திங்கள், அக்டோபர் 25, 2010

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் பூதங்கள்..

தமிழகம் முழுவதும் புறநகர்த் தனியார் பேருந்துகளில் சத்தமில்லாமல் பயணச்சீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாய் வீதம் விலை அதிகரித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இம்மாதிரி கட்டணம் உயர்த்தப்பட்டதே தெரியாதது போல தமிழக அரசு மாய்மாலம் செய்கிறது.

டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, மொத்தக் கட்டணத்தில் ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை தனியார் பேருந்துகள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் கருணாநிதி கண்டித்தார். அரசு அனுமதியின்றி தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்து ஒரு மாதமாகிவிட்டது. இதுவரை எந்த ஒரு தனியார் பேருந்து மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதில் கைவைத்தால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால்தான், அரசு போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தாலும் கண்டுகொள்ளாது இருக்கிறது அரசு.

உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் டீசல் விலை அதிகரிப்பு 30 சதவீதமாக உள்ளது. தவிர ஊழியர் சம்பளம், உதிரிபாகங்களின் விலை உயர்வு போன்றவையும் போக்குவரத்துக் கழகங்களின் கழுத்தை நெரிக்கின்றன. எனவே தான், நகரப் பேருந்துகளில் 'சொகுசுப் பேருந்து', 'தாழ்தளப் பேருந்து' என்ற பெயரில் பேருந்துகளைப் பிரித்து அவற்றிற்கு மட்டும் கட்டணங்களை நாசூக்காக உயர்த்தியது தமிழக அரசு. சிறிது சிறிதாக பழைய பேருந்துகளை மாற்றும்போது அவற்றை 'சொகுசுப் பேருந்து'களாக மாற்றுவதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இவை பார்ப்பதற்கு மட்டுமே அழகாகவும் லட்சணமாகவும் காட்சி அளிக்கின்றன. இதில் பயணம் செய்தால் முதுகுவலி வருகிறது என்கின்றனர் பயணிகள். ஆனால், போக்குவரத்துக் கழகங்களின் முதுகுவலியைப் போக்குவனவாக இவைதான் தற்போது விளங்குகின்றன.

அரசு போக்குவரத்து நிறுவனங்களே மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியதைக் கண்ணுற்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள், தாங்களும் கூடி ஆலோசித்து, கட்டணச்சீட்டு ஒன்றிற்கு ஒரு ரூபாயாவது அதிகரிக்கத் திட்டமிட்டு அதிரடியாக விலையை (ஜூலை மாதம் துவங்கி) ஏற்றினர். இது குறித்து அரசிடம் முறையீடு செய்யவோ, வேண்டுகோள் விடுக்கவோ அவர்கள் தயாரில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் பார்த்து 'கவனித்து விட்டதாக' தகவல். அதனால் தான், தனியார் பேருந்து உரிமையாளர்களின் அத்துமீறலை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்கிறார்கள், தனியார் பேருந்து நடத்துனர்கள்.

ஒரு சிறு கணக்கு போட்டுப் பாருங்கள். தனியார் பேருந்துகள் இந்த ஒரு ரூபாய் அதிகரித்த கட்டணத்தால் பெறும் லாபம் புரியும்.

தனியார் புறநகர்ப் பேருந்துகள் சிறு நகரங்களை இணைப்பவை. உதாரணமாக கோவை- திருப்பூர், கோவை- பொள்ளாச்சி, ஈரோடு- கோவை, ஈரோடு- சேலம் என்று நகர்களை இணைப்பவையாகவே அவை இயங்குகின்றன. நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ஆறு முறை (ட்ரிப்) இரு நகரங்களிடையே அவை சென்று வருகின்றன. ஒரு முறைக்கு குறைந்தபட்சம் 48 பேர் பயணிக்க முடியும். தவிர செல்லும் வழியில் இடை நிறுத்தங்களில் பயணிகளை அனுமதிக்கின்றன. அந்த வகையில் குறைந்தபட்சம் 40 பயணிகள் பயணிக்கின்றனர். அதாவது மொத்தத்தில் ஒரு முறைக்கு குறைந்தது 80 பயணிகள் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதுவே 120 வரை அதிகரிப்பதும் உண்டு.

ஆக ஒரு நாளுக்கு, குறைந்தபட்சம் (6 X 2 X 80) ரூ. 960 கூடுதலாக (பயணச் சீட்டிற்கு ஒரு ரூபாய் என்ற கணக்கீட்டில்) வசூலாகிறது. இதுவே, பயணச் சீட்டிற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 வரை கூடுதலாக வசூலிப்பதைக் கணக்கிட்டால் இந்த லாபம் இன்னும் அதிகமாக இருக்கலாம். தவிர ஐம்பது பைசா சில்லறை கொடுக்காமல் இருப்பதன் வாயிலாகவும் தனியார் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயாவது தேறும்.

இதன்மூலம் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒவ்வொரு தனியார் பேருந்தும் குறைந்தபட்சம் (4 X 30 X ரூ 960.00 ) ரூ. ஒரு லட்சம் வரை கூடுதலாக சம்பாதித்துள்ளன. இதில் பிச்சைக்காசுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கையூட்டாகத் தரப்பட்டுள்ளது.

கைநீட்டி வாங்கியதன் நன்றிக்கடனாகவே அரசு தனியார் பேருந்துகளின் அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதற்கு, முறையாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டுப் போக வேண்டியது தானே? ''தமிழகத்தில் மட்டுமே பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை; நாட்டிலேயே இங்குதான் பேருந்துக் கட்டணங்கள் குறைவாக உள்ளன'' என்று தம்பட்டம் அடிக்காமல் இருக்கலாமே!

தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டிற்கு பல உதாரணங்கள் கூற முடியும். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையிலும் இவ்வாறுதான் நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைப்படி தலையிட்டது அரசு. ஆனால் ஒரு பிரயோசனமும் மக்களுக்கு இல்லை. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தனியே அமைச்சரைச் சந்தித்து 'கவனித்து விட்டதாக' தகவல். தற்போது நீதிபதி கோவிந்தராஜர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது பரிந்துரைக்கு அவர் பொறுப்பில் இருந்தபோதே மரியாதை இல்லை. தனியார் பள்ளிகள் இஷ்டம் போல ரசீதின்றி கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தன. இனி எந்தக் கட்டுப்ப்பாடும் இல்லாமல் வசொல் வேட்டை தொடரும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இக்குழு சமர்ப்பிப்பதாக இருந்த மறுபரிசீலனை அறிக்கை இனி எப்படி வருமோ, அந்த கோபாலபுரத்தில் எழுந்தருளியுள்ள மாயக் கண்ணனுக்கே வெளிச்சம்!

திரையரங்க கட்டணங்களும் (புதுப்படங்களுக்கு மட்டும் பிரத்தியேக கட்டண உயர்வு) இதேபோலத் தான் அரசின் சால்ஜாப்பு மிரட்டல்களால் கட்டுப்படாமல் இருக்கிறது. ஆசிரியர் பனி நியமனத்தில் நடந்த களேபரங்கள் அனைவரும் அறிந்தவை. உணவகங்களுக்கு விடுக்கப்பட்ட ''குறைந்தவிலை சாப்பாடு போடாவிட்டால் நடவடிக்கை'' என்ற மிரட்டலுக்கு நேர்ந்த கதியும் அனைவரும் அறிந்தது தான்.
இவ்வாறாக, தமிழக அரசு நடத்தும் நாடகங்களில் பலனுறுவது அமைச்சர்களும், முறைகேட்டில் ஈடுபடுபவர்களும் மட்டுமே என்ற நிலை நிலவுகிறது. பேய் ஆட்சி செய்யும் நாட்டில் பூதங்கள் பிணம் தின்னுவது (சாத்திரங்களே சாப்பிடும்போது) அதிசயமாக இல்லை.
.
ஆனால், தமிழகத்தில் மட்டுமே கருத்துரிமை மதிக்கப்படுகிறது என்றும் மார் தட்டிக் கொள்கிறார்கள். யார் சொல்வதையும் கேட்டால் தானே, அதனால் கோபமோ, அச்சமோ வரும். இந்த அரசு தான் எதையும் காதில் வாங்கும் அரசு இல்லையே. கைகளில் வாங்குபவர்களுக்கு காதுகள் கேட்பது நல்லதல்ல என்பது - உண்மைதான் உடன்பிறப்புக்களே...
.

செவ்வாய், அக்டோபர் 19, 2010

முரண்பாடுகள் யாரிடம்? - 2


தமிழ் ஹிந்து இணையதளத்தில், 'அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்' என்ற எனது கட்டுரைக்கு பின்னூட்டங்களிட்ட திருவாளர் ஆர்.வி.க்கு எனது பதில்கள்...

----------------------------------------


சேக்கிழான்,
// ஒரு தகராறு, இரண்டு தரப்பு. அவர்களுக்குள் தீர்த்துக்கொள்ள முடியவில்லை, கோர்ட்டுக்கு போகிறார்கள். தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்வேன், இல்லை என்றால் மறுப்பேன் என்று ஒரு தரப்பு சொல்லுமானால் கோர்ட்டுக்கும் கேசுக்கும் arbitration-க்கும் பொருளே இல்லையே? எனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் நான் ஏற்கமாட்டேன், ஆனால் உனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் நீ ஏற்க வேண்டும் என்று சொல்லப்படும் அறிவுரையில் உள்ள அடிப்படை முரண்பாடு உங்களுக்கு புரியவில்லையா? எப்படி என் தரப்பு சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதே போல தன் தரப்பு சரி என்று வக்ஃப் போர்டும் நினைக்கலாம் இல்லையா? இதே லாஜிக்கை மறு தரப்பும் பயன்படுத்தி எனக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை, நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னால்? மன்னிக்கவும், எனக்கு வேண்டியதை நான் செய்வேன், process எனக்கு முக்கியமில்லை, நான் ஏற்றுக்கொண்டிருக்கும் மார்க்கம்தான் சரி, நான் சொல்வதுதான் சட்டம், நீதி, நியாயம், அதன்படிதான் அடுத்த தரப்பு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த “கட்டடத்தை” இடித்த பாபரின் “விழுமியம்”. அதை நான் நிராகரிக்கிறேன். பாபரின் செயலை வன்மையாக எதிர்க்கும் நீங்கள் அப்படி எதிர்ப்பதற்காக அவரது வால்யூ சிஸ்டத்தையே பயன்படுத்தினால் எப்படி? தவறான வால்யூ சிஸ்டத்தால் தவறான செயல்கள் நடந்தன. அந்த தவறை சரி செய்கிறேன், ஆனால் அந்த வால்யூ சிஸ்டம்தான் எனக்கு வேண்டும் என்றால்!//
-R.V (16.10.2010)

மீண்டும் எனது பதில்:
அன்புள்ள ஆர்.வி.

தவறான நபர்களை ஒப்பிடக் கூடாது. ஆக்கிரமிப்பாளன் பாபருடன் அவதார புருஷன் ராமனை ஒப்பிடவே கூடாது. நாடு விடுதலை பெற்றவுடன் யூனியன் ஜாக் கொடி அகற்றப்பட்டு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது போல, சுதந்திரம் பெற்றவுடன் சோமநாதர் ஆலயம் பட்டேலால் புனரமைக்கப்பட்டதுபோல, அயோத்தி ராமர் கோயிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உங்களைப் போலவே நமது புதிய இந்திய ஆட்சியாளர்களும் இருந்த காரணத்தால் தான், ராமர் கோயில் விவகாரமானது.

திரேதா யுகத்து ராமனுக்கு தற்போதைய நீதிபதிகளால் கண்டிப்பாக பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது. இதில் எந்த சட்டத்திற்கும் வேலை இல்லை. இதைச் சொல்வது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சட்டத்தை மீறிய சலுகைகளைச் சுட்டிக் காட்டுவது (ஷாபானு வழக்கு) அதே போன்ற சட்டமீறல்களை ஹிந்துக்களுக்கும் வழங்குமாறு கோருவதல்ல; நமது மக்களுக்கு நாம் எப்படி பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்பதை சுட்டிக் காட்டவே.

வழக்கிற்கு சம்பந்தமில்லாத வக்பு வாரியத்தையும் ராமர் பக்தர்களையும் நீங்கள் ஒப்பிட்டதில் இருந்தே நீங்கள் ‘தெளிவான குழப்ப’த்துடன் இருப்பது தெரிகிறது. குழப்பத்தைத் தெளிவிக்க முடியும். ‘தெளிவான குழப்பத்தை’த் தெளிவிப்பது சற்று சிரமம் தான்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்காக ஷாபானு வழக்கிற்கு விரோதமாக புதிய சட்டம் நிறைவேற்றிய புத்திசாலிகள், உச்சநீதிமன்றத்திலும் ராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் என்ன செய்வார்கள்? அப்போதும் 'வால்யூ சிஸ்டம்' பேசிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம். மன்னிக்கவும், நான் அப்படி நினைக்கவில்லை. ஹிந்துக்களுக்கு நீதியையும், நடுநிலையையும் போதிக்க வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

நாட்டுப் பிரிவினை வழங்கிய ஆழமான காயங்களை மீறியும், உங்களைப் போன்றவர்களால் எப்படி இவ்வாறு விதண்டாவாதம் செய்ய முடிகிறது என்று புரியவில்லை. பரவாயில்லை, நீங்கள் மதச்சர்பற்றவராகவே, நீதிமானாகவே இருங்கள். கண்ணன் காட்டிய வழியில் ஹிந்துக்கள் ராமர் கோயிலைக் கட்டிக் காட்டுவார்கள்.

காண்க: தமிழ் ஹிந்து
----------------------------------------

//ஆளைக் கொல்பவர்கள் போக வேண்டிய இடம் தூக்கு மேடை - அங்கே என்ன ஹிந்து முஸ்லிம்? நீங்கள் இதை புலம்புவதில் பொருளில்லை என்று ஒதுக்கக் கூடாது//
-R.V (16.10.2010)

நமது நாடாளுமன்றத்தைத் தாக்கியதற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு தூக்குமேடைக்கு சென்றுவிட்டாரா? மும்பை தாக்குதலில் தொடர்புடைய கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதா? அங்கே ஏன் பாகுபாடு? எதற்கு பயம்? திரு. ஆர்.வி தனது தளத்தில் இதுபற்றி துணிவுடன் முதலில் எழுதட்டும்!
.
முஸ்லிம்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்பதால் தான் ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் (காவல்துறையினர் உள்பட) வரை அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்களது வழிமுறையை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவர்களது தவறுகளைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பவர்கள் தான், அமைதியாக ஷாகா நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.சை வசை பாடுகிறார்கள். அதைச் சுட்டிக் காட்டவே ''முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது?'' என்று நான் கேட்டிருந்தேன். அதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பது எனக்கும் புரியவில்லை.

// அப்படி ஹிந்து துறவிகள் எல்லாரும் உண்மையான துறவிகளாக இல்லையே? மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பற்றி எந்தப் பத்திரிகை தவறாக எழுதி இருக்கிறது? அப்படி எழுதினால் பொங்கி இருப்பார்கள். நித்யானந்தாவையும் பிரேமானந்தாவையும் பற்றி உண்மையாக செய்தி தருவது ஊடகங்களின் கடமையே//

நண்பர் ஆர்.வி,

காஞ்சி பரமாச்சாரியார் பற்றி பகுத்தறிவுத் திலகங்கள் அள்ளித் தெளித்த அவதூறுகள் உங்களுக்கு தெரியவில்லையா? இன்றும் கூட அவரை பெரிய சங்கராச்சாரி என்று தானே திருவாளர் வீரமணி வெளியிடும் விடுதலை குறிப்பிடுகிறது? அருளாளர் கிருபானந்தவாரியாரை கழகத்தினர் துரத்தித் துரத்தி அடித்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியாதா?

தவறு செய்யும் யாரையும் கண்டிக்க உரிமை உள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஊடகங்கள் ஏன் திருச்சி ஜோசப் கல்லூரி அவலம் குறித்து (கன்யாஸ்திரி கற்பழிப்பு) அடக்கி வாசிக்கிறது? கொலைக் குற்றம் சாட்டப்பட்ட டில்லி இமாம் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காதது ஒருபுறம் இருக்கட்டும், அவரது முகத்திரையை மட்டும் ஏன் கிழிக்க ஊடகம் மறுக்கிறது? ஊடகங்கள் செய்ய மறுத்த அந்த கைங்கரியத்தை ஏன் ஆர்.வி. தனது தளத்தில் செய்து பாராட்டுச் சான்றிதழ் பெறக் கூடாது?
.

.

ஞாயிறு, அக்டோபர் 17, 2010

படையென சங்கம் விரைகிறது...


யுவக்களை மிகுந்த இளைஞர்கள் எழுந்தால்
யுகப்பிரளயமே உருவாகும்.
தேசம் ஒன்றென இளைஞர்கள் இணைந்தால்
தேவலோகமே வரவாகும்...
தேவலோகமே வரவாகும்.

(யுவக்களை)

கேசவன் வகுத்த பாதையில் செல்லும்
சங்கம் சொல்லும் சேதி இது.
பாதகம் செய்யும் தீயவர் ஓடிட
படையென சங்கம் விரைகிறது.

எஃகென நரம்பும் இரும்பென தசையும்
கொண்டவர்கள் இவ்வணியினிலே.
தேசபக்தியும் தெய்வ பக்தியும்
பெருகுது எங்கள் நெஞ்சினிலே!

(யுவக்களை)
மாதவன் வளர்த்த மாபெரும் சங்கம்
சேவகம் செய்திட விரைகிறது.
பாரதம் உலகின் குருவாய் ஆகும்
காலம் நெருங்கி வருகிறது.

நெஞ்சில் உரமும் நேர்மைத்திறமும்
கொண்டவர்கள் இவ்வணியினிலே.
சேவை எண்ணமும் சோதர உணர்வும்
பெருகுது எங்கள் நெஞ்சினிலே!

(யுவக்களை)

தியாக வேள்வியில் வாழ்வினை நெய்யாய்
ஈந்தவர் வளர்த்த சங்கமிது.
தேசிய நறுமணம் எங்கும் பரவிட
காவிக்கொடியுடன் விரைகிறது.

கடமை உணர்வும் கட்டுப்பாடும்
கொண்டவர்கள் இவ்வணியினிலே.
தூய ஒழுக்கமும் இனிய சொற்களும்
பெருகுது எங்கள் நெஞ்சினிலே!

(யுவக்களை)
---------------------------------------------
குறிப்பு: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் துவங்கிய நாள்: 1925 விஜயதசமி.
நன்றி: விஜயபாரதம் (தீபாவளிமலர்-2008)
.

சனி, அக்டோபர் 16, 2010

காலம் வருகுது!


சமுதாயம் மலருகின்ற காலம் வருகுது - இந்து
சமுதாயம் எழுச்சி கொண்டு எழுந்து நிற்குது!
(சமுதாயம்)
.
மூவிருபது ஆண்டுகளாய் சங்க சாதனை - நமது
நாவினிலே சொல்லுகையில் நரம்பு துடிக்குது!
ஏவிவிட்ட தடைகளினை ஏணியாகவே கொண்டு
தாவிவந்த காரணத்தால் வெற்றி தாளிலே!
(சமுதாயம்)
.
இந்து என்று சொல்லிடவே அஞ்சிய வேளை-தீப்
பந்தமாக நமது சங்கம் ஒளிர வந்தது!
நிந்தனைக்கும் வந்தனைக்கும் நின்றிடாமலே
மந்தநிலை மாற்றிடவே தெளிவு தந்தது!
(சமுதாயம்)
.
கற்பாறை என்று சொன்ன காலமும் உண்டு - சங்க
பொற்பாதம் தீண்டுகையில் கல்லும் இறுகுமோ?
அற்பம் என்று கேலி செய்த அன்பர்கள் கூட- இன்று
சொற்பமல்ல என்றுணர்ந்து தோள் கொடுக்கிறார்!
(சமுதாயம்)
.
சங்கதீபம் தமிழகத்தில் சுடர் வேண்டியே - இங்கு
தங்களையே நெய்யாக்கி வளர்த்த தவமிது!
சங்கமெனப் பாய்ந்துவரும் சங்க நதியிலே - மூழ்கி
சிங்கநாதம் செய்திடுவோம்! சிறுமை நீங்குவோம்!
(சமுதாயம்)
.
சமுதாயம் மலருகின்ற காலம் வருகுது - இந்து
சமுதாயம் எழுச்சி கொண்டு எழுந்து நிற்குது!

------------------------------------------------
குறிப்பு: நாளை , ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் துவங்கிய நாள் (1925).
நன்றி: விஜயபாரதம் (04.02.2000)
.

வெள்ளி, அக்டோபர் 15, 2010

விநாச காலே விபரீத புத்தி


''ஜம்மு காஷ்மீர் மாநிலம் எந்தக் காலத்திலும் முழுமையாக இந்தியாவுடன் இணையவில்லை; ஒரு தற்காலிக ஏற்பாடாகவே, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இணைப்பு ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளது...ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜூனோகாட், ஹைதராபாத் சமாதானங்கள் போன்றதல்ல....

ஜம்மு காஷ்மீர் விவகாரம் வெறும் உள்நாட்டுப் பிரச்னையல்ல. இது இந்தியா- பாகிஸ்தான் தொடர்புடைய சர்வதேச விவகாரம்... வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி ஆகியவை மூலமாக காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. ஏனெனில் காஷ்மீரில் நிலவுவது அரசியல் பிரச்னை. இதை மண்ணின் மக்களுடனான பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.. ''

- மேற்கண்ட முத்துக்களை அள்ளித் தெளித்திருப்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்?

பாக். பிரதமர் யூசுப் ரஸா கிலானியோ, ஹரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கிலானியோ அல்ல. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பும் அல்ல; சாட்சாத் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தான் இந்த அற்புத மொழிகளை உதிர்த்திருப்பவர். சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்கள்: சிறியார் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராது என்று!

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அக். 6-ம் தேதி பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, தன் மீது வீசப்பட்ட அனைத்து அஸ்திரங்களையும் முனை மழுங்கச் செய்ய, அவற்றைவிட மிகவும் ஆபத்தான, பிரிவினைவாதிகளே திகைக்கும் அபாய அஸ்திரத்தை வீசினார். மாநிலத்தை ஆளும் திறன் அற்றவர்; மக்கள் துயரம் அறியாதவர்; தீராத விளையாட்டுப்பிள்ளை என்று விமர்ச்சித்துவந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளை, தனது புலிவால் பிடிக்கும் சிறுமதியால் திகைக்க வைத்திருக்கிறார் உமர்.

கடந்த ஆறு மாதமாகவே ஜம்மு காஷ்மீர் மாநிலம் எரிமலையாகப் புகைந்து கொண்டிருக்கிறது. பிரிவினை வாதிகளின் திட்டமிட்ட தந்திரங்களால், கல்வீச்சு போர் உத்தியால் பாதுகாப்புப் படையினர் தத்தளித்த நிலையில், அவர்களது கைகளைக் கட்டிபோட்டு காயப்படுத்தியது உமர் அரசு. பாதுகாப்புப் படையினர் தற்காப்புக்காக நடத்தும் துப்பாகிச்சூடுகளில் உயிரிழப்பு ஏற்படுவதும், அதையே காரணம் காட்டி மேலும் வன்முறையை வளர்ப்பதுமே பிரிவினைவாதிகளின் தந்திரமாக இருந்து வருகிறது. பாதுகாப்புப் படையினருக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையை ஏற்படுத்திய மாநில அரசின் செயலால், காவல்துறை தலைமை அலுவலகத்தையே சமூக விரோதிகள் (செப்.11) எரித்தபோதும், வீரர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

இத்தனைக்கும் காரணம், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட உமர் அப்துல்லா அரசும், உமர் அரசின் முன்யோசனையற்ற நடவடிக்கைகளுமே என்றால் மிகையில்லை. இதை மறைக்க, தனது தாத்தா கடைபிடித்த அதே உத்தியை உமரும் கடைபிடித்திருக்கிறார். காஷ்மீர் மக்களின் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்வதன் மூலமாக 'தியாகி' பட்டம் பெறுவதோடு, பதவியிலிருந்து கீழிறக்க முடியாத சூழலை ஏற்படுத்த முனைகிறார் உமர். பரூக் அப்துல்லா ஆலோசனையில்லாமல் அவரது மகன் இவ்வாறு செயல்பட்டிருக்க மாட்டார். ‘வீட்டைக் காப்பாற்றுவான் என்று சாவியைக் கொடுத்தால் கொள்ளையர்க்கு காட்டிக் கொடுத்தானாம் கோணல் மகன்’ என்று சொல்வார்கள். அது உண்மைதான் என்று நிரூபித்திருக்கிறார், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் அப்துல்லாவின் பேரன் உமர்.

எதிர்பார்த்தது போலவே காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்கள் அனைத்தும் உமர் பேச்சை வரவேற்றிருக்கின்றன. ஹரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கிலானி, ''நீண்ட காலமாக நாங்கள் சொல்லி வருவதையே முதல்வர் எதிரொலித்திருக்கிறார். இது எங்கள் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி'' என்று கூறியிருக்கிறார். மற்றொரு பிரிவினைவாதத் தலைவரான மீர்வாயிஸ் உமர் பாரூக்கும் ''உமரின் பேச்சு நிதர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது'' என்று புகழ்ந்திருக்கிறார். கடந்த ஒருவாரத்திற்கு முன்வரை உமரை கடுமையாகத் தாக்கிவந்த இவர்கள் இருவரும் திடீரென புகழ்வது கண்டு பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் முப்தி முகமது சையது கலங்கிப் போயிருக்கிறார். தான் எட்டடி பாய்ந்தால் உமர் பதினாறு அடி பாய்கிறாரே என்ற ஆதங்கம் அவருக்கு.

உமர் பேச்சுக்கு அம்மாநில சிறுத்தைகள் கட்சியும் பா.ஜ.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அக். 7-ம் தேதி நடந்த அம்மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில், உமர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், சிறுத்தைகள் கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சபையின் மையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் பாதுகாவலர்களால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். நடப்பு கூட்டத்தொடரை, அக். 9-ம் தேதி வரை புறக்கணிக்கப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

மாநில மக்கள் ஆதரவை இழந்துவிட்ட உமர் அப்துல்லா, மக்களை திசை திருப்பவே இவ்வாறு நெருப்போடு விளையாடுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர் சமன்லால் குப்தா கண்டித்திருக்கிறார். உமர் பேச்சால் மத்திய உள்துறை அமைச்சகம் பெரும் கவலை அடைந்துள்ளது; இது குறித்த எச்சரிக்கைக் குறிப்பை பிரதமருக்கும் அனுப்பியுள்ளது. ஆனால், உமரைக் கண்டிக்கும் துணிவோ நேர்மையோ கிஞ்சித்தும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறது நாட்டை ஆளும் காங்கிரஸ்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''உமர் அப்துல்லா மாநில முதல்வர். அவர் பொறுப்பில்லாமல் பேச மாட்டார்'' என்று சப்பைக்கட்டு கட்டினார். அவர் தன்னை மத்திய அரசின் கையிலுள்ள பொம்மலாட்ட பொம்மை என்று கூறவில்லை என்று திசை திருப்பவும் முயன்றார். அப்படி வேறு சொல்லி இருக்கிறாரா, உமர்? நல்ல கட்சி; நல்ல கூட்டணி! காங்கிரஸ் இளவரசர் ராகுலால் பாராட்டப்பட்ட உமரை விமர்சிக்க திக்விஜய் சிங்கிற்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நமது பங்காளி நாடான பாகிஸ்தான் 1947 முதற்கொண்டு பரப்பி வருகிறது. அப்போதெல்லாம், உலக அளவில் அந்த விஷம பிரசாரத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. தற்போது காஷ்மீரில் நிலவும் பிரிவினைவாதத்திற்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதும் பாகிஸ்தான் என்பது உலகம் அறிந்த உண்மை. இதனை கடந்த அக். 7-ம் தேதி ஐ.நா.சபையில் நடந்த பொதுசபைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதியாகச் சென்ற பா.ஜ.க. முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தோலுரித்திருக்கிறார். ‘உலகில் பயங்கரவாத விஷத்தைப் பரப்பும் பாகிஸ்தான் நாட்டை வஞ்சக நாடாக அறிவிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் வாயிலிருந்தும் அதே வஞ்சக பிரசார வார்த்தைகள் வந்திருப்பது கவலை அளிக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நவம்பர் முதல்வாரத்தில் வரவுள்ளதால், காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று உபதேசம் செய்ய ஆரம்பித்துள்ளது. இத்தகைய தருணத்தில் உமர் உதிர்த்துள்ள முத்துக்களின் பின்புலத்தை சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமல்ல என்று கூறும் அதே ஜம்மு காஷ்மீரின் மக்கள் பிரதிநிதியாக இதே உமர் அப்துல்லா நாடாளுமன்றத்தில் அமைச்சராக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்திருக்கிறார். அவரது தந்தை பரூக் அப்துல்லா, தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருக்கிறார். இந்தியா அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பதாக இதே உமர் பிரமாணம் செய்து முதல்வராக பதவி வகிக்கிறார். எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இப்போது புலிவாலைப் பிடித்திருக்கிறார், உமர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி (பா.ஜ.க.) கூறியது போல, ''ஆட்சியில் இனியும் நீடிக்க உமருக்கு சிறிதும் அருகதை கிடையாது''. உமரைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மன்மோகன் சிங்கிற்கும் ஆட்சியில் நீடிக்கும் உரிமை கிடையாது.
-------------------------------
நன்றி: விஜயபாரதம் (22.10.2010)
.

வியாழன், அக்டோபர் 14, 2010

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- 4

இதற்கு முன் படிக்க வேண்டியது: மூன்றாம் பாகம்

அயோத்தி வழிபாட்டுத்தலம் தொடர்பான அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் அடிப்படை ஆதாரமாக இருந்தது, சம்பந்தப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள். ஆனால், அதன் அடிப்படையில் மூன்று நீதிபதிகளும் அறுதியிட்டு தீர்ப்பு வழங்கவில்லை. அவ்வாறு வழங்க, பொருத்தமான காலசூழல் நாட்டில் நிலவவில்லை என்பதுதான் அதற்கு காரணமாக இருக்க முடியும். அதற்காக, அகழாய்வில் கிடைத்த ஆதாரங்களைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. எதிர்காலத்தில் இவ்வழக்கு மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் செல்லுமானால், அங்கு அயோத்தி வழக்கை நிமிர்த்தி நிறுத்தப்போகும் ஆதாரங்கள் அவை தான். எனவேதான், நீதிபதிகள் சர்மாவும், அகர்வாலும், அனைத்து ஆதாரங்கள் தொடர்பான பதிவுகளையும் தங்கள் தனித் தனித் தீர்ப்புகளில் மிகுந்த பிரயாசையுடன் இணைத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த ஆதாரங்களையே, செக்யூலரிசத்தைக் காக்கவென்றே பிறப்பெடுத்த நமது அறிவுஜீவிகளும் ஆங்கில ஊடகவாதிகளும் சந்தேகப்படுகிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி அயோத்தியில் நடந்த அந்த அகழாய்வு, பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது நடந்ததாம். அதனால், அகழாய்வில் தவறான ஆதாரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்ற பிரசாரத்தை ஏற்கனவே ஆங்கில ஊடகங்களில் சரித்திர வல்லுனர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் நடத்தி வருகிறார்கள்.

அதாவது ஆட்சிப் பொறுப்பில் அன்று இருந்தவர்களது நிர்பந்தத்தால் தான், நியாயமான முறையில் நடந்த அகழாய்வு கூட, ராமர் கோயிலுக்கு ஆதரவான ஆதாரங்களை ஏற்படுத்திவிட்டது என்பது அவர்களது புகார்.

அதே பாணியில் நம்மாலும் கேள்வி கேட்க முடியும். அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு ஒருவாரகாலம் ஒத்திவைக்கப்பட்டபோது என்ன நடந்தது? தற்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஹிந்துவிரோத கூட்டணி அரசால், நீதிபதிகள் நிர்பந்தம் செய்யப்பட்டார்களா? அதனால்தான், தீர்ப்பில் அகழாய்வு ஆதாரங்கள் அடக்கி வாசிக்கப்பட்டனவா? இதே நீதிமன்ற பெஞ்சில், மூன்றில் இருவர் ஹிந்துக்களாக இல்லாமல் இருவர் முஸ்லிம்களாக இருந்திருந்தால் தீர்ப்பின் கதி எப்படி ஆகியிருக்கும்?

கேள்விகள் கேட்பதானால் இன்னும் பல கேள்விகளைக் கேட்க முடியும். ஷன்னி வக்பு வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், பிறகு எதற்காக முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது? நாட்டின் அமைதிக்காக அரசு நிர்பந்தத்தால் தீர்ப்புக்கள் திருத்தப்பட்டனவா?

எப்படி இருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பை நாட்டு மக்கள் நிம்மதியுடன் வரவேற்றிருக்கிறார்கள். அந்த நிம்மதி அறிவுஜீவிகளுக்கு மட்டும் பொறுக்கவில்லை. 1992 சம்பவத்தின்போது அறிவுஜீவிகள் விசிறிவிட்ட பெருநெருப்புத் தானே, சிறுபான்மையினரின் அழிவுச் செயல்களை நியாயப்படுத்த உதவியது?

இப்போதும் நீதிமன்றத் தீர்ப்பில் முழு திருப்தி அடையாதபோதும், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக அதனை வரவேற்கக் காரணம், நாட்டின் அமைதியும் வளர்ச்சியும் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்லெண்ணம் தான். இதே கண்ணோட்டத்துடன் தான், 1947-ல் தேசப் பிரிவினையை கண்ணீருடன் ஹிந்து மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்; தேசத்தைப் பிளந்த போதும் அருகில் குடியிருந்த முஸ்லிம் மக்களைத் துரத்தாமல் அவர்களை அரவணைத்தார்கள். அந்த ஹிந்துக்களின் பெருந்தன்மை தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுகிறது.

.
மும்பையிலும் தில்லியிலும் கோவையிலும் வெடித்த குண்டுகளையும் அதனால் உயிரிழந்தவர்களையும் கண்டுகொள்ளாத ஆங்கில ஊடகவாதிகள், குண்டு வெடிக்கக் காரணம் என்ன என்ற புதைபொருள் ஆராச்சியில்தான் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் கண்டறிந்த ஒரே காரணம், நாட்டில் பரவும் ஹிந்து வகுப்புவாதமே முஸ்லிம்கள் குண்டுவெடிக்க காரணம் என்பது தான். அதாவது, ஹிந்துக்கள், தங்களை ஹிந்து என்று உணர்ந்து ஒருங்கிணைவதே முஸ்லிம்களை கொடூரர்கள் ஆக்குகிறது. இந்தக் கண்டுபிடிப்பின் மூலமாக, நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் கூட அவமதித்தார்கள் இந்த 'குருவிமண்டைகள்' (வார்த்தைக்கு நன்றி: ஜெயமோகன்; காண்க: எனது இந்தியா). அதே குருவி மண்டைகள் தான் தற்போதைய அயோத்தித் தீர்ப்பையும் விமர்சிக்கிறார்கள். உண்மையில் இவர்களை இயக்குவது யார்? ஆங்கிலக் கல்வி பயின்றதால் ஏற்பட்ட மெக்காலே தாக்கமா? மிஷனரிகளும், செஞ்சீனாவும், அரபுநாடுகளும் அள்ளிவீசும் பொற்காசுகளா? கல்வியுடன் நாட்டுப்பற்றை ஊட்டத் தவறிய காங்கிரஸ் அரசா?

உண்மையில் இவையெதுவும் காரணம் கிடையாது. ஊடகம் என்பது மக்களைப் பிரதிபலிப்பது. அவ்வாறு பிரதிபலிக்காத ஊடகம் தாக்குப் பிடிக்காது. ஆனால், நமது நாட்டில் மக்களின் மனநிலைக்கும் ஊடக ராஜாங்கத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறதே! சுயநலக் காரணங்களுக்காக தடம் புரளும் ஊடகங்களை - கண்டிக்கும் வாசகர்கள் இல்லாதவரை, புறக்கணிக்கும் மக்கள் இல்லாதவரை, விமர்சிக்கும் நடுநிலையாளர்கள் இல்லாதவரை, இத்தகைய வரலாற்றுப் பிழைகள் தொடரும்.

சற்றே சிந்தித்துப் பாருங்கள். 1975, நெருக்கடி நிலையின்போது கோயங்காவின் எக்ஸ்பிரஸ் தவிர, பெரும்பாலான பத்திரிகைகளும் அன்றைய சர்வாதிகாரி இந்திரா முன் மண்டியிட்டனவே! அவர்களுக்கு அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ஊடகவாதிகள் சிலர் கம்பீரமாக அமர்ந்து அயோத்தி தீர்ப்பு குறித்து நாட்டு மக்களுக்கு கதைக்கிறார்கள். இதை 'கலிகாலம்' என்று சொல்லிவிட்டு நாம் உறங்கச் செல்கிறோம். தவறு யாரிடம்?

இந்த இடத்தில் இரு சம்பவங்களைக் கூறியாக வேண்டும்.

1. சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. தினமலர் நாளிதழின் இணைப்பான சிறுவர் மலர் புத்தகத்தில் முகமது நபி குறித்த சித்திரக்கதை வெளியானது. எப்போதும் ஹிந்து சமயம் தொடர்பான கதைகளையே வெளியிடுகிறோமே, கொஞ்சம் மதச்சார்பின்மையையும் காப்போம் என்ற எண்ணத்தில் நபி பெருமானாரின் படக்கதை வெளியானது. ஆனால், நடந்ததோ வேறுகதை. அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, இறைவனையோ, இறைவனின் தூதரையோ உருவமாக சித்தரிக்கக் கூடாது. எனவே இந்த படக்கதைக்காக தினமலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுந்தது.

ஆரம்பத்தில் தினமலர் நிர்வாகம் அதைப் பொருட்படுத்தவில்லை. மறுநாள் அதிகாலை மதுரை பேருந்து நிலையத்தில் விநியோகத்திற்காகக் குவிக்கப்பட்ட தினமலர் நாளிதழ் கட்டுக்கள் முஸ்லிம் இளைஞர்களால் எரிக்கப்பட்டன. அப்போது தான், சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்தது தினமலர். அடுத்த நாளே தினமலர் நாளிதழ் முதல் பக்கத்தில் இஸ்லாமியர்களிடம் மன்னிப்பு கேட்டது. பிரச்னைக்குரிய படக்கதையும் நிறுத்தப்பட்டது. அவர்களுக்குத் தெரியும், நாளிதழின் அடிப்படை வேர் அதன் விநியோகத்தில் இருப்பது. எந்த இடத்தில் அடித்தல் வலிக்கும் என்று தெரிந்தவர்கள் புத்திசாலிகள். வன்முறை கூடாது என்று கூறுபவர்கள் முட்டாள்கள். இது தானே மேற்படி சம்பவத்தின் நீதி?

2. மற்றொரு சம்பவமும் தினமலர் தொடர்பானது தான். தினமலர் நாளிதழ் வாரந்தோறும் ‘பக்தி மலர்’ என்ற இணைப்பு இதழை வழங்குகிறது. பத்திரிகை விற்பனையை அதிகரிக்க ஒரு உபாயமாக அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம் மாநிலம் முழுவதும் நல்ல பயன் அளித்தபோதும், திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புக்களில் பலனளிக்கவில்லை. ஏனென்று ஆராய்ந்தபோது, அந்தப் பதிப்புகளுக்கு உட்பட்ட மாவட்டங்களில் கிறிஸ்துவ மக்கள் அதிகம் இருப்பதே காரணம் என்று தெரியவந்தது. அதாவது, ஹிந்துக்களின் தெய்வங்கள் குறித்த கட்டுரைகள் அதிகம் கொண்டிருப்பதால், கிறிஸ்துவர்கள் தினமலர்- பக்திமலரை விரும்பவில்லை. இத்தனைக்கும் பக்திமலரில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்காக தனிப் பகுதிகள் உள்ளன. இது பற்றி ஆலோசித்த தினமலர் நிர்வாகம், மேற்படி பதிப்புக்களில், கிறிஸ்துவர்களுக்கென்று தனியே பக்திமலர் தயாரிப்பது என்று முடிவெடுத்தது. இன்றும், அந்த பதிப்புக்களில், கிறிஸ்துவர்களுக்கென்று பிரத்யேக பக்திமலரும், மற்றவர்களுக்கு பொதுவான பக்திமலரும் விநியோகிக்கப்படுகிறது. வாசகர் விரும்பாத எதையும் பத்திரிகைகளால் விற்க முடியாது; இது தானே கிறிஸ்துவர்கள் நடத்திக் காட்டிய நீதி?

இவை போன்ற எண்ணற்ற உதாரணங்களைக் காட்ட முடியும். பிரபல எழுத்தாளர் மதன் 'வந்தார்கள், வென்றார்கள்' தொடரை ஆனந்த விகடனில் எழுதியபோது, முகலாயர்களின் அட்டூழியத்தை எழுதியதற்காக இஸ்லாமியர்களால் மிரட்டப்பட்டார். வார்த்தையில் 'எனது இந்தியா' கட்டுரையை எழுதியதற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு மிரட்டல்கள் வந்தன. தினமலர் -வேலூர் பதிப்பில் 'கம்ப்யூட்டர்
மலரில்' வெளியான முகமது நபி கார்ட்டூனுக்காக, அதை வெளியிடாத பிற பதிப்புகளின் முதல் பக்கத்திலும் தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டிவந்தது. கீழக்கரையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் என்ற செய்திக்காக 'நிமிர்ந்த நன்னடை' தினமணியும் வருத்தம் தெரிவித்திருக்கிறது.

விழிப்புணர்வுள்ள சமூகமே தன்மீதான அபவாதத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் என்பதுதான் மேற்கண்ட சம்பவங்கள் காட்டும் நீதி. முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது? இறையச்சம் மிகுந்த சமுதாயங்களாக இஸ்லாமிய சமுதாயமும், கிறிஸ்துவ சமுதாயமும் உள்ளன என்பதை மறுக்க முடியாது. நாமோ, 'எல்லாம் இறைவன் செயல்' என்று கூறிக்கொண்டே, கோயிலை இடித்தாலும் தேமே என்று இருக்கிறோம். நமது துறவியரை ஊடகங்கள் வக்கிரமாகச் சித்தரித்தாலும் பொங்கிஎழ மறுக்கிறோம். அயோத்தித் தீர்ப்பிற்கு எதிராக ஊடக சாம்ராஜ்யவாதிகள் நிகழ்த்தும் பிரசார வன்முறையைக் கண்டும் காணாமல் இருக்கிறோம்.

65 ஆண்டுகாலமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போராடி நாட்டில் ஹிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் ஏதோ, இந்த அளவேனும் சிந்திக்கிறோம். சற்றே சிந்தித்துப் பாருங்கள், இந்த அமைப்பும் இல்லாத முந்தைய காலகட்டத்தில் நமது ஹிந்து மக்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று! ஆர்.எஸ்.எஸ்.சும் அதன் பரிவார இயக்கங்களும் இல்லாது இருந்திருந்தால், நமது நாட்டையே அரசியவாதிகள் விற்றுத் தின்றிருப்பார்கள்!

எந்த ஒரு நிகழ்வும் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என்பதுவே ஹிந்துக்கள் நம்பும் விதி என்பதன் சாராம்சம். இதுவரை நடந்தவை நமக்கு படிப்பினை அளிக்க ஏற்பட்ட சரித்திர நிகழ்வுகள் என்று கொண்டால், அதிலிருந்து நாம் சரியான பாடம் கற்றுக் கொண்டால், நாளைய பாரதம் நம்மிடம் இருக்கும். விழிப்புணர்வுள்ள சமூகமாக ஹிந்துக்கள் மாறாத வரை, ஊடகவாதிகளின் அத்துமீறல்களை நெஞ்சு நிமிர்த்திக் கண்டிக்க ஹிந்து சமூகம் முன்வராதவரை, அபத்த ஊடகங்களின் அல்ப செயல்பாடுகள் தொடரவே செய்யும்.

இப்போது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் ஹிந்து உணர்வுள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்வது பெருகி வருவது நம்பிக்கை அளிக்கிறது. ஆயினும் தற்போதைய அபத்த வெள்ளத்திற்கு அணை கட்ட அவை போதாது. இந்த விழிப்புணர்வு பெருக வேண்டும். ஒவ்வொரு ஹிந்துவும் விழிப்புணர்வுள்ள குடிமகனாக மாறும்வரை, நமது தேசவிரோதிகளுக்கு எதிரான எழுத்துப் போராட்டம் மேலும் பல முனைகளில் நடத்தப்பட வேண்டும். இணையதளம் நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பு நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.


(நிறைவு)

----------------------------------------

காண்க: தமிழ் ஹிந்து

.

புதன், அக்டோபர் 13, 2010

முரண்பாடுகள் யாரிடம்?

அத்வானி நடத்திய ரத யாத்திரை

அன்புள்ள ஆர்.வி.
தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

உங்கள் 'முரண்பாடுகள்' தொடர்பான எனது விளக்கங்கள் இதோ...

//நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தாயிற்று, அதை ஏற்றுக்கொள்வதுதான் சரியான அணுகுமுறை என்று எழுதுகிறீர்கள். மிகவும் சரி. ஆனால் இதே தளத்தில் தீர்ப்பு வருவதற்கு ஓரிரு நாள் முன்பு கூட “ஹிந்துக்களுக்கு” ஆதரவாக தீர்ப்பு வராவிட்டால் அந்த தீர்ப்பை நிராகரிப்போம் என்று நிறைய பேர் பொங்கினார்கள். இந்த அணுகுமுறையை ஒரு சாராருக்கு மட்டும் எடுத்துச் சொன்னால் எப்படி? இன்று கூட “கும்மட்டம் இடிப்பு” வழக்கில் வரும் தீர்ப்பை ஏற்றுக் கொள்வோம் என்ற மனநிலைதான் இந்த தளத்தின் பெரும்பாலான வாசகர்களிடம் இல்லை!//

அன்றும் இன்றும் என்றும் அயோத்தி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு கூற இயலாது என்றே தன்மானமுள்ள ஒவ்வொரு ஹிந்துவும் கூறுவார். ஏனெனில். இது மத நம்பிக்கை தொடர்பான விஷயம். கடவுள் ராமன் பிறந்த இடத்தை இப்போதைய எத்தகைய ஞானிகளாலும் கேள்வி கேட்க முடியாது. எனவே தான், தமிழ் ஹிந்து வாசகர்கள் பொங்கினார்கள். அதே சமயம், நீதிமன்றத் தீர்ப்பை இப்போது பெரும்பாலோர் ஆதரிக்கக் காரணம், ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு நீதிபதிகள் மதிப்பளித்திருப்பதே. எனவே தான் மூன்றில் ஒரு பங்கு இடத்தை நீதிமன்றம் தாரை வார்ப்பதாக அறிவித்தும் ஹிந்துக்கள் நிதானம் காக்கிறார்கள்.

இடிக்கப்பட்டது பாபர் மசூதி அல்ல என்பதே ஹிந்துக்களின் நிலை. அடிமைச் சின்னம் அகற்றப்பட்டது தொடர்பான வழக்கில் வரும் தீர்ப்பை விடுதலைப் போராட்டம் தொடர்பான வழக்காகவே காண வேண்டும். அதில் யாரேனும் தண்டிக்கப்பட்டால், தண்டிக்கப்படுபவர்கள் குற்றவாளிகள் அல்ல; உண்மையில் அவர்கள் தன்மானம் காத்த வீரர்கள் என்று வருங்கால வரலாறு பதிவு செய்யும்.

//பாபர் காலத்து விழுமியங்கள் வேறு, இன்றைய விழுமியங்கள் வேறு என்று சொல்ல வேண்டிய அவசியம் இருப்பது துரதிருஷ்டம். சித்தூர் ராணி பத்மினி கணவன் இறந்த பிறகு தற்கொலை செய்துகொள்ளவில்லையா, ரூப் கன்வார் விஷயத்தில் மட்டும் ஏன் குதிக்கிறீர்கள் என்று கேட்பீர்களா?//

சரித்திரத்தின் போக்கை யாராலும் மாற்ற முடியாது. இனி முஸ்லிம்களும், ஆட்சியாளர்களும் நினைத்தாலும் அயோத்தியில் 'குறிப்பிட்ட அந்த இடத்தில்' மீண்டும் மசூதி கட்ட முடியாது. இதை முஸ்லிம்களும் உணர்ந்தே உள்ளனர். நிதர்சனத்தை உணர்ந்தே அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாபர் காலத்தில் எந்த விழுமியமுமே இல்லை என்பது தான் இடிப்புக்கு காரணம். அவமானத்தைப் போக்க 1992-ல் நிகழ்ந்த கரசேவையை அத்துடன் ஒப்பிட முடியாது; கூடாது.

தற்போதைய போலி மதச்சார்பற்றவர்கள் நடத்தும் நாடகங்களுக்கு அவர்கள் பாணியிலேயே பதில் சொல்ல வேண்டி இருப்பதால் தான் இந்த ஒப்பீடே எழுந்தது. நாம் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் தருணம் கூட- மறுநிமிடம் சரித்திரம் தான். சரித்திர உணர்வு என்பது நமது வீழ்ச்சிகளிலிருந்து பாடம் கற்பது; நமது சாதனைகளிலிருந்து பெருமிதம் கொள்வது. உடன்கட்டை ஏறுவதும் கரசேவையும் இரு துருவங்கள். இரண்டையும் ஒப்பிட முடியாது; கூடாது.

// 1992-லேயே இல்லாமலாகிவிட்ட கட்டட இடிப்பு… என்று எழுதி இருப்பதைப் பார்த்து புன்னகைத்தேன். இல்லாத கட்டிடத்தை இழுக்கக் கூடாது என்றால் 1528-இலோ, அதற்கு முன்போ, இடிந்து போன/இடிக்கப்பட்ட “கட்டிடத்தைப்” பற்றி எப்படி வரிந்து கட்டிக்கொண்டு எழுதுகிறீர்கள்? அதை மீண்டும் கட்ட வேண்டும் என்று “பல நூறு ஆண்டுகளாக” என்ன போராட்டம்? முடிந்த வரையில் இந்த மாதிரி inconsistency-களைத் தவிர்க்கலாம்.//

நண்பர் ஆர்.வி, தமிழ் ஹிந்துவை தொடர்ந்து வாசித்து வந்திருந்தால் அவருக்கு இது inconsistency ஆகத் தோன்றி இராது. நமது தன்மானச் சின்னமான கோயில் இடிக்கப்பட்டதும் (1528) அவமானச் சின்னம் இடிக்கப்பட்டதும் (1992) ஒன்றல்ல.

பாபரின் தளபதி தங்கள் ஆதிக்கச் சின்னமாக ராமர் கோயிலை இடித்தார். அங்கு தங்கள் மேலாதிக்கத்தை நிறுவ, பாபர் மசூதி என்ற பெயரில் 'இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாக' ஒரு கட்டடத்தை எழுப்பினார் மீர்பாகி. அதை நீக்க வேண்டும் என்று அன்று முதல் ஹிந்துக்கள் போராடி வந்துள்ளனர். பல்லாயிரம் பேர் அப்போராட்டத்தில் பலியாகி உள்ளனர். இறுதியாக நடந்துவரும் போராட்டக் காலத்தில் நாம் இருக்கிறோம்.

நம் கண் முன்னால் அவமானச் சின்னம் அகற்றப்பட்டது. அதுவும் எதிர்பாராத கரசேவகர் கொந்தளிப்பால் நடந்தது. (உ.பி. முதல்வர் கல்யாண் சிங் அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்துவிட்டது என்ற தகவல் பரவியதால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழலில் தான் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டது). அந்த வழிமுறையை நாம் ஏற்கவில்லை. ஆயினும் எது நடந்தாக வேண்டுமோ அது நடந்துவிட்டது. எப்படி இருந்தாலும் ஒருசமயம் அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டாக வேண்டியது தானே. இதில் எந்த முரண்பாடும் இல்லை. அந்த கரசேவை தான், தற்போதைய தீர்ப்புக்கு அடிநாதம் என்றால் மிகையில்லை.

கரசேவையில் சர்ச்சைக்குரிய கட்டடம் (கும்மட்டம்) இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு அல்ல, தற்போது அலஹாபாத் நீதிமன்றத்தில் நடந்தது. அது தனியே நடக்கிறது. அது பற்றி எழுத வேண்டுமானால், தனியே ஒரு தொடர் எழுத வேண்டியிருக்கும். அதுவல்ல பிரச்னை. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று உபதேசம் செய்துகொண்டே, இடிக்கப்பட்ட கட்டடத்தை பிரதானமாகக் காட்டி (இதில் தான் inconsistency உள்ளது) முஸ்லிம்களை உசுப்பிவிடும் கீழ்த்தரமான தந்திரம் நமது ஊடகங்களுக்கு எதற்கு என்பதே எனது கட்டுரையின் பிரதானக் கேள்வி. நன்கு ஊன்றி கவனித்தால் அது புரியும்.

மற்றபடி, இந்த விளக்கங்களை அளிக்க ஏதுவாக விமர்சனம் செய்த ஆர்.வி.க்கு நன்றி. கட்டுரையின் இறுதிப்பகுதியையும் படித்துவிட்டு அவர் தனது கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். இது எனது வேண்டுகோள்.

------------------------------------------------

தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியாகியுள்ள ''அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் - பகுதி -3''க்கு திரு. ஆர்.வி எழுதிய பின்னூட்ட விமர்சனத்திற்கு அதே இணையதளத்தில் எனது பதில் இது.

.

செவ்வாய், அக்டோபர் 12, 2010

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் - 3

இதற்கு முன் படிக்க வேண்டியது: இரண்டாம் பாகம்

அயோத்தித் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அமைதிக்கூட்டம் தனித்தனியே நடந்தது. மாவட்ட ஆட்சியர் உமாநாத் நடத்திய இக்கூட்டத்தில், முஸ்லிம்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ''அதெப்படி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியாகிறது என்று சொல்லலாம்? அங்கு இருந்தது பாபர் மசூதி. எனவே பாபர் மசூதி தொடர்பான வழக்கு என்று தான் சொல்ல வேண்டும். மாவட்ட ஆட்சியர் ஒருசார்பாகச் செயல்படக் கூடாது'' என்று சிலர் குரல் எழுப்பினர். ''எடுத்ததெற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்கக் கூடாது; நீதிமன்றத்திலேயே அந்த வழக்கின் பெயர் ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில உரிமை வழக்கு என்பது தான். தேவையின்றி பிரச்னை செய்தால் நானும் கடுமையைக் காட்ட வேண்டிவரும்'' என்று எச்சரித்தார் ஆட்சியர் உமாநாத்.

-இந்தச் சம்பவம் இங்கு எதற்கு என்ற கேள்வி எழலாம். இந்தச் சம்பவம், செய்தியில் பதிவாகவில்லை. ஆட்சியரால் எச்சரிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள். அதை செய்தியாக்கி, அவர்களது கோபத்திற்கு ஆளாக வேண்டாமே என்ற பத்திரிகையாளர்களின் புத்திசாலித்தனம் தான் இதற்குக் காரணம்.

ஆனால், 1992-லேயே இல்லாமலாகிவிட்ட கட்டடம் இடிப்பு தொடர்பான வழக்கு அல்ல என்ற போதும், ‘பழைய நிகழ்வை நினைவுபடுத்தாதீர்’ என்று மத்திய அரசு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், அந்த சர்ச்சைக்குரிய கட்டடத்தையே 24X 7 செய்தி தொலைக்காட்சியில் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நடந்தது அயோத்தி நிலம் குறித்த வழக்கு; கட்டட இடிப்பு தொடர்பான வழக்கு அல்ல என்றபோதும், அதையே ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தன, ஆங்கில செய்தி சேனல்கள். பெரும்பாலான ஆங்கில செய்தி சேனல்கள் முன்முடிவுகளுடன் தான் இந்த வழக்கின் செய்தியை ஒளிபரப்பின. செய்தியை செய்தியாகத் (NEWSnNEWS) தர வேண்டும் என்ற எல்லையை மறந்து, கண்ணோட்டங்களாகவே (VIEWS) அவை செய்திகளை ஒளிபரப்பின.
.
சி.என்.என்-ஐ.பி.என், என்.டி.டி.வி- 24X 7, டைம்ஸ் நவ் ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு, அயோத்தித் தீர்ப்பை அக்குவேறு ஆணி வேறாக அலசின. அவை நடத்திய அறிவுஜீவிகளின் பிரசாரத்தால் தான், அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்கு 'கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு' என்ற அடைமொழி கிடைத்தது. நாளிதழ்களும் கர்மசிரத்தையாக அந்தப் பிரசாரத்தைப் பின்தொடர்ந்தன.

தீர்ப்பு வெளியானவுடனேயே என்.டி.டி.வி தனது வேலையைத் துவக்கிவிட்டது. பிரபல வழக்கறிஞர் ராஜீவ் தவானின் பேட்டி பலமுறை ஒளிபரப்பப்பட்டது. அவர்தான் 'கட்டப் பஞ்சாயத்து' பிரசாரத்தைத் துவக்கிவைத்தார். நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லும் அதே வழக்கறிஞர் தான், அதிமேதாவியாக பேட்டி கொடுத்தார். ஒருவேளை அவர் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம்; 'மத நம்பிக்கை சட்டத்தை தோற்கடித்துவிட்டது' என்று புலம்பிக்கொண்டே இருந்தார்.

சி.என்.என்.ஐ.பி.என் சும்மா இருக்குமா? அவர்கள் பங்கிற்கு அவர்களுக்குத் தெரிந்த வல்லுனர்களை மேடை ஏற்றினார்கள். இதன் பொறுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய், ''அயோத்தி விவகாரத்திற்கு நிகழ்கால வாழ்வில் இடமில்லை; இந்தியா அயோத்தியைத் தாண்டிச் சென்றுவிட்டது'' என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அப்புறம் எதற்காக அலஹாபாத் வழக்கை செய்தியாக்க இந்தத் துடிப்பு துடித்தாரோ தெரியவில்லை.

தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களிடம் பதில் பெற தொலைகாட்சி நிருபர்களும் படப்பிடிப்பாளர்களும் நடத்திய தள்ளுமுள்ளுவைப் பார்த்தபோதே தெரிந்தது, ஊடகத்தில் அயோத்தியின் முக்கியத்துவம். ஆனால் யாரையோ திருப்திப்படுத்த, ''அயோத்தியை தேசம் மறந்துவிட்டது'' என்று அங்கலாய்த்துக்கொண்டே இருந்தார் ராஜ்தீப். அவரை அந்த கர்த்தர் தான் ரட்சிக்க வேண்டும். இதே செய்தியைத் தான் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிலும் கட்டுரையாக வடித்து மகிழ்ந்தார் ராஜ்தீப். அதைப் பிரசுரித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழும் மதச்சார்பின்மையைக் காத்தது.

நமது ஊரில் ஒரு மகானுபாவர் இருக்கிறார். அவரே கேள்வி கேட்பார்; அவரே பதிலும் கொடுப்பார். தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனை மறந்தவர்கள் திரேதா யுகத்து ராமனை இழுத்துக்கொண்டு திரிகிறார்கள் என்பார். அதே பாணியில் பிரபல ஊடக அறிஞர் கரன் தாபர் (இவர் கிறுக்குத் தனமாக கேள்வி கேட்பார்; எதிரில் இருப்பவர் கிறுக்கன் ஆகாமல் திரும்ப வேண்டும்) நடத்திய நேர்முகம் சி.என்.பி.சி.யில் வெளியானது. அவருக்கு தோதான ஜோடியாக அமைந்தவர், இடியே தலையில் விழுந்தாலும் எங்கே என்று கேட்பவர். வேறு யார்? காங்கிரஸ் அமைச்சரான கபில் சிபல் தான்.

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக கண்டிப்பாக உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும் என்று சொன்னார் சிபல். இதுவரை யாரும் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யச் சென்றதாக தகவல் இல்லை. ஆனாலும் மனிதர் அசராமல் சொன்னதையே திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

கரன் தாபரும் லேசுப்பட்டவர் இல்லை. அவரது கேள்வி இதோ...''சர்ச்சைக்குரிய அகழாய்வு அறிக்கையின் அடிப்படையிலேயே மூன்று நீதிபதிகளும் ராமர் கோயில் இருந்தது என்கிறார்கள். இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?'' சிபலின் பதில்: '' உச்சநீதிமன்றம் விசாரிக்கும் போது எல்லாம் சரியாகும்''

மற்றொரு கேள்வி: '' நம்பிக்கை, சர்ச்சைக்குரிய அகழாய்வு அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்ப்பு என்பதால், அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுதலிக்குமா?'' சிபல் பதில்: ‘’இது சிக்கலான கேள்வி. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தீர்ப்பு மாறானதாக அமையலாம்...''

''அனுபவ உரிமை என்பதாலேயே ஒருவருக்கு குறிப்பிட்ட இடம் சொந்தமாக முடியுமா?'' - இது கரன் தாபர். ''நல்ல கேள்வி; அரச மரத்தின் கீழ் சாது அமர்ந்திருக்கிறார். அவர் முன் ஆயிரக் கணக்கானோர் பஜனை பாடுகின்றனர். சாது அமர்ந்து அனுபவித்ததால் அரச மரம் அவருடையதாகி விடுமா? அந்த பக்தர்களுக்கும் அது உரிமை ஆகுமா?'' -இது சிபலின் பதில்.

''ஒருவர் நீண்ட காலமாக வழிபடுவதாலேயே அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அப்படித்தானே? - கேள்வி கேட்கிறார். கரன் தாபர். இப்படித் தான் அந்த நேர்முகம் முழுவதும் கேள்விகள்; அதற்கேற்ற பதில்கள். கவுண்டமணி- செந்தில் நகைச்சுவையைத் தோற்கடிக்கிறது இவர்களது வில்லத்தனம்.

தீர்ப்பு வெளியான மறுநாள், பெரும்பாலான ஆங்கில நாளிழ்கள் 'கட்டப் பஞ்சாயத்து' தீர்ப்பு என்று வர்ணித்தன. பத்து நாட்களாக பீதியில் ஆழ்ந்திருந்த நாடு நிம்மதியாக இருக்கிறதே, எப்படி என்று யோசிக்கவில்லை. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, ''மசூதிக்குள் ராமர் சிலையை வைத்த 1949, மசூதியை இடித்த 1992 ஆகிய சம்பவங்களை மறந்துவிட்டு அலஹாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது'' என்று எழுதியது; தற்போதைய வழக்கின் அடிப்படை என்ன என்பது தெரியாமல், புலம்பியது.

அயோத்தி வழக்கில் பல நூறு ஆண்டுகாலப் போராட்டம் தான் 60 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்காக மாற்றம் பெற்றது என்ற தாத்பரியத்தை மறந்துவிட்டு, சமீபகால நிகழ்வுகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வி அறியாமை அல்ல. நாளிதழ் படிப்பவர்களை எப்படியும் குழப்பலாம் என்ற ஆணவம் தான் ஆங்கில நாளிதழ்களிடம் ஓங்கியிருக்கிறது. ஆயினும், முந்தைய காலம் போலின்றி, ஹிந்து உணர்வுடன் வாசகர்கள் போராடுவதை, வாசகர் கடிதங்கள், இணையதளப் பின்னூட்டங்களில் காண முடிந்தது.

தமிழ் நாளிதழ்களைப் பொருத்த வரை, தினமலர், தினத்தந்தி நாளிதழ்கள் செய்தியை மட்டும் வெளியிட்டு நாணயம் காத்தன. தினகரன் நாளிதழிடம் அதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. வார இதழ்களைப் பொருத்த வரை, ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்டர், நக்கீரன், இன்ன பிற பத்திரிகைகளிடம் நம்மால் நியாயமான செய்தியை எதிர்பார்க்க இயலாது. ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் கலை கைவந்தவர்களிடம், ராமர் கோயிலுக்கு ஆதரவான செய்தியை எதிர்பார்க்க முடியாது. நிமிர்ந்த 'நன்னடை' தினமணியே தடுமாறும்போது, ‘பத்திரிகைத் தொழில்’ நடத்துபவர்களை இங்கு எழுதி என்ன ஆகப்போகிறது?

முன்னொரு காலத்தில் அதீத தேச பக்தியுடன் ஹிந்து உணர்வுள்ள பெரியவரால் ஆரம்பிக்கப்பட்ட 'தி ஹிந்து' நாளிதழை விட்டுவிட்டு இக்கட்டுரையை எழுத முடியுமா? அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சில் வழக்கு விசாரிக்கப்படுவதற்கு முன்னரே தி ஹிந்து தனது பங்கிற்கு 'விசாரித்து' முடித்திருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த அயோத்தி அகழாய்வு தொடர்பான சரித்திர நிபுணர்களின் கட்டுரைகள் தொடர்ந்து அதில் வெளிவந்தன. அகழாய்வில், தற்போதைய கோயில் இருக்கும் இடத்திற்குக் கீழ் எந்தக் கோயிலும் இருக்கவில்லை; அப்படியே இருந்தாலும் ஹிந்து கோயில் கட்டுமானம் என்பதற்கு ஆதாரம் இல்லை; புத்த விகாரமாகவும் அது இருக்கலாம். அதை இடித்து கட்டப்பட்ட கோயில் பாபரின் படைத் தளபதியால் இடிக்கப் பட்டிருக்கலாம்; பாபர் மசூதி இருந்த இடத்தில் எந்த கட்டுமானமும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்படவில்லை...'' இப்படியாக தொடர்ந்து சரித்திரப் புரட்டர்களின் கட்டுரைகள் வெளிவந்தன. ஒருவகையில், நீதிபதிகளை நிர்பந்திக்கும் திட்டத்துடன் தான் அவை வெளியிடப்பட்டதாகத் தோன்றுகிறது. .
..
சரித்திர நிபுணர்கள் இர்பான் ஹபீப், ரொமிலா தாபர், டி.என்.ஜா உள்ளிட்ட அலிகார் பல்கலைக்கழகம், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர்களின் கட்டுக்கதைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டன. இந்த சரித்திர வல்லுனர்களின் கவலை தோய்ந்த அறிக்கை மும்பை டைம்ஸ் ஆப் இந்தியா-லும் தி ஹிந்து-விலும் தீர்ப்பிற்கு மறுநாள் வெளியானது குறிப்பிடத் தக்கது. இவர்கள் எந்தக் காலத்தில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்? உண்மையை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? நமது துரதிருஷ்டம், நாட்டின் அறிவுலகம், இவர்களை பெரும் மேதை என்று நம்பிக் கொண்டிருப்பது தான்.

தொல்லியல் அறிஞர் நாகசாமி போன்றோர் அயோத்தி அகழாய்வில் கிடைத்த சான்றாதாரங்களை விளக்கி ஆய்வுக் கட்டுரைகளை எழுதி உள்ளனர். அந்த அகழாய்வில் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தும் நீதிபதிகள் சர்மா, அகர்வால் அளித்த தீர்ப்புகளின் பிற்சேர்க்கையில் குறிக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நீதிபதியான கான் மட்டும் புத்திசாலித்தனமாக அந்த பிற்சேர்க்கையைத் தவிர்த்துவிட்டார். ஆயினும், மனசாட்சியுடன் தீர்ப்பு அளித்தார். 8,500 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்புக்களின் முழு அம்சங்களையும் இதுவரையிலும் எந்த அறிவுஜீவியும் படித்ததாகத் தெரியவில்லை. ஆனால், கூப்பாடு போட அவர்கள் தயங்கவும் இல்லை.

தற்போதும் அயோத்தி தீர்ப்பு குறித்த விவாதம் பத்திரிகைகளில் தொடர்கிறது. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் அலச பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் உரிமை உள்ளது உண்மையே. ஆனால் அது ஒருசார்பாக இருக்க கூடாது. ‘செக்யூலரிசமேனியா’ வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள நமது ஊடகத்துறை, வழக்கம் போல ஒருசார்பாகவே கருத்துத் திணிப்பு பிரசாரத்தை நடத்துகிறது. இது புரியாமல் நாமும் அந்த நாளிதழ்களை காசு கொடுத்து வாங்கி அவற்றை நடத்துகிறோம்.

கடந்த அக். 2-ம் தேதி தி ஹிந்து-வில் ரொமிலா தாபரின் கட்டுரை வெளியாகியுள்ளது-அதே ‘கேள்வியும் நானே' பாணியுடன். ''சரித்திரம் மீதான மரியாதையை செல்லாக்காசாக்கிவிட்டு, மத நம்பிக்கையின் அடிப்படையில் அதனை அலஹாபாத் தீர்ப்பு மாற்றுகிறது'' என்கிறார் ரொமிலா. தற்போதைய அரசியலுக்காக முந்தைய சரித்திரத்தை மாற்ற முடியாதாம்! இதையும் ரொமிலா தான் திருவாய் மலர்ந்து அருளி இருக்கிறார்.

பாபரின் படைத்தளபதியால் இடிக்கப்பட்ட ராமர் கோயிலை மீண்டும் அமைப்பது இவருக்கு தவறு; 1992 -ல் இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடம் மட்டும் அங்கு எப்பாடுபட்டாவது கட்டப்பட வேண்டும். 1992 நிகழ்வும் சரித்திரம் தானே! அதை மட்டும் மாற்ற எண்ணலாமா?

தி ஹிந்து (THE HINDU) அஹிந்து (A HINDU) ஆகி மாமாங்கமாகிவிட்டது. அதனிடம் நடுநிலையை எதிர்பார்ப்பதோ, நாட்டுநலனை உத்தேசித்த செய்திகளை எதிர்பார்ப்பதோ, நமது பிழை. ‘’அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் பல ஜன்மஸ்தான் விவகாரங்கள் எழ வாய்ப்பளித்துவிட்டது’’ என்றும் ஹிந்துக்களுக்கு நினைவுபடுத்தி இருக்கிறார் ரொமிலா. அதற்காக மட்டும் அவருக்கு நன்றி!

மற்றபடி, எத்தனை முறை ஒரே செக்யூலரிச பொய்யைச் சொன்னாலும் அதனால் இனி எந்தப் பயனும் விளையப் போவதில்லை. ஆயினும் இதனை நமது அபத்த ஊடகங்கள் கண்ணை மூடிக்கொண்டு பரப்புவது ஏன்?

(தொடரும்)
----------------------------------------

.

புதன், அக்டோபர் 06, 2010

கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளிகள்...

பாலுக்கு காவலாக பூனையை வைக்க முடியாது என்ற பழமொழி உண்டு. தற்போதைய மத்திய அரசோ, பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்ற முறையில் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அண்மையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக, கறை படிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.ஜே.தாமசை நியமித்ததில், காங்கிரஸ் கட்சியின் சாயம் மறுபடியும் வெளுத்துவிட்டது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி) என்பது, நாட்டில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை கட்டுப்படுத்தவும், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் 1964 -ல் அமைக்கப்பட்ட சுயேச்சையான அரசு நிறுவனம். மத்திய புலனாய்வுத் துறையின் (சி.பி.ஐ) விசாரணைகள் சரியான திசையில் செல்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும் இதற்கு உரிமை உண்டு. மத்திய பொது தணிக்கை அதிகாரியின் (சி.ஏ.ஜி) ஆய்வறிக்கைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அமைப்பு இது.

அரசு சார்ந்த ஊழல்களை வெளிப்படுத்துவதில் மத்திய கண்காணிப்பு ஆணையம் முறையாகச் செயல்படவில்லை என்று கூறி சுனிதா நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கால், ஆணையத்தின் நிர்வாகியைத் தேர்வு செய்ய பல நெறிமுறைகளை 1993-ல் உச்சநீதி மன்றம் வகுத்தளித்தது. மத்திய கண்காணிப்பு ஆணையரைத் தேர்வு செய்ய, பிரதமர், உள்துறை அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்குமாறும், ஒத்த கருத்துக்களின் அடிப்படையிலேயே, தகுதியும் நேர்மையும் அனுபவமும் வாய்ந்த ஆணையர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நெறிப்படுத்தியது. அந்த நெறிமுறைகள் அனைத்தும் மத்திய கண்காணிப்பு ஆணைய சட்டம் - 2003-ல் (பிரிவு:4 -1) சேர்க்கப்பட்டன.

ஆனால், அந்த சட்டத்தை மீறும் வகையில், உச்சநீதி மன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் புறக்கணித்து, தற்போதைய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். புதிய ஆணையரைத் தேர்வு செய்யக் கூடிய குழுவில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் (பா.ஜ.க) ஆகியோர் இருந்தனர். அவர்கள் முன் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனைக்கு வந்தன. அவர்களுள் ஒருவர் தான், கேரள ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்த பி.ஜே.தாமஸ்.

தேர்வுக்குழுக் கூட்டத்தில் பி.ஜே.தாமசுக்கு சுஷ்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேரள மாநிலத்தில் பணியில் இருந்தபோதும், தொலைத்தொடர்புத் துறையில் பணியில் இருந்தபோதும் அவர் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு, தாமசுக்கு சுஷ்மா எதிர்ப்பு தெரிவித்தார். இதர இருவரில் ஒருவரை நியமிப்பதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் அவர் கூறினார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்ப்பை உதாசீனம் செய்து, ஊழல் கறை படிந்த பி.ஜே.தாமசையே பிரதமர் தேர்வு செய்தார். அவரும் 14 -வது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார். இது ஊழல் கண்காணிப்பு ஆணையத்தையே கேலிக்கூத்தாக்கும் செயல் என்று பா.ஜ.க. கண்டித்தது. அப்படி என்ன தவறைச் செய்து விட்டார் தாமஸ் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேட்கிறார்.

தாமஸ் செய்த தவறுகள் என்ன?

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் கருணாகரன் முதல்வராக இருந்த 1991-92 காலகட்டத்தில் அங்கு மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை செயலாளராக இருந்தவர் பி.ஜே.தாமஸ். தவிர, கேரள மாநில குடிமைப்பொருள் கழகத்தின் உறுப்பினராகவும் அவர் இருந்தார். அப்போது தான் மலேசியாவில் இருந்து 15 ஆயிரம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த இறக்குமதியில், பாமாயில் விலையை அதிகமாக நிர்ணயம் செய்ததில் மாநிலக் கருவூலத்திற்கு ரூ. 2.80 கோடி நஷ்டம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அடுத்துவந்த இடது முன்னணி ஆட்சியில் இந்த முறைகேடு தொடர்பாக ஊழல் வழக்கு தொடுக்கப்பட்டது.

அவ்வழக்கில், பி.ஜே.தாமஸ் எட்டாவது குற்றவாளியாக உள்ளார். இவ்வழக்கு தொடர்பாக மாநில சட்டசபை சபாநாயகரிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று காரணம் கூறி, உச்சநீதி மன்றத்தை அணுகி தடையுத்தரவு பெற்றார் (2007) முன்னாள் முதல்வர் கருணாகரன். ஆயினும், இந்த ஊழல் வழக்கு கேரள மாநில ஊழல் தடுப்புத் துறை வசம் நிலுவையில் உள்ளது. ஆனால், பாமாயில் ஊழல் வழக்கில் இருந்து பி.ஜே.தாமஸ் விடுவிக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் கூறுகின்றனர்; முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கின்றனர். இதனை கேரள ஊழல் தடுப்பு துறை மறுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

தாமஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் இத்துடன் முடியவில்லை. இவர் மத்திய தொலைத்தொடர்பு துறையின் செயலாளராக பதவி வகித்தபோது, மாண்புமிகு அமைச்சர் ஆ.ராசா-வுடன் இணைந்து பணி புரிந்தார். அப்போது தான், உலகம் இதுவரை காணாத, அதிநவீன ஊழல் அரங்கேறியது. 2-ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஆ.ராசாவும், தாமசும் நிகழ்த்திய திருவிளையாடல், இந்திய சரித்திரத்தில் யாரும் செய்யாத மாபெரும் ஊழல் நிகழக் காரணமானது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறையான ஏல விதிகள் கடைபிடிக்கப்படாமல், மூடுமந்திரமான தந்திர ஏலத்தில் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அலைக்கற்றைகளை தரைக்கட்டணத்திற்கு அள்ளி வழங்கினார் ராசா; அவருக்கு பக்கபலமாக நின்றார் தாமஸ். இதன் மூலமாக, தொலைத்தொடர்புத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு, சி.ஏ.ஜி. கணக்கீட்டின் படி ரூ. 70 ஆயிரம் கோடி. நடப்பு வர்த்தக நிலவரத்தைக் கணக்கில்கொண்டு துல்லியமாகக் கணக்கிட்டால், இதன் மதிப்பு ரூ. 1.75 லட்சம் கோடி!

இந்த ஊழல் விவகாரம் சி.ஏ.ஜி. அறிக்கையால் அம்பலமான பிறகு, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (தாமசுக்கு முன்) இருந்த பிரத்யுஷ் சின்ஹா மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தார். தற்போது இவ்விவகாரம் சி.பி.ஐ. விசாரணையிலும், நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது. இத்தகைய மோசடிகளில் தொடர்புடையவர் தான் தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவி வகிக்கிறார். கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியைக் கட்டிக்கொண்டு நாம் பயணிக்கிறோம்.

அதிகார மமதையா? மேலிடக் கட்டளையா?

இந்த விஷயங்களைக் கூறியே சுஷ்மா, தாமசுக்கு தேர்வுக்குழுவில் எதிர்ப்பு தெரிவித்தார்.ஆனால், காங்கிரஸ் கட்சியின் மற்ற இரு உறுப்பினர்களும் தாமஸ் நியமனத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் 2:1 என்ற பெரும்பான்மை முடிவுப்படி தாமஸ் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். உண்மையில், மூன்று உறுப்பினர்களும் ஏக மனதாகத் தேர்வு செய்ய வேண்டிய பதவி இது. அதிகார மமதையாலோ, மேலிடக் கட்டளையாலோ, சுஷ்மாவின் எதிர்ப்பு நிராகரிக்கப்பட்டு, யாரை அப்பதவிக்கு நியமிக்கக் கூடாதோ அவரையே 'திருவாளர் பரிசுத்தம்' மன்மோகன் சிங் நியமித்திருக்கிறார்.

இதன்மூலமாக, கறை படியாத, நேர்மையான, திறமையான சிவில் சர்வீஸ் அதிகாரியையே சி.வி.சி. பதவியில் அமர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறி மீறப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவில் எழுந்த எதிர்ப்பை மீறி அடாவடியாக தாமஸ் நியமிக்கப்பட்டதால், ஒத்த கருத்தின் அடிப்படையில் தேர்வு என்ற வழிமுறையும் குப்பையில் எறியப்பட்டுள்ளது. இது நமது அரசின் முத்திரை வாக்கியமான ''வாய்மையே வெல்லும்'' என்ற முண்டக உபநிடத மணிமொழியையே கேலிக்குரியதாக்கிவிட்டது.

இதே போன்ற அத்துமீறலில் காங்கிரஸ் அரசு முன்னரும் ஈடுபட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தின்போதும், பிரதான எதிர்க்கட்சியின் எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டு, தான்தோன்றித்தனமாகவே நவீன் சாவ்லா நியமிக்கப்பட்டது நினைவிருக்கலாம். தனது மனைவி பெயரில் தனி அறக்கட்டளை நடத்தி அரசியல் கட்சிகளிடம் நன்கொடை வாங்கிய சாவ்லாவை தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கக் கூடாது என்ற பா.ஜ.க.வின் எதிர்ப்பு, சோனியாவால் ஒதுக்கித் தள்ளப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தலின் போது, பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிரதீபா பாட்டில் காங்கிரஸ் தரப்பில் முன்னிறுத்தப்பட்டபோதும் பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது; அதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. தேசத்தின் உச்சநிலை அதிகார மையங்களில் இருப்பவர்கள் குற்றச்சாட்டுகள் இல்லாதவராகவும், தனிப்பட்ட வகையில் நேர்மையாளராகவும் இருக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச தகுதியை எதிர்பார்ப்பது கூட, தவறாகிப்போனது. பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பா.ஜ.க. தனது எதிர்ப்பை பதிவு செய்து வந்தாலும், நாகரிக அரசியல் நடைமுறை அறியாத காங்கிரஸ் கட்சி அவற்றைப் புறக்கணித்தே வருகிறது.

பிரதீபா பாட்டில், நவீன் சாவ்லா, பி.ஜே.ஜோசப்,... என்று இப்பட்டியல் நீள்கிறது. உயர்ந்த பதவியைப் பிடிக்க வேண்டுமானால், தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசிடம் இரண்டு தகுதிகளை நிரூபித்தால் போதும்: ஒன்று, அவர் சோனியாவின் அடிவருடியாக இருக்க வேண்டும்; மற்றொன்று, காங்கிரஸ் காரர்களுக்கு சளைக்காத ஊழல் செய்பவராக இருக்க வேண்டும்- ‘காமன்வெல்த்’ புகழ் சுரேஷ் கல்மாடியைப் போல. தேசம் அனைத்தையும் சகித்துக் கொண்டு, உண்டு, உறங்கி, மக்கள்தொகையைப் பெருக்கிக்கொண்டு, ‘யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய்’ என்ற போக்கில் வாழ்கிறது.
அலைக்கற்றை மோசடி அவ்வளவு தானா?

தான் பணி புரிந்தபோது நிகழ்ந்த மாபெரும் ஸ்பெக்ட்ரம் ஊழல் (2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி) குறித்து, தற்போது பணிபுரியும் இடமான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் பி.ஜே.தாமஸ் எப்படி செயல்படுவார்? கேரள மாநில பாமாயில் இறக்குமதி குறித்த கோப்பு தன்னிடம் வந்தால் தாமஸ் என்ன செய்வார்? இவை சாதாரணமாக எழும் கேள்விகள். மத்திய அரசு வேண்டுமென்றே தாமசை இப்பதவியில் திணித்துள்ளது என்பதற்கு, இக்கேள்விகளுக்கான பதிலே ஆதாரம்.

பதவியில் அமர்வதற்கு முன்னதாகவே, பி.ஜே.ஜோசப் தனது வேலையைத் துவக்கி விட்டார். ஆகஸ்ட் 12 -ம் தேதி தொலைத்தொடர்புச் செயலாளர் என்ற முறையில் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதிய பி.ஜே.ஜோசப், ''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆராய சி.ஏ.ஜி.க்கு சட்டப்படி உரிமை உண்டா?'' என்று கேட்டிருக்கிறார். மறுநாளே அதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சகம் (என்ன வேகம்?), அவர் எதிர்பார்த்தபடியே ''அரசின் கொள்கை (கொள்ளை அல்ல) முடிவில் தலையிட சி.ஏ.ஜி.க்கு உரிமை இல்லை’’ என்று பதில் அளித்திருக்கிறது. அதன் பிறகு ஒருமாதம் கழித்தே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பொறுப்பேற்றிருக்கிறார் ஜோசப். இனி அவர் என்ன செய்வார் என்பது மூடுமந்திரமல்ல.

தி.மு.க. ராசாவும், காங்கிரஸ் ராணியும் இடும் உத்தரவை சிரமேற்கொள்வதுதான் இனிமேல் அவரது தலையாய கடமையாக இருக்க முடியும். ஸ்பெக்ட்ரம் ஊழலை இனி அனைவரும் வசதியாக மறந்துவிடலாம். தமிழகத்தில் 'குடும்பங்கள் ஒன்றுபட்டபோதே' பாதி ஊழல் மறைந்துவிட்டது. ஜோசப் ஊழல் கண்காணிப்பு ஆணையரான பின் மீதி பாதியும் மறைந்து தானே ஆக வேண்டும்?

இந்தப் பிரச்னையைக் கிளறுவதன் மூலமாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கண்ணியத்தைக் குலைப்பதாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சி என்ன விரும்புகிறது? தங்கள் ஊழல் மறைப்பு திட்டங்களுக்கு எதிர்க்கட்சியும் துணைவர வேண்டும் என்றா? உயர் பதவியின் கண்ணியத்தைக் குலைத்துவிட்ட காங்கிரஸ் கட்சி, பிறர் மீது பாய்வது அர்த்தமற்றது. இவ்விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் மன்மோகன் சிங்கின் அவலட்சணத்தை மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்துவது, உண்மையான ஒவ்வொரு தேச பக்தரின் கடமை.

இத்தனைக்கும் பிறகும் 'மதவாத' பா.ஜ.க. ஆட்சிக்கு வரக் கூடாது என்று கூறிக்கொண்டு அரசியல் நடத்தும் இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகளைக் கண்டு பரிதாபம் தான் ஏற்படுகிறது. தற்போதைய ஐக்கிய முன்னணி அரசு, தனது ஆட்சிக்காலத்திற்குள் இன்னும் என்னென்ன அத்துமீறல்களில் ஈடுபடப்போகிறதோ, ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களை எப்படி நிர்மூலம் செய்யப் போகிறதோ தெரியவில்லை.

'சீசரின் மனைவி அப்பழுக்கில்லாதவளாக இருக்க வேண்டும்' என்பது இத்தாலியப் (ரோம் நகர) பழமொழி. இது மற்றவர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். இத்தாலியில் பிறந்த சோனியாவுக்கு புரியாதா? சோனியா வழிநடத்தும் காங்கிரஸ் கட்சிக்கு இப் பழமொழியையே சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

-------------------------------
நன்றி: விஜயபாரதம் (08.10.2010)
.

செவ்வாய், அக்டோபர் 05, 2010

அயோத்தி தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் - 2

இதற்கு முன் படிக்க வேண்டியது: முதல் பாகம்

அயோத்தி வழக்கில் வந்துள்ள இத்தீர்ப்பு நிச்சயமாக ஹிந்துக்களுக்கு நூறு சதவீத நியாயத்தை வழங்கிவிடவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில், இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய கட்டடத்தின் கீழ் பிரமாண்டமான கோயில் கட்டுமானம் இருந்தது தெளிவாகியுள்ளது. அதன் அடிப்படையில், ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஹிந்துக்கள்வசமே ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நாட்டின் சூழல் அத்தகைய தீர்ப்பு வழங்கத் தடையாக இருப்பதை ஏற்றே சமரசமான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் ‘கட்டப் பஞ்சாயத்து’ தீர்ப்பு என்று சில முன்னணி நாளிதழ்கள் வர்ணித்துள்ளன. ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்’ என்ற பாரதியின் முழக்கத்தை முத்திரை வாக்கியமாகக் கொண்டுள்ள ‘தினமணி’யும் இதே தடம் புரண்ட பாதையில் தலையங்கம் தீட்டி இருக்கிறது....
.
தினமணி நாளிதழுக்கு என்று பிரத்யேக வரலாறு உண்டு. தினமணி என்றுமே மத்திய, மாநில அரசுகளின் ஊழல்களை அம்பலப்படுத்தி வந்துள்ளது. அரசியல் ஆளுமைகளுக்கு அடிபணியாத ராம்நாத் கோயங்கா நடத்திய பத்திரிகை அது. அதன் தற்போதைய ஆசிரியர் கே.வைத்தியநாதன் தினமணியின் பாரம்பரியத்தைக் காத்து வந்திருக்கிறார். அவரது தலையங்கங்கள் நேர்மையின் குரலாக ஒலித்துள்ளன. இலங்கை விவகாரத்தில் தமிழகத்தின் எந்த நாளிதழும் செய்யாத அரும்பணியை தினமணி செய்தது. ராமர் கோயில் இயக்கத்தின்போதும் (1984 - 92) தினமணி ஆற்றிய பணியை யாரும் மறந்துவிட முடியாது.

அப்படிப்பட்ட தினமணியின் அக்டோபர் - 1 தேதியிட்ட 'அரசியல்தனமான தீர்ப்பு' தலையங்கம் கண்டிப்பாக அபத்தமானது என்றே சொல்ல வேண்டும். அயோத்தி தீர்ப்பை 'கட்டப் பஞ்சாயத்து' என்று விமர்சித்திருக்கிறது தினமணி தலையங்கம். இணையதளத்தில் இத்தலையங்கம் பெற்றுள்ள பின்னூட்டங்களைப் படிப்பவர்கள் எவரும், தலையங்கத்தின் நோக்கம் திசை திரும்பிவிட்டதை உணர முடியும்.

அயோத்தி தீர்ப்பு அனைவரையும் ஏற்கச் செய்வதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே, நீதிபதிகள் சமரச மயமான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள். அதனால் தான், நாடு முழுவதும் பீதி மாறி அமைதி ஏற்பட்டது. தீர்ப்பின் உடனடி விளைவுகள் இவை. அதைப் புரிந்து கொள்ளாமல், எட்டாயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட தீர்ப்பின் முழு விபரத்தைப் படிக்கும் அவகாசம் இல்லாத நிலையில் எழுதப்பட்ட 'அவசரக் குடுக்கை' தலையங்கம், அதற்கான பலனைப் பெற்றுவிட்டது. ஹிந்துக்களை வக்கிரமாக வசைபாடும் கும்பல் பின்னூட்டங்களில் புகுந்துகொண்டு தினமணியின் தரத்தை நாற அடித்தது.

தொலைநோக்குப் பார்வையும், பின்விளைவுகளை உத்தேசிக்கும் தீர்க்கதரிசனமும் இல்லாத தலையங்கம், ‘மவுன்ட் ரோடு மாவோ’ பத்திரிகையில் வெளிவந்த கருத்துத் திணிப்பு செய்திகளை விட பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. மாவோ பத்திரிகை இப்படித்தான் எழுதும் என்ற தெளிவுடன்தான் அதனை யாரும் படிக்கிறார்கள்; தினமணி அப்படியல்ல. அந்த நாளிதழில் வந்தால் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் இருக்கிறது. திருவாளர்கள் சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் போன்றோர் வழிநடத்திய நாளிதழ் தினமணி. அந்த நம்பிக்கையை இத்தலையங்கம் போக்கிவிட்டது.

இந்த இடத்தில் சில கேள்விகள் எழுகின்றன. கட்டப் பஞ்சாயத்து என்பது என்ன? பஞ்சாயத்திற்கும் இதற்கும் என்ன வித்யாசம்? நமது பாரம்பரிய நீதிமுறையில் பஞ்சாயத்து முறை இருந்ததே தவறா? சமீபகாலமாக சமரசத் தீர்ப்பாயங்களை நீதிமன்றங்களே நடத்துகின்றனவே, அவையும் தவறா? பஞ்சாயத்து என்ற வார்த்தை கீழ்த்தரமானதா?

இதற்கு பதில் வேண்டுமானால் நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்த ஆட்டிடையனும் கூட நடுநிலையான தீர்ப்பு சொன்னதை நாம் கதைகளில் கேட்டிருக்கிறோம். தற்போதைய இ.பி.கோ சட்டங்கள் வருவதற்கு முன்னரும் இந்நாட்டில் பன்னெடுங்காலம் நீதி காப்பாற்றப்பட்டுள்ளது.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி


-என்பது நடுநிலை நாயகர்கள் குறித்த திருக்குறளின் விளக்கம் (12 -8).

அத்தகைய சான்றோர் ஐவர் சேர்ந்த அவையே 'பஞ்சாயத்து'. அவர்கள் முன்பு வரும் எந்தப் பிணக்கும் நிவர்த்தியாகும்; வழக்குகள் உடனே பைசலாகும். அங்கு எந்த வழக்கும் 60 ஆண்டுகள இழுத்துக் கொண்டிருக்காது.

ஆங்கிலேயரும் முகலாயரும் வருவதற்கு முன்னர் நமது நாட்டில் இயல்பான சட்டம்- நீதி வழங்கு நெறிமுறைகள் இருந்தன. தமிழின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பல சமுதாய நீதி கூறும் நூல்கள் என்பதிலிருந்தே, நமது முன்னோர் நீதிக்கு அளித்த முக்கியத்துவத்தை உணரலாம். அத்தகைய நாட்டில் தான், தற்போது கோடிக் கணக்கான வழக்குகள் குவிந்து, விசாரிக்க முடியாமல் மலையெனக் கிடக்கின்றன. சட்டமே பிரதானம் என்று சொல்லிக் கொண்டே, அதைத் திருத்தும் மசோதாக்களை சுயவிருப்பப்படி நிறைவேற்றிக் கொண்டே, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றங்கள் புரிந்துகொண்டே வாழப் பழகிவிட்ட சமுதாயமாக நாம் மாறிவிட்டோம். அதனால்தான், பெருந்தன்மையுடனும், முன்னெச்சரிக்கையுடனும் அயோத்தி வழக்கில் மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குற்றம் கண்டு தலையங்கம் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

பஞ்சாயத்து தீர்ப்பு என்பது- அக்குழுவில் உள்ள ஐந்து சான்றோர் பெருமக்களும் இயைந்து வழங்குவது; நடுநிலைமை, இறையச்சம், மனிதாபிமானம் ஆகியவற்றின் சேர்க்கை அது; வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரின் வலிமை, பாதிப்பு, தாங்கும் திறன் ஆகியவற்றை உத்தேசித்து அதிகாரமும் கருணையும் கலந்து வழங்குவது; குடும்ப நலம், கிராம நலம், நாட்டுநலம் அனைத்தையும் கருத்தில் கொண்டு தர்மத்தின் அடிப்படையில் வாய்மொழியாக வழங்கப்பட்டது; பாரம்பரிய நீதிநூல்களும், இதிகாசக் கதைகளும் மிக சாதாரணமான பழமொழிகளும் கொண்டு எளிதாக பிரச்னைகளைத் தீர்த்தது.

பஞ்சாயத்திற்கும் கட்டப் பஞ்சாயத்திற்கும் என்ன வித்யாசம்? தர்மவான்களான சான்றோர் கூடி வழங்கியது பஞ்சாயத்து தீர்ப்பு. அந்த இடத்தை அதிகாரம் மட்டுமே படைத்த நிலச்சுவான்தாரர்கள் பிடித்துக்கொண்டபோது கட்டப் பஞ்சாயத்து ஆனது. ஒரே வரியில் சொல்வதானால், அண்ணா ஹசாரே செய்வது பஞ்சாயத்து; அழகிரி செய்வது கட்டப் பஞ்சாயத்து. தற்போதைய அயோத்தி தீர்ப்பை எவ்வாறு கட்டப் பஞ்சாயத்து என்று விமர்சிப்பது?

நாட்டில் வழக்குகளைக் குறைக்க சமரசத் தீர்வே சரியான முறை என்று புரிந்துகொண்டு உச்சநீதிமன்றம் முதல் கீழ்நிலை நீதிமன்றம் வரை முயற்சி மேற்கொண்டிருப்பது, பல இடங்களில் நல்ல பலனைத் தருவதைக் காண்கிறோம். சமரசம் என்பதே விட்டுக்கொடுப்பதும், பெற்றுக்கொள்வதும் தான். ஏதோ ஒரு வகையில் வழக்கு தீர்ந்து இரு தரப்பினருக்கும் அமைதி கிட்டினாலே கோடி புண்ணியம்.

கிராமத்தில் ஒரு கதை உண்டு. சகோதரர்கள் இருவர் தங்கள் நிலத்தை பாகப்பிரிவினை செய்ய நீதிமன்றத்தை நாடினராம். அதற்காக தங்கள் வீடு, நகைகளை விற்று வழக்கு நடத்தினராம். இறுதியில், சொத்தும் இழந்து நிலமும் இழந்து, வழக்கை நடத்திய வழக்கறிஞர்களுக்கே அடிமாட்டுவிலைக்கு விற்றுவிட்டு அதே நிலத்தில் கூலிவேலை செய்தார்களாம். இதுபோன்ற எத்தனை குடும்பங்களின் அழிவை நீதிமன்ற வராந்தாக்களில் நாம் கண்டிருக்கிறோம்! நமது உரிமையியல் நீதிமன்ற வழக்குகள் விசாரணைக்கு வரவே எத்தனை காலம் ஆகிறது? சாட்சிகள் மறைந்து, வம்சமே பூண்டற்றுப் போனபின்னும் வாய்தா வாங்கும் வழக்குகள் நடவாமலா உள்ளன? பல தலைமுறைகள் வன்மத்துடன் காத்திருந்து இறுதியில் பெறும் தீர்ப்பால் வம்சாவளிக்கு என்ன பலன் கிடைக்க முடியும்?

இத்தகைய நிலையில், நாட்டு நலனை உத்தேசித்து சமரச முயற்சியாகவே இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர் மூன்று நீதிபதிகளும். ஹிந்துக்கள் தரப்பில் முழு நியாயம் இருந்தும் கூட, அனுபவ பாத்தியதையின் அடிப்படையில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை ஷன்னி வக்பு வாரியத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது அதனால் தான். தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் மட்டுமல்லாது, நாட்டின் தற்போதைய சூழலையும் அரசியல் நிலவரத்தையும் உலகின் போக்கையும் பரிசீலித்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் தான் ''யாருக்கும் வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை'' என்று ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் கூறியிருக்கிறார். முஸ்லிம் தலைவர்களும் கூட, தீர்ப்பு ஏமாற்றம் அளித்தாலும் அமைதியுடன் அதனை ஏற்கக் காரணம் இதுவே. மத்திய அரசும், உ.பி. மாநில அரசும் நிம்மதிப் பெருமூச்சு விட வாய்ப்பளித்துள்ளது இத்தீர்ப்பு.

தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் பிரதானத் தீர்ப்பை அளித்திருந்தால், இத்தகைய அமைதி கிட்டாமல் போயிருக்கலாம். அதற்கு சில சம்பவங்களை இங்கு நினைவுகூரலாம்:

கடந்த செப். 6-ம் தேதி, அமெரிக்காவின் ஏதோ ஒரு மூலையில் உள்ள கிறிஸ்தவ மத போதகர் டெரி ஜோன்ஸ் என்பவர் ‘செப். 11-ம் தேதியன்று திருக்குரானை எரிக்கப்போவதாக’ அறிவித்தார். அதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் தனது மிரட்டலை வாபஸ் பெற்றார். ஆயினும் உலகில் வேறு எங்கும் நிகழாத வன்முறை ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டது. அந்த வன்முறையில் காஷ்மீர் மக்கள் 18 பேர் பலியாகினர். இஸ்லாமிய நாடுகளில் கூட நிகழாத அந்த எதிர்ப்பும் வன்முறையும் இந்தியாவில் ஏன் ஏற்பட்டது? நமது அண்டைநாடான பாகிஸ்தான் தொடர்ந்து நடத்திவரும் விபரீத விளையாட்டின் விளைவு அது. அத்தகைய எதிரிக்கு வாய்ப்பு கொடுக்கும் விதமாக தீர்ப்பு அமைய வேண்டாம் என்று நீதிபதிகள் சிந்தித்திருக்கலாம்.

நமது ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பரப்பிவரும் மதச்சார்பின்மைக்கு மாசு நேர்ந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்திலும் நீதிபதிகள் யோசித்திருக்கலாம். நாட்டின் அமைதியைக் கருதி அரசும் நிர்பந்தம் செய்திருக்கலாம். நியாயத்தை சொல்லப்போய் ஒட்டுமொத்த தீர்ப்பும் நிராகரிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற முன்யோசனை இருந்திருக்கலாம். எதுவாயினும் நாட்டுநலன் அடிப்படையில், யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்ற சிந்தனை நல்லது தானே? இத்தகைய தருணத்தில் யாவரையும் சமாதானப் படுத்தும் வகையில் உண்மையை சிறிதளவேனும் சொல்ல வேறு வாய்ப்பு இருக்கிறதா என்ன?

இதனைப் புரிந்துகொள்ளாமல், தினமணி தீட்டிய தலையங்கம் ஹிந்து எதிரிகளின் பிரசார சாதனமாகி இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ, தினமணி தனது பாரம்பரியப் பெருமையைக் குலைக்கும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் இத்தலையங்கத்தை எழுதிவிட்டது. அதன் முக்கிய பகுதி இதோ...

ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.

கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது....

அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, ‘ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது....

தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது....

அதன் அடிப்படையிலும், ‘நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, ‘இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது...
அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல....

இந்த 'நம்பிக்கையின் அடிப்படையில்' என்ற நீதிபதியின் வார்த்தைகள் தான் மாபெரும் குற்றமாக முன்வைக்கப்படுகிறது. ஏனெனில், ''ஸ்ரீராமனின் பிறப்பை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது; அது நம்பிக்கையின் பாற்பட்டது'' என்று ஹிந்து இயக்கங்கள் பல ஆண்டுகாலமாக சொல்லி வந்துள்ளன. அதையே அலஹாபாத் உயர்நீதிமன்றம் கூறியதை ஊடகங்களால் ஏற்க முடியவில்லை. அவர்களுக்கு மூன்று நிகழ்வுகளை நினைவூட்டி கேள்வி கேட்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

1. காஷ்மீரின் ஹஸ்ரத்பால் மசூதியில் ஒரு பேழையில் வைக்கப்பட்டிருந்த இறைதூதர் முகமது நபி அவர்களின் புனித முடி ஒன்று காணாமல் போய்விட்டதால் 1991-ல் நிகழ்ந்த வகுப்புக் கலவரத்தை நாடு மறந்திருக்காது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, காணாமல் போன அந்த முடி அவசர அவசரமாகக் கண்டுபிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தில் கொல்கத்தா கடுமையாக பாதிக்கப்பட்டது. காணாமல் போன முடியைக் கண்டறிய இந்திய அரசு ஏன் அப்போது கடும் முயற்சிகளை மேற்கொண்டது? இஸ்லாமியர்களின் நம்பிக்கை அரசை ஆட்டுவித்தது. ஆக வன்முறையைக் கைக்கொள்ளும் சமூகம் தனது நோக்கத்தை உடனே நிறைவேற்றிக் கொள்கிறது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குகள் நிராகரிக்கப்பட்டன. ஏன் நம்பிக்கைக்கு ஊறு நேரும் என்பதாலா?

2 . கணவனால் விவாகரத்து செய்யப்பட 60 வயது முஸ்லிம் பெண்மணியான ஷா-பானுவுக்கு ஜீவனாம்சம் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டவுடன், இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, 1986-ல் 'முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமை பாதுகாப்பு சட்டம்' என்ற புதிய சட்டத்தையே கொண்டு வந்ததே ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு! இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தில் தலையிடக் கூடாது என்ற எண்ணம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது? அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை சார்ந்தது; சட்டத்திற்கு அப்பாற்பட்டது என்று எப்படி அரசு தீர்மானித்தது? மத நம்பிக்கைக்காக ஒருவரது வாழ்வையே குழி தோண்டிப் புதைத்த அரசும், அதைக் கண்டிக்காத உச்சநீதிமன்றமும் குறித்து இந்த ஊடகங்கள் என்ன எழுதிக் கிழித்தன? பதிக்கப்பட்ட ஷா-பானுவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நிவர்த்தி ஏன் கிடைக்கவில்லை?

3. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாட்டில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக 2010-ல் தமிழக அரசு சட்டம் கொண்டுவந்தது. அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் தலையிடுவதாக அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாக திருமணப் பதிவு சட்டத்தில் முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று அரசு அறிவித்தது. இது எந்த வகையில் சட்டத்தின் பாற்பட்டது? நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டத்தை ஓராண்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 1995-ல் உத்தரவிட்டது, இதுவரை கண்டுகொள்ளப்படாதது ஏன்? சட்டத்தை விட, நாட்டின் உச்சபட்ச நீதி அமைப்பைவிட, இஸ்லாமியர்களின் நம்பிக்கை முக்கியம் என்பதால் தானே? அதே நம்பிக்கை அடிப்படையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்தால் மட்டும் மதச்சார்பற்றவர்களுக்கு எங்கிருந்து நியாய ஆவேசம் வருகிறது?

ஆக மத நம்பிக்கையைப் பொருத்த மட்டிலும் ஹிந்துக்களின் நம்பிக்கை கீழானது; இஸ்லாமியர்களின் நம்பிக்கை மேலானது என்று ஊடகங்கள் கருதுகின்றனவா? இதற்கு காரணம் தங்கள் மத நம்பிக்கைக்கு ஊறு நேர்ந்தால் முஸ்லிம்கள் வன்முறையில் இறங்குவார்கள் என்ற அச்சம் தானே காரணம்? ஹிந்துக்கள் என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள்; ‘இடிச்சபுளிகள்’ என்பது தான் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் கேவலப்படுத்தப்படுவதன் காரணமா?

1992-க்கு முன் ஹிந்துக்களின் நிலைமை உண்மையில் 'இடிச்சபுளி' தான். அயோத்தி அதை மாற்றிவிட்டது. அதனால்தான் ஹிந்துக்களின் மத நம்பிக்கைகள் தீர்ப்பில் இடம் பெற்றிருக்கின்றன. முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளுக்காக அநியாயங்களை சகித்துக்கொண்டவர்கள், நாட்டு நலனுக்காக ஏன் இந்த 'நம்பிக்கை அடிப்படையிலான' தீர்ப்பை ஏற்கக் கூடாது? ஒரு வாதத்திற்காக எழுப்பப்படும் கேள்விகள் இவை.

உண்மையில், ஸ்ரீராமனின் பிறப்பை நிர்ணயிக்கும் தகுதியும் ஞானமும் எவருக்கும் கிடையாது. அயோத்தியில் தற்போதுள்ள ராம்லாலாவை இடம் மாற்றும் துணிவும் யாருக்கும் கிடையாது. அயோத்தியில் தரைமட்டமாக்கப்பட்ட கும்மட்டம் இருந்த இடத்தில் மசூதி எழுப்பும் வாய்ப்பும் இனி கிடையாது. இவை நிதர்சனங்கள்; சவால்களல்ல. இதை உணர்ந்ததால் தான் நியாயமான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.

இங்கு சட்டம் பேசவில்லை; தர்மம் பேசியுள்ளது. சட்டப்படி என்றால் அனைத்து நிலமும் ஹிந்துக்களுக்கே கிடைத்திருக்கும். அகழாய்வு சாட்சியங்கள் ஹிந்துக்களுக்கே சாதகமாக உள்ளன. ஆயினும் நாட்டு நலனை உத்தேசித்து, எவரையும் தோற்கடிக்காமல், மிகவும் நாசூக்கான முறையில், நியாயத்தையும் சொல்லி, நீதியை நிலைநாட்டியுள்ளனர் நீதியரசர்கள்.

அறிவை விட அன்பு மேலானது; சட்டத்தை விட தர்மம் மேலானது. அந்த அடிப்படையில்தான் அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை 'கட்டப் பஞ்சாயத்து' என்று பகடி செய்யாமல், முஸ்லிம்களுக்கு அறிவுரை கூறுவது தான் ஊடகங்கள் முன்னுள்ள தற்போதைய கடமை.

நில உரிமை தொடர்பான பல நூற்றாண்டுகள் கடந்த வழக்கில் அதிகபட்ச சாத்தியக்கூறுகளுடன் கூடிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவே இறுதியல்ல; உச்சநீதிமன்றம் செல்வதல்ல இதன் அடுத்த படிநிலை. ஹிந்து- முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் ஒருங்கே அமர்ந்து சுமுகமான முறையில் பிரச்னையைத் தீர்ப்பதற்கான முதல்படியாகவே அயோத்தி தீர்ப்பு உள்ளது. இதை உரக்கச் சொல்லும் துணிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; 'பஞ்சாயத்து' என்று தீர்ப்பை விமர்சித்து ஊடகங்கள் தங்கள் தரத்தைத் தாழ்த்திக் கொள்ளவேண்டாம். நான் மிகவும் நேசிக்கும் தினமணி நாளிதழுக்கும் இதுவே எனது வேண்டுகோள்.

(தொடரும்)
---------------------------------------
.

சனி, அக்டோபர் 02, 2010

அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்- 1

அயோத்தி ராமஜன்மபூமியில் ராம்லாலா


60 ஆண்டு காலமாக நாடு எதிர்பார்த்த அயோத்தி கோயில் நில உரிமை தொடர்பான தீர்ப்பு ஒருவழியாக வெளியாகிவிட்டது. காலம் கடந்த தீர்ப்பாயினும், இப்போதாவது வந்ததே என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். அந்த அளவிற்கு, பத்திரிகைகளும், ஊடகங்களும் நாட்டு மக்களை அயோத்தி விஷயத்தில் மக்களைக் குழப்பி இருந்தன. அயோத்தி என்று சொன்னாலே ஏதோ காஷ்மீரின் மர்மப் பக்தியில் இருக்கும் பயங்கரவாதிகள் முகாம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய ஊடகங்கள், நாட்டிற்கு இழைத்துள்ள அநீதி அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடாது.

குறித்த தீர்ப்பு வெளியான நேரத்தில், நாடு முழுவதும் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் போல- மக்களே ஏற்படுத்திக்கொண்ட ஊரடங்கு உத்தரவு போல- காணப்பட்டது. எல்லாப் பெருமையும் பத்திரிகைகளுக்கே!

தீர்ப்புக்கு முன்:

பத்திரிகைகள் சமூகத்தின் மனசாட்சியாக இருக்க வேண்டும்; நாட்டுநலத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை வழிநடத்த வேண்டும்; சத்தியத்தின் வாழ்விற்காக அதிகாரபலத்தை எதிர்த்துப் போராட வேண்டும்.

நமது இதழியல் முன்னோடிகளான மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், வீர சாவர்க்கர், அரவிந்தர், மகாகவி பாரதி ஆகியோர் நமக்கு வழங்கிச் சென்ற அற்புத வழிமுறை. ஆனால், வர்த்தகமும், சுயநலமும் கோலோச்சும் தற்போதைய ஊடக உலகிடம் இவற்றை எதிர்பார்ப்பது, முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போன்றது.

அயோத்தி இயக்கம் துவங்கியதிலிருந்தே, நமது பத்திரிகைகளும் ஊடகங்களும், நாட்டு மக்களைக் குழப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளன. குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ராமர் கோயிலுக்கு எதிரான பிரசார இயக்கத்தையே முன்னெடுத்தன. இதன் அடிப்படை புரியாமலே, ஆங்கில பத்திரிகைகளில் வெளியான செய்திகளை அப்படியே மொழிபெயர்த்து பிராந்திய மொழி பத்திரிகைகள் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தன. அயோத்தியில் ராமர் பிறந்தாரா? அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டாவிட்டால் வானம் இடிந்து விழுந்துவிடுமா? சர்ச்சைக்குரிய கட்டடம் இருந்த இடத்தில் பொதுக் கழிப்பறை கட்டலாமா? கரசேவகர்களுக்கு தூக்கு தண்டனை தரலாமா? இப்படியெல்லாம் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் பின்னணியில் ஹிந்து விரோத சக்திகளும், வெளிநாட்டு பணபலமும் இருந்தது மக்களுக்குத் தெரிய நியாயமில்லை.

அயோத்தி இயக்கத்தின் உச்சகட்டம் 1992, டிச. 6 -ல் கரசேவகர்களின் எழுச்சியாக அமைந்தபோது, அதை இந்தியாவின் கருப்பு தினமாக அறிவிக்காத ஊடகங்களே இல்லை எனலாம். 1948- லிருந்து ராமபக்தர்கள் காத்திருக்கும் தீர்ப்பு வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டு, நீதி ஒளித்து வைக்கப்படாமல் இருந்திருந்தால் அந்தச் சம்பவமே நடந்திருக்காது என்று எந்த பத்திரிகையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால், அன்று நடந்த கரசேவை தான், தற்போது அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு அடிநாதமாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். இப்போது அதனைச் சுட்டிக்காட்ட எந்த ஊடகங்களும் தயாரில்லை.

அயோத்தி வழக்கில் கடந்த செப். 24 -ம் தேதியே அலஹாபாத் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முன்னெச்சரிக்கை பிரசாரம் களைகட்டிவிட்டது. காவல்துறை குவிப்பு, பாதுகாப்புப் படையினர் வருகை, யாரையும் புண்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை, மத்திய அமைச்சர்களின் 'மேல்முறையீடு' வேண்டுகோள்கள், நடமாட்டம் குறையும் சாலைகள் என்று பத்திரிகைகள் தேசசேவகம் செய்தன. யாருமே, ஒரு நீதிமன்றத் தீர்ப்பிற்காக இத்தனை முன்னெச்சரிக்கை தேவை ஏன் என்று எழுதவில்லை.

மின்னணு ஊடகங்களும் தொடர்ந்து இதே பிரசாரத்தை முன்னின்று நடத்தின. இதன் விளைவாக செப். 24 -ம் தேதி பயங்கர நாளாக உரு மாற்றப்பட்டது. அதற்கு முதல்நாள் அறிவுஜீவி வழக்கறிஞர் ஒருவர் பெற்ற தடையாணை (சமரசத்திற்கு ஒருவார காலம் வாய்ப்பு!!!) காரணமாக நாடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. ஆயினும், அன்று துவங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அப்படியே தொடர்ந்தன.

நாடு முழுவதும் குழும குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்) அனுப்ப தடை விதித்து மத்திய அரசு தனது மதியூகத்தை எண்ணி மார்தட்டிக் கொண்டிருக்க, அதே எஸ்.எம்.எஸ்.களை தேசபக்தியுடன் அனுப்பி நாட்டைக் காக்குமாறு கூறி தொலைகாட்சி செய்தி அலைவரிசைகள் தங்கள் ரேட்டிங்கை உயர்த்த படாதபாடு பட்டன. கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதே தடை செய்யப்பட்டது எந்த வகையிலான அரசு உரிமை என்று கேட்கும் அறிவு எந்த பத்திரிகைக்கும் இருக்கவில்லை. நாடு முழுவதையும் காஷ்மீராக்கும் அரசு நடவடிக்கைகள் சரியானது தானா? இதற்கு பத்திரிகைகள் துணை போகலாமா? என்று அறியாமல், அரசின் பிரசார சாதனங்களாக பெரும்பாலான ஊடகங்கள் மாறின.

இதன் விளைவாக, அயோத்தி தீர்ப்பு வெளியான தினம் (செப். 29), ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட - அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நாடு போல பாரதம் முழுவதும் காட்சியளித்தது. எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டைகளும், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளுடன் நிற்கும் காட்சிகளும் தென்பட்டன. இதனால், நாட்டு மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். சரக்கு வாகனப் போக்குவரத்து செப். 28 -ம் தேதி முதலே நிறுத்தப்பட்டது. தனியார் பேருந்துகள் வியாழனன்று மதியமே நிறுத்தப்பட்டன. அரசு பேருந்துகளும் பெயரளவில் மட்டுமே இயங்கின. சாலைகள் வெறிச்சோடின; கடைகள் அடைக்கப்பட்டன. மக்களே முன்வந்து நடத்திய 'பந்த்' போல நாடு காட்சியளித்தது. ஒருவாரகால ஊடகங்களின் பீதியூட்டும் பிரசாரத்தால், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான தினம் பயங்கர கனவு கண்டவனின் தூக்கம் போல மாறிவிட்டது.

தீர்ப்புக்குப் பின்:

அயோத்தி தீர்ப்பு செய்திகளை வெளியிடும்போது பொறுப்புணர்வைக் கடைபிடிக்குமாறு மத்திய அரசு ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், தீர்ப்பு வெளியானபோது பத்திரிகைவாலாக்களின் பொறுப்புணர்வு வெளிப்பட்டது. லக்னோவில் குவிந்திருந்த 600-க்கு மேற்பட்ட பத்திரிகையாளர்கள், அயோத்தி வழக்கில் தொடர்புடைய 'திடீர் பிரபலமான' வழக்கறிஞர்களின் பேட்டிகளைப் பெற முண்டியடித்தபோது, அவர்களது கட்டுப்பாடும் கலகலத்தது.

திடீர் பிரபலங்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு ‘தீர்ப்பாக’ அவிழ்த்துவிட தொலைகாட்சி முன் அமர்ந்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தடுமாறினர். நல்லவேளையாக லக்னோ மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அயோத்தி தீர்ப்பின் சுருக்கங்கள் குழப்பம் போக்கின. செய்திகளை முந்தித் தர வேண்டும் என்பதற்காக நடைமுறையில் இல்லாதவற்றை நிகழ்த்தவும் ஊடகங்கள் தயாராகி விடுகின்றன.

தீர்ப்பின் முழு சாராம்சத்தையும் புரிந்துகொள்ளாமல் தவறான 'பிளாஷ் நியூஸ்' வெளியிட்ட செய்தி அலைவரிசைகளையும் காண முடிந்தது. குறிப்பாக கலைஞர் செய்தி, ''அயோத்தி இடத்தை மூடராக பிரிக்க உத்தரவு'' என்பதையே பல நூறு முறை நேரலை ஒளிபரப்பில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. இது அறியாமையால் அல்ல; அரசியலால் என்பது தெளிவு.

''அயோத்தியில் வழக்கில் தொடர்புடைய இடம் ராமஜன்மஸ்தான் தான்’’ என்ற தீர்ப்பை ஒளிபரப்ப கலைஞர் செய்திக்கு மனமில்லை. அதே போல, சன் செய்திகள், அயோத்தியில் குறிப்பிட்ட மூன்றில் ஒரு பங்கு இடத்தை பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவிடம் ஒப்படைக்குமாறு செய்தி ஒளிபரப்பிக் கொண்டே இருந்தது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளோ, பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவோ பார்த்திருந்தால் தலையில் அடித்துக் கொண்டிருப்பார்கள்.

அயோத்தி தீர்ப்பின் முழுமையான தாத்பரியம் மக்களுக்கு சென்று சேர்ந்துவிடக் கூடாது என்பதில் தமிழ் செய்தி அலைவரிசைகள் கங்கணம் கட்டி நின்றன. தமிழ் நாளிதழ்களும் கூட முழுமையான தீர்ப்பை வெளியிடவில்லை. ஆங்கில பத்திரிகைகளிடம் நியாயமான செய்தியை மக்கள் எதிர்பார்க்கவும் இல்லை.

1992, டிச. 6 -க்குப் பின் பத்திரிகைள் நடத்திய பிரமிப்பூட்டும் பிரசாரம் அந்தக்கால செய்திகளை வாசித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த பிரசார சாதனங்கள் அயோத்தி தீர்ப்புக்குப் பின் அர்த்தமுள்ள அமைதி காக்கின்றன. தீர்ப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் காங்கிரஸ் கட்சி திணறுவது போலவே பத்திரிகைகளின் மனசாட்சியும் தடுமாறுகிறது. 1992-ல் ஹிந்துக்களுக்கு உபதேசித்த எவரும் 2010-ல் முஸ்லிம்களுக்கு உபதேசிக்கத் தயாராக இல்லை.

1992, டிச. 6 -க்குப் பின் பத்திரிகைள் நடத்திய பிரமிப்பூட்டும் பிரசாரம் அந்தக்கால செய்திகளை வாசித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த பிரசார சாதனங்கள் அயோத்தி தீர்ப்புக்குப் பின் அர்த்தமுள்ள அமைதி காக்கின்றன. தீர்ப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் காங்கிரஸ் கட்சி திணறுவது போலவே பத்திரிகைகளின் மனசாட்சியும் தடுமாறுகிறது. 1992-ல் ஹிந்துக்களுக்கு உபதேசித்த எவரும் 2010-ல் முஸ்லிம்களுக்கு உபதேசிக்கத் தயாராக இல்லை.

இப்போதும்கூட, செய்திகளை 'திருக்கல்' செய்யக் கூடாது என்ற சுயகட்டுப்பாட்டை மீறும் வகையில் சில ஆங்கில நாளிதழ்கள் செயல்படுகின்றன; முஸ்லிம்களுக்கு அநீதி விளைவிக்கப்பட்டுவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. தீர்ப்புக்குப் பின் அமைதியாக உள்ளவர்களை உசுப்பிவிடும் முயற்சி இது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மொத்தத்தில் இந்திய ஊடகங்களும் பத்திரிகைகளும் நாட்டுநலத்தைக் கருதுவதாகவோ, நீதிமன்றத் தீர்ப்பை உரிய முறையில் மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பனவாகவோ இல்லை என்பதே வருத்தத்திற்குரிய நிலையாக உள்ளது. இத்தீர்ப்பில் சமரசத்திற்காக இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதை எவரும் கண்டுகொள்ளவே இல்லை; மாறாக முஸ்லிம்களின் மீதே அவர்களது கருணை பொங்கி வழிகிறது. 1992- ல் நடந்த கரசேவை ஏன் தவிர்க்க முடியாமல் போனது என்பது இப்போது தெளிவாகவே புரிகிறது.

(தொடரும்)

----------------------------------------
காண்க: தமிழ் ஹிந்து

நன்றி: விஜயபாரதம் (15.10.2010)

.