திங்கள், டிசம்பர் 20, 2010

ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்- 2


வானவில்லின் நிறங்கள் ஏழாயினும் அவை அனைத்தும், ஒரே நிறமற்ற ஒளியின் நிறப்பிரிகைகளே என்பது விஞ்ஞான உண்மை. முந்தைய பதிவில்/ சென்ற இதழில் ( கட்டுரையின் முதல் பகுதி.... ) நான்கு நிறங்கள் குறித்துக் கண்டோம். இப்போது மீதமுள்ள மூன்று நிறங்கள்...

மஞ்சள் நிறம்:

மஞ்சள் பத்திரிகை என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும். இப்போதைய அதிகாரத் தரகர்களான ஊடக அறிஞர்களைக் காணும்போது வானவில்லில் தோன்றும் மஞ்சள் நிறம் நினைவில் வந்தால் அதற்கு வானவில் பொறுப்பில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு உள்ள தொடர்புக்கு சிறிதும் குறைவில்லாதது பத்திரிகையாளர்களின் தொடர்பு. 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபின் மன்மோகனார் ஆட்சி அமைக்கும் முன்பு நடந்த அதிகாரத் தரகு வேலைகளில் ஊடக ஞானிகளான வீர் சாங்க்வி, பர்கா தத் ஆகியோர் பங்கேற்றது நீரா ராடியா 'டேப்' வாயிலாக வெளியாகி சந்தி சிரிக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து 2008 முதலாகவே, நாட்டுப்பற்றுள்ள சில ஊடகங்களால் ‘புலம்பப்பட்டு’ வந்துள்ளது. ஆயினும், ஊழல்கறை படிந்த ஆண்டிப்பட்டி ராசாவையே மீண்டும் அதே தொலைதொடர்புத் துறைக்கு அமைச்சராக்க ஊடக மேதாவிகள் சிலர் நடத்திய தொழில் துஷ்பிரயோகம் நாட்டுக்கு செய்துள்ள தீங்கு சாதாரணம் ஆனதல்ல. கடந்த 2 ஆண்டுகளாக வீர் சாங்க்வியின் ஹிந்துஸ்தான் டைம்சும், பர்கா தத்தின் என்டிடிவியும் வெளியிட்ட செய்திகள் எப்படிப்பட்டவையாக இருந்திருக்கும் என்பதை இப்போது சிந்தித்துப் பார்த்தால், அந்த செய்திகளை உண்மையென்று நம்பிய மக்களுக்கு தேள் கொட்டியது போல இருக்கிறது. ஆனால், தரகு வேலை செய்த அதிபுத்திசாலிகள் எதுவுமே நடக்காதது போல இப்போதும் செய்தி வாசிக்கிறார்கள்.

இப்போதும்கூட, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அலைக்கற்றை மோசடி துவங்கிவிட்டது என்று கை கூசாமல் எழுதும் பத்திரிகைகள் இருக்கின்றன. முன்னாள் பத்திரிகையாளரும் தே.ஜ.கூட்டணி ஆட்சியில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவருமான அருண் ஷோரி இதற்கு அற்புதமான பதில் கொடுத்திருக்கிறார். கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை 2001 முதல் நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூடிய கருத்தை வரவேற்ற அவர், ''அலைக்கற்றை விநியோகம் தொடர்பாக 1998 முதலாகவே கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை நடத்தலாம். அப்போது தான், ராசா கூறிவரும் 'முந்தைய நடைமுறையையே கடைபிடித்தேன்' என்ற பித்தலாட்டம் அமபலமாகும். விசாரணைக் குழு முன் ஆஜராக நான் தயாராகவே இருக்கிறேன். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எப்படி அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன என்பதை விளக்க நான் தயாராகவே இருக்கிறேன். உண்மையில் ராசா எந்த முன்னுதாரணத்தையும் பின்பற்றவில்லை. எந்த விதிமுறைகளையும் மதிக்கவில்லை என்பது அப்போதுதான் வெளிப்படும்'' என்று கூறி இருக்கிறார்.

கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜே.பி.சி.) விசாரணையை எதிர்க்கட்சிகள் கோருவதே பிரதமர் மன்மோகன் சிங்கை கூண்டில் ஏற்றும் நோக்கத்துடன் தான் என்று சில காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. அதில் என்ன தவறு? ஊழல் செய்த மத்திய அமைச்சரை ஒன்றரை ஆண்டுகாலம் போஷித்த பிரதமரை கேள்வி கேட்காமல் தெருவில் செல்பவரிடமா விசாரிக்க முடியும்? ராசா விவகாரத்தில் பல பல்டிகளை அடித்த மன்மோகன் சிங்கிடம், அந்த பல்டிகளுக்கு காரணம் யார் என்று கேட்பது தானே விசாரணை நிறைவடைய உதவும்? ''மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை ஜே.பி.சி. விசாரணைக் குழு முன்பு ஆஜரானவர் தானே?’’ என்று அருண் ஷோரி கேட்டிருக்கிறார். எப்போதும் வாயாடும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களிடம் இதற்கான பதிலில்லை.

இப்போதும்கூட, அருண் ஷோரியை பா.ஜ.க.வுக்கு எதிராக கிளப்பிவிட முயற்சிகள் நடக்கின்றன. கரண் தாப்பரின் அண்மைய 'டெவில் அட்வகேட்' நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள், ராசா விவகாரத்தை அமுக்க நடத்தப்பட்ட நாடகமே. அதற்கு, அனுபவசாலியான ஷோரியே பலியாகி விட்டதைக் காண முடிந்தது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் யார் பேசுவது என்பதை நீரா ராடியா தீர்மானம் செய்ததாக கரண் தாப்பர் உறுதிப்படுத்த முயன்றார். கட்சி மீது சிறு அதிருப்தியில் இருப்பவரை மேலும் சொறிந்து, பிரச்னையை திசைதிருப்ப அவர் முயன்றார். ஆயினும், அதில் கிளம்பிய பரபரப்பால் ராசா விவகாரத்தை கரண் தாப்பரால் நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியவில்லை.

வீர் சாங்க்வி, பர்கா தத் மட்டுமலாது, மேலும் பல ஊடகவாதிகள் ராசா விஷயத்தில் வெளிப்படாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. உதாரணமாக, தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று, ராசா விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டபோதும், மிக மிக அடக்கமாக, ராசா பெயரையே குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டது. இப்போது பிரச்னை பெரிதாகிவிட்டவுடன், ராசாவை கடுமையாகத் தாக்கி செய்திகள் வெளியிட்டு, பிராயச்சித்தம் செய்கிறது அந்தப் பத்திரிகை. இதே போன்ற நிலையை நாடு முழுவதிலும் காண முடிகிறது. இப்போது அதிர்ச்சிகரமான தலைப்புகளுடன் ‘ராசா’ செய்தியை வெளியிடும் பல தமிழ் புலனாய்வுப் பத்திரிகைகள், ஊழல் வெளிப்பட்ட ஆரம்பக் காலத்தில், யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்பதுபோல கண்டுகொள்ளாமல் இருந்தவைதான்.

இப்போதும்கூட, ஊடக அறிஞர்கள் என்ற பெயரில் தி.மு.க. சார்பு பத்திரிகையாளர்கள், ‘ராசா மீது நடவடிக்கை எடுக்க, அவர் தலித் என்பதுதான் காரணம்’ என்று பசப்பித் திரிகிறார்கள். மஞ்சள்துண்டு மகானுக்கு அடிமையான மஞ்சள் பத்திரிகையாளர்களிடம் வேறெதை எதிர்பார்ப்பது?

ஆரஞ்சு நிறம்:

வானவில்லின் நிறங்களில் எதிரிடையான நிறம் கொண்டது ஆரஞ்சு. மத்திய ஊழல் கூட்டணி அரசை எதிர்த்துப் போராடும் பா.ஜ.க. போல. ஊழலுக்கு காரணமானவர்கள் போலவே ஊழலை வெளிப்படுத்தியவர்களும் வானவில்லின் வண்ணங்களாக மிளிர்கின்றனர். உண்மையில், பா.ஜ.க.வின் கடுமையான எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், ராசா விவகாரத்தை மூடி மறைக்கும் சாகசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பட்டிதொட்டி எல்லாம் பரவிவிட்டது. பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இடதுசாரிக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் களமிறங்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே சில கட்சிகள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க, வானவில் விவகாரத்தில், காங்கிரஸ் தனிமைப் படுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் முக்கிய ஊழல் கூட்டாளியான தி.மு.க.வுடனும் கூட காங்கிரஸ் கட்சியால் நிம்மதியாக உரையாட முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் தங்கள் மீதான புகார்களை நாசூக்காக திசை திருப்ப முயன்றனர். தே.ஜ.கூட்டணி ஆட்சியிலேயே முறைகேடுகள் துவங்கிவிட்டன என்று நடந்த பிரசாரத்தை மீறி, பா.ஜ.க. ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்காக, நாடாளுமன்றத்தை முடக்கவும் பா.ஜ.க. தயங்கவில்லை. இதனால், குளிர்காலக் கூட்டத் தொடரில், மொத்த நாட்களான 23 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது.

இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்தது. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக புலம்பிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு, யாரேனும், முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் காங்கிரஸ் நடந்துகொண்ட முறையை நினைவுபடுத்தினால் நல்லது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு என்ன ஊழல் செய்தாலும் கண்டுகொள்ளாமல், அதற்கான பிரதிபலனைப் பெற்றுக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியிடம் பிரதமர் எதிர்பார்க்கிறாரா?

பா.ஜ.க மட்டும் ஒழுங்கா என்று கேட்டு திசை திருப்புகிறார் அந்தோனியோ மைனோ (அதாங்க, சோனியா காந்தி) பங்காரு லக்ஷ்மணன் லஞ்சம் வாங்கியது, கர்நாடகாவில் நடந்துள்ள ஊழல் குறித்து கூறும் சோனியா, என்ன சொல்ல வருகிறார்? காங்கிரஸ் ஊழல் செய்யவில்லை என்றா? அல்லது, பா.ஜ.க.வுக்கு அதை சுட்டிக்காட்ட தகுதி இல்லை என்றா? அல்லது ஊழல் ஒரு பெரிய விஷயமில்லை என்றா?

எது எப்படியாயினும், பங்காரு லக்ஷ்மணன் மீது எடுத்த நடவடிக்கை போல எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்காதது, பா.ஜ.க.வை குற்றம் சாட்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆயினும், பேருந்தில் ஜேப்படி செய்து சிக்கிய திருடனும், பல லட்சம் கோடி அரசுப் பணத்தை கபளீகரம் செய்த அதி புத்திசாலிகளும் ஒரே தராசில் நிறுத்தப்படக் கூடாது என்பதை மக்கள் அறிந்தே இருக்கின்றனர். தன் மீதான புகாரை அடுத்து முறைகேடாக ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு நிலத்தை திருப்பி அளிக்க எடியூரப்பா முன்வந்தார். அதன்மூலமாக தனது தவறை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த மனசாட்சி ராசாவிடமோ, நாட்டின் ராசாவிடமோ, ‘ராணி’யிடமோ நாட்டின் ராணியிடமோ இல்லையே?

வாஜ்பாய் ஆட்சி மீது குற்றம் சாட்டினால் பா.ஜ.க. அமைதியாகிவிடும் என்று தப்புக் கணக்கு போட்ட ராசா, சோனியா, கருணாநிதி. டாடா உள்ளிட்டோருக்கு, பா.ஜ.க.வின் முனைப்பு முன்னைவிட அதிகரித்திருப்பது கிலி ஏற்படுத்தியுள்ளது. தவிர, ஆளும் கட்சி சார்பான இந்த விஷமப் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதை அரசு உணர்ந்துகொண்டது.

நாடாளுமன்றத்தில் ஆணவப் போக்குடன் நடந்துகொண்ட காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் கற்பிக்க நாடு முழுவதும் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன் தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இதுவிஷயத்தில் தங்கள் கூட்டணியில் இல்லாத மாற்றுக் கட்சிகளின் ஆதரவை சேகரிப்பதிலும் தே.ஜ.கூ. வெற்றி பெற்றுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக 'பாமாயில் ஊழல் புகழ்' பி.ஜே.தாமசை நியமிக்க பா.ஜ.கவின் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்த எதிர்ப்புக்கு நல்ல பலன் இப்போது கிடைத்திருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வீசும் கேள்விக்கணைகளுக்கு பதில் கூற முடியாமல் மத்திய அரசு தடுமாறுவதை நாடே வேடிக்கை பார்க்கிறது. வேறு வழியின்றி, 'ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையிலிருந்து விலகி இருப்பதாக' பி.ஜே.தாமஸ் உச்சநீதி மன்றத்தில் விளம்பி இருக்கிறார். ஆயினும் அவரை பதவியில் இருந்து விலக்காமல், சோனியா அடிவருடியான பிரதமர் அமைதி காக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தியதில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, அருண் ஷோரி, ரவி சங்கர் பிரசாத், சரத் யாதவ் ஆகியோருக்கு பெரும் பங்குண்டு. இவர்கள் மீதான நல்லெண்ணம் நாட்டில் நிலவுவதன் காரணமாகவே, காங்கிரஸ் கிளப்பிய அவதூறு பிரசாரம் வலுவிழந்தது. ஆயினும், பா.ஜ.க, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலகட்டம் இது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணமாகக் கொண்டு மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும் என பா.ஜ.க. விரும்பவில்லை என்று அத்வானி கூறி இருக்கிறார். அது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தலாம். ஆனால், இப்போது இந்த ஆட்சியைக் கவிழ்க்காவிட்டால் வேறு எப்போது கவிழ்ப்பது? பெருந்தன்மையைக் காட்ட வேண்டிய இடத்தில் மன்மோகனோ அவரது தலைவியோ இல்லை. உண்மையில், இந்த ஊழலின் ஆணிவேர் ராசாவிடம் இல்லை. அதன் வேர்மூலத்தைத் தோண்டினால், காங்கிரஸ் தான் காயம் படும். அந்த வாய்ப்பை பா.ஜ.க விட்டுவிடக் கூடாது.

மன்மோகன் சிங் நல்லவர் என்று ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் நடத்திவரும் பிரசாரத்தை பா.ஜ.க தொடரக் கூடாது. ராசா விவகாரத்தில் இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றியது பிரதமரின் குற்றம். அதற்கான பலனை அவர் அடைந்தே தீர வேண்டும். நடவடிக்கை எடுக்காததற்கு பிரதமர் கூறும் காரணம் 'நிர்பந்தம்' எனில், நாட்டிற்கு தலைமை தாங்கும் தகுதியை அவர் இழக்கிறார். தெரிந்தே ராசாவை ஆதரித்ததால் அவர் கூட்டுக் களவானியாகவும் ஆகிறார். அவரை பதவியில் இருந்து அகற்றாமல் அரசியல் நாகரிகம் பார்ப்பது பா.ஜ.க.வின் வேலை அல்ல.

சிவப்பு நிறம்:

அபாயத்தின் அறிகுறி என்றுமே சிவப்புத் தான். வானவில்லில் உள்ள அதிக அலைநீளம் கொண்ட நிறமும் சிவப்பே- ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு அபாய எச்சரிக்கை செய்து உதவிய நீதிமன்றங்கள் போல. நீதிமன்றங்களின் தலையீடு மட்டும் இல்லையென்றால், வானவில் ஊழலில் பல லட்சம் கோடி நாட்டிற்கு நஷ்டம் ஏற்படுத்திய சதிகாரர்கள் எந்த குற்ற உணர்வும் இன்றி மாபெரும் தியாகியர் போல நாட்டில் இன்றும் உலவிக் கொண்டிருந்திருப்பார்கள்.

முதலாவதாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நிலவும் முறையற்ற நடைமுறைகளை பிட்டுப் பிட்டுவைத்து கேள்வி கேட்டது உச்சநீதிமன்றம் தான். சுப்பிரமணியம் சாமி தொடர்ந்த வழக்கைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய ஊழல் அரசை கிழி கிழியென்று கிழித்தது உச்சநீதி மன்றம். நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் இன்று என்ன சொல்லப் போகிறார்களோ என்று அஞ்சி நடுங்கும் நிலைக்கு மத்திய அரசு ஆளானது. மத்தியப் புலனாய்வுத் துறையின் பசப்பல்களுக்கு ‘நறுக்’ என்று கொட்டு வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''நாங்கள் வேடிக்கை பார்ப்பதாக நினைக்கிறீர்களா?'' என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

''இன்னும் ஏன் ராசாவிடம் விசாரணை செய்யவில்லை? ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்? ஊழல் புகாருக்கு ஆளான தாமசால் எப்படி நியாயமான முறையில் விசாரணையை வழிநடத்த முடியும்? நீரா ராடியா 'டேப்' வெளியானது எவ்வாறு தவறாகும்? பிரதமரின் யோசனைப் புறந்தள்ளி ராசா அவமதித்துள்ளார்; அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? அலைக்கற்றை ஒதுக்கீடுகளை ஏன் ரத்து செய்யக் கூடாது? '' போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மூலமாக நாட்டின் மனசாட்சியாகத் திகழ்கிறது உச்சநீதிமன்றம். தில்லி உயர்நீதிமன்றமும் சளைக்கவில்லை. இதே போன்ற கேள்விகளால், மத்திய அரசின் ஆணவப் போக்கையும் ஊழலை மறைக்கும் சதிகளையும் இரு நீதி மன்றங்களும் அம்பலப்படுத்தி உள்ளன.

அதன் விளைவாகவே, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலக வேண்டி வந்தது. ராசா வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்த வேண்டிவந்தது. ராசாவின் செயலர் கைது செய்யப்பட்டதும், நீரா ராடியாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும், நீதிமன்றத்தால் தான் சாத்தியமானது. நீதிமன்றம் ஊழலுக்கு எதிரான போர்க்குரலை வெளிப்படுத்திய காரணத்தால்தான், அதனை ஊடகங்களும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அடுத்தகட்ட விசாரணைகளில் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிப்படப் போகின்றனவோ, தெரியவில்லை. ஒருவகையில் அவை நாட்டிற்கு அவமானம் தான் என்றாலும், அவை அனைத்தும் நாட்டிற்கு நன்மையே அளிக்கும். ஏனெனில் வெட்கப்பட்டு வேதனைப்பட வேண்டியவர்கள் புனிதர்களாக நடமாடும் நாட்டில், நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியதாகி விடுகிறது.

ஆண்டிமுத்து ராசாவின் ''முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் விற்பனை நடந்து'' என்ற தொடர் புழுகால் கோபம் அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''அவ்வாறெனில், 2001 முதலாகவே மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்தட்டும். அப்போது உண்மை வெளிப்படும்'' என்று காட்டமாகவே கூறினர். அதையடுத்து, அவசர அவசரமாக, தனி நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனை மத்திய அரசு அவசர அவசரமாக அறிவித்தது. ஆயினும், இது விசாரணையை மேலும் ஒத்திப்போட நடத்தப்படும் நாடகமே என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

உச்சநீதி மன்றத்தின் கண்டிப்புக்கு அஞ்சி, அலைக்கற்றை மோசடியில் தொடர்புடைய 85 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு தொலைதொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அநேகமாக பல மோசடி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் அரண்டுபோய் உள்ளன.

மத்திய அமைச்சர் ராசா எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழல் (டிச. 15 நிலவரம்) ஏற்பட்டுள்ளதற்கும் உச்சநீதி மன்றத்திற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஏலகிரி சென்று ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் (டிச. 13) தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது. கருணாநிதியுடன் நிழலாகத் திரிந்த ராசா எங்கிருக்கிறார் என்று தேட வேண்டிய நிலையில் இருப்பதும், அதனால் மாறன்கள் நிம்மதி அடைந்திருப்பதும், உச்சநீதி மன்றத்தின் சாதனைகள்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த காலத்தில் அரசை நிலைகுலையவைக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டு நாட்டை உலுக்கிய நீதிமன்றங்களும் கூட, 'பிரதமர் நல்லவர்' என்ற புராணம் பாடுவதைத் தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை இது வஞ்சப் புகழ்ச்சி அணியாக இருக்கக் கூடும்.

நீரா ராடியா 'டேப்' வெளியானது எப்படி என்றும் மத்திய அரசை குடைந்திருக்கிறது நீதிமன்றம். இதனாலும் மத்திய அரசிற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகருக்கு பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். இதுவும் மூடுமந்திரமாகிவிடக் கூடாது என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.
வானவில் ஊழலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ உச்சநீதி மன்றமே காரணமாகி உள்ளது.

இதனை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டதால் மத்திய அரசின் வேடம் கலைந்துள்ளது. அதன் மூலமாக 2-ஜி ஊழலில் பின்னணியில் இருப்பவர் 'ராசா'ஜி மட்டுல்ல என்பதும், அரசை ஆட்டுவிக்கும் மாபெரும் 'ஜி' தான் அனைத்திற்கும் ஆதிமூலம் என்பதும் புலப்படத் துவங்கி உள்ளன. மழை மேகமூட்டம் மறைந்து சூரியனின் முழுக் கதிர்வீசும் வெளிப்படும்போது வானவில்லின் வண்ணங்கள் அனைத்திற்கும் அடிப்படையான- ஒளிச்சிதறலின் மூலம் வெளிவரும். அப்போது தான், வானவில் ஊழலுக்கு பிராயச்சித்தம் கிடைக்கும்.

------------------------------

நன்றி: விஜயபாரதம் (31.12.2010)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக