வெள்ளி, ஏப்ரல் 27, 2012

மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?



பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்படுவதே ஜனநாயகம் என்று கூறப்படுவதுண்டு. 49 பேர் ஆதரித்தாலும், அதை 51 பேர் எதிர்த்தால் எதிர்ப்பாளருக்கே வெற்றி கிடைக்கும் என்பது தான் வாக்களிக்கும் ஜனநாயகத்தின் அடிப்படை. இதெல்லாம், சிறுபான்மை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைத் தான் மத்திய அரசில் அவ்வப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தெரியப்படுத்தி வந்திருக்கிறது சோனியா தலைமையிலான காங்கிரஸ். அவரது சிஷ்யரான ஓமன் சாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டார். தனது தலைமையிலான 22 பேர் கொண்ட கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி, தங்கள் கட்சி யாருக்கு சாதகமானது என்பதை முரசறைந்து அறிவித்திருக்கிறார் அவர்.

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டசபை உறுப்பினர்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்த்தரப்பில் இடது ஜனநாயக முன்னணிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர் (மா.கம்யூ எம்.எல்.ஏ ஒருவர் பதவி விலகியதால் ஒரு இடம் காலியாக உள்ளது). ஐ.ஜ.முன்னணியில் காங்கிரஸ் கட்சியின் பலம் 38; முஸ்லிம் லீக் கட்சியின் பலம் 20. கூட்டணியில் உள்ள கிறிஸ்தவர்களின் கட்சிகளாக அறியப்படும் கேரள காங்கிரஸ் கட்சிகளின் இரு பிரிவுகளுக்கும் எம்.எல்.ஏக்கள் உண்டு.

அண்மையில் நடந்த பிரவம் இடைத்தேர்தலில் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) சார்பில் வென்ற அனுப் ஜேக்கப் அமைச்சரானபோது, சாண்டியின் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை (அவரையும் சேர்த்து) 6 ஆக உயர்ந்தது. அவருடன் மஞ்சாலம் குழி அலி பதவி ஏற்றபோது, அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மொத்தத்தில் 22 பேர் கொண்ட சாண்டி அமைச்சரவையில் இப்போது சிறுபான்மையினரின் எண்ணிக்கை 12!

கேரளாவின் மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 56.2 சதவீதம்; இஸ்லாமியர்கள்- 24.7 சதவீதம்; கிறிஸ்தவர்கள்- 19 சதவீதம். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்த நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கேரளாவில் தான் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகம். கேரள அரசியலில் மிகவும் செல்வாக்கு செலுத்துபவர்களாக சிறுபான்மையினர் மாறி உள்ளனர். அவர்களது ஒட்டுமொத்த அளவான 44 சதவீதம் வாக்குகளைப் பெறவே காங்கிரஸ் கூட்டணியும் கம்யூனிஸ்ட் கூட்டணியும் போட்டியிடுகின்றன. கேரளாவில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தும் தேர்தலில் வெற்றி பெற இயலாமல் போவதற்கு இந்த மக்கள்தொகை மாறுபாடே காரணம்.

இந்நிலையில் தான், ஏற்கனவே 4 அமைச்சர்களைக் கொண்டிருந்த முஸ்லிம் லீக், அமைச்சரவையில் தனக்கு கூடுதலாக ஓரிடத்தை அளிக்குமாறு நிர்பந்தம் செய்தது; அல்லது ராஜ்யசபைக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்தவரை அனுப்ப வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக கேரளா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த விவாதம் நடந்து வந்தது. நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசைக் காக்க முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலோர் லீகின் நிர்பந்தத்தை ஏற்கக் கூடாது என்றே கூறினர். ஆயினும், கட்சியினரின் கருத்துக்களை மீறி, இப்போது லீகின் சார்பில் ஐந்தாவதாக ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார். இது கேரளாவில் பலத்த அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறது.

கேரளாவில் சிறுபான்மையினரின் வாக்குகளை நம்பியே காங்கிரஸ் கட்சி இயங்கி வந்துள்ளது. கருணாகரன் இருந்தவரை, அவரால் கட்சிக்குள் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடிந்தது. சோனியா வரவுக்குப் பின் அவரது நிலைமையே மோசமாகிவிட்டது. இப்போது அவரும் இல்லை. இன்றைய காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி (தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர்), முதல்வர் ஓமன் சாண்டி ஆகிய தலைவர்களின் பின்புலத்தில் தான் தாக்குப் பிடிக்கிறது.

அதனால் தான், அரசின் தலைமைக் கொறடாவாக, கூட்டணிக் கட்சியான கேரள காங்கிரஸ் (மானி) பிரிவைச் சேர்ந்த பி.சி.ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உண்டு. இக்கட்சி கிறிஸ்தவர்களின் கட்சி என்றே தன்னை அறிவித்துக் கொள்ளும் கட்சி. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.ஜார்ஜ், ''கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை'' என்று கூறி இருக்கிறார். உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.

சாண்டி அமைச்சரவையில் இதே கட்சியின் கே.கே.மானி, பி.ஜே.ஜோசப் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாது ஆர்.எஸ்.பி (பி) பிரிவின் ஷிபு பேபி ஜான், காங்கிரஸ் கட்சியின் கே.ஜோசப், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) பிரிவின் அனுப் ஜேக்கப் ஆகிய கிறிஸ்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முதலமைச்சர் சாண்டியுடன் சேர்த்தால் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 6!

வெறும் 19 சதவீதம் உள்ள கிறிஸ்தவர்களுக்கே 6 அமைச்சர்கள் என்றால், 24.7 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களுக்கு 5 அமைச்சர்கள் தானா? என்று முஸ்லிம் லீக் கேட்டது. அதிலுள்ள நியாயத்தைப் ‘புரிந்துகொண்டு’ தலைவணங்கி இருக்கிறது காங்கிரஸ். இப்போது முஸ்லிம் லீக் சார்பில், பி.கே.குன்னாலி குட்டி, பி.கே.அப்து ரப், வி.கே.இப்ராஹீம் குஞ்சு, எம்.கே. முனீர், மஞ்சாலம் குழி அலி ஆகியோர் (மொத்தம் 5) அமைச்சர்கள் ஆகி உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அமைச்சராக உள்ள இஸ்லாமியரான ஆர்யாதன் முகமதுவுடன் சேர்த்தால் சாண்டி அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆகிறது!

இதைவிட முக்கியமான விஷயம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், கல்வி, பொதுப்பணி, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீதமுள்ள 10 பேரும் ஹிந்துக்கள். மொத்தத்தில், 56.2 சதவீதம் உள்ள ஹிந்துக்கள் தானே கிள்ளுக்கீரை? இந்த பாரபட்சத்தை எதிர்த்து பாஜக திருவனந்தபுரத்தில் அழைப்பு விடுத்த கடையடைப்புக்கு பெருவாரியான ஆதரவு இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த மண்டியிடுதல் கண்டு முன்னாள் முதல்வர் அச்சுவும் கூட வருத்தம் தெரிவித்திருக்கிறார். ''காங்கிரஸ் கட்சி தனது வலிமையை கேரளத்தில் இழந்து வருவதையே இது காட்டுகிறது'' என்று அவர் விமர்சித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இந்த மண்டியிடுதல் உட்பூசலைக் கிளப்பி இருக்கிறது. முஸ்லிம் லீகுக்கு ஐந்தாவது அமைச்சர் பதவி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய அமைச்சர் ஆர்யாதான் முகமது பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்தார். ''காங்கிரஸ் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்டுவிட்டது தவறு'' என்கிறார் இவர். கேரள மாநில முன்னால காங்கிரஸ் தலைவர் முரளிதரனும் தலைமையை கண்டித்திருக்கிறார். ஆனால், சாண்டியோ, எல்லாம் தில்லி தலைமையிடம் கேட்டுத் தான் செய்தேன் என்கிறார்.

முந்தைய அச்சுதானந்தன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசில் இத்தகைய மோசமான போக்கு இல்லை. அப்போது 3 முஸ்லிம் அமைச்சர்களும், 2 கிறிஸ்தவ அமைச்சர்களும், 15 ஹிந்து அமைச்சர்களும் இருந்தனர். மத நம்பிக்கை அற்ற கட்சி என்று கூறிக் கொண்டபோதும், சிறுபான்மையினர் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்த மார்க்சிஸ்ட்கள் விடவில்லை. அத்தகைய நிலைமை அவர்களுக்கு தேர்தல் முடிவுகளிலும் ஏற்படவில்லை.

ஆனால், இன்றைய நிலைமை மிகவும் மோசம். தேர்தல் களத்தில் வெல்பவர்களே மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள். மொத்தமுள்ள 56.2 சதவீத ஹிந்துக்களில் பலரும் ஜாதி, கட்சி பார்த்து வாக்குகளை சிதறடித்துவிடும் நிலையில், பலர் (குறிப்பாக மேட்டுக்குடியினர்) வாக்குச்சாவடிப் பக்கமே வராத நிலையில், சிறுபான்மையினர் திரண்டுவந்து வாக்களித்து தங்கள் சக்தியை நிரூபித்து விடுகிறார்கள். பிறகு புலம்புவதில் என்ன பயன் இருக்கிறது?

இப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் நாயர் சேவை சங்கத்துக்கு (என்.எஸ்.எஸ்) தெரிந்திருக்கிறது. ''பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?'' என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். காலம் கடந்த பின்னர் ஞானோதயம். கேரளாவில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்.

கேரள அரசியலில் அடுத்த முக்கியமான சக்தியான ஈழவர்கள் சார்ந்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி) அமைப்பும் சாண்டியின் விபரீத முடிவை எதிர்த்திருக்கிறது. அதன் பொதுச்செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன், ''ஜனநாயகம் என்ற பெயரில் கேரளாவில் ஓமன் சாண்டி தலைமையில் மதவாதிகளின் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் குறித்து வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை'' என்று மனம் புழுங்கி இருக்கிறார்.

இவ்விரு அமைப்புகளும் தான் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை கேரளாவில் நிலைநிறுத்தி வந்துள்ளன. சமீபத்திய மாற்றங்களால் இந்த அமைப்புகள் அதிருப்தி அடைந்திருக்கின்றன. இந்த அதிருப்தி, நெய்யாட்டிங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

அதைவிட முக்கியமானது, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, மதவாதிகளுக்கு மண்டியிடும் காங்கிரஸ் கட்சியின் போக்கை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவி இருப்பதுதான். சுதந்திரத்துக்கு முன் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் தான் தேசப்பிரிவினை நிகழ்ந்தது. மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா? நாட்டு மக்கள் முன்னுள்ள கேள்வி இது.

-----------------------------------------------------------

பெட்டிச்செய்தி:

கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினர் ஆதிக்கம்


கிறிஸ்தவர்கள்: 6 பேர்
1. முதலமைச்சர் ஓமன் சாண்டி
2. கே.ஜோசப் (இருவரும் காங்கிரஸ்)
3. கே.கே.மானி
4. பி.ஜே.ஜோசப் (இருவரும் கேரள காங்கிரஸ் - மானி பிரிவு)
5. அனுப் ஜேக்கப் (கேரள காங்கிரஸ் -ஜேக்கப் பிரிவு)
6 . ஷிபு பேபி ஜான் (ஆர்.எஸ்.பி -பி பிரிவு)

இஸ்லாமியர்கள்: 6 பேர்
1 . ஆர்யாதான் முகமது (காங்கிரஸ்)
2 . பி.கே. குன்னாலி குட்டி
3 . பி.கே.அப்து ரப்
4 . வி.கே.இப்ராஹீம் குஞ்சு
5 . எம்.கே.முனீர்
6 . மஞ்சாலம் குழி அலி (ஐவரும் முஸ்லிம் லீக்)

மக்கள் தொகையுடன் ஒப்பீடு:

மொத்த அமைச்சர்கள்: 22 பேர்.
சிறுபான்மையினர்: 12 பேர்.
பெரும்பான்மையினர்: 10 பேர்.
மக்கள்தொகையில் சிறுபான்மையினர் விகிதம்: 44
அமைச்சரவையில் சிறுபான்மையினர் விகிதம்: 54
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் விகிதம்: 56
அமைச்சரவையில் பெரும்பான்மையினர் விகிதம்: 46

-------------------------------------------------------------
விஜயபாரதம் (04.05.2012)

காண்க: தமிழ் ஹிந்து

.

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

ஐ.பி.எல்: குற்றம் யாருடையது?



செய்தி - 1

சென்னை: சென்னையில் ஐந்தாவது .பி.எல்., தொடரின் துவக்க விழா வண்ணமயமாகத் துவங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 9 அணிகள் பங்கேற்கும் தொடரின் துவக்க விழா ஒய்.எம்.சி.., மைதானத்தில் புதன்கிழமை நடந்தது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஹரிஹரனின் இசை, பிரபு தேவா, பிரியங்கா சோப்ராவின் நடனம் என நிகழ்ச்சி களைகட்டியது. சென்னை பாப் பாடகி கேட்டியின் நிகழ்ச்சியும் பார்வையாளர்களை எழுந்து ஆடச் செய்தது. சென்னை அணி கேப்டன் தோனி சரிகர்களைப் பார்த்து, ‘’எப்படி இருக்கீங்க?’’ என தமிழில் பேசி அசத்தினார்.

- தினமலர் செய்தி (04.04.2012).

செய்தி - 2

புதுடில்லி: .பி.எல். தொடரில் கிரிக்கெட் சூதாட்டம் சூடு பிடித்துள்ளது. இம்முறை ரூ. 75 ஆயிரம் கோடி வரை பணம் புரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது .பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. மொத்தம் 76 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகளை கணிப்பது தொடர்பான பெட்டிங்கில், சூதாட்ட புக்கிகள் மிகவும் பிசியாக உள்ளனர். ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே, பெட் கட்டிவிடுகின்றனராம். சென்னை, மும்பை போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து உறுதியாக சொல்லவில்லை என்றாலும், எந்த அணி வென்றாலும், ரூ. 1 க்கு ரூ. 1.90 வரை தரப்படும் என்று உறுதி கொடுத்துள்ளனர். நேற்று நடந்த கோல்கட்டா-டில்லி போட்டியில், கோல்கட்டா தான் வெல்லும் என, புக்கிகள் தெரிவித்தனராம்.இதன் படி, கோல்கட்டா வென்றால் ரூ. 1 க்கு ரூ. 1.80 ம், டில்லி வென்றால் ரூ. 2.10 தருவதாக தெரிவித்துள்ளனர். தவிர, காம்பிர், காலிஸ் குறித்தும், இர்பான் பதான்-யூசுப் பதான் சகோதரர்கள் எப்படி திறமை வெளிப்படுத்துவர், அரைசதம் அடிப்பது யார், அதிக விக்கெட் எடுப்பது யார், அதிக சிக்சர் அடிப்பது யார் என்பது பற்றியும், சூதாட்டம் களை கட்டியுள்ளது.மொத்தத்தில் இந்த ஆண்டு மட்டும் ரூ. 75 ஆயிரம் கோடி வரைக்கும் சூதாட்டத்தில் பணம் புரளும் என்று, புக்கிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

- தினமலர் செய்தி (05.04.2012).

செய்தி – 3

லண்டன்: .பி.எல் தொடக்க விழா மிகவும் மோசமான நிகழ்வாக அமைந்ததாக .பி.எல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது .பி.எல். தொடரின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் சென்னை ஒய்.எம்.சி.. மைதானத்தில் நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், சல்மான் கான், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரோடு பிரபல நடன இயக்குநரான பிரபுதேவாவும் இவ்விழாவில் கலந்துகொண்டார். மேலும், அமெரிக்க பாப் பாடகி கேட்டி பெர்ரியும் கலந்துகொண்டார். மிக பிரமாண்டமான அரங்கில் நவீன நுட்பங்கள் கொண்ட விளக்குகள், தொழிநுட்பங்களைக் கொண்ட விழாவாக இது அமைந்திருந்தது.

எனினும் இவ்விழா தொடர்பான தனது திருப்தியின்மையை வெளிப்படுத்திய லலித் மோடி, தனது டுவிட்டரில் தெரிவித்ததாவது: தொலைக்காட்சியில் பார்க்கையில் மிக சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிகழ்வைக் காணக் காத்திருந்தேன். ஆனால் ஒரு மோசமான நிகழ்வாக அமைந்திருந்தது.

மூடப்பட்ட அரங்கை விட, போட்டிக்கு முன்னராக மைதானத்திலேயே இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருக்கலாம் எனக் குறிப்பிட்ட லலித் மோடி, இவ்வாறான ஒரு மோசமாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வை காட்சிப்படுத்த இந்தியக் கிரிக்கெட் வாரியம் எவ்வாறு அனுமதித்தது எனவும் கேள்வியெழுப்பினார்.

.பி.எல். கிரிக்கெட் டி20 போட்டிகளை தோற்றுவித்த லலித் மோடி, 2008, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் .பி.எல். அமைப்பைத் தலைமை தாங்கி நடத்தினார். ஆனால் அதன் பின்னர் நிதி ஒழுங்கீனங்கள் காரணமாக அவ்வமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-லங்காஸ்ரீ ஸ்போர்ட்ஸ் (04.04.2012)

செய்தி – 4

ஜாம்ஷெட்பூர்: வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா, உலகத்தரம் வாய்ந்த தனதுவில்லை விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என, விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.

ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தின், பத்மடா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா ராணி தத்தா, 21. டாடா வில்வித்தை அகாடமியில் பயிற்சி பெற்ற இவர், பாங்காங்க் கிராண்ட் பிரிக்சில் நடந்த சர்வதேச வில்வித்தை போட்டியில், இந்தியா சார்பில் தங்கம் வென்றுள்ளார். வறுமை காரணமாக போதிய பண வசதி இல்லாததால், வில்வித்தையில் இருந்து ஒதுங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்.

இதனிடையே, நிஷா ராணியின் வீட்டினை பழுது பார்க்க பணம் தேவைப்பட்டது. இதற்காக, வில்வித்தை போட்டிக்கு பயன்படுத்தப்படும், உலகத்தரம் வாய்ந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள, தனது வில் மற்றும் அம்புகளை இவர் விற்ற செய்தி இப்போது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து மத்திய விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் கூறியது:

வறுமையால் இப்படி நடந்ததுள்ளது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்...,) மூலமாகத்தான் இந்த செய்தி தெரியவந்தது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயராக உள்ளோம். மாநில அரசுகள் இவ்விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

வீரர், வீராங்கனைக்குத் தேவையான நிதி ஆதாரங்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் தரவேண்டும். ஏதோ ஒரு காரணத்துக்காக தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என்றாலும், வாழ்க்கை நடத்த உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இவர்களை புறக்கணிக்கக் கூடாது.

இவ்வாறு அஜய் மேகன் கூறினார்.

கோடி கோடியாய் பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் இந்த நாட்டில், கிரிக்கெட்டிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கும் இந்த ஆதிக்க நாட்டில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது சகஜம் தானே?

-அலை செய்திகள் (03.04.2012)

***

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் .பி.எல் கிரிக்கெட் அமைப்பு நடத்தும் ட்வென்டி-20 (டி-20) போட்டிகள் கிரிக்கெட் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுக்க இயலாது. ஐரோப்பிய நாடுகளில் கிளப் அணிகளால் ஆடப்படும் கால் பந்தாட்டப் போட்டிகள் பெற்ற சிறப்பை, .பி.எல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பெற்றுள்ளன.

ஒரு வகையில், நாடுகள் சார்ந்த தேசிய அணிகளிடையிலான போட்டி தேசபக்தியை வளர்த்தது உண்மை. ஆனால், .பி.எல். போட்டிகளைப் பொருத்த வரை விளையாட்டுக்கே முக்கியத்துவம். ஒவ்வொரு அணியிலும் வெவ்வேறு நாட்டு வீரர்கள் இருப்பதால், திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பதும் உண்மை. எனவே .பி.எல் போட்டிகளைப் பொருத்த வரை தேசியக் கண்ணோட்டம் இன்றி விளையாட்டை ரசிக்கும் மனோபாவத்துடன் போட்டியை ரசிக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இது பிராந்திய ரீதியான ரசிகர் பட்டாளத்தையே உருவாக்குகிறது. உதாரணமாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதினால், தமிழ்நாடு ரசிகர் சென்னை அணியையே தனது அணியாகக் கருதி ரசிக்கிறார். இதே நிலைமை தான் பிற அணிகளுக்கும்.

.பி.எல் கிரிக்கெட் போட்டி ஒரு மாபெரும் வர்த்தக சாம்ராஜ்யத்தை இந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்தி இருக்கிறது. முன்பெல்லாம், இந்திய அணியை நம்பி இந்திய வீரர்கள் மீது விளம்பர முதலீடு செய்து பெரு நிறுவனங்கள் ஏமாற்றம் அடைந்ததுண்டு. இந்திய வீரர்கள் தான் உலக அளவில் அதிக விளம்பர வருமானம் பெறும் கிரிக்கெட் வீரர்கள் என்பது முக்கியமான விஷயம். அதே சமயம் நமது வீரர்கள் அடிக்கடி சொதப்பி, விளம்பர நிறுவனங்களின் வயிற்றில் அடித்ததுண்டு. அத்தகைய நிலை இனிமேல் ஏற்படாது. ஏனெனில் இந்திய வீரர்கள் பல்வேறு அணிகளாகப் பிரிந்து கிளப் அணிகளாக விளையாடுவதால், யாருடைய வெற்றியும் தோல்வியும் விளம்பரதாரர்களைப் பாதிக்காது. .பி.எல்.லின் மகத்தான அனுகூலம் இது.

.பி.எல் போட்டிகளை உருவாக்கிய லலித் மோடி, தனது முறையற்ற செயல்களால் தற்போது இதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், .பி.எல். என்ற வர்த்தக சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பியவர் அவர் தான். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எதிராக .சி.எல். என்ற போட்டிகளை முன்னாள் வீரர் கபில்தேவ் தலைமையில் ஜீ டிவி நடத்த துணிந்தபோது, கிரிக்கெட் வாரியத்தைக் காப்பாற்ற களம் இறக்கப்பட்டவர் லலித் மோடி. அவர் தான் 20 ஓவர் போட்டிகளை, அதிநவீன காட்சிப்படுத்துதலுடன், பிரமாண்டமான விளம்பரப்படுத்தலுடன், அறிமுகம் செய்தார். வீரர்களுக்கு ஏல விலையை நிர்ணயம் செய்யும் அளவுக்கு, .பி.எல் போட்டிகள் முக்கியத்துவம் பெற்றன. சிறந்த வீரர்களை தங்கள் அணியில் இடம் பெறச் செய்ய கிளப் அணிகள் தீவிர முயற்சி மேற்கொண்டன. அதனால், வீரர்களின் மதிப்பு உயர்ந்தது. தேசிய அணிக்காக ஆடுவதை விட .பி.எல் அணியில் ஆடுவதே சிறந்த வருமான வாய்ப்பு என்பதாக இப்போது சூழல் மாறி இருக்கிறது.

ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி (மும்பை இந்தியன்ஸ்), யு.பி குழுமம் விஜய் மல்லையா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்), டெக்கான் க்ரானிகில் வெங்கட்ராம ரெட்டி (ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ்) இந்தியா சிமென்ட் ஸ்ரீநிவாசன் (சென்னை சூப்பர் கிங்க்ஸ்), ஜி.எம்.ஆர் குழுமம் (டெல்லி டேர் டெவில்ஸ்), நடிகை ப்ரீத்தி ஜிந்தா (கிங்க்ஸ் 11 பஞ்சாப்), நடிகர் ஷாருக் கான் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), நடிகை ஷில்பா ஷெட்டி (ராஜஸ்தான் ராயல்ஸ்), சஹாரா- சுப்ரதோ ராய் ( புனே வாரியர்ஸ்), கொச்சி கிரிக்கெட் கிளுப் (கொச்சி டாஸ்கர்ஸ் கேரளா) ஆகிய பெரு முதலாளிகளும், பிரபல திரைத்தாரகைகளும் .பி.எல் அணிகளின் வெளிப்படையான உரிமையாளர்கள். இவர்களுக்குப் பின்னே பல முதலாளிகள் அணிவகுத்து, அந்தந்த கிளப்களை நடத்துகின்றனர்.

பெரு நிறுவனங்களின் கைக்குள் கிரிக்கெட் சென்றுவிட்டதன் தாக்கத்தையே, கவர்ச்சி நடனங்களுடன் கூடிய துவக்க விழாக்கள், விளையாட்டுக்கு உசுப்பேற்றும் சீயர்ஸ் நடன மாதுக்கள், போட்டி முடிந்தபின் நடந்தேறும் கேளிக்கை விருந்துகள் போன்றவற்றில் காண்கிறோம். இதற்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாவிடிலும், தொலைக்காட்சி வழியாக கோடிக்கணக்கான மக்களை சென்றடையும் .பி.எல் போட்டிகள் புதிய கலாசாரத்தை உருவாக்கி வருகின்றன. இந்தக் கலாசாரம், நமது பாரம்பரியமான, மென்மையான உணர்வுகளுக்கு எதிரானது மட்டுமல்ல; வர்த்தக நெறிமுறைகளுக்கும் எதிரானது.

.பி.எல்.லின் அவலட்சணமான பக்கத்தை முன்னாள் அமைச்சர் சசி தரூர் கொச்சி அணியில் தனது துணைவி சுந்தா புஷ்கருக்கு ரூ. 70 கோடி மதிப்பிலான பங்குகள் பெற்றுக் கொடுத்தபோது, நாடு கண்டது. அதன் விளைவாக அவரது பதவி பறிபோனது. இப்போதும் கூட, ராஜீவ் சுக்லா, சரத் பவார் போன்ற அரசியல்வாதிலே பின்னியில் இருந்து .பி.எல்.லை ஆட்டுவிக்கிறார்கள். அவர்கள் தப்புவதற்காகவே லலித் மோடி களப்பலி ஆக்கப்பட்டார் என்பது வரலாறு.

இன்று ஐந்துநாள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள், பல நாடிகளிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித் தொடர்கள் பெறாத முக்கியத்துவத்தை .பி.எல் போட்டிகள் பெற்றிருக்கின்றன. வண்ணமயமான காட்சிப்படுத்தலும், நவீன ஊடகங்களைப் பயன்படுத்தி ரசனையுள்ள பொழுதுபோக்கு அம்சமாக மாற்றியதும் தான் .பி.எல் போட்டிகளின் தற்போதைய வீக்கத்துக்குக் காரணம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்துவரும் காலத்தில் .பி.எல் போட்டிகள் நடத்துவது மாணவர்களின் கவனத்தை திசை திருப்பிவிடும் என்று அஞ்சும் அளவுக்கு இந்த கிரிக்கெட் போட்டிகள் அமைந்திருக்கின்றன.

இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே, முதல்தர கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணித்த வீரர்கள் உண்டு. அவ்வாறெனில், விளையாட்டு உணர்வு எவ்வாறு ஊக்கம் பெறும்? முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காத வீரகளுக்கு இந்தப் போட்டிகளால் வைப்பு கிடைப்பது உண்மையே. எனினும், இந்த கிரிக்கெட் கிளப் அணிகளில் வெளிநாட்டு வீரர்களை சேர்க்க அதிக கவனம் கொடுப்பது ஏன்? உள்நாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதை விட, கிளப் அணியின் வர்த்தக மதிப்புக்குத் தானே அதன் நிர்வாகிகள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்?

வீரர்கள் நான்கு ரன் அடிக்கும்போதும், சிக்சர் அடிக்கும் போதும், அவுட் ஆகும்போதும், கவர்ச்சிக் கன்னிகள் அரங்கில் ஆடுவது எதற்காக? துவக்கவிழாவில் பாப் பாடகியை வரவழைத்து கும்மாளம் இடுவது எதற்காக? கிரிக்கெட்டை விளையாட்டாகக் காணாமல், அதை பொருளீட்டும் கற்பகத் தருவாகக் காணும் மனநிலையே இத்தகைய கேலிக் கூத்துக்களை அரங்கேற்றுகிறது. இதனால் விளையாட்டுத்துறை மேம்பாடு அடைந்து விடாது.

வில்வித்தையில் சாத்தித்த இந்திய வீராங்கனை தனது வில்லை விற்கும் அளவுக்கு அவரது குடும்ப சூழல் கொண்டு சென்றிருக்கிறது. ஆசிய அளவில் ஹாக்கியில் வென்ற நமது வீரர்களை பாராட்ட நமது ஊடகங்களுக்கு நேரமில்லை. சதுரங்கத்தில் சாதனை படைத்த நமது விஸ்வநாதன் ஆனந்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க நமது அரசே எதிர்ப்பு தெரிவித்தது. இவ்வாறு கிரிக்கெட் அல்லாத விளையாட்டுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையில், கிரிக்கெட் நமது நாட்டின் கவர்ச்சிகரமான விளையாட்டாக ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு பணபலம் படைத்தவர்களும் அரசியல்வாதிகளும் குடை பிடிக்கிறார்கள்.

சர்வதேசப் போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்று வாழ்க்கை நடத்தும் அவல நிலைக்கு நமது பிற விளையாட்டுவீரர்கள் தள்ளப்படும் நிலையில், நாம் கரவொலி எழுப்பியபடி .பி.எல். போட்டிகளில் மூழ்கிக் கிடக்கிறோம். குற்றம் யாருடையது? இந்நிலை மாறுவது எப்போது?


---------------------------------------

விஜயபாரதம் (27.04.2012)

.