ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

பேரவைத் தேர்தல் முன்கூட்டியே வருமா?


வறண்டு பாலையாகக் காட்சியளித்த நிலம், மழைத்துளி விழுந்தவுடன் பசுமைக்கு மாறுவதுபோல, தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. எல்லாப் பெருமையும் ஜெயலலிதாவுக்கே!

திருச்சியில் ஆக.14ல் ஜெயலலிதா நடத்திக் காட்டிய அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம், பலரையும் பலவிதமாக யோசிக்கச் செய்துள்ளது என்றால் மிகையில்லை.

தி.மு.க அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, மாவட்டம் தோறும் அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டங்-களை நடத்தியபோது, தமிழக ஊடகங்கள் கேலியாகப் பார்த்தன. ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரத்யேகப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அ.தி.மு.கவினர் அந்தந்தப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாகவே ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளனர். அப்போதெல்லாம், எதிர்க்கட்சி என்பதற்காகவே வீம்புக்கு போராட்டம் நடத்துவதாக ஜெயலலிதாவை பத்திரிகைகள் விமர்சித்ததுண்டு.

இப்போது காலம் மாறிவிட்டது. ‘காலம் என்பது கங்கெனச் சுழன்று கீழ் மேலாகும்; மேல் கீழாகும்’ என்ற தத்துவம் புரியத்துவங்கிவிட்டது. குறிப்பாக, அ.தி.மு.க தலைவி ஜெயலலிதாவே கோவையில் நடந்த (ஜூலை 13) கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று நடத்தியபோது, அ.தி.மு.க வினரின் அமைப்பு வலிமையும், கடந்த 2 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம் நடத்திப் பெற்ற பயிற்சியும் தெரியவந்தன. ஆட்சி மீதான அதிருப்தி இல்லாமல், இவ்வளவு மக்கள் கூடுவது சாத்தியமல்ல என்பதும் நிதர்சனம்.

கோவையில் கூடிய கூட்டம், செம்மொழி மாநாட்டு மிதப்பில் இருந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நெற்றியடியாக இருந்தது. இதற்கு பதிலடி கொடுக்க ஆக.2ல் தி.மு.க.வினர் நடத்திய சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், எதிர்பார்த்தபடி மக்களைத் திரட்ட முடியாமல், சோதனை விளக்க கூட்டமாகிவிட்டது.

இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, திருச்சியிலும் (ஆக.14) மிகப் பிரமாண்டமான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி, தமிழக அரசை மிரட்டியிருக்கிறார் ஜெயலலிதா. புறநகர்ப் பகுதியான பொன்மலையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம், மாபெரும் மாநாடு போல மாறிவிட்டது. நிகழ்ச்சி நடந்த நாள் முழுவதும் திருச்சி ஸ்தம்பித்தது; பிரதான சாலைகளில் போக்குவரத்து சீராக மறுநாள் காலை ஆகிவிட்டது.

இந்த அளவு கூட்டத்தை ஜெயலலிதாவே எதிர்பார்த்-திருக்கவில்லை என்பது, அவரது பேச்சில் தெரிந்தது. “28 ஆண்டு காலமாக நான் அரசியலில் இருக்கிறேன். இதுவரை என் வாழ்நாளில் இதுபோன்ற கூட்டத்தைக் கண்டதில்லை” என்று பேசிய ஜெயலலிதா, ‘தமிழகத்தைப் பாழ்படுத்தும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுங்கள்’ என்று அறைகூவினார்.

இதன்மூலம், தமிழகத்தில் ஸ்தாபன ரீதியாக வலுவான பெரிய கட்சி அ.தி.மு.கவே என்பது நிரூபணமாகி இருக்கிறது. ரத்தத்தின் ரத்தங்கள் புத்துணர்வுடன் தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டனர். திருச்சியிலும் பதிலடி கொடுக்கத் துடித்த உடன்-பிறப்புகளை அமைதிப்படுத்தி இருக்கிறது கழகத் தலைமை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு?

மதில் மேல் பூனைகளாகத் தத்தளிக்கும் பல்வேறு கட்சிகளை, திருச்சி நிகழ்வு சிந்திக்கச் செய்துள்ளது. ஏற்கனவே, புதிய தமிழகம், த.மு.மு.க கட்சியினர். ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டனர். ம.தி.மு.க, இந்திய கம்யூ, மார்க்சிஸ்டு கட்சிகள் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் உள்ளன. மருத்துவர் ராமதாசும், கேப்டன் விஜயகாந்தும் இப்போது ஜெயலலிதா பக்கம் நெருங்கி வருவதாக, கழுகுகளும் ஆந்தைகளும் பிரசன்னம் பகரத் துவங்கி இருக்கின்றன.
பா.ம.க தலைவர் ராமதாஸ், வெளிப்-படையாகவே தி.மு.க அரசைச் சாடத் துவங்கிவிட்டார். விரைவில் அன்புச் சகோதரியை சந்தித்து ‘ராக்கி’ கட்டுவதற்கான நாள் கூடி வருகிறது.

இரு கழகங்களையும் சமநிலையில் பார்ப்பதாகக் கூறிவந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தும் தடுமாற்றத்தில் இருப்பதாகத் தகவல். அவரது கட்சியில் பொறுப்புகளில் இருப்பவர்-கள் பலரும் கூடுவிட்டு கூடு பாய்ந்தவர்கள்தான். அவர்களது சக்தியை உறிஞ்சித்தான் விஜயகாந்த் வலம் வருகிறார். அ.தி.மு.க பலம் பெறுவதால், தே.மு.தி.க கூடாரம் காலியாகக் கூடும் என்று, அவரது நெருங்கிய சகாக்கள் எச்சரித்திருப்பதாக குருவியார் கூறுகிறார்.

தி.மு.கவை விட்டு விலகி வந்தால் காங்கிரசுடன் கை கோர்க்க அவர் தயார். (வருமானவரி இலாகா எதற்கு இருக்கிறதாம்?) அப்படி கூட்டணியை காங்கிரஸ் முறிக்குமானால், அ.தி.மு.கவுக்காக முறிக்குமா? தே.மு.தி.கவுக்காக முறிக்குமா? இதற்கான எளிய பதில் விஜயகாந்திற்கு தெரியாமல் இருக்காது.

காங்கிரசிலும் அ.தி.மு.க ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன. “எத்தனை நாட்களுக்கு பல்லக்கு தூக்குவது?” என்ற ஆயாசம் அவர்களுக்கு. அடுத்தடுத்து கூட்டணிக் கட்சிகளை அரியணை ஏற்றுவதற்கா அரசியல் நடத்துவது என்று காங்கிரஸ் கட்சியின் இளைய தலைமுறை கேள்வி எழுப்பத் துவங்கி இருப்பது நல்ல சகுனம் தான். ஆனால், தமிழகத்தைப் பொருத்த மட்டிலும் ‘சாறுண்ணி’யாகவே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு.

இருப்பினும், வரும் தேர்தலில் காங்கிரசை சமாளிப்-பது கருணாநிதிக்கு சிரமமாகவே இருக்கும். இப்போதே 78 சீட் வேண்டும் என்று கொடி பிடிக்கும் காங்கிரஸ்-காரர்களை, பாம்பென்று அடிக்கவும் முடியாமல், பழுதென்று மிதிக்கவும் முடியாமல் தவிக்கிறார் செம்மொழி கொண்டான். போதாக்குறைக்கு “ஆட்சியை மாற்ற ‘கை’ கோர்க்கத் தயார்!” என்று முழங்கி வயிற்றில் புளியைக் கரைக்கிறார் புரட்சித்தலைவி. 87 வயது முதியவர் என்ன தான் செய்வார்?

ஜெயலலிதாவின் ராஜதந்திரப் பேச்சால் கருணாநிதி நெளிவது போலவே, கூட்டணித் தோழர்களான வைகோ, நல்லக்கண்ணு, ராமகிருஷ்ணன் ஆகியோரும் நெளி-கின்றனர். அவரவர் பாடு அவரவர்களுக்கு. இதுபற்றி ஜெயலலிதா கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தற்போதைய தமிழக அரசியலில் கூட்டணிக் குழப்பமில்லாத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான் போலிருக்கிறது.

கோவை, திருச்சியைத் தொடர்ந்து மதுரை, நெல்லை, சென்னையிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஜெயலலிதா நடத்தக் கூடும் என்ற உளவுத் தகவலால், தி.மு.க வட்டாரம் திகைப்பில் உள்ளது. அடுத்த சட்டப் பேரவைத் தேர்தல் 2011 மே மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும். அதுவரை காலம் தாழ்த்தி, அ.தி.மு.க பலத்தை அதிகரிக்க வாய்ப்பு உருவாக்கி விடக் கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, இதுவரை காணாத சலுகை அறிவிப்புகளை உடனடியாக வெளியிட்டு, முன்-கூட்டியே தேர்தலை நடத்த தி.மு.க தலைமை திட்டமிடுவதாகவும் தகவல். வாக்காளர் சேர்க்கை, திருத்தப் பணிகள் அவசரமாக நடத்தப்பட்டிருப்ப-தையும், “முன்கூட்டியே தமிழகத்தில் பேரவைத் தேர்தல் வராது” என்று புதிய தேர்தல் அதிகாரி கூறியிருப்பதையும் பார்க்கும்போது, தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் டிசம்பர் அல்லது ஜனவரியில் நடத்தப்பட வாய்ப்புள்ள-தாகவே தோன்றுகிறது.

திருப்பூரில் அரசுக்கு பாராட்டுவிழா நடத்தியதற்காக மார்க்சிஸ்டு கம்யூ. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எல்.எல்.ஏ கோவிந்தசாமி, தி.மு.கவில் ஆதரவாளர்க-ளுடன் இணைவது, இந்த சந்தேகத்தை வலுப்-படுத்துகிறது. முன்கூட்டியே தேர்தல் வரலாம் என்ற கணக்கீட்டுடன் அ.தி.மு.கவும் காய்களை நகர்த்தத் துவங்கிவிட்டது.

இப்போதைக்கு, காங்கிரஸ் கூட்டணி கைநழுவிப் போகாது என்று கருணாநிதி நம்பிக்கையோடு இருக்கிறார்- சோனியா அம்மையார் மீதான நம்பிக்கையில். கருணாநிதி காலை வார மாட்டார் என்றுதான் அன்று வாஜ்பாயும் நம்பிக்கையுடன் இருந்தார். சரித்திரம் மாறலாம்; அப்போது சரித்திரப் புத்தக பாடத்தில் இடம் பெறுவது மட்டுமல்லாது, சரித்திரம் கற்பிக்கும் பாடத்தையும் கற்றாக வேண்டியிருக்கலாம்.

மத்தியில் தற்போது நிலவும் நக்சலைட் பிரச்சினை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், காஷ்மீர் பிரிவினை கோஷம் போன்றவற்றிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, தமிழக அரசியலில் ஆர்வம் காட்ட நேரமில்லை. எனவே தான் இங்கு ஒவ்வொரு காங். கோஷ்டியும் ஒவ்வொரு விதமாக முழங்கி, தங்கள் இருப்பை நிரூபித்துக் கொண்டுள்ளன.

‘கூட்டணியை பாதிக்கும் விதமாக யாரும் பேசக் கூடாது’ என்று தங்கபாலு எச்சரித்திருப்பது ஆக.17ஆம் தேதிய நிலவரம். அரசியலில் எதுவும் நிகழலாம் என்பது கருணாநிதியின் கலவரம்.

நாளை நடப்பதை யாரறிவார்? இப்படி நடக்கும் என்று அனுமானிப்பவன் அரசியல் விமர்சகன்; நடத்திக் காட்டுபவர்கள் அரசியல்வாதிகள் தானே?
.
-------------------------------
நன்றி: விஜயபாரதம் (03.09.2010)


.

சனி, செப்டம்பர் 25, 2010

காற்றின் திசையை மாற்றத் துடிக்கும் காற்றாடிகள்


வடகிழக்குப் பருவக் காற்றும் தென்மேற்குப் பருவக் காற்றும் மாறி மாறி வீசுவதுதான் இயற்கை. பருவக் காற்றின் திசைக்கேற்ப காற்றாலைகளைத் திருப்பி வைத்துக் கொள்வது வழக்கம். அதே காற்றாலைகள் காற்றின் திசையைத் தீர்மானிக்க முடியுமா?

இயற்கையில் இது சாத்தியமில்லாமல் இருக்கலாம். அரசியலில் எதுவும் சாத்தியமே. ஒரே தேநீர்க் கோப்பை மூலம் மத்திய அரசைக் கவிழ்க்க முடியும் என்பதை 13 மாத வாஜ்பாய் ஆட்சி வீழ்ந்தபோது நாடு கண்டது. சில சமயங்களில் வால்கூட நாயை ஆட்டுவதுண்டு.

இதற்கு சமீபகால தமிழக உதாரணங்கள், பா.ம.கவின் காடுவெட்டி குருவும், காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் தான். அரசியல் சதுரங்கத்தில் திசையை அவதானிக்க முடியாத குதிரைகளின் நேர்த்தியான ஆட்டம் பிரமிக்க வைப்பதாகவே என்றும் இருந்து வருகிறது.

இந்த நீண்ட பீடிகை எதற்கு என்ற கேள்வி எழலாம். தமிழக தேர்தல் களத்தை மாற்றியமைக்க வாய்ப்புள்ளவர்கள் மேடைகளில் முழங்கத் துவங்கிவிட்டார்கள் என்னும் போது, உயர்வு நவிற்சி இன்றி அரசியல் வானை அலச முடியாது.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நெஞ்சில் பட்டதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் நேர்மை உண்டு. அதன் காரணமாகவே தி.மு.க., தலைவர் கருணாநிதியாலும், அ.தி.மு.க தலைவி ஜெயலலிதாவாலும் அவ்வப்போது வசைபாடப் படுபவர். இவரும் சளைத்தவரல்ல; நேரமறிந்து தாக்குவதில் வல்லவர் தான். சமீபத்தில் நிகழ்ந்த இளங்கோவனின் முழக்கம் கூட, சரியான தருணத்தில் வீசப்பட்ட கல் தான்.

தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதில் இளங்கோவன் என்றும் தயங்கியதில்லை. கூட்டணிக் கட்சி என்பதற்காக தி.மு.க மீது கருணை காட்ட வேண்டிய அவசியமும் (ஆட்சியில் தான் பங்கு கிடையாதே?) அவருக்கு இல்லை. இயல்பாகவே பேச்சாற்றல் (கலைஞர் பார்வையில் வாய்த்துடுக்கு) கொண்ட இளங்கோவனும் தங்கபாலு போல வெறும் வாயை மென்று கொண்டிருக்க முடியுமா?

தி.மு.க அரசு சிறுபான்மை அரசாகக் கோலோச்ச ஊன்றுகோலாக உள்ளது காங்கிரஸ். அந்தக் கட்சியின் முதுகெலும்பு உள்ள தலைவராக காங். தொண்டர்களால் கருதப்படுபவர், அவ்வப்போது காமராஜர் ஆட்சி கோஷம் வாயிலாக காமராஜரை நினைவுபடுத்துபவர் இளங்கோவன் மட்டுமே. தி.மு.க அரசின் தோல்விகளை காங்கிரஸ் மேடையில் பட்டியலிட்டுவிட்டு, கூட்டணிக் கட்சியான தி.மு.கவை வழிநடத்தவே இதைக் கூறுவதாகக் கூறும் சமத்காரம், ஈ.வி - கே சம்பத்தின் இளவலுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது.

சம்பத்தையே விழுங்கி ஏப்பம் விட்ட செம்மொழி கொண்டானுக்கு இது புரியாதா? எனவே தான், ‘இளங்கோவன் கூட்டணியை வலிப்படுத்துகிறார்’ என்று புலம்பி இருக்கிறார். மத்தியில் நிலவும் இடியாப்பச் சிக்கல்களுக்கு மத்தியில், தமிழகத்தில் இளங்கோவனின் தனி ஆவர்த்தனத்தால் வலிமிகுந்து நொந்திருக்கும் கருணாநிதி குறித்து சிந்திக்க சோனியாவுக்கு நேரமும் இல்லை.

இனிமேல் சோனியா அம்மையாரிடம் காவடி தூக்கி பிரயோசனம் இருக்குமா என்ற சந்தேகமும் கருணாநிதிக்கு வந்துவிட்டது போல. தூத்துக்குடியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தியை விமர்சித்த கழகப் பேச்சாளர் வாகை முத்தழகனுக்கு ‘கடுக்காய்’ கொடுத்திருப்பதிலிருந்தே, சாணக்கியரின் நடுக்கம் புரிகிறது.

ஆனால் இளங்கோவன் இதை விடுவதாக இல்லை. சென்னையில் ஆக-8ல் நடத்தப்பட்ட காமராஜர் பிறந்த தின விழாவில் (அரசியல்வாதிகளுக்கு ஆண்டு முழுவதும் பிறந்தநாள் கொண்டாடலாம்), முன்னொரு காலத்தில் காமராஜரை கடுமையாக வசைபாடிய தி.மு.க-வை ஒரு பிடி பிடித்தார். “காமராஜரை படிக்காதவர், ஆங்கில அறிவு இல்லாதவர் என்று விமர்சித்தவர்களின் வாரிசுகள், இன்றைக்கு தில்லியில் படும் திண்டாட்டத்தை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சாடினார், சுலோசனா சம்பத்தின் மகன்.

இது அழகிரியைப் பற்றிச் சொல்லப்பட்டது தான். உரத்துறை அமைச்சராக இருந்து கொண்டு பல மாதங்களாக நாடாளுமன்றம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காத அழகிரியைத் தான் இளங்கோவன் தாக்கினார் என்பது உடன் பிறப்புகளுக்கும் தெரியும். ஆனால் இளங்கோவன் வீட்டு போர்டிகோவைத் தாக்க முடியாது. இவரென்ன பழ.கருப்பையாவா? பழ.நெடுமாறனா? இப்போதைக்கு கையைப் பிசைவதுதான் உத்தமம். இதை ஜெயலலிதா கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கிறார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட தன்னை தி.மு.க-வினர் திட்டமிட்டுத் தோற்கடித்து விட்டனர் என்ற கோபம் இளங்கோவனுக்கு உண்டு. அந்தப் புகைச்சல் இப்போது மீண்டும் புகையத் துவங்கிவிட்டது. “தமிழகத்திலுள்ள காங்கிரஸ்காரர்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கலாம் என்று இங்கு ஆள்பவர்கள் நினைக்கின்றனர். அது நடக்காது” என்று கூறிய இளங்கோவனின் இலக்கு தெளிவாகவே தெரிகிறது.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முறிந்தால் உடனடி நஷ்டம் தி.மு.கவுக்கே என்பதாலும், காங்கிரசுடன் கை கோர்க்க அ.தி.மு.க தயாராக உள்ளதாலும், கருணாநிதி தடுமாறுகிறார்.

இதேவேளையில், காடுவெட்டி குரு மூலம் அவதூறுப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு கூட்டணியை முறிக்கும் பரிசோதனையில் இறங்கி இறக்கிறார் மருத்துவர் ராமதாஸ். காடுவெட்டிகுருவை தமிழக அரசு கைது செய்தால், போயஸ் கார்டனுக்கு செல்ல அன்புமணியும் தயார்!

எனவே தான் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று வேதாந்தம் பேசியிருக்கிறார், காற்றின் திசையை மாற்றத்துடிக்கும் ராமதாஸ். கடந்த ஜூலை மாத கோவை ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்தவர் போலவே அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா பேசினார். இப்போது, ‘ஃ’ வடிவில் தாவும் குதிரைகளும் அங்குமிங்கும் தாவி அரசியல் களத்தைச் சூடாக்கிக் கொண்டுள்ளன.

இறுதியில் என்ன நிகழும்? இதை யாராலும் தீர்மானிக்க இயலாது. இந்த ஆட்டத்தில் குதிரைகள் பலி கொடுக்கவும் படலாம்; குதிரைகளாலேயே எதிரணி ராஜாவுக்கு ‘செக்’ வைக்கவும் படலாம். பெட்டிகள் பேசும் காலத்தில் காற்றின் திசைமாற்றத்தைக் காற்றாடிகளால் மாற்ற இயலாமலும் போகலாம்.
.
எது எப்படியாயினும், இளங்கோவனின் அதிரடி முழக்கம் காலத்தின் கட்டாயமே. கருணாநிதி சிறிது காலத்துக்கு யாருக்கும் பதில் கொடுக்காமல் இருப்பது உத்தமம். இதுவே காற்றாடி ஜோதிடம் கூறும் பலன்.

-------------------------------
நன்றி: விஜயபாரதம் (27.08.2010)
.

திங்கள், செப்டம்பர் 20, 2010

தாக்குதல்களையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் ஆக்குவோம்!


இந்து முன்னணியின் நிறுவனர் ராம.கோபாலன் நேர்காணல்:

கோவையில் இந்த ஆண்டு பல இடங்களில் விநாயகர் சிலை வைக்க முஸ்லிம் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனவே?

முஸ்லிம் இயக்கங்கள் இந்த முறை திட்டமிட்ட ரீதியில் பல இடங்களில் பிரச்னை செய்தது உண்மை தான். தற்போதுள்ள தி.மு.க அரசில் தங்கள் கரம் ஓங்கியுள்ளதைக் காட்ட ஒவ்வொரு முஸ்லிம் இயக்கமும் துடிப்பதன் வெளிப்பாடு தான் இது. தாங்கள் நினைத்ததைச் செய்ய முடியும் என்று அவர்கள் நிரூபிக்க முயன்றிருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான பதிலடியை இந்து மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

காவல்துறையும் கூட பல இடங்களில், ஏற்கனவே விநாயகர் சிலை வைத்த இடங்களிலும் அனுமதி மறுத்துள்ளதே?

அரசு சாதகமாக இல்லாதபோது காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியாது. இந்நிலையிலும் கோவையில் பல இடங்களில் காவல்துறை நேர்மையாகவே செயல்பட்டுள்ளது என்று கருதுகிறேன். என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசிய பல அதிகாரிகள், அரசின் பாரபட்சமான அணுகுமுறை குறித்து வருத்தம் தி.

செல்வபுரம்- கல்லாமேடு பகுதியில் முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி அங்கு விநாயகர் சிலை வைத்த அப்பகுதி ஏழை மக்கள், போலீசாரின் கைது நடவடிக்கையையும் துணிந்து சந்தித்தார்கள். குனியமுத்தூர், மதுக்கரை பகுதிகளிலும், நிலைமை பாதகமாக இருந்தபோதும் ரத்தம் சிந்தி நமது சகோதரர்கள் உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன். செல்வபுரத்தில் காவல்துறையை வீரமாக எதிர்கொண்ட தாய்மார்கள் இருக்கும் திசைக்கு எனது வணக்கங்கள்...

ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றனவே. இதைத் தவிர்க்க வழி என்ன?

இப்படி நடக்கும் என்பது நாம் எதிர்பார்த்தது தான். இந்து சமுதாயம் முழுவதும் விழிப்புணர்வு அடையாதவரை, இத்தகைய பாதிப்புக்களை சந்தித்துத் தான் ஆகவேண்டும். இதன் மூலமாகவே நமது மக்களை தயார் செய்ய வேண்டும். மக்களே எதிர்விளைவு காட்டத் தயாராகும்போது முஸ்லிம்கள் நிதர்சனத்தை உணர்வர். அது மட்டுமல்ல, காவல்துறையும் அடக்கி வாசிக்கும்.

இந்த நாடு இந்து மக்களின் சொந்த நாடு. இங்கு வழிபாட்டு உரிமைக்கு யாரிடமும் நாம் யாசகம் கேட்க வேண்டிய அவசியமில்லை. நமது வழியில் தொடர்ந்து, சோதனைகளைத் தாண்டி பயணிப்போம்.

தற்போது 1998 குண்டுவெடிப்புக்கு முந்தய சூழலுக்கு கோவை சென்று கொண்டிருப்பதாக உணர்கிறேன். எனவே நாம், அனைத்து ஜாதி சங்கங்களையும் இந்து என்ற அடிப்படையில் ஒருங்கிணைக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தமது பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் இது. தங்கள் பகுதியைக் காக்க அவரவர் பகுதிகளில் விழிப்புணர்வுக் குழுக்கள் அமைப்பது மட்டுமே கோவையை பயங்கரவாதிகளிடமிருந்து காக்கும். இதற்கான பணிகள் ஏற்கனவே பல இடங்களில் துவங்கிவிட்டன.

சரவணம்பட்டி காவல்நிலைய ஆய்வாளர் சிவகுமார் அத்துமீறி செயல்பட்டுள்ளது குறித்து...

இதுகுறித்து கோவையில் நடந்த பொதுக்கூட்டத்திலேயே பேசினேன். அவருக்கு வீரசக்ரா போன்ற ஏதேனும் விருதுகளை தமிழக அரசு தரலாம் என்று அப்போது பரிந்துரைத்தேன். சமூக விரோதிகளைக் கட்டுபடுத்த கையாலாகாத இவர், அப்பாவி இந்து முன்னணித் தொண்டர்களை அதிகாரபலத்துடன் கடுமையாகத் தாக்கி இருக்கிறார். அதற்கான பலனை அவருக்கு இறைவன் நிச்சயமாகத் தருவார். அந்த வழக்கை இந்து முன்னணி சட்டரீதியாக சந்திக்கும்.

இதே போன்ற சூழல் கன்னியாகுமரி மாவட்டத்திலும் 30 ஆண்டுகளுக்கு முன் நிலவியது. அதனால் தான் அங்கு இந்து விழிப்புணர்வு ஏற்பட்டது. அமரர் தாணுலிங்க நாடார் இந்து முன்னணியை ஆரம்பிக்க அத்தகைய சூழலே காரணமானது. ஆகவே கோவையில் நிகழ்ந்துள்ள அத்துமீறல்களை, நான் நமது பலவீனமாகக் கருதவில்லை.

மதுக்கரையில் விநாயகர் சிலை வைக்க உதவிய காரணத்திற்காக ஹிந்து வியாபாரி ஆறுமுகம் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது குறித்து...

அவரை இந்து முன்னணி நிர்வாகிகள் பாதுகாப்பார்கள். தற்போது கொலைவெறித் தாக்குதலில் தப்பி சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு அரசு இலவச உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். சூறையாடப்பட்ட அவரது கடைக்கு நஷ்டஈடாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆறுமுகத்தையும் அவரது குடும்பத்தையும் இன்றைய துயரகரமான நிலையில் காப்பது அனைத்து இந்துக்களின் கடமை.

குனியமுத்தூரில் காவல் உதவி ஆய்வாளர் காசி பாண்டியன் முஸ்லிம் இயக்கங்களால் தாக்கப்பட்டதை காவல்துறையினர் மறைக்கின்றனரே?

இதுவும் புதிதல்ல. 1997-லேயே கோவை இத்தகைய சம்பவங்களைப் பார்த்துவிட்டது. போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரே, கோவை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டதை அவர்கள் உணர்ந்தே இருந்தார்கள். ஆனால் அப்போதும் பூசி மெழுகினார்கள். அரசு எப்படியோ, அதன்படி அவர்கள் செயல்படுகிறார்கள். மேலிடத்திலும் ஆதரவு இல்லாத நிலையில், அவர்கள் எப்படி,, தங்களது சக அதிகாரி முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை ஒப்புக் கொள்வார்கள்?

கோவையில் குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன் இங்கு பணியில் இருந்த தென் தமிழகத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு சென்னையில் குடியேறினார். அப்போது, தனது சொந்த ஊரிலிருந்து ஆட்களை அழைத்துவந்து தனது பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார். காவல் உயரதிகாரியாக இருந்த ஒருவருக்கே இந்நிலை என்றால், பணியில் இருக்கும் சாதாரணக் காவலரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த வாக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 'ஓட்டுவங்கி' அரசியல் நடத்தும் கோழைத்தனமான, சுயநல தி.மு.க. அரசு தான் காவல்துறையின் செயலின்மைக்கு காரணம். அதையும் மீறி கோவையில் காவல்துறை செயல்படுகிறது என்பதே எனது நம்பிக்கை.

ஹிந்து இயக்கங்கள் பல பெயர்களில் பிரிந்து செயல்படுவது ஒற்றுமையை பாதிக்கிறதே?

இதை தவிர்க்க இயலாது. கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள இயக்கங்களிலேயே பிளவும் போட்டியும் காணப்படுகிறது. எந்த அடிப்படைக் கட்டுமானமும் இல்லாத ஹிந்துக்கள் - நெல்லிக்காய் மூட்டைகளாக கருதப்பட்டவர்கள்- ஒன்றுபட்டதே இறைவன் திருவருள் தான். எனினும் இயக்கக் கட்டுப்பாடுகளை மீறும்போது அதை அனுமதிப்பது இயக்கத்தைக் குலைத்துவிடும். எனவே தான் சுயநலவாதிகளால் பிரச்னை ஏற்படும்போது அவர்கள் வெளியேற்றப் படுகிறார்கள். ஒத்த கருத்து இல்லாதவர்கள் விலகுவதும் நல்லதே.

அதே சமயம், பல இயக்கங்களாக இருந்தாலும், அனைவரும் ஹிந்து உணர்வுடன், விநாயகர் மீதான பக்தியுடன் செயல்படுவது மகிழ்ச்சிக்குரியது. இந்து முன்னணி மட்டும் விநாயகர் சிலைகள் வைத்தால் இவ்வளவு சிலைகளை வைத்திருக்க முடியாது. இயக்கங்கள் பல இருப்பதால், விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. இது ஆக்கப்பூர்வமானது தானே?

எனினும், அனைத்து ஹிந்து இயக்கங்களையும் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம் அல்லவா?

உண்மைதான். அதற்கான காலநேரம் வரும்போது அதுவும் சாத்தியம் ஆகும். அதே சமயம், அதிருப்தியாளர்களை ஊக்குவிப்பதாக நமது நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது. தற்போதுள்ள நிலையில் அவரவர் தங்கள் வழியில் பயணிப்பதே பொருத்தமாக இருக்கும்.

மக்கள் ஆதரவு விநாயகருக்கு இருப்பதால் தான், அனைவரும் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் வருகிறார்கள். இதைப் பயன்படுத்தி சிலர் தங்களை வளர்த்துக் கொளவதையும் காண்கிறோம். எனவே இந்த விஷயத்தை மிகவும் நிதானமாகவே அணுக வேண்டும். எதிர்காலத்தில் அனைத்து ஹிந்து இயக்கங்களும் ஓரணியில் திரளும் காலம் கண்டிப்பாக வரும்.

சென்ற ஆண்டை விட அடக்குமுறை அதிகமாக இருந்தும், கோவை மாநகரில் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதுமே விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது குறித்து...

எல்லாம் அந்த விநாயகப் பெருமானின் அருளே. இந்த ஆண்டு கோவையில் நடந்த விசர்ஜன ஊர்வலத்தில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதாக உளவுத்துறையினர் கூறுகின்றனர். சென்ற ஆண்டை விட இது இருமடங்கு அதிகம். குறிப்பாக பெண்கள், இளைஞர்களின் பங்கேற்பு மிகுந்த உற்சாகம் அளிப்பதாக உள்ளது. இதுவே நமக்கு மிகுந்த செயலூக்கத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. நமக்கு வரும் சவால்களையும் சாதகமாக்க முடியும் என்பதற்கான நிரூபணம் இது.

தடைகளைத் தாண்டி ஓடும் நதி போல, நமது பணி நாட்டுநலனை மட்டுமே கருத்தில் கொண்டு தொடர வேண்டும். தற்போதைய எதிர்த்தரப்பினரின் தாக்குதல்களையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் ஆக்குவோம். இன்று எதிரிகளாக இருப்பவர்களும், நம்மை கிள்ளுக்கீரைகளாக நினைப்போரும் மனம் திருந்தும் காலம் வரும். கோவை ஹிந்து மக்கள் நிரூபித்துள்ள உண்மை இதுவே.
--------------------------------------------------------------------
காண்க: தமிழ்
நன்றி: விஜயபாரதம் (08.10.2010)
உடன் படிக்க வேண்டியது: எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

.

எல்லாப் புகழும் விநாயகனுக்கே!

கோவை- செல்வபுரம், கல்லாமேடு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட விநாயகர் சிலையை
காவல்துறையினர் அகற்றுவதைத் தடுக்க, சுற்றிலும் அணிவகுத்திருக்கும் பக்தர்கள்.
மீண்டும் கலவரபூமி ஆகிறது கோவை!


கோவையில்
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முஸ்லிம் அமைப்புகளும் காவல்துறையும் கடும் பிரச்னைகளை பல இடங்களில் ஏற்படுத்தின. பல இடங்களில் விநாயகர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் நடத்திய அமளியால் கலவர அச்சம் ஏற்பட்டது. காவல்துறை முஸ்லிம்களின் எதிர்ப்புக்கு அஞ்சி, இந்துக்களையே மிரட்டிப் பணியவைக்க முயன்றது. இந்த சம்பவங்கள் அனைத்தும் 1998 குண்டுவெடிப்புக்கு முந்தைய கோவையை நினைவு படுத்துகின்றன. கோவையில் இந்த ஆண்டு நடந்த, தவிர்த்திருக்கப்பட வேண்டிய சில சம்பவங்கள் இதோ...

1. செல்வபுரம்:

செல்வபுரம், கல்லாமேடு , பண்ணாரி மாரியம்மன் கோயில் அருகே, கடந்த பத்தாண்டுகளாக விநாயகர் சிலை வைத்து விழா கொண்டாடப்பட்டுவந்தது. ஆனால் இம்முறை அங்கு சிலை வைக்க காவல்துறை அனுமதி மறுத்தது. இதற்கு காரணம், அங்கிருந்த இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பே. 'முஸ்லிம்கள் அதிகமாக குடியிருக்கும் பகுதியில் பிள்ளையார் சிலை வைக்கக் கூடாது; மீறினால் அதை நாங்களே அப்புறப்படுத்துவோம்' என்று அவர்கள் காவல்துறையினரை மிரட்டியதாக தகவல்.

நியாயமாகப் பார்த்தால், தங்களை மிரட்டிய முஸ்லிம் அமைப்புகள் மீது தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், முதுகெலும்பில்லாத காவல்துறை, அந்த இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டைக்கு அனுமதி மறுத்தது. தடையை மீறி பக்தர்கள் அங்கு சிலை வைத்தனர். அதனை அகற்ற காவல்படை களமிறங்கியது. ஆனால் இந்து சமுதாயம் சோரம் போய்விடவில்லை என்பது அங்கு நிலைநாட்டப்பட்டது.

விநாயகர் சிலையை அகற்றுவதைத் தடுக்க, 50க்கு மேற்பட்ட பெண்கள் விநாயகரைச் சூழ்ந்து கோட்டையாகக் காத்து நின்றனர். சிலர் விநாயகர் சிலையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு காவல்துறையினர் சிலையைத் தொடுவதைத் தடுத்தனர். வேறு வழியின்றி பெண்காவலர்கள் உதவியுடன் அவர்களை கைது செய்து, அவர்களுடன் சிலையையும் காவல் வாகனத்தில் ஏற்றினர். இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 91 பேரும் கைது செய்யப்பட்டனர்.

காவல்துறையை (10.09.2010) எதிர்த்து 141 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பி.ஆர்.எஸ். மைதானத்தில் காவலில் வைக்கப்பட்டனர். அங்கு போலீஸ் காவலிலும் அவர்கள் உண்ணாவிரதம் இருந்ததால், மூன்று பெண்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். வேறு வழியின்றி பக்தர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இறுதியில், பண்ணாரி மாரியம்மன் கோயில் பகுதியிலே சில அடிதூரம் தள்ளி (கீழே விழுந்தாலும் போலீஸாரின் மீசையில் மண் ஒட்டிவிடக் கூடாது) விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி கொடுத்தது. கைது செய்யப்பட அனைவரும் அன்றிரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

இங்கு போராடிக் கொண்டிருந்த இந்துமுன்னணியினரை மிரட்டிய கோவை காவல் உதவி ஆணையர் பாலாஜி சரவணன், '' நீங்கள் கட்டியுள்ள காவிக் கொடிகளை நீங்களே அகற்றிவிடுங்கள்; இல்லாவிட்டால் முஸ்லிம்கள் அவிழ்த்து விடுவார்கள்'' என்று கூறியது அவலத்தின் உச்சம். ஆயினும், வழிபாட்டு உரிமைக்காக செல்வபுரம் பகுதி மக்கள் - குறிப்பாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்- நடத்திய போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றது. விநாயகர் சதுர்த்தி முடியும் தறுவாயில் தான் அங்கு விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

2. உக்கடம்- அல்அமீன் காலனி:

ஒருகாலத்தில் கரும்புக்காடாக இருந்த வயல்வெளி முஸ்லிம்களின் திட்டமிட்ட குடியேற்றத்தால் பெரும்பான்மை முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதி ஆகிவிட்டது. அல்அமீன் காலனி என்று அழைக்கப்படும் இங்கு மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே ஹிந்துக்கள் வசிக்கின்றனர். கோவை குண்டுவெடிப்பை அடுத்த கலவரங்கள் காரணமாக பல ஹிந்துக்கள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டனர்.

இங்கு விநாயகர் சிலை வைக்க இந்து மக்கள் கட்சியினர் திட்டமிட்டனர்; அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதை மீறி சிலர் அங்கு விநாயகர் சிலை வைக்க (11.09.2010) முயன்றபோது, சில முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளையே மிரட்டியுள்ளனர். பெரும் கலவரச் சூழல் ஏற்பட்டதால் அங்கு கோவை தெற்கு வட்டாட்சியரும் காவல் இணை ஆணையரும் வந்து பேச்சு நடத்தினர்.

அப்போது, ''அல்அமீன் காலனியில் உள்ள 15 இந்து குடும்பங்களையும் காலி செய்துவிடுவோம். அவர்கள் இங்கு இருப்பதால் தானே விநாயகர் சிலை வைக்க முயல்கிறார்கள்? ஒருவார காலத்திற்குள் அவர்களை துரத்தப் போகிறோம்'' என்று முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிப்படையாகவே மிரட்டியுள்ளனர். இதனை எந்த அதிகாரியும் கண்டிக்கவில்லை. இறுதியில், இங்கு இந்துக்கள் தரப்பில் 37 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு விநாயகர் சிலை வைக்க முடியவில்லை.

3. குனியமுத்தூர்:

குனியமுத்தூர், திருமூர்த்தி நகரில் முத்துமாரியம்மன் கோயிலில் விநாயகர் சிலை இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டது. அதன் அருகில் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமாஅத் இருப்பதால் அங்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காவல்துறை, முஸ்லிம்களுக்கு அஞ்சி பிள்ளையார் சிலையை கோயில் உள்ளே வைக்குமாறு வற்புறுத்தியது.

குனியமுத்தூரின் குறிஞ்சி நகரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அந்த இடம் பள்ளிவாசல் செல்லும் வழியில் இருப்பதாகவும், அதை அகற்றுமாறும் முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே காவல்துறையினர் அங்குள்ள மக்களை மிரட்டி விநாயகர் சிலையைத் தூக்கிச் சென்று அருகிலுள்ள கோயிலில் வைத்துவிட்டனர். ஆனால், இந்துமுன்னணியினர் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட, மீண்டும் அதே இடத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனால் பதற்றம் ஏறப்பட்டது. அங்கு குவிந்த முஸ்லிம் அமைப்புகளின் தொண்டர்கள் நூற்றுக் கணக்கானோர், கலவரச் சூழலை ஏற்படுத்தினர். இந்த சிலை வைக்க காரணமாக இருந்த இந்து முன்னணி தொண்டர்கள் வேலுமணி, ரவி ஆகியோரை காவல் உதவி ஆய்வாளர் காசிபாண்டியன் கைது செய்து அழைத்துச் சென்றார் (12.09.2010).

அப்போது ஒரு கும்பல் காவல்துறை அதிகாரி காசிபாண்டியனையும் அவருடன் வந்த போலீசாரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவர்கள் கண்ணெதிரிலேயே, இந்து முன்னணித் தொண்டர்கள் வேலுமணி, ரவி ஆகியோரை கடுமையாகத் தாக்கியது. (பலத்த காயம் அடைந்த அவர்கள் சிகிச்சை பெற்றனர்). மாநகர் காவல்ஆணையர் சைலேந்திரபாபுவே சம்பவ இடத்திற்கு வந்து தடியடி நடத்தி வன்முறைக் கும்பலைக் கலைத்தார். ஆயினும், இவ்வழக்கில் முஸ்லிம் தரப்பே தவறு செய்தபோதும், இருதரப்பு மோதலாக சித்தரித்து, முஸ்லிம்கள் 7 பேரையும் இந்துக்கள் 4 பேரையும் கைது செய்தனர். காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டது முற்றிலும் மறைக்கப்பட்டது.

இதை அடுத்து குனியமுத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட 100 விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்யாமல் இந்து முன்னணியினர் அதே இடங்களில் வைத்து சத்தியாக்கிரகம் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட நால்வரையும் ஜாமீனில் தற்போது (14.09.2010) காவல்துறை விடுவித்துள்ளது. அதன்பின் விசர்ஜன ஊர்வலம் நடந்து, குனியமுத்தூர் பிள்ளையார்கள் கரைக்கப்பட்டன. தாக்கப்பட்டவர்களையே காவல்துறை கைது செய்கிறது. தாக்கியவர்களைக் கண்டு காவல்துறை அஞ்சி நடுங்குகிறது.

4. மதுக்கரை:

மதுக்கரை, ஒன்றிய அலுவலகம் பின்புறமுள்ள பட்டத்தரசியம்மன் கோயில் வீதியில் அங்குள்ள பக்தர்களால் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்கு அங்குள்ள முஸ்லிம் காலனி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை பக்தர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் கோபம் அடைந்த தவ்ஹீத் ஜமாஅத், எஸ்.டி.பி.ஐ கட்சியினர், விநாயகர் சதுர்த்தி விழாக்குழுவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கடுமையாகத் தாக்கினர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரது மனைவியை பிடித்து இழுத்து சாக்கடையில் தள்ளிய முஸ்லிம் கும்பல், அவரது சிறு குழந்தையையும் தாக்கியது. அப்போதும் வெறி அடங்காத கும்பலால் ஆறுமுகத்தின் மளிகைக்கடை சூறையாடப்பட்டது.
இங்கு பட்டத்தரசி அம்மன் கோயிலையும் தரைமட்டமாக்க ஒரு கும்பல் சென்றுள்ளது. காவல்துறை தடுத்ததால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. ஆறுமுகத்தின் கடை சூறையாடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுக்கரையில் 13.09.2010 அன்று முழுக் கடையடைப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தில் புகார் பெற மதுக்கரை காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இதுவரை ஆறுமுகம் குடும்பத்தைத் தாக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை.

5. சரவணம்பட்டி:

கணபதி, இ.பி.காலனியில் விளம்பர பேனர் வைப்பது தொடர்பான பிரச்னையில் இந்து முன்னணி தொண்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீராம், ரகு உள்ளிட்ட 7 பேர் சரவணம்பட்டி காவல்துறையினரால் (09.09.2010) கைது செய்யப்பட்டனர். புகார் கூறியவர்கள் சமரசமாகி, அதனை வாபஸ் பெற்றபோதும், இந்து முன்னணி தொண்டர்களை சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் சிவகுமார் விடுவிக்கவில்லை.

அவர்களை பீளமேடு காவல்நிலையம் கொண்டுசென்று சட்டவிரோதமாக லாக்அப்பில் அடைத்து கடுமையாகத் தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். மறுநாள் மதியம் வரை கடுமையாக இந்து முன்னணி தொண்டர்கள் தாக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கான இந்து முன்னணியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பிறகே, கைது செய்யப்பட்டவர்கள் மீது வேறு பொய்வழக்குகளை ஜோடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பினார், காவல் ஆய்வாளர் சிவகுமார்.

காவல்நிலையத்தில் இந்து முன்னணி தொண்டர்கள் பெற்ற காயங்களுக்கு சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதையும் காவல் ஆய்வாளர் செய்ய மறுத்து விட்டார். தற்போது காவல்துறையினர் தாக்கிய காயங்களுடன் கோவை சிறையில் வாடுகின்றனர் 7 இந்து முன்னணி தொண்டர்கள்.

6. இன்னும் பல இடங்கள்:


சுந்தராபுரம் - பிள்ளையார் புரத்திலும் விநாயகர் சிலை வைக்க அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தன. சிவானந்தா காலனி அருகிலுள்ள கருணாநிதி நகரிலும் விநாயகர் சிலை வைக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக காவல்துறையும் செயல்பட்டது. அங்கு முஸ்லிம் இயக்கங்களாலும் காவல்துறையாலும் இந்து இயக்க நிர்வாகிகள் மிரட்டப்பட்டனர்.

கோவை- பாலக்காடு சாலையில், ஆத்துப்பாலம் முதல் மைல்கல் வரை பல இடங்களில் இத்தகைய மிரட்டல்கள் இந்த ஆண்டு வந்துள்ளன. ஏதோ திட்டத்துடன் தவ்கீத் ஜமாஅத், த.மு.மு.க, மனிதநீதி பாசறை, எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் செயல்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. முஸ்லிம்களின் அடாவடித்தனத்தை கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை இந்து முன்னணியினரையே மிரட்டுகிறது; பொய்வழக்கு போடுகிறது. கருணாநிதி தலைமையிலான அரசே இதற்கு காரணம்.

காரணம் என்ன?

இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டால், பெரும்பாலோர் மழுப்பியபடி தப்பிக்கிறார்கள். மனசாட்சியுள்ள ஒரு அதிகாரி சொன்ன தகவல் கடும் அதிர்ச்சி அளித்தது. விரைவில் தேர்தல் நிகழ உள்ளதால், விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்த பிரச்னை வந்தாலும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று வாய்மொழியாக தமிழக அரசிடமிருந்து உத்தரவு வந்துள்ளதாக அவர் கூறினார். இந்த விபரத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான் முஸ்லிம் இயக்கங்கள் இம்முறை பல இடங்களில் பிரச்னை செய்துள்ளன.

அதிலும், ஒவ்வொரு முஸ்லிம் இயக்கமும் தங்களுக்குள் அதி தீவிரம் யார் என்று காட்டிக்கொள்ளவே பல இடங்களில் அமளியை ஏற்படுத்தினர். முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்கு கிடைக்கும் என்ற மாயையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, பெரும் வன்முறைக்கு வித்திட்டுள்ளது தமிழக அரசு. இதேபோன்ற சூழல் தான், 1998 குண்டுவெடிப்புக்கு முன்னர் கோவையில் நிலவியது என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் சுட்டிக்காட்டியுள்ளார். (காண்க: நேர்காணல்).

தற்போது பற்றி எரியும் காஷ்மீரோ, ஏற்கனவே குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட கோவையோ, எந்தப் பகுதி ஆயினும், அரசின் செயல்பாடற்ற தன்மையே வன்முறைக் கும்பல்களுக்கு நீர் வார்க்கிறது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், கோவை மக்கள், இந்த மதவெறுப்பு உமிழும் முஸ்லிம் இயக்கங்களையும் அவர்களுக்கு வால் பிடிக்கும் காவல்துறையினரையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு, பெரும் ஆபத்துக்களை சந்தித்து நமது வழிபாட்டு உரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் எவரும் ஹிந்து பெரும்பான்மையான பகுதியில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை. தினசரி ஐந்து வேளைத் தொழுகைக்காக ஒலிபெருக்கி வைத்து முஸ்லிம்கள் இறைவனிடம் இறைஞ்சுவது எந்த ஹிந்துவுக்கும் இதுவரை இடைஞ்சலாக இருந்ததில்லை. ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை விநாயகர் சிலை வைத்து வழிபட ஹிந்துக்களுக்கு அனுமதி மறுக்கும் முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகள், நமது பரந்த மனப்பான்மையையும் சமரச மனோபாவத்தையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன.

கோவையை மீண்டும் கலவர பூமி ஆக்க திட்டமிட்ட சதிகள் துவங்கிவிட்டது தெரிகிறது. முஸ்லிம்களின் அடாவடித்தனம், காவல்துறையின் பாரபட்ச அணுகுமுறைகளை பெரும் இன்னல்களுக்கு ஆளாகியும் சமாளித்துவரும் கோவை ஹிந்து சகோதரர்களுக்கு விநாயகர் அருள் மேலும் வலுவைக் கூட்டட்டும்.

பெட்டிச்செய்தி

மேட்டுப்பாளையத்தில் அவலம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணியினர் 8 இடங்களில் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்கள் ரம்ஜானுக்கு முந்தைய தினத்தில் (10 .09 .2010) கிழிக்கப்பட்டன. கிழித்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் நடந்த அமைதிக்கூட்டத்தில், எஸ்.பி. கண்ணன் முன்னிலையிலேயே, தங்கள் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யக் கூடாது என்று முஸ்லிம் அமைப்பின் பொறுப்பாளர் ஒருவர் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். யாரும் ஏன் என்று அவரை கேள்வி கேட்கவில்லை. இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் நீங்கள் மட்டும் மசூதிகளில் 'வாங்கு' ஓதலாமா என்று கேட்கும் தைரியம் எந்த அதிகாரிக்கும் இல்லை.

ரம்ஜான் பண்டிகை (11.09.2010) தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்கள் (சுமார் 2,000 பேர்) எழுப்பிய கோஷத்தால் மிரண்ட மாட்டு வண்டி ஒன்று கூட்டத்தில் புகுந்தது. இதற்கு காரணம் இந்துமுன்னணி தான் (அவர்கள் தான் மாட்டுக்கு டாஸ்மாக் சரக்கு வாங்கி ஊற்றி கூட்டத்தில் துரத்தி விட்டார்களாம்!) என்று இஸ்லாமியர்களிடம் வதந்தியைப் பரப்பி, கலவரம் நடத்த மேட்டுப்பாளையத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நல்லவேளையாக, நல்லுள்ளம் கொண்ட பள்ளிவாசல் இமாம் ஒருவரால், வதந்தி முறியடிக்கப்பட்டது.

உதகையிலும் சிக்கல்:
சென்ற ஆண்டு விநாயகர் விசர்ஜன ஊர்வலம் உதகையில் நடந்தபோது மார்க்கெட் பகுதி (அங்கு முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்களாம்) வழியாக வரக்கூடாது என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டனர், முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதுபோல இம்முறை நடந்துவிடக் கூடாது என்று, முன்னெச்சரிக்கையாக புதிய வழித்தடத்தில் ஊர்வலம் செல்ல உதகை காவல்துறை ஏற்பாடு செய்தது. இதனை ஏற்க இந்து முன்னணியினர் மறுத்துவிட்டனர்.

காலம் காலமாக செல்லும் வழித்தடத்தில் தான் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடக்கும் என்று இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அறிவித்தனர். இதை அடுத்து, ஊர்வலம் துவங்கும் முன்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர்; 70 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர, இந்து முன்னணியினர் கொண்டுவந்த விநாயகர் சிலைகளை காவல்துறையினரே கைப்பற்றிvக் கொண்டுசென்று காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் கரைத்தனர்.

திருப்பூர் -ஸ்ரீநகரில் ஆசுவாசம்:
சென்ற ஆண்டு விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின்போது கல்வீச்சும் கலவரமும் நடந்த திருப்பூர்- ஸ்ரீநகரில், இந்த ஆண்டு முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் ஆயிரக் கணக்கில் குவிக்கப்பட்டனர். கேமரா கண்காணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக இம்முறை இங்கு எந்த அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்கப்பட்டது. காவல்துறையினர் ஆசுவாசப் பெருமூச்சு விடுகின்றனர். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு பகுதியில் அதிகரித்தாலே அங்கு கல்லெறி சகஜம் தான் போலும். காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் இது தானே நடக்கிறது?
------------------------------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (01.10.2010)

உடன் படிக்க வேண்டியது: ராம.கோபாலன் நேர்காணல்
..

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

காற்றின் திசை தெரியாமல் கப்பல் ஓட்டலாமா?

சீட்டாட்டத்தில் ' கோமாளி' தனித்து எதுவும் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பதில் அதன் பங்கு அனைவரும் அறிந்தது தான். அதுபோல, தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க.வின் நிலை தேர்தல் முடிவைத் தீர்மானிப்பத்தில் பெரும் பங்கு வகிப்பதாக உள்ளது.

எனவேதான், தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு தொற்றியதிலிருந்தே, தே.மு.தி.க.வின் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது குறித்த ஹேஷ்யங்கள் கிளம்பத் துவங்கிவிட்டன. தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் இரு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வேறு கட்சி வேண்டும் என்ற தமிழக மக்களின் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றும் விதமாக இருப்பதால்தான், தே.மு.தி.க.வுக்கு மக்கள் ஆதரவு குவிந்தது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே சமயம், மிதமிஞ்சிய தற்பெருமையால், தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் இடம்பெறும் வாய்ப்பை அக்கட்சி தற்போது தவற விட்டுவிடக் கூடாது.

தமிழகத்தில் என்று காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டதோ, அன்றே மாநிலத்தின் கேடு துவங்கிவிட்டது. இதையே, ''தமிழகத்தில் விஷக்கிருமிகள் நுழைந்துவிட்டன'' என்று கூறினார் அன்றைய முதல்வர் பக்தவத்சலம். அன்று துவங்கி, இன்று வரை, தமிழகம் கவர்ச்சிகரமான வேஷங்களுக்கும், பிரிவினை கோஷங்களுக்கும் கொடி பிடித்து வீணாகப் போனது. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், மாறி மாறி ஆண்டாலும், இந்நிலையில் பெருத்த மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் பழிப்பதிலும் ஒழிப்பதிலும் செலுத்திய கவனத்தை மாநில நலனுக்காக காட்டவில்லை.

இதன் காரணமாகவே, 2005 -ல் நடிகர் விஜயகாந்த் துவக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இளைஞர்களிடையிலும் பொதுவான வாக்காளர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது; பல அரசியல் கட்சிகளிலிருந்து விலகி ஆயிரக் கணக்கானோர் தே.மு.தி.க.வில் சேர்ந்தனர். இந்த அதிரடியை கருணாநிதியும் ஜெயலலிதாவும் எதிர்பார்க்கவில்லை.

கட்சி ஆரம்பித்த புதிதிலேயே 2006 -ல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. அதில் விஜயகாந்த் எடுத்த முடிவால், அ.தி.மு.க.வின் வெற்றி பறிக்கப்பட்டது. ''எந்தக் கட்சியுடனும் கூட்டில்லை; அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி'' என்ற அவரது அறிவிப்பால், தே.மு.தி.க.வினர் உற்சாகமாக களம் இறங்கினர். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது. அதுவும் கட்சித் தலைவர் விஜயகாந்தின் விருத்தாசலம் தொகுதி மட்டுமே. ஆயினும் அத்தேர்தலில், 27.64 லட்சம் வாக்குகள் பெற்று, மொத்த பதிவு வாக்குகளில் 8.38 சதவீதம் பெற்றது தே.மு.தி.க; வாக்குகள் சிதறியதால் சுமார் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்தது.

வாக்குகள் பிளவுபட்டதால், தமிழகத்தில் முதல்முறையாக சிறுபான்மை அரசு அமையும் சூழல் ஏற்பட்டது; கருணாநிதி ஐந்தாவது முறையாக முதல்வரானார். இதன்மூலம், தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபித்த தே.மு.தி.க, அடுத்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து களம் கண்டது. தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தே.மு.தி.க., இம்முறை 30 லட்சம் வாக்குகள் பெற்றது. அதன் வாக்கு விகிதம், பதிவான மொத்த வாக்குகளில் 10 சதவீதமாக உயர்ந்தது; பல தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணியின் தோல்விக்கும் காரணமானது.

அக்கட்சி ஒரு லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 9. அதன்மூலமாக, தனது இருப்பை மேலும் உறுதிப்படுத்திக் கொண்ட விஜயகாந்த், இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரே மாற்று தான் மட்டுமே என்று முழங்கினார். அதில் ஓரளவு நியாயம் இருக்கவே செய்கிறது.

தொடர்ந்து இரு தேர்தல்களில் கிடைத்த வரவேற்பால், விஜயகாந்த் உற்சாகம் அடைந்து இரு கட்சிகளையும் சமதூரத்தில் வைத்து விமர்சித்து வருகிறார். இது அவரது அரசியல் பாணி. 2009 தேர்தலின்போது, ''மக்களுடன் மட்டுமே கூட்டணி'' என்று அவர் முழங்கினார். அதற்கு அவருக்கு பலன் கிடைத்துள்ளது. அவர் தனது பாதை சரி என்று நம்புகிறார். அதில் தவறில்லை. அதே சமயம் நாட்டுநடப்பை கூர்ந்து கவனிக்காமல் அரசியல் நடத்துவது, காற்றின் திசை அறியாமல் கப்பல் ஓட்டுவது போன்றதாகிவிடும். இதை ‘கேப்டன்’ ஏனோ உணர மறுக்கிறார்.

கடந்த இரு தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டதே தி.மு.க.வின் திட்டப்படி நடந்த அரசியல் விளையாட்டு என்ற யூகங்கள் உண்டு. தி.மு.க. மீதான மக்களின் அதிருப்தி, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக மாறன் சகோதரர்கள் நிகழ்த்திய ராஜதந்திர நடவடிக்கையே அது என்று அப்போதே பேச்சு எழுந்தது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டதால் பலன் அடைந்த கட்சி தி.மு.க.வே என்பதால் இந்த யூகங்கள் ஓரளவு உண்மையாகவே காட்சி அளித்தன.

இந்நிலையில், தற்போது தமிழகத் தேர்தல் களத்தில் மீண்டும் தே.மு.தி.க.வின் முக்கியத்துவம் பெருகி உள்ளது. இதுவரை, விஜயகாந்த் குறித்து உதாசீனமாகப் பேசிவந்த ஜெயலலிதா கூட, கூட்டணிக்கு தயார் என்று பச்சைக்கொடி காட்டிவிட்டதாக தகவல். நடிகர் கட்சி என்று ஏளனம் பேசிய மருத்துவர் ராமதாசும் கூட, விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு மழுப்பலான பதில் கூறி இருக்கிறார். ஆனால், விஜயகாந்த் உச்சாணிக் கொம்பில் அமர்ந்துகொண்டு இறங்க மறுக்கிறார்.

தமிழகத்தின் 14-வது முதல்வர் ஆவதற்கு விஜயகாந்திற்கு ஆசை இருக்கிறது. அவரது அதிர்ஷ்ட எண் ஐந்தாம்! அவரது மைத்துனரும், கட்சியின் பொதுச்செயலாளருமான சுதீஷ் கூறியிருக்கிறார். ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், தமிழகத்தின் தற்போதைய நிலையை சிறிதேனும் விஜயகாந்த் உணர வேண்டாமா?

திராவிட அரசியலில் முக்குளித்த பண்ருட்டி ராமசந்திரன் அவைத்தலைவராக உள்ள நிலையில், மாநிலம் எதிர்நோக்கும் தற்போதைய தேவை என்ன என்பதை அவராவது சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். மாறாக அவரும், ''தனித்து போட்டி'' என்று கொம்பு சீவி விடுகிறார். இதனால் பலன் அடையப் போவது கண்டிப்பாக கருணாநிதி மட்டுமே.

வாரிசு அரசியலின் உச்ச நிலை, கடும் விலைவாசி உயர்வு, இதுவரை உலகம் காணாத ஊழல், அனைத்து துறைகளிலும் ஒரு குடும்ப ஆதிக்கம், இலங்கைத் தமிழர் பிரச்னையில் அநீதி, தமிழகத்தின் உரிமைகள் தரைவார்க்கப்படுவது என்று, தற்போதைய 'மைனாரிட்டி' தி.மு.க. அரசின் பாதிப்புக்களை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தையே நாசமாக்கிவரும் 'டாஸ்மாக்' மது வியாபாரம், இலவச திட்டங்கள், வாக்குக்கு கையூட்டு என்று - இதுவரை கண்டிராத சீரழிவுகளை தமிழகம் சந்தித்துவரும் நிலையில், கருணாநிதிக்கு சாதகமாக 'கருப்பு எம்.ஜி.ஆர்' வாக்குகளைப் பிரித்துவிடக் கூடாது.

இதனிடையே விஜயகாந்தை மிரட்டும் வகையில், அவர் கருப்புப்பணம் வைத்திருப்பதாக கருணாநிதி பேசியது புரிந்த புதிர். எதிர்க்கட்சிக் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்துவிடக் கூடாது என்பதை மறைமுகமாக வலியுறுத்தவே இந்த எச்சரிக்கை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இதற்கு விஜயகாந்த் சரியான பதிலடி (கருணாநிதி குடும்பத்தினர் எடுக்கும் திரைப்படங்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?) கொடுத்தார். கடைசியாக ''மக்கள் விரும்பும் கூட்டணி அமைப்பேன்'' என்று சற்றே இறங்கி வந்திருக்கிறார், விஜயகாந்த்.

தற்போது தமிழக அரசியலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் வாய்ப்பு காணப்படுகிறது. இந்த அணியில் தனிப்பட்ட விருப்பங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட்டால், தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்படும். அதிகார துஷ்பிரயோகம், பணபலம், அரசு ஊழியர் உதவி ஆகியவற்றை மீறி தி.மு.க.வை வெல்ல வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டாக வேண்டும். ''தனித்து போட்டியிட்டு, தி.மு.க.வுக்கு விஜயகாந்த் துணை போகக் கூடாது'' என்று எச்சரித்திருக்கிறார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் .

அதற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக, ''முப்பது- நாற்பது தொகுதிகளுக்காக கூட்டணி அமைக்க மாட்டேன்'' என்று முழங்குவது விஜயகாந்த்திற்கு விவேகம் ஆகாது. ''தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் நான் ஏன் புதிய கட்சியைத் துவங்க வேண்டும்?'' என்றும் அவர் கேட்டிருக்கிறார். உண்மைதான். அதே சமயம் தற்போதைய தீமையில் எது பெரிய தீமை என்று எடை போட்டுப் பார்த்து, அதை விலக்க வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது என்பதை தே.மு.தி.க. தலைவர் உணர வேண்டும். அதை விடுத்தது வீராவேசமாக முழங்குவது ‘குறுக்குசால்’ ஓட்டுவதாகவே ஆகிவிடும்.

அடுத்துவரும் ஆண்டுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள ஆண்டுகள். இரு திராவிடக் கட்சிகளும் தங்கள் சுயத்தை இழத்து, ஆதரவுத்தளத்தை குறுக்கிவரும் நிலையில், தே.மு.தி.க.வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அதற்கு ஆயத்தமாக, வரும் தேர்தலில் கூட்டணி அமைத்து, அனுபவமும் வெற்றிகளும் பெற வேண்டிய காலகட்டம் இது. குறுகிய லாபங்களுக்காக அதனை விஜயகாந்த் இழந்துவிடக் கூடாது.

இப்போது விஜயகாந்த் முன்னுள்ள அரிய வாய்ப்பு, அ.தி.மு.க. கூட்டணியில் சரியாக பேரம் பேசி அதிக தொகுதிகளைப் பெறுவதே ஒழிய, தனித்து போட்டியிடுவதல்ல. அங்கு ஏற்கனவே உள்ள ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், சில உதிரி கட்சிகள், எதிர்காலத்தில் சேர வாய்ப்புள்ள பா.ம.க. ஆகியவற்றை உத்தேசித்து சரியாக சீட்டுகளைக் கோர்த்தால், அரசியல் வெட்டாட்டத்தில் அவர் வெல்லலாம். அதை விடுத்து வீம்புக்கு அல்லது சுயலாபத்திற்கு செயல்பட்டால், 'சீட்டாட்ட கோமாளி' என்ற நிலையிலிருந்து 'அரசியல் கோமாளி' என்ற நிலைக்கு அவர் தரம் தாழ்ந்துவிட நேரலாம்.
------------------------------------------------------------
பெட்டிச் செய்தி

காங்கிரசுடன் கூட்டணி?


காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் விஜயகாந்தை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியதும் பல அரசியல் கணக்கீடுகளை உருவாக்கியது. ஆயினும், தற்போதைய நிலையில் நெருங்கிய ஊழல் கூட்டாளியான தி.மு.க.வை விட்டு விலக காங்கிரஸ் முன்வருமா? காங்கிரஸ் கட்சியில் இளங்கோவன் நிலையே திரிசங்கு சொர்க்கமாக உள்ள நிலையில், அவரது சந்திப்பு பத்திரிகை விற்பனையைப் பெருக்க உதவும் பரபரப்பு செய்திகளுக்கு வேண்டுமானால் பயன்படலாம்.

பொதுவாகவே காங்கிரஸ் மீது விஜயகாந்திற்கு ஒரு பிடிப்பு மூப்பனார் காலந்தொட்டே உள்ளது என்கிறார்கள். போதாக்குறைக்கு தற்போது மத்தியில் அக்கட்சி அதிகாரத்திலும் உள்ளது. எதற்கு வீண்வம்பு என்பதற்காகவே காங்கிரஸ் ஆதரவு பொன்மொழிகளை அவர் உதிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திமு.க.வை நீக்கினால் காங்கிரசுடன் கைகோர்க்க தயார் என்று அவர் கூறியிருப்பதாகவும், அதை காங்கிரஸ் மேலிடம் ஆறப் போட்டிருப்பதாகவும் தகவல். இது உண்மையா? கருணாநிதியே அறிவார்!
------------------------------------------------------------
நன்றி: விஜயபாரதம் (24.09.2010)

.

சனி, செப்டம்பர் 18, 2010

தரித்திர நாராயண நம:

'நான் கடவுள்' படத்தின் விமர்சனம்

பிச்சைக்காரர்களும் பாம்பாட்டிகளும் வாழும் நாடு தான் இந்தியா என்ற தோற்றம் உண்டு. இந்தியாஅடிமைப்பட்டிருந்த காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட சித்திரம் அது. இந்தக் கண்ணோட்டம் முற்றிலும் உண்மையானது அல்ல என்றாலும் புறக்கணிக்க முடியாதது.

இந்தியா இப்போது வளர்ந்துவிட்ட தேசம்; அணு ஆயுத நாடாகவும், சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் நாடாகவும் வளர்ந்துவிட்ட தேசம். கிராமப்புறங்கள் எல்லாம் நகர்ப்புற பவுடர் பூசிவரும் நிலையில் பாம்புகள் அருகி வருகின்றன. இனிமேல் பாம்பாட்டிகளை நினைவுகூர முடியுமா என்பது சந்தேகம் தான்.

ஆனால், பிச்சைக்காரர்கள் இன்னும் இருக்கிறார்கள்; அதிகரித்தபடியே இருக்கிறார்கள்; இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறார்கள்; பொருளாதார வல்லரசுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிலும் இருக்கவே செய்கிறார்கள். ஆயினும் இந்தியாவை 'பிச்சைக்காரர்கள் தேசம்' என்று வர்ணித்து மகிழ்கிறார்கள்.

ஹாலிவுட் இயக்குனர் 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் எடுத்து, இந்த அற்ப சந்தோஷத்தையே வெளிப்படுத்தினார். அதற்கு இசை அமைத்த ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைத்ததற்காக நெஞ்சு நிமிர்த்தி 'ஜெய்ஹோ' முழக்கமிடுகிறோம்.

உண்மையில் பிச்சைக்காரர்கள் எங்கிருந்து உற்பத்தி ஆகிறார்கள்? அவர்களுக்கும் சிரிப்பு வருமா? அவர்களுக்கும் மற்றவர்கள் வாழும் வாழ்க்கையை வாழ உரிமை உள்ளதா? இந்தக் கேள்விகளுக்கு மௌனமே பதிலாகக் கிடைக்கிறது.

இச்சூழலில் தான், தமிழ்த் திரையுலகில் புதிய வெளிச்சமாக வெளிவந்திருக்கிறது ' நான் கடவுள்' - அஹம் பிரம்மாஸ்மி! இயக்குனர் பாலாவின் துணிச்சலான இம்முயற்சி, ஹாலிவுட் திரைப்படமான 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தை விட மேலானது.

ஹாலிவுட் படம் இந்தியாவை கேவலமாக சித்தரித்து அவல நகைச்சுவையுடன் அற்புதத்தைச் சேர்த்து கோடிக் கணக்கில் டாலர்களை அள்ளியது; சினிமாவின் சகலவித சாகசங்களுடன் அறுசுவை விருந்து அளித்தது.

'நான் கடவுள்' அப்படியான படம் அல்ல. நம்மிடையே உள்ள கீழ்த்தரமான புல்லுருவிகளையும், வாழ்வதற்கான துடிப்புடன் 'தர்மம்' கோரும் பரிதாபத்திற்குரியவர்களையும் நமக்கு தரிசனம் செய்துவைக்க முயற்சிக்கும் படம் இது. விளிம்புநிலை மனிதர்களான பிச்சைக்காரர்களையே கதாநாயகர்கள் ஆக்குவதும், அந்த கதாநாயகர்கள் வாழ்வின் துயர்களை விழுங்கியபடி சமுதாயத்தைக் காண்பதும் புதுமை. இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்துக்கள்.

****

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'ஏழாவது உலகம்' புதினத்தின் தாக்கத்தால் உருவான படம் இது. சமூக நிராகரிப்பால் உருவாகும் பிச்சைக்காரர்கள் அதே சமூகத்தால் தான் வாழவைக்கப் படுகிறார்கள்.

பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், பெற்ற பிள்ளைகளால் விரட்டப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர், மனம் பேதலித்தவர்கள், பால்பேதம் கொண்டவர்கள், நோயாளிகள்,... இவர்களுக்கெல்லாம் வாழ்க்கை உள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், கடைத்தெருக்கள், ரயில்கள்,... எல்லா இடங்களிலும், ஏக்கம் மிளிரும் கண்களுடன் திரியும் இவர்களை நாம் கடந்திருக்கலாம்; செல்லும் வழியில் மனம் தடுமாறி சில்லறைக் காசுகளை வீசிவிட்டுச் சென்றிருக்கலாம். நாம் வள்ளல்தன்மையுடன் வழங்கிய ஒரு ரூபாய் நாணயம் யாசகனின் வாழ்வை உயர்த்தி விடுமா?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, தெய்வப் புலவர் திருவள்ளுவர், பிச்சை எடுப்பது பற்றி இரண்டு அதிகாரங்கள் எழுதி இருப்பது தான் (இரவு, இரவச்சம்) நினைவில் வருகிறது. 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்' என இறைவனுக்கே சாபமிட்டதன் காரணம் புரிகிறது.

'நான் கடவுள்' படத்தில் ஆசான் ராமப்பனாக வரும் கவிஞர் விக்கிரமாதித்தன், அவர் பராமரிப்பில் இருந்த குழந்தை குருவியை சமூக விரோதிகள் பறிக்கும்போது கெட்ட வார்த்தையில் அர்ச்சிப்பார். அங்கு புலப்படுவது மேற்காணும் குறள் அல்லவா?

***

குற்றவாளிகளைப் போலவே பிச்சைக்காரர்களும் - உருவாவதில்லை- உருவாக்கப்படுகிறார்கள். வாழ நாதியற்றுத் தவிக்கும் குரூபிகளையும் யாசகர்களையும் 'உருப்படி' எண்ணிக்கையாகக் கொண்டு தொழில் நடத்தும் முதலாளி தாண்டவன்; அவனுக்கு ஒத்தாசையாக உதவும் காவல்துறை; பணக் கற்றைகளை வீசி 'உருப்படி'களை கேரளா கடத்தும் மலையாளி; குருட்டுப் பிச்சைக்காரியை விலைபேசும் அகோரமுகம் கொண்டவன்; தாண்டவனுக்கு ஊழியம் செய்யும் ஏஜென்ட் முருகன்- இப்படியாகப் பட்டவர்களிடையே சிக்கி சின்னாபின்னமானாலும், உவகையுடன் உலகை எதிர்கொள்ளும் யாசகர்கள்.

செல்போன் விற்கும் அம்பானியை கூனன் சக யாசகனுக்கு அறிமுகம் செய்கிறான். அதுவும் அவலச்சுவைதான். ஆனால் கீழ்த்தரமானதல்ல- ஆக்கப்பூர்வமானது. மருதமலைப் படிகளில் திணறியபடி ஏறும் யாசகர்களை வரவேற்கிறது 'மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க' பாடல்.

பிச்சைக்காரர்கள் எடுக்கும் பிச்சையில் வாழ்வதால் ஏற்படும் கழிவிரக்கம் ஏஜென்ட் முருகனை (நடிகர் கிருஷ்ணமூர்த்தி) வாட்டுகிறது. சாராயம் வாங்கி ஊற்றிக் கொடுக்கிறார். பார்வையாளர்களின் கண்கள் கலங்குகின்றன.

தாண்டவனின் பாதாள அறையில் காசுகள் எண்ணப்படுவதில்லை; தராசில் நிறுக்கப்படுகின்றன. குரூபிகளைக் கொண்டு தொழில் நடத்தும் தாண்டவனுக்கும், குரூபிகளை இரக்கமின்றிக் கடக்கும் மனிதர்களுக்கும் வித்யாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுக்கும் குருடி அம்சவல்லி (நடிகை பூஜா) போலீஸ் உதவியால் தாண்டவனிடம் வந்து சேர்கிறாள். விதிவசத்தால் மலையாள ஏஜென்ட் கண்களில் அவள் விழ, அவளது வாழ்க்கை துயரச் சுழலில் சிக்குகிறது. தாண்டவனால் கோரப்படுத்தப்பட்டபின், அம்சம் இழந்த வல்லியின் வசனங்கள் இதயத்தில் கத்தியைச் செருகுகின்றன. வாழ விருப்பமில்லை என்று மன்றாடும் அவளுக்கு ருத்ரன் மோட்சம் (வரம்) அளிக்கிறான். முன்னதாக புல்லுருவிகளுக்கு மரணம் (தண்டனை) அளிக்கிறான்.

படம் நெடுகிலும், இத்தகைய காட்சிகள் பரவலாகக் கிடைக்கின்றன. ஜெயமோகனின் கூர்மையான, நையாண்டி வசனங்களும், ஆர்தர் வில்சனின் உயரிய ஒளிப்பதிவும், கிருஷ்ணமூர்த்தியின் கலையும் நம்மை ஆக்கிரமிக்கின்றன. 'ஓம் சிவோஹம்' என்று படத்தின் துவக்கத்தில் கிளர்ந்தெழுந்த இசை, படம் முடியும்வரை நம்மை மறக்கச் செய்கிறது. இளையராஜாவுக்கும் ஜெயமோகனுக்கும் மேலும் வல்லமையை ருத்ரன் அருளட்டும்.

***

'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்' பாடல் நெஞ்சைப் பிழிகிறது. ருத்ரனை (நடிகர் ஆர்யா) விசாரிக்கும் நீதிமன்றக் காட்சிகள் களிப்பூட்டுகின்றன. 'சாட்சி பல்டியை விட பெரிய பல்டி அடிப்பதாக' நீதிபதி இன்ஸ்பெக்டரிடம் கூறும்போது திரையரங்கம் கரவொலியால் அதிர்கிறது.

காசியின் கங்கை நதிதீரக் காட்சிகளும், மயான தரிசனங்களும், மலைக்கோட்டையில் நடமாடும் பக்தர்களும் கண்களைவிட்டு அகன்றிட மறுக்கின்றன. மலையாள ஏஜென்டைக் கண்டு ஓடி ஒளியும் அனுமான், அம்சவல்லி கடத்தப்படுவதைக் கண்டு பதைக்கும் கடவுள்கள் போன்ற காட்சிகளின் ஊடாக, நமது சிந்தைக்கு பல கண்ணோட்டங்கள் கிடைக்கின்றன.

தமிழ் சினிமாவில் துறவிகளும் அலிகளும் கேவலமாகச் சித்தரிக்கப்படுவது மரபாகிவிட்டது. அந்த மரபையும் தகர்த்துள்ளது 'நான் கடவுள்'. பிச்சைக்காரர்களை தனது குழந்தைகளாக பாவிக்கும் திருநங்கை (நடிகை டிம்பிள்), யாருக்கும் அஞ்சாத, கட்டற்றவர்களான அகோரி சாமியார்களைப் பார்க்கும்போது பெருமிதம் வருகிறது.

தமிழ் சினிமாவின் கனவு நாயகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினியைச் சித்தரிக்கும் காவல்நிலையக் காட்சி- அற்புதமான நையாண்டி. ஆபாச நடனமாடும் நயன்தாராவின் மூலமாக, வக்கிர சிந்தனை மிகுந்த நமது திரையுலக மேதைகளுக்கு சாட்டையடி விழுகிறது. இனியேனும் திரைக் கவிமணிகள் சிந்திப்பார்களா?

படம் முழுவதும் தினவெடுத்த தோள்களுடன், பற்றி எரியும் கண்களுடன், தாடியும் மீசையுமாக மிரட்டுகிறார் ஆர்யா. அழுக்கு கந்தல் ஆடைகளுடன் பரிதாபத்தை அள்ளுகிறார் பூஜா. ஆர்யாவுக்கும் பூஜாவுக்கும் சிறந்த நடிப்பாற்றலுக்கான விருது இந்த ஆண்டு நிச்சயம் உண்டு.

***

நாம் இதுவரை கண்டும் காணாமல் இருந்த பிச்சைக்காரர்களையும், காசியில் வாழும் அகோரி சாமியார்களையும் கவனமாகப் பின்னி அமைத்த திரைக்கதை நம்மை மிரட்டுகிறது. ஒன்றிரண்டு இடங்களில் மிகையாகத் தோன்றினாலும், செயற்கையில்லை. சென்சார் கத்தரிதான் பல இடங்களில் நெருடல்.

சமூகத்தால் உருவாக்கப்பட்டு, துவைத்தெடுக்கப்படும் யாசகர்களின் ஒட்டுமொத்தக் குரலாக அம்சவல்லியின் ஆங்காரமான கேள்வி எழுகிறது. ''எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ற அல்லா சாமி கூட என்னை மாதிரி கண் தெரியாத பிச்சைக்காரிய கஷ்டப்படுத்தத் தான் விரும்புதா? ஏசுசாமி என்னைக் கைவிட்டிருச்சு. தெருவுக்குத் தெரு இருக்கிற பிள்ளையார், காளியாத்தா, மாரியாத்தா ஒரு சாமிகூட என்னைக் காப்பத்தலியே? நீ தான் சாமி என்னைக் காப்பாத்தணும்'' - என்று தன்னையே கடவுளாகக் கூறிக் கொள்ளும் ருத்ரனிடம் சரண் புகுகிறாள் அம்சவல்லி. இதுவே திரைப்படத்தின் உச்சம். அவளுக்கு நேரும் அவல முடிவு பார்வையாளர்களுக்கு நிம்மதி தருகிறது. இதுவே படத்தின் வெற்றி.

அம்சவல்லியின் கேள்விகள் கடவுளுக்கானவை மட்டுமல்ல; இந்த சமுதாயத்தை நோக்கியவை. வாழத் துடிக்கும் நாதியற்றவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

இந்தக் கேள்வி ஒலிக்கிறது; ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தைவிட மேலான படம் இது என்பதன் காரணம் புரிந்திருக்கும். ''யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி'' - திருமூலரின் பாடலும் நினைவில் வருகிறது.

-----------------------------------

நன்றி: ஓம்சக்தி (மாத இதழ்) ஏப்ரல் 2009.

.

செவ்வாய், செப்டம்பர் 14, 2010

ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு...?

மதானி கைது செய்யப்பட்டபோது எடுத்த படம்
.
அண்மையில் புதுதில்லியில் நடந்த மாநில காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், நாட்டில் காவி பயங்கரவாதம் தலையெடுத்து வருவதாக எச்சரித்தார். நாடு முழுவதும் நக்சல் பயங்கரவாதமும் இஸ்லாமிய பயங்கரவாதமும் கொடிய முகத்தைக் காட்டிவரும் வேளையில், மதச்சார்பின்மையைக் காப்பதற்கென்றே பிறப்பெடுத்த காங்கிரஸ் கட்சியின் குரலாக, பயங்கரவாதத்தை மதரீதியாக சமண் செய்யும் விதமாக இக்கருத்தை அவர் கூறியிருக்கிறார்.

கற்பனையான புனைவுகளின் அடிப்படையில் சில வழக்குகளில் பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் மற்றும் சில ராணுவ அதிகாரிகளை கைது செய்து, அதையே காரணமாகக் காட்டி காவி பயங்கரவாதம் நாட்டில் வளர்ந்து வருவதாக ப.சிதம்பரம் பூச்சாண்டி காட்டியிருக்கிறார். இதே காலகட்டத்தில், பெங்களூரு தொடர் குண்டுவெடிப்பில் கேரளாவின் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டிருப்பது சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அவரை கைது செய்ய கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் நடத்திய பகீரதப் பிரயத்தனமும், அப்போது, இதே சிதம்பரம் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சி நடந்துகொண்ட விதமும், அக்கட்சியின் உண்மையான முகத்தை தோலுரிக்கின்றன.

பெங்களூரு குண்டுவெடிப்புகள்:

2008 , ஜூலை 25- ம் தேதி கர்நாடகா மாநிலத்தில், பெங்களூரு நகரில் ஏழு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில், இருவர் பலியாகினர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய மாநில காவல்துறை, டி.நசீர் என்ற சிமி இயக்க பயங்கரவாதியை கைது செய்தது. இவன், கேரளாவில் செய்யப்பட்ட இஸ்லாமிய சேவக் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவன். காஷ்மீரில் இயங்கும் லஸ்கர்- ஏ-தொய்பா எனும் பாக். ஆதரவு அமைப்பின் தளபதியாக செயல்பட்டவன். இவனிடம் நடந்த விசாரணையில், கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் இஸ்லாமிய சேவக் சங்க நிறுவனருமான அப்துல் நாசர் மதானிக்கு பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க. அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும், மதானியைக் கைது செய்ய கர்நாடகா அரசு அவசரம் காட்டவில்லை. வழக்கில் மதானி பெயர் சேர்க்கப்பட்டபோதும், சட்டரீதியான நடைமுறைகளில் கர்நாடகா அரசு கவனம் செலுத்திவந்தது. அதற்குள், முன்பிணை பெறும் முயற்சிகளில் மதானி ஈடுபட்டார். அவரது மனுக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக உச்ச நீதிமன்றத்திலும் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. கர்நாடகா நீதிமன்றம், மதானியைக் கைது செய்ய கேடு தேதி நிர்ணயித்த பிறகே, அவரை கைது செய்ய அம்மாநில காவல்துறை முனைப்பு காட்டியது.

மதானியைக் கைது செய்ய கர்நாடக காவல்துறையின் ஒரு குழு, அவரது சொந்த ஊரான அனவரசேரி சென்றது. ஆனால், அவரை கைது செய்ய உள்ளூர் காவல்துறை ஒத்துழைக்கவில்லை. ‘மதானியை கைது செய்தால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும்’ என்று மாநில உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் வெளிப்படையாகவே அறிவித்தார். கேரள காவல்துறையின் அனுமதி. ஒப்புதல் இல்லாமல் மதானியை கைது செய்ய இயலாது என்பதால், எட்டு நாட்கள், கொல்லத்தில் கர்நாடகக் குழு காத்திருந்தது.

கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சியினர், இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொண்டு, இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு- மதானியை கைது செய்யக் கூடாது என்று நெருக்குதல் கொடுத்தனர். போதாக்குறைக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஆக. 12 ம் தேதி கேரளா வந்ததால், மதானியைக் கைது செய்வதை மாநில அரசு தவிர்க்க விரும்பியது. கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மத்திய மந்திரிகள், இந்த தடுமாற்றத்தில் குளிர் காய்ந்தனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் இரண்டுமே முஸ்லிம் வாக்கு வங்கி பறிபோய்விடக் கூடாது என்ற சிந்தனையிலேயே இப்பிரச்சினையை அணுகின.

அதற்குள், நீதிமன்றத்தில் சரண் அடைந்து, கைதாவதிலிருந்து தப்ப மதானி முயன்றார். மார்க்சிஸ்ட் அரசு கர்நாடக பா.ஜ.க. அரசுக்கு உதவும் வகையில் மதானியை கைது செய்ய ஒத்துழைப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கேரளாவில் பிரசாரம் செய்தனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் விளக்கம் அளித்தார். '' பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் விரோதப்போக்குக்காக மதானி கைது செய்யப்படவில்லை. குற்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படியே அவர் கைது செய்யப்படுகிறார். அதற்கு சட்ட ரீதியாக கேரளா அரசு உதவ வேண்டியுள்ளது'' என்றார் அவர். அதன் பிறகே, மாநில அரசும் கர்நாடக காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்தது .

ஒருவழியாக, 17.08.2010 அன்று மதானியை கர்நாடகா காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உரிய அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டன. அன்றிரவே நீதிமன்றம் கொண்டுசெல்லப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். மிகவும் மரியாதையாக அவர் நடத்தப்பட்டார். இதற்கே தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளாவிலும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.

மதானி, 1998 கோவை குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டவர். காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கோவை குண்டுவெடிப்பு வழக்கிற்காக, கோவை சிறையில் 9.5 ஆண்டு விசாரணைக் கைதியாக அவர் இருந்தபோது, சிறையில் அவருக்கு ராஜ உபசாரம் செய்யப்பட்டது.

ஆனால், சிறையில் மதானி கொடுமைப் படுத்தப்படுவதாகக் கூறி கேரளாவில் கலமச்சேரி என்ற இடத்தில் தமிழக அரசு பஸ் (2005) எரிக்கப்பட்டது. அவ்வழக்கில் மதானியின் மனைவி சூபியா குற்றவாளி. அவ்வழக்கில் சூபியாவை கைது செய்ய தமிழக காவல்துறையால் முடியவில்லை. பலத்த முயற்சிக்குப் பிறகே சூபியா 19.12.2009 அன்று கைது செய்யப்பட்டார். அவ்வழக்கு இன்னும் முடியவில்லை; அவர் பிணையில் வெளியே நடமாடுகிறார். இந்த பஸ் எரிப்பு வழக்கில் மற்றொரு குற்றவாளி தான் டி.நசீர். அவர் தான் பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி.

இவ்வாறாக, 2008 - ல் பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புக்கு மதானியின் தூண்டுதல் இருப்பது தெரிந்தும் அவரை கைது செய்ய இரண்டு ஆண்டுகள் ஆனது, கர்நாடகா அரசுக்கு. மதானி கைதை தவிர்க்கவே கர்நாடகா அரசும், கேரளா அரசும் முயன்றன. ஏனெனில், அவர் கைது செய்யப்பட்டால், நாட்டில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம்.

நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்காக (2001) தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட (2008) முகமது அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றாமல் காலம் கடத்தப்படுவதை இங்கு நினைவு கூரலாம். ‘அப்சலை தூக்கில் போட்டால் புதுடில்லியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ என்று அம்மாநில துணைநிலை ஆளுநர் தேஜெந்திர கன்னா கூறியதை, கொடியேறி பாலகிருஷ்ணனின் கருத்தோடு ஒப்பிடலாம். இந்த நேரத்தில், 2006 - இல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகளுக்காக ஹிந்து பெண் துறவி ஒருவர் எவ்வாறெல்லாம் சித்ரவதை செய்யப்பட்டார் என்பதை எண்ணிப் பார்த்தால், நமது அரசுகளின் லட்சணம் புரியும்.

மாலேகான் குண்டுவெடிப்பு:

2006 , ஆகஸ்ட் 29-ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த பயங்கர நிகழ்வுக்கு சிமி அமைப்பே காரணம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.
ஆனால், குண்டு வைக்கப்பட்ட சைக்கிளை விற்றவர் என்ற காரணம் காட்டி, பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட்டார். அவருடன் லெப்.கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட சில ராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். அபிநவ பாரத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி முஸ்லிம்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட சதித் திட்டம் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இவ்வழக்கில் பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட்டது 10.10.2008 அன்று. ஆனால் அவரை சட்டவிரோதமாக காவல்நிலையத்திலேயே வைத்து, சித்ரவதை செய்தனர், மகாராஷ்டிர காவல்துறையினர். கைது செய்யப்பட்டவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்; நீதிமன்ற அனுமதி பெற்றே விசாரணை நடத்த வேண்டும் என்ற விதி அங்கு அப்பட்டமாக மீறப்பட்டது. பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்த பிறகே, மகாராஷ்டிர மாநில திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (MCOCA) கீழ் 23.10.2008 அன்று பிரக்யா சிங் தாகுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அந்த 13 நாட்களும் பெண் துறவி என்றும் பாராமல் அவரை சிறப்பு புலனாய்வுத் துறையினர் கடுமையாக சித்ரவதை செய்தனர். அவருக்கு எந்த மருத்துவ வசதியும் செய்து தரப்படவில்லை. அவர் சமுதாயத்தின் உயர்ந்த (மதானி போலவே) நிலையில் உள்ள துறவி என்றபோதும், அவர் கீழ்த்தரமான குற்றவாளி போல நடத்தப் பட்டார். அதன் விளைவாக தற்கொலை செய்யும் அளவுக்கு மனம் பேதலிக்கப்பட்டார்.

பிரக்யா சிங் தாகுர் கைது செய்யப்பட நாள்: அக். 10; அவர் மீது முறையான வழக்கு பதிவு செய்யப்பட்ட நாள்: அக். 23. இவரும் உடன் கைது செய்யப்பட்டவர்களும் பிணையில் வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயினும், அவர்கள் மீது எந்த ருசுவான சாட்சியத்தையும் மகாராஷ்டிரா சிறப்பு காவல்படையால் காட்ட இயலவில்லை. இறுதியில், சரியான சாட்சியங்கள் இல்லாததால், இவர்கள் மீதான தடுப்புக் காவலை 2009 ஜூலையில் விலக்கிக் கொள்ள வேண்டியதாயிற்று.

என்றபோதும், ராஜஸ்தானின் ஆஜ்மீர் (2007), ஆந்திரப் பிரதேசத்தின் ஐதராபாத் (2007), குஜராத்தின் மொடாசா(2008) ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் பிரக்யா சிங் தாகுர் குழுவினருக்கு தொடர்பிருப்பதாகக் கூறி வழக்கிற்கு மேல் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், பெண் துறவி மட்டுமின்றி புரோகித் உள்ளிட்ட பல ராணுவ அதிகாரிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அரசு இழைத்த இன்னல் கொஞ்சநஞ்சமில்லை.

'ராணுவமும் காவித் தீவிரவாதிகளின் கூடாரமாகி வருகிறது' என்றும் மத்திய அரசால் பிரசாரம் செய்யப்பட்டது. இதுவரை, இவர்களுக்கு எதிரான எந்த அடிப்படை ஆதாரமும் மத்திய அரசாலோ, மாநில அரசாலோ முன்வைக்கப்படவில்லை. ஆனால், பிணையில் (அதற்கு சட்டப்படியான உரிமை இருந்தும்) இவர்களால் வெளிவர முடியவில்லை.

தற்போது, உச்சநீதிமன்றத்தில், பெண் துறவியை சட்டவிரோதமாக 13 நாட்கள் வைத்து மகாராஷ்டிர காவல்துறை நடத்திய சித்ரவதையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் வெளிவரும் விபரங்கள், மகாராஷ்டிரா மாநில காவல்துறைக்கு மட்டுமல்லாது, மத்திய அரசிற்கும் சிக்கலை ஏற்படுத்தத் துவங்கியுள்ளன.

சிந்திக்க வேண்டியது யார்?

இருவேறு மாநிலங்கள்; இரு வேறு சம்பவங்கள்; இருவேறு வழக்குகள்; இரண்டிலும் அந்தந்த மாநில அரசுகள் நடந்துகொண்ட நடத்தையை இதுவரை பார்த்தோம். பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மதானி மீது உறுதியான ஆதாரங்கள் இருப்பதால் தான் அவருக்கு முன்பிணை வழங்க அனைத்து நிலை நீதிமன்றங்களும் தவிர்த்தன. ஆனால், அவரை கைது செய்ய கர்நாடகா மாநில அரசு அவசரப்படவில்லை. மதானிக்கு உள்ள சட்ட உரிமைகளைப் பயன்படுத்திக்கொள்ள தேவையான அவகாசம் வழங்கப்பட்டது. கைதுக்குப் பிறகும் அவர் கௌரவமாகவே நடத்தப்படுகிறார். அந்த பா.ஜ.க.அரசு மீது தான் மதவெறியுடன் செயல்படுவதாக 'மதச்சார்பற்றவர்கள்' குற்றம் சுமத்துகின்றனர்.

மாலேகான் குண்டுவெடிப்பில் ஆரம்பகட்டத்தில் சிமி இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு என்ன காரணத்தாலோ வழக்கின் திசை மாற்றப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அபிநவ பாரத சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு திணிக்கப்பட்டது. புனையப்பட்ட இவ்வழக்கில் பல கேள்விகளுக்கு மகாராஷ்டிரா மாநில காவல்துறையிடம் பதிலில்லை. அதே சமயம், வழக்கு தொடர்பான தகவல்கள் என்ற பெயரில், ஊடகங்களுக்கு விசாரணை குறித்த தவறான தகவல்கள் கசியவிடப்பட்டன.

ஊடகங்களும் போட்டியிட்டுக்கொண்டு அவற்றை வெளியிட்டு, நாட்டில் இந்து பயங்கரவாதம் பரவிவருவதாகக் கூறி தங்கள் பங்கிற்கு நாட்டுநலத்திற்கு வேட்டு வைத்தன. அந்த செய்திகள் பல பொய் என்பது இப்போது தெரிய வந்தபோதும், உண்மையை ஏற்க எந்த ஊடகங்களும் இதுவரை முன்வரவில்லை. இதன் விளைவாகவே பெண் துறவி பிரக்யா சிங் தாகுர் உள்ளிட்டோர் தங்கள் மீதான கொடூர அடக்குமுறையை நிராயுதபாணிகளாக சந்திக்க வேண்டியதானது.

'ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' என்பதே குற்றவியல் சட்டத்தின் மகிமை. நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது.

மாநிலங்கள் மாறலாம்; அதிகார வர்க்கமும் அரசியலும் மாறுவதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். மதானியோ, பிரக்யா சிங் தாகுரோ- அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது அவர்களது உரிமை. இவர்கள் வழக்கில் இருந்து விடுபடுவதும் தண்டிக்கப்படுவதும் காலத்தின் கரங்களில் இருக்கிறது. ஆயினும், ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற நடைமுறை இங்கு காணப்படுவதால், நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
.
..
------------------------------------
நன்றி: விஜயபாரதம் (17.09.2010)
முழு கட்டுரையைக் காண்க: தமிழ்ஹிந்து

.

சனி, செப்டம்பர் 11, 2010

பாரதியை நினையுங்கள்!

எனது நண்பர் ஒருவர் பத்திரிகையாளர். அவர் சொன்ன, திருப்பூரில் நடந்த சம்பவம் இது. காவலர்கள் நடத்திய வாகனப் பரிசோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது, ''புலனாய்வுப் பத்திரிகை ஒன்றின் நிருபர்'' என்று பந்தாவாக சொல்லி இருக்கிறார். அவருடன் வந்த இன்னொருவரை தனியாக 'கவனித்து' விசாரித்ததில், ஒரு பெரிய கொள்ளைக் கும்பலுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

பத்திரிகையாளர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்திக்கொண்டு, காவல்துறையிலேயே ஊடுருவி, பல மாதங்களாக அந்த 'நிருபர்' இந்த படுபாதகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்போது இருவரும் இருப்பது கோவை சிறையில்.

மற்றொரு சம்பவம். இதுவும் திருப்பூரில் நடந்தது தான். 'press' என்ற ஒட்டுவில்லை ஒட்டிக்கொண்டு இருசக்கர வாகனம் ஒன்று சென்றுள்ளது. அதன் முன்புறம் பெருமளவில் காகித பண்டல்கள் இருந்துள்ளன. அவரை நிறுத்திய காவலர்கள், போக்குவரத்து விதிமுறைக்கு மாறாக இவ்வாறு சரக்குகளைக் கொண்டுசெல்வது விபத்திற்கு வழிகோலும் என்று எச்சரித்திருக்கிறார்கள். ஆயினும், அவர் தொடர்ந்து இவ்வாறு சரக்கு கொண்டு சென்றுள்ளார். 'press' என்று ஒட்டிய வாகனம் என்பதால், காவலர்களும் வம்பு எதற்கு என்று கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஒருநாள் சாயம் வெளுத்துவிட்டது.

புதிதாக வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், இருசக்கர 'press' வாகனத்தை வழிமறித்து, ''நீங்கள் எந்த பத்திரிகை?'' என்று கேட்டுள்ளார். வாகன ஓட்டியோ, திருத்திரு என்று விழித்தபடி, திருப்பூரில் இயங்கும் ஒரு அச்சகத்தின் (printing press) பெயரைச் சொல்லி இருக்கிறார். அவருக்கு அடுத்து என்ன கிடைத்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

'press' என்ற ஒட்டுவில்லைக்கு இப்போது கிராக்கி. யார் வேண்டுமானாலும் வாகனங்களில் ஒட்டிக் கொள்கிறார்கள். பத்திரிகையில் பணி புரியும் நிருபர்கள், ஊடகப் பணியாளர்கள் செய்தி சேகரிக்கச் செல்லும்போது இடையூறு இன்றி செல்ல வசதியாக செய்யப்பட இந்த ஏற்பாடு, இப்போது அனைவராலும் துஷ்பிரயோகப்படுத்தப்படுகிறது. பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் முதல் மேலாளர் வரை, அனைவரும் 'press' என்பதன் அர்த்தம் தெரியாமலோ, அல்லது அதன் மரியாதையைப் பெற வேண்டியோ, இவ்வாறு செய்கிறார்கள்.

இந்த துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரத்யேக 'press' ஒட்டுவில்லைகள் வழங்குகிறது. ஆனாலும், 'press' மீதான அபிமானத்தை சுயநலவாதிகள் விடுவதில்லை.

கோவையில் நடந்தது...

கோவையில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவர் கூறிய உண்மைச் சம்பவம். ஒரு நிறுவனத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடக்கிறது. தங்கள் நிறுவனத்தின் புதிய திட்டம் குறித்து விளக்கிய பிறகு, அனைவரது கரங்களிலும் ஒரு சிறிய கைப்பையைக் கொடுத்தார், அதன் பொறுப்பாளர். அதனுள் ரூ. 500 நோட்டுகள் இரண்டும், ஒரு எலக்ட்ரானிக் டிஜிட்டல் டைரி ஒன்றும் இருந்துள்ளன.

தாமதமாக வந்த சிலர், அந்தக் கைப்பையைப் பெற நடத்திய ஆர்ப்பாட்டம் கண்டு, அந்த நிறுவனத்தின் மேலாளரே அசந்துபோனார். பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பிறகு, சிலர் அவரை தனியே சந்தித்து தங்களுக்கு 'வெறும் தேநீர் உபசாரம்' போதாது என்று கூறினார்களாம்! அதன்படி அவர்களுக்கு மட்டும் மேற்படி உற்சாகபான விருந்து படைக்கப்பட்டது!

இந்த உற்சாகபானம் உள்ளே சென்றவர்கள் எங்கே தங்கள் நிறுவனத்தின் செய்தியை பத்திரிகை அலுவலகம் கொண்டுசென்று சேர்க்கப் போகிறார்கள் என்று அந்த நிறுவன மேலாளர் யோசிக்கவே இல்லை. எதற்கு வம்பு என்று, கேட்டபடி பணத்தை தண்ணீராய் (தண்ணீருக்கு) செலவழித்தார்.

நாட்டைக் காக்கும் நான்காம் தூணான பத்திரிகையாளர்களையும் லஞ்சம் அரிக்கத் துவங்கிவிட்டது என்று அந்த பத்திரிகையாள நண்பர் வருத்தத்துடன் சொன்னார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றால், அங்குள்ள ஐம்பது பேரில் முப்பது பேர் போலி பத்திரிகையாளர்களாகத் தான் இருக்கிறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

ஏதாவது ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லிக்கொண்டு, கட்டப்பஞ்சாயத்து முதல் தரகர் வேலை வரை பலர் செய்கிறார்கள். அவர்களுக்குத் தான் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முன்னுரிமை கொடுக்கிறார். எந்த நிகழ்விலும் இவர்களது ஆதிக்கமே அதிகம். ஆனால், இவர்கள் கொடுக்கும் செய்தி எந்தப் பத்திரிகையிலும் வெளிவருவதில்லை- என்று அவர் சொன்னார்.

ஈரோட்டில் நடந்தது...

ஈரோட்டில் முக்கிய பத்திரிகை ஒன்றில் பணிபுரியும் நிருபர் அவர். காலையில் எழுந்தவுடன் தான் பணியாற்றும் பத்திரிகையை பத்து பிரதிகள் வாங்கிக் கொள்வார். அதை எடுத்துக் கொண்டு, பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திகளில் தொடர்பு உள்ளவர்களை நேரில் சென்று பார்ப்பார். அநேகமாக அவர்கள் விழிப்பதே இவர் முகத்தில் தானாக இருக்கும். பிறகு, அந்நாளைய பத்திரிகையில் வந்துள்ள செய்தி, படத்தைக் காட்டுவார். அது பிரசுரமாக தான் பட்ட கஷ்டத்தை ஒரு நிமிடம் விளக்கிவிட்டு, தலையைச் சொறிவார். பிறகென்ன? அவர் எதிர்பார்த்து வந்தது (ஒரு செய்திக்கு ரூ. 500 மட்டுமே) கிடைத்தவுடன், அடுத்த நபரைக் காணக் கிளம்பி விடுவார்.

இந்த யாசக மூர்த்தி குறித்து அந்தப் பத்திரிகைக்கு தகவல் சொன்னாலும் கூட, பயனில்லை. ஏனென்றால், இதற்கு முன் இருந்தவர் இதைவிட வசூலித்தவராம். ஈரோட்டில் ஜவுளிச் சந்தையில் பணி புரியும் நண்பர் சொன்ன கதை இது.

எல்லா இடங்களிலும் நடப்பது...

இது தான் தற்போதைய பத்திரிகை உலகின் நிலை. ஒரு காலத்தில், பத்திரிகைகளில் பணிபுரிய ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இப்போதும் அதே நிலைதான். தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இத்துறைக்கு கிடைப்பதில்லை என்று சென்னையில் உள்ள மூத்த பத்திரிகையாளருமான எனது நண்பர் ஒருவர் வருத்தப்பட்டார். ஆனால், பித்தலாட்டப் பேர்வழிகளுக்கு இத்துறை எளிதில் கைவசமாகி விடுகிறது.

சமுதாயத்தில் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும் புகழும்-
பலரும் அஞ்சும் காவல்துறை, மற்றும் அரசு அதிகாரிகளிடம் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கும் மரியாதையும்- பெருத்த ஆசைக்காரர்களையே இத்துறைக்கு அதிகம் ஈர்த்துள்ளது. அல்லது, இத்துறையில் சேரும் நல்ல மனிதரும் கூட, கால ஓட்டத்தில் கரைந்து போலிகளுடன் சமரசம் செய்து கொள்கிறார்கள். ஊர் முழுவதும் அம்மணமாய்த் திரியும்போது கோவணம் கட்டியவன் கோமாளி தானே?

கையெழுத்திட லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், தீர்ப்பை மாற்றி எழுதும் நீதிபதிகள், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகள், பதுக்கி விலை ஏற்றும் வியாபாரிகள், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க கோடிகளைக் கேட்கும் மக்கள் பிரதிநிதிகள், காவல்நிலையத்தில் கற்பழிக்கும் காவலர்கள், விளம்பரம் தரும் நிறுவனமும் அரசும் என்ன குற்றம் செய்தாலும் கண்ணை மூடிக்கொள்ளும் பத்திரிகை நிறுவனங்கள்,.. என்று எல்லாத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள சீரழிவு ஊடகத் துறையிலும் படர்ந்திருப்பதை மாபெரும் குற்றம் என்று சொல்ல முடியாது தான்.

ஆனால், நாட்டு விடுதலைக்காக ஆங்கிலேயனை எதிர்த்து பல பத்திரிகைகளை நடத்திய மகாகவி பாரதி வாழ்ந்த மண்ணில் இந்த அவலங்கள் தொடரலாமா? மறுவேளை சோற்றுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலும், மாறுவேடத்தில் காவல்துறை ஒற்றர்கள் பின்தொடர்ந்த போதிலும், மனம் கலங்காமல், பராசக்தி மீது பாரத்தைப் போட்டுவிட்டு அவர் எழுதிய தமிழ் எழுத்துக்களின் மீதல்லவா தற்போதைய பத்திரிகை உலகம் நின்று கொண்டிருக்கிறது?

சுயநலனுக்காக கை ஏந்துவதும், பத்திரிகை பேரைச் சொல்லிக் கொண்டு வயிறு வளர்ப்பதும், அரசியல்வாதிகளை குளிரூட்டி காரியம் சாதிப்பதுமாக மாறிவிட்டது, நமது பத்திரிகை உலகம்.

அரசு வழங்கும் 3 சென்ட் இலவச நிலத்திற்காக மனசாட்சியை விற்க பத்திரிகையாளர்கள் தயாராவது அதைவிட கேவலம். இந்த நிலத்தைப் பெற கோவையில் பல பத்திரிகை அலுவலகங்களில் பயங்கரப் போட்டி நடந்ததாக அறிகிறபோது, மேலும் வருத்தம் ஏற்படுகிறது. செம்மொழி மாநாட்டின்போது, பத்திரிகையாளர்களை குஷிப்படுத்த தமிழக முதல்வர் அறிவித்த திட்டம் இது. இலங்கையில் கொல்லப்பட்ட லட்சக் கணக்கான சகோதர சகோதரிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலங்கள் நமது பத்திரிகையாளர்களுக்கு நினைவு வரவில்லையா?

நாட்டில் எங்கு அக்கிரமம் நடந்தாலும் தட்டிக் கேட்க பத்திரிகைகளும் ஊடகங்களும் உள்ளன என்று இன்னமும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகை உலகிலும் நேர்மையானவர்கள் பலர் பிழைக்கத் தெரியாமல், நாட்டுநலன் கருதி உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நாட்டிற்கு விடுதலையும், பத்திரிகை உலகுக்கு எளிய தமிழ்நடையும் வழங்கிச் சென்ற அந்த மகத்தான கவிஞன் பாரதியை நினைவில் கொண்டேனும், தற்போதைய 'press' காரர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மகாகவி பாரதியின் 89-வது நினைவுநாளான இன்று, பத்திரிகையாளர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் இது.
..

வியாழன், செப்டம்பர் 09, 2010

காவி தான் நம்ம நாட்டின் கலரு!

............(திரைப்படப் பாடல் மெட்டினில், .சி.க்குப் புரியும் வண்ணம் ஒரு பாடல்)

.
காவி தான் நம்ம நாட்டின் கலரு - வேறு
எந்தக் கலருக்கும் இல்லை காவியோட பவரு!
(காவிதான்)

வாழ்க்கையை அர்ப்பணித்த துறவுநிறம் காவிதான்!
வானப்பிரஸ்தர்களும் விரும்பும் நிறம் காவிதான்!
ஆலய உச்சியிலே…. அசையும் கொடி காவிதான்!
ஆசையை வெறுத்த புத்தர் ஆடைநிறம் காவிதான்!
தர்மம் காத்த சீக்கியரின்…
கால்சா கலரும் காவிதான்! கலக்கும் காவிதான்!
(காவிதான்)

பாரதப் போரினிலே பறந்த கொடியும் காவிதான்!
பாவலர் பெருமக்கள் உடுத்த துணியும் காவிதான்!
அஸ்வமேதக் குதிரையோடு…. சென்ற கொடியும் காவிதான்!
அன்னியரை வெற்றி கண்ட சிவா கொடியும் காவிதான்!
சேர, சோழ, பாண்டியரின்…
கொடியும் கூட காவிதான்! சிறந்த காவிதான்!
(காவிதான்)

அன்னச்சாலையிலே அசைந்தகொடி காவிதான்!
அர்ப்பண மனப்பான்மையின் அழகுநிறம் காவிதான்!
விஜயநகரம் கண்ட…..வீரர் கொடியும் காவிதான்!
விடுதலைப் போரினிலே வீரம் தந்த காவிதான்!
தேசியக் கொடியினுக்கே…
சிறப்பு சேர்க்கும் காவிதான்! ஜொலிக்கும் காவிதான்!
(காவிதான்)

உடலில் ஓடுகிற குருதிநிறம் காவிதான்!
உத்தமசீலர்களின் பிரியநிறம் காவிதான்!
அக்கினி ஜுவாலை போல… அசையும் நிறம் காவிதான்!
அசுத்தம் நீக்குகிற அருங்குணமும் அதுக்குத்தான்!
பாரத நாட்டினுக்கே…
பாரம்பரியம் காவிதான்! பளபளக்கும் காவிதான்!
(காவிதான்)
.
காவி தான் நம்ம நாட்டின் கலரு - வேறு
எந்தக் கலருக்கும் இல்லை காவியோட பவரு!
.
..................................................................................................................................
.

சனி, செப்டம்பர் 04, 2010

சம்பளத்தை உயர்த்திக்கொண்ட 'சாணக்கியர்கள்'...


'வறுமைக்கோடு' என்ற வார்த்தை அரசியலில் பிரபலம். அதென்ன வறுமைக்கோடு? மாத வருமானம் ரூ. 1,410 க்கு கீழ் இருப்பவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் என்று உலக வங்கி இலக்கணம் நிர்ணயித்திருக்கிறது. இந்த வருமானம் ஒரு குடும்பத்தை நடத்த தற்காலத்தில் போதாதது. எனவே இது வறுமைக்கோடாகிறது.

இதையும் இந்திய அரசு குறைத்துள்ளது. மாதம் 25 நாட்களுக்கு ரூ. 50 என்ற குறைந்தபட்ச சம்பளம் ஈட்டுபவர்கள் (மாதம் ரூ. 1,250 ) வறுமைக்கோட்டுக்கு கீழ் வர மாட்டார்கள். இந்த அடிப்படையில் தான் பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட வறுமை ஒழிப்பு திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

உண்மையில், மாதம் ரூ. 500 கூட சம்பாதிக்க முடியாத பரிதாப வறுமையில் உழல்வோரின் எண்ணிக்கை இந்தியாவில் பல கோடி. இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? ஆந்திரத்தில் எலிக்கறியை உணவாகக் கொண்ட விவசாயிகளின் கதைகளை நாம் அறிவோம். தொழில் நசியும் இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து கஞ்சி வார்க்கும் காட்சிகளும் நம் நாட்டில் ஆங்காங்கே தென்படுகின்றன.

இந்த நிலைமைக்கு காரணம் என்ன? ஆங்கிலேயன் நம்மை ஆண்டபோது நமது செல்வ வளங்கள் சுரண்டப்பட்டன. அதனால் பஞ்சம் தலை விரித்தாடியது. இப்போது சுதந்திர பாரத அரசு தானே மக்களை ஆள்கிறது? மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் தானே நம்மை ஆள்கிறார்கள்? இப்போதும் அதே பஞ்சமும் நோயும் நம் மெய்யடியார்க்குத் தொடர்கிறதே, ஏன்?

அண்மையில், தங்கள் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள நாடாளுமன்றத்தில் நமது மக்கள் பிரதிநிதிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களைக் கண்ட எவரும், நமது ஏழ்மையின் காரணத்தை புரிந்துகொள்வார்கள். எந்த மக்களைக் காப்பதாக பிரமாணம் எடுத்து எம்.பி.க்களாக சென்றார்களோ, அந்த மக்களை மறந்துவிட்டு, தங்கள் சம்பளத்தை உயர்த்த இரண்டு நாட்கள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்தார்கள், நமது மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள்.

ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயி, தனக்கு ஒரு மூட்டை நெல் கிடைத்தால் போதும் என்று கருத மாட்டான். விதைநெல்லை விதைத்தால் தான் அறுவடை செய்ய முடியும்; விவசாயம் செய்ய முடியும்; அப்போது தான் உலகை வாழவைத்து தானும் வாழ முடியும் என்பதை பாமர விவசாயி உணர்ந்திருக்கிறான். நாட்டைக் காப்பதாக முழங்கும் பிரதிநிதிகளோ, தங்களுக்கு சம்பளம் கிடைத்தால் போதும் என்று போராடி, தங்களுக்கு தாங்களே ஊதியத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.பி.க்களின் மாத சம்பளம் படிகளுடன் சேர்த்து ரூ. 1.40 லட்சத்தை எட்டிவிட்டது. இனி நாட்டில் எங்கும் வறுமை இருக்காது. மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் வாசித்துக் கொள்ளலாம். ஏற்கனவே எம்.பி.க்கள் எங்கு சென்றாலும் வாகன ஊர்வலம் பின்தொடரும். இனி அந்த வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்திக் கொள்ளலாம். கிழிந்த வேட்டியை மறைத்தபடி கும்பிடு போட, மக்கள் அப்போதும் முன்வருவார்கள்.

சம்பள கமிஷன் படுத்திய பாடு:

சென்ற ஆண்டு ஆறாவது சம்பள கமிஷன் தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்தது. அரசு ஊழியர்களின் ஊதியத்தை எந்த அளவுக்கு உயர்த்தலாம என்பதற்கான மதிப்பீட்டு பரிந்துரை அது. விலைவாசி உயர்வு காரணமாக, அரசு ஊழியர்களுக்கு கணிசமாக சம்பளத்தை உயர்த்த ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்தது.

அரசின் முதுகெலும்பான ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திராத கட்சிகள் தேர்தலில் வெல்ல முடிவதில்லை. எனவே சம்பள கமிஷன் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றது. அதன் விளைவாக கீழ்நிலை அலுவலக உதவியாளர் கூட, படிகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டது. உயர்நிலை அதிகாரிகளும் ரூ. ஒரு லட்சம் வரை ஊதியம் பெற்றனர்.

மத்திய அரசைத் தொடர்ந்து, மாநில அரசுகளும் மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தின. விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட இந்த அரசு ஊழியர் சம்பளப் பெருக்கமே, உண்மையில் நாட்டில் விலைவாசி உயர்வுக்கு மேலும் காரணமானது.

நாட்டின் பணவீக்கத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் வித்திட்ட அரசு ஊழியர் சம்பள உயர்வு, மக்கள் பிரதிநிதிகளின் கண்களையும் உறுத்தியது. தங்களுக்கு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு குறைவாக (ரூ. 14,000 ) வாங்குவது எம்.பி.க்களுக்கே அவமானமாகிவிட்டது. எனவே தங்கள் சம்பளத்தை உயர்த்த கொடி பிடித்தார்கள். பக்கவாட்டில் எத்தனை வருமானம் வந்தாலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் வருமானத்தைத் தானே கணக்கில் காட்ட முடியும்?

ஒருவகையில் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையில் நியாயம் இருந்தது. முன் எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தையே தொடர்ந்து வாங்க வேண்டும் என்பது ஏற்க முடியாத ஒன்றே. ஆனால், தங்கள் சம்பளத்தை உயர்த்த அவர்கள் கையாண்ட வழிமுறை சற்றும் நியாயம் இல்லாதது.

ஏற்கனவே அற்ப அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிலைகுலையச் செய்யப்படும் நிலையில், சம்பளத்தை உயர்த்துவதற்காக எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள். தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அதே வழிமுறையான, நாடாளுமன்றத்தை நிலைகுலையச் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். இதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றார்கள். இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி இருந்தார்கள்.

ஆசைக்கு அளவில்லை...

எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக, மத்திய அரசு இறங்கி வந்தது. எம்.பி.க்களின் மாத சம்பளத்தை ரூ. 14,000 த்திலிருந்து ரூ. 50,000 ஆக உயர்த்துவதாக அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. தவிர, எம்.பி.க்களின் மாதாந்திர அலுவலகப் படியை ரூ. 20,000 த்திலிருந்து ரூ. 40,000 ஆக அரசு உயர்த்தியது. எம்.பி.க்களின் தொகுதிப்படியும் ரூ. 20,000 த்திலிருந்து ரூ. 40,000 ஆக உயர்த்தப்பட்டது. இது 300 சதவிகித சம்பள உயர்வாகும்.

ஆனால், இதனை எம்.பி.க்கள் ஏற்கவில்லை. தங்களுக்கு கீழ் பணி புரியும் அரசு செயலாளர் கூட மாதம் ரூ. 80,000 சம்பளம் வாங்குகையில், அவர்களைவிட ஒரு ரூபாயாவது அதிகமாக தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அதாவது ஐந்து மடங்கு ஊதிய உயர்வை அவர்கள் எதிர்பார்த்தார்கள். சம்பள உயர்வு குறித்து தங்களிடம் ஆலோசிக்காமல் அமைச்சர் அறிவித்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இதன் விளைவாக ஏற்பட்ட அமளியை அடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது மைய மண்டபத்தில், ஒத்திகை நாடாளுமன்றத்தை நடத்திய எம்.பி.க்கள், சம்பள உயர்வு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இந்த ஒத்திகை நாடாளுமன்றத்தின் இணை பிரதமர்களாக, லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோரும், துணைத் தலைவராக அனந்தகுமாரும் செயல்பட்டார்கள்! இடதுசாரி எம்.பி.க்கள் தவிர அனைத்து எம்.பி.க்களும் இதில் பங்கேற்று உரிமைக்கு குரல் கொடுத்தார்கள்.

எம்.பி.க்களின் போராட்டம் குறித்து கட்சித் தலைவர்கள் அத்வானி, சரத் யாதவ், நிதிஷ் குமார், பிருந்தா காரத் ஆகியோர் கவலை தெரிவித்தார்கள். இந்த வழிமுறை ஏற்புடையது அல்ல என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அதற்குள், அரசும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. சம்பளத்தை ரூ. 50,000 க்கு மேல் உயர்த்த முடியாது என்ற அரசு, எம்.பி.க்களின் மாதாந்திர அலுவலகப் படி, தொகுதிப் படிகளை தலா ரூ. 5,000 உயர்த்த சம்மதித்தது. ஆக மொத்தத்தில், ஒவ்வொரு எம்.பி.யும் ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாத சம்பளம் பெறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவும் போதாது என்று நமது மாண்புமிகு பிரதிநிதிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பல சலுகைகள்:

எம்.பி.க்கள் பெறும் மாத சம்பளம் மட்டுமே ரூ. 1.40 லட்சம். இது தவிர, மேலும் பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு. எம்.பி.க்கள் வாகனம் வாங்க இதுவரை வழங்கப்பட்ட ரூ. ஒரு லட்சம் வட்டியில்லாக் கடனுதவி, ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாலை வழியாக பயணம் மேற்கொள்ளும் எம்.பி.க்களின் வாகனப் படியும், கி.மீ.க்கு ரூ. 13 இலிருந்து ரூ. 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் மட்டுமல்லாது, அவர்களின் மனைவி அல்லது கணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விமானங்களில் முதல்வகுப்பில் பயணம் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில் பயணங்களில் எம்.பி.க்களுக்கு சலுகை உள்ளது. இதெல்லாம் போதாது என்று, எம்.பி.க்களின் மாதாந்திர ஓய்வூதியமும் ரூ. 8,000 லிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் ஊதிய உயர்வைக் கண்டு இதேபோன்ற ஊதிய உயர்வு வழங்குமாறு டில்லி சட்டசபையிலும், டில்லி மாநகர் மன்றத்திலும் தற்போது குரல்கள் எழுந்துள்ளன. இதை ஏற்று, டில்லி சட்டசபையில் எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை 200 சதவிகிதம் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துவிட்டது. இதே போன்ற கோரிக்கைகள் இனிவரும் காலங்களில், அனைத்து மாநில சட்டசபைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் எழுப்பப்படலாம்.

அரசியலை சமுதாய சேவையாக ஏற்று, தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாட்டுக்காக போராடிய பலர் மக்கள் பிரதிநிதிகளாக வீற்றிருந்த அதே நாடாளுமன்றத்தில், தங்கள் சம்பளத்தை உயர்த்த சுயநல பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் தார்மிக வீழ்ச்சிக்கு இதைவிட வேறு மோசமான அடையாளம் தேவையில்லை.

ஊழல் குறையுமா?

எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதால், அவர்கள் ஊழலில் ஈடுபடுவது குறையும் என்பது சிலரது வாதமாக உள்ளது. இது சாத்தியம் தானா?

ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களின் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்பட்டபோதிலும், லஞ்சம் வாங்கி சிக்கும் உயர் அதிகாரிகள் முகத்தை மூடியபடி கைதாகிச் செல்வதைக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். சம்பளம் உயர்ந்துவிட்டதால், அரசு அலுவலகங்களில் லஞ்சமும் ஊழலும் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஒரு ஜாதிச் சான்றிதழுக்காக வட்டாட்சியர் அலுவலகம் சென்றாலே இந்த உண்மையை உணர முடியும்.

உண்மையில், இந்த சம்பள உயர்வு, அரசு ஊழியர்களை மேலும் செலவாளிகளாக்கி, அவர்களது பணத்தாசையை அதிகரித்துள்ளது. எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் பரிகசிக்கப்படும் நிலையையே ஆறாவது சம்பள கமிஷன் ஏற்படுத்தியுள்ளது. சேரச் சேர, மேலும் சேர்க்கத் தூண்டுவது பணத்தின் இயல்பு. இதற்கு அரசு அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ விதிவிலக்கில்லை.

இடைத் தரகர்களாக மாறிவரும் மக்கள் பிரதிநிதிகளின் மனப்போக்கை மாற்றும் மருந்தாக இந்த சம்பள உயர்வு இருக்கப் போவதில்லை. இந்த சம்பளத்தை விட பல நூறு மடங்கு சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள், நமது மாண்புமிகு பிரதிநிதிகள். பினாமி பெயரில் சேர்க்கப்படும் சொத்துக்கள் இல்லாத பிரதிநிதி, மக்களாலேயே இப்போது பிழைக்கத் தெரியாதவராகத் தான் பார்க்கப்படுகிறார். ஒரு ஓட்டுக்கு ரூ. 5,000 விலை பேசப்படும் காலத்தில், இந்த 'துக்குனியூண்டு' சம்பள உயர்வு, எம்.பி.க்களைப் பொருத்த வரை, யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே இருக்கும்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கும் எம்.பி.க்கள் தலைமுறையில் நாம் வாழ்கிறோம். தொங்கு நாடாளுமன்ற காலகட்டத்தில் நல்ல விலைக்குப் போகும் எம்.பி.க்களை நரசிம்ம ராவ் காலத்திலேயே பார்த்துவிட்டோம். எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி எவ்வாறெல்லாம் சுய மேம்பாட்டு நிதியாக மாறுகிறது என்பதும் நாம் அறிந்தது தான். இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் சம்பள உயர்வு ஊழலை ஒழித்துவிடும் என்று எண்ணினால் அது பகல் கனவாகவே இருக்கும்.

இது தான் மக்களாட்சியா?

இதில் வேதனை என்னவென்றால், எம்.பி.க்களின் சம்பள உயர்வை அவர்களே தீர்மானித்திருப்பது தான். ஆறாவது சம்பள கமிஷன் போல, எம்.பி.க்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரையை நீதித்துறை, நிர்வாகத் துறையில் அனுபவம் மிக்கவர்கள் பரிசீலித்து, பிறகு முடிவு அறிவிக்கப் பட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும். அதற்கு மாறாக, சட்டத்தை உருவாக்குபவர்களே, சட்டத்தின் மாட்சியை மீறும் வகையில், சுயநலத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள். இந்நிலை ஏற்கத் தக்கதல்ல.

நாட்டின் மக்கள் படும் அவலம் கண்டு உள்ளம் உருகுபவர்களே மக்கள் பிரதிநிதிகளாக தகுதி படைத்தவர்கள். நாட்டின் கடைக்கோடியில், கந்தல் உடையுடன் ஒருவேளை உணவுடன், இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வாழும் அந்த எளிய மனிதனை நினைத்துப் பார்த்து, மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். ஜாதியும் மதமும், சுயநல அரசியலும் கொலு வீற்றிருக்கும் இக் காலகட்டத்தில், இது சாத்தியமில்லை என்று பலர் நினைக்கலாம். அவர்களுக்காகவே வாழ்ந்துகாட்டி மறைந்திருக்கிறார், மகாத்மா காந்தி. அவரை, ‘சம்பளமாக வழங்கப்படும்’ ரூபாய் நோட்டுகளில் மட்டும் தரிசித்தால் போதாது.

சம்பளத்தை உயர்த்திகொள்வது சாணக்கியம் ஆகிவிடாது. வீடு முழுவதும் கம்பளிகள் குவிந்திருந்த போதும், மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுவதை தான் பயன்படுத்தக் கூடாது என்று கூறி, வெறும் தரையில் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்த சாணக்கியன் அமைச்சனாக நாட்டை வழிநடத்திய மண் இது. அவரால் தான் மகத்தான மகத சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது. சுயநலவாதிகளால் அத்தகைய சாதனைகளைப் படைக்க முடியாது.

உலகிலேயே அதிக ஏழைகள் (45.60 கோடி பேர்) வாழும் நாடு இந்தியா என்று உலக வங்கி சொல்கிறது. இது நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவிகிதம். இந்திய அரசின் புள்ளிவிபரமோ, நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 26 கோடி என்று கூறுகிறது. புள்ளிவிபரங்கள் மாறுபடலாம். ஆனால், நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை மாறவில்லை. இவர்களுக்கு நாடு என்ன செய்யப்போகிறது? இவர்களுக்கு சேவகம் செய்யவே மக்கள் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்து நாடாள அனுப்புகிறோம். இதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

-------------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி

பெறற்கரிய பேறு...

எம்.பி.க்களின் மாத சம்பளம்: ரூ. 50,000
மாதாந்திர தொகுதிப் படி: ரூ. 45,000
மாதாந்திர அலுவலகப் படி: ரூ. 45,000
மொத்தம்: ரூ. 1.40 லட்சம்.
பிற சலுகைகள்:
வாகனம் வாங்க வட்டியில்லா கடன்: ரூ. 4 லட்சம்
சாலைப் பயணத்திற்கு வாகனப் படி: ரூ. 16 / கி.மீ.
நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் நாட்களில் தனி படி.
விமானத்தில் துணைவருடன் முதல் வகுப்பு பயணம்
ரயில் பயணத்திலும் சலுகைகள்
மாதாந்திர ஓய்வூதியம்: ரூ. 20,000 .

-------------------------------------------------------------------------------------
நன்றி: விஜயபாரதம் (10.09.2010)

.

வெள்ளி, செப்டம்பர் 03, 2010

'காவி' தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

பரம்பரை காரணமாகவோ, கண்ணிலோ நரம்புகளிலோ கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவோ, மனிதர்களுக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களால், சில நிறங்களை பகுத்தறிய முடிவதில்லை. அதாவது நீல நிறம் சிலருக்கு நீல நிறமாகத் தோன்றாமல் போகலாம். சிலருக்கு பச்சை நிறம் கூட காவி நிறமாகவே தெரியும்.
- மருத்துவ என்சைக்ளோபீடியா- விலிருந்து.
-------------------------------------------------------------------------------------
கடந்த வாரம் (ஆக. 25 ) புதுதில்லியில் நடந்த, மாநில காவல்துறை தலைவர்கள் (டி.ஜி.பி) மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ''நாட்டில் காவி பயங்கரவாதம் (saffron terrorism) புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காவி பயங்கரவாதம் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய- உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் சிதம்பரம் இவ்வாறு பேசி இருப்பது பலத்த கண்டனங்களை உருவாக்கி உள்ளது. தனது பேச்சுக்கு அவர் வேறு எந்த ஆதாரமும் காட்டவில்லை. போகிற போக்கில் காவி பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்டு, தனது மேதாவித் தனத்தையும் இத்தாலி அம்மையாரிடம் தனது விசுவாசத்தையும் காட்டியிருக்கிறார், ப.சி.

இது காவல்துறையை தவறாக வழிநடத்தவே என்பது வெளிப்படை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பல முனைகளிலும் (விலைவாசி உயர்வு, வெளிநாட்டுக் கொள்கையில் தோல்வி, எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் அலட்சியம், அண்டை நாடுகளுடன் நட்புறவில் பாதிப்பு, கட்டுங்கடங்காத ஊழல், இன்னும் பல) பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்துவரும் நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்ப ப.சி. வீசிய கல்லாகவே இந்த புகார், தோற்றம் அளிக்கிறது.

எதிர்பார்த்தது போலவே, நாடு முழுவதும் ப.சி.பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் மூலமாக, ஊடகங்களின் கவனத்தைப் பெற்று, மத்திய அரசில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை ப.சி. இனம் காட்டிக் கொண்டுள்ளார். ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், தமிழகத்தின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் போன்றோர் இதே விளையாட்டை இதற்கு முன் பலமுறை ஆடியிருக்கிறார்கள். சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இஸ்லாமிய வெறியர்கள் குண்டுவைத்து தகர்த்தபோது (08 .08 .1993 ) சற்றும் கூச்சமில்லாமல், ‘இந்த குண்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே வைத்திருக்கக் கூடும்’ என்று வக்கணை பேசியவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். 2008 - ல் நாட்டில் ஹிந்து பயங்கரவாதம் பரவுவதாக அங்கலாய்த்தவர் திக்விஜய் சிங். அவர் வழிவந்த ப.சி.யும் அதே பாதையில் பயணிக்கிறார்.

ப.சி. யாரையும் தனது உரையில் குறிப்பிடவில்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளை குறிவைத்தே அவர் பேசி இருக்கிறார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சுரேஷ்ராவ் ஜோஷி கண்டனம் தெரிவத்தார். ''உள்துறை அமைச்சரின் பேச்சு, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வன்மமான முயற்சி'' என்று அவர் கண்டித்தார்.

ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளரான ராம் மாதவ், ''துணிவிருந்தால், காவி பயங்கரவாதம் என்றால் என்ன என்று ப.சி. தெளிவாக விளக்க வேண்டும். போகிற போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிக்கக் கூடாது'' என்று காட்டமாக விமர்சித்தார் .

பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும். ப.சி.யின் பிதற்றலை கடுமையாக விமர்சித்தது. அக்கட்சி, பொது நிகழ்வுகளிலும் நாடாளுமன்றத்திலும், ப.சி.யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. ''காவி நிறம் நமது நாட்டின் பாரம்பரிய சின்னம். அதை எப்படி ப.சி. மாசுபடுத்தலாம்? அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும்'' என்று கோரினார் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான பல்பீர் புஞ்ச்.

ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது. அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஜனார்த்தன் த்விவேதி, ''பயங்கரவாதத்திற்கு எந்த நிறமும் கிடையாது. அதன் உண்மையான நிறம் கருப்பு மட்டுமே. எந்த வடிவில் இருந்தாலும் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும்'' என்றதுடன், '' பாரதத்தின் பாரம்பரியத்திலும், சுதந்திரப் போராட்டக் காலத்திலும் காவி நிறத்திற்கு நிரந்தர இடமுண்டு. யாரும் வார்த்தைகளை பிரயோகிக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்'' என்று ப.சி.க்கு அறிவுரை வழங்கினார்.

பா.ஜ.க.வின் உ.பி. மாநிலத் தலைவாரன் கல்ராஜ் மிஸ்ரா, ''காவி பயங்கரவாதம் என்ற பெயரில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது'' என்று கண்டித்தார். பா.ஜ.க.வின் அகில பாரதத் தலைவரான நிதின் கட்கரியோ, '' ஓட்டுவங்கிக்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை ப.சி.பேச்சு நிரூபித்துள்ளது. சிறுபான்மையினரை குஷிப்படுத்த வேண்டும்; தாஜா செய்ய வேண்டும் என்பதே அக்கட்சியின் ஒரே நோக்கம். அதன் தொடர்ச்சியே இது'' என்று குற்றம் சாட்டினார்.

இவ்விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. பா.ஜ.க, சிவசேனை கட்சியினர், அமைச்சர் ப.சி. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ''ப.சி.யின் பேச்சு, நாடாளுமன்ற அவையில் உள்ள பல உறுப்பினர்களை ஜாடையாக தாக்குகிறது. இந்தப் பேச்சால் அவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் மனம் புண்பட்டுள்ளது'' என்று மாநிலங்களவையில் அருண் ஜேட்லி பேசினார். வழக்கம்போல, மார்க்சிஸ்ட் கட்சியினரும் லாலு கட்சியினரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியை ஆதரித்தனர். திங்கள் கிழமையும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது.

நிலைமை சிக்கலாவதை உணர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும், அவர் பங்குக்கு, 'பயங்கரவாதத்திற்கு எந்த நிறமும் கிடையாது'' என்று மழுப்பினார். அதே சமயம் ''நாட்டில் சில இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது'' என்று வழக்கமான பிலாக்கனத்தைப் பாடினார்.

தங்களது இந்தப் பேச்சுக்கு பின்னணியில், மகாராஷ்டிராவின் மாலேகான் (செப். 2006), சம்ஜாதா எக்ஸ்ப்ரஸ் ரயில் (பிப். 2007), ஆந்திராவின் ஐதராபாத் மசூதி (மே 2007), ராஜஸ்தானின் ஆஜ்மீர் தர்கா (அக். 2007 ), குஜராத்தின் மொடாசா (செப். 2008), ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை காங்கிரஸ் கட்சியினர் காரணமாகக் காட்டுகின்றனர். உண்மை என்ன? இதற்கு, சில முன் நிகழ்வுகளுக்கு நாம் செல்ல வேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்பு:

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகிலுள்ள சிறு நகரம் மாலேகான். இங்கு, 2006 , செப். 8 -ம் தேதி பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரம் தொடர்பாக 'சிமி' என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பது ஆரம்பத்தில் தெரிய வந்தது.

ஆனால், சில நாட்களில் விசாரணையின் திசை மாற்றப்பட்டு, அபிநவ பாரத சங்கம் (வீர் சாவர்க்கர் விடுதலைப் போராட்டக் காலத்தில் நடத்திய அமைப்பு) இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெண்துறவி பிரக்யா சிங் தாகுர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்.கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கே, ஹிந்து பயங்கரவாதம் குறித்த கட்டுக்கக்தைகள் பரவக் காரணமானது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க நிர்பந்திக்கப்பட்டனர். உண்மையான குண்டுவெடிப்பு குற்றவாளிகளைத் தவிர்த்த காவல்துறை, பெண் துறவியையும் முன்னாள் ராணுவ அதிகாரிகளையும் வழக்கில் குற்றம் சாட்டியது. இது ஏற்கனவே நாட்டில் மத துவேஷத்தைப் பரப்பிவரும் இஸ்லாமிய வெறியர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அவர்களுக்கு நமது 'மதசார்பற்ற' ஊடகங்களும் பேருதவி செய்தன.

இவ்வழக்கில் இன்னும் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் இப்போதைக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மட்டுமே. இவர்கள் இதனை மறுத்து வருகின்றனர். இவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் மகாராஷ்டிரா காவல்துறை திணறி வருகிறது. இதுவரை மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் உறுதியான எந்த ஆதாரமும் அபிநவ பாரத சங்கம் மீது காட்டப்படவில்லை. ஆனால், இந்த வழக்கைக் காட்டியே நாட்டில் ஹிந்து தீவிரவாதம் பரவி வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சம்ஜாதா ரயிலில் 2007 பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பிலும் அபிநவ பாரத சங்கத்திற்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் கொடூரமான ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. இதில் 68 பேர் பலியாகினர்; 200 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சதியில் லஸ்கர்-எ-தொய்பா அமைப்பும் அல்-குவைதா அமைப்பும் தொடர்பு கொண்டிருப்பதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தகவல் அளித்தது. அண்மையில் அமெரிக்காவில் சிக்கிய டேவிட் ஹெட்லியும் தனது வாக்குமூலத்தில் இது தொடர்பான தகவல்களைக் கூறியுள்ளதாக தகவல். ஆனால், உண்மைக் குற்றவாளிகளைத் தவிர்த்து, இவ்வழக்கிலும் பெண்துறவி பிரக்யா சிங் தாகுர் சேர்க்கப்பட்டார்.

இதே போல, 2007 மே மாதம் ஐதராபாத் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பு (இதிலும் துவக்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் கைது செய்யப்பட்டு, பிறகு பல்வேறு நிர்பந்தங்களால் விடுவிக்கப்பட்டனர்), 2007 அக்டோபரில் ஆஜ்மீர் தர்கா அருகில் நடந்த குண்டுவெடிப்பு, 2008 செப்டம்பரில் குஜராத்தின் மொடாசாவில் நடந்த குண்டுவெடிப்புகளிலும் அபிநவ பாரத சங்கம் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்பு இல்லை. என்றபோதும், குண்டுவெடிப்பு குற்றவாளிகளைத் தப்பவிட்டுvவிட்டு, அப்பாவி ஹிந்துக்களையும் முன்னாள் ராணுவ அதிகாரிகளையும் கைது செய்துள்ளதை ஆர்.எஸ்.எஸ். கண்டித்து வருகிறது. எனவே தான், அபிநவ பாரத சங்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். இணைத்துப் பேசப்படுகிறது.

சிறைக்குள் உள்ளவர்கள் எப்படி அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளில் ஈடுபடுவார்கள் என்ற சாதாரண ஞானமும் கூட இல்லாமல், காங்கிரஸ் காரர்களால் வழிநடத்தப்படும் காவல்துறையினர், பிரக்யா சிங் தாகுர் உள்ளிட்டோர் மீது வழக்குகளை தொடர்ந்து தொடுத்து வருகின்றனர். அதே சமயம் உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர். என்.டி.டி.வி. போன்ற சில ஊடகங்கள், தங்கள் வழக்கமான ஹிந்து விரோத பிரசாரத்திற்கு கிடைத்த அவலாக இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கின. ' காவி பயங்கரவாதம் ' என்ற வார்த்தையே என்.டி.டி.வி.யால் உற்பத்தி செய்யப்பட்டது தான்.

உண்மையில், அபிநவ பாரத் சங்கம் மீதான குண்டுவெடிப்பு வழக்குகள் புனையப்பட்டவையாகவே (fabricated ) காணப்படுகின்றன. கர்நாடகத்தின் பெங்களூரு நகரில் நடந்த குண்டுவெடிப்புகளில் கேரளத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்ய முயற்சி நடந்தபோது கேரளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குற்றம் சாட்டப்பட்டதாலேயே மதானி குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்று முஸ்லிம் அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

இன்று, தமிழகத்திலும் கூட, மதானி கைதுக்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றன. இதே முஸ்லிம் அமைப்புகளும் காங்கிரஸ் கட்சியும் தான், எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத அபிநவ பாரத சங்கத்தைக் காரணம் காட்டி, நாட்டில் காவி பயங்கரவாதம் பரவி வருவதாக பிரசாரம் செய்கின்றன.

தமிழகத்தில் பல இடங்களில் குண்டு வைத்தவர்கள், மகா யோக்கியர்கள் போல, 'காணீர்... ஹிந்து பயங்கரவாதத்தின் கோர முகத்தை' என்று இதே தமிழகத்தின் பல பகுதிகளில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்குத் தான், ப.சி.யின் பேச்சு உதவியுள்ளது. குண்டு வைத்தவர்கள் உபதேசம் செய்வதும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டப்படுவதும், உலகில் வேறு எங்கும் காணாத புதுமை. அது நம் நாட்டில் தான் நிகழ முடியும். ஹிந்துக்கள் ப.சி. கூறுவதுபோல குண்டு வைப்பவர்களாக இருந்திருந்தால், யாரும் இவ்வாறு ஹிந்துக்களுக்கு 'பட்டம்' சூட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அந்தக் காலத்திலிருந்து (அதாவது நேரு காலத்திலிருந்து) இன்றுவரை காங்கிரஸ் தன போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இக்கட்சியின் சுயநல நடத்தையால் தான் நாடு துண்டானது. தற்போதும், நாட்டின் பல பகுதிகளில் பிரிவினை வாதம் தலைதூக்கியிருக்கிறது. காங்கிரஸ் திருந்தப் போவதில்லை என்பதையே ப.சி.யின் பேச்சு நிரூபித்திருக்கிறது.

நாட்டின் மீது நேசம் கொண்டவர்கள், இத்தகைய கிறுக்குத்தனமான பிதற்றல்களைக் கண்டும்காணாமல் இருந்துவிடக் கூடாது. நம்மால் இயன்ற முறைகளில், இத்தகைய பிதற்றல்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அப்போது தான் நிறக்குருடு நோயால் பாதிக்கப்பட்ட அரசியவாதிகளிடமிருந்து நமது நாட்டை நம்மால் காக்க முடியும்.

--------------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி- 1

சிதம்பரத்திற்கு மூன்று கேள்விகள்:

* நாகலாந்தில் கிறிஸ்தவ பாதிரியார்களின் ஆதரவுடன் நடத்தப்படும் பிரிவினைவாதப் பிரசாரத்தையும், அங்கு நடக்கும் வன்முறைகளையும், வெள்ளைநிற (அது தான் கிறிஸ்தவர்களின் நிறமாம்!) பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?

* நாட்டின் பல மாநிலங்களில் தலைவிரித்தாடும் நக்சல் பாதிப்பு பகுதிகளில் சிவப்பு (அது தான் உங்கள் பாணியில் மாவோயிஸ்ட்களின் நிறம்) பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதையும் சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?

* காஷ்மீரில் கல்லெறிந்தே பாதுகாப்புப் படையினர் பல்லாயிரம் பேரை படுகாயப்படுத்திய பாக். ஆதரவு கும்பல்களை பச்சை பயங்கரவாதிகள் என்று கூறும் துணிவு உங்களுக்கு உண்டா?
-------------------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி- 2


நிறத்தை மாற்றுவதும் லாபம் தான்!

இந்தச் செய்திக்கும் கட்டுரைக்கும் எந்த நேரடியான தொடர்பும் இல்லை. அரசுடமையாக்கப்பட்ட ஒரு தேசிய வங்கி அது. அதன் லோகோ அண்மையில் மாற்றப்பட்டது. எனவே, உலகம் முழுவதும் அந்த வங்கியின் பெயர்ப்பலகைகள் மாற்றப்பட வேண்டியதாயிற்று. அதற்கான பணி ஒப்பந்தம் முக்கிய மத்திய அமைச்சர் ஒருவரின் இளவலுக்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் தான்... ரூ. 800 கோடி மட்டுமே! வங்கியின் பெயர்ப்பலகையின் நிறத்தை மாற்றுவதற்குத் தான் இந்த செலவு! ஒப்பந்தத்தைப் பெற்றவர் யார் என்று கேட்காதீர்கள். அது ....... ரகசியம்!
----------------------------------------------------------------------------------------------
.