வியாழன், அக்டோபர் 14, 2010

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- 4

இதற்கு முன் படிக்க வேண்டியது: மூன்றாம் பாகம்

அயோத்தி வழிபாட்டுத்தலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் அடிப்படை ஆதாரமாக இருந்தது, சம்பந்தப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள். ஆனால், அதன் அடிப்படையில் மூன்று நீதிபதிகளும் அறுதியிட்டு தீர்ப்பு வழங்கவில்லை. அவ்வாறு வழங்க, பொருத்தமான காலசூழல் நாட்டில் நிலவவில்லை என்பதுதான் அதற்கு காரணமாக இருக்க முடியும். அதற்காக, அகழாய்வில் கிடைத்த ஆதாரங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. எதிர்காலத்தில் இவ்வழக்கு மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் செல்லுமானால், அங்கு அயோத்தி வழக்கை நிமிர்த்தி நிறுத்தப்போகும் ஆதாரங்கள் அவை தான். எனவேதான், நீதிபதிகள் சர்மாவும், அகர்வாலும், அனைத்து ஆதாரங்கள் தொடர்பான பதிவுகளையும் தங்கள் தனித் தனித் தீர்ப்புகளில் மிகுந்த பிரயாசையுடன் இணைத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த ஆதாரங்களையே, செக்யூலரிசத்தைக் காக்கவென்றே பிறப்பெடுத்த நமது அறிவுஜீவிகளும் ஆங்கில ஊடகவாதிகளும் சந்தேகப்படுகிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் நடந்த அந்த அகழாய்வு, பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடந்ததாம். அதனால், அகழாய்வில் தவறான ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற பிரசாரத்தை ஏற்கனவே ஆங்கில ஊடகங்களில் சரித்திர வல்லுனர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் நடத்தி வருகிறார்கள்.

அதாவது ஆட்சிப் பொறுப்பில் அன்று இருந்தவர்களது நிர்பந்தத்தால் தான், நியாயமான முறையில் நடந்த அகழாய்வு கூட, ராமர் கோயிலுக்கு ஆதரவான ஆதாரங்களை ஏற்படுத்திவிட்டது என்பது அவர்களது புகார்.

அதே பாணியில் நம்மாலும் கேள்வி கேட்க முடியும். அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு ஒருவாரகாலம் ஒத்திவைக்கப்பட்டபோது என்ன நடந்தது? தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஹிந்துவிரோத கூட்டணி அரசால், நீதிபதிகள் நிர்பந்தம் செய்யப்பட்டார்களா? அதனால்தான், தீர்ப்பில் அகழாய்வு ஆதாரங்கள் அடக்கி வாசிக்கப்பட்டனவா? இதே நீதிமன்ற பெஞ்சில், மூன்றில் இருவர் ஹிந்துக்களாக இல்லாமல் இருவர் முஸ்லிம்களாக இருந்திருந்தால் தீர்ப்பின் கதி எப்படி ஆகியிருக்கும்?

கேள்விகள் கேட்பதானால் இன்னும் பல கேள்விகளைக் கேட்க முடியும். ஷன்னி வக்பு வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பிறகு எதற்காக முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது? நாட்டின் அமைதிக்காக அரசு நிர்பந்தத்தால் தீர்ப்புக்கள் திருத்தப்பட்டனவா?

எப்படி இருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பை நாட்டு மக்கள் நிம்மதியுடன் வரவேற்றிருக்கிறார்கள். அந்த நிம்மதி அறிவுஜீவிகளுக்கு மட்டும் பொறுக்கவில்லை. 1992 சம்பவத்தின்போது அறிவுஜீவிகள் விசிறிவிட்ட பெருநெருப்புத் தானே, சிறுபான்மையினரின் அழிவுச் செயல்களை நியாயப்படுத்த உதவியது?

இப்போதும் நீதிமன்றத் தீர்ப்பில் முழு திருப்தி அடையாதபோதும், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக அதனை வரவேற்கக் காரணம், நாட்டின் அமைதியும் வளர்ச்சியும் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணம் தான். இதே கண்ணோட்டத்துடன் தான், 1947-ல் தேசப் பிரிவினையை கண்ணீருடன் ஹிந்து மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்; தேசத்தைப் பிளந்த போதும் அருகில் குடியிருந்த முஸ்லிம் மக்களைத் துரத்தாமல் அவர்களை அரவணைத்தார்கள். அந்த ஹிந்துக்களின் பெருந்தன்மை தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுகிறது.

.
மும்பையிலும் தில்லியிலும் கோவையிலும் வெடித்த குண்டுகளையும் அதனால் உயிரிழந்தவர்களையும் கண்டுகொள்ளாத ஆங்கில ஊடகவாதிகள், குண்டு வெடிக்கக் காரணம் என்ன என்ற புதைபொருள் ஆராச்சியில்தான் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் கண்டறிந்த ஒரே காரணம், நாட்டில் பரவும் ஹிந்து வகுப்புவாதமே முஸ்லிம்கள் குண்டுவெடிக்க காரணம் என்பது தான். அதாவது, ஹிந்துக்கள், தங்களை ஹிந்து என்று உணர்ந்து ஒருங்கிணைவதே முஸ்லிம்களை கொடூரர்கள் ஆக்குகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கூட அவமதித்தார்கள் இந்த 'குருவிமண்டைகள்' (வார்த்தைக்கு நன்றி: ஜெயமோகன்; காண்க: எனது இந்தியா). அதே குருவி மண்டைகள் தான் தற்போதைய அயோத்தித் தீர்ப்பையும் விமர்சிக்கிறார்கள். உண்மையில் இவர்களை இயக்குவது யார்? ஆங்கிலக் கல்வி பயின்றதால் ஏற்பட்ட மெக்காலே தாக்கமா? மிஷனரிகளும், செஞ்சீனாவும், அரபுநாடுகளும் அள்ளிவீசும் பொற்காசுகளா? கல்வியுடன் நாட்டுப்பற்றை ஊட்டத் தவறிய காங்கிரஸ் அரசா?

உண்மையில் இவையெதுவும் காரணம் கிடையாது. ஊடகம் என்பது மக்களைப் பிரதிபலிப்பது. அவ்வாறு பிரதிபலிக்காத ஊடகம் தாக்குப் பிடிக்காது. ஆனால், நமது நாட்டில் மக்களின் மனநிலைக்கும் ஊடக ராஜாங்கத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறதே! சுயநலக் காரணங்களுக்காக தடம் புரளும் ஊடகங்களை - கண்டிக்கும் வாசகர்கள் இல்லாதவரை, புறக்கணிக்கும் மக்கள் இல்லாதவரை, விமர்சிக்கும் நடுநிலையாளர்கள் இல்லாதவரை, இத்தகைய வரலாற்றுப் பிழைகள் தொடரும்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். 1975, நெருக்கடி நிலையின்போது கோயங்காவின் எக்ஸ்பிரஸ் தவிர, பெரும்பாலான பத்திரிகைகளும் அன்றைய சர்வாதிகாரி இந்திரா முன் மண்டியிட்டனவே! அவர்களுக்கு அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ஊடகவாதிகள் சிலர் கம்பீரமாக அமர்ந்து அயோத்தி தீர்ப்பு குறித்து நாட்டு மக்களுக்கு கதைக்கிறார்கள். இதை 'கலிகாலம்' என்று சொல்லிவிட்டு நாம் உறங்கச் செல்கிறோம். தவறு யாரிடம்?

இந்த இடத்தில் இரு சம்பவங்களைக் கூறியாக வேண்டும்.

1. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. தினமலர் நாளிதழின் இணைப்பான சிறுவர் மலர் புத்தகத்தில் முகமது நபி குறித்த சித்திரக்கதை வெளியானது. எப்போதும் ஹிந்து சமயம் தொடர்பான கதைகளையே வெளியிடுகிறோமே, கொஞ்சம் மதச்சார்பின்மையையும் காப்போம் என்ற எண்ணத்தில் நபி பெருமானாரின் படக்கதை வெளியானது. ஆனால், நடந்ததோ வேறுகதை. அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, இறைவனையோ, இறைவனின் தூதரையோ உருவமாக சித்தரிக்கக் கூடாது. எனவே இந்த படக்கதைக்காக தினமலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுந்தது.

ஆரம்பத்தில் தினமலர் நிர்வாகம் அதைப் பொருட்படுத்தவில்லை. மறுநாள் அதிகாலை மதுரை பேருந்து நிலையத்தில் விநியோகத்திற்காகக் குவிக்கப்பட்ட தினமலர் நாளிதழ் கட்டுக்கள் முஸ்லிம் இளைஞர்களால் எரிக்கப்பட்டன. அப்போது தான், சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்தது தினமலர். அடுத்த நாளே தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில் இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்டது. பிரச்னைக்குரிய படக்கதையும் நிறுத்தப்பட்டது. அவர்களுக்குத் தெரியும், நாளிதழின் அடிப்படை வேர் அதன் விநியோகத்தில் இருப்பது. எந்த இடத்தில் அடித்தல் வலிக்கும் என்று தெரிந்தவர்கள் புத்திசாலிகள். வன்முறை கூடாது என்று கூறுபவர்கள் முட்டாள்கள். இது தானே மேற்படி சம்பவத்தின் நீதி?

2. மற்றொரு சம்பவமும் தினமலர் தொடர்பானது தான். தினமலர் நாளிதழ் வாரந்தோறும் ‘பக்தி மலர்’ என்ற இணைப்பு இதழை வழங்குகிறது. பத்திரிகை விற்பனையை அதிகரிக்க ஒரு உபாயமாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் மாநிலம் முழுவதும் நல்ல பயன் அளித்தபோதும், திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புக்களில் பலனளிக்கவில்லை. ஏனென்று ஆராய்ந்தபோது, அந்தப் பதிப்புகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் கிறிஸ்துவ மக்கள் அதிகம் இருப்பதே காரணம் என்று தெரியவந்தது. அதாவது, ஹிந்துக்களின் தெய்வங்கள் குறித்த கட்டுரைகள் அதிகம் கொண்டிருப்பதால், கிறிஸ்துவர்கள் தினமலர்- பக்திமலரை விரும்பவில்லை. இத்தனைக்கும் பக்திமலரில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்காக தனிப் பகுதிகள் உள்ளன. இது பற்றி ஆலோசித்த தினமலர் நிர்வாகம், மேற்படி பதிப்புக்களில், கிறிஸ்துவர்களுக்கென்று தனியே பக்திமலர் தயாரிப்பது என்று முடிவெடுத்தது. இன்றும், அந்த பதிப்புக்களில், கிறிஸ்துவர்களுக்கென்று பிரத்யேக பக்திமலரும், மற்றவர்களுக்கு பொதுவான பக்திமலரும் விநியோகிக்கப்படுகிறது. வாசகர் விரும்பாத எதையும் பத்திரிகைகளால் விற்க முடியாது; இது தானே கிறிஸ்துவர்கள் நடத்திக் காட்டிய நீதி?

இவை போன்ற எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும். பிரபல எழுத்தாளர் மதன் 'வந்தார்கள், வென்றார்கள்' தொடரை ஆனந்த விகடனில் எழுதியபோது, முகலாயர்களின் அட்டூழியத்தை எழுதியதற்காக இஸ்லாமியர்களால் மிரட்டப்பட்டார். வார்த்தையில் 'எனது இந்தியா' கட்டுரையை எழுதியதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மிரட்டல்கள் வந்தன. தினமலர் -வேலூர் பதிப்பில் 'கம்ப்யூட்டர்
மலரில்' வெளியான முகமது நபி கார்ட்டூனுக்காக, அதை வெளியிடாத பிற பதிப்புகளின் முதல் பக்கத்திலும் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டிவந்தது. கீழக்கரையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் என்ற செய்திக்காக 'நிமிர்ந்த நன்னடை' தினமணியும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

விழிப்புணர்வுள்ள சமூகமே தன்மீதான அபவாதத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் என்பதுதான் மேற்கண்ட சம்பவங்கள் காட்டும் நீதி. முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது? இறையச்சம் மிகுந்த சமுதாயங்களாக இஸ்லாமிய சமுதாயமும், கிறிஸ்துவ சமுதாயமும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. நாமோ, 'எல்லாம் இறைவன் செயல்' என்று கூறிக்கொண்டே, கோயிலை இடித்தாலும் தேமே என்று இருக்கிறோம். நமது துறவியரை ஊடகங்கள் வக்கிரமாகச் சித்தரித்தாலும் பொங்கிஎழ மறுக்கிறோம். அயோத்தித் தீர்ப்பிற்கு எதிராக ஊடக சாம்ராஜ்யவாதிகள் நிகழ்த்தும் பிரசார வன்முறையைக் கண்டும் காணாமல் இருக்கிறோம்.

65 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போராடி நாட்டில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் ஏதோ, இந்த அளவேனும் சிந்திக்கிறோம். சற்றே சிந்தித்துப் பாருங்கள், இந்த அமைப்பும் இல்லாத முந்தைய காலகட்டத்தில் நமது ஹிந்து மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று! ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவார இயக்கங்களும் இல்லாது இருந்திருந்தால், நமது நாட்டையே அரசியவாதிகள் விற்றுத் தின்றிருப்பார்கள்!

எந்த ஒரு நிகழ்வும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்பதுவே ஹிந்துக்கள் நம்பும் விதி என்பதன் சாராம்சம். இதுவரை நடந்தவை நமக்கு படிப்பினை அளிக்க ஏற்பட்ட சரித்திர நிகழ்வுகள் என்று கொண்டால், அதிலிருந்து நாம் சரியான பாடம் கற்றுக் கொண்டால், நாளைய பாரதம் நம்மிடம் இருக்கும். விழிப்புணர்வுள்ள சமூகமாக ஹிந்துக்கள் மாறாத வரை, ஊடகவாதிகளின் அத்துமீறல்களை நெஞ்சு நிமிர்த்திக் கண்டிக்க ஹிந்து சமூகம் முன்வராதவரை, அபத்த ஊடகங்களின் அல்ப செயல்பாடுகள் தொடரவே செய்யும்.

இப்போது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஹிந்து உணர்வுள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது பெருகி வருவது நம்பிக்கை அளிக்கிறது. ஆயினும் தற்போதைய அபத்த வெள்ளத்திற்கு அணை கட்ட அவை போதாது. இந்த விழிப்புணர்வு பெருக வேண்டும். ஒவ்வொரு ஹிந்துவும் விழிப்புணர்வுள்ள குடிமகனாக மாறும்வரை, நமது தேசவிரோதிகளுக்கு எதிரான எழுத்துப் போராட்டம் மேலும் பல முனைகளில் நடத்தப்பட வேண்டும். இணையதளம் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.


(நிறைவு)

----------------------------------------

காண்க: தமிழ் ஹிந்து

.

1 கருத்து:

  1. அப்பாடி... RSSக்கு ஆதரவாக எழுத ஒருவராவது உள்ளாரே. மகிழ்ச்சி. போலி மதச்சார்பற்ற மற்றும் போலி நாத்திகவாதிகளின் அக்கப்போர் சகிக்க முடியவில்கை.
    மா.மணி

    பதிலளிநீக்கு