செவ்வாய், நவம்பர் 02, 2010

மக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்...

சர்க்கஸில் கோமாளிக் கூத்துகள் கண்டிருப்போம். அவற்றை எல்லாம் விஞ்சிவிட்டன கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியலும் அங்கு நடத்தப்படும் ஆட்சிக்கவிழ்ப்பு நாடகங்களும். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த தேவே கவுடாவின் கட்சியும் காங்கிரசும் திரைமறைவில் நடத்திய சதிகளைக் கைவிட்டுவிட்டு, நேரடியாகவே களமிறங்கி நடத்திய கூத்துக்கள் நமது மக்களாட்சி முறையின் அவலங்களை வெளிச்சம் போட்டன. அவற்றை கவுடா பாணியிலேயே முறியடிக்க எடியூரப்பா நடத்திய எதிர்வினைகளும் கண்டிப்பாக பாராட்டத் தக்கவை அல்ல.

அக்டோபர் முதல் வாரத்திலிருந்தே கர்நாடகா அரசியல் நிலவரம் சரியில்லை. முதல்வர் எடியூரப்பா மீதான அதிருப்தியில் இருந்த 14 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், ஆட்சியை ஆதரித்த 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திடீரென மாயமானார்கள். உடனே மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க. பலவகைகளில் முயன்றது.

ஒருவழியாக, அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ரேணுகாசார்யாவைத் தொடர்பு கொண்ட கட்சி நிர்வாகிகள் அவரது கோரிக்கைகளை கேட்டனர். ரேணுகாசார்யாவோ எடியூரப்பா பதவி விலகாமல் சமரசம் சாத்தியமில்லை என்றார். அப்போதுதான், கவுடா கட்சி ஆதரவில் சென்னை ஓட்டலில் அதிருப்தியாளர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் எடியூரப்பா ஆட்சிக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், அதிருப்தியாளர் குழுவில் இருந்த இரு அமைச்சர்களை பதவிநீக்கம் செய்தார் எடியூரப்பா.

224 பேர் கொண்ட கர்நாடகா சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் (சுயேச்சைகள் உள்பட) 123 ஆக இருந்தது. இதில் 19 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதால் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனிடையே அதிருப்தி பா.ஜ.க.வினரை மதச்சார்பற்ற ஜனதாதளமே இயக்குவது வெளிப்படையாகத் தெரிய வந்தது. சென்னை, மகாபலிபுரம், கோவா என்று பல இடங்களுக்கு அதிருப்தி பா.ஜ.க.வினரை அழைத்துச் சென்ற ம.ஜ.தளம் கட்சியினர், அவர்களுக்கு தேவையான அனைத்து உல்லாச ஏற்பாடுகளையும் செய்தனர். கோவாவில் அவர்களை நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கோவா காங்கிரஸ் தலைவர்களும் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.களுக்கு விலை (ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ. 50 கோடி) நிர்ணயிக்கப்பட்டது. அதன் முடிவில், அதிருப்தியாளர்கள் இருவர் பெங்களூர் சென்று, ஆளுநர் பரத்வாஜிடம், அதரவு வாபஸ் கடிதத்தை அளித்தனர்.

இதற்காகவே காத்திருந்த ஆளுநர், கர்நாடகா சட்டசபையில் அக். 11 ம் தேதிக்குள் பலத்தை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பத்து நாட்கள் முன்னதாகவே ஆளுநர் மாளிகையில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டி இருந்தனர். இதுகுறித்த பத்திரிகை செய்திகளை இவர்கள் மூவரும் மறுக்கவே இல்லை.

ஆளுநரின் உத்தரவை அடுத்து எடியூரப்பாவும் அதிரடியில் இறங்கினார். தனது அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற அனைவருக்கும் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பிய அவர், கட்சித்தாவல் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டசபை சபாநாயகர் போப்பையாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே சபாநாயகருக்கு பிரத்யேகக் கடிதம் எழுதிய ஆளுநர், ''சட்டசபையில் யாரையும் பதவிநீக்கம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்'' என்று எச்சரித்தார். இது சபாநாயகரின் உரிமையில் தலையிடுவதாகும் என்று பா.ஜ.க.வும் சபாநாயகரும் கண்டித்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்க ஒப்புக்கொள்ளாத அமைச்சர் ரேணுகாசார்யாவும் , இரு எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க.வுக்கு திரும்பினர். மற்றவர்கள் வேறெங்கோ அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரையும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேரையும், ஆளுநரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், தனது 'வானளாவிய அதிகாரத்தைப்' பயன்படுத்தி, கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர் போப்பையா (அக். 9 ).

இதன்மூலம், கர்நாடகா சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 208 ஆகக் குறைந்தது. இதில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை 106 என்பதால் நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி உறுதியானது. அக்.10ம் தேதி நடந்த குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா ஆட்சி தப்பியது. அதற்கு முன்னதாக பதவி நீக்கம் செய்யப்பட எம்.எல்.ஏக்களும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் நடத்திய ரகளையால் மாநிலத்தின் மானம் கப்பலேறியது.

மீனுக்கு காத்திருந்த கொக்கு போல, உடனடியாக கர்நாடகா அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். ஆளுநர் பரத்வாஜ். ஆனால், எதிர்க்கட்சியினரின் பித்தலாட்டம் மாநிலத்தில் பரவலாக வெளிப்பட்டிருந்த நிலையில் எடியூரப்பா ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு தயங்கியது. தவிர, பதவிநீக்கம் செய்யப்பட 16 எம்.எல்.ஏக்களும் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பைப் பார்த்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு பொறுமை காத்தது.

இதனிடையே மத்திய அரசின் கட்டளையை அடுத்து, மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை 'ஓட்டெடுப்பு முறையில்' நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார். அதை ஏற்று, அக். 13ல் மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா. அதற்குள் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சியினருக்கு, வழக்கு விசாரணையை அக். 18க்கு ஒத்திவைத்து, முகத்தில் கரி பூசியது உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் அளிக்கப்படும் தீர்ப்பு, எடியூரப்பா அரசுக்கு சோதனையாகவும் இருக்கலாம். நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பிறகே கட்சித்தாவல் சட்டம் பாய முடியும் என்பது காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் வாதம். ஆனால், யாரையும் பதவிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உரிமை உள்ளது என்கிறது பா.ஜ.க.

பத்து நாட்களுக்கு மேலாக நாட்டு மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த கட்சித்தாவல் நாடகங்களுக்காகவே சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எடியூரப்பா நிலைப்பாடு. இரண்டு தரப்பினரும் தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் சிக்கலான விஷயம், 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் பற்றியது அல்ல. அரசுக்கு ஆதரவளித்த 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் பதவி நீக்கியது நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்படலாம். அப்போது, மூன்றாவது முறையாக சட்டசபையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டியிருக்கலாம். அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டார் எடியூரப்பா.

ஏற்கனவே நூலிழை பெரும்பான்மையில் ஆட்சி அமைத்த எடியூரப்பா 'ஆபரேசன் லோட்டஸ்' என்ற அதிரடித் திட்டம் மூலமாக, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரை பதவி விலகச் செய்து அவர்களை பா.ஜ.க. வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, பெரும்பான்மையை உயர்த்திக் கொண்டார். அதே 'ஆபரேசன் லோட்டஸ்' திட்டத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அரங்கேற்றினார் எடி. இதை காங்கிரஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தினசரி ஒரு எம்.எல்.ஏ. வீதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பதவிவிலகல் நிகழவே, காங்கிரஸ் பதறியது. தங்களால் மட்டுமே எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியும் என்று இறுமாந்திருந்த காங்கிரஸ், குமாரசாமி குழுவுக்கு இது சரியான பதிலடிதான் என்பதில் சந்தேகமில்லை. இதன்மூலமாக, காங்கிரஸ் தரப்பில் மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்தது.

திகைப்பில் ஆழ்ந்த காங்கிரஸ், எடியூரப்பா ஆட்சியை நீக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் அட்டூழியத்தை அவர்கள் பாணியிலேயே கிள்ளும் எடியூரப்பாவுக்கு வலுத்துள்ள மக்கள் ஆதரவைக் கண்டு மத்திய அரசு மிரண்டது. ஏற்கனவே தவறான அரசியல் நடவடிக்கைகளால் காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அமைதி குலைந்திருக்கும் நிலையில், கர்நாடகாவிலும் கைவைத்து பாடம் கற்க பிரதமர் மன்மோகன் சிங் தயாரில்லை. தேன்கூட்டைக் கலைத்தவன் கதை ஆகிவிடக் கூடாது என்று மத்திய அரசு மௌனம் காத்தது. தவிர உயர்நீதிமன்ற விசாரணையில் வெளியாகும் தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கும் என்று மத்திய அரசு கருதியது.

இந்நிலையில் அக். 18ல் உயர்நீதிமன்ற பென்ச் அளித்த தீர்ப்பில் இரு நீதிபதிகளும் எதிரெதிராக தீர்ப்பளித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால், பதவிநீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் நிலை குறித்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. எடியூரப்பா மீதான் அதிருப்தியால் எதிரணிக்கு விசுவாசமாக மாறிய பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு ஆதரவாகத் திரும்புவதாக அறிவித்தனர். அதை கட்சி நிராகரித்தது.

நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் கரம் வலுப்பெற்று வந்த நிலையில், பா.ஜ.க.வின் தொடர் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க, வருமான வரித் துறையை ஏவியது மத்திய அரசு. பா.ஜ.க. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், ஸ்ரீராமுலு மற்றும் சில எம்.எல்.ஏக்களின் வீடுகளில் அக். 26ல் திடீர் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறையினரை சொல்ல வைத்தது. ஆனால், இதுவரை சோதனைக்கு உள்ளானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்தே அந்த சோதனை, பா.ஜ.க.வை மிரட்டவே நடத்தப்பட்டது உறுதியாகிறது. இருப்பினும், இந்த சோதனையின் விளைவாக 'ஆபரேசன் லோட்டஸ்' திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.

வருமான வரித் துறையை சொந்த லாபங்களுக்காக காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவது புதிதல்ல. வழிக்கு வராத கூட்டணிக் கட்சியினரைக் கட்டுப்படுத்தவும், எல்லை மீறும் சொந்தக் கட்சியினரைக் கட்டுக்குள் வைக்கவும், அரசுக்கு எதிரான அதிகாரிகளை கேவலப்படுத்தவும், பிரபலங்களை கட்சியில் சேருமாறு நிர்பந்திக்கவும், வருமான வரித் துறையை வேட்டை நாயாக காங்கிரஸ் பயன்படுத்தி வந்துள்ளது. அண்மையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த பல்லாயிரம் கோடி ஊழல் அம்பலமானவுடன், குற்றவாளிகளை விட்டுவிட்டு, 20 லட்சம் மதிப்பிலான பணியைச் செய்த பா.ஜ.க. பிரமுகர் சுதான்ஷு மிட்டல் வீட்டில் சோதனை நடத்தி பிரச்னையை திசை திருப்பியது மத்திய அரசு. அதே நாடகத்தை கர்நாடகத்திலும் அரங்கேற்றினார், ‘மிஸ்டர் கிளீன்’ மன்மோகன்.

இதனிடையே, தற்போது (அக். 29 ), பெங்களூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கர்நாடகா அரசைக் கவிழ்க்க சதி செய்தவர்களுக்கு சாட்டையடியாக வந்துள்ளது. சட்டசபைக்கு வெளியே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதைக் கொண்டு அவர்களை பதவியில் இருந்து சபாநாயகர் நீக்கியது சரியே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், எடியூரப்பா அரசு தப்பியுள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக தீர்ப்பு வெளியானாலும் கூட, இனிமேல் ஆட்சி கவிழும் நிலை ஏற்படாது. இந்தத் தீர்ப்பால், தேவே கவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் ஆடிப் போயிருக்கிறார்கள். மத்திய அரசு கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறது. மொத்தத்தில், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை முறியடித்து நாடு முழுவதும் பிரபலம் ஆகியிருக்கிறார் எடியூரப்பா.

ஆயினும், பா.ஜ.க.வின் வெற்றி சற்று நெருடலாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. நமது மக்களாட்சி முறை எவ்வளவு தூரம் சீரழிந்துள்ளது என்பதற்கான சான்றாக கர்நாடகா விளங்குகிறது. நல்லாட்சி நடத்த எண்ணுபவரும் கூட, இந்த சாக்கடை அரசியலில் எதிரிகள் மட்டத்துக்கு தரமிழந்து போரிட வேண்டியிருப்பது காலத்தின் கோலம் தான். சதிகளை சதிகளால் தான் வெல்ல முடியும் என்று எடியூரப்பா நிரூபித்திருக்கிறார். ஆனால், 'ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்க மாட்டேன்' என்று சொன்ன (1998 ) அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கிடைத்த நற்பெயர் எடியூரப்பாவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

எனினும், எதிரிகளின் சதிக்கு எதிராக நேர்மைத் தத்துவம் பேசிக் கொண்டிருந்திருந்தால், இந்நேரம் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்து பதவிப் பித்தர் குமாரசாமியின் ஆட்சியோ, மத்திய அரசின் கைப்பாவையான பரத்வாஜின் ஆட்சியோ அங்கு வந்திருக்கும். அப்போது, ஆட்சியைக் காக்கத் துப்பில்லாத கட்சி என்று ஊடகங்கள் புழுதி வாரித் தூற்றி இருக்கும். மக்களும் கூட, ஆட்சியைக் காக்கும் திறனற்றவர் என்று எடியூரப்பா மீது நம்பிக்கை இழந்திருப்பர். அந்த நிலை வாராமல் எடியூரப்பா காத்திருக்கிறார். பா.ஜ.க.வின் அரசியலில் தூய்மை என்ற தத்துவம் நிலைகொள்ள இன்னும் பல்லாண்டு காலம் பொறுத்திருக்க வேண்டும் என்பதையும் அவரது வெற்றி காட்டி இருக்கிறது.
.
வெற்றி பெற்றவருக்கே உபதேசம் செய்யும் தகுதி வாய்க்கிறது. மகாபாரத்தில் கண்ணன் காட்டிய வழி
, அதர்மத்தை அதன் வழியிலேயே தோற்கடிக்கலாம் என்பது தான். இப்போதைக்கு பா.ஜ.க. கர்நாடகாவில் அதை செய்து காட்டி இருக்கிறது. ஆனால், ராமராஜ்யமே பா.ஜ.க.வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதை இந்நேரத்தில் பா.ஜ.க.வுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
-----------------------------------
நன்றி: விஜயபாரதம் (12.11.2010)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக