செவ்வாய், அக்டோபர் 12, 2010

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் - 3

இதற்கு முன் படிக்க வேண்டியது: இரண்டாம் பாகம்

அயோத்தித் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அமைதிக்கூட்டம் தனித்தனியே நடந்தது. மாவட்ட ஆட்சியர் உமாநாத் நடத்திய இக்கூட்டத்தில், முஸ்லிம்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ''அதெப்படி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது என்று சொல்லலாம்? அங்கு இருந்தது பாபர் மசூதி. எனவே பாபர் மசூதி தொடர்பான வழக்கு என்று தான் சொல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர் ஒருசார்பாகச் செயல்படக் கூடாது'' என்று சிலர் குரல் எழுப்பினர். ''எடுத்ததெற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது; நீதிமன்றத்திலேயே அந்த வழக்கின் பெயர் ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில உரிமை வழக்கு என்பது தான். தேவையின்றி பிரச்னை செய்தால் நானும் கடுமையைக் காட்ட வேண்டிவரும்'' என்று எச்சரித்தார் ஆட்சியர் உமாநாத்.

-இந்தச் சம்பவம் இங்கு எதற்கு என்ற கேள்வி எழலாம். இந்தச் சம்பவம், செய்தியில் பதிவாகவில்லை. ஆட்சியரால் எச்சரிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். அதை செய்தியாக்கி, அவர்களது கோபத்திற்கு ஆளாக வேண்டாமே என்ற பத்திரிகையாளர்களின் புத்திசாலித்தனம் தான் இதற்குக் காரணம்.

ஆனால், 1992-லேயே இல்லாமலாகிவிட்ட கட்டடம் இடிப்பு தொடர்பான வழக்கு அல்ல என்ற போதும், ‘பழைய நிகழ்வை நினைவுபடுத்தாதீர்’ என்று மத்திய அரசு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், அந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தையே 24X 7 செய்தி தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நடந்தது அயோத்தி நிலம் குறித்த வழக்கு; கட்டட இடிப்பு தொடர்பான வழக்கு அல்ல என்றபோதும், அதையே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன, ஆங்கில செய்தி சேனல்கள். பெரும்பாலான ஆங்கில செய்தி சேனல்கள் முன்முடிவுகளுடன் தான் இந்த வழக்கின் செய்தியை ஒளிபரப்பின. செய்தியை செய்தியாகத் (NEWSnNEWS) தர வேண்டும் என்ற எல்லையை மறந்து, கண்ணோட்டங்களாகவே (VIEWS) அவை செய்திகளை ஒளிபரப்பின.
.
சி.என்.என்-ஐ.பி.என், என்.டி.டி.வி- 24X 7, டைம்ஸ் நவ் ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு, அயோத்தித் தீர்ப்பை அக்குவேறு ஆணி வேறாக அலசின. அவை நடத்திய அறிவுஜீவிகளின் பிரசாரத்தால் தான், அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு 'கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு' என்ற அடைமொழி கிடைத்தது. நாளிதழ்களும் கர்மசிரத்தையாக அந்தப் பிரசாரத்தைப் பின்தொடர்ந்தன.

தீர்ப்பு வெளியானவுடனேயே என்.டி.டி.வி தனது வேலையைத் துவக்கிவிட்டது. பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவானின் பேட்டி பலமுறை ஒளிபரப்பப்பட்டது. அவர்தான் 'கட்டப் பஞ்சாயத்து' பிரசாரத்தைத் துவக்கிவைத்தார். நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லும் அதே வழக்கறிஞர் தான், அதிமேதாவியாக பேட்டி கொடுத்தார். ஒருவேளை அவர் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்; 'மத நம்பிக்கை சட்டத்தை தோற்கடித்துவிட்டது' என்று புலம்பிக்கொண்டே இருந்தார்.

சி.என்.என்.ஐ.பி.என் சும்மா இருக்குமா? அவர்கள் பங்கிற்கு அவர்களுக்குத் தெரிந்த வல்லுனர்களை மேடை ஏற்றினார்கள். இதன் பொறுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய், ''அயோத்தி விவகாரத்திற்கு நிகழ்கால வாழ்வில் இடமில்லை; இந்தியா அயோத்தியைத் தாண்டிச் சென்றுவிட்டது'' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அப்புறம் எதற்காக அலஹாபாத் வழக்கை செய்தியாக்க இந்தத் துடிப்பு துடித்தாரோ தெரியவில்லை.

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களிடம் பதில் பெற தொலைகாட்சி நிருபர்களும் படப்பிடிப்பாளர்களும் நடத்திய தள்ளுமுள்ளுவைப் பார்த்தபோதே தெரிந்தது, ஊடகத்தில் அயோத்தியின் முக்கியத்துவம். ஆனால் யாரையோ திருப்திப்படுத்த, ''அயோத்தியை தேசம் மறந்துவிட்டது'' என்று அங்கலாய்த்துக்கொண்டே இருந்தார் ராஜ்தீப். அவரை அந்த கர்த்தர் தான் ரட்சிக்க வேண்டும். இதே செய்தியைத் தான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிலும் கட்டுரையாக வடித்து மகிழ்ந்தார் ராஜ்தீப். அதைப் பிரசுரித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழும் மதச்சார்பின்மையைக் காத்தது.

நமது ஊரில் ஒரு மகானுபாவர் இருக்கிறார். அவரே கேள்வி கேட்பார்; அவரே பதிலும் கொடுப்பார். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனை மறந்தவர்கள் திரேதா யுகத்து ராமனை இழுத்துக்கொண்டு திரிகிறார்கள் என்பார். அதே பாணியில் பிரபல ஊடக அறிஞர் கரன் தாபர் (இவர் கிறுக்குத் தனமாக கேள்வி கேட்பார்; எதிரில் இருப்பவர் கிறுக்கன் ஆகாமல் திரும்ப வேண்டும்) நடத்திய நேர்முகம் சி.என்.பி.சி.யில் வெளியானது. அவருக்கு தோதான ஜோடியாக அமைந்தவர், இடியே தலையில் விழுந்தாலும் எங்கே என்று கேட்பவர். வேறு யார்? காங்கிரஸ் அமைச்சரான கபில் சிபல் தான்.

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக கண்டிப்பாக உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும் என்று சொன்னார் சிபல். இதுவரை யாரும் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யச் சென்றதாக தகவல் இல்லை. ஆனாலும் மனிதர் அசராமல் சொன்னதையே திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

கரன் தாபரும் லேசுப்பட்டவர் இல்லை. அவரது கேள்வி இதோ...''சர்ச்சைக்குரிய அகழாய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே மூன்று நீதிபதிகளும் ராமர் கோயில் இருந்தது என்கிறார்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?'' சிபலின் பதில்: '' உச்சநீதிமன்றம் விசாரிக்கும் போது எல்லாம் சரியாகும்''

மற்றொரு கேள்வி: '' நம்பிக்கை, சர்ச்சைக்குரிய அகழாய்வு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்ப்பு என்பதால், அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுதலிக்குமா?'' சிபல் பதில்: ‘’இது சிக்கலான கேள்வி. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தீர்ப்பு மாறானதாக அமையலாம்...''

''அனுபவ உரிமை என்பதாலேயே ஒருவருக்கு குறிப்பிட்ட இடம் சொந்தமாக முடியுமா?'' - இது கரன் தாபர். ''நல்ல கேள்வி; அரச மரத்தின் கீழ் சாது அமர்ந்திருக்கிறார். அவர் முன் ஆயிரக் கணக்கானோர் பஜனை பாடுகின்றனர். சாது அமர்ந்து அனுபவித்ததால் அரச மரம் அவருடையதாகி விடுமா? அந்த பக்தர்களுக்கும் அது உரிமை ஆகுமா?'' -இது சிபலின் பதில்.

''ஒருவர் நீண்ட காலமாக வழிபடுவதாலேயே அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அப்படித்தானே? - கேள்வி கேட்கிறார். கரன் தாபர். இப்படித் தான் அந்த நேர்முகம் முழுவதும் கேள்விகள்; அதற்கேற்ற பதில்கள். கவுண்டமணி- செந்தில் நகைச்சுவையைத் தோற்கடிக்கிறது இவர்களது வில்லத்தனம்.

தீர்ப்பு வெளியான மறுநாள், பெரும்பாலான ஆங்கில நாளிழ்கள் 'கட்டப் பஞ்சாயத்து' தீர்ப்பு என்று வர்ணித்தன. பத்து நாட்களாக பீதியில் ஆழ்ந்திருந்த நாடு நிம்மதியாக இருக்கிறதே, எப்படி என்று யோசிக்கவில்லை. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, ''மசூதிக்குள் ராமர் சிலையை வைத்த 1949, மசூதியை இடித்த 1992 ஆகிய சம்பவங்களை மறந்துவிட்டு அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது'' என்று எழுதியது; தற்போதைய வழக்கின் அடிப்படை என்ன என்பது தெரியாமல், புலம்பியது.

அயோத்தி வழக்கில் பல நூறு ஆண்டுகாலப் போராட்டம் தான் 60 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்காக மாற்றம் பெற்றது என்ற தாத்பரியத்தை மறந்துவிட்டு, சமீபகால நிகழ்வுகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வி அறியாமை அல்ல. நாளிதழ் படிப்பவர்களை எப்படியும் குழப்பலாம் என்ற ஆணவம் தான் ஆங்கில நாளிதழ்களிடம் ஓங்கியிருக்கிறது. ஆயினும், முந்தைய காலம் போலின்றி, ஹிந்து உணர்வுடன் வாசகர்கள் போராடுவதை, வாசகர் கடிதங்கள், இணையதளப் பின்னூட்டங்களில் காண முடிந்தது.

தமிழ் நாளிதழ்களைப் பொருத்த வரை, தினமலர், தினத்தந்தி நாளிதழ்கள் செய்தியை மட்டும் வெளியிட்டு நாணயம் காத்தன. தினகரன் நாளிதழிடம் அதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. வார இதழ்களைப் பொருத்த வரை, ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன், இன்ன பிற பத்திரிகைகளிடம் நம்மால் நியாயமான செய்தியை எதிர்பார்க்க இயலாது. ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் கலை கைவந்தவர்களிடம், ராமர் கோயிலுக்கு ஆதரவான செய்தியை எதிர்பார்க்க முடியாது. நிமிர்ந்த 'நன்னடை' தினமணியே தடுமாறும்போது, ‘பத்திரிகைத் தொழில்’ நடத்துபவர்களை இங்கு எழுதி என்ன ஆகப்போகிறது?

முன்னொரு காலத்தில் அதீத தேச பக்தியுடன் ஹிந்து உணர்வுள்ள பெரியவரால் ஆரம்பிக்கப்பட்ட 'தி ஹிந்து' நாளிதழை விட்டுவிட்டு இக்கட்டுரையை எழுத முடியுமா? அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் வழக்கு விசாரிக்கப்படுவதற்கு முன்னரே தி ஹிந்து தனது பங்கிற்கு 'விசாரித்து' முடித்திருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த அயோத்தி அகழாய்வு தொடர்பான சரித்திர நிபுணர்களின் கட்டுரைகள் தொடர்ந்து அதில் வெளிவந்தன. அகழாய்வில், தற்போதைய கோயில் இருக்கும் இடத்திற்குக் கீழ் எந்தக் கோயிலும் இருக்கவில்லை; அப்படியே இருந்தாலும் ஹிந்து கோயில் கட்டுமானம் என்பதற்கு ஆதாரம் இல்லை; புத்த விகாரமாகவும் அது இருக்கலாம். அதை இடித்து கட்டப்பட்ட கோயில் பாபரின் படைத் தளபதியால் இடிக்கப் பட்டிருக்கலாம்; பாபர் மசூதி இருந்த இடத்தில் எந்த கட்டுமானமும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்படவில்லை...'' இப்படியாக தொடர்ந்து சரித்திரப் புரட்டர்களின் கட்டுரைகள் வெளிவந்தன. ஒருவகையில், நீதிபதிகளை நிர்பந்திக்கும் திட்டத்துடன் தான் அவை வெளியிடப்பட்டதாகத் தோன்றுகிறது. .
..
சரித்திர நிபுணர்கள் இர்பான் ஹபீப், ரொமிலா தாபர், டி.என்.ஜா உள்ளிட்ட அலிகார் பல்கலைக்கழகம், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்களின் கட்டுக்கதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டன. இந்த சரித்திர வல்லுனர்களின் கவலை தோய்ந்த அறிக்கை மும்பை டைம்ஸ் ஆப் இந்தியா-லும் தி ஹிந்து-விலும் தீர்ப்பிற்கு மறுநாள் வெளியானது குறிப்பிடத் தக்கது. இவர்கள் எந்தக் காலத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்? உண்மையை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? நமது துரதிருஷ்டம், நாட்டின் அறிவுலகம், இவர்களை பெரும் மேதை என்று நம்பிக் கொண்டிருப்பது தான்.

தொல்லியல் அறிஞர் நாகசாமி போன்றோர் அயோத்தி அகழாய்வில் கிடைத்த சான்றாதாரங்களை விளக்கி ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உள்ளனர். அந்த அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் நீதிபதிகள் சர்மா, அகர்வால் அளித்த தீர்ப்புகளின் பிற்சேர்க்கையில் குறிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நீதிபதியான கான் மட்டும் புத்திசாலித்தனமாக அந்த பிற்சேர்க்கையைத் தவிர்த்துவிட்டார். ஆயினும், மனசாட்சியுடன் தீர்ப்பு அளித்தார். 8,500 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்புக்களின் முழு அம்சங்களையும் இதுவரையிலும் எந்த அறிவுஜீவியும் படித்ததாகத் தெரியவில்லை. ஆனால், கூப்பாடு போட அவர்கள் தயங்கவும் இல்லை.

தற்போதும் அயோத்தி தீர்ப்பு குறித்த விவாதம் பத்திரிகைகளில் தொடர்கிறது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் அலச பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் உரிமை உள்ளது உண்மையே. ஆனால் அது ஒருசார்பாக இருக்க கூடாது. ‘செக்யூலரிசமேனியா’ வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள நமது ஊடகத்துறை, வழக்கம் போல ஒருசார்பாகவே கருத்துத் திணிப்பு பிரசாரத்தை நடத்துகிறது. இது புரியாமல் நாமும் அந்த நாளிதழ்களை காசு கொடுத்து வாங்கி அவற்றை நடத்துகிறோம்.

கடந்த அக். 2-ம் தேதி தி ஹிந்து-வில் ரொமிலா தாபரின் கட்டுரை வெளியாகியுள்ளது-அதே ‘கேள்வியும் நானே' பாணியுடன். ''சரித்திரம் மீதான மரியாதையை செல்லாக்காசாக்கிவிட்டு, மத நம்பிக்கையின் அடிப்படையில் அதனை அலஹாபாத் தீர்ப்பு மாற்றுகிறது'' என்கிறார் ரொமிலா. தற்போதைய அரசியலுக்காக முந்தைய சரித்திரத்தை மாற்ற முடியாதாம்! இதையும் ரொமிலா தான் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.

பாபரின் படைத்தளபதியால் இடிக்கப்பட்ட ராமர் கோயிலை மீண்டும் அமைப்பது இவருக்கு தவறு; 1992 -ல் இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடம் மட்டும் அங்கு எப்பாடுபட்டாவது கட்டப்பட வேண்டும். 1992 நிகழ்வும் சரித்திரம் தானே! அதை மட்டும் மாற்ற எண்ணலாமா?

தி ஹிந்து (THE HINDU) அஹிந்து (A HINDU) ஆகி மாமாங்கமாகிவிட்டது. அதனிடம் நடுநிலையை எதிர்பார்ப்பதோ, நாட்டுநலனை உத்தேசித்த செய்திகளை எதிர்பார்ப்பதோ, நமது பிழை. ‘’அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் பல ஜன்மஸ்தான் விவகாரங்கள் எழ வாய்ப்பளித்துவிட்டது’’ என்றும் ஹிந்துக்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறார் ரொமிலா. அதற்காக மட்டும் அவருக்கு நன்றி!

மற்றபடி, எத்தனை முறை ஒரே செக்யூலரிச பொய்யைச் சொன்னாலும் அதனால் இனி எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஆயினும் இதனை நமது அபத்த ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டு பரப்புவது ஏன்?

(தொடரும்)
----------------------------------------

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக