புதன், அக்டோபர் 06, 2010

கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளிகள்...

பாலுக்கு காவலாக பூனையை வைக்க முடியாது என்ற பழமொழி உண்டு. தற்போதைய மத்திய அரசோ, பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்ற முறையில் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அண்மையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக, கறை படிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.ஜே.தாமசை நியமித்ததில், காங்கிரஸ் கட்சியின் சாயம் மறுபடியும் வெளுத்துவிட்டது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) என்பது, நாட்டில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்தவும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் 1964 -ல் அமைக்கப்பட்ட சுயேச்சையான அரசு நிறுவனம். மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ) விசாரணைகள் சரியான திசையில் செல்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும் இதற்கு உரிமை உண்டு. மத்திய பொது தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி) ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பு இது.

அரசு சார்ந்த ஊழல்களை வெளிப்படுத்துவதில் மத்திய கண்காணிப்பு ஆணையம் முறையாகச் செயல்படவில்லை என்று கூறி சுனிதா நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கால், ஆணையத்தின் நிர்வாகியைத் தேர்வு செய்ய பல நெறிமுறைகளை 1993-ல் உச்சநீதி மன்றம் வகுத்தளித்தது. மத்திய கண்காணிப்பு ஆணையரைத் தேர்வு செய்ய, பிரதமர், உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்குமாறும், ஒத்த கருத்துக்களின் அடிப்படையிலேயே, தகுதியும் நேர்மையும் அனுபவமும் வாய்ந்த ஆணையர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நெறிப்படுத்தியது. அந்த நெறிமுறைகள் அனைத்தும் மத்திய கண்காணிப்பு ஆணைய சட்டம் - 2003-ல் (பிரிவு:4 -1) சேர்க்கப்பட்டன.

ஆனால், அந்த சட்டத்தை மீறும் வகையில், உச்சநீதி மன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் புறக்கணித்து, தற்போதைய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய ஆணையரைத் தேர்வு செய்யக் கூடிய குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் (பா.ஜ.க) ஆகியோர் இருந்தனர். அவர்கள் முன் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனைக்கு வந்தன. அவர்களுள் ஒருவர் தான், கேரள ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்த பி.ஜே.தாமஸ்.

தேர்வுக்குழுக் கூட்டத்தில் பி.ஜே.தாமசுக்கு சுஷ்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேரள மாநிலத்தில் பணியில் இருந்தபோதும், தொலைத்தொடர்புத் துறையில் பணியில் இருந்தபோதும் அவர் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு, தாமசுக்கு சுஷ்மா எதிர்ப்பு தெரிவித்தார். இதர இருவரில் ஒருவரை நியமிப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அவர் கூறினார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பை உதாசீனம் செய்து, ஊழல் கறை படிந்த பி.ஜே.தாமசையே பிரதமர் தேர்வு செய்தார். அவரும் 14 -வது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார். இது ஊழல் கண்காணிப்பு ஆணையத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் என்று பா.ஜ.க. கண்டித்தது. அப்படி என்ன தவறைச் செய்து விட்டார் தாமஸ் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேட்கிறார்.

தாமஸ் செய்த தவறுகள் என்ன?

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் கருணாகரன் முதல்வராக இருந்த 1991-92 காலகட்டத்தில் அங்கு மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை செயலாளராக இருந்தவர் பி.ஜே.தாமஸ். தவிர, கேரள மாநில குடிமைப்பொருள் கழகத்தின் உறுப்பினராகவும் அவர் இருந்தார். அப்போது தான் மலேசியாவில் இருந்து 15 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த இறக்குமதியில், பாமாயில் விலையை அதிகமாக நிர்ணயம் செய்ததில் மாநிலக் கருவூலத்திற்கு ரூ. 2.80 கோடி நஷ்டம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அடுத்துவந்த இடது முன்னணி ஆட்சியில் இந்த முறைகேடு தொடர்பாக ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது.

அவ்வழக்கில், பி.ஜே.தாமஸ் எட்டாவது குற்றவாளியாக உள்ளார். இவ்வழக்கு தொடர்பாக மாநில சட்டசபை சபாநாயகரிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறி, உச்சநீதி மன்றத்தை அணுகி தடையுத்தரவு பெற்றார் (2007) முன்னாள் முதல்வர் கருணாகரன். ஆயினும், இந்த ஊழல் வழக்கு கேரள மாநில ஊழல் தடுப்புத் துறை வசம் நிலுவையில் உள்ளது. ஆனால், பாமாயில் ஊழல் வழக்கில் இருந்து பி.ஜே.தாமஸ் விடுவிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் கூறுகின்றனர்; முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கின்றனர். இதனை கேரள ஊழல் தடுப்பு துறை மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

தாமஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் இத்துடன் முடியவில்லை. இவர் மத்திய தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக பதவி வகித்தபோது, மாண்புமிகு அமைச்சர் ஆ.ராசா-வுடன் இணைந்து பணி புரிந்தார். அப்போது தான், உலகம் இதுவரை காணாத, அதிநவீன ஊழல் அரங்கேறியது. 2-ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஆ.ராசாவும், தாமசும் நிகழ்த்திய திருவிளையாடல், இந்திய சரித்திரத்தில் யாரும் செய்யாத மாபெரும் ஊழல் நிகழக் காரணமானது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறையான ஏல விதிகள் கடைபிடிக்கப்படாமல், மூடுமந்திரமான தந்திர ஏலத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அலைக்கற்றைகளை தரைக்கட்டணத்திற்கு அள்ளி வழங்கினார் ராசா; அவருக்கு பக்கபலமாக நின்றார் தாமஸ். இதன் மூலமாக, தொலைத்தொடர்புத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு, சி.ஏ.ஜி. கணக்கீட்டின் படி ரூ. 70 ஆயிரம் கோடி. நடப்பு வர்த்தக நிலவரத்தைக் கணக்கில்கொண்டு துல்லியமாகக் கணக்கிட்டால், இதன் மதிப்பு ரூ. 1.75 லட்சம் கோடி!

இந்த ஊழல் விவகாரம் சி.ஏ.ஜி. அறிக்கையால் அம்பலமான பிறகு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (தாமசுக்கு முன்) இருந்த பிரத்யுஷ் சின்ஹா மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தார். தற்போது இவ்விவகாரம் சி.பி.ஐ. விசாரணையிலும், நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது. இத்தகைய மோசடிகளில் தொடர்புடையவர் தான் தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவி வகிக்கிறார். கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியைக் கட்டிக்கொண்டு நாம் பயணிக்கிறோம்.

அதிகார மமதையா? மேலிடக் கட்டளையா?

இந்த விஷயங்களைக் கூறியே சுஷ்மா, தாமசுக்கு தேர்வுக்குழுவில் எதிர்ப்பு தெரிவித்தார்.ஆனால், காங்கிரஸ் கட்சியின் மற்ற இரு உறுப்பினர்களும் தாமஸ் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் 2:1 என்ற பெரும்பான்மை முடிவுப்படி தாமஸ் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். உண்மையில், மூன்று உறுப்பினர்களும் ஏக மனதாகத் தேர்வு செய்ய வேண்டிய பதவி இது. அதிகார மமதையாலோ, மேலிடக் கட்டளையாலோ, சுஷ்மாவின் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டு, யாரை அப்பதவிக்கு நியமிக்கக் கூடாதோ அவரையே 'திருவாளர் பரிசுத்தம்' மன்மோகன் சிங் நியமித்திருக்கிறார்.

இதன்மூலமாக, கறை படியாத, நேர்மையான, திறமையான சிவில் சர்வீஸ் அதிகாரியையே சி.வி.சி. பதவியில் அமர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறி மீறப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவில் எழுந்த எதிர்ப்பை மீறி அடாவடியாக தாமஸ் நியமிக்கப்பட்டதால், ஒத்த கருத்தின் அடிப்படையில் தேர்வு என்ற வழிமுறையும் குப்பையில் எறியப்பட்டுள்ளது. இது நமது அரசின் முத்திரை வாக்கியமான ''வாய்மையே வெல்லும்'' என்ற முண்டக உபநிடத மணிமொழியையே கேலிக்குரியதாக்கிவிட்டது.

இதே போன்ற அத்துமீறலில் காங்கிரஸ் அரசு முன்னரும் ஈடுபட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தின்போதும், பிரதான எதிர்க்கட்சியின் எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டு, தான்தோன்றித்தனமாகவே நவீன் சாவ்லா நியமிக்கப்பட்டது நினைவிருக்கலாம். தனது மனைவி பெயரில் தனி அறக்கட்டளை நடத்தி அரசியல் கட்சிகளிடம் நன்கொடை வாங்கிய சாவ்லாவை தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கக் கூடாது என்ற பா.ஜ.க.வின் எதிர்ப்பு, சோனியாவால் ஒதுக்கித் தள்ளப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலின் போது, பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிரதீபா பாட்டில் காங்கிரஸ் தரப்பில் முன்னிறுத்தப்பட்டபோதும் பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது; அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. தேசத்தின் உச்சநிலை அதிகார மையங்களில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுகள் இல்லாதவராகவும், தனிப்பட்ட வகையில் நேர்மையாளராகவும் இருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச தகுதியை எதிர்பார்ப்பது கூட, தவறாகிப்போனது. பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பா.ஜ.க. தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்தாலும், நாகரிக அரசியல் நடைமுறை அறியாத காங்கிரஸ் கட்சி அவற்றைப் புறக்கணித்தே வருகிறது.

பிரதீபா பாட்டில், நவீன் சாவ்லா, பி.ஜே.ஜோசப்,... என்று இப்பட்டியல் நீள்கிறது. உயர்ந்த பதவியைப் பிடிக்க வேண்டுமானால், தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசிடம் இரண்டு தகுதிகளை நிரூபித்தால் போதும்: ஒன்று, அவர் சோனியாவின் அடிவருடியாக இருக்க வேண்டும்; மற்றொன்று, காங்கிரஸ் காரர்களுக்கு சளைக்காத ஊழல் செய்பவராக இருக்க வேண்டும்- ‘காமன்வெல்த்’ புகழ் சுரேஷ் கல்மாடியைப் போல. தேசம் அனைத்தையும் சகித்துக் கொண்டு, உண்டு, உறங்கி, மக்கள்தொகையைப் பெருக்கிக்கொண்டு, ‘யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய்’ என்ற போக்கில் வாழ்கிறது.
அலைக்கற்றை மோசடி அவ்வளவு தானா?

தான் பணி புரிந்தபோது நிகழ்ந்த மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் (2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி) குறித்து, தற்போது பணிபுரியும் இடமான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் பி.ஜே.தாமஸ் எப்படி செயல்படுவார்? கேரள மாநில பாமாயில் இறக்குமதி குறித்த கோப்பு தன்னிடம் வந்தால் தாமஸ் என்ன செய்வார்? இவை சாதாரணமாக எழும் கேள்விகள். மத்திய அரசு வேண்டுமென்றே தாமசை இப்பதவியில் திணித்துள்ளது என்பதற்கு, இக்கேள்விகளுக்கான பதிலே ஆதாரம்.

பதவியில் அமர்வதற்கு முன்னதாகவே, பி.ஜே.ஜோசப் தனது வேலையைத் துவக்கி விட்டார். ஆகஸ்ட் 12 -ம் தேதி தொலைத்தொடர்புச் செயலாளர் என்ற முறையில் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய பி.ஜே.ஜோசப், ''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆராய சி.ஏ.ஜி.க்கு சட்டப்படி உரிமை உண்டா?'' என்று கேட்டிருக்கிறார். மறுநாளே அதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சகம் (என்ன வேகம்?), அவர் எதிர்பார்த்தபடியே ''அரசின் கொள்கை (கொள்ளை அல்ல) முடிவில் தலையிட சி.ஏ.ஜி.க்கு உரிமை இல்லை’’ என்று பதில் அளித்திருக்கிறது. அதன் பிறகு ஒருமாதம் கழித்தே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பொறுப்பேற்றிருக்கிறார் ஜோசப். இனி அவர் என்ன செய்வார் என்பது மூடுமந்திரமல்ல.

தி.மு.க. ராசாவும், காங்கிரஸ் ராணியும் இடும் உத்தரவை சிரமேற்கொள்வதுதான் இனிமேல் அவரது தலையாய கடமையாக இருக்க முடியும். ஸ்பெக்ட்ரம் ஊழலை இனி அனைவரும் வசதியாக மறந்துவிடலாம். தமிழகத்தில் 'குடும்பங்கள் ஒன்றுபட்டபோதே' பாதி ஊழல் மறைந்துவிட்டது. ஜோசப் ஊழல் கண்காணிப்பு ஆணையரான பின் மீதி பாதியும் மறைந்து தானே ஆக வேண்டும்?

இந்தப் பிரச்னையைக் கிளறுவதன் மூலமாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கண்ணியத்தைக் குலைப்பதாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சி என்ன விரும்புகிறது? தங்கள் ஊழல் மறைப்பு திட்டங்களுக்கு எதிர்க்கட்சியும் துணைவர வேண்டும் என்றா? உயர் பதவியின் கண்ணியத்தைக் குலைத்துவிட்ட காங்கிரஸ் கட்சி, பிறர் மீது பாய்வது அர்த்தமற்றது. இவ்விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் மன்மோகன் சிங்கின் அவலட்சணத்தை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்துவது, உண்மையான ஒவ்வொரு தேச பக்தரின் கடமை.

இத்தனைக்கும் பிறகும் 'மதவாத' பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்று கூறிக்கொண்டு அரசியல் நடத்தும் இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகளைக் கண்டு பரிதாபம் தான் ஏற்படுகிறது. தற்போதைய ஐக்கிய முன்னணி அரசு, தனது ஆட்சிக்காலத்திற்குள் இன்னும் என்னென்ன அத்துமீறல்களில் ஈடுபடப்போகிறதோ, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களை எப்படி நிர்மூலம் செய்யப் போகிறதோ தெரியவில்லை.

'சீசரின் மனைவி அப்பழுக்கில்லாதவளாக இருக்க வேண்டும்' என்பது இத்தாலியப் (ரோம் நகர) பழமொழி. இது மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இத்தாலியில் பிறந்த சோனியாவுக்கு புரியாதா? சோனியா வழிநடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு இப் பழமொழியையே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

-------------------------------
நன்றி: விஜயபாரதம் (08.10.2010)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக