சனி, டிசம்பர் 28, 2013

லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2


.....மொத்தத்தில், சட்டப்பூர்வமாக ஒரு கடிவாளச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களின் கருணையற்ற போக்கிற்கு தடைக்கல்லாக லோக்பால் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. எனினும் இதன் வெற்றி, சாமானியரான மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதில் தான் உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டமும் லோக்பால் சட்டமும் இணைகோடுகளாகப் பயணிக்கக் கூடியவை. எனவே, இவற்றை முழுமையாக அறிந்துகொண்டு, தக்க முறையில் பயன்படுத்தும் விழிப்புணர்வுள்ள மக்களால் தான் ஊழலை ஒழிக்க முடியும்.

லோக்பால் சட்டம் வெறும் அலங்காரக் கண்காட்சி அல்ல; அரசு பிரதிநிதிகளின் அகங்காரத்தைத் தடுக்கும் கேடயமாகவும் வாளாகவும் விளங்கும் கூர்மையான ஆயுதம் இது. பலவானின் கரத்தில் தான் ஆயுதம் அர்த்தம் பெறும். எனவே மக்களை விழிப்புணர்வுள்ள பலவான் ஆக்குவதே சமூக மாற்றம் விரும்புவோரின் எதிர்காலக் கடமையாக இருக்கும்...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-------------
விஜயபாரதம் 

செவ்வாய், டிசம்பர் 24, 2013

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1



லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால் சட்டம் குறித்த சில காலவரிசைப்படுத்தப்பட்ட தகவல்கள்…

காண்க: தமிழ் ஹிந்து

திங்கள், டிசம்பர் 16, 2013

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

பெரும் தலைகள் மோதுகின்ற ஒரு களத்தில் சாமானிய மனிதன்
ஒருவன் வெல்ல முடியுமா? முடியும் என்று நிரூபித்திருப்பதால் தான், ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி வெற்றி அனைவராலும் வியந்தோதப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக அனாயச வெற்றி பெற்றிருந்தபோதிலும், அதைச் சாதாரணமாக்கிவிட்டது ஆ.ஆ.கட்சியின் வெற்றி. குறிப்பாக, தலைநகர் தில்லியில் பாஜகவின் ஆட்சி அமையாமல் போனதற்கு ஆ.ஆ.கட்சியின் அரசியல் பிரவேசமே காரணமாகி இருக்கிறது.

எனவே, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியின் பின்புலம், அதன் எதிர்கால விளைவுகள் குறித்து தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி வெற்றி நாட்டிற்கு நல்லதா, ஊழல் மயமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் பாஜகவின் பயணத்தில் ஆ.ஆ.க. என்ன விளைவை ஏற்படுத்தும்? ஊடகங்கள் ஆ.ஆ.க.யைக் கொண்டாட வேறு ஏதேனும் காரண்ங்கள் உள்ளனவா? என்று இப்போது பார்க்கலாம்.

காண்க: தமிழ் ஹிந்து
----------------
விஜயபாரதம் (27.12.2013)

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

வீழும் காங்கிரஸ்! மலர்கிறது தாமரை!






...மொத்தத்தில் இத்தேர்தல்கள், காங்கிரஸ் கட்சியின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளன எனில் மிகையில்லை. பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் காணவே முடியவில்லை. தில்லியில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனாலும் கூட, மூன்று பெரிய மாநிலங்களில் தனது வெற்றியை உறுதிப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் யார் கதாநாயகனாக இருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது பாஜக. 

இனி மாநில வாரியாக தேர்தல் முடிவுகளை சிறிது அலசலாம்....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ்ஹிந்து


-------------
விஜயபாரதம் (20.12.2013)

செவ்வாய், டிசம்பர் 03, 2013

சகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்!



அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாக இடம் பிடித்த செய்திகளைப் பட்டியலிட்டால், அவற்றில் முதலிடம் வகிப்பவை பாலியல் அத்துமீறல்கள் தொடர்பானவையாகவே இருக்கின்றன. குறிப்பாக தெஹல்கா இணையதளத்தின் ஆசிரியர் தருண் தேஜ்பால் (50) தொடர்பான குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
.
‘ஊருக்கெல்லாம் சகுனம் சொன்ன பல்லி, தவிட்டுப் பானையில் விழுந்ததாம் துள்ளி’ என்ற பழமொழியைக் கேட்டிருக்கலாம். அதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் தான் தருண் தேஜ்பால். இவர் இந்தியாவில் ஊழலை ஒழிக்கவந்த புலனாய்வுப் பத்திரிகையாளராக அவதாரம் எடுத்ததே காங்கிரஸ் கட்சிக்காகத் தான். அக்கட்சியின் வாயாடி அமைச்சர் ஒருவரின் மிக நெருங்கிய உறவினர் தான் தருண் தேஜ்பால். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அதற்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தளம் தெஹல்கா.
.
இவர்கள் நன்கொடை தருவதாக விரித்த வலையில் விழுந்து பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன் பதவியும் மரியாதையும் இழந்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான செய்திகளை பொய்களைக் கலந்து உற்பத்தி செய்வதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த தளம் இது. இதன் புலனாய்வு நடவடிக்கைகளால் அஞ்சிய அரசியல்வாதிகள் பலரும் நமக்கெதற்கு வம்பு என்று கும்பிடு போட்டு நகர்ந்துவிடுவது வழக்கம். இந்த அச்சத்தையே மூலதனமாக்கி, மிரட்டல் மற்றும் தரகு மூலமாக பல்லாயிரம் கோடி சம்பாதித்தவர் தேஜ்பால் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
.
என்ன தான் ஊழலை எதிர்த்து முழங்குவதாகக் கூறினாலும், தெஹல்காவின் பார்வை காங்கிரஸ் பக்கம் திரும்பாது. அதனால் தானோ, பாலியல் புகாருக்கு உள்ளான தேஜ்பாலுக்கு காங்கிரஸ் வக்காலத்து வாங்குகிறது!

1980-லிருந்து பத்திரிகையாளராக உள்ள தேஜ்பால், ஆங்கில நாவல் எழுத்தாளராகவும் பிரபலமானவர். 2007-லிலிருந்து தெஹல்கா வார இதழாகவும் வெளிவருகிறது. பத்திரிகை நடத்துபவர்களின் அதிகார மேலாண்மை அனைவரும் அறிந்தது. அதிலும், தேஜ்பால் ஆளும் கட்சியின் இடைத் தரகர் வேறு. வெளிநாட்டு நாகரிகத் தாக்கமும், மேல்மட்டத் தொடர்புகளும் தேஜ்பாலின் அட்டகாசத்திற்கு வித்திட்டுவிட்டன.
.
இவர் கடந்த நவம்பர் 20-ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு (தெஹல்கா நடத்திய நிகழ்ச்சி அது) சென்றபோது, சக பெண் ஊழியர் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி நடந்த ஓட்டலின் லிஃப்டில் சென்றபோது பெண் பத்திரிகையாளரை உள்ளே தள்ளி பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.
.
அதுகுறித்து அந்தப் பெண், தனது பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரியிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. தலைநகரில் தேஜ்பாலை அறிந்தவர்கள் எவருமே இத்தகைய புகாரால் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். இவ்வாறு சக பெண் பத்திரிகையாளர்களிடம் அத்து மீறுவது அவரது இயல்பான வழக்கம். இதுவரை யாரும் இதை எதிர்க்கவில்லை. இப்போது ஒரு பெண் பத்திரிகையாளர் துணிந்துவிட்டார். பணியாற்றும் இடத்தில் புகார் செய்தும் பலனில்லாததால், இணையதளத்தில் தனது பிரச்னையை அம்பலப்படுத்தினர் அந்தப் பெண்.
.
அதையடுத்து இப்பிரச்னை பூதாகரமானது. தேசிய மகளிர் ஆணையம், பெண்ணுரிமை அமைப்புகள் போன்றவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவே, தருண் தேஜ்பால் அவசர அவசரமாக விளக்கம் அளித்தார். மதுபோதையில் தான் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டுவிட்டதாகவும், அதற்கு தார்மிகப் பொறுப்பேற்று 6 மாதங்களுக்கு பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.
.
அதாவது அவர் வருத்தம் தெரிவித்தால், உடலாலும் உள்ளத்தாலும் சிறுமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின் பாதிப்பு காணாமல் போய்விடும் என்று எண்னி இருப்பார் போல. அவர் 6 மாதங்களுக்கு ஆசிரியராக இல்லாவிட்டால் அந்த்ப் பெண்னின் ‘பாதிப்பு’ இல்லாமல் போய்விடும். என்ன ஓர் அற்புத விளக்கம்!
.
இதுதான் ஊடக தர்மமா?

இதனிடையே, பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த நிர்பந்தங்களால், சம்பவம் நடைபெற்ற மாநிலமான கோவாவில், தருண் தேஜ்பால் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், கோவா போலீஸாருக்கு ஒத்துழைக்க தேஜ்பால் மறுத்தார். மேலும் கோவா போலீஸாரை மிரட்டவும் செய்தார். சம்பவம் நடைபெற்ற ஓட்டலில் கண்காணிப்புக் காமிராக்களில் இருந்த காட்சிகளில் தேஜ்பாலின் அத்துமீறல்கள் பதிவாகி இருந்தன. அதை அறிந்த பிறகே தேஜ்பாலின் கொட்டம் அடங்கியது. இதனிடையே கைதாவதிலிருந்து முன்ஜாமின் பெற அவர் முயன்றார்.
.
கோவாவில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் (நவம்பர் 30) நடைபெற்றபோது, புகார் அளித்த பெண்ணின் பெயரை தேஜ்பாலின் வழக்குரைஞர் வெளிப்படுத்தினார்.  பாலியல் புகார் கூறுபவரின் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்பதை மீறி இவ்வாறு நடந்துகொண்டதை நீதிபதியே கண்டித்திருக்கிறார். சக ஊழியரை போதையில் அணுகியபோதே தேஜ்பாலின் தொழில்தர்மம் சந்தி சிரித்துவிட்டது. அவரது பெயரைக் கூறி மேலும் சிறுமைப்படுத்த முயன்றபோது, தேஜ்பாலின் ஊடக தர்மமும் நீதிமன்றத்தில் அம்பலமானது.
.
இப்போது தேஜ்பால் மீது புகார் கூறிய பெண் வேலையை இழந்திருக்கிறார். அவரை வேறெந்த ஊடகமும் வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயங்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதனால் தான் பல பெண்கள் பணியிடங்களில் நிகழும் அத்துமீறல்களை சகித்துக் கொண்டு விரக்தியாக காலம் தள்ளுகிறார்கள்.
.
நீதிமன்றத்தில் வாதிட்ட தேஜ்பாலின் வழக்குரைஞர், தேஜ்பால் அத்துமீறினாலும் பலவந்தப்படுத்தவில்லை என்று கூறி இருக்கிறார். இவரது கண்ணோட்ட்த்தில் பலவந்தம் என்றால் என்ன என்று புலப்படவில்லை. ஆனால், புகார் கூறிய பெண் மிகவும் தைரியமாக தேஜ்பாலின் நடவடிக்கைகளை துணிச்சலான அறிக்கை மூலமாக (நவம்பர் 29) அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இதோ அவரது அறிக்கை:

தேஜ்பாலின் அத்துமீறல் விவகாரத்தில் எனக்கு பரந்துபட்ட அளவில் ஆதரவு கிடைப்பது ஆறுதளிக்கிறது. அதே நேரத்தில் என்னுடைய புகார் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சதியாக்கப்படுவது ஆழ்ந்த கவலைக்குரியதாகும்.

பெண்கள் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் பெண்ணிய அரசியல் என்பது அரசியல் கட்சிகளால் பாதிக்கப்படுகிறது. இது பெண்கள் மீதான வன்முறை, பெண்களின் அதிகாரம் தொடர்பான பிரச்னை. இதில் அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
தருண் தேஜ்பால் என்னை பலாத்காரம் செய்வதற்கு முன்பும் பின்புமான என்னுடைய செயல்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகளின் விமர்சகர்கள் பலரும் பலவாறு கேள்வி எழுப்புகின்றனர். பலாத்காரம் என்பதற்கு சட்டம் எத்தகைய வரையறைகளைக் கொடுத்திருக்கிற தோ, அதையெல்லாம் என்னிடம் தேஜ்பால் செய்தார்.

நான் என்னுடைய தாயார் ஒருவரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குரலை எழுப்பி இருக்கிறேன். என்னுடைய தந்தையார் பல ஆண்டுகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

தேஜ்பாலை போல சொத்தை, செல்வாக்கை, மரியாதையை பாதுகாக்க நான் போராடவில்லை. இது என்னுடைய உடல். எனக்கு மட்டுமே சொந்தமானது. நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் என்ற பெயரால் எவரும் என் உடலில் விளையாட அனுமதிக்க முடியாது. நான் புகார் தெரிவித்திருப்பதால் இழந்திருப்பது பணியை மட்டுமல்ல. என்னுடைய நிதிப் பாதுகாப்பையும் கூடத் தான்.
இந்தப் போராட்டம் வெகு சுலபமானது அல்ல என்பதை நான் அறிவேன். என்னுடைய வாழ்க்கையில், பெண்கள் தங்களைச் சுற்றிய பாலியல் கொடுமைகளுக்கு எதிராக உரத்து குரல் கொடுக்க வேண்டும் என்றே எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். நமது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நமது பலத்தை சீர்குலைத்து அதையே நமக்கு எதிரான பலவீனமாக்குவார்கள். இந்த விஷயத்தின் நான் அமைதியாக இருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் டெஹல்கா நிறுவனத்தின் மரியாதை பாதிக்கப்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது. ஆனால் இது,  வார இதழின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவரின் பாலியல் வன்முறையால்தானே தவிர பணியாளராகிய என்னால் அல்ல. அனைவரது ஆதரவுக்கும் நன்றி.

இவ்வாறு அப்பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

கயவன் தேஜ்பாலுக்கு மாணவர்கள் எதிர்ப்பு

இந்நிலையில் தெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரியும் தனது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை உடனே விசாரிக்காமல் காலம் தாழ்த்தியதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்கிறார். தெஹல்கா நிறுவனத்தின் சில பங்குதாரர்களும் விலகி உள்ளனர்.  மொத்தத்தில், சதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஓர் ஊடகம், தனது தவறுகளாலேயே தனது புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது.
.
பாலியல் புகாரில் தேஜ்பால் தப்பிக்க முடியாது என்பது தெரிந்தவுடன், பாஜக அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாக தேஜ்பால் தரப்பினரும் அவரை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களும் புலம்பி வருகின்றனர். குஜராத் முதல்வர் மோடியை இளம்பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமான அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி இதைச் சொல்வது தான் வேடிக்கை. குஜராத்தில் அந்த இளம்பெண்ணின் தந்தை கேட்டுக் கொண்டதற்காக போலீஸ் பாதுகாப்பு அளித்த மோடியை வில்லனாக சித்தரிப்பவர்கள், கையும் களவுமாக சிக்கியுள்ள் தேஜ்பாலைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

தேஜ்பால் தரப்பினரின் திசைதிருப்பும் பிரசாரங்களை கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (பாஜக) மறுத்திருக்கிறார். ‘தருண் தேஜ்பால் தொடர்பான வழக்கில் அரசியல் நிர்பந்தம் ஏதும் இல்லை. இந்த வழக்கின் போக்கை தாம் கண்காணிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவான பிறகே கோவா போலீஸார் என்னிமிடம் வழக்கின் விவரங்களை தெரிவித்தனர்’ என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
.
மெல்ல சிறு அவல் கிடைத்தாலும் ஊதிப் பெரிதாக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், தேஜ்பால் விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. இதுபற்றியெல்லாம் ’24 மணிநேர விவாதங்கள்’ நடத்தப்படக் கூடாதா? நடத்தினால், கண்னாடி வீட்டுக்குள் இருந்து கல் வீசுவதாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வா?
.
இப்போது தேஜ்பால் கைதாகி இருக்கிறார். லாக் அப் அறையில் போலீஸ் விசாரணையில் கதறி அழுகிறாராம் ‘ஊழலுக்கு எதிரான’ இந்த ஹீரோ! அவருக்கு இப்போதும் ஊடக உலகில் சிலர் ஒத்தாசை செய்கிறார்கள். எல்லாமே மோடியின் சதியாம். மோடியா, உடன் பணிபுரியும் மகள் வயதுடைய பெண்ணை (பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பாலின் மகளின் நெருங்கிய தோழி வேறு! தேஜ்பாலின் அக்குறும்புகளை அவரது மகளிடமே சொல்லி அழுதிருக்கிறார் அந்த பெண் பத்திரிகையாளர்) பலவந்தம் செய்யச் சொன்னார்? 
.
தேஜ்பால் இந்த வழக்கில் அவர் செய்த பாவத்திற்குரிய தண்டனை பெறட்டும். அதற்கு பல்லாண்டுகள் ஆகலாம். எனினும், இவ்விவகாரத்தில் துணிந்து புகார் செய்த அந்தப் பெண் போற்றுதலுக்குரியவர். அவரது எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, நியாயமான ஊடகங்கள் உதவ வேண்டும்.
.
இவ்விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஊடகத் துறையில் பெண்கள் சில சமரசங்களைச் செய்தால் தான் முன்னேற முடியும் என்ற நிலை இருப்பது உண்மையா? அவ்வாறு இருக்குமானால், ஊருக்கு உபதேசம் செய்ய தார்மிக உரிமை ஊடகங்களுக்கு உண்டா?
மேலைநாட்டு மோகமும் மது பரிமாறும் விருந்துகளும் நமது ஊடகத் துறையைப் பற்றியிருக்கும் சாபக் கேடுகள் என்பதை நமது ஊடக நண்பர்கள் இனியேனும் உணர்ந்து தவிர்ப்பார்களா?
.
இக்கேள்விகளுக்கு நியாயமான பதில் அளிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தேஜ்பால் விவகாரம் நம் கண்ணுக்குத் தெரியவந்துள்ள ஒரு பிரச்னை மட்டுமே. ஊடகங்கள் சுயபரிசீலனை செய்தாக வேண்டிய விஷயம் இது.

காண்க: தமிழ் ஹிந்து 
------------
விஜயபாரதம் (0612.2013)