வியாழன், பிப்ரவரி 21, 2013

அப்சலுக்கு தூக்கு: எதிர்விளைவுகளும் படிப்பினைகளும்...


நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை (பிப். 9) நிறைவேற்றப்பட்டதற்குப் பின் நிகழ்ந்துள்ள சில எதிர்விளைவுகள் நமக்கு நல்ல படிப்பினைகளை அளிப்பதாக அமைந்துள்ளன. இதில் நமது அரசின் கையாலாகாத்தனம் மீண்டும் பல்லிளித்திருக்கிறது.

முதலாவதாக, இந்தத் தூக்கு தண்டனை எந்த முன்னறிவிப்பும் இன்றி ரகசியமான முறையில் நிறைவேற்றியிருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் குடும்பத்திற்கே தெரியப்படுத்தாமல் தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பது இப்போது தெரியவந்துள்ளது.

எத்தகைய குற்றவாளியானாலும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுவதானால், அவரது குடும்பத்திற்குத் தெரியப்படுத்துவது முக்கியமானது மட்டுமல்ல, மனிதாபிமான நோக்கம் கொண்டதும் கூட. ஆனால், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது குறித்து விரைவு தபாலில் அரசு அனுப்பிய கடிதம் அவரது குடும்பத்திற்கு மூன்று நாட்கள் கழித்தே கிடைத்திருக்கிறது. இந்தத் தாமதம் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது.

அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை ரகசியமாக வைத்திருக்க அரசு முயன்றதன் வெளிப்பாடே இது. அப்சலுக்கு தூக்கு நிறைவேற்றப்படுவதை முன்கூட்டியே தெரிவித்தால் அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்று யூகித்தே இந்த நடவடிக்கையில் அரசு இறங்கி இருக்கிறது.

ஆனால், இது எந்தவித அடிப்படை நேர்மையும் அற்ற செயல். துணிவுள்ள, நியாயமுள்ள அரசு, தண்டனை நிறைவேற்றம் குறித்து வெளிப்படையாக அறிவித்து, அதன் எதிர்ப்புகளை தர்க்கரீதியாக சந்தித்து, மக்களிடையே தனது நம்பகத் தன்மையை மேலும் மேம்படுத்திக்கொள்ளும். வாக்குவங்கிக் கனவில் லயித்திருக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிடம் இதனை எதிர்பார்ப்பது நமது தவறு.

ஜம்மு காஷ்மீர் முதல்வரின் அரசியல்:

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கூட்டணித் தோழரும், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வருமான உமர் அப்துல்லா, அப்சல் தூக்கிலிடப்பட்டிருப்பதைக் கண்டித்திருக்கிறார். இது மிகவும் அபாயகரமான போக்காகும்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டிருப்பதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக காஷ்மீரப் பள்ளத்தாக்கில் ஒருவார காலத்துக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. அப்சல் காஷ்மீர மாநிலத்தைச் சார்ந்தவர் என்பதாலும், பிரிவினைவாத இயக்கங்கள் அங்கு வலுவாக இருப்பதாலும் தான் இந்த நடவடிக்கை. எனில், காஷ்மீர மாநிலம் நமது அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா, இல்லையா?

ஊரடங்கு உத்தரவையும் பல் இடங்களில் மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர். மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதிகளின் மிரட்டலுக்கு அஞ்சியே, அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, அப்சல் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்திருக்கிறார். மாநில முதல்வரின் வெளிப்படையான ஆதரவுப் போக்கு காரணமாகவே அங்குள்ள பிரிவினைவாதிகள் தெருவுக்கு வந்து அராஜகம் செய்திருக்கின்றனர். இதை இதுவரை மத்திய அரசு கண்டிக்கவில்லை.

இத்தனைக்கும், அப்சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு மத்திய அரசு முறைப்படி முன்கூட்டியே தகவல் தெரிவித்துள்ளது. அப்போது எதுவும் சொல்லாத உமர், தண்டனை நிறைவேற்றத்துக்குப் பிறகு நீலிக்கண்ணீர் வடிப்பது, சுயநல அரசால் அல்லாமல் வேறென்ன? எனினும் உமர் கூறியுள்ள சில விஷயங்களை புறக்கணிக்க முடியாது.

“காஷ்மீரில் ஒரு தலைமுறைக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக உணருகிறார்கள். தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற மனநிலையில் அவர்கள் இருப்பதையும் அரசு புரிந்து கொள்ள வேண்டும்.அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட சம்பவம், காஷ்மீர் மாநில இளைய தலைமுறையினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. அப்சல் குருவைச் சந்திக்க அவரது குடும்பத்தினரை அனுமதிக்காதது மிகவும் துயரமானது. மேலும் அவருக்கு இறுதிச் சடங்குகளை நடத்தவும் அவர்களை அனுமதிக்கவில்லை...

தூக்கு தண்டனை கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் விஷயத்தில் பாரபட்சம் காட்டப்படுவது இல்லை என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா நிரூபிக்க வேண்டும். அப்சல் குருவை தூக்கில் போட்ட சம்பவம் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்” என்று உமர் அப்துல்லா கூறி இருக்கிறார்.

மத்திய அரசு முறைப்படி இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருந்தால் உமர் கூறும் குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஆனால், தேசிய ஒருமைப்பாடு குறித்த எந்தக் கவலையும் அற்ற காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கும் வரையில், நியாயமான செயல்பாடுகளை எதிர்பார்ப்பது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது போலத் தான்.

மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பு:

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உலக பொதுமன்னிப்பு அமைப்பு (அம்னஸ்டி இன்டர்நேஷனல்), அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியது குறித்து கவலை தெரிவித்து இருக்கிறது. நம் நாட்டிலும் மனித உரிமை ஆர்வலர்கள் பலர் அப்சல் குருவை தூக்கிலிட்டதைக் கண்டித்து வருகின்றனர்.

'தூக்கு தண்டனை என்பது மனிதாபிமானமற்ற தண்டனை. எனவே தூக்கு தண்டனையை இந்தியா ரத்து செய்ய வேண்டும்' என்றும் நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் தெற்கு ஆசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறி உள்ளார். இவ்விஷயத்தில் கருணை, இரக்கம் போன்ற சொற்களுக்கு என்ன பொருள் என்றே புரியவில்லை.

அந்த கொடிய கறுப்பு நாளில் (2001, டிச. 13) ஆயுதம் தாங்கிய அந்த ஐந்து பயங்கரவாதிகளும் நமது நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது. நாட்டின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்க முயன்ற கும்பலைச் சேர்ர்ந்த கயவனுக்கு எப்படி பொது மன்னிப்பு வழங்குவது? இத்தகைய கொடிய கயவர்களை விருந்தாளிகளாக அரசு பராமரிக்க வேண்டுமா?

நமது நாட்டின் குற்றவியல் தண்டனை சட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உத்தரவிடவோ, ஆலோசனை கூறவோ, எந்த வெளிநாட்டு அமைப்புக்கும் தகுதி இல்லை. இதை ஏன் நமது அரசின் பிரதிநிதிகள் உரக்கச் சொல்ல மறுக்கின்றனர்? தூக்கு தண்டனை சரியா, தேவையா? போன்ற விவாதங்கள், ஏன் எப்போதும், அப்சல் போன்ற கயவர்களைத் தூக்கிலிடும்போது மட்டும் எழுப்பப்படுகின்றன?

மரண தண்டனை நாகரிக சமுதயாத்தில் தேவையற்றது என்று கூறும் மனித உரிமை ஆர்வலர்கள், நாகரிக சமுதாயத்தில் பயங்கரவாதிகளுக்கு இடமில்லை என்பதை எப்போது புரிந்துகொள்ளப் போகிறார்கள்?

அப்சல் விவகாரத்தில் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள அனைவரையும் பட்டியலிட்டால், கண்மூடித்தனமான அரசு எதிர்ப்பாளர்கள், வெளிநாட்டுக் கூலி பெறுபவர்கள், பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்கள் எனப் பலரும் இருப்பதைக் காண முடிகிறது. இவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை.

எனினும், இதுபோன்ற தருணங்களில் தான், பலரது சுயரூபம் வெளிப்படுகிறது. இதைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டியது உளவு அமைப்புகளின் கடமை. ஆனால், எதிர்க்கட்சிகளை நோட்டம் பார்க்கவே உளவு அமைப்புகளை கூலிக்காரர்களாகப் பயன்படுத்தும் மன்மோகனார் அரசிடம் அத்தகைய தொலைநோக்குப் பார்வையை எதிர்பார்க்க இயலாது.

சிறைக்குள் புதைத்ததால் சர்ச்சை:

தூக்கிலிடப்பட்ட அப்சலின் உடலை அவசரமாக திகார் சிறை வளாகத்திலேயே புதைத்தும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை தாக்குதலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அஜ்மல் கசாபின் உடல் எரவாடா சிறைக்குள் புதைக்கப்பட்டபோது பெரும் எதிர்ப்பு எழவில்லை ஏனெனில் அவர் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர். ஆனால், அப்சல் குரு அப்படியல்ல; தவிர அவர் தானாக முன்வந்து சரணடைந்தவர். அவரது சடலத்தை அவசரமாக புதைக்க வேண்டிய அவசியம் என்ன?

இறந்தவரின் குடும்பம் அவரது ஈமச்சடங்குகளை செய்யவிடாமல் தடுப்பது எந்த வகையில் நியாயமானது? இது ஏற்கனவே பிரிவினைவாதிகளால் மூளைச்சலவை செய்யப்பட காஷ்மீர இளைஞர்களை மேலும் பிரிவினைப் பாதைக்குத் தானே தள்ளும்?

பலத்த கண்டனங்களுக்குப் பிறகு, திகார் சிறை வளாகத்திலேயே அப்சல் குடும்பம் பிரார்த்தனை செய்ய அனுமதிப்பதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது ஆனால், அவர்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் அப்சலின் உடலை தங்களிடமே அளிக்குமாறு கோரி வருகின்றனர்.

அவ்வாறு அளித்தால், அப்சலின் நினைவிடமே ஒரு போராட்ட மையமாக மாறிவிடும் என்று அரசு அஞ்சுகிறது. அதே சமயம் இஸ்லாமியர்களின் ஆதரவுக்காக, சிறைக்குள் இருந்து அப்சல் சடலத்தைத் தோண்டி எடுத்து அவரது குடும்பத்திடமே அளித்துவிடலாமா என்றும் அரசு பரிசீலிப்பதாகத் தகவல்.

இது ஆப்புக்குள் வாலைவிட்டு சிக்கிக்கொண்ட குரங்கின் கதை தான். 'எண்ணித் துணிக கருமம்' என்று நமது வள்ளுவப் பெருந்தகை சும்மாவா சொன்னார்? எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படும், சோனியா வழிகாட்டும் மத்திய அரசுக்கு இது புரியுமா என்ன?

அண்டை நாட்டின் குறும்பு:

அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை நமது அண்டை நாடான பாகிஸ்தான் விமர்சித்திருக்கிறது. இதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. அதுவும், மனித உரிமைகளே அற்ற ஒரு நாடான பாகிஸ்தானுக்கு இந்தியாவை குறை கூற எந்தத் தகுதியும் கிடையாது. தனது நாட்டிலேயே பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சண்டையை வளர்த்து விட்டு குளிர்காயும் பாகிஸ்தான் அரசு முதலில் தனது முதுகில் உள்ள ரணத்தை சொஸ்தம் செய்துகொள்ளட்டும்.

இந்நிலையில், அப்சல் குரு தூக்கில் போடப்பட்டதைக் கண்டித்து ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசின் மாலிக், பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். இதில், மும்பை தாக்குதலில் முக்கிய மூளையாக செயல்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீதும் கலந்து கொண்டிருக்கிறார். இவர் இந்தியாவில் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளி.

இதன்மூலம் ஜம்மூ காஷ்மீர் விடுதலை இயக்கத்துக்கும், லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான தொடர்பு வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதை உலக அரங்கில் தெரித்துக் காட்ட வேண்டியது நமது அரசின் கடமை. ஆனால், இல்லாத 'காவித் தீவிரவாதம்' குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நமது உள்துறை அமைச்சர் ஷிண்டேவுக்கு, இதற்கெல்லாம் ஏது நேரம்?

இந்த உண்ணாவிரதத்தில் பேசிய மாலிக், ''இந்திய அரசு அப்சல் குருவை தூக்கில் போட்டுவிட்டதால் சரப்ஜித் சிங் விஷயத்தில் பாகிஸ்தான் அரசு அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம். சரப்ஜித் சிங்கை தூக்கில் போட வேண்டும் என்று சிலர் கோருகின்றனர். ஆனால், அவரை தூக்கில் போடுவதும் ஒரு கொலை தான்'' என்று கூறி இருக்கிறார்.

கழக உடன்பிறப்புகள் வன்முறையில் இறங்கக் கூடாது என்று அறிக்கை விடும் ஒரு முதியவர் தமிழகத்தில் இருக்கிறார் அல்லவா? அவரது அறிக்கையை 'புரிந்துகொண்டு' தொண்டர்கள் உடன்விளைவாற்றுவார்கள் அதுபோலத் தான் இருக்கிறது, யாசின் மாலிக்கின் உபதேசம். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது. கூடிய விரைவில் சர்ரப்ஜித் சிங் பலிகடா ஆக்கப்படலாம் என்பதற்கான சூசக அறிவிப்பு இது.

ஊடகங்களின் புலம்பல் நாடகம்:

இவை அனைத்தையும் விட அபாயகரமானது, நாட்டு மக்களிடையே கருத்துருவாக்கும் சில ஊடகங்களின் அப்சல் ஆதரவுப் போக்கு தான். குறிப்பாக ‘தி ஹிண்டு’ உள்ளிட்ட சில ஆங்கிய பத்திரிகைகள் அப்சல் குற்றவாளியே அல்ல என்பது போல கட்டுரைகளை வெளியிட்டு வருவது மிகவும் கவலைக்குரியது.

நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக நமது நீதிமன்ற நடைமுறைகளில் குற்றவாளிக்கு உரிய அனைத்து வாய்ப்புகளும் அளிக்கப்பட்டன; அதனால் தான் பேராசிரியர் கிலானியும், அப்ஷன் என்ற பெண்ணும் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டனர். மற்றொரு குற்றவாளி சௌகத் ஹுசேனின் தண்டனை 10 ஆண்டு சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

அதன்பிறகும், அப்சல் குருவுக்கு தண்டனைக் குறைப்புக்கான வழிமுறைகள் பல அளிக்கப்பட்டன. மேல் முறையீடு நிராகரிக்கப்பட்ட பிறகு, கருணை மனு செய்யவும் அனுமதிக்கப்பட்டது. தவிர, அப்சலைத் தூக்கிலிடுவதை 2006 -லிருந்து தள்ளிவைத்து வந்தது மத்திய அரசு. இத்தனைக்கும் பிறகே, வேறு வழியின்றித் தான் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கே ‘அறிவுஜீவி’ என்று சொல்லிக் கொள்ளும் சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?

நாடாளுமம்ன்றம் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினரின் குடும்பங்கள் குறித்து இந்த அறிவுஜீவிகளுக்கு கவலையே இல்லையா? இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒரு வீரரின் சகோதரி விபசாரியாக மாற வேண்டிய அவலம் ஏற்பட்டது குறித்து, அப்சலுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததி ராய் அறிவாரா?

நமது ஜனநாயகம் 75 சதவீதம் போலித்தனமானது என்கிறார்கள் இவர்கள். எனில், நமது ஊடக சுதந்திரம் 90 சதவீதம் போலித்தனமானது என்று சொல்லலமா? எல்லைக்கு அப்பாலிருந்து இயக்குபவர்களின் கயிறுக்கு ஏற்ப ஆடும் தோல்பாவைகள் போலவே நமது ஊடக அறிவுஜீவிகள் மாறி வருகிறார்கள். அதன் எதிரொளிகளையே அப்சல் விவகாரத்தில் காண்கிறோம்.

மொத்தத்தில், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது பயங்கரவாதிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக ஆவதற்குப் பதிலாக அவர்களை மேலும் கிளர்ந்தெழச் செய்யும் ஊக்க மாத்திரையாக அமைந்துவிட்டது. இதற்கு மத்திய அரசின் அரசியல் கண்ணோட்டமும் தேர்தல் கணக்கீடுகளும் தான் காரணம் என்று கூறினால் மிகையில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு நாட்டு மக்களின் நம்பிக்கையும் வேண்டும்; இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியும் போய்விடக் கூடாது. இதைத் தான் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பார்கள். இப்போது கூழும் சிதறி, மீசையும் நனைந்து, பரிதாபமாகக் காட்சி தருகிறது மத்திய அரசு.

இத்தனை நடந்த பிறகும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக இதை அரசியலாக்காமல் நாகரிகமாக நடந்து வந்திருக்கிறது. நாடு யாருடைய கரங்களில் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் அப்சல் குரு விவகாரம் கோடி காட்டியிருக்கிறது.

எந்த ஒரு நிகழ்வும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பது நமது நம்பிக்கைகளுள் ஒன்று. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். ஏனெனில் இப்போது நடந்துகொண்டிருப்பது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது.

கருணை மனுக்களும்
பிரணாப் முகர்ஜியும்...

ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பிறகு இரு பயங்கரவாதிகளின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு அவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மேலும் சிலரது கருணை மனுக்களையும் அவர் நிராகரித்திருக்கிறார் அதில் முக்கியமானது, வீரப்பன் கூட்டாளிகளாக இருந்து போலீசார் 22 பேர் உயிரிழக்கக் காரணமான கண்ணிவெடி தாக்குதலை நடத்தியதாக் குற்றம் சாட்டப்பட்ட நால்வர் மீதான மனு.

1993-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி வீரப்பன் குழுவினர் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் கர்நாடக சிறப்பு அதிரடிப்படை தலைவர் ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட 22 பேர் உடல் சிதறி பலியாகினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் உள்ளிட்ட 4 பேர், மைசூர் தடா நீதிமன்றம் தங்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஆயுள்தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்தனர். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த மனுக்களை அண்மையில் தள்ளுபடி செய்தார் பிரணாப் முகர்ஜி. இதன்மூலமாக இவர்கள் நால்வரும் தூக்கிலிடப்படுவது உறுதியாகி உள்ளது.

இதை எதிர்த்து தமிழகத்தில் சில அதிருப்திக் குரல்கள கேட்கின்றன. இவர்களது எதிர்ப்புக்குக் காரணம் வேறு. ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரது கருணை மனுக்கள் தற்போது ஜனாதிபதி முன்பு காத்துக் கிடப்பதால், எதிர்காலத்தில் நடக்கப்போவதை யூகித்தே தமிழகத்தில் இந்தக் குரல்கள் எழுந்துள்ளன.

எனினும், ராஜீவ் கொலையாளிகள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இவ்விஷயத்தில் இலங்கை விவகாரத்தில் கையாண்ட அதே பழிவாங்கும் போக்கை சோனியா கையாள்வாராயின், ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆயினும், தமிழினத் தலைவரின் கூட்டணிக் கட்சியையும் சோனியா உத்தேசிக்க வேண்டியிருக்கும். ஆனால், இதுவரை, செம்மொழிகொண்டான் இவ்விஷயத்தில் தானே கேள்வி கேட்டு தானே பதில் கூறாதது ஏன் என்பது புரியாத புதிர்.

தூக்கு தண்டனை தேவையா? குற்றவாளிகளின் பின்புலம் என்ன? போன்ற விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஜனாதிபதியின் கடமை. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் கண்முன் நிழலாடும் தூக்குக் கயிறை விட பெரிய தண்டனை ஏதுமில்லை அது கொடிய சித்ரவதை. எனவே, கருணை மனு விவசாயத்தில் தக்க முடிவை ஆறப்போடாமல் அறிவிப்பது ஜனாதிபதிக்கு அழகு.

இருப்பினும் முந்தைய ஜனாதிபதி பிரதீபா போல, கற்பழிப்புக் குற்றவாளிகளை மன்னித்த பெருந்தன்மை போல தவறான முடிவையும் எடுத்துவிடக் கூடாது. அதே போல, தூக்கு தண்டனை ரத்து ஆவதால், குற்றவாளி விடுதலையாகிவிடவும் அனுமதிக்கக் கூடாது.

நமது குற்ற தண்டனை சட்டங்கள் முன்யோசனை இல்லாமல் உருவாக்கப்பட்டவை அல்ல. அதை ஜனாதிபதி மட்டுமல்ல, அவரை விமர்சிப்பவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதனிடையே, ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம் பெற்றிருந்த ‘தூக்கு தண்டனைக் கைதிகளின் கருணை மனு நிலவரம்’ குறித்த பகுதி நீக்கப்பட்டிருகிறது. இது மத்திய அரசின் முட்டாள்தனத்தையே காட்டுகிறது. பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது. இணையதளத்தில் இதனை இருட்டடிப்பு செய்வதால், அரசுக்கு என்ன லாபம்? ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இவ்விஷயத்தில் சறுக்கி இருப்பதாகவே தெரிகிறது.
------------------------
விஜயபாரதம் (01.03.2013)

செவ்வாய், பிப்ரவரி 12, 2013

அப்சலுக்கு தூக்கு: பயங்கரவாதிகளுக்கு படிப்பினை


நாடாளுமன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட  முகமது அப்சல் குரு ஒருவழியாக, தில்லி  திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப்பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு  தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலம் கடத்தி வந்தது. அப்சல் தூக்கிலிடப்பட்டதை ”எதுவும் செய்யாமல் இருப்பதைவிட தாமதமாகவேனும் செய்தது நல்லது தான்” என்று விமர்சித்திருக்கிறார் குஜராத் முதல்வர் மோடி உண்மை தான்.

இந்த விவகாரத்தில் இதுவரை நடந்திருப்பதை  பின்னோக்கிப் பார்ப்பது இப்போது அவசியமாகி இருக்கிறது….

முழு கட்டுரையைக் காண்க: தமிழ்  ஹிந்து 
--------------------------
விஜயபாரதம் (22.02.2013)

திங்கள், பிப்ரவரி 11, 2013

கண்களைத் திறந்த கமலுக்கு நன்றி!


தமிழகத்தில்  ஜனவரி கடைசி வாரம் மிகவும் பரபரப்பான நிகழ்வுகளால்  திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சி போல மாறி இருந்தது. இந்த நிகழ்வுகளின் அடிநாதம் கமலஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தால் விளைந்தது. இந்த நிகழ்வுகள், நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களை, நமது தலைவர்களை, நமது கலைஞர்களை புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது எனில் மிகையில்லை...

நமது அச்சம் என்னவென்றால், கமலுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை,  நாளை யாருக்கும் ஏற்படலாம். அப்போது நமது அரசுகளும் இதே கலைஞர்களும் ஊடகங்களும் எப்படி செயல்படுவர்?  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக  தங்களைக்  கருதிக்கொள்ளும் முஸ்லிம்களுக்கு அஞ்சி, மென்மையான இலக்குகளை  திரையுலகும் ஊடகங்களும் தாக்குவது அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. (இப்போதே கமல் அதைத் தானே செய்கிறார்?) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி தானே?...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து  

---------------------------
விஜயபாரதம் (15.02.2013)
.