செவ்வாய், ஜனவரி 04, 2011

தேர்தலுக்கு ஆயத்தமாகும் கழகங்கள்

அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஜெயலலிதா .

வானவில் மோசடியில் நாடே பற்றி எரிந்துகொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் ஆரவாரமின்றி இறங்கிவிட்டன, இரு கழகங்களும். வழக்கம் போல
இதனைத் துவக்கி வைத்திருப்பவர், திமு.க. தலைவர் கருணாநிதி தான். கடந்த டிசம்பர் மாதம், அவரைப் பொருத்த வரை, அள்ளி வழங்கிய மாதமாகிவிட்டது.

டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்து தங்கள் சக்தியை காட்டியவுடன், டிச. 17 ம் தேதி டாஸ்மாக் ஊழியர்களே எதிர்பாராத வகையில் அவர்களுக்கு திடீர் சம்பள உயர்வை அறிவித்தார் கருணாநிதி. அதன்மூலமாக ஒவ்வொரு டாஸ்மாக் ஊழியரும் குறைந்தபட்சம் ரூ. 500 ஊதியம் அதிகமாகப் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தவிர, மேலும் பல சலுகைகளை அவர்களுக்கு அள்ளி வழங்கியுள்ளார், தமிழக முதல்வர். தமிழக கருவூலத்தையும் சொந்தக் கருவூலத்தையும் நிரப்பும் அமுதசுரபிகள் டாஸ்மாக் ஊழியர்கள் அல்லவா? ஆயினும் பணி நிரந்தரமே தங்கள் இலக்கு என்று கோருகிறார்கள், டாஸ்மாக் ஊழியர்கள். தேர்தல்கால வாக்குறுதியாக அநேகமாக இது இடம் பெறலாம்.

அடுத்து, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் திடீர் சம்பள உயர்வை அறிவித்தார், அமைச்சர் நேரு (டிச. 22). அதன்படி, ஒவ்வொரு அரசு போக்குவரத்துக் கழக ஊழியரும் குறைந்தபட்சம் ரூ. 2,000 சம்பளம் அதிகம் பெறுவார். ஒட்டுமொத்தமாக 40 சதவிகித சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்தும் திவால் நிலையில் திண்டாடிக் கொண்டிருந்தாலும், தேர்தல் நேரத்தைக் கருத்தில் கொண்டு, கருணைமழையைப் பொழிந்திருக்கிறார், கருணாமூர்த்தி.

மூன்றாவதாக, நியாயவிலைக் கடை ஊழியர்கள் மீது தமிழக முதல்வரின் திடீர்ப் பாசமழை பொழிந்திருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்த கூட்டுறவு நியாய விலைக்கடை ஊழியர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நாள் குறித்தது. அதற்கு முந்தைய நாளே, சம்பள உயர்வு அறிவிப்பு வந்துவிட்டது (டிச. 28 ). இதன்படி, நியாயவிலைக் கடை ஊழியர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ரூ. ஆயிரம் சம்பளம் அதிகம் பெறுவர். மேலும் பல சலுகைகளும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்ததாக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்படலாம். ஏனெனில் தற்போதுதான், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு அவர்களும் தொடர் போராட்டங்களில் இறங்கி இருக்கிறார்கள். இனிவரும் மாதங்களில் அரசு ஊழியர்களின் போராட்டங்களையும், தமிழக அரசின் சலுகை அறிவிப்புக்களையும் அதிகமாகவே எதிர்பார்க்கலாம்.

ஒட்டுமொத்த வாக்காளர்களில், விவரமுள்ள, நன்றியுள்ள, உறுதியான ஆதரவாளர்களான அரசு ஊழியர்களை குஷிப்படுத்துவது தானே ராசதந்திரம்? சாமானியனின் வீட்டில் அடுப்பு எரியத்தான் ஒரு ரூபாய் அரிசியும் இலவச கேஸ் அடுப்பும் இருக்கிறதே. போதாக்குறைக்கு 70 சதவிகித வீடுகளில் இலவச தொலைக்காட்சிப்பெட்டியும் வழங்கியாயிற்று. ஸ்பெக்ட்ரம் ஊழலாவது, மண்ணாவது என்ற கணக்கில் இருக்கிறார், கருணாநிதி.

இந்த மாதிரி தடாலடி அறிவிப்புகளை வெளியிட முடியாவிட்டாலும், அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவும் தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டார். கூட்டணியில் எப்படியாவது குழப்பம் ஏற்படுத்தி 'ஊழல் கூட்டாளி'களைப் பிரித்துவிட அவர் நடத்திய நாடகங்கள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான். ஆனால், கருணாநிதிக்கு உள்ளூர நடுக்கத்தை ஜெயலலிதா ஏற்படுத்தி இருப்பது நிஜம். அதற்கு ஏற்றாற்போல, கருணாநிதியின் ஆரம்பகால வைரியான சம்பத்தின் இளவல் இளங்கோவன் தி.மு.க. மீது தொடுத்துவரும் தாக்குதல்கள் அமைந்திருப்பது தி.மு.க. தலைமைக்கு எரிச்சலூட்டி இருக்கின்றன.

காங்கிரஸ் தலைமை இளங்கோவனைக் கண்டிப்பதில்லை என்பதும் உண்மை. ‘கூட்டணி மாறாது’ என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் திவிவேதி அறிவித்திருப்பதும் உண்மை. இந்த இரண்டில் இறுதி உண்மை எதுவோ, இத்தாலி அன்னைக்கே வெளிச்சம்.

பிப்ரவரி மாதம் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான நடவடிக்கை அறிக்கையை மத்திய புலனாய்வு அமைப்பு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும். அப்போது ஆண்டிமுத்து ராசா கைது செய்யப்பட்டிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது ஊழல் பிசினால் ஒட்டப்பட்ட காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி உடையலாம் என்று அ.தி.மு.க. தலைவி கணக்கு போடுகிறார். இவரை நம்பி கூட்டணிக்குக் காத்திருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ம.தி.மு.க.வும் தான் பரிதாபமாகத் திணறுகின்றன.

இந்நிலையில், தேர்தலுக்கு தொண்டர்களை தயார்ப்படுத்த அ.தி.மு.க. பொதுக்குழுவை டிச. 30 ல் கூட்டிய ஜெயலலிதா, ‘தொண்டர்கள் விரும்பும் கூட்டணியைக் கண்டிப்பாக அமைப்பேன்’ என்று பூடகமாகவே பேசினார். அவருக்கு இன்னும் காங்கிரஸ் மீது கண்மூடித்தனமான பாசம் இருப்பது இதிலிருந்து தெரிகிறது. கட்சிக்குள் நிலவும் உட்பூசலை மறந்து தேர்தலில் வெல்ல ரத்தத்தின் ரத்தங்கள் தயாராக வேண்டும் என்ற அவர், விலைவாசி உயர்வும் மின்வெட்டும் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள சிரமத்தை பிரசாரம் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே, தமிழகத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் குரேஷியும் சென்னை வந்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திச் சென்றிருக்கிறார். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேத்தல் நடத்த வேண்டும்; வாக்கிற்கு லஞ்சம் தருவதைத் தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள்- அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையரிடம் முன்வைத்தவற்றில் முக்கியமானவை.

தேர்தல் கூட்டணி தொடர்பாக சிறு கட்சிகள் சிலவற்றுடன் ஏற்கனவே அ.தி.மு.க உடன்பாடு கண்டுவிட்டது. பா.ம.க தங்கள் வலையில் விழாது என்பதும் ஜெயலலிதாவிற்கு தெரிந்துவிட்டது. எனவே விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. தூதர்கள் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல். அவரும் கூட்டணிக்கு உறுதியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும், வருமானவரித் துறையை கைவசம் கொண்டுள்ள மத்திய அரசை இப்போதைக்கு பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர் நிதானிப்பதாகவும் வதந்தி.

இப்போதைய நிலையில், ‘ராசா புகழ்’ ஊழல் தொடர்பான கட்சிகளின் சங்காத்தமே வேண்டாம் என்று அவரிடம் நெருங்கிய வட்டாரங்கள் ஓதி இருப்பதாகவும், தேர்தல் வரை குழப்பமான அறிவிப்புகளையே தொடர அவர் திட்டமிட்டிருப்பதாகவும், நெருப்புக்கோழியார் கூறுகிறார் (மற்ற பறவைகள் வேறு பத்திரிகைகளுக்கு உளவு சொல்லச் சென்று விட்டதால், நெருப்புக்கோழியைத் தான் விஜயபாரதம் வாசகர்கள் நம்ப வேண்டும்).

கூட்டணி முயற்சிகளைத் தவிர, சிறுபான்மையினரை தாஜா செய்யும் பணியிலும் ஜெயலலிதாவே முன்னிற்கிறார். குமரி மாவட்டம், அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற அவர், அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்களே ஆச்சரியப்படும் வகையில் கிறிஸ்துவக் கதைகளைக் கூறி கைதட்டல்களைப் பெற்றார். சென்னை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் பயின்றபோது மதிய உணவு இடைவேளையில் புனித பைபிள் படிப்பாராம் கோமளவல்லி (அப்போது அதுதானே அவரது பெயர்?). இதை ஜெயலலிதா சொன்னபோது, "இவரா கரசேவையை ஆதரித்தார்?' என்று அங்கிருந்த கிறிஸ்தவ பெண்கள் தங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டதையும் காண முடிந்தது.

கிட்டத்தட்ட கிறிஸ்தவ மாநாடு போலவே நடத்தப்பட்ட அந்த விழாவில், தானும் வாக்கு வங்கியைத் துரத்தும் அரசியல்வாதிதான் என்பதை ஜெயலலிதா காட்டினார். ''இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் செல்வதற்கு இருக்கும் சலுகைபோல் இஸ்ரேலுக்கு கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை செல்வதற்கான கோரிக்கையை மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால் உறுதியாக நிறைவேற்றுவேன். கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டுவதற்கு உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று வலியுறுத்தினீர்கள்.
.
அவரவர்களுக்கு சொந்தமான இடத்தில் தேவையானதை கட்ட தடையே இல்லை. ஆகையால் தேவாலயங்கள் கட்டலாம். கர்த்தரின் அருளால் ஆட்சி அமைந்தால் அது நிறைவேற்றப்படும். சமயத்தின்பேரால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் ஆதிதிராவிடர்களை மீண்டும் ஆதிதிராவிடராக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கையும் கர்த்தரின் அருளால் கழக அரசு அமைந்தால் நிறைவேற்றப்படும்'' என்றெல்லாம் முழங்கினார்.

அதே நாளில் கருணாநிதியும் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், கிறிஸ்தவர்களை மயக்க உருகி உருகிப் பேசினார். என்ன இருந்தாலும் திரை நடிகை ஜெயலலிதாவுடன் அரசியல் நடிகர் கருணாநிதியால் இவ்விஷயத்தில் போட்டியிட முடியவில்லை. ''நீங்கள் ஆட்டுவித்தால் ஆடுவேன். உங்கள் நலனுக்காக போர்க்கோலமும் பூணுவேன்'' என்று அவரும் செப்பிப் பார்த்திருக்கிறார். என்ன காரணமோ, இதுவரை தி.மு.க.வின் முன்னணி கிறிஸ்தவ பாதிரியாராக விளங்கிய ஜெகத் கஸ்பரை அந்த நிகழ்ச்சியில் காண முடியவில்லை. என்ன காரணம்? மத்திய புலனாய்வுத் துறையிடம் தான் கேட்க வேண்டும்.

இந்த கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பிறகு, 'மதச்சார்பின்மையை குத்தகைக்கு எடுத்தது யார்?' என்ற வழக்கமான விவாதத்தை பத்திரிகைகள் வாயிலாக கருணாநிதி துவக்கியுள்ளார். மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தது யார்? என்ற அவரது கேள்விக்கு, அதை தானே ரத்து செய்ததாக ஜெயலலிதா கூறி இருக்கிறார். மக்கள் மறதிதான் அரசியல்வாதிகளுக்கு மூலதனம் என்று தெரியாமலா சொன்னார்கள்?

அடுத்து இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஜெயலலிதா எதிர்த்தார் என்று கிளப்பி இருக்கிறார் திராவிட சூரியன். இதற்கு எதிர்ப்பாட்டு பாட அம்மையாரும் தயாராகி வருகிறார். மொத்தத்தில் தேர்தல் அறிவிக்கப்படும் முன்னரே தமிழக மக்கள் தங்கள் முட்டாள்தனத்தை மூட்டை கட்டி பரணில் போட வேண்டியதுதான் போலிருக்கிறது.

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் அள்ளி வழங்கி அவர்களது வாக்குக்களைப் பொறுக்க முதல்வரே முன்னிற்கிறார். சிறுபான்மையினரிடம் கெஞ்சிக் கொஞ்சி வாக்கு வேட்டையாட இரு கழகத் தலைமைகளும் கிளம்பிவிட்டன. அரசு ஊழியராகவும் சிறுபான்மையினராகவும் இல்லாத மக்களின் நிலை தான் பரிதாபம். ஒருவேளை அவர்களுக்கு வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய தினம் அதிர்ஷ்டக் காற்று வீட்டுப்பக்கமே வீசக் காத்திருக்கிறதோ என்னவோ...?

----------------------------
நன்றி: விஜயபாரதம் (14.01.2011)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக