வெள்ளி, பிப்ரவரி 25, 2011

திருப்பூர்- திரும்ப முடியாத பாதையில்... (பகுதி - 2)

திருப்பூர் சாய ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பொது சுத்திகரிப்பு நிலையம்

மன்னர் ஒருவர் தனது நாட்டு மக்களைச் சோதிக்க ஒரு பரீட்சை வைத்தாராம். 'நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இன்று இரவு ஒரு படி பால் கொண்டுவந்து காய்ந்துபோயுள்ள கோயில் குளத்தில் ஊற்ற வேண்டும்' என்பது மன்னர் உத்தரவு. அதன்படி ஒவ்வொருவரும் ஒருநாள் இரவு கோயில் குளத்தில் ஊற்றினார்களாம். மறுநாள் காலையில் கோயில் குளத்தில் பார்த்தபோது, கோயில் குளத்தில் பாலின் சுவடே தெரியவில்லை; தண்ணீரே நிறைந்திருந்ததாம்.

அதாவது, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும், நாம் மட்டும் தண்ணீர் ஊற்றினால் மன்னருக்குத் தெரியவா போகிறது என்ற எண்ணத்தில் தண்ணீரையே ஊற்றி இருக்கின்றனர். குளம் தண்ணீரால் நிறைந்துவிட்டது. இது நாட்டு மக்களைப் பற்றி அறிய மன்னருக்கு உதவியது- இது ஒரு கற்பனைக் கதை.

திருப்பூர் சாயஆலைகள் நிகழ்த்திய நதிநீர் மாசுபாட்டிற்கும் இக்கதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

திருப்பூர் வட்டாரத்தில் 1,500 சாய, சலவை ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பிறகே வெளியேற்றப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பாலான சாய, சலவை ஆலைகள், தங்கள் தொழிலகங்களிலிருந்து யாருக்கும் தெரியாமல் கழிவுநீரை இரவு வேளைகளில் திறந்துவிடுவது வழக்கமானது. ஒரு சாய ஆலை மட்டும் தவறு செய்வது யாருக்குத் தெரியப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை. இதேபோல பலரும் செய்யத் தலைப்பட்டபோது, நொய்யலில் சாயம் கலந்து பாய்ந்த கழிவுநீர் சாய ஆலைகளின் லட்சணத்தை அம்பலப்படுத்திவிட்டது....
...........................
------------------------------------
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

.

திங்கள், பிப்ரவரி 21, 2011

திருப்பூர் - திரும்ப முடியாத பாதையில்... (பகுதி 1)


''செருப்புக்குத் தோல் வேண்டியே - இங்கு கொல்வரோ
செல்வக் குழந்தையினை?''
- என்று பாடுவார் மகாகவி பாரதி, பாஞ்சாலி சபதத்தில்.

சூதில் தோற்ற தருமன் திரௌபதியைப் பணயம் வைத்தபோது, வெகுண்டு பாடும் பாரதியின் ஆவேச வார்த்தைகள் இவை.

தொழில்நலத்திற்காக, உலகச் சந்தையில் வெல்வதற்காக, சொந்தநாட்டு மண்ணை மலடாக்கிய திருப்பூர்த் தொழில்துறையினரின் சுயநலத்தைக் காணும்போது, பாரதியின் மந்திர வார்த்தைகள் தாம் நினைவுக்கு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு, ஒட்டுமொத்த திருப்பூரையும் நிலைகுலையச் செய்துள்ளது.

பின்னலாடை ஏற்றுமதியில் உலக அளவில் முத்திரை பதித்துவரும் திருப்பூர் நகரம், நாட்டிற்கு ஆண்டுதோறும் ரூ. 14,000 கோடி அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் உழைப்பாளிகளின் நகரம், நாட்டு மக்களின் உள்ளாடைகளை ஆண்டுதோறும் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் உற்பத்தி செய்துவரும் தொழில்முனைவோரின் நகரம், இதற்காக இழந்தது மிக அதிகம். அதன் அடையாளம்தான், சாக்கடை ஓடையாக ஓடிக் கொண்டிருக்கும் ஜீவநதியான நொய்யல்....

------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: சுதேசி செய்தி
.

சனி, பிப்ரவரி 19, 2011

நமது கடமை

பிரதமர் மன்மோகன் சிங் ஊடக அறிஞர்களுடன் நடத்திய நேர்காணல் (16.02.2011) நாடகம் எனக்குள் ஏற்படுத்திய அதே தார்மிக கோபத்தை எனது 'தமிழ் ஹிந்து' நண்பர் விஸ்வாமித்திராவுக்கும் ஏற்படுத்தியிருப்பது கண்டு உவகை கொள்கிறேன்.

அவரது கோபாவேசமான 'மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்' கட்டுரை, தமிழ் ஹிந்து இணையதளத்தில் பிப். 17 ல் வெளியாகி இருக்கிறது. அக்கட்டுரைக்கும் அதன் ஆசிரியருக்கும் எனது பாராட்டுக்கள்.

இக்கட்டுரை தொடர்பான எனது கருத்துக்கள் கீழே...

----------------------------------------------

நண்பர் விஸ்வாமித்திராவுக்கு,
அற்புதமான கட்டுரை.
நன்றி.

உங்கள் ஒவ்வொரு வரியும் சாட்டையடி. ஆனால், அடிபட்டவர்கள் அனைவரும் தோல் மரத்துப்போன எருமைத் தோலர்கள். அவர்களுக்கு உறைக்கும் என்று தோன்றவில்லை; ஆனால், தூங்கிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு சிறிதாவது உறைக்கும்.

இந்தக் கட்டுரையை சிறு வெளியீடாக நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். இக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனைத்து ஊடக அறிஞர்களுக்கும் (குறிப்பாக ஆங்கில செய்தி அலைவரிசை ஆசிரியப் பெருமக்கள்) அனுப்பிவைக்க வேண்டும்.

உங்களுக்கு ஏற்பட்ட இதே மனக் கொந்தளிப்பு, மன்மோகன் நேர்காணலைக் கண்டபோது எனக்கும் ஏற்பட்டது. நம்மை எந்த அளவுக்கு இளிச்சவாயர்களாக இந்த கேடுகெட்ட நரிகள் நினைத்திருக்கின்றன என்று எண்ணினாலே உடல் கூசுகிறது.

இது குறித்த நான் எழுதிய பிரத்யேகக் கட்டுரை (அதி மேதாவிகள் சபையில் அற்புதப் புனிதர்) எனது ‘எழுதுகோல் தெய்வம்’ வலைப்பூவில் உள்ளது. அதன் பிறகே உங்கள் கட்டுரையைப் படித்தேன். இருவர் உள்ளமும் ஒன்று போல சிந்தித்திருப்பது கண்டு வியந்தேன்.

தற்போதைய நாட்டின் இழிநிலைக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்து வாக்குகளை மட்டுமே நம்பி சில மாநிலங்களில் மட்டும் குறுக்கப்பட்டதாக மாறிவிட்ட பா.ஜ.க.வே மன்மோகன், சோனியா, கருணாநிதி உள்ளிட்ட கொள்ளைக் கும்பல்கள் துணிவுடன் நாடகமாட காரணம்.

மதவாதப் பூச்சாண்டி காட்டியே எத்தனை ஊழல்கள் வேண்டுமானாலும் செய்யலாம் என்று கொள்ளைக்காரர்கள் நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கைக்கும் ஆதாரம் உள்ளது. கிட்டத்தட்ட நூறு தொகுதிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் மாறியுள்ள நிலையில், அவர்களுக்கு வேப்பங்காயாக பா.ஜ.க. காட்சி தரும் வரையில், சோனியா மட்டுமல்ல, குவாத்ரோச்சியே மீண்டும் இந்தியா வந்து மற்றொரு கொள்ளை அடித்தாலும் வேடிக்கை பார்த்துத் தான் ஆக வேண்டும். இந்நிலையை மாற்ற வேண்டியது பா.ஜ.க.வின் பொறுப்பு. அதற்கு உதவ வேண்டியது, நம்மைப் போன்றோரின் கடமை.
-சேக்கிழான்

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

அதிமேதாவிகள் சபையில் அற்புதப் புனிதர்


''யோக்கியன் வர்றான்; செம்பைத் தூக்கி உள்ளே வை'' என்ற சொலவடை உண்டு. மத்தியில் அரசாளும் திருவாளர் புனிதமும் பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் அண்மையில் தொலைக்காட்சி ஆசிரியர்களுக்கு அளித்த நேர்காணல், இந்த சொலவடையையே நினைவுபடுத்தியது. நாட்டையே உலக அரங்கில் தலைகுனியச் செய்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த பிரதமரின் பதில் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் என்று நேர்காணலில் பங்கேற்ற ஊடக நண்பர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கூட்டணி நிர்பந்தம் காரணமாக சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டியதாகிவிட்டது என்று பத்திரிகையாளர்களிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார், பிரதமர். இப்படி தகிடுதத்தம் செய்து ஆட்சியில் நீடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒரே ஒரு கேள்வி கேட்க ஊடக நண்பர்களும் மறந்துவிட்டார்கள். அவர்கள் தான் 'நண்பர்கள்' ஆயிற்றே?

மாறாக, பிரதமர் தனது இயலாமையையும் கட்டுப்பட்ட தன்மையையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று அவரது நேர்மையை சிலாகிக்கின்றன சில ஊடகங்கள். சப்பைக்கட்டு கட்டும் மன்மோகன், இந்த நேர்காணலை எந்த தைரியத்தில் ஏற்பாடு செய்தார் என்பது இப்போது விளங்கி இருக்கும். அதிகரித்துவரும் அதிருப்தி, மத்திய அரசு மீதான நீங்க இயலாத கறைகள், விரைவில் கூடவுள்ள நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஆகியவற்றை உத்தேசித்து, காங்கிரஸ் ஆட்சியின் ஊடக நண்பர்கள் பிரதமருடன் இணைந்து நடத்தியுள்ள நாடகம் இது. இந்த ஊடகங்களைத் தான் மக்கள் 24 மணிநேர செய்தி அலைவரிசைகளில் கண்டு 'உச்' கொட்டுகிறார்கள். நாடு விளங்கிவிடும்.

பிப். 16 ம் தேதி தில்லியில் ஏற்பாடு செய்யப்பட இந்த 70 நிமிட சிறப்பு நேர்காணலில், பிரதமர் தனது இயலாமையை வெளிப்படையாகப் புலம்பியதோடு நிற்கவில்லை; விவசாயம், கல்வி, சுகாதாரப் பணிகளுக்காக மத்திய அரசு அளிக்கும் மானியங்களுடன் ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒப்பிட்டு, நியாயப்படுத்தி இருக்கிறார். அதாவது, நாட்டின் ஏழை மக்கள் வாழ உதவும் மானியங்கள் போன்றதுதான், பகாசூர தொலைதொடர்பு நிறுவனங்கள் கொள்ளைலாபம் பெற ராசா உதவிய வானவில் அலைக்கற்றை மோசடி ஒதுக்கீடு என்கிறார் மன்மோகன். ஒப்பிடக் கூடாத இருவேறு அம்சங்களை ஒப்பிட்ட பிரதமரை வியந்தபடி, நைச்சியமாக புன்னகைத்தபடி இருந்தார்கள் ஆங்கில ஊடக மேதைகள்.

இந்த நேர்காணலில் பங்கேற்ற ஊடக நண்பர்கள்: பிரணாய் ராய் (என்டிடிவி), ராமகிருஷ்ணன் (சன் டிவி), அர்னாப் கோஸ்வாமி (டைம்ஸ் நவ்), ராஜ்தீப் சர்தேசாய் (சிஎன்என் ஐபிஎன்), அருண் பூரி (ஆஜ் தக்), பிரசாந்த் ரகுவம்சம் (ஆசியா நெட்), பிரஞ்சால் சர்மா (ப்ளூம்பர்க்- யுடிவி), சுபாசிஷ் மொய்த்ரா (கொல்கத்தா டிவி), சஞ்சய் மஜூம்தார் (பிபிசி), சதீஷ் சிங் (ஜீ நியூஸ்) உள்ளிட்டோர். இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே நிறைவேற்றினார்கள். இவர்கள் அடிப்பது போல அடித்தார்கள்; பிரதமரும் அழுவதுபோல அழுதார். தங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்ல யாருமே முயற்சிக்கவில்லை. ஒருவர் கூட, பிரதமருக்கு சங்கடம் தரும் கேள்வியைக் கேட்கவில்லை.

இந்த நேர்காணலில் மன்மோகன் சிங்கனார் தெளிவுபடுத்திய முக்கிய விஷயங்கள்:

1.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் ராசா செயல்பட்டது எனக்கோ மத்திய அமைச்சரவைக்கோ தெரியாது. ராசா கூறியபடி எல்லாமே வெளிப்படியாக நடக்கின்றன என்பதை நம்பினேன்.

2. ராசா மீது புகார்கள் இருந்தபோதும் கூட்டணி நிர்பந்தம் காரணமாக மீண்டும் அவரை தொலைதொடர்புத் துறை அமைச்சராக்க வேண்டிவந்தது. கூட்டணி அரசியலால் எனது கைகள் கட்டப்பட்டிருந்தன. கூட்டணி தர்மத்திற்காக சமரசம் செய்ய வேண்டியதாகிவிட்டது.

3 . 2 ஜி ஒதுக்கீட்டால் ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்ற சி.ஏ.ஜி அறிக்கையை ஏற்க முடியாது. அரசு மானியங்களை இழப்பாகக் கருத முடியாதது போலவே இதையும் இழப்பாக கருதக் கூடாது.

4. நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராக தான் அஞ்சவில்லை. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு இடமற்றவளாக இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன்.

5. ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்த முடியாது. எனவே பதவி விலகுவது என்ற பேச்சிற்கே இடமில்லை.

6. யாரை அமைச்சராக்குவது என்ற அதிகாரம் என் கையில் இல்லை. கூட்டணி ஆட்சியில் கூட்டணித் தலைவர்கள் சொல்வதுபோலத் தான் நடக்க முடியும்.

7. ஊழல் குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்துள்ளன; அதே சமயம் பொருளாதார் உயர்வு (?) மகிழ்ச்சி அளிக்கிறது.

- இவை, நமது மதிப்பிற்குரிய பிரதமரின் வாக்குமூலங்கள். மிகவும் உத்தமர் போலவும், நடந்துவிட்ட அநீதிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவர் போலவும், பேட்டி கொடுத்த மன்மோகன், இறுதியில் ஊடகங்களுக்கு விடுத்த வேண்டுகோள் தான் உச்சபட்ச நகைச்சுவை. ஊழல் விஷயங்களை ஊதிப் பெருக்கி நாட்டின் நற்பெயருக்கு (?) ஊடகங்கள் களங்கம் விளைவிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார், பெயருக்கு பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்கும் மன்மோகன் சிங்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ஏற்க முடியாது (இவரிடம் யார் அனுமதி கேட்டார்களாம்?), காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது (தேசியக்கொடிக்கு கிடைத்த மரியாதை நினைவிருக்கிறதா?), தெலுங்கானா விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் (ஜெகன்மோகன் ரெட்டியுடனுமா?), வட கிழக்கு மாநிலங்களில் அமைதிக்கு வழி ஏற்பட்டுள்ளது (இத்தனை நாட்களாக அமைதி எங்கு போயிருந்தது?) என்றெலாம் தத்துப் பித்தென்று முழங்கினார் மன்மோகனார். அதை அப்படியே நேரலை ஒளிபரப்பில் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தன நமது செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள். எந்தப் புத்திசாலியும் எதிர்க்கேள்வி கேட்கவில்லை. கேட்கப்பட்ட துணைக் கேள்விகளும் பிரதமர் மறந்துவிட்ட மழுப்பல்களை வெளிப்படுத்த உதவுபவையாக இருந்தன.

''பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. விரோத மனப்பான்மையுடன் செயல்படுகிறது; குஜராத் அமைச்சர் மீதான கைது நடவடிக்கைக்காக மத்திய அரசு மீது கோபம் கொண்டு நாடாளுமன்றத்தில் எங்களை தொடர்ந்து எதிர்க்கிறது'' என்ற மன்மோகனின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதில் ஒளிந்துள்ள பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் தந்திரமும், மதச்சார்பின்மை நுண் அரசியலும் கவனிக்கப்பட வேண்டியவை. பா.ஜ.க. மீதான இந்த குறிப்பிட்ட தாக்குதல், சிறுபான்மையினர் ஆதரவு என்ற கேடயத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சி. நன்கு திட்டமிடப்பட்ட நேர்காணல் இது; மன்மோகனை வழிநடத்தியவர்களே தான் அவர் முன் அமர்ந்து கேள்வி கேட்டார்கள் என்பதை இந்த ஒரு விளக்கமே காட்டிவிட்டது.

நமது நாடு ஜனநாயக நாடு; இங்கு பிரதமருக்கே முற்றிலுமான அதிகாரம்; அவர் நினைத்தால் யாரையும் அமைச்சரவையில் சேர்க்கவோ, நீக்கவோ முடியும் என்றெல்லாம் நம்பப்பட்டு வந்தது. அதை தனது நேர்காணலால் தவிடுபொடி ஆக்கி இருக்கிறார் மன்மோகன் சிங். இதன்மூலமாக, ஊழல் குற்றச்சாட்டுகளாலும் எம்பி.க்களை விலைக்கு வாங்கியதாலும் இந்தியாவின் மிக மோசமான பிரதமர் என்ற அவப்பெயரை சுமந்துகொண்டிருந்த நரசிம்மராவை நல்லவர் ஆக்கிவிட்டார் மன்மோகன் சிங். ராவிடம் கூட நாட்டுநலன் குறித்த எண்ணமும் அதற்கான விழைவுகளும் தென்பட்டன. பின்னணியில் இருந்து இயக்கத் துடித்த இத்தாலிய அன்னையை ஒதுக்கிவைத்தபோது ராவின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. மன்மோகனிடம் வெளிப்படும் 'ராச'தந்திரம், அவரது இயலாமையை மட்டுமல்லாது, நாட்டுநலன் மீதான அக்கறையின்மையையும் அம்பலப்படுத்தியது.

தனது நேர்காணலில் ஸ்பெக்ட்ரம் ஊழலை நியாயப்படுத்த பலவாறு முயன்ற மன்மோகன் சிங், ஒரு இடத்திலும் கூட இப்போது 'சட்டம் தன கடமையைச் செய்து கொண்டிருப்பது' குறித்து மூச்சு விடவில்லை. ராசா கைது ஒரு அமைச்சரவை சகா மீதான பலத்த அடி என்பதை அவர் மறந்தும் சொல்லவில்லை; யாரும் நினைவும் படுத்தவில்லை. வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பல ‘கோடி கோடி’ கருப்புப்பணம் குறித்த சங்கடமான கேள்விகளோ, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை முன்னரே அமைத்து எதிர்க்கட்சிகளை சமாளித்திருக்கலாமே என்ற புத்திசாலிதனமான கேள்வியோ, இந்த நேர்காணலுக்கு சோனியா அம்மையாரிடம் ஆலோசனையோ பெற்றுவிட்டீர்களா என்ற தர்க்கப்பூர்வமான கேள்வியையோ எந்த அதிமேதாவியும் கேட்கவில்லை. வினவப்பட்ட கேள்விக்கே விளக்கெண்ணெய் பதில் சொன்ன பிரதமர், தானாக முன்வந்து நாட்டு மக்களை தெளிவடையச் செய்யப் போகிறாரா என்ன?

மொத்தத்தில் பிரதமரின் பிரத்யேக நேர்முகம், அவர் எதிர்பார்த்தது போல அவருக்கு எந்த நற்பலனையும் அளிக்காமல் கோமாளித்தனமாக முடிந்துவிட்டது. இதில் கிடைத்த ஒரே ஒரு லாபம், நாட்டு மக்களை குழப்பிவரும் ஊடக அறிஞர்களின் பொய்முகங்களை மீண்டும் ஒருமுறை தோலுரித்திருப்பது தான். நாட்டு மக்களை சில நாட்கள் திசைதிருப்ப முயன்ற காங்கிரஸ் கட்சிக்கு சேவகம் செய்து 'தங்கள் 'யோக்கியதை'யை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஊடக வாலாக்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

------------------------------

நன்றி: விஜயபாரதம் (01.03.2011)


வியாழன், பிப்ரவரி 17, 2011

புதிய அளவைகள்... பழைய நினைவுகள்...



100 கோடி - ஒரு எட்டி
100 எட்டி - ஒரு ரெட்டி
100 ரெட்டி - ஒரு கல்மாடி
100 கல்மாடி - ஒரு ராடியா
100 ராடியா - ஒரு ராஜா
100 ராஜா - ஒரு சோனியா

அண்மையில் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திருந்தது. அதில் தான் மேற்கண்ட புதிய அளவை முறை குறிப்பிடப்பட்டிருந்தது. மேலோட்டமாகப் படித்தபோது நகைச்சுவையாகத் தோன்றினாலும், அதன் ஆழத்தில் புதைந்திருந்த அவலமும் உள்ளக்கொதிப்பும் அளவிட முடியாதவை.

'ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே, பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே' என்ற பாடலும் நினைவில் வந்தது. ஊழல் மலிந்த இந்த பாரத தேசத்தில் தான், காமராஜரும், கக்கனும், லால் பகதூர் சாஸ்திரியும், அரசுகளில் பொறுப்பேற்று வாழ்ந்து காட்டி மறைந்திருக்கின்றனர் என்பது இதிகாசக் கதை போல நெஞ்சில் இடறுகிறது.

காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு இருப்பதாக பிரசாரம் செய்து தமிழகத்தில் காலூன்றிய விஷவித்துக்கள் இன்று, ஹாங்காங்கிலும் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் சிங்கப்பூரிலும் குவித்துள்ள கணக்கற்ற சொத்துக்கள் தமிழக நிதிநிலை அறிக்கையில் விழும் துண்டு போல பல மடங்கானவை. அதே கழகத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி துடிக்கிறது - வானவில் ஊழலால் பெயர் நாறிய பிறகும்.

லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்வில் ஒரு சம்பவம். காங்கிரஸ் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய சாஸ்திரிக்கு கட்சி ரூ. 40 மாத சம்பளம் வழங்கிவந்தது. ஒருமுறை சாஸ்திரியின் நண்பர் ஒருவர் கடன் கேட்டு அவர் வீட்டிற்கு வந்தார். தன்னிடம் பணமில்லை என்று சொன்ன சாஸ்திரியிடம், தான் சேமித்துவைத்திருந்த பணத்தை சாஸ்திரியின் மனைவி கொடுத்தாராம். விசாரித்தபோது மாதந்தோறும் ரூ. 5 மிச்சப்படுத்தி தனது மனைவி சேமித்துவைத்தது சாஸ்திரிக்கு தெரியவந்தது. மறுநாள் கட்சி அலுவலகம் சென்ற சாஸ்திரி 'இனிமேல் எனக்கு நீங்கள் ரூ. 35 மட்டும் மாத சம்பளம் கொடுத்தால் போதும். அதுவே எனது குடும்பத்திற்குப் போதுமானது'' என்றாராம்.

ஜனதா கட்சி தலைவராகவும் பிரதமராகவும் இருந்தவர் மொரார்ஜி தேசாய். இவரது மகள் மருத்துவக் கல்லூரியில் சேர்க்குமாறு வேண்டியபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதனால் மனம் வெறுத்த மகள் தற்கொலை செய்து கொண்டார். இது நம் நாட்டில் நடந்த சம்பவம் தான்.

அப்படிப்பட்டவர்கள் பிரதமராக இருந்த பாரதம், இன்று மன்மோகன் சிங் போன்ற கழிசடைகள் கைகளில் சிக்கி சின்னாபின்னப் படுகிறது. இவரைத்தான், 'திருவாளர் பரிசுத்தம்' என்று பத்திரிகைகளும் தொலைகாட்சி ஊடகங்களும் வர்ணிக்கின்றன. என்ன பரிசுத்தமோ தெரியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ராசாவையும் காமன்வெல்த் ஊழலில் தொடர்புடைய கல்மாடியையும் காப்பாற்றியது தான் பரிசுத்தத்தின் இலக்கணமோ? நீரா ராடியா என்ற அதிகாரத் தரகர் ஆட்டுவித்தபடி ஆடியது தான் இவரது தனிச்சிறப்போ? குவாத்ரோச்சியைத் தப்புவிக்கச் செய்து திரைமறைவில் ஆட்சி செய்யும் சோனியாவுக்கு குற்றேவல் செய்யும் பிரதமர்! அவருக்கு சாமரம் வீசும் ஊடகங்கள்!

1990 களில் ஹவாலா மோசடியில் பா.ஜ.க.தலைவர் அத்வானிக்கும் தொடர்பிருப்பதாக நரசிம்ம ராவ் அரசு இருந்தபோது புரளி கிளப்பப்பட்டது. அவர் மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. உடனடியாக அவர் அறிவித்த அரசியல் துறவறம் யாருமே எதிர்பார்க்காதது. தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்படும்வரை, தான் எம்.பி. பதவி வகிக்கப் போவதில்லை என்று அறிவித்த அத்வானி தனது பதவியையும் ராஜினாமா செய்தார். தவிர, வழக்கிலிருந்து விடுவிக்கப்படும்வரை தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று சபதமும் செய்தார் அத்வானி. இறுதியில் நியாயம் வென்றது. அவர் மீது குற்றம் சாட்டிய சிபிஐ, குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்அத்வானி; பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய மத்திய அரசு தலைகுனிந்தது.

அதே பா.ஜ.க.வின் கர்நாடக மாநில முதல்வர் எட்டியூரப்பா, தற்போது பலகோடி ஊழல் புகார்களில் சிக்கியபோதும் பதவி விலக மறுக்கிறார். அவர் பதவி விலகத் தேவையில்லை என்கிறது கட்சித் தலைமை. என்னே ஒரு தார்மிக வீழ்ச்சி! அரசுக்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு தனது மகன்களுக்கு கிரயம் செய்து கொடுத்த எட்டியூரப்பா, விவகாரம் வெளியானவுடன், அதைத் திருப்பித் தந்துவிட்டதாக அறிவிக்கிறார். அத்வானி இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.

ஊழல் ஒரு பொருட்டில்லை என்று ஆன பின்பு, தார்மிக நெறிமுறைகள் செல்லாக்காசுகள் ஆகிவிடுகின்றன. அதனால் தான், மத்திய காங்கிரஸ் அரசின் பல லட்சம் கோடி ஊழல்கள் குறித்து கடுமையான கண்டனங்களை பிரதான எதிர்க்கட்சியால் முன்வைக்க முடியவில்லை. ஷியாம் பிரசாத் முகர்ஜியும் தீனதயாள் உபாத்யாயாவும் அடல் பிகாரி வாஜ்பாயும் லால் கிருஷ்ண அத்வானியும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வளர்த்த பாரதிய ஜனதா, அத்வானி கண் முன்னாலேயே சிதிலம் ஆகிறது - மகாத்மா காந்தி கண் முன்னால் காங்கிரஸ் அரிக்கப்பட்டதுபோல!

எஸ்எம்எஸ்சில் வந்த புதிய ஊழல் அளவை முறையில் உச்சபட்சம் சோனியா என்றால், குறைந்த பட்ச அளவு எட்டி என்பது உறுத்தலான ஒன்றே. காங்கிரஸ் நாசமாகிவிட்டது; நாட்டையும் நாசம் செய்கிறது. அதன் தகுதி அது மட்டுமே. அதற்கு மாற்றான பா.ஜ.க.வும் அதேபோல இருக்கலாமா?

எட்டியூரப்பாவை கட்சியிலிருந்தே நீக்க வேண்டிய தருணம் இது. மாட்சி போன பின் ஆட்சி இருந்தால் என்ன போனால் என்ன? பாஜக சிந்திக்க வேண்டும்.

.

வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கலாமா?


சாயக் கழிவுகளின் ஓடையான நொய்யல் நதி

திருப்பூர் சாய, சலவை ஆலைகள் அனைத்தையும் மூடுமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு, தொழில்துறையின் ஆணிவேரில் கை வைத்திருக்கிறது. இப்போதுதான், தாங்கள் செய்த தவறின் முழுப் பரிமாணமும் திருப்பூர்க்காரர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. பல்லாயிரம் கோடி அந்நியச் செலாவணி பெற்றுத் தருவதற்காக, சொந்த மண்ணை நாசம் செய்ததன் பயனை இப்போது உணரத் துவங்கி இருக்கிறது திருப்பூர்.

இந்த அவலம் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே நதிநீரை நாசம் செய்யும் சாய ஆலைகள் குறித்து எச்சரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், தொழில்நலம் பேணும் கனவில் அந்த எச்சரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. விளைவு, ஜீவநதியான நொய்யல், இன்று சாக்கடைக் கழிவுகளும் சாயக் கழிவுகளும் பெருக்கெடுத்தோடும் கழிவுநீர் ஓடையாகி விட்டது. இந்த சீரழிவிற்கு சாய ஆலைகள் மட்டுமே பொறுப்பு என்று சொல்லிவிட முடியாது. சாக்கடையை நதியில் சேர்க்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த அவலத்தில் பெரும் பங்குண்டு. ஆயினும், நதிநீரை பல வண்ணங்களில் மாற்றிய சாயக் கழிவுநீர் தான் அனைவர் கண்ணுக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது.

1985 க்குப் பிறகுதான் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பல மடங்காகப் பெருக ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வெண்ணிற உள்ளாடைகளுக்கு மட்டுமே பிரபலமாக இருந்த திருப்பூர், உலகத் தேவைகளைக் கண்டுகொண்டு வண்ணமயமான மதிப்பூட்டப்பட்ட பின்னலாடைகளை உற்பத்தி செய்யத் துவங்கியது. அப்போதுதான் சாய, சலவை ஆலைகளின் எண்ணிக்கை பெருகியது.

ஆரம்ப நாட்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ற ஒன்று இருப்பதே தொழில்துறையினர் அறியாத காலமும் இருந்தது. அந்த அளவுக்கு அரசும் அசட்டையாக இருந்தது. அதே சமயம், சுயதொழிலில் ஈடுபட்ட விவசாயக் குடும்பங்கள் தங்கள் நிலத்தை சாயப் பட்டறைகளாக்கி பணம் பார்க்கத் துவங்கின.

இன்று, எந்த விவசாயிகள் நொய்யல் பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூக்குரலிடுகிறார்களோ, அதே விவசாயிகளின் ஒரு பிரிவினர்தான் சாய ஆலைகள் அமைப்பதிலும் முன்னின்றனர். அவர்கள் யாருக்கும் இதன் பின்விளைவுகள் தெரிந்திருக்கவில்லை. கட்டுப்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கோ, சாய ஆலைகள் பணம் காய்க்கும் மரங்களாகவே தெரிந்தன.

சாய ஆலைகளில் பயன்படுத்தப்படும் அதி அடர்த்தியான சாயங்கள், ரசாயனம் கலந்தவை. அவை எந்தவித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டு, கழிவுநீர் ஓடைகளிலும் நொய்யல் நதியிலும் கலக்கவிடப்பட்டன. சில இடங்களில் ஆழமான கிணறுகளிலும் கூட சாயக் கழிவுநீர் விடப்பட்டது. அதன் விளைவாக நிலத்தடிநீரும் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. பின்னலாடைத் துணிகளுக்கு சாயமிடுவதில் கிடைத்த லாபம் தொழிலதிபர்களின் கண்களை மறைத்தது.

திருப்பூர் பின்னலாடைகள் உலகப் புகழ் பெற்றபின் சாய ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒருகட்டத்தில் 1,300 க்கு மேற்பட்ட சாய, சலவை ஆலைகள் செயல்பட்டன. அப்போதுதான் நொய்யல் மாசுபட்டது வெளி உலகிற்கு தெரியவந்தது. திருப்பூரை அடுத்த ஓரத்துப்பாளையத்தில் நொய்யல் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் தேங்கிய சாயக் கழிவுநீரால் அணையே நாசமானது. இதையடுத்து நொய்யல் நீர்ப் பாசன சங்கம் நீதிமன்றத்தில் திருப்பூர் சாய ஆலைகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2006 டிசம்பரில், ''2007 ஜூலை 31 க்குள் அனைத்து சாய ஆலைகளும் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (ஆர்.) எனப்படும் சவ்வூடு பரவல் முறையில் இயங்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்; இதுவரை நொய்யலை மாசு படுத்தியதற்காக அபராதம் செலுத்த வேண்டும். அந்தத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்'' என்று உத்தரவிட்டது. அதன்படி இரு மாதங்கள் மட்டுமே சாய ஆலைகள் அபராதம் செலுத்தின. பிறகு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு 2009 , அக். 6 வரை கால அவகாசம் பெற்றன. மீண்டும் இந்த அவகாசம் 2010 , ஜன. 5 வரை நீடிக்கப்பட்டது. அதே சமயம் சாய ஆலைகள் பல இணைந்தும், தனியாகவும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கத் துவங்கின.

இதில் சிக்கல் என்னவென்றால், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பல கோடி செலவிட வேண்டி வந்தது. செலவிட இயலாத 500 க்கு மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன. இதுவரை ரூ. 800 கோடிக்கு மேல் செலவிட்டு திருப்பூரில் 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களும், 147 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இவற்றில் முழுமையான சாயக் கழிவு சுத்திகரிப்பு சாத்தியமாகவில்லை. விளைவாக, நொய்யலில் கழிவுநீர் கலப்பது குறையவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி 2100 டிடிஎஸ் அளவுக்கு மேல் கழிவுநீரின் உப்படர்த்தி இருக்கக் கூடாது. இதனை திருப்பூர் சாய, சலவை ஆலைகளால் நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து நொய்யல் விவசாயிகள் மீண்டும் (2010) உயர் நீதிமன்றத்தை நாடினர். அப்போது 'ஜீரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் நூறு சதவிகித சுத்திகரிப்பு செய்யாத சாய ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் விளைவாக சாய, சலவை ஆலைகளின் எண்ணிக்கை 754 ஆகக் குறைந்தது. இவற்றில் 496 ஆலைகள் ஒன்றிணைந்து 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களை நடத்துகின்றன. இதற்கு அரசும் உதவி செய்துள்ளது. எனினும் நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி சாய ஆலைகள் செயல்படவில்லை.

நீதிமன்றத்தை எப்படியாவது சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் ஒப்புக்கொண்ட 'ஜீரோ டிஸ்சார்ஜ்' இப்போது அவர்களுக்கே எதிரானது; வேறு வழியின்றி, சாயக் கழிவுநீரை கடலுக்கு கொண்டுசேர்ப்பதே இறுதியான தீர்வு என்று கூறத் துவங்கினர். திருப்பூர் தொழில்துறையின் மாபெரும் தாக்கத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளும் இதையே ஒப்பிக்கத் துவங்கின.

இது தொடர்பாக 2006 லேயே ரூ. 800 கோடி செலவில் திட்டம் மாநில அரசால் தீட்டப்பட்டது. திருப்பூர், பெருந்துறை, பவானி, ஈரோடு, கரூர் ஆகிய ஜவுளி நகரங்களிலும் பிரச்னையாக உள்ள சாயக் கழிவுநீரை கடலில் சேர்க்க 432 கி.மீ. தூரத்திற்கு குழாய் அமைக்க உள்ளதாக சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு சுற்றுச்சூழல் நிபுணர்களும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் திட்டம் சாத்தியமாகாமல் உள்ளது. தற்போது இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 1,400 கொடியாக அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், விவசாயிகளின் மறு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘’ஏற்கனவே அளித்த உத்தவுப்படி செயல்படாத அனைத்து சாய, சலவை ஆலைகளும் மூடப்பட வேண்டும்; இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்; சாய ஆலைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கடந்த ஜன. 28 ல் உத்தரவிட்டது. அதன் விளைவாக, இப்போது அனைத்து சாய ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. ஈசன் முதுகில் விழுந்த பிரம்படி அனைவர் முதுகிலும் வலியை ஏற்படுத்தியது போல, திருப்பூரின் அனைத்து தொழில் துறையினர் மீதும் இதன் தாக்கம் துவங்கியுள்ளது.

ஏனெனில், பின்னலாடைத் தாயாரிப்பின் பல படிநிலைகளில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். சாய, சலவை ஆலைகள் ஸ்தம்பித்தால், தொடர் சங்கிலியாக இயங்கும் தொழில்துறை குலைவதை தவிர்க்க முடியாது. இப்போது, திருப்பூரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

இனி வரும்காலம் திருப்பூருக்கு எப்படி இருக்கும்? இக்கேள்விக்கான பதில் நிச்சயமற்றதாகவே உள்ளது. கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல, விபரீதம் அறியாமல் தொடர்ந்து இயற்கையை மாசுபடுத்தும் செயலில் சாய, சலவை ஆலைகள் இயங்கியதன் பயனை அறுவடை செய்யத் துவங்கி உள்ளன. இந்த விவகாரத்தில் எந்த பொறுப்புணர்வும் இன்றி வேடிக்கை பார்த்த அரசும், தற்போது கையைப் பிசைகிறது.

இயற்கையை சீரழித்து பெரும் லாபத்தால் நாம் பெறப் போகும் உயர்வு உண்மையில் படு பாதாளமே என்பதை இனியாவது தொழில்துறை உணர வேண்டும். சாயக்கழிவுக்கு தீர்வு காண்பதில், பல கோடி அந்நியச் செலாவணியும் வரியும் பெறும் அரசுக்கும் பொறுப்புண்டு. இதை அரசுகள் தட்டிக் கழிக்க முடியாது. தொழில்துறை நலிவால் பின்னலாடை நகரம் வீழ்ச்சி அடைவதையும் அரசு தான் தடுத்தாக வேண்டும். இதற்கும் யாரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாக வேண்டுமோ?

------------------------------

நன்றி: விஜயபாரதம் (25.02.2011)