சனி, மே 21, 2011

மக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி - ஓர் அலசல்.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் வகிக்கும் பேரிடத்தை உணர, அண்மையில் நடந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளைக் காண வேண்டும். மக்களின் அதிருப்தி ஓர் அலைபோல சுழன்று எழுந்தது. இத்தேர்தலில் வெளியேற்றப்பட்ட ஆட்சியாளர்கள் மூலமாக வெளிப்பட்டது. மக்கள் தாங்கள் விரும்பும் ஆட்சியை அமைப்பதும் விரும்பாத ஆட்சியைத் துரத்துவதும், மக்களாட்சியின் மாண்பு. எந்த ஆயுதப் பிரயோகமும் இன்றி, வாக்குப்பதிவாலேயே இதைச் சாதிப்பதுதான் ஜனநாயகத்தின் மகிமை. அந்த வகையில் அண்மைய தேர்தல்கள் பல அதிரடியான முடிவுகளை வழங்கி நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு மகுடம் சூட்டி உள்ளன.

ஆறு கட்டமாக நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் தென் மாநிலங்களான தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா, வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், அசாம் ஆகியவை பங்கேற்றன. புவியியல் ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பல்வேறுபட்ட மாறுபாடுகளை உடைய இம்மாநிலங்களில் கிடைத்துள்ள முடிவுகள், நமது மக்களின் பக்குவத்தன்மையை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளன. குறிப்பாக, ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்கள், அமைதிப்புரட்சி என்று சொல்லத்தக்க அளவில் சத்தமின்றி ஆட்சி மாற்றத்தைக் கண்டிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான தார்மிகக் கோபத்தையும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான தங்கள் முதிர்ச்சியையும் மக்கள் இத்தேர்தலில் நிரூபித்துள்ளனர்.


இத்தேர்தல் ஒட்டுமொத்த தேசத்திற்கும் கூறுவது என்ன என்ற கேள்வி எழுகிறது. இனிவரும் சட்டசபைத் தேர்தல்களும் நாடாளுமன்றத் தேர்தலும் எந்தத் திசையில் இருக்கும் என்பதை அறுதியிடுவதாக இத்தேர்தலைக் காண முடிகிறது. இத்தேர்தல் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒவ்வொரு வகையில் பாடம் கற்பித்திருக்கிறது. மக்களை மிகவும் குறைவாக எடைபோடக் கூடாது என்பதும் தெளிவாகி இருக்கிறது....


-------------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

விஜயபாரதம் (03.06.2011)

.

புதன், மே 18, 2011

தமிழகம் ஊழலுக்குக் கொடுத்த சம்மட்டி அடி

சிலரை சில காலம் ஏமாற்றலாம்; பலரை பல காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்று கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கிறார்கள், தமிழக வாக்காளர்கள். பணபலத்தைப் பொருட்படுத்தாமல், ஆசை வார்த்தைகளுக்கு மசியாமல், ஊழலின் ஒட்டுமொத்த உருவாகக் காட்சியளித்த திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். இதன்மூலமாக, நாடு முழுவதற்கும் ஓர் அற்புதமான செய்தியையும் தமிழகம் தந்திருக்கிறது. அது…

‘ஊழல்வாதிகள் என்றுமே கொக்கரித்துக் கொண்டிருக்க முடியாது. ஊழல் உறுத்து வந்து ஊட்டும்; அரசியல் பிழைத்தோர்க்கு தேர்தல் கூற்றாகும்’ என்பதுதான்.

அதிகார
பலமும் கவர்ச்சிகரமான பிரசாரமும் லஞ்சமாக வழங்கப்பட்ட பணமும் தமிழக மக்களை முட்டாளாக்கிவிடவில்லை. இந்தப் பாணியில் எவர் செயல்பட்டாலும் வெற்றி கிட்டாது என்பது நாட்டு மக்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிய வைக்கப்பட்டிருக்கிறது. வாக்காளர்களுக்குக் கோடி நன்றி...

--------------------------------------
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
விஜயபாரதம் (27.05.2011)
.

புதன், மே 11, 2011

பின் லேடனை விட மாபெரும் அபாயம்

சர்வதேச பயங்கரவாதி, உலகின் மிக ஆபத்தான பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்ட ஒசாமா பின் லேடன் ஒருவழியாக அமெரிக்கப் படையால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் 2001, செப். 11 ல் இரட்டைக் கோபுரங்கள் தாக்கப்பட்ட நிகழ்வுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டதாகவும், நீதி வென்றுவிட்டதாகவும் முழங்கி இருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இனி கவலையில்லை- அடுத்த அதிபர் தேர்தலிலும் ஒபாமா வென்று விடலாம்.

பின்லேடன் கொல்லப்பட்டது உலக அளவில் மேற்கத்திய ஊடகங்களில் அளவுக்கு அதிகமாகவே புகழப்படுகிறது. ஆனால், இந்த அதிரடி நிகழ்வின் பின்புலத்தில் பதில் அளிக்க வேண்டிய பல கேள்விகள் புதைந்துள்ளன. இக்கேள்விகளைக் கேட்காமல் நாமும் பிற ஊடகங்கள் போல அறியாமையால் அமைதி காக்கக் கூடாது....


-----------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

விஜயபாரதம் (20.05.2011)


.

புதன், மே 04, 2011

‘தமிழ் ஹிந்து’வுக்கு மனமார்ந்த நன்றி

அன்பு நண்பர்களுக்கு
வணக்கம்.


பெரியவர் வெங்கட் சாமிநாதனுக்கு விழா எடுப்பதும் அவர் குறித்து புத்தகம் வெளிவருவதும், தமிழகம் புத்துணர்வு பெற்று வருவதன் அறிகுறியாகவே தெரிகிறது. ஒருபுறம், ஜெயமோகனின் ஆற்றல் மிகுந்த தலைமையில் சத்தமின்றி இலக்கிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. இடதுசாரி பார்வை, திராவிட பார்வைகளிலிருந்து தமிழ் மீண்டு வருவதன் அறிகுறிகள் இவை. ஜடாயு, அரவிந்தன் நீலகண்டன் போன்ற நண்பர்கள் இந்த விழிப்புணர்வு இயக்கத்தில் இருப்பது பெருமை அளிக்கிறது.


காலமும் சிந்தனையும் மாறிக்கொண்டே இருப்பவை. இதே தமிழகத்தில் சங்க இலக்கிய பிரவாகம் பாய்ந்திருக்கிறது; காவியங்களின் ஆளுமைகளால் மக்கள் தங்களை மறந்திருக்கிறார்கள்; பக்தி இலக்கிய அருவி கொட்டி இருக்கிறது; இலக்கணம் கூட இலக்கிய வடிவிலேயே படைக்கப்பட்ட சிறப்பும் இங்கு நிகழ்ந்திருக்கிறது. நீதிநூல்களும் சிற்றிலக்கியங்களும் சமுதாயத்தை வளப்படுத்தி இருக்கின்றன. இங்கு கூறப்படுபவை அனைத்துமே, காலவெளியில் நிலைபெற்ற பேறுடையவை. அவை நிலைபெறக் காரணம், அவற்றின் உள்ளார்ந்த இலக்கியத் தன்மையும் அவற்றில் இழையூடு பாவாய் அமைந்த சமுதாய உணர்வும் தான்.


சமுதாயத்திற்கு நன்மை விளைவிப்பதற்காக நிகழ்த்தப்படும் எந்தக் கலையும் இலக்கியமும் காலங்களை வென்று வாழும். ஏனெனில், அவற்றின் பிறப்பில் அறமும் நீதியும் நிலவும். அதனால் தான் நமது முற்கால இலக்கியகர்த்தர்கள் ரிஷிகளாக வணங்கப்படுகிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்; குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ?; நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே!’- என்றெல்லாம் நமது முந்தைய படைப்பாளிகள் கர்வம் தெறிக்க முழங்கியதன் பின்னணியில் அவர்களது தன்னல மறுப்பும் சமுதாயம் குறித்த சிந்தனை வீச்சும் இருந்தன. அதே பாவனையின் தொடர்ச்சியாகவே பெரியவர் வெங்கட் சாமிநாதனைக் காண வேண்டும்.


எந்த ஒரு மொழியும் பல வளர்ச்சிநிலைகளையும் சில தேக்கங்களையும் சந்திப்பது இயற்கை. ஏனெனில் மொழியும் சமுதாயமும் இணை பிரியாதவை. சமுதாய வீழ்ச்சியின்போது மொழியின் சரிவும் தடுக்கப்பட முடியாதாது. ஆயினும், சமுதாயம் மறுமலர்ச்சி அடையும்போது மொழி புத்தெழுச்சி கொள்ளும். கடந்த நூற்றாண்டில் தமிழ் மொழியில் ஏற்பட்ட மாற்றங்களில் சமூக மாற்றங்களும் பின்னிப் பிணைந்துள்ளன. உரைநடை இலக்கியம், புதின இலக்கியம், நாடக இலக்கியம், விமர்சன இலக்கியம், என மொழியின் கலை வடிவங்கள் பல்கிப் பெருகின. மொழிபெயர்ப்பிலும் உலகளாவிய சிந்தனைப் போக்குகளுடன் தமிழ் கைகோர்த்தது. அதே சமயம், சமுதாயத்தின் அரசியல் வீழ்ச்சி இலக்கிய சீரழிவுக்கு வித்திட்டது. அந்தக் கறையைப் போக்கும் தருணம் தற்போது துவங்கிவிட்டது.


எதையும் சுயநலத்துடன் கூடிய விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகும் மோசமான வழக்கம் தமிழ் இலக்கிய அரங்கில் அரசியல் தலையீட்டால் நிகழ்ந்துள்ளது (இதே போக்கு பிற இந்திய மொழிகளிலும் ஏற்பட்டிருப்பதாகவே கூற முடியும்). இந்த விமர்சன உலகில் நாட்டை கூறுபோடும் சதியாளர்களின் கையூட்டுத் தொடர்புகளும் உண்டு. இத்தகைய நிலையில், ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வார்த்தையில் தெளிவுண்டாகும்’ என்ற மகாகவி பாரதியின் வாக்கிற்கு ஏற்ப, பாரம்பரியம், நாட்டுநலன், சமுதாய உணர்வுடன் சிறு கலகக் குரல் கேட்டாலும் அதுவே சமுதாயத்தின் குரலாகும். அதிகார பலம், பணபலம், சித்தாந்த பலத்தால் சமுதாயத்தின் தீனமான குரலை அடக்கிவிட முடியாது. வெங்கட் சாமிநாதனுக்கு எடுக்கப்படும் பாராட்டுவிழா, சத்தியத்தின் மனசாட்சிக்கு எடுக்கப்படும் விழா.


விதைகளை மண்ணில் புதைத்துவைத்து விட்டால், அந்த விதைகளின் பாரம்பரியத்தை அழித்துவிடலாம் என்று கனவு காணும் ஆதிக்கவாதிகள் தான் இப்போதைய இலக்கிய உலகில் முன்னணியில் தெரிகிறார்கள். மண்ணில் விதைகளைப் புதைக்க முடியாது- விதைக்கவே முடியும் என்பது வெங்கட் சாமிநாதன் போன்றவர்களின் இருப்பால்தான் வெளிப்படுகிறது. எந்த சார்பும் அற்றவர் என்பதே வெ.சா.வின் பலம். அவரது அணியில் இளைய தலைமுறை அணிவகுக்கத் துவங்கி இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இப்பணியில் இணைந்துள்ள ‘தமிழ் ஹிந்து’வுக்கு மனமார்ந்த நன்றி.


- சேக்கிழான்


---------------------------------------------------


குறிப்பு: 'தமிழ் ஹிந்து' இணையதளத்தில் வெளியான, நண்பர் ஜடாயுவின் வெங்கட் சாமிநாதன் குறித்த கட்டுரை-க்கு அளிக்கப்பட பின்னூட்டம் இது.


காண்க: கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்


.

செவ்வாய், மே 03, 2011

சேவைகளில் வாழும் பாபா



தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்

(குறள்- 268)


பொருள்: தவ வலிமையால் தன்னுயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் அவனுடைய பெருமையை உணர்ந்து வணங்கும்.

'தவம்' என்ற தலைப்பில் தெய்வப்புலவர் திருவள்ளுவர், தபஸ்விக்கு அளித்துள்ள விளக்கம் இது. இந்த இலக்கணத்திற்கு சான்றாக வாழ்ந்து வழிகாட்டி மறைந்திருக்கிறார், பகவான் சத்யசாயி என்று அனைவராலும் அன்புடன் வணங்கப்பட்ட சத்ய சாய்பாபா.

ஆந்திர மாநிலத்தில் புட்டபர்த்தி என்ற சிற்றூரில் ஓர் எளிய குடும்பத்தில் எட்டாவது குழந்தையாகப் பிறந்த சத்ய நாராயண ராஜு, பாபா ஆனது தெய்வீக மகிமை. சிறு வயதிலேயே தனது முற்பிறப்பின் (ஷீரடி பாபா) ரகசியத்தை வெளிப்படுத்திய அவர், தனது சித்து விளையாட்டுகளால் பிரபலம் அடைந்தார். அதன்மூலமாக பெரும் பக்தர் குழாமை உருவாக்கிய அவர், அந்த பக்தர்களின் சக்தியை நாட்டு நலனுக்கும் எளியவருக்கான சேவைக்கும் அர்ப்பணித்தார்.

பாரதம் மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் புட்டபர்த்தி நோக்கி வந்தனர். அந்த கிராமத்தை பாரதத்தின் பெருமை மிகு நகரமாக மாற்றினார் பாபா. கல்வி, மருத்துவம், முதியோர் சேவை, குடிநீர் வசதி, என பாபாவின் சேவைகள் அங்கிருந்து தான் பல்கிப் பெருகின. பாபா அளித்த நம்பிக்கையால் வாழ்வைப் புதுப்பித்துக் கொண்ட பக்தர்கள் பல கோடி. பாபா அளித்த உத்வேகத்தால் சேவை ஆற்றிய பக்தர்களின் எண்ணிக்கை பல கோடி. பாபாவின் அருளாசியால் உயர்ந்த பக்தர்களின் எண்ணிக்கை பலகோடி.
அக்னியானது தன்னை நெருங்கும் எதனையும் ஆகுதியாக்கிக் கொண்டு அதனையும் அக்னியாக ஆக்குவது போல, பாபாவின் தவ வாழ்க்கை அமைந்திருந்தது. அந்த அக்னி ஜுவாலை உலகம் முழுவதும் ஆன்மிக நேயத்தை அருட்கதிராக வளர்த்துக் கொடுத்துவிட்டு, தனது கடமையை முடிந்துவிட்டு இறைவன் தாளில் ஐக்கியமாகி விட்டது.

***


பாரதத்தில் ஹிந்து சந்நியாசி ஒருவர் உலகப்புகழ் பெற்று வருவது கண்டு அதிர்ந்த கத்தோலிக்க அமைப்பு, பாபாவின் பின்னணியை அறிந்துவர இத்தாலி நாட்டு பாதிரியார் டான் மரியோ முசாலினி என்பவரை 1970 களில் அனுப்பியது. அவரும் புட்டபர்த்தி வந்து பாபாவின் ஆசிரமத்தில் பக்தராகச் சேர்ந்தார். பாபாவைப் பின்தொடர்ந்து உளவறிய வந்த அவர், பாபாவின் அருளாசியால் ஈர்க்கப்பட்டார். பாபாவை பின்தொடர்ந்து அவரது ரகசியம் அறிய வந்த முசோலினி, பாபாவின் மெய்யடியாராக மாறிவிட்டார். பூவோடு சேரும் நாறும் மணம் பெறுவதுபோல, முசோலினியின் மனம் பக்குவம் அடைந்தது. கிறிஸ்தவ வெறியுடன் வந்த அவர், மதம் கடந்த அருளாளரின் அன்பால் கட்டுண்டார். பின்னாளில் அவர் பாபாவின் வெளிநாட்டு பக்தர்களில் பிரதான இடம் பெற்றார்.

அவர் தனது அனுபவங்களை 'CATOLIC PRIEST VISIT BABA' என்ற புத்தகமாக எழுதி இருக்கிறார். அதில் பாபா தனது மனத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை விளக்கமாக எழுதி இருக்கிறார். உளவறிய வந்தவரின் மனத்தைத் தான் பாபா மாற்றினாரே ஒழிய, அவரது மதத்தை மாற்றவில்லை. இதுவே பாபாவின் தனிப்பெருமை. 'இறைவனை எப்பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் ஒருவனே' என்ற சாமானிய ஹிந்துவின் நம்பிக்கையே பாபாவிடமும் பிரதிபலித்தது. பாரத மகிமையும் பாபாவின் பெருமையும் உணர்ந்தார் முசோலினி.


***


புட்டபர்த்தியில் பாபாவின் பக்தர்கள் வழங்கிய பலகோடி நிதியில் பிரமாண்டமான அதிநவீன மருத்துவமனை கட்டப்பட்டு இயங்கி வருகிறது. பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கூட சாயி சேவா சமிதியின் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் தினமும் பல நூறு பேருக்கு அரிய அறுவை சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சையை சேவையாக அளிக்க உலகம் முழுவதிலுமிருந்து பிரபல மருத்துவர்கள் பலர் வந்து சென்று கொண்டே இருக்கின்றனர்.

இந்த மருத்துவமனைகளில் மருத்துவர், தாதிகள், சுகாதாரப் பணியாளர்களாக சாயி பக்தர்கள் தன்னார்வலர்களாக குறிப்பிட்ட காலம் தங்கி பணியாற்றுவர். அதன் மூலமாக சாயி பக்தர்கள் மன நிறைவு பெறுவர். இந்த ஏற்பாடு பாபாவின் தன்னிகரற்ற தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. தன்னிடம் ஆசி வேண்டி பக்தராக வந்த மக்களை மானுட சேவைக்கு மடை மாற்றும் திறம் அவரிடம் இருந்தது. ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்பதை எளிமையாக தனது பக்தர்களுக்கு பாபா புரியச் செய்தார்.

சத்யசாயி மருத்துவமனைகளில் நோயாளி யார், அவருடைய மதம் என்ன, ஏழையா பணக்காரனா என்றெல்லாம் பார்க்காமல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகு மதம் மாற்றும் பிற மதங்களின் சேவை அமைப்புகளுக்கு நேர் மாறாக, எந்த பிரதிபலனும் பாராமல், வலதுகை கொடுப்பது இடது கைக்கு தெரியாத வகையில், எந்தக் கட்டணமுமின்றி, எந்த நிபந்தனையுமின்றி, எந்த உள்நோக்கமும் இன்றி சேவை செய்து வருகின்றன, சாயி சேவா சமிதி மருத்துவமனைகள்.


பல லட்சம் செலவாகும் சிக்கலான அறுவை சிகிச்சைகள் முதற்கொண்டு சாதாரண காய்ச்சல் வரை இலவச சிகிச்சை அளிப்பது சாயி மருத்துவமனைகளின் தனிச்சிறப்பு. அநேகமாக உலகில் வேறு எங்கும் இத்தகைய முற்றிலும் இலவச சேவை (அரசு மருத்துவமனைகளில் கூட) கிடையாது என்றே சொல்லலாம். இதிலும் சிபாரிசு, பிரபலங்களுக்கு முன்னுரிமை என்ற எந்த சலுகையும் கிடையாது.


முதியோர் காப்பகங்களையும் பசு காப்பகங்களையும் சாயி பக்தர்கள் நடத்துகின்றனர். ஆரம்பப் பள்ளி முதல் உயர்கல்வி வரை பாபாவின் அறக்கட்டளை செயல்பாடாத கல்வித்துறையே இல்லை எனலாம். குழந்தைகளிடையே தேசபக்தியையும் தெய்வ பக்தியையும் வளர்க்க பாபா உருவாக்கிய 'பால விகாஸ்' அமைப்பு இளைய தலைமுறைகளிடையே நன்னெறிகளை வளர்க்கிறது. உதவி தேவைப்பட்டோருக்கும் உதவும் நல்லுள்ளம் கொண்டோருக்கும் ஓர் இணைப்புப் பாலமாகவும் பாபா விளங்கினார். பாபாவின் ஆசியுடன் துவங்கப்பட்ட சேவை அமைப்புகள் ஏராளம். அதில் பலனடைந்தோர் பலகோடி.


***


கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடகா மாநிலம், மங்களூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத பிரதிநிதி சபா நடைபெற்றது. அதன் முடிவில், புட்டபர்த்தி சென்று சாயிபாபாவை சந்தித்து ஆசி பெற சங்கத்தின் தலைவர்கள் திட்டமிட்டனர். அதன்படி புட்டபர்த்தி சென்ற சங்கத்தின் அகில பாரத அதிகாரிகள் அனைவருக்கும் பிரத்யேக சந்திப்புடன் அருளாசி வழங்கினார், பாபா. அந்த சந்திப்பின்போது நாட்டைப் பற்றிய கவலைகளைப் பகிர்ந்து கொண்டார் பாபா.

விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் மீது பாபாவுக்கு அலாதி பிரியமுண்டு. பல முக்கியமான விஷயங்களில் சிங்கால் பாபாவின் வழிகாட்டுதல்களைப் பெற்றிருக்கிறார். சிங்கால் ஒருமுறை கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை அறிந்த பாபா, சிங்கால் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கே தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்; அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடமும் ஆலோசனை வழங்கினார். பாபாவின் அன்பை வெளிப்படுத்தும் இதுபோன்ற பல தனிப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பல உண்டு.


சத்ய சாய்பாபாவின் மதம் அன்பு மட்டுமே. அது பாரதத்தின் சனாதன தர்மத்திலிருந்து திரட்டப்பட்ட ஞானத்தால் விளைந்தது. அவர் ஒருபோதும் தனது பிற மத பக்தர்களை இந்து மதத்திற்கு மாற்ற முயலவில்லை. அதனால் தான் உலகம் முழுவதிலுமிருந்து பல கோடி பக்தர்கள்- மதத் தளைகளை மீறி - அவரை நாடி வந்தனர். ஆயினும் தனது பக்தர்களுக்கு பாபா அருளிய பொன்மொழி நாடு, மதம், மொழி ஆகியவற்றில் பிடிப்புடன் இருக்குமாறு வழிகாட்டுகிறது. சாயி சமிதி நடத்திய மாணவர் விடுதியில் படித்த மாணவர்களிடம் பேசிய பாபா, ''படிப்பில் மட்டுமின்றி நமது நாடு, மொழி, மதம் மீதும் பற்றும் மரியாதையும் கொள்வது அவசியம். அதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்கும்'' என்றார்.

குருட்டுத்தனமான மதவெறி, மொழிவெறியைக் கண்டித்த பாபா, அதே சமயம் பாரம்பரியம் மீதான பற்று அவசியம் என்பதையும் தனது உபதேசங்களில் வலியுறுத்தினார். ''அனைவரையும் நேசியுங்கள்; அனைவருக்கும் சேவை செய்யுங்கள்; எல்லோருக்கும் உதவுங்கள்; எவரையும் வெறுக்காதீர்கள்'' என்பதே பாபாவின் பிரதான உபதேசம். இந்த பரந்த மனப்பான்மையே அரசியல் வேறுபாடுகளை மீறி நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களையும் அவரிடம் ஈர்த்தது.


***


நாட்டில் சுனாமி, வெள்ளச்சேதம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் தாக்கிய காலங்களில் சாயி அமைதியின் சேவை அளப்பரியது. மறுசீரமைப்புப் பணிகளில் அரசு ஈடுபடுவதற்கு முன்னதாகவே பாபாவின் அறக்கட்டளை அங்கு ஈடுபடுவது வழக்கமாகவே இருந்து வருகிறது. ஆந்திராவின் அனந்தப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கும் தமிழகத்தின் சென்னைக்கும் குடிநீர் அளித்த பாபாவின் சேவை பெரிதாகப் பேசப்படுகிறது.


உண்மையில் இவற்றைவிட பல ஆயிரம் மடங்கு அதிகமான சேவைப்பணிகளை சாய்பாபா பக்தர்கள் செய்து வருகிறார்கள். வனவாசி மக்களின் மேம்பாட்டிற்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காகவும் ஆரவாரமின்றி பணி புரியும் ஆயிரக் கணக்கான பாபா பக்தர்கள் உண்டு. பாபாவின் பக்தர்கள் தங்கள் இயல்பான நடைமுறையால் தீண்டாமையை ஒழித்திருக்கிறார்கள். பாபாவின் பக்தர்களிடையே எந்த அடிப்படையிலும் ஏற்றத் தாழ்வுகளே இல்லை.

மானிட வாழ்வின் பயன் மானுடம் பயனுற வாழ வைப்பதே. இது பாரதத்தில் பிறந்த அனைத்து மகான்களின் அமுத மொழி. அனைவரையும் இறைவனின் சொரூபமாக உணரும் ஆற்றல் அத்வைத சித்தாந்தத்தால் விளைவது. அதனையே பாபா பிரசாரம் செய்தார். தனது சத்யசாயி சேவா சமிதியின் இலச்சினையில் பல மதங்களின் சின்னங்களை இடம்பெறச் செய்த பாபா, அன்பே சமயங்களின் அடிநாதம் என்பதை வெளிப்படுத்தினார்.

மூத்தோரையும் நீத்தாரையும் வழிபடுவது நமது மரபு. ஆன்மிக அருளாளர்களை வணங்குவதும் நமது மரபு. அந்த மரபில் சாய்பாபாவையும் பகவானாக வழிபடுகின்றனர், அவரது பக்தர்கள். அவர்களைப் பொறுத்தவரை, பாபா நித்யவாசமாக அவர்களது மனத்தில் இருந்து வழிகாட்டுவார். ஆன்மாவுக்கு அழிவில்லை; பாபாவின் பிரேமைகளுக்கும் அளவில்லை.

--------------------------------------------

குறிப்பு: சாய்பாபா மகா சமாதியான தினம்: 24.04.2011

விஜயபாரதம் (13.05.2011)

.