திங்கள், ஜனவரி 17, 2011

மக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் பிணம் தின்று தான் ஆக வேண்டும் என்ற பழமொழியை அறிந்திருப்பீர்கள். 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிக்கொண்டு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நடத்தும் நாடகங்கள் இந்தப் பழமொழியையே நினைவு படுத்துகின்றன.

ஆண்டிமுத்து ராசாவை பின்னணியில் இருந்து இயக்கிய பெரு முதலாளிகளும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அடிப்படையான பல்லாயிரம் கோடி லஞ்சப் பணத்தைப் பெற்ற ஊழலின் வேரான தலைவர்களும், கடப்பாறையை விழுங்கியவர்கள் போல அமைதி காக்கிறார்கள். ஆனால், ராசாவுக்குப் பின் தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் சிகாமணியான கபில் சிபலோ, 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை' என்று முழங்கி வருகிறார். என்னதான் திறமையான வழக்கறிஞராக இருத்தாலும், தப்பு செய்த கட்சிக்காரரைத் தப்புவிக்க எல்லா கோமாளி வேலைகளையும் செய்து தானே ஆக வேண்டும்?

மத்திய தணிக்கைத் துறையின் (சி.ஏ.ஜி) நேர்மையான அணுகுமுறை காரணமாகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து உச்சநீதி மன்றம் இவ்விவகாரத்தை கிளறத் துவங்கியது. மத்திய அரசையும் பிரதமரையும் உச்சநீதி மன்றம் கேட்ட தர்ம சங்கடமான கேள்விகளால் தான், மத்தியப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) இவ்விவிகாரத்தில் வேறு வழியின்றி விசாரணையை முடுக்கியது. இறுதியில், கள்ளத்தனம் செய்த அமைச்சர் ராசா பதவி விலக வேண்டியதாயிற்று.

அப்போது, இத்துறை மீண்டும் தி.மு.க. வசமே வேறு ஒருவருக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு மாறாக, அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக தொலைதொடர்புத் துறை ஒப்படைக்கப்பட்டது. உடனே, நமது ஊடகங்கள், ‘தி.மு.க.வுக்கு அடிபணியாத சோனியா’ என்று புளகாங்கிதத்துடன் செய்திகளைத் தீட்டின. இப்போது கபில் சிபல் நடத்திவரும் நாடகங்கள், ராசாவை விஞ்சுவதாக உள்ளபோது, அதே ஊடகங்கள் அர்த்தமுள்ள மௌனம் சாதிக்கின்றன.

பதவி இழந்த ஆ.ராசா, ''எனக்கு முன் அமைச்சராக இருந்தவர்களின் வழியிலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்தேன். இது குறித்து பிரதமருக்கு எல்லாமே தெரியும். இதில் எந்த ஊழலும் நடக்கவில்லை. இதனால் எந்த இழப்பும் அரசுக்கு ஏற்படவில்லை'' என்றே கடைசிவரை கூறி வந்தார்; இப்போதும் கூறி வருகிறார். தற்போது ராசாவை குப்புறத் தள்ளி அவரது பீடத்தில் அமர்ந்திருக்கும் கபில் சிபலும் அதையேதான் கூறுகிறார். பிறகு எதற்காக ராசாவை அவசரமாக பதவி விலகுமாறு காங்கிரஸ் நிர்பந்தம் செய்தது?

இதில் வேடிக்கையான ஒற்றுமை என்னவென்றால், ஆ.ராசாவும் கபில் சிபலும் வழக்கறிஞர்கள் என்பதுதான். இருவருமே, ஊழலை மறைக்க எடுத்துவைக்கும் வாதங்கள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்த விழைபவையாகவே தோன்றுகின்றன.

வரும் பிப். 10 ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரித்து அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் சி.பி.ஐ தாக்கல் செய்ய வேண்டும். அநேகமாக, அந்த அறிக்கை தாக்கலின்போது, ராசா கைது செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்படலாம். இப்போதே, ராசாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி மற்றொரு வழக்கினை சுப்பிரமணியம் சாமி தொடுத்திருக்கிறார். இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று கபில் சிபல் கூறியிருப்பது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக இருக்கிறது.

கபில் சிபல் தொலைதொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டிருந்தால் அவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும்' என்றார். அதன்படி, பல தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்களும் அனுப்பப்பட்டன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற சில நிறுவனங்கள் விதிமுறைப்படி சேவையைத் துவக்காமல் தாமதிப்பது குறித்து கேட்டபோது, அவை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபல் சொன்னார். பரவாயில்லையே என்று சிபலை பாராட்டிய நேரத்தில், ஓர் அதிரடியை நிகழ்த்தினார் கபில்.

உச்சநீதி மன்றத்தின் தொடர் கண்டனங்களை திசை திருப்ப, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் தனிநபர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக, கபில் சிபல் (டிச. 10) அறிவித்தார். 2009 முதலாக மட்டுமல்லாது, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலமான 2001 முதற்கொண்டே இக்குழு விசாரணை நடத்தும் என்றும் அவர் அறிவித்தார். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணையைக் கோரிவரும் நிலையில், உச்சநீதி மன்றம் சி.பி.ஐ.இடம் கிடுக்கிப்பிடி போட்டுவந்த நிலையில், சிபல் இவ்வாறு அறிவித்தார்.

அதாவது, ராசா மட்டும் ஊழல் செய்யவில்லை; அதற்கு முன்னரே பா.ஜ.க. அமைச்சர்கள் காலத்திலும் ஊழல் நடந்திருக்கிறது என்பதுதான் சிபலின் கருத்தாக இருந்தது. எனினும், தனி நீதிபதி விசாரணையை முழு மனதுடன் வரவேற்பதாக பா.ஜ.க. அறிவித்தது; அதே சமயம், ஜே.பி.சி கோரிக்கையை முனை மழுங்கச் செய்ய மாட்டோம் என்று அருண் ஜெட்லி அறிவித்தார்.

அடுத்து, மீண்டும் முருங்கை மரம் ஏறினார் சிபல். தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு தொலைதொடர்பு நிறுவன உரிமையாளர்கள் சுனில் மிட்டல் (ஏர்டெல்), ரத்தன் டாடா (டாடா டெலிசர்வீஸ்), அணில் அம்பானி (ரிலையன்ஸ் கம்யூனிகேசன்) ஆகியோரை (டிச. 23) அழைத்துப் பேசிய அமைச்சர் சிபல், இந்த விவகாரத்தால் தொழில்துறை பாதிக்கப்படாமல் இருக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். மேற்குறிப்பிட்ட மூவருமே, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவர்களாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள். அவர்களையே அழைத்துப் பேசியதன் மூலமாக சிபலின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது. நமது விழிப்புணர்வுள்ள ஊடகங்கள் தான் இதனை கண்டுகொள்ளவில்லை. பெரு நிறுவனங்களின் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டால் ஊடக உரிமையாளர்கள் எவ்வாறு கோடி கோடியாக சம்பாதிப்பதாம்?

வழக்கில் தொடர்புடையவர்களையே அமைச்சர் அழைத்துப் பேசிய பிறகு, ஸ்பெக்ட்ரம் வழக்கில் அரசின் நிலையை சி.பி.ஐ.யோ, தனி நீதிபதியோ புரிந்துகொள்வது கடினமான ஒன்றல்ல.

இதனிடையே, வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட்ட 'முதலில் வந்தவருக்கே முன்னுரிமை' என்ற கொள்கையால் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் முழங்க ஆரம்பித்தனர். மதிய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சி. ஆகியோரைத் தொடர்ந்து கபில் சிபலும் அதே முழக்கத்தைத் தொடர்ந்தார். ஒரு பொய்யை பல முறை சொனால் அது உண்மையாகிவிடும் என்ற 'கோயபல்ஸ்' தந்திரம் இது. நமது ஊடகங்கள் கொஞ்சமும் தாமதிக்காமல் இந்தப் பொய்களை வெளியிட்டு பத்திரிகை தர்மம் காத்தன. ஒரு பத்திரிகையேனும், இத்தனை நாட்களாக இதனை ஏன் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது? என்று கேட்கவில்லை.

பா.ஜ.க.வை மட்டம் தட்டக் கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் தவறாமல் பயன்படுத்தும் காங்கிரஸ், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ரகசியத்தை ஏன் சொல்லவில்லை? ஜே.பி.சி கோரும் எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தவும், ஊழலில் தான் மட்டுமா ஈடுபட்டேன் என்று நியாயப்படுத்தவுமே இந்த பொய்க் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

சி.பி.ஐ.யும் தனது வழக்கப்படி, அரசியல் எஜமானர்களின் உள்ளக்கிடக்கைகளைப் புரிந்துகொண்டு, 1998 முத்தாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரிக்க குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. ராசா பதவியில் இருந்த (2004) காலத்திற்கு விசாரணையைக் கொண்டுவர, ஆறு ஆண்டுகள் அவகாசம் கிடைக்கும் என்று சி.பி.ஐ. கணக்கிட்டிருக்கலாம்.

இந்நிலையில், சி.ஏ.ஜி.யின் கணக்கீடே தவறு என்று முழங்கியிருக்கிறார் கபில் சிபல் (ஜன. 9). குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா தரப்புக்கான வழக்கறிஞராக இதன்மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார் அமைச்சர் சிபல். அவரது வாக்குமூலம் இதோ...

"2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை கணக்கிடுவதற்கு தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி பின்பற்றிய வழிமுறை வேதனை அளிக்கிறது. அவர் குறிப்பிட்ட இழப்பு தொகைக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை.

அந்தப் புள்ளிவிவரம் முற்றிலும் தவறானது. உண்மையில் இந்த விவகாரத்தில் அரசு கஜானாவுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. இழப்பு தொடர்பாக ஊகமான புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டு இருக்கக் கூடாது. இதன்மூலம் அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் தர்மசங்கடத்தை அவர் ஏற்படுத்திவிட்டார்.


கணக்கு தணிக்கை அதிகாரி தனது மனச்சாட்சிக்கு அநீதி இழைத்துவிட்டார். எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமானிய மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர். மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுபோல், இழப்புக்கு காங்கிரஸ் காரணம் அல்ல. தொலைத் தொடர்பு துறையில் உரிமம் வழங்குவதற்கு, 'முதலில் வருகிறவர்களுக்கு முன்னுரிமை' என்ற கொள்கை பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் அறிமுகம் செய்தது.

கடந்த 1999-ம் ஆண்டில், அவர்களுடைய ஆட்சியின்போது நிலையான உரிமக் கட்டண முறை, வருவாயில் பங்கு அடிப்படையிலான கட்டண முறை கொள்கையாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூ. 1.5 லட்சம் கோடியாகும். கடந்த 2002-ம் ஆண்டின் 10-வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு வருவாய் மட்டுமே அடிப்படை அளவுகோல் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே கொள்கையைத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றியது.

ஆயினும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சில மனித தவறுகள் நடந்து இருக்கலாம். அது இயல்புதான். அதற்காகத்தான் தொலைதொடர்பு துறை சார்பில் ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறி இருக்கிறார் கபில் சிபல்.

திருடனின் கூட்டளியிடமே லாக்கப் சாவியைக் கொடுத்தது போல இருக்கிறது, கபில் சிபலின் பேச்சு.

சிபலின் கருத்துக்கு சி.ஏ.ஜி மறுப்பு தெரிவித்துள்ளது. 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை சரியானது என்ற நிலையில் நாங்கள் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம்' என்று சிஏஜி செய்தித் தொடர்பாளர் தில்லியில் அறிவித்திருக்கிறார்.

நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் சிபல் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ''பொது கணக்கு குழு விசாரணையிலுள்ள சி.ஏ.ஜி. அறிக்கை குறித்து தொலைதொடர்புத் துறை அமைச்சர் வெளிப்படையாக கருத்து கூறுவது விசாரணையின் திசையை மாற்றும் முயற்சியாகும்.

தொலைத்தொடர்புத்துறையின் செயலர் ஆர். சந்திரசேகர் பொதுக் கணக்குக் குழுவின் முன்பாக ஆஜரானபோது, வருவாய் இழப்பு குறித்த சிஏஜி தகவல் தவறானது என்று கூறவில்லை. எனவே, கபில் சிபலின் கருத்துதான் தவறானது.அவருக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் பொது கணக்கு குழு முன் ஆஜாராகி தனது கருத்தை தெரிவிக்கலாம்'' என்றார் அவர்.

கபில் சிபல் கருத்தை ஏற்க முடியாது என்று உச்சநீதி மன்ற நீதிபதிகளும் அறிவித்துள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் ஜன. 10 ல் வந்தபோது, பொதுநல வழக்கு மையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கபில் சிபல் கருத்தைச் சுட்டிக்காட்டினார். ஆனால், நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.எஸ். கங்குலி ஆகியோர் கபில் சிபல் கருத்தை நிராகரித்துவிட்டனர். ‘உண்மையான இழப்பு என்பதை அரசுதான் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினர்.

நாடு முழுவதும் கபில் சிபல் கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியவுடன், காங்கிரஸ் தனது வாலைச் சுருட்டிக்கொண்டு, அடக்கமாக காட்சி தருகிறது. இவ்வளவு அவசரமாக கபில் சிபல் கருத்து தெரிவித்தது ராசாவைக் காப்பாற்ற மட்டுமல்ல என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவர் யாரைக் காக்க முற்படுகிறார்? ராசா மூலமாக ரூ. 30 ஆயிரம் கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காங்கிரஸ் தலைவி சோனியாவையா? இனிமேலும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி புளுகிக் கொண்டிருப்பதை நம்ப, நாட்டு மக்கள் தயாரில்லை. காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் வேண்டுமானால் அக்கட்சியுடன் சேர்ந்து தமது பங்கிற்கு புளுகட்டும்.

அரசியல் சாசன அமைப்புகளான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு, உச்சநீதி மன்றம், மத்திய புலனாய்வு அமைப்பு ஆகியவை விசாரித்துவரும் ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்க தொலைதொடர்புத் துறை அமைச்சர் போடும் வேடங்கள், ஆ.ராசாவை விட கேவலமாக உள்ளன. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார் சுப்பிரமணியம் சாமி. பிரதமர் மன்மோகன் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால், கபில் சிபலை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

ஆனால் ஒன்று. உண்மைக்கு யாரும் காப்பாளர் தேவையில்லை. உண்மைக்கு தன்னைத் தானே காத்துக் கொள்ளும் திறன் உள்ளது. பொய் மட்டுமே, தன்னைக் காக்க மேலும் மேலும் பொய்களை உற்பத்தி செய்யும்.

காங்கிரஸ்காரர்கள் நடத்தும் நாடகங்கள் இதனையே உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இறுதியில் சத்தியமே வெல்லும். இது நமது அரசின் முத்திரை வாக்கியம். இதை நமது மௌன சாமியார் பிரதமர் மறந்துவிடக் கூடாது.

பெட்டிச்செய்தி
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் ரத்து ஆகுமா?

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை முற்றாக ரத்துசெய்யக் கோரும் மனு தொடர்பாக ஜன. 10 ல் மத்திய அரசு மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்துக்கு நோட்டீஸ் உச்சநீதி மன்றம் அனுப்பியுள்ளது.2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடக்கவில்லை என்று சாதிக்க ஆரம்பித்துள்ளார் மத்திய தொலைத் தொடர்புத்துறைக்கு கூடுதலாக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல். இன்னொரு பக்கம், அபராதமாக ஒரு தொகை பெற்றுக் கொண்டு, முறை தவறிய நிறுவனங்களை அனுமதிக்க ஆரம்பித்துள்ளது அரசு. இவற்றுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

ஆ.ராசா காலத்தில் நடந்த ஒட்டுமொத்த 2 ஜி அலைக்கற்றை ஏலத்தையுமே ரத்து செய்துவிட்டு, மீண்டும் புதிதாக ஏலம் விட வேண்டும். அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் சரி செய்யப்பட வேண்டும்' என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதி மன்றம், 'ஆ.ராசா காலத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் உள்பட 122 லைசென்ஸ்களையும் ஏன் ரத்து செய்யக் கூடாது?' என்று கேட்டு மத்திய அரசுக்கும் மத்திய தொலைதொடர்புத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த சுப்பிரமணிய சாமி, "குறிப்பிட்ட சில நிறுவனங்களின் உரிமங்களை மட்டும் ஏன் ரத்து செய்ய வேண்டும்? ஒட்டுமொத்த ஒதுக்கீடுமே முறையற்றது என தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியே கூறியுள்ளார். அதனால்தான் 122 லைசென்ஸ்களையுமே ரத்து செய்யச் சொல்கிறோம்" என்றார்.




-------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (28.01.2011)


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக