வெள்ளி, டிசம்பர் 31, 2010

முட்டாள்தனமான உளறலும் கிறுக்குத்தனமான தீர்மானமும்

சரித்திரம் அவ்வப்போது முட்டாள் தலைவர்களை அம்பலப்படுத்துகிறது.
அதனைப் புரிந்துகொள்ளாத மக்கள் முட்டாள்களாகி விடுகிறார்கள்.
-யாரோ-
--------------------------------------------------

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கி லீக்ஸ் இணையதளம், தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை அண்மையில் (டிச. 17) வெளியிட்டது. அதில், ‘லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்’ என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2009 ஜூலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்திய பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை கவுரவிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளித்தார். அந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்திருக்கிறார். இதுபோன்ற சந்திப்புகளின்போது அதிகாரப் பூர்வமற்ற வகையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது வழக்கமான நடைமுறை. இதில் கிடைக்கும் கருத்துகள், இரு நாடுகள் இடையிலான உறவுகளைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இது
தெரியாமல், தன்னையும் ஒரு பெரிய மனிதராகக் கருதி கருத்து கேட்ட அமெரிக்கத் தூதரிடம் தத்துப்பித்தென்று உளறிக்கொட்டி தனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ராகுல் வின்சி (அது தானே அவரது உண்மையான பெயர்!)

“இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தொய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன; எனினும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட, இந்தியாவில் செயல்படும், பழமைவாத இந்து அமைப்புகளின் வளர்ச்சி, நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்து அமைப்புகளால், முஸ்லிம் சமூகத்தினருடன் மதரீதியான பதட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான மோதல்கள் உருவாகின்றன. பா.ஜ., கட்சியை சேர்ந்த முதல்வர் நரேந்திர மோடியால் உருவான மத ரீதியான மோதல்களே இதற்கு உதாரணம். உள்நாட்டிலேயே வளர்ந்த இந்து பயங்கரவாத முன்னணியினர், பாகிஸ்தானிலிருந்து வருபவர்களால் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க துவங்கிவிட்டது கவலை தரும் விஷயம்’' என்று கூறியுள்ளார் ராகுல்.

இதனை தங்கள் நாட்டு வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய ரகசிய ஆவணத்தில் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஆவணம் தான் தற்போது விக்கி லீக்ஸ் இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கி லீக்ஸ் வெளியிட்ட ராகுலின் கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள இத்தகவலின் பின்னணியில் சதி இருக்கலாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியிருக்கிறார். அதே சமயம், இதனை அமெரிக்க தூதரோ ராகுலோ மறுக்கவில்லை.

இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு

“இந்து அமைப்புகள் பற்றி ராகுல் தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது” என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கூறியுள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் வியாதி ராகுலையும் பீடித்திருப்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டுக்காக பாடுபடும் அமைப்புகளையும் பயங்கரவாதத்தால் நாட்டை சின்னாபின்னமாக்கும் அமைப்புகளையும் ஒப்பிட்டதே தவறு. அதிலும், லஸ்கர்-இ-தொய்பாவை விட இந்து அமைப்புக்கள் அபாயமானவை என்று சொல்வது முட்டாள்தனமானது. ராகுல் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்'' என்று கூறி இருக்கிறார்.

பா.ஜ.க. தலைவர் நிதின் காட்கரி, ''முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே ராகுலின் பேச்சு நிரூபித்துள்ளது. அமெரிக்கத் தூதரிடம் என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்று தெரியாத சிறுபிள்ளைத் தனத்தை ராகுல் வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான உலக அளவிலான முயற்சிகளையும் ராகுல் சிறுமைப் படுத்தியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா கோரிவரும் நிலையில், இந்திய அரசின் முயற்சிகளை நாசாமாக்குவதாக ராகுலின் கருத்து உள்ளது'' என்று கண்டித்தார்.

இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் தருண் விஜய் கூறுகையில், "ஊழல் விவகாரங்கள் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையால் காங்கிரஸ் கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர். தேர்தலில் தோற்று விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அதனால், இந்துஅமைப்புகள் மீது குறைசொல்கின்றனர். இது அவர்களின் பழைய தந்திரம்” என்றார்.

"ராகுலின் கருத்துக்கள் பொறுப்பற்றவை. மும்பை தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் நடத்திய பின்னரும், ராகுல் இப்படி கூறுகிறார் எனில், இந்தியா மற்றும் அதன் பிரச்னைகளை பற்றி ராகுல் தெரியாமல் இருக்கிறார் என்றே அர்த்தம். நாட்டின் மீது அவருக்கு அபிமானம் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுப்பது போல ராகுலின் கருத்து அமைந்துள்ளது,'' என, பா.ஜ.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மோடி கடும் கண்டனம்

ராகுலின் கருத்து குறித்து கருத்து தெரிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ''ராகுல் பாகிஸ்தான் ஆதரவாளர் என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உலக நாடுகள் கூறிவருகின்றன. பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவது தெரிந்தும், அமெரிக்கா ஏன் அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதற்கான உண்மையான காரணம் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா எடுத்து வரும் கொள்கை முடிவுகளை ஊக்குவிக்கும் வகையில், ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். அவரிடம் தேசப்பற்றுடன் கூடிய கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது'' என்று கண்டித்தார்.

பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், "ராகுலின் பேச்சு பொறுப்பற்றது, பக்குவமற்றது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்துவதாக அமையும். பயங்கரவாதத்திற்கு உதவும், நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்' என்றார்.

பாரதிய ஜனசக்தி தலைவர் உமாபாரதி கூறுகையில், ''ராகுல் அனுபவமற்றவர் என்பதால் தான், இத்தகைய கருத்துக்களை வெளியிடுகிறார். காங்கிரஸ் ஒரு பொறுப்பற்ற கட்சி. அக்கட்சி, தன் அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறது. முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவை கேட்டார். அதுமட்டுமல்லாமல், 1963 ல் நடந்த குடியரசு தின அணிவகுப்பிலும், ஆர்.எஸ்.எஸ்.,க்கு இடம் கொடுத்தார். இது வரலாற்று உண்மை. இதை முதலில் ராகுல் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்று அறிவுரை கூறினார்.

சிவசேனா தலைவர் பால்தாக்கரே, "இந்து சமுதாயத்திற்கு எதிரான ராகுலின் கருத்தை சகித்துக் கொள்ள முடியாது'' என கூறியுள்ளார். இந்து அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராகுலுக்கு நாடு முழுவதும் ஹிந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தன.

இஸ்லாமிய தலைவர்களும் எதிர்ப்பு

இந்த நிகழ்வினால் இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஆதரவு கிட்டும் என்று மனப்பால் குடித்த ராகுலுக்கு, முஸ்லிம் மத குருக்களின் கண்டனங்கள் கசப்பாக இருக்கக் கூடும். இத்தாலி ராணியின் பிள்ளைக்கு உள்நாட்டு இஸ்லாமியர்கள் தேசப்பற்றுப் பாடம் எடுத்திருப்பது நிம்மதி அளிக்கிறது. 'ஹிந்து தீவிரவாதம்’ குறித்து அமெரிக்கத் தூதரிடம் ராகுல் காந்தி பேசியிருக்கவே கூடாது என்று முஸ்லிம் மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சன்னி முஸ்லிம் தலைவர் மௌலானா காலித் ரஷீத் பிராங்கி மஹாலி கூறுகையில், “தீவிரவாதம் என்பது முஸ்லிம் சமுதாயத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது. இதனால், முஸ்லிம் சமுதாய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அண்மைக்கால சம்பவங்களை ஆராயும்போது சில ஹிந்து குழுக்களுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. ஆயினும் இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம். இது குறித்து வெளிநாட்டுத் தூதரிடம் ராகுல் காந்தி ஏன் பேச வேண்டும்?'' என்று கேட்டிருக்கிறார்.

'தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. முஸ்லிம் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்காக இது போன்ற முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டால் அவர்கள் நிச்சயம் ஏமாறுவார்கள். முஸ்லிம்கள் புத்திசாலிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது, வளர்ச்சிப் பணிகளுக்கு முதலிடம் அளித்தே முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர்...

... ஏழைகள், குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள் பயன் அடைகிறார்களா என்பதில் மட்டுமே முஸ்லிம்கள் அக்கறை கொண்டுள்ளனர். அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகள் இதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன. மதஅடையாளத்தை மக்கள் மறந்து வருகின்றனர். ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்கின்றனர்'' என்றும் அவர் கூறினார்.

ஷியா முஸ்லிம் தலைவர் மௌலானா கல்பே ஜவ்வாத் கூறுகையில், ''பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் ராகுல் காந்தி. அவர், குறிப்பிட்ட ஒரு மதத்தை தீவிரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டுச் சட்டம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்கவில்லை. தவறு செய்தவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுகிறார்கள். மதத்தின் அடிப்படையில் அல்ல'' என்று தெரிவித்தார்.

பேராசிரியர் அத்தர் சித்திக், “காவி தீவிரவாதம் குறித்து ராகுல் காந்தி முன்னரே பேசியிருக்கிறார். இதுபோன்ற விவகாரங்களை அமெரிக்க தூதரிடம் அவர் ஏன் பேச வேண்டும்? தேவைப்படும்போது இந்தக் கருத்துகளை அமெரிக்கா, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்'' என்று எச்சரித்திருக்கிறார். நாடு முழுவதும் பெரும்பாலான முஸ்லிம் மதத் தலைவர்கள் இதே கருத்தைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதிகார மமதை ஆட்டுவிக்கிறது

பாடுபட்டு கட்சியை வளர்த்தவர்கள் எல்லாம் சலாம் போடும்போது, வாரிசு அடிப்படையில் கட்சியின் அதிகார மையத்தைக் கைப்பற்றிய ராகுலுக்கு அதிகார மமதை தலைக்கேறுவது சகஜம் தான். 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்ற பழமொழியை தெரியாமலா சொல்லி வைத்தார்கள்?

வயதிற்கு மீறிய தலைமைப் பொறுப்பு ராகுலை கண்டபடி உளறச் செய்கிறது. அதற்கு நமது ஊடகங்கள் அளிக்கும் அதீத முக்கியத்துவம் அவரை மேலும் கிறுகிறுக்கச் செய்கிறது. அவர் மேலும் மேலும் இதே போலத் தான் உளறி வருகிறார். ஆனால் ராகுல் சுயகாரியப் புலி. மறந்தும்கூட, தனது கொலம்பியா நாட்டு தோழி குறித்து உளறுவதில்லை. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களும் கூட, குவாத்ரோச்சி குறித்தோ, இத்தாலியிலுள்ள சோனியாவின் சகோதரிகளுக்கு மடைமாறிய ஸ்பெக்ட்ரம் பணம் குறித்தோ ஏதும் உளறுவதில்லை. நமது 'விழிப்புணர்வுள்ள' ஊடகங்களும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. அதனால் தான், நாட்டின் அனைத்து அம்சங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்க கிளம்பி விடுகிறார் ராகுல்.

பாவம், தாதா பாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பால கங்காதர திலகர், சித்த ரஞ்சன் தாஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்! அவர்கள் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் கட்சியில்தான், 'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல' சோனியா குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்கத் தூதரிடம் இவ்வாறு கூறுவதால், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு எதிரான நமது அணுகுமுறைக்கு அமெரிக்காவிடம் ஆதரவு கிடைக்காதே என்ற எண்ணமே இல்லாமல் ராகுல் கருத்து தெரிவித்திருக்கிறார். முட்டாள்தனமான இந்த உளறலை அமெரிக்கா பெரிதுபடுத்தவில்லை என்பது நிம்மதி அளிக்கிறது. ஆனால், மத்தியில் ஆள்வதாலேயே தலைக்கனம் பிடித்து அலையும் காங்கிரஸ் தலைவர்கள், ராகுலுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

தங்கள் தலைவர் கூறிய கருத்து தவறானது என்று ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ளும் பாங்கு காங்கிரஸிடம் காணப்படவில்லை. மாறாக, ராகுலின் முட்டாள்தனமான உளறலையும் புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கையாக மாற்ற முயன்று, தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் (டிச. 19, 20 ) கிறுக்குத்தனமான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

காரியக் கிறுக்குத் தீர்மானம்

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் நாடாளுமன்றம் முடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரச்னையை திசை திருப்பக் கிடைத்த அரிய வாய்ப்பாக இந்த விவகாரத்தை காங்கிரஸ் பயன்படுத்த முயன்றுள்ளது. இந்து தீவிரவாத குறித்த பூச்சாண்டி தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமாக, நாட்டு மக்கள் கவனத்தை திசை திருப்பவும், பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தவும் காங்கிரஸ் சகுனிகள் திட்டமிட்டு நிறைவேற்றிய தீர்மானம், ராகுலின் சிறுபிள்ளைத் தனத்தை விஞ்சுவதாக இருக்கிறது.

டிச. 19 ம் தேதி தில்லியில் நடந்த 83-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்து இயக்கங்களுக்கு எதிரான கிறுக்குத்தனமான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ''நாட்டில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் பயங்கரவாதத் தொடர்பு குறித்து விசாரணை நடத்தவேண்டும்'' என மத்திய அரசை வலியுறுத்தும் அந்தத் தீர்மானம், காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

''ஆர்.எஸ்.எஸ் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். பா.ஜ.க மற்றும் அதன் சகோதர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்டவை வெறுப்பையும் வன்முறையையும் பிரசாரம் செய்துவருகின்றன. இது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகும். தேசத்தை தகர்ப்பதற்கு இவர்கள் முயல்கிறார்கள். பயங்கரவாத செயல்பாடுகளில் இவர்களின் தொடர்பை கண்டறிவதற்காக தீவிர விசாரணை தேவை'' என அந்தத் தீர்மானம் நீட்டி முழங்குகிறது. இறுதியில், ' தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதனை உறுதியாகவும், பயன் தரத்தக்க வகையிலும் எதிர்கொள்ள வேண்டும்' என உபதேசமும் செய்துள்ளது.

''இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடி மதசார்பற்ற கொள்கையாகும். ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.கவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மதசார்பற்றக் கொள்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 2002 ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கு காரணமான அனைவரையும் விசாரணைச செய்யவேண்டும். சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் சூழலில் கலவரத் தடுப்பு மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது'' என்றும் காங்கிரஸ் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய ம.பி. முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான திக்விஜய் சிங், வழக்கம்போல, கருணாநிதி பாணியில், ஹிந்து இயக்கங்கள் மீது அவதூறுமழை பொழிந்தார்.

மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கார்கரே மும்பையில் கசாப் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முந்தைய நாள் ஹிந்து தீவிரவாதிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இவரிடம் தொலைபேசியில் பேசினாராம்! இவ்வாறு கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னரும், தனது கருத்துக்கு சாட்சி இல்லை என்று ஊடகங்களிடம் வழிந்த பின்னரும், காங்கிரஸ் மாநாட்டில் திக்விஜய் சிங் முழங்கினார். தனது கருத்துக்கு சோனியா, ராகுல் ஆகியோரின் ஆசிகள் உண்டு என்று மாநாட்டில் அறிவித்தார் திக்விஜய் சிங். இறுதியில் கேவலமான குற்றச்சாட்டின் பின்னணி வெளிப்பட்டுவிட்டது.

இந்தத் தீர்மானம் மூலமாக, நாட்டு மக்களை திசை திருப்பவும், ஊழலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை மழுங்கச் செய்யவும் காங்கிரஸ் முயன்றது. ஆனால், எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனமாக அமைதி காத்தன. அதனால், காங்கிரஸ் கொண்டுவந்த கிறுக்குத் தனமான தீர்மானம், முட்டாள்தனமான முயற்சியாக பயனிழந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இதனையும் பா.ஜ.க.வின் அரசியல் சதியாகச் சித்தரித்து, அதன்மூலமாக ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு மதவாத சாயம் பூசி எதிர்க்கட்சிகளைக் கூறுபோட்டு, ஊழல் குற்றங்களிலிருந்து தப்ப காங்கிரஸ் மற்றொரு தீர்மானம் மூலமாக முயன்றது. இதுவும் எடுபடவில்லை. மொத்தத்தில் காங்கிரசின் தில்லி மாநாடு, அக்கட்சி திட்டமிட்ட எதனையும் அக்கட்சிக்கு வழங்கவில்லை. மாறாக, அதன் கபட வேடமும், கயமையும் நாட்டு மக்களிடம் மேலும் வெளிப்படவே உதவியுள்ளது.

சரித்திரத்திலிருந்து பாடம் கற்குமா காங்கிரஸ்?

லஸ்கர்-இ-தொய்பா நடத்திவரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கொடூர முகம் குறித்தும் நாட்டு மக்கள் அறிந்தே உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து இயக்கங்களின் சேவைகளையும் தேவையையும் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.

'ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்கு தொடர்பில்லை' என்று சோனியா தலையிலடித்து சத்தியம் செய்தாலும் இனிமேல் யாரும் நம்பப் போவதில்லை. காங்கிரஸ் நடத்திவரும் தேசநலனுக்கு விரோதமான நாடகங்கள் அனைத்தையும் பிற அரசியல் கட்சியினரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். இத்தகைய மோசடிப் பேர்வழிகள் இந்து இயக்கங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது நல்லது தான். வில்லன்கள் நல்லவர்களைப் பாராட்ட மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆர்.எஸ். எஸ். அமைப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் நேரு கடுமையான வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டார். 1948 ல் மகாத்மா காந்தி கொலையைக் காரணம் காட்டி சங்கத்தை தடையும் செய்தார். அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து சட்டப்படி நிரபராதியாக வெளியேறிய சங்கம் ‘அக்னிபிரவேசம் செய்த சீதை போல’ தனது களங்கமின்மையை நிரூபித்தது. தனது வாழ்வின் இறுதியில், சீனப்போரின் போது உண்மை நிலையை உணர்ந்து, தனது தவறைத் திருத்திக் கொண்டார் நேரு.

அவரது மகள் இந்திரா காந்தியும் சங்க பரிவார் அமைப்புகளுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தார். 1975 ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது முதலில் தடை செய்யப்பட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தான். அதுவே அவரது எதேச்சதிகார ஆட்சிக்கு சாவுமணியானது. அரசின் கொடுமையான அடக்குமுறைகளை மீறி, தலைமறைவுப் போராட்டம் வாயிலாக மக்களிடம் இந்திராவின் சர்வாதிகார முகத்தை அம்பலப்படுத்தி ஜனநாயகத்தை காத்தது ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் முன்முயற்சிகளால் உருவான ஜனதா இந்திரா ஆட்சியை தூக்கி எறிந்தது. அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது கை வைக்க இந்திரா காந்தி துணியவே இல்லை.

மூன்றாவது முறையாக, 1992 ல் அயோத்தியில் சர்ச்சைக்குரிய அடிமைச் சின்னம் அகற்றப்பட்டபோது, நரசிம்ம ராவ் அரசால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அந்தத் தடையை நீதிமன்றமே ரத்து செய்தது. பின்னாளில் பாரதிய ஜனதா கட்சி நாட்டின் அரசியலில் பிரதான இடம் பெறவும், மத்தியில் (1998) வாஜ்பாய் பிரதமர் ஆகவும், ராவ் விதித்த தடைதான் உதவியது.

ஆக, ஆர்.எஸ்.எஸ். மீது காங்கிரஸ் அரசுகள் ஏவும் தடைகள், விசாரணைகள், துஷ்பிரசாரங்கள் அனைத்தும், இந்து அமைப்புகளுக்கு நன்மையே நல்கும். காங்கிரசின் சுயரூபம் வெளிப்படவே அவை உதவுகின்றன. அந்த வகையில், தற்போதைய காங்கிரஸ் மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களும் சங்கத்தை பலப்படுத்தி, நாட்டுக்கு நலம் அளிக்கும்.

முட்டாள்தனமாக அமெரிக்கத் தூதரிடம் உளறிக் கொட்டிய கட்சியின் இளவரசரைப் பாதுகாப்பதற்காக கட்சியின் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கிறுக்குத்தனமான தீர்மானம், கடவுள் அருளால் குப்பைக்கூடைக்குச் சென்றுவிட்டது.

நாட்டு மக்களை சிறுபான்மை- பெரும்பான்மை என்று பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் தொடர்வதன் அபாயம் குறித்து நாட்டிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களிடம் இந்துத்துவ அமைப்புகள் விளக்க வேண்டிய நேரம் இது.


----------------------------

நன்றி: விஜயபாரதம் (7.1.2011)

.

1 கருத்து:

  1. 20 ம் நூற்றாண்டில் அரசியலுக்கு காந்திபேரும் நோட்டும் தான் ரொம்ப முக்கியம் என்று முன்பே கணித்த இந்த குடும்பம் உண்மையில் நாட்டை ஆள தகுதியுடையது தான். நாடு நாசமா போக....

    இந்திரா பிரியதர்சனி முதல் அப்புறம் ராகுல் வின்சி வரை நல்லவே வேலை செய்யுது. இடையில் இப்ப ஒன்று இத்தாலியில் இருந்து வந்து சுத்தீட்டு இருக்கே அது பேறு வாயிலலேயே நுழைய மாட்டேங்குது எமன்னமோ ஆண்டானியானு நீழும்.

    குவோட்ரோசி குரூப் கொள்ளையடிக்க இந்தியா தாரைவார்க்கப்பட்டது கொடுமை. இதற்கு விடிவே இல்லையா? இந்தியா குடிமகனுக்கு புலம்பல் தான் மிச்சம்.

    பதிலளிநீக்கு