வெள்ளி, ஏப்ரல் 15, 2011

தேர்தல் ஆணையத்திற்கு கோடி நன்றி!

எந்த ஒரு செயலும் யாரால் பாராட்டப்படுகிறது அல்லது தூற்றப்படுகிறது என்பதைக் கொண்டே, அந்தச் செயலின் அவசியத்தையும் தன்மையையும் அறிய முடியும். தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் கடைபிடித்த கட்டுப்பாடுகள் அரசியல்வாதிகளின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளன.
குறிப்பாக, மூத்தத் தலைவரும் முதல்வருமான கருணாநிதி தேர்தல் ஆணையம் மீது மத்திய அரசிடம் புகாரே செய்தார். தேர்தல் ஆணையம் அளவுக்கு மீறி சென்றுகொண்டிருப்பதாகவும், இந்த நிலைமையை மத்திய அரசு மாற்ற வேண்டுமெனவும், தமிழக முதல்வர் கருணாநிதி (ஏப். 10) கூறினார். கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருவாளர் கருணாநிதி பேசியது:

''எதற்கும் ஓர் அளவு இருக்கிறது. நரிக்கு நாட்டாண்மை கிடைத்தால், கிடைக்கு 2 ஆடுகள் கேட்கும் என்பது ஒரு பழமொழி. அதேபோல தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை நரிக்கு கிடைத்த நாட்டாண்மைபோல் கிடைக்கு 2 ஆடுகள் கிடைக்காதா என்று அந்த அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருப்பவர்களை- நான் உச்சத்தில் இருப்பவர்களை சொல்லவில்லை- உச்சத்தில் இருப்பவர்களுக்கு அடுத்து இருப்பவர்களை சொல்கிறேன். இவர்கள் செய்கிற அதிகாரத்தை பார்க்கிற போது என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

நான் மத்திய சர்க்காருக்கு சொல்கிறேன். தேர்தல் கமிஷன் நினைத்தால் பிரதமரைக்கூட கண்டிக்கலாம். பிரதமர் கூட தேர்தல் கமிஷனுக்கு அடங்கி நடக்க வேண்டியது தான், அதன் விதிமுறை அது தான். ஆனால் அப்படிப்பட்ட விதிமுறைகளை அப்படிப்பட்ட அதிகாரங்களை அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை பெற்று இருக்கிற ஒரு மகத்தான நிறுவனம், புனிதமான நிறுவனம், என்று சொல்லப்படுகின்ற, அந்த தேர்தல் கமிஷனை எப்படி அமைப்பது? யார்- யாரைக்கொண்டு அமைப்பது, எந்த வகையில் அமைப்பது, அதற்குரிய அதிகாரங்களை எப்படி அமல்படுத்துவது என்பதையெல்லாம் கொண்ட ஒரு நிலையை இனியாவது ஏற்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''

தமிழக முதல்வரின் பேச்சு வழக்கம் போல தெளிவில்லாதது போல இருந்தாலும் தேர்தல் ஆணையத்தைக் கண்டிப்பதில் தெளிவானது; குழப்பமாகத் தெரிந்தாலும், மக்களைக் குழப்புவதுதான் இதன் நோக்கம். கருணாநிதி தேர்தல் ஆணையத்தை வன்மையாகக் கண்டிக்கிறார் என்றாலே, அந்த அமைப்பு ஏதோ நியாயமான செயலில் ஈடுபடுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. திட்டமிட்டபடி வாக்காளர்களுக்கு பணத்தை தண்ணீராக பட்டுவாடா செய்ய முடியாமல் தடுத்துவிட்ட தேர்தல் ஆணையம் மீது அவர் கோபம் கொள்வது இயல்பானதே.

இதற்கு மாறான காட்சியை எதிரணி முகாமில் காண முடிந்தது. அதிமுக, தேமுதிக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை வரவேற்றன. அவதூறு பிரசாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது மட்டுமே அதிமுகவும், தேமுதிகவும் ஆணையம் மீது அதிருப்தி தெரிவித்தன. அதற்கும் காரணம் உண்டு. விஜயகாந்தை விமர்சித்து கேவலமான பிரசாரம் செய்த நடிகர் வடிவேலுவைக் கண்டிக்க ஆணையம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்காதது அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஏமாற்றம் அளித்திருந்தது. அதே சமயம் கருணாநிதி குடும்பம் குறித்த அவதூறு பிரசாரத்திற்காக எதிரணிக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அவதூறு பிரசாரத்தைப் பொறுத்த மட்டிலும், அரசியல் கட்சிகள் நாணயமாகவும் நாகரிகமாகவும் நடப்பது அக்கட்சிகளின் பண்பட்ட தன்மையை வெளிப்படுத்தும், இதில் திராவிடக் கட்சிகளும் அதன் கூட்டாளிகளும் தோல்வியுற்றனர். வெற்றி ஒன்றே இலக்கான பின், எதிரணியை எந்த அளவிற்கு வசை பாட முடியுமோ, அந்த அளவுக்கு வசை பாடுவது வழக்கமாகி விட்டது. இதற்கு இரு கழகங்களின் பிரசார கருவிகளாக சன் டிவி குழுமம், ஜெயா டிவி குழுமம், கலைஞர் டிவி குழுமங்கள், கேப்டன் டிவி ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஊடக உரிமை என்ற பெயரில் இந்த தொலைகாட்சி அலைவரிசைகள் நடத்திய அரசியல் பிரசாரத்தை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது.

எனினும் வாக்காளர்களுக்கு லஞ்சப் பணம் பட்டுவாடாவை வெளிப்படையாக செய்ய விடாமல் முட்டுக்கட்டை போட்டதில் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்கின்றி பணம் கொண்டுசெல்வதை கட்டுப்படுத்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது பல கோடி பணம் பறிமுதல் ஆனது. இந்த சோதனைகளை ரூ. 33.11 கோடி பணமும் ரூ. 12.58 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருள்களும் பரிமுதலானதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறி இருக்கிறார். இதன் மூலமாக திமுகவினர் லஞ்சப்பணம் கொடுத்து வாக்காளர்களை வலைக்குள் சிக்க வைக்கத் திட்டமிட்டதை முளையிலேயே கிள்ளியது ஆணையம். எனினும் பணம் பட்டுவாடா நடக்காமல் இல்லை. ஆனால், ரகசியமாக ஒளிந்திருந்து இதைச் செய்ய வேண்டியதாகிவிட்டது. அந்த அளவில் தேர்தல் ஆணையம் தனது முதல் வெற்றியை ஈட்டிவிட்டது.

பணம் பட்டுவாடாவில் திமுகவினர் அளவிற்கு இல்லாவிட்டாலும் அதிமுகவும் பல இடங்களில் 'விரலுக்கு தகுந்த வீக்கம்' என்ற அளவில் பணம் விநியோகம் செய்தது. அதுவும் ரகசியமாகவே செய்யப்பட்டது. பணம், பரிசுப் பொருள்கள் வழங்கியபோது பிடிபட்ட அரசியல் கட்சியினர் மீது இம்முறை 975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் நேர்மையாக நடத்தப்பட்டால், பலர் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. தேர்தலில் வெல்பவர் மீது இந்தக் குற்றம் உறுதியானால், அவரது வெற்றியே செல்லாததாக அறிவிக்கப்படவும் முடியும். அந்த அளவிற்கு தேர்தல் ஆணையம் வழக்கில் தீவிரம் காட்டுவதாகத் தெரியவில்லை. இப்பணியில் ஈடுபடுவோர் அனைவரும் சிறப்புப் பணியாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் என்பதே இதற்கு காரணம்.

ஆனால், வழக்கம் போல தேர்தல் அதிகாரிகள்; கருணாநிதியின் வசைகளுக்கு ஆளாகினர். திருச்சியில் (மார்ச் 25) பேசிய 'தமிழினத் தலைவர்' ''உயர்நீதி மன்றம் கண்டிக்கும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நடந்துகொள்கிறது என்றால் அது வருந்தத்தக்க ஒன்று. தேர்தல் ஆணையம் மிகவும் கண்டிப்பான தேர்தல் ஆணையமாகச் செயல்பட்டு வருவது மகிழ்ச்சிதான். அதிலும் எதிர்க் கட்சியை ஆளும் கட்சியாக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டி வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையத்தில் உறுப்பினர்களாக, அதிகாரிகளாக இருப்பவர்கள் அப்படி,” என்றார்.

''பெரியாரால் வளர்க்கப்பட்ட தமிழ்நாடு; அண்ணாவால் வளர்க்கப்பட்ட தமிழ்நாடு. கேரளத்தில் மகாபலி மன்னன் கொல்லப் பட்டதைப் போல, தமிழ்நாட்டிலும் ஒரு ஓணம் பண்டிகையைக் கொண்டாட முற்படுகின்றனர். நான் முதல்வராக வரக் கூடாது என்று கூறுவதற்கு ஒரே காரணம், ஒரு பகுத்தறிவாளன், மறுமலர்ச்சியை விரும்புகிறவன், இன உணர்வு கொண்டவன் முதல்வராக வரக் கூடாது என்பது மட்டும்தான். உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்குப் பிறகாவது தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயல்படவேண்டும்'' என்றார்.

தனக்கு சிக்கல் வரும் போதெல்லாம் இனஉணர்வு இவருக்கு பொங்கி வழிவது வாடிக்கை. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் நிராயுதபாணியாகக் கொல்லப்பட்டபோது பொங்கிவராத ஆவேசத்துடன் ஆணையத்தை முதல்வர் ஒரு பிடி பிடித்தார். இதனாலேயே தேர்தல் ஆணையத்தின் சில நடவடிக்கைகள் கோமாளித்தனமாக இருந்தபோதும் அதை ஆதரித்தாக வேண்டிய நியாயத்தை கருணாநிதி உண்டாக்கினார்.

உதாரணமாக, தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் வாகனங்களில் பணம் கணக்கின்றி கொண்டுசெல்வதை தடுத்த ஆணைய நடவடிக்கைகளால், வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆனால், அரசியல் கட்சிகளின் அட்டகாசத்தைத் தடுக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் ஏற்க வேண்டியதாகிவிட்டது.

வழக்கமாக தேர்தல் காலத்தில் மும்முரமாகக் காணப்படும் சுவரெழுத்து பிரசாரம், கட்சிக்கொடிகள், சுவரொட்டி, துண்டுப்பிரசுரம், விளம்பரப் பதாகைகள் உள்ளிட்டவை மூலமாக லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பயன் பெற்று வந்தனர். இம்முறை ஆணையத்தின் கெடுபிடிகளால் இவை குறைந்தன. பல இடங்களில் தேர்தலுக்கான அறிகுறியே இல்லாது காணப்பட்டது. தேர்தலுக்கு உரித்தான அந்த அழகிய பரபரப்பு இல்லாததும், தேர்தல் நேரத் தொழிலாளிகள் அடிபட்டதும் சற்று ஏமாற்றம் அளிக்கின்றன. ஆனால், ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்த இதைவிட வேறு வழியில்லை என்று மக்கள் அமைதி காத்தனர்.

இந்த தேர்தலில் சில் அதிகாரிகள் நடத்திய அதிரடி நடவடிக்கைகள் பாராட்டத் தக்கவை. திருச்சி மேற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் சங்கீதா, தனியொருவராக சென்று, அமைச்சர் நேருவின் உறவினர் ஒருவர் ஆம்னி பஸ்ஸில் பதுக்கி வைத்திருந்த ரூ. 5.11 கோடி ரொக்கத்தை (ஏப். 4) பறிமுதல் செய்தார். இது களத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு. தனி ஒருவராகச் சென்ற அதிகாரி சங்கீதாவுக்கு காவல்துறை போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்பது கூடுதல் தகவல். இதுபோல பல சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றன. பெரும்பாலான சம்பவங்களில் சிக்கியவர்கள் திமுகவினரே.

டீக்கடைகள், ஹோட்டல்கள், வாகனங்கள், வீடுகளில் மட்டுமல்லாது காவல்துறை வாகனங்களிலேயே பணம் கடத்தப்படுவதாக தகவல் வந்தபோது ஆணையம் அதிர்ந்தது. இது குறித்த வாதங்கள் நீதிமன்றத்திலும் ஆணைய அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டன. அதன் பிறகே, ஆணையத்தைக் கண்டிக்கும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் நெகிழ்ந்தன.

மாநில காவல்துறை தலைவர் (டிஜிபி) மாற்றப்பட்டது, உளவுத்துறை ஏடிஜிபி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டது, வெளிமாநில அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக வந்தது, வாக்குச்சாவடிகளில் வெப் காமிரா பொருத்தியது, மத்திய போல்லீசாரை தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது, மாவட்ட ஆட்சியர் மீது பொய்ப்புகார் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது, ... என பல நடவடிக்கைகள் மூலம் தங்கள் திறனையும் செயல்வேகத்தையும் நிரூபித்தது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையர் குரேஷியும் மாநில தேர்தல் அதிகாரி பிரவீன் குமாரும் பாராட்டுக்குரியவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

தலைமை சரியாக இருந்தால் அரசு இயந்திரம் ஒழுக்கமாகச் செயல்படும் என்பதற்கான சான்றுகள் இவர்கள். வழக்கமாக அரசுப் பணியில் அசட்டையாக இருக்கும் அதிகாரி கூடம் தேர்தல் பணியில் நெஞ்சு நிமிர்த்திக்கொண்டு பணி புரிந்தனர். அவர்களுக்கு தங்கள் பணியின் இன்றியமையாமை புரிய வைக்கப்பட்டது தான் இந்த வெற்றிக்குக் காரணம். தவிர இம்முறை வாக்காளர்களுக்கு அளிக்கப்பட 'பூத் ஸ்லிப்' வாக்காளர் அடையாள அட்டை போலவே துல்லியமான விபரங்களுடன் புகைப்படத்துடன் இருந்தது, வாக்காளர்களுக்கும் தாங்கள் வாக்களிப்பது குறித்த பெருமித உணர்வை அளித்தது.

இம்முறை தேர்தல் அதிகாரிகளில் அளவுக்கு அதிகமாக தூஷிக்கப்பட்டவர் மதுரை ஆட்சியர் சகாயம். நாமக்கல்லில் இருந்து ஆணைய உத்தரவால் மதுரைக்கு இடம் மாற்றப்பட்ட அவர் ஆரம்பத்திலிருந்தே அழகிரி கும்பலில் மிரட்டலுக்கு அஞ்சாமல் பணியாற்றியதால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியதானது. அனைத்திலும் அவர் விடுவிக்கப்பட்டார். சகாயம் மீது வழக்கு தொடுக்க அவருக்கு கீழ் பணிபுரிபவரையே பயன்படுத்தவும் திமுகவினர் தயங்கவில்லை. ஆனால், ஆணையம் வளைந்து கொடுக்காமல், ஆட்சியர் மீது பொய்ப்புகார் கூறிய மதுரை கோட்டாட்சியர் சுகுமாரனை தற்காலிக பணிநீக்கம் செய்தது. மத்திய அமைச்சர் அழகிரி மீது பொய்வழக்கு போடுமாறு தூண்டியதாக நமசிவாயம் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, மதுரை மக்கள் சிரித்துக் கொண்டனர். அவர்களுக்குத் தானே மதுரையில் என்ன நடக்கிறது என்பது தெரியும்?

கல்லூரி ஒன்றில் நடந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சகாயம் பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. தேர்தல் மூலம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அவர் பேசியதாகவும் அது திமுகவுக்கு எதிரானது என்றும் கூறி வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி இதனை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்தார். ''மனுதாரர் கூறுவது போல மதுரை ஆட்சியர் எந்த இடத்திலும் பேசவில்லை. 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்றுதான் ஆட்சியர் பேசி உள்ளார். மாணவர் சமுதாயம் மூலம் இந்த மாற்றம் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது தவறல்ல'' என்று நீதிபதிகள் கூறி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இம்முறை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அனுமதியின்றி சுவர் விளம்பரம், அனுமதியின்றி வாகனம் இயக்கியது போன்ற அத்துமீறல்கள் தொடர்பாக வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வரை, 61,020 புகார்கள் பதிவாகின. தேர்தல் பிரசாரத்திற்கு வரும் தலைவர்கள் முன்அனுமதி பெறுவதை முறைப்படுத்தியது மாநில தேர்தல் அலுவலகம். அதேபோல, பொதுக்கூட்டத்திற்கு பொது கம்பத்திலிருந்து மின்சாரம் திருடப்படுவதையும் தடுத்தது ஆணையம். உள்ளூர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக இணைப்புக்கு பணம் செலுத்தினால் மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்த முடியும் என்ற சூழல் ஏற்படுத்தப்பட்டது.

இது முழுமையாக அமலாகவில்லை என்றாலும், இந்த முறைதான் இந்த உத்தி அறிமுகமானது. எனவே பல அரசியல் கட்சிகள் ஜெனரேட்டர் பயன்படுத்தி இப்பிரச்னையை சமாளித்தன.

மொத்தத்தில், தமிழக சட்டசபை தேர்தலில் இம்முறை கதாநாயகன் ஆனது தேர்தல் ஆணையம் எனில் மிகையில்லை. எனினும் 'கதாநாயகி' என்ற பெயரில் லஞ்சம் போல தருவதாகக் கூறப்படும் இலவச பொருள்கள் குறித்த தேர்தல் அறிக்கை மீது ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இது தனது எல்லைக்குள் வராதது என்று ஆணையம் நினைத்திருக்கலாம். எதிர்காலத்தில் இத்தகைய இலவச அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையிலும் பிரசாரத்திலும் தடை செய்வது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிப்பது நல்லது.

தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி ‘’தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலானதாக மாறியுள்ளது’’ என்று கூறியது சாதாரண வாக்குமூலம் அல்ல. தமிழ்க் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரும் ‘'முறைகேடு நடந்தால் தேர்தல் ரத்து'' என்று எச்சரித்தார். அதிகாரிகள் முதுகெலும்பு உள்ளதை உணர்ந்து செயல்பட்டால், அரசியல்வாதிகள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொள்வார்கள். அதையே தமிழக தேர்தல் களம் காட்டுகிறது. கடும் அரசியல் நிரபந்தம், மன அழுத்தம், ஆசை காட்டுதல், ஒருசார்பு ஆகியவற்றை மீறி செயல்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகளால், கோடிகளைக் கொட்டி வாக்காளர்களை விலைபேசுவது ஓரளவிற்கேனும் தடுக்கப்பட்டது. இது தமிழகத்தின் மானத்தைக் காத்துள்ளது. ஆணையத்திற்கு கோடி நன்றி.

ஆளும் கட்சியைப் புலம்பச் செய்ததும், எதிர்க்கட்சிகள் அச்சமின்றி செயல்பட வழிவகுத்ததும் தேர்தல் ஆணையத்தின் சாதனை. அந்த வகையில் தன் கடமையை சரிவர நிறைவேற்றியது ஆணையம். இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கையாள்வதிலும் வாக்குப்பதிவு எண்ணிக்கையிலும் தொடர வேண்டும். ப.சி. போன்ற அதிகாரப் பசி கொண்டவர்கள் எந்த எல்லைக்கும் எந்த நிலையிலும் (வாக்கு எண்ணிக்கையின்போதும் கூட) செல்லத் தயங்காதவர்கள். அதனை தேர்தல் ஆணையம் மனதில் கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்.


-------------------------

விஜயபாரதம் (29.04.2011)

திங்கள், ஏப்ரல் 11, 2011

பாஜகவின் மூன்று லட்சியங்கள்


பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர். கடந்த 30 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டிருப்பவர். அமரர் தாணுலிங்க நாடாருக்குப் பிறகு குமரி மாவட்டத்தின் பிரபலமான ஹிந்து முகமான இவர், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரானது (2009) கட்சிக்குள் புதிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹிந்து முன்னணியிலும் பிற ஹிந்து இயக்கங்களிலும் நீண்டநாளாக தீவிரக் களப்பணி ஆற்றிய அனுபவம், இவரது தலைமையை மெருகூட்டி இருக்கிறது. இயக்கப் பணிக்காகவே பிரமச்சாரியாக வாழ்பவர்.


1999 நாடாளுமன்றத் தேர்தலில் நாகர்கோவில் தொகுதி எம்பி.யாக வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன், வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர்நலத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறைகளில் இணை அமைச்சராக பதவி வகித்தார். 2004 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் பாஜக சார்பில் (அதிமுக கூட்டணி) போட்டியிட்ட இவர் இரண்டாவதாக வந்து 1.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். 2009 தேர்தலில், திருத்தி அமைக்கப்பட்ட கன்யாகுமரி தொகுதியில் (பாஜக தனித்து போட்டி) மீண்டும் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றார். இப்போது வாக்கு வித்யாசம் 65,687 மட்டுமே.


தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமான அரசியல் பணியாற்றி வருபவர். அதற்காகவே, தற்போதைய சட்டசபை தேர்தலில் தனித்தும், கூடுதலான தொகுதிகளிலும் பாஜகவை போட்டியிடச் செய்து, துணிந்து போராடி வருபவர். இம்முறை சட்டசபையில் பாஜக குரல் கண்டிப்பாக ஒலிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பவர்.


கடுமையான வெயிலில் தீவிரமான தேர்தல் பிரசாரத்தினிடையே, (தொலைபேசி வாயிலாக) தமிழ் ஹிந்து நேயர்களுக்கு அவர் அளித்த நேர்காணல் இது.


கேள்வி: தமிழக சட்டசபை தேர்தல் களம் இப்போது எப்படி இருக்கிறது?


பதில்: தமிழக சட்டசபை தேர்தல் களம், மக்கள் மாற்றத்தை விரும்புவதை பிரதிபலித்து வருகிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலால் தமிழகத்திற்கு திமுகவால் ஏற்பட்டுள்ள அவப்பெயரைப் போக்க அற்புத வாய்ப்பாக தேர்தல் அமைந்துள்ளது.


தற்போதைய திமுக அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உச்சத்தை எட்டியுள்ளது. விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் வாழவே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கு தீர்வாக திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகின்றனர்....

---------------------------------------------

முழுமையான நேர்காணலைக் காண்க: தமிழ் ஹிந்து
.

ஹஸாரே உண்ணாவிரதம்: காரணத்திலும் தெளிவில்லை; காரியத்திலும் ஜெயமில்லை


தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு ,

நல்ல அலசல்.


தமிழ் ஹிந்து ஆசிரியர் குழுவின் சந்தேகங்கள் உண்மையானவை என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. (காண்க: அண்ணா ஹசாரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்)


எந்த ஒரு செயலும் நியாயமானது என்பதற்கான காரண காரியங்களை தன்னகத்தே கொண்டிருக்கும். எந்த ஒரு செயலின் பின்புலத்திலும் அதனை மேற்கொள்பவரின் நோக்கங்கள் வெளிப்பட்டே தீரும். தில்லியில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் துவக்கியபோது, அவருக்கு அருகில் வீற்றிருந்தவர்களைக் கண்டபோதே இது உருப்படாது என்பது தெளிவாகிவிட்டது. சுவாமி அக்னிவேஷ் யாரென்று தெரியுமா? அவரைப் பற்றித் தெரியாதவர்கள், நமது ஊர் மதுரை ஆதீனத்தை ஒப்பிட்டுக் கொள்ளலாம். சந்தீப் பாண்டே யாரென்று தெரியுமா? நம் ஊர் எஸ்.வி.ராஜதுரையை ஒப்பிட்டுக் கொள்ளலாம். நற்காரியங்கள் உள்நோக்கங்களுடன் செயல்படுபவர்களிடமிருந்து வெளிவருவதில்லை. தன்னைச் சுற்றிலும் இத்தகைய நம்பகத்தன்மையற்ற பிரமுகர்களை வைத்துக் கொண்டு ஹஸாரே உண்ணாவிரதம் இருந்தது, தெரிந்து நடந்ததா, தெரியாமல் நடந்ததா என்பது கேள்விக்குறி.


அன்னா ஹஸாரே பொதுவாழ்வில் மாறுதலை ஏற்படுத்த காந்தீயத்தைக் கடைபிடித்தவர் என்று முழங்கும் எந்த ஊடகமும், அவர் 1975 ல் ‘ராலேகான் சிந்தி’ என்ற கிராமத்தில் நிகழ்த்திய புரட்சிகரமான மாற்றத்தை சொல்லவில்லை. இன்னும் பலருக்கு அவர் அந்த கிராமத்தில் நிகழ்த்திய மகத்தான மாற்றங்கள் தெரியாது. அதன் பிறகு மராட்டிய அரசியல்வாதிகளின் ஊழலுக்கு எதிராக பல ஆண்டுகளாக குரல் கொடுத்ததும் அவரது குரல் அம்மாநிலத்தில் எடுபடாமல் போனதும் பலருக்குத் தெரியாது. அவரது சரத் பவார் மீதான தனிப்பட்ட வெறுப்பே இந்த உண்ணாவிரத் நாடகத்தின் இறுதியில் வெற்றி கண்டது. அதற்காகவே, ‘சோனியாஜியும் லோக்பால் குழுவில் இடம்பெற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ஹஸாரே. ஊழலை ஒழிக்க இதைவிட நல்ல வேறு வழியை யாரும் கண்டுபிடிக்க முடியாது. கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளி!


ஊழலுக்கு எதிரான லோக்பால் குழுவில் அரசியல் சார்பற்ற என்ஜிஓக்களும் அரசுப் பிரதிநிதிகளும் தான் இருக்க வேண்டும் என்ற வரையறையே முதலில் தவறானது. பிரதான எதிர்க்கட்சியின் தலைவரும், இடதுசாரி கட்சிகளின் தலைவரும் ஏன் இக்குழுவில்; இடம்பெறக் கூடாது? மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்தில் அரசுடன் போராடி தோல்வியுற்றாலும் மக்களின் மனசாட்சியாகத் திகழ்ந்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அல்லவா? பாஜக பிரமுகர் என்பதால் அவர் லோக்பாலில் சேர்க்கப்படக் கூடாதா? தன்மீதான ஊழல் (1990 - ஹவாலா மோசடி வழக்கு) குற்றச்சாட்டிற்காக எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததுடன் நிரபராதி என்று நிரூபிக்கப்படும்வரை எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று சபதம் செய்து வெற்றி கண்ட அத்வானி இக்குழுவில் ஏன் இடம் பெறக் கூடாது? மத்திய அரசின் தொடர் ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடும் பரதனோ, து.ராஜாவோ ஏன் இக்குழுவில் இடம் பெறக் கூடாது?


லோக்பால் உறுப்பினர்களை முடிவு செய்ய ஹஸாரே உண்ணாவிரதத்தால் முடியும் என்றால் அவர் ஏன் இதனை முன்வைக்கவில்லை? நோபல் பரிசும் மகசேசே விருதும் தான் நமது நாட்டின் பொது வாழ்வில் ஈடுபடுபவர்களுக்கான உரைகல்லா? எனில், நோபல் பரிசு பெறாத மகாத்மா காந்தியை முன்னிறுத்தி உண்ணாவிரதம் இருப்பதே கேலிக்குரியதாக இல்லையா? தனது மேடையில் அரசியல்வாதிகள் யாரும் ஏறக் கூடாது என்று சொன்ன ஹஸாரே, அக்னிவேஷின் உள்அரசியலை ஏன் கண்டுகொள்ள மறுக்கிறார்?


ஹஸாரே நல்லவர்தான்; அவரைச் சுற்றிலும் இருப்பவர்கள் தான் சரியில்லை என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள முடியாது. நல்லவர் எவரும் தன்னைச் சுற்றிலும் சுயநல வியாபாரிகள் அமர்வதை அனுமதிக்க மாட்டார். தன்னைப் பயன்படுத்தி விளம்பரம் தேடும் பிரமுகர்களை அக்னிப் பிழம்பு போன்ற மாசற்றவர்களால் அனுமதிக்க முடியாது. ஹஸாரே இந்த விஷயத்தில் தோல்வி கண்டவர். லோக்பால் குழுவில் சோனியாவும் (என்.ஏ.சி- தேசிய வழிகாட்டுதல் குழு தலைவராம்) இருக்கலாம் என்று தீர்மானிக்க இவர் யார்? மன்மோகன் சிங்கையும் சரத் பவாரையும் விமர்சிக்கும் ஹஸாரே அவர்களை பின்னிருந்து இயக்குபவரை போற்றுகிறார். இது முரண்பாடு இல்லையா?


ஹஸாரே ஹிந்துவா, கிறிஸ்தவரா என்பதல்ல பிரச்னை. குமரப்பா போன்ற காந்தீயவாதி தூய கிறிஸ்தவராகவும் தேசபக்தராகவும் இருக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார். அக்னிவேஷ் ஹிந்து என்பதால் அவரை இங்கு யாரும் ஆதரிக்கவில்லை. மதம் பிரச்னை அல்ல. அதனை விவாதப் பொருளாக்கி, ‘தமிழ் ஹிந்து’வின் விவாதம் மடைமாற அனுமதிக்க வேண்டாம்.

ஹஸாரேவுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நல்ல அறிமுகம் இருந்ததுண்டு. ஆயினும் அவருடன் ஊழலுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து பணிபுரிய உடன் இருப்பவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதே நிலைமை தான் ஜெயபிரகாஷ் நாராயணன் எம்ஜென்சியை எதிர்த்து போராடக் கிளம்பியபோதும் இருந்தது. ஜெபி. இந்திராவை எதிர்த்ததைவிட சங்கத்தை கடுமையாக எதிர்த்தவர். ஆனால், தங்கள் மாசற்ற குணத்தாலும் தலைமைப் பண்பாலும் சங்க ஸ்வயம்சேவகர்கள் ஜெபியிடமும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். பின்னாளில் சங்கப் பொறுப்பாளர்களே எமெர்ஜென்சிக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கும் காலம் வந்தது. அதேபோல, இப்போதும் நிகழ்கிறது. ஹஸாரேவை நீண்ட நாட்களுக்கு சுயநலக் குழுக்கள் பிணைக்கைதியாக வைத்திருக்க முடியாது. ஆயினும் அவர் சுதந்திரமாகச் செயல்பாடாதவரை, அவரது போராட்டம் நாடகமாகவே இருக்கும்.


இன்றுள்ள சூழலில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க தகுதி இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் 'சில' கம்யூனிஸ்ட் தலைவர்களும் மட்டுமே. ஆனால், அவர்கள் இதே உண்ணாவிரதத்தை நடத்தியிருந்தால் ஊடகங்கள் இந்த அளவிற்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்காது; மட்டுமல்ல, போராடுபவர்களைப் பற்றியே விஷத்தை இதே ஊடகங்கள் கக்கி இருக்கும். ஏனெனில் தேசபக்தியுடன் செயல்படும் அரசியல்வாதிகளை நமது ஊடகங்கள் விரும்பியதில்லை. பர்கா தத்தும் ராஜ்தீப்பும் ஹஸாரேவுக்கு வாழ்த்துப்பா பாடும்போது, அவரது உண்ணாவிரதமே கேலிக்குரியதாகி விடுகிறது. அவர்கள் எந்நாளிலும் தேசபக்தர்களை புகழ்ந்ததில்லை.


இன்று நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான பேரலை மக்களின் உள்ளத்தில்- குறிப்பாக இளம் தலைமுறையினரிடம்- ஏற்பட்டிருக்கிறது. அதற்கு வடிகாலாக ஹஸாரே உண்ணாவிரதம் அமைந்ததால் தான் நாடு முழுவதும் அவருக்கு ஆதரவாக போராடி, அவரை கதாநாயகர் ஆக்கினார்கள். இன்றுள்ள நிலையில் ஊழலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அதை ஏற்க மக்கள் சித்தமாக இருக்கிறார்கள்; ஆனால், இதே ஊடகங்கள் ஹஸாரே தவிர்த்த யாரேனும் (அவரும் கூட அக்னிவேஷ், சந்தீப் பாண்டே உடன் இருந்ததால் தான் பிரசுரிக்கப்பட்டார்). உண்ணாவிரதம் இருந்திருந்தால் அதனை பிரபலப்படுத்தி இருக்காது.


மொத்தத்தில், ஹஸாரே உண்ணாவிரதம் காலத்தின் கட்டாயமாக நடந்தது. அதற்கான சிறிய பலனையும் அடைந்தது. ஆயினும் காரணத்திலும் காரியத்திலும் தெளிவில்லாத காரணத்தால், ஹஸாரே உண்ணாவிரதம் ஒரு தற்காலிக எழுச்சியை ஏற்படுத்தியதுடன் நிறைவடைந்துவிட்டது. நல்ல வேளை, இந்த உண்ணாவிரதத்தை முடித்துவைக்க ஆ.ராசா திகார் சிறையிலிருந்து வெளிவரவில்லை.

- சேக்கிழான்


(தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியான கட்டுரைக்கு எனது பின்னூட்டம் இது)

.

ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

ஹிந்துக்களின் வாக்கு பாஜகவுக்கே!



ஹிந்து முன்னணியின் நிறுவனர் திரு. ராம.கோபாலன், ஹிந்துக்களின் ஒற்றுமைக்காகவும், மேம்பாட்டுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்தவர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்ட நாளைய பிரசாரகரான ராம.கோபாலன், ஹிந்துக்களின் தன்மானத்தைக் காக்க, 1980 ல் தமிழகத்தில் ஹிந்து முன்னணியைத் துவக்கினார். தன் மீதான கொலைவெறித் தாக்குதலில் (1982) தெய்வாதீனமாக உயிர் தப்பிய ராம.கோபாலன், 80 வயதைத் தாண்டிய நிலையிலும் தளராது, மாநிலத்தின் பட்டிதொட்டிகள் எல்லாம் சென்று சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த ஒரு மாதமாக, சட்டசபை தேர்தலில் ஹிந்துக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று விளக்கி, தமிழகம் முழுவதும் ஹிந்து முன்னணி சார்பில் பிரசாரம் செய்து வருகிறார். மிகவும் மும்முரமான பிரசாரத்தில் இருந்த ராம.கோபாலன், 'தமிழ் ஹிந்து' நேயர்களுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது...


கேள்வி: இத்தேர்தலில் ஹிந்துக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? ஏன்?

பதில்:...................................... காண்க: தமிழ் ஹிந்து

.

சனி, ஏப்ரல் 09, 2011

‘கிரிக்கெட்’டில் விளையாடாதீர்கள்!



இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொண்ட அன்று எனக்கு ஒரு எஸ்.எஸ்.எஸ் வந்தது. ''நிற வெறியரை (ஆஸ்திரேலியா) வெற்றி கண்டோம்; மத வெறியரை (பாகிஸ்தான்) வெற்றி கண்டோம்; இப்போது இன வெறியரையும் (இலங்கை) வெற்றி காண்போம்: ஜெய்ஹிந்த்!' என்று அதில் இருந்தது.


இன்னொரு எஸ்.எம்.எஸ்.சில் வந்த நகைச்சுவைத் துணுக்கு: ''இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாக் பிரதமர் கிலானி அனுப்பிய எஸ்.எம்.எஸ்.சில் உள்ள தகவல்: மாப்பு, இந்தியாவுக்குப் போகணுமா? கொஞ்சம் யோசி. வைச்சிருவாங்க ஆப்பு''


இப்படி எஸ்.எம்.எஸ்.கள் வலம் வந்துகொண்டிருந்த அதே நேரத்தில் ஊடகங்கள் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணி வேறாக அலசிக் கொண்டிருந்தன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்பது வாராது வந்த மாமணியாகச் சித்தரிக்கப்பட்டது. ஒரு பத்திரிகை எழுதியது: இதுவரை இந்திய அணி பங்கேற்ற முக்கியமான அனைத்து ஆட்டங்களும் 'M' என்ற எழுத்தில் துவங்குவதாக (மொஹாலி, மும்பை) இருந்துள்ளன; அது இந்தியாவுக்கு ராசி. எனவே இறுதிப்போட்டியில் இந்தியா வெல்லும்.


நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தல் பிரசாரமே இந்த கிரிக்கெட் போட்டிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பிரசாரக் களம் செல்ல வேண்டிய தலைவர்கள் அதைவிட முக்கியமானதாக கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களிப்பதை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினர்.


காங்கிரஸ் தலைவி சோனியா, பாஜக தலைவர் அத்வானி என நாட்டின் முன்னணி அரசியல் பிரமுகர்கள் கூட கிரிக்கெட் போட்டியைக் காண்பது ஜென்ம சாபல்யம் என்பது போல மைதானத்தில் வீற்றிருந்தனர். அவர்களை (குறிப்பாக சோனியா, ராகுலை) ஆங்கில தொலைகாட்சி ஊடகங்கள் அடிக்கடி காட்டி, புளகாங்கிதம் அடைந்தன.


திரைப்பட நட்சத்திரங்களும் இதில் சளைக்கவில்லை. தென்னகத்தின் ரஜினிகாந்தும் பாலிவுட்டின் அமீர்கானும் ஒரே இடத்தில் தேசியக் கொடியுடன் ஆரவாரம் செய்தது கண்கொள்ளாக் காட்சி.


இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த அரையிறுதிப் போட்டியின் போதும் (மார்ச் 30), இலங்கையுடன் மோதிய இறுதிப் போட்டியின்போதும் (ஏப்ரல் 2), நாடு முழுவதும் அறிவிக்கப்படாத ஊரடங்கு போலக் காட்சி அளித்தது. இந்த நாட்களில் எந்த அலுவலகத்திலும் பணிகள் ஒழுங்காக நடக்கவில்லை. பலர் விடுப்பு எடுத்துக்கொண்டு கிரிக்கெட் போட்டிகளைக் கண்டு களித்தனர்.


நாட்டைக் காக்கும் (?) அரசியல்வாதிகளே கிரிக்கெட் மைதானத்தில் தவம் கிடக்கையில், சாமானியனைக் குற்றம் சொல்ல முடியாது. அதிமுக தலைவி ஜெயலலிதா தனது பிரசாரத்தையே போட்டி நாளன்று மாலை 5 மணியுடன் முடித்துக் கொண்டார். திமுக தலைவர் கருணாநிதியோ, பொதுக்கூட்டத்தை தாமதமாகத் துவங்கி சமாளித்தார். அந்த அளவிற்கு கிரிக்கெட் நாடு முழுவதும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியது.


பல பத்திரிகைகள் இதுதான் தருணமென்று பிரத்யேக 'டீம் இந்தியா' விளம்பரங்களை வெளியிட்டு காசு பார்த்தன. கடந்த 30 ஆண்டுகால உலகக் கோப்பைப் போட்டிகளை ஒப்பிட்டு தொலைகாட்சி அலைவரிசைகள் தங்கள் ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ள படாத பாடுபட்டன. அவற்றுக்கு விளம்பரங்கள் தந்து தங்கள் தொழிலை உயர்த்த பெரு நிறுவனங்கள் முண்டியடித்தன.


இறுதிப்போட்டி நடந்த அதே நாளில்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு 80 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையை (இது முன்னோட்டம் மட்டுமே; இதன் இரண்டாம் பாகம் விரைவில் வரும்) நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதுவும் கிரிக்கெட் களேபரத்தில் பத்தோடு பதினொன்றாகி விட்டது. நாட்டையே ஏமாளியாக்கிய குற்றவாளிகள் மீது நமது அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றிய கவலையை விட கிரிக்கெட் வெற்றியே முக்கியமானதாகி விட்டது.


இதையெல்லாம்விட பைத்தியகாரத்தனம், மொஹாலியில் நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு நமது பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தது. கிரிக்கெட் போட்டிகளை இருநாட்டுப் பிரதமர்களும் அருகருகே அமர்ந்து ரசிக்கவும் செய்தனர். மும்பையிலும் நாடாளுமன்றத்திலும் பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் கொடூரத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வசதியாக மறந்துவிடலாம்; இருநாட்டு நல்லுறவுக்கு கிரிக்கெட் பாலம் அமைத்துவிடும். இதனை 'கிரிக்கெட் டிப்ளமசி' என்று பாராட்டி மகிழ்ந்தன நமது அறிவுஜீவி ஊடகங்கள்.

பிரதமரே இவ்வாறு நினைக்கும்போது நாட்டின் சாமானிய ரசிகன் எஸ்.எம்.எஸ் அனுப்பாமல் என்ன செய்வான்?


இறுதிப்போட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்ஷே நமது ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுடன் ஒருங்கே அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்ததே அற்புதமான காட்சி. இலங்கையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய அராஜகத் தாக்குதல்களில் உயிரிழந்த லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும்.


பாகிஸ்தான் அணியை வென்று பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டியாகி விட்டது. இலங்கை அணியையும் வென்று பாடம் புகட்டியாகி விட்டது. சீனாவும் இந்த கிரிக்கெட் மன்றத்தில் சேர்ந்தால் தொல்லை விட்டது. அதனையும் ஒரு போட்டியில் வென்று 1962 போர் தோல்விக்கு எளிதாக பழி தீர்த்துக் கொள்ளலாம்.


இதே பாணியில் ஊழலையும் விலைவாசி உயர்வையும்கூட மிக எளிதில் முறியடிக்க முடியும். ‘ஊழல்’ என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி (அதில் நமது அரசியல்வாதிகளை இடம்பெறச் செய்யலாம்) அதனுடன் தோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் (பிசிசி) அணியை மோதச் செய்து வெற்றி கண்டுவிட்டால் போதும், ஊழலை நாம் வெற்றி கண்டாற்போலத் தான். இது தெரியாமல் காந்தீயவாதியும் சமூக சேவகருமான அண்ணா ஹஸாரே ஊழலை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.


கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டையில் ‘விலைவாசி’ என்று எழுதி ஒட்டி, வேகமாக அடித்து ஆடி மட்டையை முறித்துவிட்டால், விலைவாசியின் உக்கிரத்தை அடக்க முடியாதா? இதனை தேர்தலில் ஒரு பிரச்னையாக முன்வைத்து பிரசாரம் செய்ய வேண்டுமா?

நமது நாட்டில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எந்த விளையாட்டிற்கும் கொடுக்கப்படுவதில்லை. ஆசிய விளையாட்டில் தங்கங்களைக் குவிக்கும் கபடி வீரர்களோ, ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்களைக் குவிக்கும் தடகள வீரர்களோ, டென்னிஸ், செஸ் விளையாட்டுகளில் வாகை சூடும் இந்திய வீரர்களோ, ஒரே வெற்றி மூலமாக கதாநாயகர்கள் ஆவதில்லை. 2011 உலகக் கோப்பையைக் கைப்பற்றியதன் மூலமாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் ஒரே நாளில் பல கோடிகளுக்கு அதிபதிகளாகி இருக்கிறார்கள். இது தவிர விளம்பரத் தூதுவர்களாக - பெரு நிறுவனங்களின் மாடல்களாக இருக்கப்போகும் வாய்ப்பால் கிடைக்கும் வருமானம் தனிக்கணக்கு.

‘இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம்; டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள்’ என்று மெய் சிலிர்க்கின்றன ஊடகங்கள். இப்போது மூலவராக டெண்டுல்கரை அமர்த்திவிட்டு தோணி உற்சவராக உருவாக்கப்பட்டிருக்கிறார். இதே தோனியின் ராஞ்சியிலுள்ள வீடு, ஒரு போட்டியில் இந்தியா தோற்றபோது ரசிகர்களால் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். விளையாட்டு என்பதே மனித மன உணர்வுகளை மேம்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்ட பொழுதுபோக்கு தான். ஆனால், வெற்றி பெற்றால் தலையில் வைத்துக்கொண்டு கூத்தாடுவதும் தோற்றால் சூறையாடுவதும் பண்பாடல்ல. அதைத்தான் இந்தியா, கிரிக்கெட்டில் கற்றிருக்கிறது.

இப்போது நாட்டின் வெளிவிவகாரத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு கிரிக்கெட் வளர்ந்துவிட்டது. இனிமேல் யுத்தங்கள் தேவையில்லை; இரு நாட்டு கிரிக்கெட் அணிகளை மோதச் செய்து வெற்றி தோல்விகளை தீர்மானித்துக் கொள்ளலாம். அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருமானம் ஈட்டி பற்றாக்குறை பட்ஜெட்களை சரிப்படுத்தலாம்.

அரசியல்வாதிகளும் திரைத் தாரகைகளும் தங்களை கிரிக்கெட் ரசிகராக காட்டிக்கொள்ள நடத்தும் அபத்த முயற்சிகள், ரசிகர்களின் கிரிக்கெட் பித்தை மேலும் அதிகரிக்கின்றன. மொத்தத்தில் அழகிய, நேர்த்தியான, இயல்பான ஒரு விளையாட்டு, அதற்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தாலும், அதனுடன் சேர்க்கப்படும் அரசியல் மசாலாவாலும் நாசமாகிறது. இனிமேலும் அதனை 'ஜென்டில்மேன்களின் விளையாட்டு' என்று சொல்ல முடியுமா?

டெண்டுல்கருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும் என்று உபதேசிக்கின்றன ஊடகங்கள். வழங்க வேண்டியதுதான். தமிழகத்தின் ‘கலைமாமணி’ பட்டம் போலாகி விட்டது, நமது அரசு வழங்கும் 'பத்ம' விருதுகளின் நிலைமை. அதற்கு டெண்டுல்கர் எவ்வளவோ பரவாயில்லை.

இதெல்லாம் போகட்டும் என்று விட்டுவிடலாம். இறுதிப்போட்டியின் இறுதியில் இந்திய அணி பெற்று ஆரவாரித்த கிரிக்கெட் உலகக் கோப்பையே உண்மையானதல்ல என்ற சர்ச்சை வேறு, இரண்டு நாட்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையான உலகக்கோப்பை சுங்கவரித்துறை வசம் உள்ளதாகவும் சுமார் ரூ. 22 லட்சம் வரி கட்டாததால் முடக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. அதனை கிரிக்கெட் கவுன்சில் மறுத்துள்ளது. எனினும் சுங்கவரித்துறை வசம் இருப்பது மாதிரி உலகக் கோப்பையா? நமது வீரர்கள் பெற்றது மாதிரி உலகக் கோப்பையா என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிர் தான்.

ரசிகனைப் பொருத்த வரை, இதுபோன்ற சர்ச்சைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அவனது விருப்பம் நிறைவேறிவிட்டது. சுங்கவரித் துறை வசமுள்ள கோப்பை எதுவானாலும் மீட்பது, பல கோடிகள் புரளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொறுப்பு. எதற்கெல்லாமோ வரிவிலக்கு அளிக்கும் இந்திய அரசு (உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக மட்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ. 45 கோடி வருமானவரி விலக்கு அளித்துள்ளது இந்திய அரசு), இதற்கும் விலக்கு அளித்து தனது கிரிக்கெட் பக்தியை வெளிக்காட்டலாம்.

நாட்டில் ஒருவேளை உணவு கூடக் கிடைக்காதவர்களின் எண்ணிக்கை பல கோடியாக இருக்கும் தேசத்தில், கிரிக்கெட்டை மேம்படுத்துவதுதானே ஒரு மக்கள் நல அரசின் பிரதான கடமையாக இருக்க முடியும்?


-------------------------

விஜயபாரதம் (22.04.2011)

திங்கள், ஏப்ரல் 04, 2011

தேர்தல் களம்: கழகங்களுக்கு மாற்றாகும் பாஜக.


தமிழகத்தின் 14 வது சட்டசபைத் தேர்தல் வரும் ஏப். 13 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இது வரையிலான தமிழகத் தேர்தல் களங்களுக்கு மாறான ஒரு காட்சி தெளிவாகவே தென்படுகிறது. அது, கழகங்களுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்திருப்பது தான்.


காமராஜர் தலைமையிலான ஆட்சிக்கு முடிவுரை எழுதிய 1967 சட்டசபைத் தேர்தலை அடுத்து, திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களே மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வந்துள்ளன. இவ்விரு கட்சிகளும் எதிரெதிரே செயல்படுவதுடன், எதிரிக் கட்சி மீதான மக்கள் அதிருப்தியைப் பயன்படுத்தியே அரசியல் நடத்தி வந்துள்ளன. இந்த இரு கழகங்களுக்கும் மாற்றாக சென்ற தேர்தலில் உருவான நடிகர் விஜயகாந்தின் தேசிய திராவிட முற்போக்குக் கழகமும் இத்தேர்தலில் அதிமுகவுடன் அணி சேர்ந்துவிட்டது.


காங்கிரஸ் வழக்கம் போல சவாரி செய்யத் தோதான தோளைக் கண்டு தாவிவிட்டது. இரு கழகங்களையும் மாறி மாறி சார்ந்திருந்த காரணத்தாலேயே காங்கிரஸ் தமிழகத்தில் காற்றில் கரைந்த பெருங்காயமாகி விட்டது. தற்போது அது வெறும் காலி பெருங்காய டப்பா மட்டுமே.


ஆனால், தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி, இப்போது, தமிழகத்தில் மாற்றங்களை விரும்பும் நடுநிலை வாக்காளர்களின் தளமாக உருவெடுத்திருக்கிறது......


---------------------------------------

முழு கட்டுரையையும் காண்க: தமிழ் ஹிந்து

.