வெள்ளி, டிசம்பர் 30, 2011

சனிப்பெயர்ச்சியும் சசிப் பெயர்ச்சியும்

சனிப்பெயர்ச்சியும் குருப்பெயர்ச்சியும் சமீப காலமாக தமிழகத்தில் மிக முக்கிய இடம் பெற்று வருகின்றன. கிரகங்களின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஜோதிட பலன்களை வெளியிடாத நாளிதழ்களே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். மக்களின் நம்பிக்கை எதில் அதிகமாக இருக்கிறதோ, அதில் கவனம் செலுத்துவது தான் நாளிதழ்களின் வர்த்தகத்தைப் பெருக்கும் என்பதால் தான் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக பகுத்தறிவுப் பிரசாரம் கொடூரமாகச் செய்யப்பட போதும் தமிழகத்தில் மக்களின் இதயப்பூர்வமான நம்பிக்கைகளை வெல்ல முடியவில்லை. இதற்குக் காரணம், பகுத்தறிவுப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களது நாடகத்தனமும் பித்தலாட்டமும் தான் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. மேடையில் பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து மத வெறுப்பை உமிழும் பலரும் ரகசியமாக ஜோதிடம் பார்த்து அரசியல் நடத்துபவர்கள் தான் என்பதை மக்கள் அறிந்தே உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் திராவிடக் கட்சிகளில் அதிமுக மட்டுமே தனது நம்பிக்கைகளை வேஷம் கட்டாமல் வெளிப்படுத்தி வருகிறது. அதன் தலைவி ஜோதிடர்களின் ஆலோசனைகளை மிகவும் மதிப்பவர். அவரது அரசியல் முடிவுகள் பலவும் ஆஸ்தான ஜோதிடர் ஒருவரது ஆலோசனைகள் பெற்ற பிறகே எடுக்கப்படுவதாக கட்சியிலேயே பேச்சு உண்டு. அதை உறுதிப்படுத்தி இருக்கிறது, அதிமுக-விலிருந்து சசிகலா கும்பல் நீக்கப்பட்ட விவகாரம்.

ஜெயலலிதாவின் நிழல் என்றும் 'உடன் பிறவா சகோதரி' என்றும் வர்ணிக்கப்பட்டவர் சசிகலா. முன்னாள் அரசு அதிகாரி நடராஜனின் மனைவியான சசிகலா ஜெயலலிதாவின் தோழமைக்காக கணவரையே பிரிந்து போயஸ் தோட்டத்தில் உடன் இருந்தவர். திரைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டினாலும், ஜெயலலிதாவுக்கு நம்பகமான ஒருவரது ஆதரவு தேவைப்பட்டது. பெண் ஒருவர் ஆண் ஆதிக்கம் மிகுந்த அரசியலில் வெல்வதும் ஒரு மாநிலக் கட்சியை நடத்துவதும் சாதாரண விஷயமல்ல. அதை சாதித்த ஜெயலலிதாவுக்கு ஆரம்பகாலத்திலிருந்து உடன் உதவியாக வந்தவர் சசிகலா. ஜெயலலிதாவுக்கென தனியே குடும்பம் இல்லாததால், அவரை உடன் இருந்து கவனிக்கும் தோழியாக சசிகலா மாறினார்.

அதிகார பீடத்தின் நிழலுக்கும் கூட அதிகாரபலம் வந்துவிடும் என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். தமிழகத்தின் சக்திவாய்ந்த முதல்வராக மாறிய ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா அதிகார மையமாக மாறியதில் வியப்பில்லை. சசிகலாவுடன் சேர்த்து அவரது கணவர் நடராஜனும் அதிமுகவின் பிரதான அரசியல் அதிகார மையமானார். பிற்பாடு சசிகலா குடும்பமும், அவரது நெருங்கிய உறவினர்களும் ஜெயலலிதாவைச் சூழ்ந்தனர். அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஜெயலலிதாவைச் சந்திக்க வேண்டும் என்றாலும் கூட இவர்களது அனுமதி தேவை என்ற சூழல் உருவானது.

இந்த அதிகார மாற்றம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், ஏதோ ஒரு நிர்பந்தம் காரணமாக, அல்லது தோழி மீதான நம்பிக்கை காரணமாக அவர் அமைதி காத்தார். ஆனால், நடராஜன் எல்லை மீறி ஆதிக்கம் செலுத்தியவுடன் அவரை ஓரம் கட்டினார். அவருடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டார். அதன் விளைவாக சசிகலா தனது கணவரைப் பார்ப்பதும் கூட குறைந்து போனது.


சசிகலாவின் அக்கா மகன் வி.என். சுதாகரனை வளர்ப்பு மகனாகத் தத்தெடுத்து அவருக்கு சிவாஜி குடும்பத்தில் பெண்ணெடுத்து அவர் நடத்திய கோலாகல திருமணம் தமிழக அரசியலில் முக்கியமான நிகழ்வு. அதுவே அவரது 1991 -1996 கால ஆட்சியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. அதன்பிறகு சிலகாலம் சசிகலாவுடன் தொடர்பைத் துண்டித்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், அந்தப் பிரிவு நீண்டநாள் நிலைக்கவில்லை. ஜெயலலிதா மீது கருணாநிதி அரசு பல ஊழல் வழக்குகளைத் தொடுத்து அவரது பெயரைக் கெடுத்த சூழலில், அவரது துயரத்தில் ஆறுதல் கூற மீண்டும் சசிகலா தேவைப்பட்டார். அவர் மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்டார்.



அடுத்து மீண்டும் 2001 -2006 ல் ஆட்சியில் இருந்தபோது, சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரனை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்த்தார். அந்த ஆட்சியில் தினகரன் முக்கிய அரசியல் மையமானார். அந்தக் காலகட்டத்தில் சசிகலாவின் பல உறவினர்கள் போயஸ் தோட்டத்தில் நுழைந்தார்கள். நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவால் வாங்கப்பட்டது. அதில் சசிகலாவும் பங்குதாரர். இந்த எஸ்டேட்டாலும் ஜெயலலிதாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

சசிகலாவின் தம்பி திவாகரன், அக்கா மகன் பாஸ்கரன், அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ், மற்றொரு அண்ணன் மகன்கள் டி.வி.மகாதேவன், தங்கமணி, நடராஜனின் சகோதரர் ராமசந்திரன், சித்தப்பா மருமகன் ராவணன், உறவினர்கள் மோகன், குலோத்துங்கன், ராஜராஜன் ஆகியோர் அதிமுகவில் சிறுகச்சிறுக அதிகார மையங்கள் ஆயினர். இதில் ராவணன் நடத்திய தனி ராஜாங்கமும் வசூல் வேட்டையும் இப்போது அம்பலமாகி வருகின்றன.


ஜெயலலிதாவைச் சூழ்ந்துள்ள சசிகலா குழு ஒருகட்டத்தில் ‘கும்பலாக’ மாறியது. அதன் விளைவாக, கட்சியில் அவமானப்படுத்தப்பட்ட பலர் திமுகவுக்கு கட்சி மாறினர். தவிர, அதிமுகவே ‘தேவர் கட்சி’ என்ற தோற்றமும் ஏற்பட்டுவிட்டது. கட்சி விவகாரங்களை ஜெயலலிதா, சசிகலா உறவினர்களை நம்பி ஒப்படைத்ததை அவர்கள் துஷ்பிரயோகம் செய்தனர். இதை தலைவியிடம் சொல்ல முடியாமல் உடன்பிறப்புகள் தவித்தனர்.


2006 -2011 காலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதும் சசிகலாவுக்கு சொந்தமான மதுபான ஆலை டாஸ்மாக் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகித்தது. அதன் காரணமாகவே, முந்தைய காலங்கள் போலல்லாமல் திமுக அதிமுக மீதி பழி வாங்கும் படலத்தை பிரயோகிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.


20011 -ல் நடந்த தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் சசிகலா கும்பல் பேரிடம் வகித்தது. இதில் பல கோடி வசூல் நடத்தப்பட்டதாகவும் தகவல். அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் கூட ஒவ்வொரு வேட்பாளரும் பல லட்சங்களைக் கொடுத்து 'சீட்' வாங்கியதாக தகவல். இவை அனைத்து ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதன் விளைவாக, அவர் இந்த அதிரடியை நிகழ்த்தி இருப்பதாகவும் தகவல்.


ஆனால், சசிகலா கும்பல் மீது ஒட்டுமொத்தமாகப் பழிபோடுவதில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. சசிகலாவை தனது நிழலாக ஜெயலலிதா முன்வைத்திருந்த நிலையில், கட்சிக்காரர்கள் அவரைத் தானே தொடர்பு கொள்ள முடியும்? இது ஜெயலலிதாவின் தவறு. திமுகவை ஒரு குடும்ப நிறுவனமாக மாற்றிய கருணாநிதிக்கு (இப்போதாவது திருந்துவாரா செம்மொழி கொண்டான்?) நிகராக, அதிமுகவை தனது தோழியின் நிறுவனமாக மாற்றியது யார் செய்த தவறு?


சசிகலாவால் ஏற்கனவே பலமுறை அடிபட்டும், அவரையே நம்பி இருந்தது ஜெயலலிதாவின் தவறு. அல்லது, அவர் தெரிந்தே இந்தத் தவறை செய்திருக்க வேண்டும். ஏனெனில் ஜெயலலிதா பிற பெண்களைப் போல மிகச் சாதாரணமானவர் அல்ல. ஆக, சசிகலாவின் தவறுகளில் ஜெயலலிதாவுக்கும் பங்குண்டு.


நிலைமை முற்றி, கைமீறிய பிறகு அறுவைச் சிகிச்சை செய்திருக்கிறார் ஜெயலலிதா. இது அவராக ஏற்படுத்திக்கொண்ட நோயல்லவா? இப்போது அதிமுகவிலிருந்து சசிகலா, அவரது கணவர் நடராஜன் (இவர் அதிமுக உறுப்பினர் என்பதே கட்சியிலிருந்து நீக்கப் பட்டபோது தான் தெரிய வந்தது) மற்றும் உறவினர்கள் 16 பேர் நீக்கப் பட்டுள்ளனர். அவர்களுடன் கட்சியினர் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அம்மாவின் வாக்கை மீற அதிமுகவில் யாரும் துணியப் போவதில்லை. மொத்தத்தில் சசிகலா நீக்கத்தால் கட்சிக்கு கெடுதல் ஏதும் இல்லை. ஜெயலலிதாவும் சேர்ந்து செய்த தவறுகளுக்கு சசிகலா மீது பழி போட முடியும் என்பதால், இந்த நீக்கம் அதிமுகவுக்கு நன்மையே.


தனது பிரியத் தோழியின் கும்பலை நீக்க ஜெயலலிதா முடிவெடுத்த காலம் தான் முக்கியமானது. பெங்களூரு நீதிமன்றத்தில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தர்மசங்கடமான கேள்விகளைச் சந்தித்துவரும் ஜெயலலிதாவுக்கு சசிகலாவின் நீக்கம் வழக்கில் பயன்படுமா என்பதை இனிமேல் தான் பார்க்க வேண்டும். அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பாதகமான தீர்ப்பு வந்தால் அடுத்த பொம்மை முதல்வராக (பன்னீர்செல்வம் போல) யாரை நியமிக்கலாம் என்று ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டதால் தான் சசிகலா கும்பலுக்கு ஜெயலலிதா ‘கல்தா’ கொடுத்தார் என்கிறார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை. சனிப்பெயர்சியை ஒட்டி ஜெயலலிதா எடுத்த அதிரடி முடிவு இது என்பதால், இதை 'சசிப் பெயர்ச்சி' என்று பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.


இந்த முடிவின் பின்புலத்தில் தேசியக் கட்சி ஒன்றின் கரம் இருப்பதாகவும் (பாஜக?) சாணக்கியர் ஒருவரது அறிவுரை இருப்பதாகவும் (சோ?) ஊடகங்கள் அலசுகின்றன. எது எப்படியாயினும், அதிமுக தொண்டர்கள் இம்முடிவை மிகவும் வரவேற்பது, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்து கொண்டாடியதிலிருந்து தெரிகிறது. எனினும் சசிகலாவை அதிகார மையமாகக் கருதி அவருடன் நெருங்கி இருந்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு கொஞ்சம் கலக்கமே. அவர்களை 'அம்மா' என்ன செய்யப் போகிறார் என்பது இன்னும் புலப்படவில்லை.


அரசியலே குற்றவாளின் கூடாரமாக மாறிவரும் நிலையில், தனது கட்சியை (அதிமுக- ஜெயலலிதா என்ற தனிநபரின் கட்சி தானே?) சசிகலாவிடம் அடகு வைத்தது அவரது தவறு. சசிகலா செய்தது நம்பிக்கை துரோகமாக இருக்கலாம். ஆனால், உள்கட்சி ஜனநாயகத்தை மதிக்காமல் தன்னிச்சையாக இயங்கிய ஜெயலலிதாவே அனைத்துக்கும் பொறுப்பு. இனிமேலேனும், அதிமுகவில் தேர்தல் நடத்தி, தொண்டர்களின் கட்சியாகவும், கொள்கைப்பிடிப்புள்ளவர்களின் கட்சியாகவும் அதை மாற்ற வேண்டியது ஜெயலலிதாவின் கடமை.


இத்தனை நாட்கள் ஜாதகரீதியாக ஜெயலலிதாவுக்கு போதாத காலம். அவரது சிம்ம ராசியை சனி பகவான் ஆட்டிப் படைத்து விட்டார். இப்போது சனீஸ்வரர் கடகராசிக் காரரனான கருணாநிதி பக்கம் ஒதுங்கி இருக்கிறார். எனவே, முன்பு செய்த தவறுகளை சரி செய்யவும், ஆக்கப்பூர்வமாக சிந்தித்து கட்சியை மேம்படுத்தவும் ஜெயலலிதாவுக்கு காலமும் உள்ளது. அவரது அதிகாரபலத்தை நல்லபடியாகப் பயன்படுத்தினால் மாநிலத்துக்கும் நன்மை விளையும்.


கடமை தவறாதவர்களுக்கே சனி பகவான் அதிக நன்மைகளைக் கொடுப்பார்; கடமை தவறுபவர்களையே அவர் தண்டிப்பார் என்பது ஜோதிட சாஸ்திரம். இது ஆட்சியாளர்கள் அறிய வேண்டிய உண்மை.


-------------------------
விஜயபாரதம் (06.01.2012)

திங்கள், டிசம்பர் 26, 2011

முல்லைப் பெரியாறு அணையும் வெளிவராத தகவல்களும்

அண்மையில் வாரமிருமுறை வெளிவரும் ‘தமிழக அரசியல்’ இதழில் முல்லைப் பெரியாறு தொடர்பான கேள்வி-பதில் ஒன்றைப் படிக்க நேர்ந்தது. மத்திய அரசு கேரள அரசைக் கண்டிக்க வேண்டும் என்ற தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் வேண்டுகோள் குறித்து பதில் அளித்திருந்த ‘சீனியர்’, முதலில் கேரளாவில் பேபி அணிக்கு கடப்பாரையுடன் சென்ற தங்கள் உறுப்பினர்களை பாஜக கட்டுப்படுத்தட்டும் என்று கூறி இருந்தார்.

உண்மைதான். அது ஒரு துரதிர்ஷ்டமான சம்பவம். கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியும், ஆண்ட இடதுசாரிக் கூட்டணியும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நடத்தும் அரசியலுக்குப் போட்டியாக பாஜகவும் அங்கு தனது இருப்பை நிரூபிக்க களம் இறங்கியது. பாஜ யுவமோர்ச்சா தொண்டர்கள் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை உடைப்பதற்காக அங்கு திரண்டு செய்திகளில் இடம் பெற்றார்கள்.






-----------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து




புதன், டிசம்பர் 21, 2011

நிலநடுக்கமும் நமது அரசியல்வாதிகளும்



இயற்கைச் சீற்றமான ‘நிலநடுக்கம்’ நமது அரசியல்வாதிகளிடம் சிக்கிக்கொண்டு படாத பாடு படுகிறது. கூடங்குளத்திலும் முல்லைபெரியாறு அணையிலும் நிலநடுக்கம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டையே நிலைகுலையச் செய்திருக்கிறார்கள், நமது அரசியல்வாதிகள்.

முதலில் கூடங்குளத்தை பார்ப்போம். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புக்கு அடிப்படைக் காரணம், ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையம்தான். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டு இப்போதும் அதன் கதிர்வீச்சு தொடர்கிறது. அதுபோலவே கூடங்குளத்திலும் நடந்துவிடும் என்பதே எதிர்ப்பாளர்களின் வாதம். ஆனால், நிலநடுக்கப் பகுதியில் கூடங்குளம் வரவில்லை என்பது விஞ்ஞானிகளின் விளக்கம். உண்மையில் ஜப்பானின் புகுஷிமாவையும் கூடங்குளத்தையும் ஒப்பிட முடியாது......



-----------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

------------------------

விஜயபாரதம் (30.12.2011)

.

செவ்வாய், டிசம்பர் 13, 2011

சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை...



‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற பழமொழி காங்கிரஸ் கட்சிக்கு என்றே உருவானது போல இருக்கிறது. “சண்டையிலே சட்டை கிழியாம என்ன செய்யும்?’ என்று வாய்ச்சவடால் விடுவார் நடிகர் வடிவேலு ஒரு படத்தில். அது நமது நிதி மந்திரி பிரணாப் முகர்ஜிக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. ஜனநாயக நெறிமுறைகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் நாடாளுமன்றத்தில் குட்டு விழுந்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து பாடம் கற்றதாகத் தெரியவில்லை மன்மோகன் சிங்.


எதற்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிக்கக் கூடும்; அண்மையில் நாடாளுமன்றத்தில் சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் அந்நிய முதலீடு தொடர்பான மசோதாவைக் கொண்டு வருவதற்காக மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு முடிவு செய்ததும், அதற்கு எழுந்த எதிர்ப்பால் பின் வாங்கியதும் வாசகர்கள் அறிந்திருக்கலாம். ‘சில்லறை வணிகத்தில் 51 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு என்ற முடிவிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை’ என்று முழங்கிய பிரதமர், மறுநாளே தனது பேச்சைக் குறைத்துக் கொண்டார். அரசு கவிழாமல் காக்க இம்முடிவை ஒத்திவைப்பதாக(8.12.2011) பிரணாப் முகர்ஜி அறிவித்தார்....


---------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------------------

விஜயபாரதம் (23.12.2011)

.

திங்கள், டிசம்பர் 05, 2011

அப்பாடா, கிடைத்தது ஜாமீன்!

திமுக தலைவரின் மகளும் ஸ்பெக்ட்ரம் மோசடி வழக்கில் குற்றவாளியுமான கனிமொழிக்கு ஒருவழியாக ஜாமீன் கிடைத்து, (நவம்பர் 28) சிறையிலிருந்து வெளிவந்துவிட்டார். இத்தகவல் கிடைத்தவுடன்அப்பாடா வந்தாயா? என்று அவரை வரவேற்பேன்என நெகிழ்ச்சியுடன் கூறினார் கருணாநிதி. அவரது தந்தைப்பாசம் புரிந்துகொள்ளக் கூடியதே.



கூட்டுச் சதியாளர், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட கடும் குற்றச்சாட்டுகளுடன், கடந்த மே 20 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழிக்கு பலமுறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டது திமுகவினருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது. மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்தபோதும் முன்பு போல அவர்களை ஆட்டிப் படைக்க முடியாது போனதுதான் திமுகவினருக்கு சம்மட்டி அடியாக இருந்தது. போதாக்குறைக்குசட்டம் தன் கடமையைச் செய்கிறதுஎன்று அவ்வப்போது வேதாந்தம் பேசிய காங்கிரஸ் தலைவர்களும் கூட்டணித் தோழரை (இந்த வாக்கியத்தை முன்பு பலமுறை கருணாநிதியே கூறி இருக்கிறார்! அவருக்கே அல்வா?) பதம் பார்த்தனர்- ஏதோ அவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போல...

------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து
-------------------------
விஜயபாரதம் (16.12.2011)
.