சனி, அக்டோபர் 02, 2010

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- 1

அயோத்தி ராமஜன்மபூமியில் ராம்லாலா


60 ஆண்டு காலமாக நாடு எதிர்பார்த்த அயோத்தி கோயில் நில உரிமை தொடர்பான தீர்ப்பு ஒருவழியாக வெளியாகிவிட்டது. காலம் கடந்த தீர்ப்பாயினும், இப்போதாவது வந்ததே என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். அந்த அளவிற்கு, பத்திரிகைகளும், ஊடகங்களும் நாட்டு மக்களை அயோத்தி விஷயத்தில் மக்களைக் குழப்பி இருந்தன. அயோத்தி என்று சொன்னாலே ஏதோ காஷ்மீரின் மர்மப் பக்தியில் இருக்கும் பயங்கரவாதிகள் முகாம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய ஊடகங்கள், நாட்டிற்கு இழைத்துள்ள அநீதி அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடாது.

குறித்த தீர்ப்பு வெளியான நேரத்தில், நாடு முழுவதும் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் போல- மக்களே ஏற்படுத்திக்கொண்ட ஊரடங்கு உத்தரவு போல- காணப்பட்டது. எல்லாப் பெருமையும் பத்திரிகைகளுக்கே!

தீர்ப்புக்கு முன்:

பத்திரிகைகள் சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டும்; நாட்டுநலத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை வழிநடத்த வேண்டும்; சத்தியத்தின் வாழ்விற்காக அதிகாரபலத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

நமது இதழியல் முன்னோடிகளான மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், வீர சாவர்க்கர், அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோர் நமக்கு வழங்கிச் சென்ற அற்புத வழிமுறை. ஆனால், வர்த்தகமும், சுயநலமும் கோலோச்சும் தற்போதைய ஊடக உலகிடம் இவற்றை எதிர்பார்ப்பது, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது.

அயோத்தி இயக்கம் துவங்கியதிலிருந்தே, நமது பத்திரிகைகளும் ஊடகங்களும், நாட்டு மக்களைக் குழப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளன. குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ராமர் கோயிலுக்கு எதிரான பிரசார இயக்கத்தையே முன்னெடுத்தன. இதன் அடிப்படை புரியாமலே, ஆங்கில பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அப்படியே மொழிபெயர்த்து பிராந்திய மொழி பத்திரிகைகள் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தன. அயோத்தியில் ராமர் பிறந்தாரா? அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டாவிட்டால் வானம் இடிந்து விழுந்துவிடுமா? சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த இடத்தில் பொதுக் கழிப்பறை கட்டலாமா? கரசேவகர்களுக்கு தூக்கு தண்டனை தரலாமா? இப்படியெல்லாம் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் பின்னணியில் ஹிந்து விரோத சக்திகளும், வெளிநாட்டு பணபலமும் இருந்தது மக்களுக்குத் தெரிய நியாயமில்லை.

அயோத்தி இயக்கத்தின் உச்சகட்டம் 1992, டிச. 6 -ல் கரசேவகர்களின் எழுச்சியாக அமைந்தபோது, அதை இந்தியாவின் கருப்பு தினமாக அறிவிக்காத ஊடகங்களே இல்லை எனலாம். 1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை.

அயோத்தி வழக்கில் கடந்த செப். 24 -ம் தேதியே அலஹாபாத் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை பிரசாரம் களைகட்டிவிட்டது. காவல்துறை குவிப்பு, பாதுகாப்புப் படையினர் வருகை, யாரையும் புண்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை, மத்திய அமைச்சர்களின் 'மேல்முறையீடு' வேண்டுகோள்கள், நடமாட்டம் குறையும் சாலைகள் என்று பத்திரிகைகள் தேசசேவகம் செய்தன. யாருமே, ஒரு நீதிமன்றத் தீர்ப்பிற்காக இத்தனை முன்னெச்சரிக்கை தேவை ஏன் என்று எழுதவில்லை.

மின்னணு ஊடகங்களும் தொடர்ந்து இதே பிரசாரத்தை முன்னின்று நடத்தின. இதன் விளைவாக செப். 24 -ம் தேதி பயங்கர நாளாக உரு மாற்றப்பட்டது. அதற்கு முதல்நாள் அறிவுஜீவி வழக்கறிஞர் ஒருவர் பெற்ற தடையாணை (சமரசத்திற்கு ஒருவார காலம் வாய்ப்பு!!!) காரணமாக நாடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆயினும், அன்று துவங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்படியே தொடர்ந்தன.

நாடு முழுவதும் குழும குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) அனுப்ப தடை விதித்து மத்திய அரசு தனது மதியூகத்தை எண்ணி மார்தட்டிக் கொண்டிருக்க, அதே எஸ்.எம்.எஸ்.களை தேசபக்தியுடன் அனுப்பி நாட்டைக் காக்குமாறு கூறி தொலைகாட்சி செய்தி அலைவரிசைகள் தங்கள் ரேட்டிங்கை உயர்த்த படாதபாடு பட்டன. கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதே தடை செய்யப்பட்டது எந்த வகையிலான அரசு உரிமை என்று கேட்கும் அறிவு எந்த பத்திரிகைக்கும் இருக்கவில்லை. நாடு முழுவதையும் காஷ்மீராக்கும் அரசு நடவடிக்கைகள் சரியானது தானா? இதற்கு பத்திரிகைகள் துணை போகலாமா? என்று அறியாமல், அரசின் பிரசார சாதனங்களாக பெரும்பாலான ஊடகங்கள் மாறின.

இதன் விளைவாக, அயோத்தி தீர்ப்பு வெளியான தினம் (செப். 29), ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட - அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நாடு போல பாரதம் முழுவதும் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகளும், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளுடன் நிற்கும் காட்சிகளும் தென்பட்டன. இதனால், நாட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். சரக்கு வாகனப் போக்குவரத்து செப். 28 -ம் தேதி முதலே நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகள் வியாழனன்று மதியமே நிறுத்தப்பட்டன. அரசு பேருந்துகளும் பெயரளவில் மட்டுமே இயங்கின. சாலைகள் வெறிச்சோடின; கடைகள் அடைக்கப்பட்டன. மக்களே முன்வந்து நடத்திய 'பந்த்' போல நாடு காட்சியளித்தது. ஒருவாரகால ஊடகங்களின் பீதியூட்டும் பிரசாரத்தால், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான தினம் பயங்கர கனவு கண்டவனின் தூக்கம் போல மாறிவிட்டது.

தீர்ப்புக்குப் பின்:

அயோத்தி தீர்ப்பு செய்திகளை வெளியிடும்போது பொறுப்புணர்வைக் கடைபிடிக்குமாறு மத்திய அரசு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், தீர்ப்பு வெளியானபோது பத்திரிகைவாலாக்களின் பொறுப்புணர்வு வெளிப்பட்டது. லக்னோவில் குவிந்திருந்த 600-க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள், அயோத்தி வழக்கில் தொடர்புடைய 'திடீர் பிரபலமான' வழக்கறிஞர்களின் பேட்டிகளைப் பெற முண்டியடித்தபோது, அவர்களது கட்டுப்பாடும் கலகலத்தது.

திடீர் பிரபலங்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு ‘தீர்ப்பாக’ அவிழ்த்துவிட தொலைகாட்சி முன் அமர்ந்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தடுமாறினர். நல்லவேளையாக லக்னோ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அயோத்தி தீர்ப்பின் சுருக்கங்கள் குழப்பம் போக்கின. செய்திகளை முந்தித் தர வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இல்லாதவற்றை நிகழ்த்தவும் ஊடகங்கள் தயாராகி விடுகின்றன.

தீர்ப்பின் முழு சாராம்சத்தையும் புரிந்துகொள்ளாமல் தவறான 'பிளாஷ் நியூஸ்' வெளியிட்ட செய்தி அலைவரிசைகளையும் காண முடிந்தது. குறிப்பாக கலைஞர் செய்தி, ''அயோத்தி இடத்தை மூடராக பிரிக்க உத்தரவு'' என்பதையே பல நூறு முறை நேரலை ஒளிபரப்பில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. இது அறியாமையால் அல்ல; அரசியலால் என்பது தெளிவு.

''அயோத்தியில் வழக்கில் தொடர்புடைய இடம் ராமஜன்மஸ்தான் தான்’’ என்ற தீர்ப்பை ஒளிபரப்ப கலைஞர் செய்திக்கு மனமில்லை. அதே போல, சன் செய்திகள், அயோத்தியில் குறிப்பிட்ட மூன்றில் ஒரு பங்கு இடத்தை பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவிடம் ஒப்படைக்குமாறு செய்தி ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளோ, பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவோ பார்த்திருந்தால் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அயோத்தி தீர்ப்பின் முழுமையான தாத்பரியம் மக்களுக்கு சென்று சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தமிழ் செய்தி அலைவரிசைகள் கங்கணம் கட்டி நின்றன. தமிழ் நாளிதழ்களும் கூட முழுமையான தீர்ப்பை வெளியிடவில்லை. ஆங்கில பத்திரிகைகளிடம் நியாயமான செய்தியை மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை.

1992, டிச. 6 -க்குப் பின் பத்திரிகைள் நடத்திய பிரமிப்பூட்டும் பிரசாரம் அந்தக்கால செய்திகளை வாசித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த பிரசார சாதனங்கள் அயோத்தி தீர்ப்புக்குப் பின் அர்த்தமுள்ள அமைதி காக்கின்றன. தீர்ப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் காங்கிரஸ் கட்சி திணறுவது போலவே பத்திரிகைகளின் மனசாட்சியும் தடுமாறுகிறது. 1992-ல் ஹிந்துக்களுக்கு உபதேசித்த எவரும் 2010-ல் முஸ்லிம்களுக்கு உபதேசிக்கத் தயாராக இல்லை.

1992, டிச. 6 -க்குப் பின் பத்திரிகைள் நடத்திய பிரமிப்பூட்டும் பிரசாரம் அந்தக்கால செய்திகளை வாசித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த பிரசார சாதனங்கள் அயோத்தி தீர்ப்புக்குப் பின் அர்த்தமுள்ள அமைதி காக்கின்றன. தீர்ப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் காங்கிரஸ் கட்சி திணறுவது போலவே பத்திரிகைகளின் மனசாட்சியும் தடுமாறுகிறது. 1992-ல் ஹிந்துக்களுக்கு உபதேசித்த எவரும் 2010-ல் முஸ்லிம்களுக்கு உபதேசிக்கத் தயாராக இல்லை.

இப்போதும்கூட, செய்திகளை 'திருக்கல்' செய்யக் கூடாது என்ற சுயகட்டுப்பாட்டை மீறும் வகையில் சில ஆங்கில நாளிதழ்கள் செயல்படுகின்றன; முஸ்லிம்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டுவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. தீர்ப்புக்குப் பின் அமைதியாக உள்ளவர்களை உசுப்பிவிடும் முயற்சி இது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மொத்தத்தில் இந்திய ஊடகங்களும் பத்திரிகைகளும் நாட்டுநலத்தைக் கருதுவதாகவோ, நீதிமன்றத் தீர்ப்பை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பனவாகவோ இல்லை என்பதே வருத்தத்திற்குரிய நிலையாக உள்ளது. இத்தீர்ப்பில் சமரசத்திற்காக இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதை எவரும் கண்டுகொள்ளவே இல்லை; மாறாக முஸ்லிம்களின் மீதே அவர்களது கருணை பொங்கி வழிகிறது. 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.

(தொடரும்)

----------------------------------------
காண்க: தமிழ் ஹிந்து

நன்றி: விஜயபாரதம் (15.10.2010)

.

1 கருத்து:

  1. இடஒதுக்கீட்டு வழக்குகளில் OBC பிரிவினர் எப்படி நடத்தப்படுகின்றனரோ, அப்படியே அயோத்தி வழக்கில் இசுலாமியர்கள் நடத்தப்பட்டுள்ளனர்.

    நீதிபதிகளும் நீதிமன்றங்களும் நீதிக்கு ஈடாக மாட்டார்கள் என்பதற்கு அயோத்தி தீர்ப்பு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

    http://arulgreen.blogspot.com/2010/10/blog-post.html

    பதிலளிநீக்கு