திங்கள், மார்ச் 05, 2012

சுதேசி விழிப்புணர்வு இயக்கம்- பாத யாத்திரை ஏன்?


சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் தமிழகப் பிரிவு மார்ச் 5ல் (இன்று) கோவையில் துவங்கி ஏபரல் 5ல் சென்னையில் முடிவடையும் வண்ணம், விழிப்புணர்வு பாத யாத்திரையை நடத்துகிறது. அதையொட்டி வெளியாகும் கட்டுரை இது...

87 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சரித்திர நிகழ்வு அது. சாமானிய மக்கள் சாதாரணமாக உபயோகப்படுத்தும் உப்பின் மீது ஆங்கிலேய அரசு விதித்திருந்த வரியை எதிர்த்து, உப்பு சட்டத்தை விலக்கக் கோரி, குஜராத் மாநிலத்தில் தண்டி கடற்கரையை நோக்கி சமர்மதி ஆசிரமத்திலிருந்து பாதயாத்திரையாகக் கிளம்பினார் மகாத்மா காந்தி. அவரது அடியொற்றி நாடு முழுவதும் பல இடங்களில்உப்பு சத்யாக்கிரகம் எனப்படும் அறவழிப் போராட்டங்கள் நடந்தன. ஆங்கிலேய அரசு ஆரம்பத்தில் இதனை சாதாரணமாகவே கருதியது. ஆனால், அந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த வெகுமக்கள் ஆதரவு அரசை திகைக்கச் செய்தது. குண்டாந்தடியைப் பயன்படுத்தி இப்போராட்டத்தை நசுக்க பல இடங்களில் அரசு முயன்றது. ஆனால், சட்டத்தை மீறி மகாத்மா காந்தி கடற்கரையில் அள்ளிய ஒரு கைப்பிடி உப்பில், ஆங்கிலேய அரசுக்கு எதிரான மக்கள் கருத்துக்களின் ஒருங்கிணைப்பு வெளிப்பட்டது. பிற்பாடு இப்போராட்டம் சட்ட மறுப்பு இயக்கமாகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான கட்டமாகவும் அமைந்தது.

மார்ச் 12, 1930 ல் அந்த யாத்திரை துவங்கியது. இந்திய விடுதலைப் போரில் சாமானிய மக்களையும் இணைக்கச் செய்த மகாத்மா காந்தியின் இயக்க ஒருங்கிணைப்பாற்றலுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்த நிகழ்வு அது. கடந்த 2005 ல் இந்நிகழ்வின் 75 வது ஆண்டு நிறைவு விழா காங்கிரஸ் அரசால் கொண்டாடப்பட்டது. தண்டி யாத்திரையின் நினைவாக காங்கிரஸ் உயர் தலைவர்கள் மீண்டும் யாத்திரை சென்றனர். ஆனால், அரசியல் லாபங்களுக்கான நாடகமாகவே அது அமைந்தது. ஏனெனில், மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவில் எதனை செய்ய வேண்டும் என்று விரும்பினாரோ, அந்த கிராம முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் நமது அரசால் கைவிடப்பட்டுவிட்டது. சுதேசி தொழில் வளர்ச்சி, அரசியலில் தார்மிக நெறிகளின் தாக்கம் போன்ற பல கருத்துருக்களையும் மகாத்மா காந்தியுடனேயே சுதந்திர பாரத அரசு புதைத்துவிட்டது.

சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், நமது நாடு தற்போதுள்ள நிலையைக் காணும்போதே மகாத்மா காந்தியின் கனவுகளிலிருந்து நமது அரசுகள் எவ்வளவு தூரம் தடம் புரண்டுவிட்டன என்பது தெரிகிறது. கிராமங்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று மகாத்மா கூறினார். ஆனால், இன்றைய கிராமங்களோ விவசாயத்தைக் கைவிட்டு நகரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மக்களைக் கொண்டதாக உரு மாறி இருக்கின்றன. பாடுபடும் விவசாயிக்கு எந்தப் பலனும் இல்லாதபோது அவனால் எப்படி தொடர்ந்து அதில் ஈடுபட முடியும்? இடுபொருள் செலவு அதிகரிப்பு, விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்காதது, அடிப்படைத் தேவையான தண்ணீருக்கு பற்றாக்குறை, வாழ்வுக்கான உத்தரவாதமின்மை போன்ற காரணிகளால் விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இதற்குத் தீர்வு என்ன?

விவசாயம் காப்போம்:

இயற்கை உரமும் கையிருப்பில் வைத்திருந்த பாரம்பரிய வித்துக்களும் கொண்டு காலம் காலமாக விவசாயம் செய்துவந்த நமது விவசாயிகளைபசுமைப் புரட்சியின் பெயரால் செயற்கை உரங்களுக்கும் வீரிய ரக வித்துக்களுக்கும் இயந்திர மயமாக்கலுக்கும் அடிமையாக்கியது நமது அரசின் தவறு. இன்று மண் மலடாகிவிட்டது; எல்லா வித்துக்களுக்கும் பன்னாட்டு விதை நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நெருங்கி வருகிறது.

பாரம்பரிய விதைகளை அழிக்கும் மரபீனி மாற்றுப் பயிர்களுக்கான சட்டம் நமது அரசால் சத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவும், நமது விதைச் செல்வத்துக்கு ஆபத்தானதாகும். மரபீனி மாற்றுப் பயிர் ரகங்களைப் பயிரிடுவோர் விதைகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும். தவிர, இந்த பயிர் ரகங்களின் ஆரோக்கியத் தாக்கம் குறித்தும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியுள்ளது.

இயல்பான சாகுபடியில் பெற்ற அறுவடையில், போதும் என்ற மனத்துடன் வாழ்ந்த விவசாயிகளை அதிக சாகுபடி ஆசை காட்டி அவர்களது வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிட்டது அரசு. நமது நாடு குறு விவசாயிகளை அதிகமாகக் கொண்டது. குடும்பமே நாள் முழுவதும் உழைத்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற சூழலில், விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில், விளைபொருளுக்கு மதிப்பற்ற நிலையும், அவர்களை விவசாயத்தைக் கைவிடச் செய்கின்றன. அதன் விளைவையே, விவசாய நிலங்களில் உருவாகும் மனைப்பிரிவுகளாகக் காண்கிறோம். அரசு மீதும் நாடு மீதும் நம்பிக்கை இழந்ததால் தான் நிலத்தை விற்றுவிட்டுச் செல்கிறான் குடியானவன். இந்நிலைக்குத் தீர்வு காண்பது அவசியம்.

நீர்வளம் காப்போம்:

இந்நிலையில் விவசாயிக்கு சொந்தமான கிணற்று நீருக்கும் கூட வரி விதிக்க வகை செய்யும் தேசிய நீர்க் கொள்கையை தற்போதைய மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. கடந்த ஜனவரி 31 -ல் வெளியிடப்பட்ட வரைவு தேசிய நீர்க் கொள்கை குறித்த மக்களின் கருத்துக்களை பிப். 29 க்குள் அரசுக்கு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அது குறித்த எந்த விளம்பரமும் செய்யப்படவில்லை. மிக விரைவில், மக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுவிட்டதாகக் கூறி, இது சட்டமாக்கப்படலாம். தேசிய நீர்க் கொள்கை சட்டமாக்கப்படுமானால், நாட்டிலுள்ள அனைத்து நீர் வளங்களும் அரசு வசமாகும், அதன் பிறகு குடிநீர்த் தேவை தவிர பிற அனைத்து நீர்த் தேவைகளுக்கும் அளவுமானி பொருத்தி நீர்வரி விதிக்கப்படலாம். இந்த வரியை வசூலிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படலாம். உப்புக்கு விதித்த வரியை நீக்கக் கோரி மகாத்மா காந்தி போராட்டம் நடத்திய அதே மண்ணில், இப்போது தண்ணீருக்கும் வரி விதிக்கப்படப் போகிறது!

ஒருபுறம் நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைத்து, வறட்சியைப் போக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றமும் கூட கவலை தெரிவித்துள்ளது. ஆனால் அதுகுறித்து கவனம் கொடுக்காத மத்திய அரசு, நாட்டிலுள்ள அனைத்து நீர் வளத்தையும் பணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சட்டத்துக்கு சூழல் இயக்கங்களும் சுதேசி சிந்தனையுள்ள இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச் சட்டம் நிறைவேறாமல் தடுக்க வேண்டியது நமது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அவசியமானதாகும்.

தாகம் தீர்க்கும் தண்ணீர் இப்போதே குளிர்பானம் என்ற பெயரில் காசாகிக் கொண்டிருக்கிறது. சுத்தமான குடிநீரும் வர்த்தகப்பொருளாகிவிட்டது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத அரசுகளின் கையாலாகாத் தன்மையே தண்ணீர் விலைபொருளாகக் காரணம். ஒரு லிட்டர் பாலுக்கு விவசாயிக்குக் கிடைப்பது 20 ரூபாய் தான். ஆனால், ஒரு லிட்டர் தண்ணீரை 15 ரூபாய்க்கு விற்கும் விந்தை நிலையையும் நாம் காண்கிறோம். இந்த விபரீதமான ஏற்றத் தாழ்வுகளும், விந்தையான நிலைப்பாடுகளும் மாற்றப்பட வேண்டும்.

நிலவளம் காப்போம்:

ஒருபுறம் பொதுமக்களின் அடிப்படை ஆதாரமான தண்ணீருக்கு வரி விதிக்க முயற்சிக்கும் அரசு, பலகோடி மதிப்பிலான நமது கனிம வளங்களை மிகக் குறைந்த விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சத்தமின்றி வழங்கி வருகிறது. கனிமங்கள் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவை. ஆனால், அவற்றை நிலத்தடியில் இருந்து தோண்டி எடுக்கும் உரிமை மிகக் குறைந்த விலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்தும் சட்டம் தேவை என்று கடந்த பத்தாண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. நமது அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இதுவும் பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் நக்சல்கள் மக்கள் ஆதரவு பெறக் காரணமாகின்றது.

விவசாய நிலங்களை பொதுப்பணியைக் காரணம் காட்டி கையகப் படுத்தும் சட்டங்கள் விவசாயிகளின் அடிபப்டை ஆதாரத்திலேயே கைவைக்கின்றன. நெடுஞ்சாலை விஸ்தரிப்பு, விமான நிலைய விஸ்தரிப்பு, புறவழி சாலைகள், துணை சாலைகள் அமைப்பு, இருப்புப்பாதைகள் விரிவாக்கம் போன்ற பொதுப் பணிகளுக்காக முதலில் களபலியாவது விவசாய நிலங்கள் தான். அதற்கான முழுமையான ஈட்டுத் தொகை விவசாயிக்குக் கிடைப்பதில்லை.

விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் தேவை. தொழில் வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதிகளும் எந்த அளவுக்கு முக்கியமானவையோ, அதைவிட முக்கியமானது, ‘குடியானவனின் நிலம் மீதான உரிமை என்பதை மறந்துவிடக் கூடாது.

சிறுவணிகம் காப்போம்:

நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் சார்ந்திருப்பதுசில்லறை வர்த்தகம் எனப்படும் சிறு வணிகம் தான். இதற்கும் அரசு ஆபத்தை உருவாக்குகிறது. சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்ற தற்போதைய மத்திய அரசின் முடிவு, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆயினும், அரசு எப்போது வேண்டுமானாலும் தனது முடிவை பிடிவாதமாக அமல்படுத்தக் கூடும். பன்னாட்டு நிறுவனங்களும் அந்நிய பெருமுதலீட்டு நிறுவனங்களும் நமது அரசு மீது செலுத்தும் செல்வாக்கு சாதாரணமானதல்ல. எனவே நாம் விழிப்புடன் இருந்தாக வேண்டும்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டின் அபாயம் குறித்து விளக்கமாக பலமுறை கூறியாகிவிட்டது. நாட்டின் சாமானிய மனிதனின் உணவுப் பாதுகாப்புக்கும் இதனால் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதே தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான அபாயமாகும். கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் வியாபார விஷயமாக இந்தியாவுக்குள் நுழைந்து, பிறகு ஆட்சியையே கைப்பற்றியதை நாம் மறந்துவிட முடியாது.

நாட்டிலுள்ள 5 கோடிக்கு மேற்பட்ட சிறு வணிகர்கள்- விவசாயிகளுடனும் பொது மக்களுடனும் மிகவும் நெருங்கிய பிணைப்புக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களது முதலீடு மிகவும் குறைவு. இவர்களால், பல்லாயிரம் கோடி முதலீடு செய்து விளம்பர மாயையில் வர்த்தகம் செய்யும் சங்கிலித்தொடர் கொண்ட பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுடன் போட்டியிடவே இயலாது.

ஆரம்பத்தில் நமது விவசாயிகளுக்கு அதிகபட்சக் கொள்முதல் விலை கொடுத்து அவர்களை தம் வசமாக்கிய பிறகு, உள்நாட்டு சில்லறை வணிகர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, விவசாயிகள் தன்னை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை பன்னாட்டு நிறுவனங்கள் உருவாக்கிவிடும். அதன்பிறகு, அவர்கள் வைத்ததே சட்டம்; அவர்கள் கொடுப்பதே விலை என்றாகிவிடும். இதே நிலைதான் நுகர்வோருக்கும் ஏற்படும். எனவே, சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை தடுப்பது நமது உரிமையும் கடமையும் ஆகும்.

சிறுதொழில் காப்போம்:

விவசாயம், சிறு வணிகத்துக்கு அடுத்தபடியாக பல கோடி பேருக்கு வாழ்வாதாரமாக விளங்குவது சிறு, குறு தொழில்துறைதான் எனில் மிகையில்லை. குடிசைத்தொழில் போல பல லட்சம் நிறுவனங்கள் இயங்குகின்றன. இவற்றில் பல நமது பெரும் தொழில் நிறுவனங்களுக்கு துணையாகவும் செயல்படுகின்றன.

சாமானிய மக்களின் தொழில்துறை சார்ந்த தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுபவை சிறு, குறு தொழில்கூடங்களே. ஆனால், இத்தொழில் துறைக்கு நமது அரசுகளிடம் போதிய அனுசரணை கிடைப்பதில்லை. வேலைவாய்ப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்கும் சிறு, குறு தொழில் முனைவோரைப் பாதுகாக்காவிட்டாலும், அவர்களை அரசு நசுக்காமலாவது இருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை அவ்வாறில்லை.

மூலப்பொருள் விலையேற்றம், பெட்ரோலியப் பொருள்கள் விலையேற்றம், மின் கட்டணம் உயர்வு, கச்சாப் பொருள்கள் கிடைக்காதது, அதிகப்படியான வரிவிதிப்பு என பல சங்கடங்களை எதிர்கொள்ளும் சிறு, குறு தொழில்துறையினர் சிறிது சிறிதாக தங்கள் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு அரசு ஆதரவு காட்டுவது அவசியம். ஒருகாலத்தில் சிறந்து விளங்கிய கைத்தறி நெசவு இப்போது சில பகுதிகளில் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளது. அத்தகைய நிலைமை சிறு, குறுந் தொழில்களுக்கும் நேரிட்டுவிடக் கூடாது.

மாறாக, நமது மத்திய, மாநில அரசுகளோ, பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்குவதுடன், நிலம் கையகப்படுத்தவும் உதவுகின்றன. தடையற்ற மின்சாரம் இவர்களுக்கு உறுதி செய்யப்படுகிறது. ‘சிறப்பு பொருளாதார மண்டலங்கள்என்ற பெயரில் இத்தகிய நிறுவனங்களுக்கு அரசு சலுகைகள், வரிவிலக்குகள் வாரி வழங்கப்படுகின்றன. இந்நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.

ஒருபுறம் பெரு நிறுவனங்களுக்கு பெரும் சலுகைகள்; மறுபுறம் சிறுதொழில்கூடங்கள் மீது அரசு கட்டுப்பாடுகளும் வரிவிதிப்புகளும் என, முரண்பாடான நிலை காணப்படுகிறது. இந்நிலையை மாற்றுவதும் அவசியமானதாகும்.

ஊழலை ஒழிப்போம்:

ஒரு பாத்திரம் நிறைய நீர் இருந்தாலும், பாத்திரத்தின் அடிப்பகுதியில் சிறு துளை இருந்தால் நீர் முழுவதும் வீணாகிவிடும். அதுபோலத்தான், நமது நாட்டை ஊழல் கரையானாக அரித்து வருகிறது. பல துறைகளில் நாடு முன்னேறியபோதும், அரசுத் துறைகளில் நிலவும் ஊழல் நமது பொருளாதார வளர்ச்சிக்கும் தன்னிறைவுக்கும் முட்டுக்கட்டையாக உள்ளது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நாட்டின் பிரதான உறுப்பு என்ற மக்களாட்சித் தத்துவமே ஊழலால் மாசடைகிறது. லஞ்சம் கொடுக்க சக்தியுள்ளவர்கள் முன்னேறுவதும், நேர்மையாக வாழ்பவர்கள் பின்னடைவதும், சமச்சீரான வளர்ச்சியை உருவாக்காதுa;a தவிர நமது அரசு நிர்வாகமும் பின்னமாகிறது.

சர்வதேச ஊழல் கண்காணிப்பு அமைப்பு நடத்திய ஆய்வில், உலக அளவில் ஊழல் அதிகமுள்ள 133 நாடுகளில் இந்தியா 83 வது இடம் வகிக்கிறது. சாதாரண குடும்ப அட்டை பெறுவதில் துவங்கி, பெரும் தொழில் உரிமம் பெறுவது வரை லஞ்சம் இல்லாத இடமே இல்லை என்ற நிலை இந்தியாவில் நிலவுகிறது. அரசு ஊழியர்களின் கடமை உணர்வு மங்கி, பேராசை பெருகி வருவதன் அறிகுறியே லஞ்சம். அதே சமயம், நமது அரசியல்வாதிகள் நிகழ்த்தும் ஊழல் நடவடிக்கைகளும் அரசு ஊழியர்களின் இந்த மனத் தடுமாற்றத்துக்குக் காரணம் எனில் தவறில்லை.

ஊழலுக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் உள்ளபோதும் அவை திறம்படக் கையாளப்படுவதில்லை. இதற்கு நாட்டின் கருவூலத்துக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் ஓர் உதாரணம். எனவே தான் சென்ற ஆண்டு நாடு முழுவதும் சமூக சேவகர்கள் அண்ணா ஹசாரே, யோகா குரு ராம்தேவ் போன்றவர்கள் நடத்திய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களிடையே மாபெரும் ஆதரவு பெற்றன. ஆனால், நமது அரசு தந்திரமான செயல்பாடுகளால் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை முடக்குகிறது.

மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிடாது. லஞ்சத்துக்கும் ஊழலுக்கும் வித்திடும் நமது வாழ்க்கை மாற்றங்களை முதலில் நாம் சரி செய்தாக வேண்டும். லோக்பால் போன்ற கடுமையான சட்டங்களுடன், மக்கள் கண்காணிப்பும் ஊழலை ஒழிக்க அவசியமாகிறது. நமது வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும் ஊழலை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுவதும் முக்கியமானதாகும்.

கறுப்புப்பணத்தை மீட்போம்:

நாட்டை அரிக்கும் ஊழலின் உடனடி விளைவு, நமது செல்வங்கள் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருப்பதாகும். அதிகார பீடங்களில் உள்ளோரும், பதவியில் உள்ளோரும் ஊழலில் ஈடுபட்டுக் குவிக்கும் முறைகேடான வருவாயை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கறுப்புப் பணமாக பதுக்குகின்றனர். ஒருபுறம் நமது அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள் போதிய வருவாயின்றி பற்றாக்குறையாகவே தொடர்கின்றன. மறுபுறம், நமது தேசிய செல்வம் திருட்டுத்தனமாக் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்படுகிறது. இதனால் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகிறது.

சம்பளத்தைவிட 'கிம்பளம்' அதிகமாகப் பெறும் அரசு அதிகாரிகள் துவங்கி, ஒவ்வொரு அரசு திட்டத்திலும்கமிஷன்பெரும் அரசியல்வாதிகள் வரை, நாட்டின் செல்வம் மடைமாறுகிறது. இதுபோன்ற ஊழல் பேர்வழிகளுக்காகவே உலகில் 70 நாடுகளில் சட்டவிரோதமான பணப்பதுக்கலுக்கு உதவும் வங்கிகள் செயல்படுகின்றன. வரிவிதிப்பற்ற வங்கிகள் என்ற பெயரில் ஸ்விட்சர்லாந்து, லிச்டேன்ஸ்டைன், லக்ஸம்பர்க் போன்ற நாடுகளில் இயங்கும் தனியார் வங்கிகள் நமது நாட்டின் சட்டவிரோத பணமுதலைகளின் சேமிப்புக்கு உதவுகின்றன. இதுவே கறுப்புப் பணமாகும்.

ஹவாலா முறையில் நமது நாட்டில் செல்வம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இந்த வங்கிகளில் பதுக்கப்படுகிறது. நம் நாட்டில் இயங்கும் பயங்கரவாதிகளுக்கு உதவுவதும் இந்த கறுப்புப்பண நடமாட்டமே. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, இத்தகைய வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள மொத்த கறுப்புப் பணத்தின் மதிப்பு 18 ட்ரில்லியன் டாலர்கள் ஆகும்.

உலக நிதி ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், சட்டவிரோதமாக வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் மதிப்பு 500 பில்லியன் டாலர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 22.5 லட்சம் கோடியாகும். நமது உள்நாட்டு மொத்த உற்பத்தியான (ஜிடிபி) 1,200 பில்லியன் டாலரில் இதன் அளவு 40 சதவீதமாகும். சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் அதிகமாக பணம் முதலீடு செய்திருப்பவர்கள் இந்தியர்களே என்பதை ஊடக போராளியான ஜூலியன் அசாஞ்சே வெளிப்படுத்திய ஆதாரங்கள் காட்டுகின்றன.

இந்தக் கறுப்புப் பணத்தை மீட்க சர்வதேச அளவில் முயற்சிகள் நடந்து வருகின்றன. கறுப்புப் பணத்தின் அபாயம் உணர்ந்து பல நாடுகளும் அதனைக் கட்டுப்படுத்தவும், திரும்பப் பெறவும் முயன்று வரும் நிலையில், நமது அரசு தனது கடமைகளைத் தட்டிக் கழிக்கிறது. கறுப்புப் பணத்தை மீட்க வேண்டிய நமது அரசு, கறுப்புப் பண முதலைகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் மதிப்பு ரூ. 67.5 லட்சம் கோடி வரை இருக்கலாம் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. இந்த முறைகேடான செல்வத்தை நமது நாட்டுக்கே திரும்பக் கொண்டுவர, துணிவுள்ள, நேர்மையுள்ள அரசின் நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சுதேசி பொருளாதாரம் காப்போம்:

நமது அரசு சுதந்திரம் பெற்றபோது சோஷலிசத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்தியது. ஆனால், உலக அளவில் கம்யூனிச அரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1990 களில் இந்திய அரசின் போக்கு முதலாளித்துவத்தின் வெளிப்பாடான தாராள மயமாக்கல் பக்கம் திரும்பியது. இந்த திடீர்த் திருப்பத்தின் பின்னணியில் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளின் நிர்பந்தமும் இருந்தது.

தாராள மயமாக்கல், உலக மயமாக்கல் என்ற பெயரில் நமது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தொழில்துறையில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. மிக முக்கியமான தொழில்நுட்பம் மிகுந்த தொழில் துறை மட்டுமல்லாது அத்யாவசிய துறைகளிலும் உணவுத் தயாரிப்புத் துறைகளிலும் கூட அந்நிய முதலீடு எதிர்பார்க்கப்பட்டது. அன்னிய முதலீட்டால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியுறும் என்பது அதை ஆதரிப்பவர்களின் வாதம். உண்மையில், நமது செல்வ வளம் கொள்ளைபோகவே தாராள மயமாக்கல் உதவுகிறது.

நமது நாட்டுக்கென்று கிராமிய முன்னேற்றத்தையும் கைத்தொழில்களையும் அடிப்படையாகக் கொண்ட காந்திய பொருளாதார அமைப்பு உண்டு. தாராளமயமாக்கலில் முதல் பலியானவை இந்நிறுவனங்களே. எனவே தான், நமது நாட்டிற்கு ஏற்ற சுதேசி பொருளாதாரத்தை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வலியுறுத்துகிறது. இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்கும் இடைப்பட்ட, சுதேசிய உணர்வுடன் கூடிய, உள்நாட்டு வர்த்தகம், விவசாயம், தொழில்துறையைப் பாதுகாக்கக் கூடிய பொருளாதார முறையே நமக்கு இப்போதைய தேவையாகும். இதனையும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் தனது யாத்திரையில் பிரசாரம் செய்கிறது.

பாத யாத்திரையின் நோக்கம்:

மேற்கண்ட முக்கியமான அம்சங்கள் குறித்து நாட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மக்களை அஹிம்சை முறையில் திரட்டி கருத்துருவாக்கவும் தான் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் பாத யாத்திரையை நடத்துகிறது. ஏற்கனவே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மாபெரும் மக்கள் இயக்கத்தை சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நடத்தியது. அதன் பலனாகவே, ஒருங்கிணைந்த மக்கள் கருத்து ஏற்பட்டு, அவ்விஷயத்தில் அரசு பின்வாங்கியது.

இயற்கை வளங்கள் மீதான மக்களின் உரிமையைப் பாதுகாத்தல், ஊழல் எதிர்ப்பு, கறுப்புப் பணம் மீட்பு, சிறுவணிகர்கள் மற்றும் சிறு, குறு தொழில்துறையினரைக் காத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக, மக்களை நேரில் சந்தித்து விளக்கவே மார்ச் 5 முதல் ஏப்ரல் 5 வரை கோவையில் துவங்கி சென்னை வரை பாத யாத்திரை நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக தென்தமிழக மாவட்டங்களில் ஏற்கனவே முதல்கட்ட யாத்திரை நடந்து முடிந்துள்ளது. இந்த பிரசார பயணத்தை நான்கு கட்டங்களாக சுதேசி விழிப்புணர்வு இயக்கம் திட்டமிட்டுள்ளது. 'சுதேசியமே நாட்டைக் காக்கும்' என்ற மகாத்மா காந்தியின் அடியொற்றி, அவரது போராட்ட வழிமுறையான பாதயாத்திரையையே தேர்ந்தெடுத்து சுதேசி விழிப்புணர்வு இயக்கம் செயல்படுகிறது.

யாத்திரை செல்லும் வழியில் சிறு, குறு தொழில் துறையினர், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், ஊழல் எதிர்ப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்டுவதும் யாத்திரையின் நோக்கமாகும். நல்ல நோக்கத்துடன் மக்களை ஒருங்கிணைக்க மேற்கொள்ளும் இப்பணியில் அனைவரது நல்லாதரவையும் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் வேண்டுகிறது.

நமது வாழ்க்கைமுறை மாறுவதும் நம்மை அடிமைப்படுத்தும் காரணிகளுக்கு துணை போவதாக அமைந்துவிடும். எளிமையான வாழ்க்கை, தேவையான அளவுக்கு மட்டுமே நுகர்வு, கூட்டுக் குடும்பம், தனிப்பட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் நேர்மை ஆகிய வாழ்க்கை மூல்யங்களை பாதுகாப்பதன் வாயிலாகவே நமது வாழ்க்கை சிறப்படையும். இதனையும் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் பாத யாத்திரை, செல்லுமிடமெல்லாம் வலியுறுத்துகிறது.

இந்த யாத்திரையின் மொத்தத் தூரம் 720 கிமீ. இதில் நெடுஞ்சாலையில் சில பகுதிகளில் நடைபயணம் தவிர்க்கப்பட்டு, மொத்தம் 600 கிமீ தூரம் பாதயாத்திரை செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை செல்லும் இடங்களில் நாமும் இணைந்து தேசப்பணிக்கு உறுதுணை புரியலாமே?

பாரத அன்னை வெல்க!


காண்க: சுதேசி இயக்க பாதயாத்திரை திட்டம்

தொடர்புக்கு:

திரு ராம. நம்பி நாராயணன்

மாநில அமைப்புச் செயலாளர்,

சுதேசி விழிப்புணர்வு இயக்கம், தமிழ்நாடு

மொபைல் எண்: 94431 40930.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக