சனி, ஜூலை 23, 2011

ஜடாயுவுக்கு பாராட்டு!

தமிழ் ஹிந்து இணையதளத்தில் நண்பர் ஜடாயு எழுதிய 'கம்பன் பாடிய குறள்' கட்டுரைக்கு எனது பாராட்டுப் பின்னூட்டம் இது...***

அன்புள்ள ஜடாயு,


'கம்பன் பாடிய குறள்' அற்புதமான கட்டுரை; இலக்கியச்சுவையும் சிற்பக் காட்சி இன்பமும் இணைந்த ஊக்கமூட்டும் படைப்பு. ஒப்பியல் நோக்கும், பொருத்தமான இடங்களில் இலக்கிய மேற்கோள்களை கச்சிதமாகப் பொருத்திக் காட்டும் லாவகமும், நினைவாற்றலும், அழகியல் உணர்ச்சியும் ஒருங்கிணைந்த படைப்பு இது. உலகளந்தான் திருவருள் உங்களுக்கு என்றும் உண்டு.


வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும் நமது பண்பாடு ஏதாவது ஒருவகையில் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. நமது இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள், இலக்கியங்கள் அனைத்திலும் இழையூடு பாவாய் நமது கலாசாரம் பின்னிப் பிணைந்துள்ளது. வாமன அவதாரம் அத்தகைய ஒரு மறக்கவியலா படைப்பு. எத்தகைய அருள் பெற்றவனும் மாமன்னனும் ஆணவத்தால் அழிவான் என்பதை மாவலி சக்கரவர்த்தியின் கதை காட்டுகிறது. அவனை அடக்க வாமனனின் மூன்று அடிகள் போதும். இதிலுள்ள படிமம் அற்புதமானது. உலக நன்மைக்காக செய்யும் சிறு முயற்சிகள் கூட பெரும்பயன் விளைக்கும் என்பதையும் வாமனன் காட்டுகிறார்.


இத்தகைய கதைகளைக் கேட்டு வளர்ந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் ஜடாயு; நானும் தான். ஆனால், இப்போது, இத்தகைய பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் கதைகளைக் கூறவோ, கதைகளைக் கேட்கவோ புதிய தலைமுறைக்கு நேரம் இருக்கிறதா என்பது கேள்விக்குறி. சிறு குழந்தைகளுக்கு சாதம் ஊட்டும்போது இத்தகைய கதைகளையும் சேர்த்து ஊட்டும் தாத்தா, பாட்டிகளைக் கொண்ட குழந்தைகள் பெரும் பேறு பெற்றவர்கள். கூட்டுக்குடும்ப முறை நசித்து, தனித்தீவுகளாக ஹிந்து குடும்பங்கள் மாறிவரும் நிலையில், சிறு குழந்தைகள் இழப்பது அழிவற்ற நமது பண்பாட்டு அமுதமும் கூட என்பது கவலை அளிக்கிறது.


நமது சிறுவர் இதழ்களோ, பண்பாட்டை நேசிக்கும் தன்மை இல்லாதனவாக, குழந்தைகளை 'மேதாவி'களாக்கும் கனவுடன், இத்தகைய அற்புதமான படிமக் கதைகளை வெளியிடாமல், வெளிநாட்டுக் கதைகளையே வாசிக்குமாறு நிர்பந்திக்கின்றன. ‘மதச்சார்பின்மை’ வியாதி அங்கும் பரவி விட்டது. நமது கான்வென்ட் குழந்தைகளுக்கு கோலியாத் கதை தெரியும்; வாமனன் கதை தெரியாது. அட்லாஸ் கதை தெரியும்; வராக அவதாரம் தெரியாது. இதுதான் கவலை அளிக்கும் யதார்த்தம். மேரி க்யூரியையும் தெரசாவையும் தெரிந்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக சுஸ்ருதரும் காரைக்கால் அம்மையாரும் தெரியாது.


நாம் எதைக் கற்பிக்க வேண்டுமோ, அதைப் புறக்கணித்துவிட்டு, தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு பிராபல்யங்களை முன்னிலைப் படுத்துகிறோம். ''கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்'' பாடலில் மகாகவி பாரதி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏசிய அதே பேடிக்கல்வியைத் தான் நாம் தொடர்கிறோம். குழந்தைகளுக்கு பண்பாட்டுக் கல்வி புகட்டப்பட வேண்டும் என்று சொல்பவன் மதவாதி ஆகி விடுகிறான். நாயன்மாரும் ஆழ்வாரும் பக்தப் பேரொளிகளும் மாவீரர்களும் காவியகர்த்தர்களும் மகான்களும் வாழ்ந்த நாட்டில் ஏன் இந்த இழிநிலை?


தன்னை மறந்து, தன்னிலை இகழும் சுய கழிவிரக்கக் கூட்டமாக நமது மக்கள் மாறக் காரணம், இத்தகைய இலக்கியங்கள் காட்டும் பேரொளியை உணராததே. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் கி.வா.ஜ, ம.பொ.சி, டி.கே.சி, ரா.பி.சேதுப்பிள்ளை போன்ற இலக்கிய ஆளுமைகள் செய்த பணியைத் தொடராததே நமது துர்பாக்கியம். நமது பட்டிமன்றங்கள் வெட்டி மன்றங்களாக மாறிவிட்ட நிலையில், உபன்யாசகர்களும் விகடகவிகளாக மாறிவிட்ட நிலையில், ஆய்வாளர்கள் சித்தாந்தப் புதைகுழிகளில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஒரு மென்பொருள் விற்பன்னர் (ஜடாயு) தான் இத்தகைய அற்புதமான கட்டுரையை எழுத வேண்டி இருக்கிறது. காலம் தனது தேவையை எவ்வாறேனும் நிறைவு செய்துகொள்ளும் என்பது உண்மையே.


இக்கட்டுரை போல பெருகிவரும் ஊற்றாக ஜடாயுவின் கட்டுரைகள் தொடர வேண்டும். இன்றைய மௌடீகத் தன்மை விரைவில் மாறும் என்ற எதிர்பார்ப்புடன், அதற்கான முன்முயற்சிகளுடன் ஒத்த சிந்தனையாளர்கள் பயணிக்க வேண்டும். இந்த 'களப்பிரர் காலம்' முற்றுப்பெற, அந்தக் குறளோன் அருளட்டும்.

- சேக்கிழான்

.

வெள்ளி, ஜூலை 01, 2011

பாடை காத்திருக்கிறது

(கவிதை)


பாட்டனாரின் பிணம்

முற்றத்தில் கிடக்கிறது.

கல்லறைக்கா?

சுடுகாட்டுக்கா?

சச்சரவில்

அரைநாள் ஓடிவிட்டது.


மதுரைவீரன் கோயில்

பூசாரியாக இருந்த

மாடசாமி தாத்தாவை

சுடுகாடு கொண்டுசெல்ல

உறவினர்கள் விருப்பம்.

செல்லமுத்துவாக இருந்த

சின்னமகன்

செபாஸ்டியான் தான்

தடுதல்.


'கல்லறைத் தோட்டத்தில்தான்

புதைக்கணுமாம் '

நோட்டம் விடுகிறார் -

பக்கத்தில் நிற்கும்

வெள்ளை அங்கிக்காரர்.


***


ஊர்ப்பெரியவரின்

இறுதி யாத்திரை

நடுவழியில் நிற்கிறது.

'அந்த வழியில் போகக் கூடாதாம்'

சாயபுமார்கள் தடுப்பதாக

போலீஸ் சொன்னது.


பள்ளிவாசல் கட்ட

அனுமதி கேட்ட

முத்தப்ப சாயபுவுக்கு

புறம்போக்கு நிலத்தை

தூக்கிக் கொடுத்த

அதே ஊர்ப் பெரியவர்.

பாடை தூக்கியவர்கள்

பரிதவிக்கிறார்கள்.
.

பாலபருவம் முதல்

ஓடி விளையாடிய தெருவில்

'பயணம்' போகும்

பாக்கியம் இல்லையா?

பேரன் பழனியப்பன்

விம்முகிறான்.

பாடை காத்திருக்கிறது.


***


''மதமாற்றத் தடைச் சட்டம்

மனிதாபிமானமற்றது''

முழங்கிக் கொண்டிருக்கிறார்

மதச்சார்பின்மையை

குத்தகைக்கு எடுத்த

அரசியல் தலைவர் ஒருவர்.


அங்கே-

ஊர்ப்பெரியவரின் பாடை

நடுவழியில் நிற்கிறது.

பாட்டனாரின் பிணம்

முற்றத்தில் கிடக்கிறது....


--------------------------

- விஜயபாரதம் (22.11.2002)

..