வியாழன், ஜூன் 30, 2011

கண்ணை நிரப்பும் புழுதிக்காற்று

காற்றின் திசை மாறுவது பருவகாலம் மாறுவதைக் குறிக்கிறது. தென்மேற்கு பருவக் காற்றுக்கும் வட கிழக்கு பருவக் காற்றுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் வீசுபவை. புவியின் மாற்றங்களில் இவ்விரண்டு காற்றுக்களின் மாற்றங்களில் பெரும் பங்குண்டு.

அரசியலிலும் காற்றின் திசைகள் அடிக்கடி மாறுவதுண்டு . எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வினோதமான பழக்கம் அரசியலில் மட்டுமே உண்டு. கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளைவிட, நட்பு வேடம் போட்டு கழுத்தறுக்கும் கயவர்களைவிட, கையில் கத்தி வைத்திருக்கும் எதிரியே மேலானவன் என்ற புரிந்துணர்வே இந்த திசை மாற்றங்களுக்கு காரணம்.

பருவக்காற்றுகள் மாறும்போது இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் போலவே, அரசியலிலும் காற்றின் திசைகள் மாறுவது பல மாற்றங்களுக்கு வழி வகுக்கிறது. பல உதாரணங்கள் சொல்லலாம். 1998 ல் வாஜ்பாய் தலைமயிலான தே.ஜ.கூட்டணியில் இருந்த அதிமுக தலைவி ஜெயலலிதா, அவரது கோரிக்கைகள் (திமுக அரசை கலைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ன?) நிறைவேறாத கோபத்தில் சோனியாவுடன் தேநீர் விருந்தில் பங்கேற்றார். அதன் விளைவாக வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. ஆனால், அதுவரை கீரியும் பாம்புமாக இருந்த திமுகவும் பாஜகவும் கைகோர்க்க அதுவே வழி கோலியது.

திமுக- பாஜக கூட்டணி அடுத்து ஆறு ஆண்டுகள் நீடித்தது. கருணாநிதியின் மனசாட்சியான முரசொலி மாறனின் மரணத்துடன் இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது. மாறனின் வாரிசுக்கு பதவி கிடைக்காத கோபத்தில், இந்தியாவைக் காக்க வந்த இத்தாலியக் குலவிளக்குடன் கைகோர்த்தார் கருணாநிதி. அடுத்த தேர்தலில் தே.ஜ.கூட்டணி ஆட்சியை இழந்தது; காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. எதிர்பார்த்தது போலவே அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்தன.

ஆயினும் இக்கூட்டணிக்கு முந்தைய மவுசு கிடைக்கவில்லை. விரைவில் இக்கூட்டணி புளித்துப் போய்விட்டது. சந்தில் சிந்து பாடிய இடதுசாரிகளால் மூன்றாவது அணி அமைக்கப்பட்டதால், மீண்டும் ஆட்சிக்கு வரும் பாஜகவின் கனவு பொசுங்கிப்போனது. இதிலும் இடதுசாரிகள் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளே காங்கிரஸ் ஆட்சிக்கு வர உதவின. காங்கிரசை விட ஆபத்தானது பாஜக என்ற இடதுசாரிக் கட்சிகளின் முடிவு, அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதாக அமைந்தன.

2004 ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், அடுத்த தேர்தலிலும் பல தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டது. திமுக அப்போது கூட்டணியின் பிரதான தூணாகக் காட்சியளித்தது. இடதுசாரிகள் பலமிழக்கத் துவங்கிய நேரம் அது. ஆனால், முந்தய ஆட்சியில் திமுகவின் அமைச்சர் மாறனும் ராசாவும் செய்த திருவிளையாடல்கள் இப்போது திமுகவுக்கு வினையாக வந்திருக்கின்றன. ராசாவுடன் இணைந்து நர்த்தனமாடி லாபங்களை அடைந்த காங்கிரஸ், இப்போது தன்னை பரிசுத்தவானாகக் காட்டிக் கொண்டிருக்கிறது. நீதிமன்ற மேற்பார்வையில் நடக்கும் ஊழல் வழக்குகளால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் சுயரூபங்கள் அம்பலமாகிவரும் வேளையில், ஊழல்களுக்கு ராசா, கல்மாடி, கனிமொழி போன்றவர்களை பலிகடா ஆக்கிவிட்டு, தப்பிக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, காங்கிரசின் திட்டங்களை உணர்ந்துகொண்ட திமுக தலைவர் கருணாநிதி 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டுக் கொள்ளை அடித்தபோது பாசமாக இருந்த சோனியா அண்ட் கோ, இப்போது காலை வாரிவிடுவது கண்டு விக்கித்துப் போயுள்ள கருணாநிதிக்கு இதைத் தவிர வேறு வழியில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் ஏற்பட்ட அவப்பெயரால் மாநிலத்திலும் ஆட்சியை இழந்துவிட்ட திமுகவை பல அதிகார அத்துமீறல் வழக்குகள் துரத்துகின்றன. மத்தியிலும் திமுகவை யாரும் சட்டை செய்வதாகவே தெரியவில்லை. இருமுறை தில்லி போனபோதும் காங்கிரஸ் சார்பில் அவருக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்படவில்லை. பாராமுகத்தின் மோசமான அனுபவத்தைப் பெற்றுவிட்ட திமுக, இப்போது காங்கிரசின் காலை வாரும் பணியைத் துவங்கிவிட்டது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் தில்லி சென்றபோது பிரதமர் இல்லத்திலிருந்து விசேஷ வாகனம் அனுப்பிய மன்மோகன் சிங், கூட்டணிக் கட்சித் தலைவரான கருணாநிதி தில்லி சென்றபோது கண்டுகொள்ளவே இல்லை. தனது 70 ஆண்டுகால அரசியல் வாழ்வில் இத்தகைய அவமதிப்பை கருணாநிதி சந்திப்பது இதுவே முதல்முறையாக இருக்கக் கூடும். ஜெயலலிதாவும் மத்திய அரசுடன் இணக்கமாக நடக்கப்போவதாகக் கூறி, கருணாநிதியின் நெஞ்சில் அமிலம் வார்த்தார்.

இப்போதைக்கு காங்கிரஸ்- அதிமுக கூட்டணி அமையாவிட்டாலும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக தானாகவே வெளியேறும் நிலையைத் தான் காங்கிரஸ் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கூட்டணியிலிருந்து வலுக்கட்டாயமாக திமுகவை வெளியேற்றுவது, ஊழல் வழக்கில் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டுள்ள காங்கிரசுக்கு பாதகமாக அமையக் கூடும் என்பதால்தான் இந்த முன்னேற்பாட்டில் சோனியா அண்ட் கோ ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவுக்கும் இப்போது வேறெந்த அவசரமும் இல்லை. கூட்டணியை மாற்றியாக வேண்டிய கட்டாயம் அம்மையாருக்கு இல்லை. இப்போது உள்ளாட்சித் தேர்தல் வைத்தாலும் அதீத பலத்துடன் அதிமுக கூட்டணி வெல்லும் சூழலே காணப்படுகிறது. எனவே தற்போதைய கூட்டணியையே ஜெயலலிதா தொடர்கிறார். ஆயினும், ஜென்மவைரியான கருணாநிதியை அரசியல் அரங்கில் தனிமைப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர் கண்டிப்பாக ஈடுபடுவார். இந்த குறைந்த அழுத்தத் தாழ்வு மண்டலம் எந்த திசை நோக்கியும் எந்நேரமும் நகரலாம். அரசியல் சூறாவளிகளை முன்கூட்டியே அவதானித்தல் சாத்தியமில்லை.

எனவே தான், 'லோக்பால் சட்டத்தில் பிரதமரையும் உட்படுத்த வேண்டும்' என்று கூறி காங்கிரஸ் கட்சியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார் கருணாநிதி. அதற்கு பதிலடியாக 'பிரதமரை லோக்பால் சட்டத்தில் சேர்க்கக் கூடாது' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் ஜெயலலிதா.

அடுத்து, நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த விசாரணை அறிக்கையை கூடுதலான விசாரணை தகவல்களுடன் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கலாம் என்று கூறிய திமுக பிரதிநிதியைக் கண்டு அதிர்ந்து போயிருக்கிறது காங்கிரஸ். என்ன நடந்ததோ தெரியவில்லை, இவ்வாறு குரல் கொடுத்த திமுக எம்பி ஆதிசங்கர், மறுநாள், 'காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடே திமுகவின் நிலைப்பாடு; பத்திரிகைகள் எனது கருத்தை தவறாக பிரசுரம் செய்துவிட்டன' என்று கூறி இருக்கிறார். மொத்தத்தில் திமுக குழம்பிப் போயிருப்பது தெளிவாகவே தெரிகிறது.

சென்ற முறை நடந்த பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் திமுக, பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் சேர்ந்துகொண்டு தகராறு செய்து குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷியை அவமதித்தது பழைய கதை. இப்போது பகுஜன் சமாஜும் திமுகவும் சரியான 'யு' வளைவில் திரும்பி இருக்கின்றன. காற்றின் திசைகள் மாறுகின்றன.

திமுகவை பாஜகவால் இப்போதைக்கு அரவணைக்க முடியாது என்பது காங்கிரஸ் கட்சியும் அறிந்ததே. ஊழல் புகாரில் அவப்பெயர் சுமக்கும் திமுகவுடன் குலாவ, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளே தயங்கும் நிலையில், ஊழலுக்கு எதிராக முழங்கிவரும் பாஜக, திமுகவுடன் இணைசேர சாத்தியமில்லை. அதே சமயம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் கட்சியின் பிரதானப் பங்களிப்பை திமுகவால் வெளிப்படையாக அம்பலப்படுத்த இயலாத சூழலில், பாஜகவின் உதவி திமுகவுக்கு தேவைப்படலாம். இப்போதே, ஸ்பெக்ட்ரம் ஊழலில் திமுகவை மட்டும் பலிகடா ஆக்கும் காங்கிரஸ் கட்சியை பாஜக செய்தி தொடர்பாளர்கள் அவ்வப்போது கிண்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது தேசிய அளவில் தேர்தல் ஏதும் இல்லாத நிலையில், உடனடியான அரசியல் மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் குறைவு. ஆயினும், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்குதல் கொடுப்பது தெளிவாகவே தெரிகிறது. கனிமொழிக்கு தொடர்ந்து நீதிமன்றப் பிணை கிடைக்காத நிலையில், திகார் சிறையில் இன்னொரு திமுக பிரமுகருக்கு மற்றொரு அறை தயாராகிவரும் நிலையில், வீரமணி, சுப.வீரபாண்டியன் போன்ற பினாமிகள் மூலமாக காங்கிரசை திமுக தலைவர் விமர்சிக்கலாம். காங்கிரஸ் கட்சியும் இளங்கோவன் போன்றவர்கள் மூலமாக திமுகவின் கசப்பை அதிகரிக்கலாம்.

விரைவில் நிகழ உள்ள மத்திய அமைச்சரவை மாற்றங்களில் திமுகவின் ஆதிக்கம் குறைக்கப்பட இருப்பதாக தலைநகர வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக தயாநிதி மாறனின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியை திமுகவே கண்டுகொண்டுவிட்டது. மாறன் மீதான புகார்களை மாறனே எதிர்கொள்வார் என்ற கருணாநிதியின் பதிலில் பல சூட்சுமங்கள் உள்ளன. தயாநிதி மாறனும் மாறி மாறி சோனியா அண்ட் கோ-வை தில்லியில் சந்தித்தபடியே இருக்கிறார். சி.பி.ஐயின் பிடி இறுகிவரும் நிலையில், உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்.

தமிழகத்தில் இவ்வாறு அரசியல் காற்று சுழன்று கொண்டிருக்கும் சூழலில், உத்தரப் பிரதேசத்திலும் மாயாவதிக்கு எதிரான அதிருப்தியை வாக்குகளாக்க, முலாயம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அநேகமாக மாயாவதி பாஜக பக்கம் சாயலாம். பாஜக, மாயாவதியிடம் ஏற்கனவே பெற்றுள்ள பாடத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டி இருக்கும்.

மகாராஷ்டிராவில் இந்திய குடியரசுக் கட்சியின் ராமதாஸ் அதவாலே பாஜகவுடன் கைகோர்த்திருக்கிறார். கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்க்க முடியாத காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் அறிக்கை விடுகிறார் ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி பெருகப் பெருக, இந்தக் காட்சிகளில் மாற்றங்கள் வேகமாக அரங்கேறும்.

இப்போதைக்கு காற்றின் திசை மாற்றங்கள் மட்டுமே புலப்படுகின்றன. ஆயினும், காற்றின் திசையையும் திசைவேகத்தையும் அளவிட முடியாத வகையில் புழுதிக்காற்று தான் தென்படுகிறது. இந்தப் புழுதிக் காற்றின் இறுதியில் மழையும் பெய்யலாம். காங்கிரஸ் கட்சியின் சாமர்த்தியத்தைப் பொறுத்து இது வெறும் புழுதிக் காற்றாகவே போய்விடலாம். இந்தக் காற்றின் திசைமாற்றங்களை பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். ஏனெனில் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளாதவன், ஒவ்வொரு பருவகாலத்திலும் ஏக்கத்துடன் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அரசியல் காற்றின் திசைகளைத் தீர்மானிப்பவர்களே அரசியலில் கோலோச்ச முடியும். காற்றின் வாகிற்கு ஏற்ப பாய்மரம் ஏற்றவும் தெரிய வேண்டும்; காற்றின் திசையை மாற்ற வல்ல மந்திரங்களும் அறிந்திருக்க வேண்டும். பாஜக என்னே செய்யப் போகிறது?

நாடு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக