வியாழன், ஜூன் 30, 2011

கண்ணை நிரப்பும் புழுதிக்காற்று

காற்றின் திசை மாறுவது பருவகாலம் மாறுவதைக் குறிக்கிறது. தென்மேற்கு பருவக் காற்றுக்கும் வட கிழக்கு பருவக் காற்றுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் வீசுபவை. புவியின் மாற்றங்களில் இவ்விரண்டு காற்றுக்களின் மாற்றங்களில் பெரும் பங்குண்டு.

அரசியலிலும் காற்றின் திசைகள் அடிக்கடி மாறுவதுண்டு . எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வினோதமான பழக்கம் அரசியலில் மட்டுமே உண்டு. கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளைவிட, நட்பு வேடம் போட்டு கழுத்தறுக்கும் கயவர்களைவிட, கையில் கத்தி வைத்திருக்கும் எதிரியே மேலானவன் என்ற புரிந்துணர்வே இந்த திசை மாற்றங்களுக்கு காரணம்.

பருவக்காற்றுகள் மாறும்போது இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போலவே, அரசியலிலும் காற்றின் திசைகள் மாறுவது பல மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது. பல உதாரணங்கள் சொல்லலாம். 1998 ல் வாஜ்பாய் தலைமயிலான தே.ஜ.கூட்டணியில் இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா, அவரது கோரிக்கைகள் (திமுக அரசை கலைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன?) நிறைவேறாத கோபத்தில் சோனியாவுடன் தேநீர் விருந்தில் பங்கேற்றார். அதன் விளைவாக வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஆனால், அதுவரை கீரியும் பாம்புமாக இருந்த திமுகவும் பாஜகவும் கைகோர்க்க அதுவே வழி கோலியது.

திமுக- பாஜக கூட்டணி அடுத்து ஆறு ஆண்டுகள் நீடித்தது. கருணாநிதியின் மனசாட்சியான முரசொலி மாறனின் மரணத்துடன் இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது. மாறனின் வாரிசுக்கு பதவி கிடைக்காத கோபத்தில், இந்தியாவைக் காக்க வந்த இத்தாலியக் குலவிளக்குடன் கைகோர்த்தார் கருணாநிதி. அடுத்த தேர்தலில் தே.ஜ.கூட்டணி ஆட்சியை இழந்தது; காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. எதிர்பார்த்தது போலவே அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்தன.

ஆயினும் இக்கூட்டணிக்கு முந்தைய மவுசு கிடைக்கவில்லை. விரைவில் இக்கூட்டணி புளித்துப் போய்விட்டது. சந்தில் சிந்து பாடிய இடதுசாரிகளால் மூன்றாவது அணி அமைக்கப்பட்டதால், மீண்டும் ஆட்சிக்கு வரும் பாஜகவின் கனவு பொசுங்கிப்போனது. இதிலும் இடதுசாரிகள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளே காங்கிரஸ் ஆட்சிக்கு வர உதவின. காங்கிரசை விட ஆபத்தானது பாஜக என்ற இடதுசாரிக் கட்சிகளின் முடிவு, அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதாக அமைந்தன.

2004 ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், அடுத்த தேர்தலிலும் பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. திமுக அப்போது கூட்டணியின் பிரதான தூணாகக் காட்சியளித்தது. இடதுசாரிகள் பலமிழக்கத் துவங்கிய நேரம் அது. ஆனால், முந்தய ஆட்சியில் திமுகவின் அமைச்சர் மாறனும் ராசாவும் செய்த திருவிளையாடல்கள் இப்போது திமுகவுக்கு வினையாக வந்திருக்கின்றன. ராசாவுடன் இணைந்து நர்த்தனமாடி லாபங்களை அடைந்த காங்கிரஸ், இப்போது தன்னை பரிசுத்தவானாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற மேற்பார்வையில் நடக்கும் ஊழல் வழக்குகளால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் சுயரூபங்கள் அம்பலமாகிவரும் வேளையில், ஊழல்களுக்கு ராசா, கல்மாடி, கனிமொழி போன்றவர்களை பலிகடா ஆக்கிவிட்டு, தப்பிக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, காங்கிரசின் திட்டங்களை உணர்ந்துகொண்ட திமுக தலைவர் கருணாநிதி 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டுக் கொள்ளை அடித்தபோது பாசமாக இருந்த சோனியா அண்ட் கோ, இப்போது காலை வாரிவிடுவது கண்டு விக்கித்துப் போயுள்ள கருணாநிதிக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஏற்பட்ட அவப்பெயரால் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துவிட்ட திமுகவை பல அதிகார அத்துமீறல் வழக்குகள் துரத்துகின்றன. மத்தியிலும் திமுகவை யாரும் சட்டை செய்வதாகவே தெரியவில்லை. இருமுறை தில்லி போனபோதும் காங்கிரஸ் சார்பில் அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்படவில்லை. பாராமுகத்தின் மோசமான அனுபவத்தைப் பெற்றுவிட்ட திமுக, இப்போது காங்கிரசின் காலை வாரும் பணியைத் துவங்கிவிட்டது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் தில்லி சென்றபோது பிரதமர் இல்லத்திலிருந்து விசேஷ வாகனம் அனுப்பிய மன்மோகன் சிங், கூட்டணிக் கட்சித் தலைவரான கருணாநிதி தில்லி சென்றபோது கண்டுகொள்ளவே இல்லை. தனது 70 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இத்தகைய அவமதிப்பை கருணாநிதி சந்திப்பது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும். ஜெயலலிதாவும் மத்திய அரசுடன் இணக்கமாக நடக்கப்போவதாகக் கூறி, கருணாநிதியின் நெஞ்சில் அமிலம் வார்த்தார்.

இப்போதைக்கு காங்கிரஸ்- அதிமுக கூட்டணி அமையாவிட்டாலும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக தானாகவே வெளியேறும் நிலையைத் தான் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கூட்டணியிலிருந்து வலுக்கட்டாயமாக திமுகவை வெளியேற்றுவது, ஊழல் வழக்கில் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டுள்ள காங்கிரசுக்கு பாதகமாக அமையக் கூடும் என்பதால்தான் இந்த முன்னேற்பாட்டில் சோனியா அண்ட் கோ ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவுக்கும் இப்போது வேறெந்த அவசரமும் இல்லை. கூட்டணியை மாற்றியாக வேண்டிய கட்டாயம் அம்மையாருக்கு இல்லை. இப்போது உள்ளாட்சித் தேர்தல் வைத்தாலும் அதீத பலத்துடன் அதிமுக கூட்டணி வெல்லும் சூழலே காணப்படுகிறது. எனவே தற்போதைய கூட்டணியையே ஜெயலலிதா தொடர்கிறார். ஆயினும், ஜென்மவைரியான கருணாநிதியை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் கண்டிப்பாக ஈடுபடுவார். இந்த குறைந்த அழுத்தத் தாழ்வு மண்டலம் எந்த திசை நோக்கியும் எந்நேரமும் நகரலாம். அரசியல் சூறாவளிகளை முன்கூட்டியே அவதானித்தல் சாத்தியமில்லை.

எனவே தான், 'லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் உட்படுத்த வேண்டும்' என்று கூறி காங்கிரஸ் கட்சியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார் கருணாநிதி. அதற்கு பதிலடியாக 'பிரதமரை லோக்பால் சட்டத்தில் சேர்க்கக் கூடாது' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஜெயலலிதா.

அடுத்து, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை அறிக்கையை கூடுதலான விசாரணை தகவல்களுடன் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கலாம் என்று கூறிய திமுக பிரதிநிதியைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது காங்கிரஸ். என்ன நடந்ததோ தெரியவில்லை, இவ்வாறு குரல் கொடுத்த திமுக எம்பி ஆதிசங்கர், மறுநாள், 'காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடே திமுகவின் நிலைப்பாடு; பத்திரிகைகள் எனது கருத்தை தவறாக பிரசுரம் செய்துவிட்டன' என்று கூறி இருக்கிறார். மொத்தத்தில் திமுக குழம்பிப் போயிருப்பது தெளிவாகவே தெரிகிறது.

சென்ற முறை நடந்த பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் திமுக, பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டு தகராறு செய்து குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷியை அவமதித்தது பழைய கதை. இப்போது பகுஜன் சமாஜும் திமுகவும் சரியான 'யு' வளைவில் திரும்பி இருக்கின்றன. காற்றின் திசைகள் மாறுகின்றன.

திமுகவை பாஜகவால் இப்போதைக்கு அரவணைக்க முடியாது என்பது காங்கிரஸ் கட்சியும் அறிந்ததே. ஊழல் புகாரில் அவப்பெயர் சுமக்கும் திமுகவுடன் குலாவ, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளே தயங்கும் நிலையில், ஊழலுக்கு எதிராக முழங்கிவரும் பாஜக, திமுகவுடன் இணைசேர சாத்தியமில்லை. அதே சமயம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சியின் பிரதானப் பங்களிப்பை திமுகவால் வெளிப்படையாக அம்பலப்படுத்த இயலாத சூழலில், பாஜகவின் உதவி திமுகவுக்கு தேவைப்படலாம். இப்போதே, ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவை மட்டும் பலிகடா ஆக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜக செய்தி தொடர்பாளர்கள் அவ்வப்போது கிண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது தேசிய அளவில் தேர்தல் ஏதும் இல்லாத நிலையில், உடனடியான அரசியல் மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் குறைவு. ஆயினும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்குதல் கொடுப்பது தெளிவாகவே தெரிகிறது. கனிமொழிக்கு தொடர்ந்து நீதிமன்றப் பிணை கிடைக்காத நிலையில், திகார் சிறையில் இன்னொரு திமுக பிரமுகருக்கு மற்றொரு அறை தயாராகிவரும் நிலையில், வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்ற பினாமிகள் மூலமாக காங்கிரசை திமுக தலைவர் விமர்சிக்கலாம். காங்கிரஸ் கட்சியும் இளங்கோவன் போன்றவர்கள் மூலமாக திமுகவின் கசப்பை அதிகரிக்கலாம்.

விரைவில் நிகழ உள்ள மத்திய அமைச்சரவை மாற்றங்களில் திமுகவின் ஆதிக்கம் குறைக்கப்பட இருப்பதாக தலைநகர வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக தயாநிதி மாறனின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியை திமுகவே கண்டுகொண்டுவிட்டது. மாறன் மீதான புகார்களை மாறனே எதிர்கொள்வார் என்ற கருணாநிதியின் பதிலில் பல சூட்சுமங்கள் உள்ளன. தயாநிதி மாறனும் மாறி மாறி சோனியா அண்ட் கோ-வை தில்லியில் சந்தித்தபடியே இருக்கிறார். சி.பி.ஐயின் பிடி இறுகிவரும் நிலையில், உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

தமிழகத்தில் இவ்வாறு அரசியல் காற்று சுழன்று கொண்டிருக்கும் சூழலில், உத்தரப் பிரதேசத்திலும் மாயாவதிக்கு எதிரான அதிருப்தியை வாக்குகளாக்க, முலாயம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அநேகமாக மாயாவதி பாஜக பக்கம் சாயலாம். பாஜக, மாயாவதியிடம் ஏற்கனவே பெற்றுள்ள பாடத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டி இருக்கும்.

மகாராஷ்டிராவில் இந்திய குடியரசுக் கட்சியின் ராமதாஸ் அதவாலே பாஜகவுடன் கைகோர்த்திருக்கிறார். கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்க்க முடியாத காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் அறிக்கை விடுகிறார் ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி பெருகப் பெருக, இந்தக் காட்சிகளில் மாற்றங்கள் வேகமாக அரங்கேறும்.

இப்போதைக்கு காற்றின் திசை மாற்றங்கள் மட்டுமே புலப்படுகின்றன. ஆயினும், காற்றின் திசையையும் திசைவேகத்தையும் அளவிட முடியாத வகையில் புழுதிக்காற்று தான் தென்படுகிறது. இந்தப் புழுதிக் காற்றின் இறுதியில் மழையும் பெய்யலாம். காங்கிரஸ் கட்சியின் சாமர்த்தியத்தைப் பொறுத்து இது வெறும் புழுதிக் காற்றாகவே போய்விடலாம். இந்தக் காற்றின் திசைமாற்றங்களை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஏனெனில் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளாதவன், ஒவ்வொரு பருவகாலத்திலும் ஏக்கத்துடன் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அரசியல் காற்றின் திசைகளைத் தீர்மானிப்பவர்களே அரசியலில் கோலோச்ச முடியும். காற்றின் வாகிற்கு ஏற்ப பாய்மரம் ஏற்றவும் தெரிய வேண்டும்; காற்றின் திசையை மாற்ற வல்ல மந்திரங்களும் அறிந்திருக்க வேண்டும். பாஜக என்னே செய்யப் போகிறது?

நாடு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

.

செவ்வாய், ஜூன் 28, 2011

அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம்திறந்த கடிதம்


மதிப்பிற்குரிய அண்ணா ஹசாரே அவர்களுக்கு,
வணக்கம்.


ஊழலுக்கு எதிரான உங்கள் போராட்டம் நாட்டு மக்களை விழிப்புணர்வடையச் செய்துள்ளது. அதிலும் ‘ஜன லோக்பால்’ சட்டத்தை நிறைவேற்ற நீங்கள் மேற்கொண்டுள்ள தீவிர முயற்சிகள் மத்திய அரசை ஆட்டிப்படைத்ததைக் கண்டபோது பெருமகிழ்வு கொண்டோம். ஆனால்…


இந்த ‘ஆனால்’ என்ற வார்த்தை வந்தாலே, வாக்கியத்தின் பொருள் மாறிவிடுகிறது. ”மாப்பிள்ளை நல்லவர் தான், ஆனால், கொஞ்சம் வக்கிரப்புத்தி உண்டு” என்று சொல்வது எப்படி அபத்தமோ, அப்படி இருக்கிறது, நீங்கள் அடிக்கடி நமது பிரதமர் மன்மோகன் சிங்கைப் பாராட்டுவது. பிரதமர் ஊழல்கறை படியாதவர் என்று காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்வதை ஒத்திருப்பதாகவே உங்கள் கருத்தும் இருப்பதை ஏற்கவே முடியவில்லை....

------------------------------

முழு கடிதமும் காண: தமிழ் ஹிந்து


.

செவ்வாய், ஜூன் 21, 2011

உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்...


பட்ட காலிலேயே படும்... கெட்ட குடியே கெடும் என்ற பழமொழி தான் தி.மு.கவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. திகார் சிறையில் வாடும் கனிமொழியை நினைக்குந்தோறும் பரிதாபமாகத் தான் இருக்கிறது. ஆனால், அதிகார மமதையில் அவரும் திமுக.வினரும் ஆடிய ஆட்டங்களை நினைத்தால், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படுகிறது.


மாநிலத்தில் ஆட்சியும் மத்திய ஆட்சியில் பங்கும் இருந்த காலத்தில் கருணாநிதியின் வாரிசுகள் நிகழ்த்திய அத்துமீறல்களுக்கு அளவில்லை. அவற்றில் ஒன்றுதான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, அரசுக்கு வர வேண்டிய வருவாயில் ஏப்பம் விட்டு, தகுதியற்ற நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகளைத் தாரை வார்த்து அதன் மூலமாக பல்லாயிரம் கோடி லஞ்சமாகப் பெற்ற தி.மு.க.வினர், இன்று அதற்கான பலனைப் பெற்று வருகிறார்கள். ஆ.ராசாவை முன்னிறுத்தி கனிமொழியும் ராசாத்தி அம்மாளும் நிகழ்த்திய ஊழல் அது. இதற்கு முன்னோட்டம் வகுத்துத் தந்தவர் தயாநிதி மாறன். உடன் இருந்து கூட்டுக் கொள்ளை அடித்தவர்கள் சோனியா அண்ட் கோ நிறுவனத்தினர். ஆனால், சிறையில் கம்பி எண்ணுபவர்கள் கனிமொழியும் ராசாவும் மட்டுமே. என்ன கொடுமை இது?...



----------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

நன்றி: விஜயபாரதம் (01.07.2011)

..

வியாழன், ஜூன் 09, 2011

யோகியின் புரட்சிக்குரல்



ஊழலுக்கு எதிராகவும் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்திய முதலைகளின் கறுப்புப் பணத்தை மீட்கவும் உண்ணாவிரதம் நடத்திவரும் யோகா குரு பாபா ராம்தேவ் இப்போது பாரதம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் கவனிக்கப்படும் பிரபலம் ஆகியிருக்கிறார். இவர் நடத்தும் யோகா ஷிபிரங்களில் (முகாம்கள்) கூடும் அன்பர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்திற்கு மேல் இருப்பது வழக்கம். பிரபலங்களின் யோகா குருவுக்கு பிராபல்யம் புதிதல்ல. ஆனால், இப்போது பாரதத்தைக் காக்க புதிய அவதாரம் எடுத்திருப்பது தான் பாபா ராம்தேவின் பெருமையை அதிகப்படுத்தி இருக்கிறது.


ராம்தேவின் பிறப்பும் வளர்ப்பும்:


பாரதத்தின் ஹரியானா மாநிலத்தில், மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலி சயத்பூரில், ராம் நிவாஸ் யாதவுக்கும் குலாபோதேவிக்கும் ஒரு ராமநவமி நாளில் (ஆண்டு தெரியவில்லை) பிறந்த ராம்தேவின் இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ். அவரது வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஹரியானா வட்டார விடுதலைப்போராட்ட வீரர் ராம் பிரசாத் பிஸ்மில், வங்க வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரின் படங்களைப் பார்த்தபடியே தவழ்ந்த ராமகிருஷ்ண யாதவ், சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்தார்.
மாணவனாக இருந்த ராமகிருஷ்ண யாதவ், புரட்சியாளர் ராம் பிரசாத் பிஸ்மில்லின் சுயசரிதத்தைப் படித்தார். அதன்மூலமாக, நாட்டிற்கு தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் அவருக்கு ஏற்பட்டது.


ஆஜத்பஊரில் எட்டாம் வகுப்பு முடித்தவுடன், கான்பூரில் உள்ள ஆர்ஷ குருகுலத்தில் யோகா மற்றும் சமஸ்கிருதம் படிக்க இணைந்தார். அங்கு, ஆச்சார்யா பிராதுமன் வழிகாட்டுதலில் யோகக்கலை பயின்றார். ஆச்சார்யா பல்தேவ்ஜி என்பவரிடம் பாடம் கற்ற ராம் கிருஷ்ண யாதவ், சந்யாசம் பெற முடிவெடுத்தார். நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் துறவே சந்யாசம் ஆகிறது.


அதன்படி, 'சுவாமி ராம்தேவ்' என்ற புதிய நாமத்துடன் சந்யாசம் ஏற்ற ராம கிருஷ்ண யாதவ், அதன்பின் யோகக்கலையை மக்களிடம் கொண்டுசெல்லும் மாபெரும் இயக்கத்தைத் துவங்கினார்.


ஹரியானா மாநிலத்தின் சிந்த் மாவட்டத்தில் கால்வ குருகுலம் அமைத்து சிலகாலம் இலவசமாக யோகா பயிற்சி அளித்து வந்தார் ராம்தேவ். பிறகு ஹரித்வார் சென்ற ராம்தேவ் அங்குள்ள காங்கரி குருகுலத்தில் பழமையான வேதங்களைப் பயின்றார். அங்கு பல ஆண்டுகள் இருந்த ராம்தேவ், மகரிஷி அரவிந்தர் எழுதி, ராம் பிரசாத் பிஸ்மில் ஹிந்தியில் மொழிபெயர்த்திருந்த 'யோக சாதனை' நூலைப் படித்தார். அதில் கிடைத்த உள்ளுணர்வால் உந்தப்பட்ட ராம்தேவ், இமாலயம் சென்று பனிபடர்ந்த குகைகளில் தனிமையாக தியானமும் தவமும் செய்து புத்துணர்வு பெற்றார்.


பிரபல யோகியாக வளர்ச்சி:


இமயத்திலிருந்து திரும்பிய யோகி பாபா ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா துணையுடன் 2003 ல் திவ்ய யோக மந்திர் அறக்கட்டளையைத் துவங்கினார். 'ஆஸ்தா' தொலைகாட்சி அலைவரிசையில் பாபா ராம்தேவ் நிகழ்த்திய யோகா பயிற்சி வகுப்பு அவருக்கு உலகம் முழுவதும் பயிற்சியாளர்களைக் கிடைக்கச் செய்ததது.


மிகக் குறுகிய காலத்திலேயே யோகா குருவாக உருவெடுத்த ராம்தேவ், மாபெரும் யோகா சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இவரது யோகா சாம்ராஜ்யத்தின் மதிப்பு ரூ. 1100 கோடி ரூபாய். இதனை தனது யோகா பயிற்சி, ஆயுர்வேத சிகிச்சை மூலமாகக் கிடைத்த வருவாய் மூலமாகவே சாதித்தார். 'நான் நாட்டு மக்களின் உள்ளத்தையே கொள்ளை அடித்தேன்; நாட்டை அல்ல' என்று தனது அமைப்பின் சொத்து விபரங்களை வெளியிட்டபோது (ஜூன் 9) பாபா ராம்தேவ் குறிப்பிட்டது குறிப்பிடத் தக்கது.


2006 , ஆக. 6 ல், ஹரித்வாரில், அன்றைய துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத்தால், ராம்தேவின் ‘பதஞ்சலி யோக பீடம்’ அறக்கட்டளை துவக்கப்பட்டது. இது பாபா ராம்தேவின் கனவுத் திட்டமாகும். யோகா, ஆயுர்வேதம் ஆகியவற்றில் பயிற்சி, சிகிச்சை, ஆராய்ச்சி செய்வதற்கான நாட்டிலேயே மிகப்பெரிய நிறுவனமாக இதனை உருவாக்குவது அவரது லட்சியமாக இருந்தது. அதை விரைவில் அவர் சாதித்தார்.


இங்கு ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை இலவசம்; வசதி படைத்தவர்கள் குறைந்த கட்டணத்தில் யோகா, ஆயுர்வேதம் இணைந்த சிகிச்சை பெறலாம். நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னைகளுக்கு யோகா மூலம் தீர்வு காண்பதற்கான ஆராய்சிகள் இங்கு நடந்து வருகின்றன.
பதஞ்சலி ஆயுர்வேத கல்லூரி, பதஞ்சலி சிகிச்சாலையா, யோகா கிராமம், கோசாலை, பதஞ்சலி மூலிகை தாவரவியல் பூங்கா, இயற்கை வேளாண்மைப் பண்ணை, பதஞ்சலி மூலிகை மற்றும் உணவு பூங்கா ஆகியவை, பதஞ்சலி யோகபீடத்தின் துணை நிறுவனங்களாகும்.


'திவ்ய பிரகாஷன்' என்ற வெளியீட்டு நிறுவனத்தையும் ராம்தேவ் நடத்துகிறார். இதன்மூலமாக, யோகா, ஆயுர்வேதம் தொடர்பான நூல்கள் வெளியிடப்படுகின்றன. 'யோகா சந்தேஷ்' என்ற மாத பத்திரிகையை ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம், பஞ்சாபி, வங்காளி, ஒரியா, அசாமி, நேபாளி, கன்னடம், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் இந்நிறுவனம் வெளியிடுகிறது. இந்த பத்திரிகைகளை மாதந்தோறும் ஒரு கோடிக்கு மேற்பட்ட வாசகர்கள் படிக்கிறார்கள்.


உலகம் முழுவதும் பாபா ராம்தேவுக்கு அன்பர்கள் உள்ளனர். வெளிநாடுகளிலும் பதஞ்சலி யோகபீட கிளைகள் திறம்பட இயங்குகின்றன. வெளிநாடுவாழ் யோகா அன்பர்களுக்கு யோகா பயிற்சி அளிப்பதற்காக, ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள லிட்டில் கம்பரே தீவை ரூ. 2 கோடி மதிப்பில் விலைக்கு வாங்கி அங்கு அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் பதஞ்சலி யோகபீடம் (யு.கே) அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.


பாரத் ஸ்வாபிமான் அந்தோலன்:


தனது யோகா வழிகாட்டுதல்களால் கோடிக்கணக்கான அன்பர்களைப் பெற்ற பாபா ராம்தேவ், அவர்களை நாட்டுநலனுக்கு உகந்த வழியில் பயன்படுத்த, சமூக சேவகர் ராஜீவ் தீக்ஷித்துடன் இணைந்து 'பாரத் ஸ்வாபிமான் அந்தோலன்' என்ற பாரத சுயமரியாத இயக்கத்தை துவக்கினார். தனக்கு எந்த அரசியல் லாப நோக்கமும் இல்லை என்ற அவர், யோகக்கலை மூலமாக சமூக, அரசியல் நிலைகளில் மறுமலர்ச்சி கொண்டுவர விரும்புவதாகவும் அறிவித்தார்.


தான் நடத்தும் யோகா ஷிபிரங்களில் தேசபக்தியையும் நாட்டு வளர்ச்சியையும் வலியுறுத்தி பிரசாரம் செய்யும் பாபா ராம்தேவ், அரசியல், சமூக, பொருளாதார அம்சங்களில் தெளிவான நிலைப்பாடுகளை தனது யோகா அன்பர்களுக்கு போதித்து வருகிறார். இதனால், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் கண்டனத்திற்கும் ஆளானார். ஆயினும் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், நாட்டு நலனுக்கேற்ற கருத்துக்களைத் தொடர்ந்து முனவைத்து வருகிறார் பாபா ராம்தேவ்.


பாரத் ஸ்வாபிமான் அந்தோலனின் ஐந்து இலட்சியங்கள்:


1. தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல்.
2. நூறு சதவிகித தேசிய சிந்தனையை மக்களிடம் வளர்த்தல்.
3. அந்நிய நிறுவனங்களை முற்றிலும் பகிஷ்கரித்தல்; சுதேசி இயக்கத்தை தீவிரப்படுத்துதல்.
4. நாட்டுமக்களை ஒன்றுபடுத்துதல்.
5. நாட்டை யோகாவை மையமாகக் கொண்டதாக முழுமையாக வளர்த்தெடுத்தல்.


மேற்கண்ட கொள்கைகளை வலுப்படுத்த நாடு முழுவதும் யோகா முகாம்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ராம்தேவ். அதன் ஓரம்சமாகவே, நாட்டை சீரழிக்கும் ஊழலுக்கு எதிராகவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் கறுப்புப் பணத்திற்கு எதிராகவும் ராம்தேவ் போராடி வருகிறார்.


சமூக விழிப்புணர்வுப் பணிகள்:


துரித உணவு, பன்னாட்டு நிறுவனங்களின் செயற்கை குளிர்பானங்களால் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகள் குறித்து தனது யோகா முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் பாபா ராம்தேவ், இயற்கையான, பாரம்பரியமான உணவுமுறைகளையே இந்தியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் .


கோலா பானங்கள் கழிவறை சுத்திகரிப்பான்களாக இருக்கவே தகுதி படித்தவை என்பது ராம்தேவின் பிரகடனம். பாஸ்போரிக் அமிலம் கலந்துள்ள செயற்கை குளிர்பானங்களுக்கு மாற்றாக, சூடான குடிநீர், பால், பழச்சாறு போன்றவற்றையே அருந்த வேண்டும் என்று ராம்தேவ் அறிவுறுத்துவது வழக்கம். பன்னாட்டு நிறுவனங்களின் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் மயங்கி செயற்கை குளிர்பானங்களை மக்கள் அருந்துவதால் நமது பணம் வெளிநாடுகளுக்கு செல்கிறது என்றும் ராம்தேவ் எச்சரிக்கை செய்து வருகிறார்.


விவசாய நிலங்களில் செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதையும் ராம்தேவ் எதிர்க்கிறார். தனது இயற்கை வேளாண் பண்ணையில் மாதிரி வேளாண் முறைகளை இயற்கை சாகுபடி தொழில்நுட்பத்தில் உருவாக்கிக் காட்டி இருக்கிறார். உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் இயற்கை விவசாயத்தை அழித்து மண்ணை மலடாக்கிவிடும் என்பது ராம்தேவின் எச்சரிக்கை. விவசாயமே நாட்டின் முதற்பெரும் தொழிலாக இருக்கும்போதிலும், நாட்டிலேயே மிகவும் ஏழைகளாக இருப்பவர்களும் விவசாயிகளே. இந்நிலையை மாற்ற வேண்டும் என்பது ராம்தேவின் கருத்து.


நாட்டின் கனிம வளத்தைச் சுரண்டும் சட்டவிரோத சுரங்கங்களுக்கு எதிராகவும் ராம்தேவ் குரல் கொடுத்து வருகிறார். நாட்டில் அனுமதி பெற்று இயங்கும் சுரங்கங்களின் எண்ணிக்கை 200 மட்டுமே; ஆனால், பல்லாயிரம் சுரங்கங்கள் அரசியல்வாதிகளின் பினாமிகளால் சட்டவிரோதமாக அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்படுகின்றன என்று இவரது பாரத் ஸ்வாபிமான் இயக்கம் குற்றம் சாட்டுகிறது.


இவரது ஆன்மிகம் சார்ந்த பிரசாரங்களால் வெறுப்புற்ற இடதுசாரிகள் (குறிப்பாக மார்க்சிஸ்ட்கள்) இவரது ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள் குறித்து பொய்ப்பிரசாரம் செய்ததுண்டு. திவ்ய யோகா மந்திரில் தயாராகும் ஆயுர்வேத மருந்துகளில் விலங்குகளின் பாகங்கள் இருப்பதாக பிரசாரம் நடைபெற்றது. ஆனால், அரசு ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அப்படிப்பட்ட எந்த முடிவுகளும் கிடைக்கவில்லை.


ஒருபால் உறவு, எய்ட்ஸ் நோய் தொடர்பான வெளிப்படையான கருத்துக்களால் ராம்தேவ் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பாலியல் கல்விக்கு மாற்றாக யோகக்கல்வி பயிற்றுவிப்பதே எய்ட்ஸ் நோயை ஒழிக்கும்; ஒருபாலுறவு கொள்பவர்களை மனநோயாளிகளாகக் கருதி சிகிச்சை அளிக்க வேண்டும் ஆகியவை ராம்தேவின் கருத்துக்கள்.


அதேபோல புற்றுநோயை யோகா சிகிச்சையால் குணப்படுத்த முடியும் என்று (2008) நிரூபித்தார் ராம்தேவ். ஆனால், மருத்துவ ஆராய்ச்சி மூலமாக இதனை நிரூபிக்க வேண்டும் என்று கூறி விமர்சகர்கள் அதனை ஏற்கவில்லை. ஆயினும் யோகா மூலமாக பலநூறு நோயாளிகள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் ராம்தேவ்.


ஊழலுக்கு எதிரான போராட்டம்:


நாட்டின் பொருளாதராத்தை சீர்குலைக்கும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும், வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்கவும், கறுப்புப் பணத்திற்குக் காரணமான ஊழலை ஒழிக்கவும், ராம்தேவ் கடந்த ஐந்தாண்டுகளாகவே போராடி வருகிறார். சமீப காலமாக இந்திய அரசியலில் அதிகரித்துள்ள ஊழலால் மனம் வெதும்பிய அவர், மத்திய அமைச்சர்களின் ஊழல்களுக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்தார். அதன் விளைவாக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் வெறுப்புக்கு ஆளாகி உள்ளார்.


ஊழலுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டம் அன்னா ஹசாரே தலைமையில் (ஏப்ரல் 5, 2011 ) நடந்தபோது, அதற்கு ஆதரவாக களம் இறங்கினார். உண்மையில் ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்னதாகவே நாடு தழுவிய அளவில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பாபா ராம்தேவால் திட்டமிடப்பட்டது. அதனை அறிந்த அரசு சார்பு என்.ஜி.ஓக்கள், ஹசாரேவை முன்னிறுத்தி உண்ணாவிரதத்தைத் துவங்கிவிட்டனர் என்ற புகார் உள்ளது. ஆயினும், அந்தப் போராட்டத்திற்கு பாபா ராம்தேவ் ஆதரவு தெரிவித்தார்.

ஊழல் புரியும் அதிகார வர்க்கத்தை தண்டிக்க வகை செய்யும் லோக்பால் சட்டத்திற்காக தற்போது அன்னா ஹசாரேவும் பாபா ராம்தேவும் ஒத்த சிந்தனையுடன் போராடி வருகின்றனர்.


கறுப்புப் பணத்தை ஒழிக்க பாரத் ஸ்வாபிமான் இயக்கம் கீழ்க்கண்ட வழிமுறைகளை முனைக்கிறது:


1. பெருமளவிலான கறுப்புப் பணத்திற்கு காரணமாகும் ரூ. 1000 , ரூ. 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டும்.
2. ஊழலுக்கு எதிரான ஐ.நா. மாநாட்டுத் தீர்மானத்தை (2006) உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
3. லஞ்ச, ஊழல் குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் வகையில் இந்திய தண்டனை சட்டத்தைத் திருத்த வேண்டும்.
4. ஊழல் பெருச்சாளிகளின் வரவு- செலவு விபரங்களை அரசு கண்காணித்து முடக்க வேண்டும்.
5. அந்நிய வங்கிகளின் கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் உபயோகங்களை முறைப்படுத்த வேண்டும்.
6. வெளிநாடுகளில் வரி செலுத்தாமல் பதுக்கிவைக்க தோதாக உள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள இந்தியர்களின் கணக்கு விபரங்களை அறிந்து அவற்றை கைப்பற்றி இந்திய கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.


- மேற்கண்ட ஆலோசனைகள், செயல்படுத்த இயலாதவை என்று அரசாலும் ஆளும் அரசியல்வாதிகளாலும் நிராகரிக்கப்படுகின்றன. ஆனால், அரசு முயன்றால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க முடியும். இதனை தேர்தல்காலத்தில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதியாகவே முன்வைத்தது என்று நினைவுபடுத்துகிறார் பாபா ராம்தேவ்.


ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் மதிப்பு 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்குமென்று ராம்தேவ் மதிப்பிடுகிறார். ஒரு ட்ரில்லியன் என்பது மில்லியனின் (பத்து லட்சம்) மூன்று மடங்காகும். அமெரிக்க டாலர் மதிப்பில் இந்திய ரூபாயை மாற்ற சுமார் 45 ரூபாய் ஆகிறது. ஆக, 1.5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது, சுமார் '68 லட்சம் கோடி கோடி' ஆகும். இந்த அளவுக்கு ஊழல் பெருச்சாளிகளால் இந்தியப் பணம் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டால் நாடு எவ்வாறு முன்னேறும் என்று கேள்வி எழுப்பும் ராம்தேவ், இதற்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரி வருகிறார்.


ராம்லீலா மைதான உண்ணாவிரதம்:


மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஜூன் 4, 2011 ல் சாகும்வரை உண்ணாவிரதம் துவங்கிய ராம்தேவுக்கு ஆதரவாக யோகா அன்பர்கள் 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குழுமினர். இதனை அராஜக முறையில் நசுக்கிய மத்திய அரசு நள்ளிரவில் நடத்திய தடியடி இப்போது உலகம் முழுவதும் கண்டனங்களை எழுப்பி இருக்கிறது.


புதுதில்லியில் உண்ணா விரதத்தை அரசு குலைத்த போதிலும் மனம் தளராமல், உத்தரகான்ட் மாநிலத்திலுள்ள ஹரித்வாரில் தனது பதஞ்சலி யோகபீடத்தில் இருந்தபடி உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார் பாபா ராம்தேவ். இவருக்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.


பாபா ராம்தேவ் தாக்கப்பட்டதைக் கண்டித்து அன்னா ஹசாரே தில்லி, ராஜ்காட்டில் (ஜூன் 8) இருந்த உண்ணாவிரதம் நாட்டில் விழிப்புணர்வை அதிகரித்திருக்கிறது. லோக்பால் சட்டத்திற்காக அன்னா ஹசாரேவும், கறுப்புப் பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவும் நடத்தும் தொடர் போராட்டங்களால் இந்தியாவில் புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராக மக்களை ஒன்றுபடுத்தும் பணியில் இவர்கள் இருவரும், தங்கள் மீதான அரசு சார்பு பொய்ப்பிரசாரங்களை நிராகரித்து, தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.


இவர்கள் இருவரையும் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் என்று மத்திய அமைச்சர்கள் சிலரும் காங்கிரஸ் தலைவர்கள் சிலரும் ஏளனம் செய்கிறார்கள். இருவரது பொதுவாழ்க்கை குறித்த அபத்தமான சந்தேகங்களையும் தங்களுக்கு சார்பான ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முனை மழுங்கச் செய்ய சிலர் முயன்று வருகிறார்கள். ஆனால், நாட்டு மக்கள், இவர்களது தன்னலமற்ற முயற்சியின் பின்னணியையும், அதன் முக்கியத்துவத்தையும் அறிந்தே உள்ளனர். அவர்கள் ஊழலுக்கு எதிரான போரில் நாடு முழுவதும் திரண்டு வருவது நாட்டின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதாக உள்ளது.


பல விருதுகளையும் பல கண்டங்களையும் பெற்றாலும், எதிலும் நிலைகுலையாமல், பரிபூரண யோகியாக நம்மிடையே வாழ்ந்துவரும் யோகா குரு பாபா ராம்தேவின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வெல்லட்டும்.

நன்றி: விஜயபாரதம் (24.06.2011)

இதிலும் படியுங்கள்: தேசமே தெய்வம் வலைப்பூ

.

ஞாயிறு, ஜூன் 05, 2011

ஸ்ரீ குருஜி

நினைவுக் கவிதை

டாக்டர்ஜி நிறுவிய

அஸ்திவாரத்தில்

பிரமாண்டமான

சங்க மாளிகையை எழுப்பிய

விஸ்வகர்மா.


மோட்சம் தேடிய

துறவிகள் மத்தியில்

தேசம் நாடிய

தேவ விரதர்.


இன்புறு வாழ்வை

சந்தனம் போல

தாய்நாட்டுக்கே

தாரை வார்த்த

ததீசி.

.

பாரத உயர்வே

பாரின் உயர்வென

பட்டென உரைத்த

'விஸ்வா'மித்திரர்.


தடைகள் அனைத்தையும்

தவிடெனத் தகர்த்து

சங்க கங்கையை

ஓடவிட்ட

பகீரதர்.


நாடு முழுவதும்

பயணம் செய்து

சமுதாயத்தைப் பிணைத்த

சங்கரர்.


ஞானச் செழுமையால்

யாகம் வளர்த்து

தேசிய உணர்வை

தேனென ஊட்டிய

சாணக்கியர்.


வலிமை வாய்ந்த

இளைஞர் படையை

நனவாய் ஆக்கிய

விவேகானந்தர்.


தேசம் மீண்டும்

மலர்ந்திடச் செய்ய

துறைகள் தோறும்

துடிப்பினை அளித்த

திலகர்.


தீண்டாமை இருளைத்

தீய்ப்பதற்காக

தீபம் ஏற்றிய

அம்பேத்கர்.


தேசமே உயிர்

மூச்செனக் கொண்ட

ஸ்வயம்சேவகர்.


--------------------------------------------------

நன்றி: விஜயபாரதம் (2005)

குறிப்பு: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரான ஸ்ரீ மாதவ சதாசிவ கோல்வல்கர், ஸ்ரீ குருஜி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இன்று அவரது நினைவு நாள் (05.06.1973).

.