செவ்வாய், மார்ச் 29, 2011

‘அந்தரடிசான் சாகிப்’களின் அற்புதக் கதை


சந்தேகமில்லாமல், இந்தத் தேர்தலில் பல தரப்பினரின் அனுதாபத்தை சம்பாதித்திருப்பவர் மதிமுக தலைவர் வைகோ தான். அவரே ஒரு (விகடன்) நேர்காணலில் கூறி இருப்பது போல, பல ஆயிரம் பொதுக்கூட்டங்களில் பேசிக் கிடைத்த பெருமையை இந்த இரண்டு வார மௌனம் அவருக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறது. இதற்காக அவர் ஒரு தேர்தலை இழந்திருக்கிறார். 'இந்தத் தேர்தலை வேண்டுமானால் இழந்திருக்கலாம்; ஆனால் தேர்தலுக்குப் பின்னும் இருப்போம்' என்று பூடகமாகக் கூறி இருக்கிறார், வைகோ.


ஆனால் பலரும் இப்போது அனுதாபப்படுவது போல, அவர் மிகவும் தெளிவான தலைவராக இருக்கவில்லை என்பது, அவரது அரசியல் வாழ்வைக் கூர்ந்து கவனித்து வந்திருப்பவர்களுக்குத் தெரியும்.


தேர்தல் காலத்தில் செல்லாக்காசுகள் கூட ஆர்ப்பரிக்கும் நிலையில், கிழிந்த ரூபாய் நோட்டானாலும் வங்கியில் செலுத்துவதற்குரிய தகுதி கொண்டிருப்பது மதிமுக என்பதில் ஐயமில்லை. அதனால் தான் அன்புச் சகோதரி முதற்கொண்டு தானைத்தலைவர் வரை பலரும் வைகோவுக்கு மடல் எழுதி இருக்கிறார்கள். பிறருக்கு மடல் எழுத வேண்டிய நிலையில் இருந்த வைகோவுக்கு இந்நிலை ஏற்பட்டது ஏன் என்று பார்ப்பதும் அவசியம்....

.............
..........................................
'யாருக்கும் வெட்கமில்லை' என்ற தலைப்பில் 'துக்ளக்' சோ எழுதிய நாடகம் தான் நினைவில் வருகிறது. அரசியலில் நிலைக்கவும் வெற்றிகளைக் குவிக்கவும் கொள்கையற்ற கூட்டணிகளில் கும்மாளமிடும் தமிழக அரசியல் கட்சிகளின் இழிநிலையை, மதிமுகவின் வெளியேற்றம் தற்போது அம்பலப்படுத்தி இருக்கிறது.


அந்த வகையில் நமது நன்றிக்குரியவராக மாறி இருக்கிறார் வைகோ. தாவும் பாவங்களில் அவர் முற்காலத்தில் ஈடுபட்டிருந்தாலும், இப்போது அவர் காக்கும் அமைதி அவரது கௌரவத்தை நிலை நிறுத்தி இருக்கிறது. தேர்தலுக்குப் பின் கூட்டணிகளில் நடக்கவுள்ள இசை நாற்காலி விளையாட்டில் மதிமுக கண்டிப்பாக இடம்பெறாது என்பதை இப்போதே உறுதியாக நம்பி மகிழலாம்.....


--------------------------------

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

.

சனி, மார்ச் 26, 2011

கொடிய வெயிலில் ஒரு நிழல் மரம்

கொளுத்தும் தேர்தல் வெயிலின் இடையே, நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி.

ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு அரசியல் நடத்தும் பலரைப் பற்றிய அக்கறையின்றி, பின்னலாடைத் தொழில்நகரான திருப்பூரில் ஆதரவற்ற சிறுவர்களுக்காக அர்ப்பண மனப்பான்மையுடன் பாரதியார் குருகுலம் நடத்துகின்றனர் சிலர்.

அவர்களைப் பற்றிய அறிமுகம் இதோ...

காண்க: தமிழ் ஹிந்து / திருப்பூரில் பாரதியார் குருகுலம்.


.

புதன், மார்ச் 23, 2011

அகந்தையால் தடுமாறும் அ.தி.மு.க; நிம்மதி பெறுகிறது திமுக!

அதீத தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் ஒரு நூலிழை தான் வித்யாசம் என்பார்கள்- அதி புத்திசாலிக்கும் பைத்தியத்திற்கும் இருக்கும் அதே நூலிழை வித்யாசம் தான். இந்த வித்யாசம் தான் வாழ்வை இயக்குகிறது. தன்னை உணர்ந்தவன் சாதனை புரிகிறான். தன்னை மாபெரும் சாதனையாளன் என்று தனக்குத் தானே எண்ணிக் கொள்பவன் சோதனைகளை அடைகிறான். கடைசியில் அவனுக்கு வேதனை தான் மிஞ்சும்.

தேர்தல் களத்தில் தத்துவமா என்ற கேள்வி எழலாம். குருக்ஷேத்திர போர்க்களத்தில் தானே கீதை ஞானம் பிறந்தது? தமிழக தேர்தல் களம் இப்போது வைகோவுக்கு மயான வைராக்கியத்தையும், தமிழக வாக்காளர்களுக்கு ஜெயலலிதா குறித்த மனச் சித்திரத்தையும் அளித்திருக்கிறது. ஒருவகையில், தேர்தல் முடிவுகளை நிர்மாணிக்கும் முக்கிய கருதுகோள்களை, அண்மைய தேர்தல் நிகழ்வுகள் அளித்துள்ளன.....
....................
திமுக தலைவர் நடத்திய அரசியல் நாடகம் சந்தி சிரித்திருந்த நிலையில், ஆண்டிமுத்து ராசாவின் பினாமி கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி (மார்ச் 16) ஆளும் கூட்டணி திகைப்பில் ஆழ்ந்திருந்த தருணம், ஜெயலலிதா நிகழ்த்திய இமாலய சறுக்கல், சற்றும் எதிர்பாராதது. வைகோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் முடிவில் ஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்த 160 அதிமுக வேட்பாளர் பட்டியல், அவரது கூட்டணித் தோழர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் திகைப்பில் ஆழ்த்தியது. 'ஜெயலலிதா மாற மாட்டார்' என்ற பேச்சுக்கள் புழங்கத் துவங்கின.
...................
தன்னிச்சையான போக்கு, யாரையும் துச்சமாகக் கருதும் அகந்தை, எவரையும் மதிக்காத கர்வம் போன்ற காரணங்களால்தான் முந்தைய காலங்களில் ஜெயலலிதா ஆட்சியைப் பறிகொடுத்திருந்தார். தற்போது அவர் மாறிவிட்டார் என்று நம்பப்பட்டு வந்தது. திமுக தலைமையின் அதி பயங்கர ஊழல்களுக்கு ஒரே மாற்றாக ஜெயலலிதா உருவாவார் என்ற நம்பிக்கை காரணமாகவும் அவரது பழைய குணாதிசயங்களை மறக்க தமிழகம் தயாராக இருந்தது. அந்த எண்ணத்தைத்தான், ஜெயலலிதா தனது ஒரே பட்டியலில் தகர்த்து எறிந்தார்....
...................
--------------------
நன்றி: விஜயபாரதம் (01.04.2011)
.

சனி, மார்ச் 12, 2011

மூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்


எந்த ஒரு நாட்டிற்கும், நமக்கு கிடைத்துள்ள அற்புதமான ' தூய திருவாளர்' மன்மோகன் சிங் போன்ற பிரதமர் கிடைக்கவே மாட்டார். அண்மையில் காஷ்மீரில் (மார்ச் 4) அவர் பேசுகையில் ''மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக பி.ஜே.தாமஸ் நியமனம் செய்யப்பட்டதற்கு நானே பொறுப்பேற்கிறேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். உச்ச நீதி மன்றத்தின் ‘பி.ஜே.தாமஸ் நியமனம் ரத்து’ என்ற உத்தரவுக்குப் பிறகு, இவ்வாறு மொழிந்திருக்கிறார், பிரதமர். இவர் பொறுப்பேற்காவிட்டால் யார் இவரை விடப் போகிறார்களாம்? தீர்ப்பு வெளியானவுடன் (மார்ச் 3), ''தீர்ப்பை மதிக்கிறேன்'' என்று பெருந்தன்மையாக (!) வேறு கூறினார் பிரதமர்.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக ஊழல்கறை படிந்த பி.ஜே.தாமஸ் நியமிக்கப்படுவதற்கு (செப். 6, 2010)முன்னரே, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் (பாஜக) தேர்வுக்குழுவில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை சட்டை செய்யாமல் "பாமாயில் ஊழல் புகழ்' தாமஸை மிகுந்த பிடிவாதத்துடன் சிவிசி.யாக நியமனம் செய்து மகிழ்ந்தனர் பிரதமர் மன்மோகனும் உள்துறை அமைச்சர் சிதம்பரமும். அதனை எதிர்த்து, லிங்டோ உள்ளிட்ட பொதுநல விரும்பிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது, நீதிபதிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறியது. ஒரு பொய்யைக் காப்பாற்ற ஒன்பது பொய் சொன்ன கதையாக, தாமஸ் மீதான வழக்கு விவரமே மத்திய அரசுக்குத் தெரியாது என்று கூறி நீதிபதிகளையே அதிர்ச்சி அடையச் செய்தது மத்திய அரசு. அப்போது நீதிமன்றம் கேட்ட பல கேள்விகளுக்காகவே, மானம் உள்ள எவரும் உடனடியாக பதவியை விட்டு விலகி ஓடியிருப்பார். அது இல்லாத மன்மோகன் சிங், வழக்கம் போல சாந்த சொரூபியாகக் காட்சி அளித்தார்.

அப்போதும் கூட பதவி விலக மறுத்தார் பி.ஜே.தாமஸ். அவரிடம் மத்திய அரசின் தூதர்கள் பலர் கெஞ்சிக் கேட்டும் அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதில் விசித்திரம் என்னவென்றால், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். தான் நியமித்த ஒருவரையே 'கண்டனத் தீர்மானம்' கொண்டுவந்து நீக்குவது என்பது அரசு தன் மீதே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது போன்றது தான். கடைசியில், தாமஸின் விதியை நீதி மன்றத்திடம் ஒப்புவித்துவிட்டு வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது மன்மோகன் சிங் குழுவால்.

இப்போது இறுதித் தீர்ப்பு வெளியாகிவிட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வதந்திரா குமார் ஆகியோரடங்கிய பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் செய்த ஒரு நியமனத்தை முதல்முதலாக ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

"ஊழல் கண்காணிப்பு அதிகாரியை நியமிப்பது தொடர்பான உயர்நிலைக் குழு பரிந்துரைகளில் எவ்வித சட்ட விதிமுறைகளும் இல்லை. இதன்படி செப். 3, 2010-ல் இந்தக் குழு வெளியிட்ட பரிந்துரைகள் சட்டத்துக்கு உட்பட்டவை அல்ல. எனவே, சிவிசி.யாக பி.ஜே. தாமஸ் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்கிறோம்'' என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

''ஊழல் கண்காணிப்பு அமைப்பின் மீதான நம்பகத் தன்மை, இந்த அமைப்பின் தலைவர் மீதான நம்பகத் தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவை. இவை இரண்டும் சிவிசி சட்ட விதிகளுக்கு உட்பட்டவை. பி.ஜே. தாமஸ் நியமனத்தில் உயர் நிலைக் குழு உரிய ஆவணங்களைப் பரிசீலிக்கவில்லை. தாமஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து இக்குழு பரிசீலிக்கவில்லை. அவரது படிப்பு, பதவி உள்ளிட்டவற்றை ஆராய்ந்த இக்குழு, கண்காணிப்பு ஆணையத்தின் நம்பகத் தன்மையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டது. எதிர்க்கட்சித் தலைவர் நிராகரித்தும் அதை மத்திய அரசு ஏற்கவில்லை. இது மக்களின் நம்பகத்தை இழந்துவிட்டது'' என்று தீர்ப்பில் கூறினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா.

அது மட்டுமல்ல, ''மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக அரசு அதிகாரிகளை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. பிற துறைகளில் உள்ள நேர்மையானவர்களைப் பரிசீலிக்கலாம்'' என்றும் ஆலோசனை வழங்கி இருக்கிறது உச்ச நீதி மன்றம்.

இத்தீர்ப்பு வெளியானவுடன் தாமஸ் பதவி விலகிவிட்டதாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். ஆனால், அதனை தாமஸின் வழக்கறிஞர் வில்ஸ் மாத்யூஸ் மறுத்துவிட்டார். தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு செய்ய தாமஸ் தயார். இப்போது அவரிடம் பதவி விலகுமாறு மன்றாடிக் கொடிருக்கிறது மத்திய அரசு. தாமஸை நியமிக்க வேண்டாம் என்று மன்றாடிய சுஷ்மாவின் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த இழிநிலை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்குமா?

''இத்தீர்ப்பு மத்திய அரசின் முகத்தில் பூசப்பட்ட கரி'' என்று சரியாகவே சொல்லி இருக்கிறார் பாஜக தலைவர் நிதின் காட்கரி. ''சுதந்திர இந்திய வரலாற்றில் இப்படிப்பட்ட தீர்ப்பு வந்திருப்பது இதுவே முதல்முறை. மத்திய அரசு மீதான இந்த கண்டனத் தீர்ப்பிற்கு சோனியாவும் பொறுப்பேற்க வேண்டும்'' என்று கூறியுள்ளார் அத்வானி. செவிடன் காதில் சங்கு ஊதியது போலவே, இப்போதும் அமைதி காக்கிறார், காங்கிரசை வாழவைக்க வந்த இத்தாலிய அன்னை.

மறையவே மறையாத கோத்ரா கறை:

இந்தத் தீர்ப்புக்கு முன்னதாக கடந்த பிப். 24ல் குஜராத் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் மத்திய அரசின் ஆணவப் போக்கிற்கு விழுந்த அடி என்று தான் சொல்ல வேண்டும். கோத்ராவில் எரிக்கப்பட்ட 59 கரசேவகர்களின் உயிர்மீது விளையாடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கபட நாடகத்தை தோலுரித்திருக்கிறது சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு.

2002, பிப். 27 ல் குஜராத் மாநிலம், கோத்ரா ரயில்நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் - எஸ் 6 கோச்சுக்கு தீயிடப்பட்டது. அயோத்தியில் நடந்த கரசேவை நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய 59 கரசேவகர்கள் உயிருடன் கொளுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அதையடுத்து நடந்த மாபெரும் மதக் கலவரத்திற்கு வித்திட்டது, கோத்ரா ரயில் எரிப்பு. இதற்கான திட்டமிட்ட சதி நடந்திருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது. குஜராத் அரசு நியமித்த நானாவதி கமிஷனும் ரயில் எரிப்பின் பின்னணியில் இருந்த சதியை அம்பலப்படுத்தியது.

ஆனால், 'ரயில் எரிக்கப்படவில்லை; அது ஒரு விபத்து' என்று அப்போதைய ரயிலவே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பிரசாரம் செய்தார். இதன் உச்சகட்டமாக, கரசேவகர்களே தாங்கள் கொண்டுவந்த எரிபொருளால் தங்களை எரித்துக் கொண்டார்கள் என்றும் கூட மதச்சார்பின்மையைக் குத்தகைக்கு எடுத்தவர்கள் முழங்கினார்கள். இத்தகைய விஷமப் பிரசாரம், மேலும் மத விரோதத்தையே வளர்த்தது.

தனது பொய்பிரசாரத்தை நிலைநாட்ட யு.சி.பானர்ஜி தலைமயில் ஒரு விசாரணை கமிஷனை லாலு நியமித்தார். அவரது மனமறிந்த பானர்ஜி, அதற்கு பழுதில்லாமல், ''கோத்ராவில் ரயில் யாராலும் எரிக்கபப்டவில்லை; அது ஒரு விபத்து'' என்று அறிவித்தார். அதை வைத்துக்கொண்டு ஹிந்துவிரோத சக்திகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் கணக்கில் அடங்காதவை.

ஆனால், குஜராத் அரசு எந்த நெருக்கடிக்கும் பணியாமல், ரயில் எரிப்பு சதிகாரகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியது. மௌலவி உமர்ஜி தலைமையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி இது என்று காவல்துறை கண்டறிந்தது. சிறப்பு புலனாய்வுக் குழு, 94 பேர் மீது குற்றம் சாட்டி வழக்கு தொடுத்தது. ஆனால், பெரும்பாலான ஊடகங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் போய்ப் பிரசாரத்தையே தாங்களும் தொடர்ந்தன. இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மதச்சார்பின்மை வாதிகளின் முகமூடிகளைக் கிழித்துள்ளது. ‘’சபர்மதி ரயிலின் பெட்டி எஸ்-6 எரிந்து அதில் இருந்த 59 கரசேவகர்கள் இறந்த சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட சதி’’ என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் குற்றத்தில் தொடர்புடைய 33 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறியது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம். இவர்களில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது (மார்ச் 1). ஆயினும், உமர்ஜி உள்ளிட்ட 61 பேர் மீது போதுமான சாட்சியங்கள் இல்லை என்று கூறி விடுவித்தது. (இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது).

கோத்ரா ரயில் எரிக்கப்பட்டபோது அதை விபத்தாக சித்தரித்த மத்திய அரசு இப்போது அமைதி காக்கிறது. முன்னாள் மத்திய அமைச்சர் லாலு எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. மொத்தத்தில், கோத்ரா ரயில் எரிப்பு சதிகாரர்களுக்கு கிடைத்துள்ள தண்டனை, மத்திய அரசின் பாரபட்சமான போக்கின் மீதான சவுக்கடியாகவே விழுந்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், தீர்ப்பின் முழு விபரமும் தெரிந்த பிறகு பதில் கூறுவதாக ஜகா வாங்குகிறார்கள். இந்த முன்யோசனை, 'விபத்து பிரசார சதி’க்கு முன்னதாகவே தோன்றி இருந்தால் நாடு நன்றாக இருந்திருக்கும்.

கறுப்புப் பணச் சிக்கலில் தவிப்பு:

தாமஸ் வழக்கில் தீர்ப்பு வெளியான அதே நாளில் (மார்ச் 3), வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பண விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை வன்மையாகக் கண்டித்தது உச்ச நீதி மன்றம். கறுப்புப் பண முதலை ஹசன் அலிகான் மீது அமலாக்கப் பிரிவு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் குறை கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜார் அடங்கிய பெஞ்ச், ''கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களை விசாரிக்க மத்திய அரசுக்கு தடையாக இருப்பது எது?'' என்று கேள்வி எழுப்பியது.

வெளிநாட்டு வங்கிகளில் கள்ளத்தனமாக முதலீடு செய்யப்பட்டுள்ள இந்திய பணத்தின் மதிப்பு 20 லட்சம் கோடிகள் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளின் வங்கிகளில், முறைகேடாக சொத்து சேர்த்த இந்திய அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தங்கள் பணத்தை சேமித்திருப்பது பல ஆண்டுகளாகவே விவாதத்தில் உள்ள விஷயம்.

இதனால் நாட்டிற்கு பல விதங்களில் நஷ்டம். முதலாவதாக, நமது நாட்டின் பணம், முறையான வருமான வரி செலுத்தாமல் மறைமுகமாக வெளிநாட்டு வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு, முறைகேடான வழியில் (ஹவாலா) இந்திய தொழில் துறையில் புழங்குகிறது. இதனால் ஏற்படும் பணவீக்கம் சாமானியனின் நிம்மதியைக் குலைக்கிறது. இரண்டாவதாக, முறைகேடுகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகி, அவர்களிடம் பெறும் கையூட்டை வெளிநாடுகளில் சேமிப்பாக்குகிறார்கள். இதனால் இந்திய அரசு நிர்வாகத்தில் பொத்தல்கள் ஏற்படுகின்றன. நமது நிதி அமைப்பின் வீழ்ச்சிக்கு கறுப்புப் பணம் பெரும் காரணியாகிறது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, ''பாஜக வென்றால் வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்போம்'' என்று அறிவித்திருந்தார் அத்வானி. அதை கிண்டல் செய்தது காங்கிரஸ்; ஆனால், ஆட்சிக்கு காங்கிரஸ் வந்த பிறகு கறுப்புப் பண விவகாரத்தை கேலி செய்து தப்பிக்க முடியவில்லை. ராம் ஜெத்மலானி உள்ளிட்ட பொதுநல விரும்பிகள் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு வங்கிகளில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்பதாக உத்தரவாதம் அளிக்க வேண்டி வந்தது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையிலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு இறங்கவே இல்லை. திருடர்களே எங்கேனும் தாங்கள் மறைத்து வைத்துள்ள பொருள்களைக் கண்டறிய உதவுவார்களா என்ன?

பொதுநல வழக்கு கடந்த ஜன. 19 ல் விசாரணைக்கு வந்தபோது, தனது செயலற்ற தன்மைக்கு பல்வேறு சால்ஜாப்புகளைக் கூறினார் மத்திய அரசு வழக்கறிஞர். கறுப்புப் பண விவகாரத்தில் பல வெளிநாடுகளின் சட்டங்கள் இடையூறாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக பல நாடுகளுடனும் வந்கிகளுடனும் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருப்பதாக அவர் கூறியதை நீதிபதிகள் ஏற்கவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''நமது நாட்டின் பணம் களவாடப்பட்டிருப்பது தெளிவாகவும் வெட்ட வெளிச்சமாகவும் தெரிகிறது. எந்த ஒப்பந்தம் மீதும் நீதிமன்றத்திற்கு அக்கறையில்லை. இதன் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?'' என்று கறாராகவே கேட்டனர்.

அதற்கு பதிலளித்த மத்திய சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், ''வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் குவித்துள்ள சிலர் குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால் அதை வெளியிட முடியாது. அவ்வாறு செய்வது வெளிநாடுகளுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை மீறுவதாகும். அந்த விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தயாராக இருக்கிறது'' என்றார். அதன்படி 18 பேர் கொண்ட கறுப்புப் பண முதலைகளின் பட்டியல் ஜன. 22 ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதே சமயத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியோ, ''கறுப்புப் பண முதலைகளின் பட்டியலை வெளியிட முடியாது. ஆனால், பொதுமன்னிப்பு உள்ளிட்ட 5 அம்சத் திட்டங்களின் அடிப்படையில் இவ்விவகாரம் கையாளப்படும்'' என்று அறிவித்தார் (ஜன. 27). அவரை அடியொற்றி, குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ''கறுப்புப் பண விவகாரம் 4, 5 ஆண்டு பிரச்னையல்ல. ஆண்டாண்டு காலமாகத் தொடர்வது. உடனடியாக இதற்கு தீர்வு காண முடியாது'' என்று உபதேசித்தார் (பிப். 23).

இந்நிலையில் தான், தொடர்ந்து நடந்த வழக்கு விசாரணையின் இறுதியில், ''பட்டியலில் குறிப்பிடப்பட்ட புனா தொழிலதிபர் ஹசன் அலிகான் மீது இதுவரை அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசு நடந்துகொள்வது சரியில்லை. இதே நிலை தொடர்ந்தால், நாங்களே சிறப்பு அதிகாரியை நியமித்து விசாரிக்குமாறு உத்தரவிட வேண்டிவரும்'' என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஹசன் அலிகான் வழக்கை விசாரித்துவந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்த நீதிபதிகள், ''மார்ச் 8க்குள் முறையான அறிக்கையை அரசு அளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டனர். லீச்டென்ஸ்டீன் நாட்டிலுள்ள எல்.ஜி.டி. வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள 18 பேரின் பட்டியல் மட்டுமே இப்போது நீதிமன்றத்திடம் உள்ளது. இதற்கே அரசை வறுத்தெடுக்கும் நீதிபதிகள், தற்போதைய மத்திய அரசின் சூத்திரதாரிகளே கருப்புப் பண முதலைகளாக இருப்பது தெரிய வந்தால் என்ன செய்வார்களோ?

குவாத்ரோச்சி வழக்கில் ஆசுவாசம்:

இவ்வாறு தொடர்ந்து பல வழக்குகளில் மத்திய அரசின் முகத்தில் கரி பூசும் நீதிபதிகளிடையே, புதுதில்லி தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றம் ஆசுவாசமாக ‘சுண்ணப் பூச்சு’ பூசி இருக்கிறது. குவாத்ரோச்சி மீதான வழக்குகளைக் கைவிடுவதான மத்திய புலனாய்வுத் துறையின் (சிபிஐ) முறையீட்டு மனுவை ஏற்ற நீதிபதி வினோத் யாதவ், ''19 ஆண்டுகளாக ரூ. 250 கோடி செலவிட்டு குவாத்ரோச்சியை இந்தியா கொண்டுவர முடியாதது கவலை அளிக்கிறது. எனவே சிபிஐயின் கோரிக்கை ஏற்கப்படுகிறது'' என்று அறிவித்தார் (மார்ச் 4).

1987 ல் வெளியான போபர்ஸ் ஊழலில் முக்கிய குற்றவாளி இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியா குவாத்ரோச்சி. பீரங்கி பேரத்தில் ரூ. 64 கோடி கமிஷன் பெற்றார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால், ராஜீவ் காந்தி, சோனியா உடனான தொடர்புகளால், அவர் தொடர்ந்து தப்பிவந்தார். குவாத்ரோச்சி இந்தியாவிலிருந்து தப்ப உதவியது நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு (1991). குவத்ரோச்சியின் சுவிஸ் வங்கிக் கணக்கு முடக்கத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்தது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (2005). சிபிஐக்குத் தெரியாமல் அவ்வாறு கடிதம் எழுதியவர் தற்போது எடியூரப்பாவுக்கு நேர்மையை உபதேசித்துக் கொண்டிருக்கும் ஆளுநர் (அப்போதைய சட்ட அமைச்சர்) ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்.

2007, பிப். 6 ல் இன்டர்போல் அமைப்பால் அர்ஜண்டீனா நாட்டில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட குவாத்ரோச்சியை இந்தியா அழைத்துவர முழு மனதுடன் சிபிஐ செயல்படவில்லை. தகுந்த ஆதாரங்களை வழங்காமல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு நடத்திய காரணத்தால், குவாத்ரோச்சியை இந்தியா அனுப்ப முகாந்திரம் ஏதுமில்லை என்ற நீதிமன்றம், வழக்கு தண்டமாக பல லட்சம் டாலர்கள் செலுத்துமாறு இந்திய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டது. இதற்கு காரணம் சிபிஐயை வழி நடத்திய அரசியல் எஜமானர்களின் தவறான நோக்கமே என்பது வெளிப்படை.

இவ்வாறு, குவாத்ரோச்சியை கைது செய்வதில் காட்டிய அக்கறையை விட அவர் தப்புவதில்தான் சிபிஐ அதிக அக்கறை காட்டி இருக்கிறது. இறுதியில், குவாத்ரோச்சி மீதான வழக்கை மேலும் தொடர்வது பொருளற்றது என்று அறிவித்தது சிபிஐ. அதனை சட்டப்பூர்வமாகச் செய்ய தில்லி நீதிமன்றத்தில் தனது மனுவை சிபிஐ சமர்ப்பித்தது. அதில்தான் மேற்கண்ட தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.

அண்மையில் தான் (31.12.2010), போபர்ஸ் வழக்கில் மற்றொரு குற்றவாளியான வின்சட்டா மீதான வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய வழக்கில், ''போபர்ஸ் பேரத்தில் ரூ. 41 கோடி கமிஷன் கைமாறியது உறுதி என்பதால் அதற்கான வருமான வரியை செலுத்துவது கட்டாயம்'' என்று நீதிபதிகள் ஆர்.சி.சர்மா, ஆர்.பி.துலானி ஆகியோர் அறிவித்தனர். வின்சட்டாவின் கூட்டாளியான குவாத்ரோச்சி வெளிநாட்டு பிரஜை என்பதால் இதில் தப்பிவிட்டார். மொத்தத்தில் குவாத்ரோச்சி இப்போது விடுவிக்கப்பட்டிருப்பது அவர் நிரபராதி என்பதால் அல்ல. சிபிஐயால் குவாத்ரோச்சியைப் பிடிக்க முடியாததால் தான். இது ஒருவகையில் இந்திய அரசுக்கு அவமானம். ஆனால், இத்தீர்ப்பால் காங்கிரஸ் ஆசுவாசப் பெருமூச்சு விடுகிறது.

குற்றவாளியைத் தப்பவிட்டுவிட்டு, அவரைப் பிடிக்க முடியவில்லை என்று காரணம் கூறி அவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவது இப்போதைக்கு மத்திய அரசின் முகத்தில் சுண்ணப் பூச்சாகத் தெரியலாம். முகம் முழுவதும் கரி அப்பிக் கிடக்கும் மத்திய அரசுக்கு இந்த சுண்ணப் பூச்சு விகாரமாகவே தோற்றம் அளிக்கிறது. குவாத்ரோச்சி மீதான வழக்கு கைவிடப்படுவதனை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீடுகளின்போது, இந்த விகாரம் மேலும் பரவும். அதற்கு காங்கிரஸ் இப்போதே தயார் ஆவது நல்லது.

-------------------------------
நன்றி: விஜயபாரதம் (18.03.2011)
காண்க: தமிழ் ஹிந்து

.

வியாழன், மார்ச் 10, 2011

சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…

நன்றி: மதி/ தினமணி/26.02.2011

கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் குழப்பமாகத் தோன்றக்கூடும்.

‘சிக்கன் 65’ என்று சொல்வது போல, அது என்ன சனிக்கிழமை 63? செவ்வாய்கிழமை 63? இரண்டிற்கும் என்ன தொடர்பு? இரண்டிடையே என்ன வேறுபாடு?
.
ஒரே எண் தான் 63. ஆனால், மூன்று நாட்களில் அந்த எண் படுத்திய பாடு இருக்கிறதே, அதை நமது பகுத்தறிவுப் பகலவன், முத்தமிழ்க் காவலர், செம்மொழி வேந்தர், டாக்டர் கலைஞர் தம் வாழ்நாளிலேயே மறக்க முடியாது.

இதனைப் புரிந்துகொள்ள சற்றே பூர்வ கதைக்கு செல்ல வேண்டும். அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி கதைக்கு நாம் சென்றாக வேண்டும்....
-----------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (25.03.2011)

.

செவ்வாய், மார்ச் 01, 2011

தேர்தல் களம்: முதல் சுற்றில் முந்துகிறது அ.தி.மு.க


திருமணமே ஆகவில்லை; குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ‘கூட்டணி ஆட்சிக்கு இப்போதே சம்மதம் தெரிவிக்க வேண்டும்’ என்று தி.மு.க.வுக்கு நெருக்கடி தரும் காங்கிரஸ் கட்சியைக் காணும்போது இந்தப் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

தேர்தலுக்குப் பிந்தைய காலத்தில் தனது பேரம் பேசும் உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்காக 80 இடங்களில் போட்டியிட விரும்புகிறது காங்கிரஸ். ஆனால், தி.மு.க. அதற்குத் தயாரில்லை. ஏற்கனவே பா.ம.க.வுக்கு 31 இடங்களை அளித்துவிட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட துக்கடா கட்சிகளுக்கும் இடங்களை ஒதுக்க வேண்டிய நிலையில், 120 இடங்களுக்கு மேல் கண்டிப்பாக போட்டியிட நினைக்கிறது தி.மு.க. இக்கட்சியும் கூட, எந்த அடிப்படையில் தேர்தலுக்குப் பின் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகிறது எனத் தெரியவில்லை. பரவாயில்லை, கனவு காண அனைவருக்கும் உரிமை உள்ளது....
............................................................
.......................
ஆளும் அணியில் கூட்டணி பேச்சுவார்த்தைகளே திண்டாட்டமாக உள்ள நிலையில், எதிரணியில் கொண்டாட்ட மனநிலை காணப்படுகிறது. இதுவே ஆளப்போகும் அணி எது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது.

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலேயே, முதல்சுற்றில் அ.தி.மு.க. அணி முந்தி வருகிறது. போதாக்குறைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் அரசிலுள்ள கட்சிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதிருப்தி ஆகியவையும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளன. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்களோ இல்லையோ, அரசியல் கட்சிகள் மாற்றத்தை விரும்புகின்றன என்பதையே, தற்போதைய ‘தகுதிச் சுற்று’ தேர்தல் களம் காட்டுகிறது எனில் மிகையில்லை....

--------------------------------------
முழுக் கட்டுரையையும் காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (11.03.2011)
.