புதன், நவம்பர் 30, 2011

சரிப்படுத்த வேண்டிய தவறான முடிவு




‘ஆடத் தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்’ என்று சொன்னாளாம்- இப்படி ஒரு பழமொழி உண்டு. தமிழகத்தில் அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணங்கள், பால்விலை உயர்வு, உயர்த்தப்படவுள்ள மின்கட்டணம் குறித்து சிந்திக்கும்போது மேற்படி பழமொழி தான் நினைவில் வருகிறது.


போக்குவரத்துக் கழகங்கள் ரூ. 6,150 கோடி நஷ்டத்தில் இயங்குவதால் தான் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்திருக்கிறார். முந்தைய திமுக அரசு தேர்தலைக் கணக்கில் கொண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாததால் தான் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார். உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், இவர் மட்டும் ஏன் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வரும்வரை காத்திருந்தார்? ...............
......................
-------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

------------------------
விஜயபாரதம் (9.12.2011)

.

வியாழன், நவம்பர் 03, 2011

பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 2)


நூல் விமர்சனம்:
ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம் - பா.ராகவன்,
கிழக்குப் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ. 75.00



---------------------------------
முதல் பகுதி


பொதுவாக ஆர்.எஸ்.எஸ். குறித்து உருவாக்கப்பட்டுள்ள எதிரிடையான பிம்பத்துக்கும், அதன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை நெருங்கும்போது ஏற்படும் அனுபவங்களுக்கும் பெருத்த வேறுபாடு காணப்படும். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். அல்ல; அதன் எதிர்ப்பாளர்கள்தான். எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், தூஷிப்பவர்கள் பற்றிய கவலையின்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆற்றும் அரும்பணிகளால்தான் அதன் வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பணிகள் பலவற்றை மழுப்பலின்றி இந்நூலில் காட்டி இருக்கிறார் பா.ராகவன். அதற்கு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். எனினும் இதிலுள்ள சிறு தகவல் பிழைகளை சுட்டிக் காட்டுவது அடுத்த பதிப்பில் சரிசெய்ய உதவக்கூடும்.

அரிய செயலில் எளிய தொண்டர்கள்

இந்தப் புத்தகத்தில், கோவா விடுதலைப் போராட்டம், போர்களின்போது அரசுக்கு உதவி, நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தை மீட்க நடந்த யுத்தம், ஆர்.எஸ்.எஸ்.சின் ஷாகா நடைமுறை, வனவாசி மக்களிடையே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சேவைகள், விவேகானந்த கேந்திரா உருவாக்கம் – போன்ற அம்சங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக ‘தேசம் எங்கள் உயிர்மூச்சு‘ என்ற 7வது அத்தியாயம் அற்புதம்.

இதனை ஏற்கெனவே பல ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகளில் படித்திருந்தாலும்கூட, இந்த நூலின் நடையழகு அருமை. வேகமான பதிவுகள், எளிய வார்த்தைப் பிரயோகங்கள், விறுவிறுப்பான நடை, ஆங்காங்கே பொருத்தமான ஒப்பீடுகள். (உதாரணம்- பி.ஆர்.தீரஜ்-பக்:64.) ஆகியவை, புத்தகத்தை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க விடுவதில்லை.

ஆர்.எஸ்.எஸ். ஷாகா குறித்த அறிமுகம் (பக்: 62, 63), இயக்கத் தொடர்பில்லாதவர்களும் புரிந்துகொள்ளும்படி இருப்பது சிறப்பு. ஆயினும் நெருக்கடி நிலையை எதிர்த்து தலைமறைவுப் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். குறித்த விரிவான தகவல்கள் இல்லாதது பெரும் குறை. ஏனெனில் அந்தப் போராட்டம் காரணமாகவே ஜெ.பி. ஆர்.எஸ்.எஸ்.சுடன் நெருங்கிவந்தார். நாடு முழுவதும் அறப்போராட்டங்களை ஒருங்கிணைத்த ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் பின்னாளில் ஜனதா கட்சி உருவாக வியூகம் வகுக்க முடிந்தது. அதனை ஜெ.பி., தலைமையில் நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ்.தான்.

அந்நாளில் போராளிகளாக இருந்த இரா.செழியன், தமிழருவி மணியன் போன்ற பலர் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ‘நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்‘ என்ற நூலை அன்றைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளரும் தற்போதைய இந்து முன்னணி நிறுவன அமைப்பாளருமான ராம.கோபாலன் (*1) எழுதி இருக்கிறார். அதில் தமிழகத்தில் கைதான சத்யாகிரகிகள் பட்டியலும் இருக்கிறது. ‘ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்’ நூலில் இதற்கென தனியொரு அத்தியாயமே இருக்கிறது. (*2)

1975ல் எதிர்பாராத கணத்தில் நாட்டின் மீது திணிக்கப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டமின்றி அரசியல் கட்சிகளைத் தொடர்புகொண்டு ஜனநாயக மாற்றத்துக்கு வித்திட்டவர்கள் ஸ்வயம்சேவகர்கள். இதற்கென உருவான மக்கள் போராட்டக் குழுவின் (லோக் சங்கர்ஷ சமிதி) நிர்வாகியாக இருந்தவர் நானாஜி தேஷ்முக். (*3) இவர் ஓர் அற்புதமான ஆர்.எஸ்.எஸ். தலைவர். இவரைப் பற்றி இந்நூலிலேயே (பக்: 45) சரஸ்வதி சிசு மந்திர் அமைத்தவர் என்று தகவல் வருகிறது. அது மட்டுமல்ல, இவரே சித்திரகூடத்தில் தீனதயாள் ஆராய்சிக் கழகத்தை நிறுவியவர். கோண்டா என்ற மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக (*4) வளர்த்தெடுத்தவர்.

”அறுபது வயதுக்கு மேல் அரசு வேலையில் இருப்பவர் ஓய்வு பெற வேண்டும் என்றால், அரசியலிலும் அதுதானே சரியாக இருக்கும்?” என்று கூறி, அரசியலில் முத்திரை பதித்துவந்த காலத்திலேயே (1978) ஓய்வை அறிவித்தவர் இவர். நானாஜியின் தலைமைப் பண்பே ஜனதா உருவாகவும் இந்திரா ஆட்சி வாழவும் காரணமாயின. பாஜக தலைவர் அத்வானியின் ‘எனது தேசம்; எனது வாழ்க்கை‘ நூலிலும் இதற்கான தகவல்கள் (*5) உள்ளன.

விவேகானந்த கேந்திரா உருவாக்கத்தில் ஏகநாத் ரானடேவின் பங்களிப்பு குறித்து இந்தப் புத்தகத்தில் வெளியான செய்திகள் பலர் அறியாதவை. அந்த அமைப்பு செய்யும் சேவைகளையும் (*6) குறிப்பிட்டிருக்கலாம். அதேசமயம் அங்கும் ஒரு கரசேவை நடந்தது பா.ராகவன் அறியாதது. குமரி முனையில் சுவாமி விவேகானந்தர் தவம் செய்த பாறையை ஆக்கிரமிக்க அங்கு கிறிஸ்தவ அமைப்பினர் நாட்டிய சிலுவையை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய பாலன் உள்ளிட்ட ஐந்து ஸ்வயம்சேவகர்களால்தான் அந்த இடம் மீட்கப்பட்டது என்பது முக்கியமான தகவல். உண்மையில், 1992 அயோத்தி கரசேவைக்கு முன்னதாகவே குமரியில் (1964) கரசேவை நடந்துவிட்டது.

சங்க குடும்பம் என்பது என்ன?

‘சங் பரிவார்’ என்பது ஏதோ புதுமையான வார்த்தை என்பது போன்ற தோற்றத்தை சில ஊடகங்கள் உருவாக்கிவரும் நிலையில், சங்க பரிவாரம் என்பதை அழகாக விளக்கி உள்ளார் பா.ராகவன். அதாவது சங்க குடும்பம். ஆர்.எஸ்.எஸ்.சால் உந்துசக்தி பெற்ற ஸ்வயம்சேவகர்கள் ஆங்காங்கே துவங்கிய புதிய இயக்கங்களின் கதை சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ‘வாசுதேவ குடும்பகம்’ என்ற சொல்லாட்சி தவறுதலாக (பக்: 42) வந்துள்ளது. அது ‘வசுதைவ குடும்பகம்’ என்பது ஹிதோபதேச வாக்கு. (*7) உலகமே ஒரு குடும்பம் என்பதே அதன் பொருள். அதாவது தமிழில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்கிறோமே, அதுதான் அதன் பொருள். இதை சங்கக் குடும்பத்துக்கு தொடர்புபடுத்தி இருப்பது பொருத்தமே.

சங்கக் குடும்பத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல இருபத்துக்கு மேற்பட்டவை அல்ல; நூற்றுக்கு மேற்பட்டவை. இவற்றில் தேசிய அளவில் செயல்படும் இயக்கங்களின் எண்ணிக்கையே நாற்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் சில இதோ..

1.ராஷ்ட்ர சேவிகா சமிதி- பெண்களுக்கான அமைப்பு



2.ராஷ்ட்ரீய சிக் சங்கடன்- சீக்கியர்களுக்கான அமைப்பு

3.முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் – இஸ்லாமியர்களுக்கான அமைப்பு

4.ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் – வெளிநாடு வாழ் இந்தியர்க்கான அமைப்பு

5.விஸ்வ விபாக் – உலக அளவிலான ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைப்பது

6.அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – மாணவர் அமைப்பு.

7.பாரதீய மஸ்தூர் சங்கம்- தொழிலாளர் அமைப்பு.

8.பாரதீய கிசான் சங்கம் – விவசாயிகளுக்கான அமைப்பு.

9.பாரதீய ஜனதா – அரசியலுக்கான அமைப்பு

10.வனவாசி கல்யாண் ஆசிரமம்- மலைவாழ் மக்களுக்கான சேவை அமைப்பு

11.பாரதீய இதிகாச சங்கலன யோஜனா- வரலாறு தொகுக்கும் அமைப்பு

12.ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்- சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

13.வித்யாபாரதி- பள்ளிகளின் கூட்டமைப்பு

14.சம்ஸ்கார் பாரதி- கலை, பண்பாட்டுக்கான அமைப்பு

15.சம்ஸ்கிருத பாரதி- சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக பாடுபடும் அமைப்பு.

16.ஆரோக்கியபாரதி – மருத்துவர்களுக்கான அமைப்பு

17.சஹகார் பாரதி – கூட்டுறவு அமைப்பு

18.சிக்ஷா பாரதி – வேலைவாய்ப்புக்கான அமைப்பு

19.பிரக்ஞா பாரதி – சிந்தனையாளர்களுக்கான அமைப்பு

20.சேவாபாரதி- சேவைகளுக்கேன்றே பிரத்யேகமான அமைப்பு

21.சேவா இன்டர்நேஷனல் – உலக அளவிலான சேவை அமைப்பு

22.விஸ்வ ஹிந்து பரிஷத் – உலக அளவிலான சமயம் சார்பான அமைப்பு

23.பஜ்ரங் தளம்- இளைஞருக்கான அமைப்பு- அனுமன் சேனை

24.துர்கா வாகினி- பெண்களுக்கான அமைப்பு

25.அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத் – நுகர்வோர் அமைப்பு

26.அகில பாரதீய ஆதிவக்த பரிஷத் – வழக்கறிஞர்களுக்கான அமைப்பு

27.கிராம விகாஸ் பரிஷத் – கிராம முன்னேற்றத்துக்கான அமைப்பு.

28.பாரத் விகாஸ் பரிஷத் – சமுதாயப் பெரியவர்களுக்கான (Elites) அமைப்பு

29.பூர்வ சைனிக் சேவா பரிஷத் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அமைப்பு

30.விவேகானந்த கேந்திரா- சமூக சேவைக்கான அமைப்பு

31.பாரதீய விசார் கேந்திரா – தேசிய சிந்தனைகளை பரப்பும் அமைப்பு.

32.விஸ்வ சம்வாத் கேந்திரா- ஊடகத் துறைக்கான அமைப்பு

33.ஏகல் வித்யா கேந்திரா – ஓராசிரியர் பள்ளிகள் நடத்தும் அமைப்பு

34.அகில பாரதீய சிக்ஷண மண்டல் – ஆசிரியர்களுக்கான அமைப்பு

35.அகில பாரத திருஸ்டிஹீன கல்யாண் சங்கம்- பார்வையற்றவர்களுக்கான அமைப்பு

36.தீன தயாள் சோத் சன்ஸ்தான் (ஆராய்ச்சி கழகம்)- ஊரக மேம்பாட்டுக்கான அமைப்பு

37.சரஸ்வதி சிசு மந்திர் – கல்வி வளர்ச்சிக்கான அமைப்பு

38.தர்ம ரக்ஷண சமிதி – சமயம் சார்ந்த அமைப்பு

39.ஐ.டி.மிலன் – தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோருக்கான அமைப்பு

40.ஹிந்து ஐக்கிய வேதிகா – கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு

41.பால கோகுலம் – குழந்தைகளுக்கான அமைப்பு

42.இந்து முன்னணி- தமிழகத்திலுள்ள சமய எழுச்சி அமைப்பு

43.விஜில்- பொது விழிப்புணர்வுக்கான பொதுமேடை

44.தேசிய சிந்தனைக் கழகம்- தமிழில் தேசிய சிந்தனை வளர்க்கும் அமைப்பு

- இவை தவிர, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றாற்போல, தேவைக்கேற்ற இயக்கங்களும் அமைப்புகளும் சங்க ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படுகின்றன. மீனவர் கூட்டுறவு அமைப்புகள், மருத்துவ சேவை அமைப்புகள், ரத்த தான அமைப்புகள், தாழ்த்தப்பட்டோருக்கான சேவை அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள் பல உள்ளன. மேலும், மாநிலந்தோறும், ராஷ்டிர தர்ம பிரகாஷன் போன்ற புத்தக, பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இயங்குவது ஒத்தகருத்துணர்வால்தான்.

மேற்குறிப்பிட்ட பட்டியலை இங்குக் குறிப்பிடக் காரணம், ஆர்.எஸ்.எஸ்.சின் மாபெரும் வடிவத்தை சூட்சுமமாக உணர்த்தவே. முதல் இரண்டு முறை (1948,1975) ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது போல மூன்றாவது தடை (1992) விதிக்கப்பட்ட தடை சங்கத்தைப் பாதிக்காமல் போனதற்கு இந்த சங்க குடும்பமே காரணம்.

இந்த மூன்றாவது தடை குறித்து இந்த புத்தகத்தில் ஒரு வரியாவது எழுதி இருந்திருக்கலாம். சுதந்திரம் பெறுவதற்குமுன் லாகூர் மாகாணத்தில் விதிக்கப்பட்ட தடை குறித்து விவரமாகப் பதிவு செய்த (பக்: 15) பா.ராகவன், அண்மைக்காலத்தில் நிகழ்ந்த அயோத்தி சம்பவத்தை அடுத்த தடையை விட்டிருக்கக் கூடாது.

பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ்.சும்:

மேற்படி இயக்கங்கள் எதற்கும் ஆர்.எஸ்.எஸ். எந்தக் கட்டளையும் இடுவதில்லை. அந்தந்தத் துறையில் தங்களுக்கென தனித்த லட்சியங்களுடன் தனிப்பாதையில் இவை இயங்குகின்றன. ஆனால். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் நடத்தப்படுவதால், மேற்படி இயக்கங்கள் குடும்பத் தலைவனுக்குக் கட்டுப்பட்ட அங்கத்தினர்களாக இயங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் அந்தத் துறைகளில் முன்னணி வகிப்பவை என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே பாரதிய ஜனதா கட்சியையும் காண வேண்டும்.

பாரதிய ஜனசங்கம் துவங்கியது பற்றிய குறிப்பு இந்நூலில் வருகிறது. ஆனால். மிக முக்கியமான ஒரு விஷயம் அதில் விடுபட்டுள்ளது. ஷ்யாம பிரசாத் முகர்ஜி தலைமையில் புதிய அரசியல் கட்சியை காங்கிரசுக்கு மாற்றாக துவங்குவது என்ற திட்டம் தீட்டப்பட்டவுடன், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வல்கர், சங்கத்தில் இருந்த பயிற்சி பெற்ற தொண்டர்கள் பலரை முழுநேர ஊழியர்களாக அனுப்பி வைத்தார். அவர்களே, தீன தயாள் உபாத்யாய, நானாஜி தேஷ்முக், அடல் பிகாரி வாஜ்பாய், ஜகன்நாதராவ் ஜோஷி, லால் கிருஷ்ண அத்வானி, சுந்தர் சிங் பண்டாரி போன்றவர்கள். இவர்களது கடும் உழைப்பால் தான் ஜனசங்கம் மாற்றுக் கட்சியாக உருவெடுத்தது.

செல்லப்பிள்ளைகள் ஒருபோதும் எதிர்த்துப் பேசுவதில்லை என்ற (பக்:132) ஆசிரியரின் கருத்தை இந்தக் கோணத்தில் அணுகினால் சில விஷயங்கள் தெளிவாகும். அரசியலில் ஒரு மாற்று உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை ஆர்.எஸ்.எஸ்.சால் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். என்றும் தலையிடுவதில்லை. நாகபுரிக்குத்தான் பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் அத்வானியும் சென்றார்களே தவிர, நார்த் பிளாக்கிற்கோ, நாடாளுமன்றத்துக்கோ, பிரதமரின் அலுவலகத்துக்கோ என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சென்றதில்லை. அது அவர்களது வேலையுமில்லை. கிட்டத்தட்ட சத்ரபதி சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் சமர்த்த ராமதாசரின் செல்வாக்குடன் இதை ஒப்பிடலாம்.

ஆர்.எஸ்.எஸ். ஆண்டுதோறும் நடத்தும் ‘சமன்வய பைடக்’ எனப்படும் துணை அமைப்புகளின் கூட்டத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்க வாய்ப்பு உண்டு. அதில் பலத்த வாத பிரதிவாதங்கள் ஏற்படுவதுண்டு. குஜராத் குறித்து இந்த சமன்வய பைடக்கில் கடும் விவாதம் எழுந்தது, வெளியில் உள்ளோருக்குத் தெரியாது. நூலாசிரியர் ‘செல்லப்பிள்ளைகள்’ கருத்தை குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக ஸ்வயம்சேவகன் கவலைப்படமாட்டான். ஏனெனில் உண்மை என்றாவது வெல்லும் என்பது அவனுக்குத் தெரியும்.

சங்கம் ஸ்வயம்சேவகனிடம், குறிப்பாக பொதுநலப் பணியில் ஈடுபடும் தனது தொண்டனிடம் நேர்மையை வெகுவாக எதிர்பார்க்கிறது. சங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்துக்கு இதுவும் ஒரு காரணம். எனவேதான், ஊழல், லஞ்சப் புகார்கள் தொடர்பாக, பங்காரு லட்சுமணன், திலீப் சிங் ஜூதேவ், எடியூரப்பா ஆகியோரைப் பதவியிலிருந்து விளக்குமாறு பாஜகவுக்கு சங்கம் அறிவுறுத்தியது.

வேறெந்த அரசியல் கட்சிகளிலும் இத்தகைய வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. கட்சியினரை கட்டுப்படுத்தவும் வழியில்லை என்பது இந்திய அரசியலை கவனிக்கும் எவருக்கும் தெரியும்.

இன்னும் சில விடுபடல்கள்:

இந்தப் புத்தகம் அவசரமாக எழுதப்பட்டது போன்ற தோற்றம் காணப்படுகிறது. அதன் காரணமாக இந்த விடுபடல்கள் நிகழ்ந்திருக்கலாம்.

உதாரணமாக, பாரதீய ஜனசங்கத்தின் முன்னோடி தீன தயாள் உபாத்யாய, சங்கத்தின் நான்காவது தலைவர் ராஜேந்திர சிங் (இவர் பிராமணர் அல்ல), முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், தமிழகத்தின் சிவராம்ஜி ஜோக்லேகர் (இவரது பெயரில் ரத்தவங்கி செயல்படுகிறது), தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலரது குறிப்புகளை இதில் சேர்த்திருக்க வேண்டும்.

சென்னையிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் வெடிகுண்டுகளால் சிதைக்கப்பட்டது (1993), அதில் 11 பேர் பலியானது. (*8) தமிழகத்தில் ஹிந்து உரிமைகளுக்காக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது (*9), 1984 இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து நடந்த சீக்கியர் படுகொலைகளைத் தடுப்பதில் சங்கத்தின் பிரதானப் பாத்திரம், சுதேசி விழிப்புணர்வு இயக்கப் பணிகள், அயோத்தி இயக்கத்தின் நிகழ்வுகள் (சிலான்யாஸ், ராம்ஜோதி யாத்திரை, நீதிமன்ற நிகழ்வுகள்) போன்றவற்றை இன்னும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் இவை அனைத்தும் நமது சமகாலத்துடன் தொடர்புடையவை.

மேற்படி நிகழ்வுகள் குறித்த நடுநிலையான பார்வையை பா.ராகவன் அடுத்த பதிப்பிலோ, புத்தகத்தின் அடுத்த பாகத்திலோ பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல, புத்தகத்தின் பெயர்ச்சொற்களில் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. உதாரணங்கள்: அனுசிலான் சமிதி (அனுசீலன் சமிதி), ஜுகாந்தர் (யுகாந்தர்- விவேகானந்தரின் தம்பி பூபேந்திரர் நடத்தியது), திகம்பர் பாட்ஜே (திகம்பர் பாட்கே), யஸ்வந்த்ரோ கேல்கர் (யஷ்வந்த் ராவ் கேல்கர்), கோல்வால்கர் (கோல்வல்கர்), டி,பி. தெங்காடி (டி,பி.தெங்கடி), பிரிவுத் (ப்ரௌட- முதியோர்), மோப்லாஸ்தான் (மாப்ளாஸ்தான்- மாப்பிள்ளைமார் முஸ்லிம்கள் தொடர்பான பதம்)- போன்ற வார்த்தைகளை சொல்லலாம். பெயர்ச்சொற்களை எழுதும்போது, ஏற்கனவே புழக்கத்தில் உள்ளவற்றையே பயன்படுத்துவது பொதுவான மரபு.

இப்போது யாரும் ஜவாஹர்லால் நேரு என்று எழுதுவதில்லை. ‘ஜவஹர்லால்’ என்றே குறிப்பிடுகிறோம். rao – ராவ் ஆகுமே தவிர ‘ரோ’ ஆகாது (நினைவுக்கு: நரசிம்ம ராவ்).

sangh – என்பது ஹிந்தியில் சங்கத்தைக் குறிப்பது. அதை தாரளமாக ‘சங்கம்’ என்று எழுதலாம். ஆனால், இந்தப் புத்தகத்தில் RSS ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்’ என்று பெயர் (பக்: 22) சிதைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் BMS , BKS ஆகியவை முறையே பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம் என்று சரியாகவே (பக்: 52) எழுதப்பட்டிருக்கின்றன. ஏன் இந்தக் குழப்பம்?

கிழக்கு பதிப்பகம் போன்ற பெரிய நூல் வெளியீட்டாளர்கள் பெயர்ச்சொற்களை குறிப்பிடுவதில் ஒரு தர நிர்ணயம் செய்துகொள்வது அவசியம். இதற்காகவே COPY EDITOR போன்றவர்கள் உள்ளனர். ஏனெனில், கிழக்குப் பதிப்பக புத்தகங்கள் வெறுமனே நேரம் போக்க (TIME PASSING) பயன்படுபவையாக அல்லாமல், எதிர்காலத் தலைமுறைக்கான ஆவணங்களாகத் திகழவும் வாய்ப்புள்ளவை. எனவே தான் கிழக்குப் பதிப்பகத்தின் பொறுப்பு கூடுதலாகிறது.

மொத்தத்தில், பா.ராகவன் தனது எழுத்துப் பணியில் ஓர் அரிய பணியாகக் கருதக்கூடியதாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுத்து மேலும் பல தகவல்களைத் திரட்டினால் இந்த நூல் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். தற்போதைக்கு இந்நூலை ‘ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஓர் அறிமுக நூல்’ என்று சொல்லலாம்.

இக்கட்டுரையின் தலைப்பில் ‘அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே’ பா.ராகவன் திணறி இருப்பதாக குறைகூறி இருந்தேன். ஏனெனில் சாதகமான பல தகவல்களுடன் பாதகமான தகவல்களைக் கொடுப்பதுதான் நடுநிலை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்பினேன்.

எந்த ஒரு மனிதருக்கும் இரு முகங்கள் இருப்பது போல எந்த ஓர் அமைப்புக்கும் இரு முகங்கள் இருக்கவே செய்யும். அவற்றை பதிவு செய்யும்போது பிறரது கருத்துகளுக்காக எழுத்தாளர் கவலைப்படக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.சை பகடி செய்வதைவிட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுதான், அந்த அமைப்பு தன்னைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

பொதுவில் பரப்பப்படும் அதே குற்றச்சாட்டுகளை ‘நடுநிலை’ என்ற பெயரில் மேலும் பதிவு செய்வது தேவையில்லை என்பதே எனது கருத்து. மற்றபடி பா.ராகவன் தனது ஒவ்வொரு கருத்தையும் வெளியிட உரிமை உள்ளவரே. அவருக்கு குறைந்தபட்சம் சிவராம்ஜியின் நல்லோர் வட்டம் (*10) குறித்த அறிமுகம் இருந்திருக்குமானால், அவரது நடுநிலை ‘நடுநிலை’யாகவே இருந்திருக்கும்.

மற்ற பதிப்பகங்கள் பதிப்பித்த ஆர்.எஸ்.எஸ். குறித்த புத்தகம் உள்ளது. அதை யாரும் தேடிச் சென்று வாங்குவதில்லை. ஏனெனில் அதை வெளியிட்டவர்களின் உள்நோக்கங்கள் அனைவரும் அறிந்தவை. கிழக்கு பதிப்பகம் அப்படியல்ல. அனைவருக்கும் பொதுவான ஒரு பதிப்பகம், நடுநிலையானது என்று கருதக் கூடிய பதிப்பகம் கிழக்குப் பதிப்பகம்.

எனவே அதனிடம் மேலும் நடுநிலையுடன், கூடுதலான தகல்களுடன், உறுதியான ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.எஸ். குறித்த இதைவிட சிறப்பான புத்தகத்தை எதிர்பார்க்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

- சேக்கிழான்


--------------------------------------
அடிக்குறிப்புகள்:

1 . நெருக்கடி நிலையை எதிர்த்து போராட்டம்- ராம.கோபாலன், ஜனசேவா பதிப்பகம், சென்னை, 1980

2 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள் – ஹொ.வெ.சேஷாத்ரி, கேசவர் பதிப்பகம், சென்னை, 1989 , பக்: 405

3 . நானாஜி தேஷ்முக்: http://en.wikipedia.org/wiki/Nanaji_Deshmukh

4 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள், பக்: 257 – 260

5 . எனது தேசம், எனது வாழ்க்கை- லால் கிருஷ்ண அத்வானி- அல்லையன்ஸ் பிரசுரம், சென்னை, 2010

6 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள், பக்: 260 – 262

7. http://en.wikipedia.org/wiki/Vasudhaiva_Kutumbakam

8 . http://en.wikipedia.org/wiki/1993_Chennai_bombing

9 . தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் – ஏ.பி.வி.பி. ஆய்வறிக்கை- 1999

10 . http://www.samanvaya.com/main/contentframes/work/fl-4th-2006.html



-----------------------------------
நன்றி: தமிழ் பேப்பர்




.

பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 1)

நூல் விமர்சனம்:
ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம்
- பா.ராகவன்,
கிழக்குப் பதிப்பகம், சென்னை
விலை: ரூ. 75.00
------------------------------------

”ஹிந்துக்களின் மிகப் பெரிய காவலன் என்று அவர்கள் சொல்வார்கள். இந்தியாவின் மிகப் பெரிய அபாயம் என்று இவர்கள் சொல்வார்கள். எது உண்மை? நடுநிலையுடன் ஆராய்கிறது இந்நூல்” என்று புத்தகத்தின் அட்டையிலேயே கொட்டை எழுத்தில் பிரகடனம் செய்துவிட்டுத்தான் நூல் துவங்குகிறது. அதாவது இந்தியாவின் மிக முக்கியமான சமூக இயக்கமான ஆர்.எஸ்.எஸ். குறித்து ஒருபக்கச் சார்பின்மையுடன் எழுதப்பட்டதுதான் இந்தப் புத்தகம் என்பது இது சொல்லவரும் கருத்து.
ஆனால், நூலின் துவக்கத்திலேயே நூலாசிரியர் பா.ராகவனின் நடுநிலை தெரியத் துவங்கிவிடுகிறது. “ஆதியிலே அந்த ஊருக்கு லவபுரி என்று பெயர்… அதற்கு ஆதாரம் தேடத் தொடங்கினால் இன்னோர் அயோத்தி அபாயம் ஏற்படும்…” – இதுதான் லாகூர் குறித்த ஆசிரியரின் அறிமுகம். (பக். 9) அதாவது நடுநிலை என்ற பெயரில், வரப்போகும் அத்தியாயங்களில் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் இங்கேயே கோடிட்டுக் காட்டிவிடுகிறார்.

உண்மையில் நடுநிலை என்பது என்ன? எந்த ஒரு பொருளைப் பற்றி எழுதப் புகுகிறோமோ, அதைப் பற்றிய அனைத்து தகவல்களையும் – சாதகமானவை, பாதகமானவை உள்பட- கிரகித்து, நெஞ்சுக்கு நீதியுடன், ஆய்வுத் தெளிவுடன் எழுதப்பட்டால்தான் அது நடுநிலைப் பார்வை. அதில், லாகூர் குறித்த அறிமுகம் போன்ற பகடிகள் இருக்காது. இந்த நூலில் அத்தகைய பல பகடிகள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல வந்து செல்கின்றன. சில உதாரணங்களைப் பார்க்கலாம்…

காந்தி கொலையும் ஆர்.எஸ்.எஸ்.சும்:

அத்தியாயம்: 4, பக்: 40. ”காந்திகொலையானபோது ஆர்.எஸ்.எஸ். ஒன்று செய்திருக்கலாம். கோட்சேவைக் கண்டித்து ஓர் அறிக்கை. போதும். செய்யவில்லை” என்று கூறுகிறார் ராகவன். இதற்கு என்ன அடிப்படை? எந்த அடிப்படையுமே இல்லை.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரும் காந்தி படுகொலையின்போது தலைவராக இருந்தவருமான குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர் பத்திரிகைகளுக்கு அசோசியேட் பிரஸ் மூலமாக அனுப்பிய செய்தியறிக்கையில் கோட்சேவின் செயலை வன்மையாகக் கண்டித்திருக்கிறார். அதற்கு முன்னதாக பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் படேல், காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்தி ஆகியோருக்கு அனுப்பிய கடிதங்களில் காந்தியின் மறைவுக்கு கவலை தெரிவித்திருக்கிறார். இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறது. கோல்வல்கரின் பேச்சுக்கள், எழுத்துக்கள் அடங்கிய ஸ்ரீ குருஜி சிந்தனைக் களஞ்சியம் 12 பாகங்களாக *1 தமிழில் வெளியாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்தக் களஞ்சியத்தில், 10வது தொகுதியில் முதலிலுள்ள நூறு பக்கங்கள், மகாத்மா காந்தி கொலையை அடுத்து அரசுக்கும் கோல்வல்கருக்கும் நடந்த கடிதத் தொடர்புகள் உள்ளிட்ட அம்சங்களே உள்ளன.

குறிப்பாக பக்கம்: 6 ,7 , 8 -ல் இக்கடிதங்கள் உள்ளன. பக்கம்: 9 , 10-ல் அசோசியேட் பிரஸ்சுக்கு அனுப்பிய அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கோல்வல்கர் கூறுகிறார்: ”…அந்தச் செயலைச் செய்த தீயவன் நம் நாட்டவனாகவும் ஹிந்துவாகவும் இருப்பதால் அதன் தன்மை மேலும் கொடியதாக இருக்கிறது…. இதனால் உண்மையுள்ள நம் நாட்டவன் ஒவ்வொருவனும் வெட்கமுறுகிறான்…”

1948 , பிப். 1 தேதியிட்ட இந்த அறிக்கை பல பத்திரிகைகளில் அரைகுறையாகவே வெளியிடப்பட்டது என்ற தகவலும் அதில் காணப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான அரசியல் சூழலில் பத்திரிகைகளின் போக்கு புரிந்துகொள்ளக் கூடியதே. பத்திரிகைகள் இதனை முழுமையாக வெளியிடாததற்கு ஆர்.எஸ்.எஸ். எப்படி பொறுப்பாக முடியும்?

இதே தொகுதியில், அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.சை காங்கிரசில் இணைக்குமாறு படேல் கூறியது, நேருவின் முரட்டுப் பிடிவாதம், நடுநிலையாளர்களின் சமரச முயற்சிகள், அரசின் நிபந்தனைகள், அதனை கோல்வல்கர் ஏற்க மறுத்தது (பக்கம்: 87 , 88 ) – அனைத்தும் இதில் பதிவாகியுள்ளன. குறிப்பாக மகராஷ்டிரா சட்டமன்றத்தில் நடந்த விவாதமும் அதில் அமைச்சர் மொரார்ஜி தேசாய் அளித்த பதிலும் (பக்கம்: 104 ) முக்கியமானவை. அதில் எந்த நிபந்தனையும் இன்றி ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கிக் கொள்ளப்பட்டதை மொரார்ஜி உறுதி செய்கிறார்.

அரசிடம் மண்டியிட்டதா ஆர்.எஸ்.எஸ்?

ஆனால், பா.ராகவன் தனது புத்தகத்தில் (பக்: 39 ) ‘நேருவின் நிபந்தனைகளை கோல்வல்கர் ஒப்புக்கொண்டார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் தவறு. இதனை குருஜி சிந்தனைக் களஞ்சியத்தின் தொகுதி 10ல் , பக்கம்: 102ல் உள்ள கோல்வல்கரின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இந்த அறிவிப்பு ‘ஹிதவாத’ ஆங்கில நாளிதழில் 1949 , ஆகஸ்ட் 1ல் வெளியானது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். மீது புழுதி வாரித் தூற்றுபவர்கள் பல்லாண்டு காலமாக, அரசுக்கு அடிபணிந்து தடையை விளக்கிக் கொண்டதாகவே எழுதி வருகின்றனர். அவ்வாறு கூறுபவர்களுக்கு குறிப்பிட்ட அரசியல் பின்னணி உள்ளதால் அதுகுறித்த சங்கடம் ஏதும் எழவில்லை. ஆனால், நடுநிலை நோக்குடன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்நூலில் அத்தகைய கருத்து எழ அனுமதித்திருக்கலாமா?

உதாரணமாக, அரசு நிபந்தனைகள் காரணமாகவே சில நிர்வாக அடுக்குமுறைகளை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றவேண்டி இருந்தது (பக்: 58) என்று குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு சர்கார்யவாஹ் பொறுப்பை சுட்டிக்காட்டி இருக்கிறார். உண்மையில், இந்தப் பொறுப்பு மட்டுமல்ல, இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்.சில் நடைமுறையில் இருக்கும் பெரும்பாலான நிர்வாக அடுக்குமுறைகள் அனைத்தையும் 1940க்கு முன்னதாகவே அதன் நிறுவனர் ஹெட்கேவார் உருவாக்கிவிட்டார். சங்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்த கோல்வல்கர் 1938லேயே சங்கத்தின் சர்கார்யவாஹ் (பொதுசெயலாளர்) ஆகிவிட்டார். *2 பொதுவாக ஆர்.எஸ்.எஸ்.சின் பொதுச் செயலாளராக இருப்பவரே அதன் அடுத்த தலைவராவது மரபாக இருந்து வருகிறது. அதாவது தலைவர் பொறுப்புக்கு தயார்நிலையில் உள்ளவராகவே ஒருவர் அங்கு உருவாக்கப்படுகிறார். எனவே, முந்தைய தலைவரின் பரிந்துரைதான் அடுத்த தலைவரின் நியமனமாகிறது என்ற கருத்தை சற்றே ஆராய வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த பிரசாரகர்கள், மாநிலங்களின் நிர்வாகிகள் கொண்ட குழுவே (அகில பாரத கார்யகாரி மண்டல் – இதுவும் 1940 -க்கு முன்னமே உருவாகிவிட்டது) சங்கத்தின் பொதுsசெயலாளரைத் தேர்வு செய்கிறது. அவரே சங்கத்தின் நிர்வாகிகளை அறிவிக்கிறார். இந்த உரசலற்ற ஏற்பாடு ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு. இந்த பொதுசெயலாளரே பிற்பாடு முந்தையth தலைவரால் அடுத்த தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். அதை அகில பாரத கார்யகாரி மண்டல் ஏற்பது நடைமுறை. இதில் எங்கும் ஜனநாயக நெறிமுறையே ஊடுபாவி இருப்பதைக் காண முடியும். ஆனால், பா.ராகவன் போகிற போக்கில், ”எந்த ஒரு அமைப்பின் தலைவரைத் தேர்ந்தெடுக்கவும் தேர்தல் முறையைப் பின்பற்றுவது இந்திய வழக்கம்… இந்த இலக்கணம் பொது. ஆர்.எஸ்.எஸ். சட்டத்துக்கு உட்பட்டு இயங்கும் இயக்கமாகத்தான் கருதப்படுகிறது. ஆனாலும், தலைமைத் தேர்வு என்பது முந்தைய தலைவரின் தேர்வுதான்” என்று (பக்: 58) கூறிச் செல்கிறார். இந்தக் கருத்தில் உள்ள நுண்ணிய தாக்குதல், அவரது நடுநிலையை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

ஒரு இயக்கம் குறித்த படைப்பின் ஆக்கத்தில் நடுநிலையை உறுதிப்படுத்த வேண்டுமானால், அந்த இயக்கம் குறித்த நடுநிலையாளரின் கருத்தையே மேற்கோளாகக் காட்ட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். குறித்த மேற்கோள்களை இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கில் கிடைக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். குறித்து நூல் எழுதிய ஒருவரது – தேஷ் ராஜ் கோயல் – கருத்தையே ‘ஒரு சோறு‘ என்ற தலைப்பில் பிரசுரித்திருப்பது பொருத்தமில்லை. அப்படியானால், ஆர்.எஸ்.எஸ்.சை அற்புதமாக வழிநடத்திய கோல்வல்கரின் கருத்து ஏதாவது ஒன்றை மேற்கோளாக வெளியிட்டிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். குறித்து நான் ஒரு புத்தகம் எழுதி அதில் பா.ராகவனின் கருத்து ஒன்றை மேற்கோளாகக் காட்டினால் எப்படி இருக்கும்? இந்த ஒருசோறு பதம் – புத்தகத்துக்குப் பதமாக இல்லை.

தொண்டனா? தலைமையா?

பக். 56 ல் ”கட்சிகள் தொண்டர்களால் வாழ்கிறது. ஆர்.எஸ்.எஸ். அதன் தலைமையால் வாழ்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். இக்கருத்து மேலோட்டமாகப் பார்த்தால் சரியானது போலத் தெரியும். உண்மையில் கட்சிகள்தான் இந்தியாவில் தலைவர்களால் தலைவர்களுக்காக வாழ்கின்றன. காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, அதிமுக, மதச்சார்பற்ற ஜனதாதளம்… என பா.ஜ.க. இடதுசாரிக் கட்சிகள் தவிர்த்த எந்தக் கட்சியும் தலைமையால்தான் (இந்தப் பாசாங்கை நூலாசிரியர் முந்தைய பக்கங்களிலேயே குறிப்பிட்டும் விடுகிறார்) வாழ்கின்றன. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அப்படியல்ல.

ஆர்.எஸ்.எஸ்.சைப் பொருத்தவரை, அதன் அடிமட்டத் தொண்டனும் ஸ்வயம்சேவகனே; அகில பாரதத் தலைவரும் ஸ்வயம்சேவகனே. ஸ்வயம்சேவகத் தன்மையே இவர்களிடையிலான பிணைப்பு. யாரும் வலியுறுத்தாமல், எந்த ஒரு இயக்க உறுப்பினர் படிவமும்கூட நிரப்பாமல், தானாக முன்வந்து செயல்படுபவரே ஸ்வயம்சேவகர். சிறு கிராமத்தில் ஷாகா நடத்தும் ஸ்வயம்சேவகன், அதே கண்ணோட்டத்துடன் தேசிய அளவில் சங்கப் பணிகளை வழிநடத்தும் ஸ்வயம்சேவகனை மரியாதையுடன் தலைவராகக் கொள்கிறான். முழுவதும் உளப்பூர்வமான முறையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்ள இணையதளக் கட்டுரைகள் உதவாது. சர்க்கரை இனிப்பானது என்பதை உணர அதை சுவைத்துப் பார்ப்பது எப்படி முக்கியமோ அதுபோல, ஆர்.எஸ்.எஸ்.சைப் புரிந்துகொள்வது அதில் இணைந்தால்தான் சாத்தியம். அல்லாதவரை, குருடர்கள் யானையை கற்பனை செய்தது போன்ற நிலைமையே ஏற்படும்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் ஸ்வயம்சேவகனே மேலானவன். “நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்” என்று பெருமையுடன் கூறிக் கொள்வார் இரண்டாவது தலைவர் கோல்வல்கர். இந்தத் தலைப்பில் ஒரு நூலே கிடைக்கிறது*3. ஒவ்வொருவரும் சங்கத்தில் இணைந்து அதற்கு தன்னால் இயன்ற அளவில் நேரம் ஒதுக்கிப் பணி புரிகிறார். அப்போது அவரது ஆர்வம், சிரத்தை, முயற்சி, திறமை, தன்னலமின்மை போன்ற பண்புகளின் அடிப்படையில் அவரே சங்கப் பொறுப்புகளை ஏற்கிறார். யாரும் யாரையும் கட்டாயப்படுத்துவது இங்கு கிடையாது. இன்னொருவருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதால் (கவனிக்கவும்: பதவியல்ல) யாரும் பொறாமை கொள்வதும் இங்கு கிடையாது.

ஒரு ஸ்வயம்சேவகன் தனது கடுமையான உழைப்பால் மாநிலத் தலைவரும் ஆகலாம்; அகில பாரதத் தலைவரும் ஆகலாம். அதற்கு அவன் தியாகங்கள் செய்யத் துவங்க வேண்டும். குடும்பத்தைப் பிரிந்து பிரசாரக் ஆக வேண்டும்; எந்த அறிமுகமும் இல்லாத ஊரில் சங்கவேலை செய்ய வேண்டும்; அடக்குமுறைகள், கல்லடிகளைத் தாங்கி சங்கத்தை வளர்க்க வேண்டும்; தனது தகுதிகளைக் கூடவே உயர்த்திக் கொள்ளவேண்டும். அதாவது சங்கத்தின் வளர்ச்சியும் தனிப்பட்ட ஸ்வயம்சேவகனின் வளர்ச்சியும் தியாகத்தின் அடிப்படையிலானது. வேறெந்த அளவுகோலும் இங்கு கிடையாது. அதனால் தான் 85 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்.எஸ்.எஸ் உடைக்க முடியாத இயக்கமாகவும், மேலும் மேலும் வளரும் குடும்பமாகவும் இருக்கிறது.

இங்கு புத்தக ஆசிரியர் குறிப்பிடுவது போல (பக்: 59) பிரசாரகர்கள் யாராலும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை; தானாக முன்வந்து, குடும்பவாழ்வை மறுத்து பிரசாரக் ஆகும் ஸ்வயம்சேவகனே மாற்றங்களை உருவாக்குகிறான். இங்கு யாரும் பிரசாரகர்களுக்கு (பக்: 60) மனதை ஊடுருவும் பயிற்சிகளும் அளிப்பதில்லை; பிரமச்சரியமும் தேசபக்தியும் உள்ள உறுதியுமே பிரசாரகர்களின் வலிமை. இங்கு எந்த திரைமறைவுப் பயிற்சிகளும் (பக்: 62) இல்லவே இல்லை. ஆண்டுதோறும் திறந்தவெளியில் நடக்கும் ஆளுமைப் பண்பு பயிற்சி முகாம்களே (சிக்ஷண வர்க) ஸ்வயம்சேவகர்களையும் பிரசாரகர்களையும், சங்க நிர்வாகிகளையும் பட்டை தீட்டுகின்றன. இந்த முகாம்களை யாரும் அனுமதி பெற்று பார்வையிடலாம்.

யாருக்கும் எதிரியல்ல

புத்தகத்தின் 69 -வது பக்கத்தில் ”இடதுசாரிகளின் புகழைக் குறைப்பது, வீச்சைக் கட்டுப்படுத்துவது என்னும் அடங்காப் பேரவாவைத் தீர்த்துக் கொள்ளவும் ஒரு சந்தர்ப்பம் ஆர்.எஸ்.எஸ்.சுக்குக் கிடைத்தது” என்று கூறுகிறார் ஆசிரியர். இதுவும் தவறான கருத்து. சங்கத்தின் மூத்த சிந்தனையாளர்களுள் ஒருவரும் கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டவருமான பண்டித தீனதயாள் உபாத்யாய, ஏகாத்மா மானவவாதம் (Integral Humanism) என்ற கருத்தை*4 உருவாக்கியவர். இவர் குறித்த சிறு குறிப்பும்கூட இந்தப் புத்தகத்தில் இல்லாதது குறையே. இவரே இன்றைய பாஜகவின் அடிப்படையான சித்தாந்தங்களை வடிவமைத்தவர். இவர் தனது நூலில்*5 இடதுசாரிகள் எங்கே வழி தவறுகிறார்கள், அவர்களது சித்தாந்தத்தின் சாதகம், பாதகம் என்ன என்றெல்லாம் தெளிவாக விளக்கி இருக்கிறார். இடதுசாரிகள் நமது நாட்டிற்கு இயைந்த வகையில் தங்களை தகவமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. இன்று பாரதத்தின் பிரதான கட்சியாக இருந்திருக்க வேண்டிய இடதுசாரிகள் அந்த வாய்ப்பை தவற விட்டதற்கு இந்த மறுபரிசீலனை இல்லாததே காரணம் எனில் மிகையில்லை.

ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்துகளை முற்றிலும் வலதுசாரியாகக் கருதிக்கொண்டு அதை எதிர்ப்பது இடதுசாரிகளின் அடிப்படையாகவே மாறிவிட்டிருக்கிறது. அதற்கு ஆர்.எஸ்.எஸ். பொறுப்பில்லை. அடிப்படையில் இந்தியாவை ஒரு நாடாகக் கருதாமல் பல குறுந்தேசியங்களின் கூட்டமைப்பாக அணுகுவதே இடதுசாரிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான அடிப்படை வேற்றுமை. இந்த விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பாக விட்டுக் கொடுக்காது. அதற்காக இடதுசாரிகளின் புகழைக் கெடுக்க, மெனக்கெட்டு வேலை செய்ய அதற்கு நேரமும் கிடையாது.

இதே அடிப்படைதான் இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படையில் சிந்திப்பவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் இடையிலான மோதலுக்கும் வழி வகுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். சொல்லும் ஹிந்துத்துவம் மத எல்லைகளைத் தாண்டியது. இதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 99) ஒப்புக் கொள்கிறார். ஆனாலும் மத விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மத அடிப்படையில் எந்தப் பகுதியில் ஹிந்துக்கள் சிறுபான்மை ஆகின்றனரோ அப்பகுதியில் தேசவிரோதக் கருத்துக்கள் வேகமாகப் பரவுகின்றன. அப்பகுதிகளில் பிரிவினை கோஷங்கள், சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு சவாலான நடவடிக்கைகள் எழுகின்றன. வடகிழக்கு மாநிலங்கள், காஷ்மீர், பஞ்சாப், கேரளாவின் மலப்புர மாவட்டம், தமிழகத்தின் கன்யாகுமரி மாவட்டம், கோவை நகரின் கோட்டைமேடு பகுதி போன்றவை உதாரணம். எனவேதான் ஹிந்துப் பெரும்பான்மை நாட்டில் இருக்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இன்று காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்துக்களாக வாழ்ந்தவர்கள்தானே? மதம் மாறியதால் அவர்களது வேர்கள் மாறிவிடுமா? இதையே ராமாயணம் படிக்கும் இந்தோனேசிய முஸ்லிம்களுடன் ஒப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். சுட்டிக் காட்டுகிறது. நம்மைப் பிரிக்கும் மதங்களைவிட நம்மை இணைக்கு ஹிந்துத்துவப் பண்பாடு இனிமையானது என்றே ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. துரதிர்ஷ்டவசமாக இக்கருத்து இன்னும் சிறுபான்மையினரால் தவறாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. அதற்கு ஊடகங்களும் காரணமாக உள்ளன. இந்தப் புத்தகத்தின் தலைப்பும் (ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம்) அதையே நிரூபிக்கிறது.

”தேசத்தில் இரண்டே விதமான ஸ்வயம்சேவகர்கள்தான் இருக்கிறார்கள் – முதல் பிரிவினர் இன்றைய ஸ்வயம்சேவகர்கள்; பிறர் நாளைய ஸ்வயம்சேவகர்கள்” என்று ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களில் கூறப்படுவதுண்டு. அந்த தொலைநோக்குப் பார்வையுடன்தான் சங்கம் இயங்கி வருகிறது. சங்கம் எக்காலத்திலும் யாருக்கும் எதிரியல்ல; ஒன்றுபடுத்துவதே அதன் மார்க்கம். இதனை ‘சிவனை அறிய வேண்டுமானால் சிவமாகவே ஆக வேண்டும்’ என்ற தத்துவப்படி அணுகினால்தான் புரியும்.

மோடியும் மண்டைக்காடும்

புத்தகத்தின் 14வது அத்தியாயம், பக். 134 ல் ‘குஜராத் கலவரங்களுக்கும் அதன் அனைத்துக் கோர விளைவுகளுக்கும் முதல்வர் நரேந்திர மோடி பின்னணியில் இருந்தார்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக காங்கிரஸ் ஆதரவு ஊடகமான தெகல்கா சுட்டப்பட்டுள்ளது. உண்மையில் குஜராத் கலவரம் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து மோடி ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்டு வருகிறார். மோடிக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கும் தருணம் இது. தவிர, மோடி தொடர்பான சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளவை. இந்நிலையில், முன்யூக முடிவுகளுடன் கூடியதாக எதையும் எழுதுவது தவறு. நமது ஊடகங்கள் இதைத்தான் செய்து வருகின்றன.

குஜராத் கலவரம் கண்டிப்பாக வெறுக்கப்பட வேண்டியது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட உண்மை, மோடியின் அரசு எடுத்த நடவடிக்கையால், துப்பாக்கிச்சூட்டால் நூற்றுக்கணக்கான கலவரக்காரர்கள் (இதில் மதத்தைக் குறிப்பிட வேண்டாமே!) கொல்லப்பட்டதும் உண்மை*6. இதனை மூடிமறைக்கும் ஊடகங்கள் ஒட்டுமொத்தமாகக் கூச்சலிட்டு ஒரு கருத்தை உருவாக்க முயன்றதே மோடி மீதான அவதூறுகளுக்குக் காரணம். நானாவதி கமிஷன் அறிக்கை குஜராத் அரசுக்கு சாதகமாகவே வெளியானதை யாரும் மறக்கக்கூடாது.

அதே சமயம், இதேபோன்ற கலவரங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படும்போது ஊடகங்கள் பட்டும் படாமல் நடந்துகொள்வது ஏன்? உதாரணமாக, பகவதி அம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்த ஹிந்துப் பெண்கள் கடலில் குளிக்கச் சென்றபோது கிறிஸ்தவ மீனவர்களால் மானபங்கப்படுத்தப்பட்டதே மண்டைக்காடு கலவரத்துக்குக் காரணம். இதற்கு அடிப்படைக் காரணம் மதமாற்றம். இதை அரசே புரிந்துகொண்டதால்தான் அங்கு காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

ஆனால், இந்த காரணத்தை ‘குமரி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சொல்லும் காரணம்‘ என்று அடிக்குறிப்பாக தருகிறார் இதே புத்தகத்தில் (பக்: 93) பா.ராகவன். அதாவது ஆர்.எஸ்.எஸ்.மீது குற்றம் சுமத்தும்போது தானே முன்வந்து குற்றம் சுமத்துபவர், சிறுபான்மையினர் மீதான புகார் வரும்போது தன்னை பின்னுக்குத் தள்ளிவிட்டுகொண்டு எதிர்த்தரப்பையே புகார்தாரர் ஆக்குகிறார். இது தற்கால ஊடக மனநிலையின் பிரதிபலிப்பே. யாரைக் குற்றம் கூறினால் யாரும் கேள்விகேட்க மாட்டார்களோ அவர்கள் முதுகில் கும்மாங்குத்து குத்துவது; எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களைக் கண்டால் அடக்கி வாசிப்பது. இந்த மனநிலைக்கு பா.ராகவனும் விதிவிலக்கில்லை.

இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தேசப்பிரிவினைக் காலக் காட்சிகளில் பலவும் ‘நேரடி நடவடிக்கை’யில் இறங்கிய முஸ்லிம் லீக்காரர்களால் உருவாக்கப்பட்டவை. ஆனால், அவற்றைக் குறிப்பிடும்போதுகூட, இரு சமூகத்தினரையும் சமமாக வைப்பதாக நினைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ்.சை வன்முறையாளராக சித்தரிப்பதைக் காண (பக்: 14) முடிகிறது. தற்காப்பு நடவடிக்கைக்கும் கலவர நடவடிக்கைக்கும் வேறுபாடு இல்லையா? ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளராக இருந்த ஹொ.வெ.சேஷாத்ரி எழுதிய தேசப்பிரிவினையின் சோக வரலாறு*7, இப்புத்தகத்தின் ஆசிரியர் படிக்க வேண்டிய முக்கியமான நூல் என்பதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.

பிழைகள் சரித்திரம் ஆகலாமா?

மொத்தத்தில், ஆர்.எஸ்.எஸ். குறித்து புத்தகம் எழுதினால் அதன் எதிர்ப்பாளர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்துடேயே, அதனை சமண் செய்யும் உத்திகளுடன் இந்தப் புத்தகத்தை பா.ராகவன் எழுதி இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புத்தகம், அவரது அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையிலான போராட்டம்.

இருந்தபோதும், கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை ஹிந்து இயக்க நண்பர்கள் பலர் ஆர்வமாக வாங்கிச் சென்றதைக் காண முடிந்தது. அவர்களது சங்கம் பற்றி சங்கமல்லாத நிறுவனம் ஒன்று வெளியிடும் நூல் இது என்பதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது, இதில் குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகளை அவர்கள் சான்றிதழாகவேகூட நினைத்திருக்கலாம். உண்மையில் சிறுபான்மையினரின் அட்டகாசங்கள் அத்துமீறும்போதுதான் பெரும்பான்மை மக்கள் தாங்களாகவே ஒருங்கிணைகிறார்கள். இதற்கு கோவை (1998 கலவரங்கள்) உதாரணம். பெரும்பாலான மக்கள் ஆர்.எஸ்.எஸ். மீது கூறப்படும் புகார்களை நற்சான்றிதழாகக் கருதுவதை பா.ராகவன் ஓரிடத்தில் (பக்: 97) குறிப்பிடுகிறார்.

ஆனால், என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. கிழக்கு பதிப்பகம் போன்ற நல்ல நம்பகத்தன்மை கொண்ட நூல் வெளியீட்டு நிறுவனம் வெளியிடும் புத்தகத்தில் உள்ள தவறுகள் நாளை சரித்திரமாக பதிவு செய்யப்பட்டுவிடக் கூடாது என்ற ஆதங்கமே எனது விமர்சனத்தின் நோக்கம். மக்களை மதரீதியாக பாகுபடுத்திக் குளிர்காயும் வாக்குவங்கி அரசியல் கட்சிகளைவிட, அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கூறும் ஆர்.எஸ்.எஸ் மோசமானதில்லை; சிறுபான்மையினரை தாக்குவது (பக்: 132) அதன் நோக்கமுமில்லை. அதற்கென, ‘அகண்ட பாரதம்; உலகின் குருவாக பாரதம் ஆக வேண்டும்’ என்பது போன்ற மாபெரும் லட்சியங்கள் உள்ளன.

மற்றபடி, இந்தப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பிறர் எழுதாத நல்ல பல கருத்துக்களும் உள்ளன. எழுதியிருக்க வேண்டிய – விடுபட்ட பல முக்கியமான அம்சங்களும் உள்ளன. அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

-------------------------------
அடிக்குறிப்புகள்:

1 . குருஜி சிந்தனைக் களஞ்சியம்- டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி, சென்னை, 2006 ,

2. ஸ்ரீ குருஜி- வாழ்வே வேள்வி- பி.ஜி.சஹஸ்ரபுத்தே, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1998 , பக்: 58

3. நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவக்- சக்தி புத்தக நிலையம், சென்னை, 1997

4 . INTEGRAL HUMANISM – http://en.wikipedia.org/wiki/Integral_humanism_(India)

5 . ஏகாத்ம மானவ வாதம்- பண்டித தீனதயாள் உபாத்யாய, பாரதீய ஜனசங்கம், சென்னை, 1970

6. http://www.gujaratriots.com/24/myth-5-gujarat-police-was-anti-muslim/

7. தேசப்பிரிவினையின் சோக வரலாறு – ஹொ.வெ.சேஷாத்ரி, சக்தி புத்தக நிலையம், சென்னை, 1996.
------------------------------
தொடர்ச்சி... இரண்டாவது பகுதி
---------------------------------------
நன்றி: தமிழ் பேப்பர்
.