செவ்வாய், அக்டோபர் 19, 2010

முரண்பாடுகள் யாரிடம்? - 2


தமிழ் ஹிந்து இணையதளத்தில், 'அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்' என்ற எனது கட்டுரைக்கு பின்னூட்டங்களிட்ட திருவாளர் ஆர்.வி.க்கு எனது பதில்கள்...

----------------------------------------


சேக்கிழான்,
// ஒரு தகராறு, இரண்டு தரப்பு. அவர்களுக்குள் தீர்த்துக்கொள்ள முடியவில்லை, கோர்ட்டுக்கு போகிறார்கள். தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்வேன், இல்லை என்றால் மறுப்பேன் என்று ஒரு தரப்பு சொல்லுமானால் கோர்ட்டுக்கும் கேசுக்கும் arbitration-க்கும் பொருளே இல்லையே? எனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் நான் ஏற்கமாட்டேன், ஆனால் உனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் நீ ஏற்க வேண்டும் என்று சொல்லப்படும் அறிவுரையில் உள்ள அடிப்படை முரண்பாடு உங்களுக்கு புரியவில்லையா? எப்படி என் தரப்பு சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதே போல தன் தரப்பு சரி என்று வக்ஃப் போர்டும் நினைக்கலாம் இல்லையா? இதே லாஜிக்கை மறு தரப்பும் பயன்படுத்தி எனக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை, நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னால்? மன்னிக்கவும், எனக்கு வேண்டியதை நான் செய்வேன், process எனக்கு முக்கியமில்லை, நான் ஏற்றுக்கொண்டிருக்கும் மார்க்கம்தான் சரி, நான் சொல்வதுதான் சட்டம், நீதி, நியாயம், அதன்படிதான் அடுத்த தரப்பு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த “கட்டடத்தை” இடித்த பாபரின் “விழுமியம்”. அதை நான் நிராகரிக்கிறேன். பாபரின் செயலை வன்மையாக எதிர்க்கும் நீங்கள் அப்படி எதிர்ப்பதற்காக அவரது வால்யூ சிஸ்டத்தையே பயன்படுத்தினால் எப்படி? தவறான வால்யூ சிஸ்டத்தால் தவறான செயல்கள் நடந்தன. அந்த தவறை சரி செய்கிறேன், ஆனால் அந்த வால்யூ சிஸ்டம்தான் எனக்கு வேண்டும் என்றால்!//
-R.V (16.10.2010)

மீண்டும் எனது பதில்:
அன்புள்ள ஆர்.வி.

தவறான நபர்களை ஒப்பிடக் கூடாது. ஆக்கிரமிப்பாளன் பாபருடன் அவதார புருஷன் ராமனை ஒப்பிடவே கூடாது. நாடு விடுதலை பெற்றவுடன் யூனியன் ஜாக் கொடி அகற்றப்பட்டு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது போல, சுதந்திரம் பெற்றவுடன் சோமநாதர் ஆலயம் பட்டேலால் புனரமைக்கப்பட்டதுபோல, அயோத்தி ராமர் கோயிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உங்களைப் போலவே நமது புதிய இந்திய ஆட்சியாளர்களும் இருந்த காரணத்தால் தான், ராமர் கோயில் விவகாரமானது.

திரேதா யுகத்து ராமனுக்கு தற்போதைய நீதிபதிகளால் கண்டிப்பாக பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது. இதில் எந்த சட்டத்திற்கும் வேலை இல்லை. இதைச் சொல்வது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சட்டத்தை மீறிய சலுகைகளைச் சுட்டிக் காட்டுவது (ஷாபானு வழக்கு) அதே போன்ற சட்டமீறல்களை ஹிந்துக்களுக்கும் வழங்குமாறு கோருவதல்ல; நமது மக்களுக்கு நாம் எப்படி பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்பதை சுட்டிக் காட்டவே.

வழக்கிற்கு சம்பந்தமில்லாத வக்பு வாரியத்தையும் ராமர் பக்தர்களையும் நீங்கள் ஒப்பிட்டதில் இருந்தே நீங்கள் ‘தெளிவான குழப்ப’த்துடன் இருப்பது தெரிகிறது. குழப்பத்தைத் தெளிவிக்க முடியும். ‘தெளிவான குழப்பத்தை’த் தெளிவிப்பது சற்று சிரமம் தான்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்காக ஷாபானு வழக்கிற்கு விரோதமாக புதிய சட்டம் நிறைவேற்றிய புத்திசாலிகள், உச்சநீதிமன்றத்திலும் ராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் என்ன செய்வார்கள்? அப்போதும் 'வால்யூ சிஸ்டம்' பேசிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம். மன்னிக்கவும், நான் அப்படி நினைக்கவில்லை. ஹிந்துக்களுக்கு நீதியையும், நடுநிலையையும் போதிக்க வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

நாட்டுப் பிரிவினை வழங்கிய ஆழமான காயங்களை மீறியும், உங்களைப் போன்றவர்களால் எப்படி இவ்வாறு விதண்டாவாதம் செய்ய முடிகிறது என்று புரியவில்லை. பரவாயில்லை, நீங்கள் மதச்சர்பற்றவராகவே, நீதிமானாகவே இருங்கள். கண்ணன் காட்டிய வழியில் ஹிந்துக்கள் ராமர் கோயிலைக் கட்டிக் காட்டுவார்கள்.

காண்க: தமிழ் ஹிந்து
----------------------------------------

//ஆளைக் கொல்பவர்கள் போக வேண்டிய இடம் தூக்கு மேடை - அங்கே என்ன ஹிந்து முஸ்லிம்? நீங்கள் இதை புலம்புவதில் பொருளில்லை என்று ஒதுக்கக் கூடாது//
-R.V (16.10.2010)

நமது நாடாளுமன்றத்தைத் தாக்கியதற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு தூக்குமேடைக்கு சென்றுவிட்டாரா? மும்பை தாக்குதலில் தொடர்புடைய கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதா? அங்கே ஏன் பாகுபாடு? எதற்கு பயம்? திரு. ஆர்.வி தனது தளத்தில் இதுபற்றி துணிவுடன் முதலில் எழுதட்டும்!
.
முஸ்லிம்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்பதால் தான் ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் (காவல்துறையினர் உள்பட) வரை அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்களது வழிமுறையை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவர்களது தவறுகளைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பவர்கள் தான், அமைதியாக ஷாகா நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.சை வசை பாடுகிறார்கள். அதைச் சுட்டிக் காட்டவே ''முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது?'' என்று நான் கேட்டிருந்தேன். அதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பது எனக்கும் புரியவில்லை.

// அப்படி ஹிந்து துறவிகள் எல்லாரும் உண்மையான துறவிகளாக இல்லையே? மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பற்றி எந்தப் பத்திரிகை தவறாக எழுதி இருக்கிறது? அப்படி எழுதினால் பொங்கி இருப்பார்கள். நித்யானந்தாவையும் பிரேமானந்தாவையும் பற்றி உண்மையாக செய்தி தருவது ஊடகங்களின் கடமையே//

நண்பர் ஆர்.வி,

காஞ்சி பரமாச்சாரியார் பற்றி பகுத்தறிவுத் திலகங்கள் அள்ளித் தெளித்த அவதூறுகள் உங்களுக்கு தெரியவில்லையா? இன்றும் கூட அவரை பெரிய சங்கராச்சாரி என்று தானே திருவாளர் வீரமணி வெளியிடும் விடுதலை குறிப்பிடுகிறது? அருளாளர் கிருபானந்தவாரியாரை கழகத்தினர் துரத்தித் துரத்தி அடித்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியாதா?

தவறு செய்யும் யாரையும் கண்டிக்க உரிமை உள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஊடகங்கள் ஏன் திருச்சி ஜோசப் கல்லூரி அவலம் குறித்து (கன்யாஸ்திரி கற்பழிப்பு) அடக்கி வாசிக்கிறது? கொலைக் குற்றம் சாட்டப்பட்ட டில்லி இமாம் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காதது ஒருபுறம் இருக்கட்டும், அவரது முகத்திரையை மட்டும் ஏன் கிழிக்க ஊடகம் மறுக்கிறது? ஊடகங்கள் செய்ய மறுத்த அந்த கைங்கரியத்தை ஏன் ஆர்.வி. தனது தளத்தில் செய்து பாராட்டுச் சான்றிதழ் பெறக் கூடாது?
.

.

1 கருத்து:

  1. தடி எடுத்துக்கொண்டு செல்லும் RSS காரர்கள் பயங்கரவாதிகள். அவர்களை தண்டிக்கவேண்டும். AK 47 மற்றும் குண்டு வெடித்த அப்சல், கசாப் போன்ற அப்பாவிகளுக்கு அரசு உதவி செய்யவேண்டும். அதுதான் மதச்சார்பின்மை.

    பதிலளிநீக்கு