைச் சீற்றங்களில் பாதிப்புதண்ணீர்ப் பற்றாக்குறைஇடுபொருள் விலை உயர்வு,  விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்காமை, வேலையாட்கள் தட்டுப்பாடு, அரசின் பாராமுகம் போன்ற காரணிகளால் விவசாயம் செய்வதே கொடுங்கனவாக மாறி இருக்கிறது. ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாமல் தத்தளிக்கும் அவர்கள், காலத்தின் கோலத்தால் அதிலிருந்து தப்பினால் போதும் என்று ஓடுகிறார்கள். விளைவாக, விளைநிலங்கள் மனைப் பிரிவுகளாகின்றன.

இந்த நிலை நீடித்தால் என்ன ஆகும்?  1870-களில் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் லட்சக் கணக்கானோர் பலியான கதை போன்ற துயரம் மீண்டும் நிகழும். 130 கோடி மக்களுக்கு உணவளிக்க முடியாவிட்டால், பெரும் வன்முறையும் சமூகச் சீர்குலைவும் ஏற்படும். அந்த நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்கிறார் நூலாசிரியர்.

   இந்த நிலைக்குத் தீர்வென்ன? பிரச்னை தெரிந்துவிட்டாலே பாதித் தீர்வு கிடைத்து விடும். அதுபோல, விவசாயத்தைச் சீர்குலைக்கும் காரணிகளைக் கண்டறிந்து பட்டியலிடும் ஆசிரியர், அதற்கான தீர்வுகளை தனக்குத் தெரிந்த அனுபவ ஞானத்துடன் கூறி இருக்கிறார். அரசு செய்ய வேண்டிய சில செயல்திட்டங்களை முன்வைத்து, அதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார். இந்த நூலில் உள்ளவை இறுதியான திட்டங்கள் அல்ல.  எனினும், விவசாயம் மேம்பட அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் பல இதில் இருக்கின்றன. குறிப்பாக விவசாயிகளுக்கான நஷ்டஈடு திட்டம், அவர்களை தடம் மாற்றாமல் பயணிக்க வைப்பதாக உள்ளதைக் குறிப்பிடலாம்.

   உண்மையில் இதுபோன்ற ஆய்வுகள் அரசால் நடத்தப்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள்  செய்ய வேண்டியவை;  விவசாய சங்கங்களும் வேளாண் விஞ்ஞானிகளும்  கவலை கொள்ள வேண்டியவைஇதை விவசாயக் குடிமகன் என்ற முறையில் செய்திருக்கும் நூலாசிரியர் சு. சண்முகவேல் பாராட்டுக்குரியவர். இந்நூலை வெளியிட்டுள்ள திருப்பூர் அறம் அறக்கட்டளையின் பணி பாராட்டுக்குரியது. இந்நூலை விவசாய வளர்ச்சிக்குப் பாடுபடும் அனைவரும் படிப்பது நாட்டுக்கு நல்லது.  

----------------------
விஜயபாரதம் (19.10.2012)