செவ்வாய், அக்டோபர் 05, 2010

அயோத்தி தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் - 2

இதற்கு முன் படிக்க வேண்டியது: முதல் பாகம்

அயோத்தி வழக்கில் வந்துள்ள இத்தீர்ப்பு நிச்சயமாக ஹிந்துக்களுக்கு நூறு சதவீத நியாயத்தை வழங்கிவிடவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில், இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடத்தின் கீழ் பிரமாண்டமான கோயில் கட்டுமானம் இருந்தது தெளிவாகியுள்ளது. அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஹிந்துக்கள்வசமே ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாட்டின் சூழல் அத்தகைய தீர்ப்பு வழங்கத் தடையாக இருப்பதை ஏற்றே சமரசமான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் ‘கட்டப் பஞ்சாயத்து’ தீர்ப்பு என்று சில முன்னணி நாளிதழ்கள் வர்ணித்துள்ளன. ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’ என்ற பாரதியின் முழக்கத்தை முத்திரை வாக்கியமாகக் கொண்டுள்ள ‘தினமணி’யும் இதே தடம் புரண்ட பாதையில் தலையங்கம் தீட்டி இருக்கிறது....
.
தினமணி நாளிதழுக்கு என்று பிரத்யேக வரலாறு உண்டு. தினமணி என்றுமே மத்திய, மாநில அரசுகளின் ஊழல்களை அம்பலப்படுத்தி வந்துள்ளது. அரசியல் ஆளுமைகளுக்கு அடிபணியாத ராம்நாத் கோயங்கா நடத்திய பத்திரிகை அது. அதன் தற்போதைய ஆசிரியர் கே.வைத்தியநாதன் தினமணியின் பாரம்பரியத்தைக் காத்து வந்திருக்கிறார். அவரது தலையங்கங்கள் நேர்மையின் குரலாக ஒலித்துள்ளன. இலங்கை விவகாரத்தில் தமிழகத்தின் எந்த நாளிதழும் செய்யாத அரும்பணியை தினமணி செய்தது. ராமர் கோயில் இயக்கத்தின்போதும் (1984 - 92) தினமணி ஆற்றிய பணியை யாரும் மறந்துவிட முடியாது.

அப்படிப்பட்ட தினமணியின் அக்டோபர் - 1 தேதியிட்ட 'அரசியல்தனமான தீர்ப்பு' தலையங்கம் கண்டிப்பாக அபத்தமானது என்றே சொல்ல வேண்டும். அயோத்தி தீர்ப்பை 'கட்டப் பஞ்சாயத்து' என்று விமர்சித்திருக்கிறது தினமணி தலையங்கம். இணையதளத்தில் இத்தலையங்கம் பெற்றுள்ள பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் எவரும், தலையங்கத்தின் நோக்கம் திசை திரும்பிவிட்டதை உணர முடியும்.

அயோத்தி தீர்ப்பு அனைவரையும் ஏற்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே, நீதிபதிகள் சமரச மயமான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். அதனால் தான், நாடு முழுவதும் பீதி மாறி அமைதி ஏற்பட்டது. தீர்ப்பின் உடனடி விளைவுகள் இவை. அதைப் புரிந்து கொள்ளாமல், எட்டாயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பின் முழு விபரத்தைப் படிக்கும் அவகாசம் இல்லாத நிலையில் எழுதப்பட்ட 'அவசரக் குடுக்கை' தலையங்கம், அதற்கான பலனைப் பெற்றுவிட்டது. ஹிந்துக்களை வக்கிரமாக வசைபாடும் கும்பல் பின்னூட்டங்களில் புகுந்துகொண்டு தினமணியின் தரத்தை நாற அடித்தது.

தொலைநோக்குப் பார்வையும், பின்விளைவுகளை உத்தேசிக்கும் தீர்க்கதரிசனமும் இல்லாத தலையங்கம், ‘மவுன்ட் ரோடு மாவோ’ பத்திரிகையில் வெளிவந்த கருத்துத் திணிப்பு செய்திகளை விட பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மாவோ பத்திரிகை இப்படித்தான் எழுதும் என்ற தெளிவுடன்தான் அதனை யாரும் படிக்கிறார்கள்; தினமணி அப்படியல்ல. அந்த நாளிதழில் வந்தால் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் இருக்கிறது. திருவாளர்கள் சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் வழிநடத்திய நாளிதழ் தினமணி. அந்த நம்பிக்கையை இத்தலையங்கம் போக்கிவிட்டது.

இந்த இடத்தில் சில கேள்விகள் எழுகின்றன. கட்டப் பஞ்சாயத்து என்பது என்ன? பஞ்சாயத்திற்கும் இதற்கும் என்ன வித்யாசம்? நமது பாரம்பரிய நீதிமுறையில் பஞ்சாயத்து முறை இருந்ததே தவறா? சமீபகாலமாக சமரசத் தீர்ப்பாயங்களை நீதிமன்றங்களே நடத்துகின்றனவே, அவையும் தவறா? பஞ்சாயத்து என்ற வார்த்தை கீழ்த்தரமானதா?

இதற்கு பதில் வேண்டுமானால் நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்த ஆட்டிடையனும் கூட நடுநிலையான தீர்ப்பு சொன்னதை நாம் கதைகளில் கேட்டிருக்கிறோம். தற்போதைய இ.பி.கோ சட்டங்கள் வருவதற்கு முன்னரும் இந்நாட்டில் பன்னெடுங்காலம் நீதி காப்பாற்றப்பட்டுள்ளது.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி


-என்பது நடுநிலை நாயகர்கள் குறித்த திருக்குறளின் விளக்கம் (12 -8).

அத்தகைய சான்றோர் ஐவர் சேர்ந்த அவையே 'பஞ்சாயத்து'. அவர்கள் முன்பு வரும் எந்தப் பிணக்கும் நிவர்த்தியாகும்; வழக்குகள் உடனே பைசலாகும். அங்கு எந்த வழக்கும் 60 ஆண்டுகள இழுத்துக் கொண்டிருக்காது.

ஆங்கிலேயரும் முகலாயரும் வருவதற்கு முன்னர் நமது நாட்டில் இயல்பான சட்டம்- நீதி வழங்கு நெறிமுறைகள் இருந்தன. தமிழின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல சமுதாய நீதி கூறும் நூல்கள் என்பதிலிருந்தே, நமது முன்னோர் நீதிக்கு அளித்த முக்கியத்துவத்தை உணரலாம். அத்தகைய நாட்டில் தான், தற்போது கோடிக் கணக்கான வழக்குகள் குவிந்து, விசாரிக்க முடியாமல் மலையெனக் கிடக்கின்றன. சட்டமே பிரதானம் என்று சொல்லிக் கொண்டே, அதைத் திருத்தும் மசோதாக்களை சுயவிருப்பப்படி நிறைவேற்றிக் கொண்டே, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றங்கள் புரிந்துகொண்டே வாழப் பழகிவிட்ட சமுதாயமாக நாம் மாறிவிட்டோம். அதனால்தான், பெருந்தன்மையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் அயோத்தி வழக்கில் மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குற்றம் கண்டு தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

பஞ்சாயத்து தீர்ப்பு என்பது- அக்குழுவில் உள்ள ஐந்து சான்றோர் பெருமக்களும் இயைந்து வழங்குவது; நடுநிலைமை, இறையச்சம், மனிதாபிமானம் ஆகியவற்றின் சேர்க்கை அது; வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரின் வலிமை, பாதிப்பு, தாங்கும் திறன் ஆகியவற்றை உத்தேசித்து அதிகாரமும் கருணையும் கலந்து வழங்குவது; குடும்ப நலம், கிராம நலம், நாட்டுநலம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மத்தின் அடிப்படையில் வாய்மொழியாக வழங்கப்பட்டது; பாரம்பரிய நீதிநூல்களும், இதிகாசக் கதைகளும் மிக சாதாரணமான பழமொழிகளும் கொண்டு எளிதாக பிரச்னைகளைத் தீர்த்தது.

பஞ்சாயத்திற்கும் கட்டப் பஞ்சாயத்திற்கும் என்ன வித்யாசம்? தர்மவான்களான சான்றோர் கூடி வழங்கியது பஞ்சாயத்து தீர்ப்பு. அந்த இடத்தை அதிகாரம் மட்டுமே படைத்த நிலச்சுவான்தாரர்கள் பிடித்துக்கொண்டபோது கட்டப் பஞ்சாயத்து ஆனது. ஒரே வரியில் சொல்வதானால், அண்ணா ஹசாரே செய்வது பஞ்சாயத்து; அழகிரி செய்வது கட்டப் பஞ்சாயத்து. தற்போதைய அயோத்தி தீர்ப்பை எவ்வாறு கட்டப் பஞ்சாயத்து என்று விமர்சிப்பது?

நாட்டில் வழக்குகளைக் குறைக்க சமரசத் தீர்வே சரியான முறை என்று புரிந்துகொண்டு உச்சநீதிமன்றம் முதல் கீழ்நிலை நீதிமன்றம் வரை முயற்சி மேற்கொண்டிருப்பது, பல இடங்களில் நல்ல பலனைத் தருவதைக் காண்கிறோம். சமரசம் என்பதே விட்டுக்கொடுப்பதும், பெற்றுக்கொள்வதும் தான். ஏதோ ஒரு வகையில் வழக்கு தீர்ந்து இரு தரப்பினருக்கும் அமைதி கிட்டினாலே கோடி புண்ணியம்.

கிராமத்தில் ஒரு கதை உண்டு. சகோதரர்கள் இருவர் தங்கள் நிலத்தை பாகப்பிரிவினை செய்ய நீதிமன்றத்தை நாடினராம். அதற்காக தங்கள் வீடு, நகைகளை விற்று வழக்கு நடத்தினராம். இறுதியில், சொத்தும் இழந்து நிலமும் இழந்து, வழக்கை நடத்திய வழக்கறிஞர்களுக்கே அடிமாட்டுவிலைக்கு விற்றுவிட்டு அதே நிலத்தில் கூலிவேலை செய்தார்களாம். இதுபோன்ற எத்தனை குடும்பங்களின் அழிவை நீதிமன்ற வராந்தாக்களில் நாம் கண்டிருக்கிறோம்! நமது உரிமையியல் நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு வரவே எத்தனை காலம் ஆகிறது? சாட்சிகள் மறைந்து, வம்சமே பூண்டற்றுப் போனபின்னும் வாய்தா வாங்கும் வழக்குகள் நடவாமலா உள்ளன? பல தலைமுறைகள் வன்மத்துடன் காத்திருந்து இறுதியில் பெறும் தீர்ப்பால் வம்சாவளிக்கு என்ன பலன் கிடைக்க முடியும்?

இத்தகைய நிலையில், நாட்டு நலனை உத்தேசித்து சமரச முயற்சியாகவே இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர் மூன்று நீதிபதிகளும். ஹிந்துக்கள் தரப்பில் முழு நியாயம் இருந்தும் கூட, அனுபவ பாத்தியதையின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை ஷன்னி வக்பு வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது அதனால் தான். தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமல்லாது, நாட்டின் தற்போதைய சூழலையும் அரசியல் நிலவரத்தையும் உலகின் போக்கையும் பரிசீலித்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் தான் ''யாருக்கும் வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை'' என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். முஸ்லிம் தலைவர்களும் கூட, தீர்ப்பு ஏமாற்றம் அளித்தாலும் அமைதியுடன் அதனை ஏற்கக் காரணம் இதுவே. மத்திய அரசும், உ.பி. மாநில அரசும் நிம்மதிப் பெருமூச்சு விட வாய்ப்பளித்துள்ளது இத்தீர்ப்பு.

தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் பிரதானத் தீர்ப்பை அளித்திருந்தால், இத்தகைய அமைதி கிட்டாமல் போயிருக்கலாம். அதற்கு சில சம்பவங்களை இங்கு நினைவுகூரலாம்:

கடந்த செப். 6-ம் தேதி, அமெரிக்காவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கிறிஸ்தவ மத போதகர் டெரி ஜோன்ஸ் என்பவர் ‘செப். 11-ம் தேதியன்று திருக்குரானை எரிக்கப்போவதாக’ அறிவித்தார். அதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது மிரட்டலை வாபஸ் பெற்றார். ஆயினும் உலகில் வேறு எங்கும் நிகழாத வன்முறை ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டது. அந்த வன்முறையில் காஷ்மீர் மக்கள் 18 பேர் பலியாகினர். இஸ்லாமிய நாடுகளில் கூட நிகழாத அந்த எதிர்ப்பும் வன்முறையும் இந்தியாவில் ஏன் ஏற்பட்டது? நமது அண்டைநாடான பாகிஸ்தான் தொடர்ந்து நடத்திவரும் விபரீத விளையாட்டின் விளைவு அது. அத்தகைய எதிரிக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக தீர்ப்பு அமைய வேண்டாம் என்று நீதிபதிகள் சிந்தித்திருக்கலாம்.

நமது ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பரப்பிவரும் மதச்சார்பின்மைக்கு மாசு நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலும் நீதிபதிகள் யோசித்திருக்கலாம். நாட்டின் அமைதியைக் கருதி அரசும் நிர்பந்தம் செய்திருக்கலாம். நியாயத்தை சொல்லப்போய் ஒட்டுமொத்த தீர்ப்பும் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற முன்யோசனை இருந்திருக்கலாம். எதுவாயினும் நாட்டுநலன் அடிப்படையில், யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற சிந்தனை நல்லது தானே? இத்தகைய தருணத்தில் யாவரையும் சமாதானப் படுத்தும் வகையில் உண்மையை சிறிதளவேனும் சொல்ல வேறு வாய்ப்பு இருக்கிறதா என்ன?

இதனைப் புரிந்துகொள்ளாமல், தினமணி தீட்டிய தலையங்கம் ஹிந்து எதிரிகளின் பிரசார சாதனமாகி இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, தினமணி தனது பாரம்பரியப் பெருமையைக் குலைக்கும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் இத்தலையங்கத்தை எழுதிவிட்டது. அதன் முக்கிய பகுதி இதோ...

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது....

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, ‘ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது....

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது....

அதன் அடிப்படையிலும், ‘நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, ‘இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது...
அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல....

இந்த 'நம்பிக்கையின் அடிப்படையில்' என்ற நீதிபதியின் வார்த்தைகள் தான் மாபெரும் குற்றமாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில், ''ஸ்ரீராமனின் பிறப்பை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது; அது நம்பிக்கையின் பாற்பட்டது'' என்று ஹிந்து இயக்கங்கள் பல ஆண்டுகாலமாக சொல்லி வந்துள்ளன. அதையே அலஹாபாத் உயர்நீதிமன்றம் கூறியதை ஊடகங்களால் ஏற்க முடியவில்லை. அவர்களுக்கு மூன்று நிகழ்வுகளை நினைவூட்டி கேள்வி கேட்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

1. காஷ்மீரின் ஹஸ்ரத்பால் மசூதியில் ஒரு பேழையில் வைக்கப்பட்டிருந்த இறைதூதர் முகமது நபி அவர்களின் புனித முடி ஒன்று காணாமல் போய்விட்டதால் 1991-ல் நிகழ்ந்த வகுப்புக் கலவரத்தை நாடு மறந்திருக்காது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, காணாமல் போன அந்த முடி அவசர அவசரமாகக் கண்டுபிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் கொல்கத்தா கடுமையாக பாதிக்கப்பட்டது. காணாமல் போன முடியைக் கண்டறிய இந்திய அரசு ஏன் அப்போது கடும் முயற்சிகளை மேற்கொண்டது? இஸ்லாமியர்களின் நம்பிக்கை அரசை ஆட்டுவித்தது. ஆக வன்முறையைக் கைக்கொள்ளும் சமூகம் தனது நோக்கத்தை உடனே நிறைவேற்றிக் கொள்கிறது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குகள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நம்பிக்கைக்கு ஊறு நேரும் என்பதாலா?

2 . கணவனால் விவாகரத்து செய்யப்பட 60 வயது முஸ்லிம் பெண்மணியான ஷா-பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவுடன், இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, 1986-ல் 'முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமை பாதுகாப்பு சட்டம்' என்ற புதிய சட்டத்தையே கொண்டு வந்ததே ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு! இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தில் தலையிடக் கூடாது என்ற எண்ணம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது? அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை சார்ந்தது; சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று எப்படி அரசு தீர்மானித்தது? மத நம்பிக்கைக்காக ஒருவரது வாழ்வையே குழி தோண்டிப் புதைத்த அரசும், அதைக் கண்டிக்காத உச்சநீதிமன்றமும் குறித்து இந்த ஊடகங்கள் என்ன எழுதிக் கிழித்தன? பதிக்கப்பட்ட ஷா-பானுவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிவர்த்தி ஏன் கிடைக்கவில்லை?

3. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாட்டில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக 2010-ல் தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் தலையிடுவதாக அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக திருமணப் பதிவு சட்டத்தில் முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அரசு அறிவித்தது. இது எந்த வகையில் சட்டத்தின் பாற்பட்டது? நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டத்தை ஓராண்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 1995-ல் உத்தரவிட்டது, இதுவரை கண்டுகொள்ளப்படாதது ஏன்? சட்டத்தை விட, நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பைவிட, இஸ்லாமியர்களின் நம்பிக்கை முக்கியம் என்பதால் தானே? அதே நம்பிக்கை அடிப்படையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்தால் மட்டும் மதச்சார்பற்றவர்களுக்கு எங்கிருந்து நியாய ஆவேசம் வருகிறது?

ஆக மத நம்பிக்கையைப் பொருத்த மட்டிலும் ஹிந்துக்களின் நம்பிக்கை கீழானது; இஸ்லாமியர்களின் நம்பிக்கை மேலானது என்று ஊடகங்கள் கருதுகின்றனவா? இதற்கு காரணம் தங்கள் மத நம்பிக்கைக்கு ஊறு நேர்ந்தால் முஸ்லிம்கள் வன்முறையில் இறங்குவார்கள் என்ற அச்சம் தானே காரணம்? ஹிந்துக்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்; ‘இடிச்சபுளிகள்’ என்பது தான் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் கேவலப்படுத்தப்படுவதன் காரணமா?

1992-க்கு முன் ஹிந்துக்களின் நிலைமை உண்மையில் 'இடிச்சபுளி' தான். அயோத்தி அதை மாற்றிவிட்டது. அதனால்தான் ஹிந்துக்களின் மத நம்பிக்கைகள் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கின்றன. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளுக்காக அநியாயங்களை சகித்துக்கொண்டவர்கள், நாட்டு நலனுக்காக ஏன் இந்த 'நம்பிக்கை அடிப்படையிலான' தீர்ப்பை ஏற்கக் கூடாது? ஒரு வாதத்திற்காக எழுப்பப்படும் கேள்விகள் இவை.

உண்மையில், ஸ்ரீராமனின் பிறப்பை நிர்ணயிக்கும் தகுதியும் ஞானமும் எவருக்கும் கிடையாது. அயோத்தியில் தற்போதுள்ள ராம்லாலாவை இடம் மாற்றும் துணிவும் யாருக்கும் கிடையாது. அயோத்தியில் தரைமட்டமாக்கப்பட்ட கும்மட்டம் இருந்த இடத்தில் மசூதி எழுப்பும் வாய்ப்பும் இனி கிடையாது. இவை நிதர்சனங்கள்; சவால்களல்ல. இதை உணர்ந்ததால் தான் நியாயமான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

இங்கு சட்டம் பேசவில்லை; தர்மம் பேசியுள்ளது. சட்டப்படி என்றால் அனைத்து நிலமும் ஹிந்துக்களுக்கே கிடைத்திருக்கும். அகழாய்வு சாட்சியங்கள் ஹிந்துக்களுக்கே சாதகமாக உள்ளன. ஆயினும் நாட்டு நலனை உத்தேசித்து, எவரையும் தோற்கடிக்காமல், மிகவும் நாசூக்கான முறையில், நியாயத்தையும் சொல்லி, நீதியை நிலைநாட்டியுள்ளனர் நீதியரசர்கள்.

அறிவை விட அன்பு மேலானது; சட்டத்தை விட தர்மம் மேலானது. அந்த அடிப்படையில்தான் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை 'கட்டப் பஞ்சாயத்து' என்று பகடி செய்யாமல், முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவது தான் ஊடகங்கள் முன்னுள்ள தற்போதைய கடமை.

நில உரிமை தொடர்பான பல நூற்றாண்டுகள் கடந்த வழக்கில் அதிகபட்ச சாத்தியக்கூறுகளுடன் கூடிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே இறுதியல்ல; உச்சநீதிமன்றம் செல்வதல்ல இதன் அடுத்த படிநிலை. ஹிந்து- முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் ஒருங்கே அமர்ந்து சுமுகமான முறையில் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முதல்படியாகவே அயோத்தி தீர்ப்பு உள்ளது. இதை உரக்கச் சொல்லும் துணிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; 'பஞ்சாயத்து' என்று தீர்ப்பை விமர்சித்து ஊடகங்கள் தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொள்ளவேண்டாம். நான் மிகவும் நேசிக்கும் தினமணி நாளிதழுக்கும் இதுவே எனது வேண்டுகோள்.

(தொடரும்)
---------------------------------------
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக