எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இப்போதைய மன்மோகன் சிங்கனார் அரசு 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் சிக்கிக்கொண்டு நடத்தும் நாடகங்கள், இந்தப் பழமொழியையே நிரூபிக்கின்றன. கையும் களவுமாகச் சிக்கிய திருடன், பொதுமக்களின் அடிகளுக்கு பயந்து, தட்டுப்படுபவர்களை நோக்கி எல்லாம் கை காட்டுவதுபோல, 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஸ்பெக்ட்ரம்- வானவில் ஊழல்களின் வெளிப்பாடு வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வருகிறது.
ஊதா நிறம்:
வண்ணங்களில் ஊதா நிறம் மிக மென்மையானது. மிகவும் கூர்ந்து கவனித்தால் தான் இந்நிறத்தைக் கண்டறிய இயலும்- சக்தி வாய்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா போல. இவரது ‘வாக்குமூலம்’ தற்போது வெளியாகி உள்ளது. அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடனான தொடர்பு டாடா அதிபருக்கு இருப்பது தெரிந்தபோதே, இந்திய தொழில்துறை அரண்டது. இவருமா இப்படி என்று அதிர்ந்தது. டாடா நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பெற உதவியதற்காக நீரா ராடியா தரகுக் கட்டணம் பெற்றது உறுதியானவுடன், ஸ்பெக்ட்ரம் ஊழலின் பலதிசைப் பரிமாணம் தெரிய வந்தது.
ராடியாவுடன் டாடா நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் வெளிவரத் தடை விதிக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியவுடன், அவரது சுயரூபம் தெளிவானது. அதற்கு இரு வாரங்கள் முன்னதாக, உத்தராஞ்சல் அரசைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தன்னிடம் ரூ.15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் அதனை மறுத்துவிட்டதாகவும் கூறிய அவர், பிறகு பல்டி அடித்திருந்தார்.
தனியார் விமான சேவை துவங்க முயற்சித்தபோது லஞ்சம் கேட்ட அமைச்சரால், அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டதாக, அடுத்த வாரம் ஒரு பொது நிகழ்வில் குற்றம் சாட்டி கைதட்டல்களைப் பெற்றிருந்தார். டாடா ரூ. 60 கோடியை ராடியாவுக்கு வழங்கி இருப்பது தெரிந்தவுடன், அவரும் சாமானிய தொழிலதிபர் தான் என்பதை நாடு கண்டுகொண்டது.
அவர்தான், தற்போது, 2001 முதலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குளறுபடி துவங்கியது என்று குற்றம் சாட்டி இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலையே, சி.டி.எம்.ஏ- ஜி.எஸ்.எம் அலைபேசி சேவை நிறுவனங்களிடையிலான மோதலாக உருவகித்து புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார் டாடா. இத்தனை நாட்கள் இதனை இவர் ஏன் சொல்லாமல் அமைதி காத்தார் என்பது புரியாத புதிரல்ல. இதுவரை அவர் ஊழல் கண்காணிப்பு வளையத்திற்குள் வரவில்லை; தற்போது அவரது முகமூடியும் கிழிந்துவிட்டதால், தற்காப்பு நடவடிக்கையில் முனைந்திருக்கிறார் டாடா.
''வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அலைக்கற்றை ஏலம் விடும் முறை மாற்றப்பட்டு, வருவாய்ப் பகிர்வு முறை கொண்டுவரப்பட்டது. இப்போதைய மத்திய தணிக்கை ஆணைய கணக்கீட்டின்படி கணக்கிட்டால், அப்போது ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்'' என்று டாடா கூறி இருக்கிறார். இந்த ஒப்பீடு எதற்காக என்பது விவரம் அறிந்தவர்கள் அறிந்தது தான். அதாவது இப்போது கையும் களவுமாகச் சிக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு பொருட்டல்ல; வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட முறையே தற்போதும் கடைபிடிக்கப்பட்டது என்ற ராசாவின் குரலுக்கு ஒத்து ஊதுவதுதான் டாடாவின் நோக்கம்.
இவ்வாறு யூகத்தின் அடிப்படையில் வாஜ்பாய் அரசு மீது புதுப்புகார் கூறும் அதே டாடா, ''தற்போது அரசுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்டுள்ள இழப்பு தோராயமான யூகக் கணக்கீடு'' என்றும் முரண்பாடாக விளக்கம் அளித்திருக்கிறார். ராசாவின் ஊழலால் அதிக பலன் பெற்றவர் டாடா என்று தகவல் வெளியாகிவரும் நிலையில், அவர் இப்படி எதிர்த்தரப்பு மீது பாய்ந்தால்தானே, சிறிது காலத்திற்கேனும் தப்ப முடியும்?
இவரது முகமூடியைக் கிழித்தவர், தே.ஜ.கூட்டணியின் ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர். அவர் டாடாவுக்கு எழுதிய கடிதம் தான் அவரை உசுப்பிவிட்டிருக்கிறது. ''2-ஜி அலைக்கற்றை மோசடியில் அதிக ஆதாயம் பெற்றது டாடா டெலி சர்வீஸ் நிறுவனம் தான். அதனால், அரசுக்கு ரூ. 19,074.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது'' என்று டாடாவுக்கு சந்திரசேகர் கடிதம் எழுத, 'பிரதமருக்கு (மன்மோகன் சிங்) தர்ம சங்கடத்தை ஏற்படுத்த சதி நடப்பதாக அங்கலாய்த்திருக்கிறார் 'திருவாளர் புனிதம்' டாடா.
ராசாவை கண்மூடித்தனமாக ஆதரித்த பிரதமருக்கு சரியான இடத்திலிருந்து உதவிக்கரம் நீண்டிருக்கிறது. டாடாவைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க நடக்கும் சதியாக இது இருக்கலாம். ஏனெனில், இந்தக் குற்றச்சாட்டை டாடா முன்வைத்தவுடன், இடதுசாரி கட்சிகளின் தாக்குதலில் காங்கிரசுடன் பா.ஜ.க.வும் அவசரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கூட்டு நாடாளுமன்ற விசாரணைக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
கருநீல நிறம்:
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனியொரு மனுஷியாக நீரா ராடியா சாதித்தவை அதிகம்- வானவில்லின் கருநீல நிறம் போல. இதுவரை அவரது தொலைபேசி பேச்சுகளில் வெளியாகி இருப்பவை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இதற்கே அரசியல் அரங்கம் தாங்க முடியாமல் தள்ளாடுகிறது. அனில் அம்பானி, ரத்தன் டாடா போன்ற பெருமுதலாளிகளுடனும், ராசா, ராசாத்தி, ராசாவின் ராசாத்தி ஆகியோருடனும் ராடியா பேசிய தொலைபேசி பேசுக்கள் வெளியானதால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆணிவேரை அறிய முடிந்தது.
ராடியா தொடர்பான தொலைபேசி பதிவுகள் அனைத்தும் இப்போது உச்சநீதிமன்றத்தின் பாதுகாப்பில் உள்ளன. இதிலும் சில பேச்சுப்பதிவுகள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவருடன் ராடியா பேசிய தொலைபேசி பேச்சுக்களின் பதிவுகள் காணாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது.
இப்போது டாடா தொடர்ந்த தனிமனித உரிமை மீறல் வழக்கில், இந்த தொலைபேசிப் பேச்சுக்கள் வெளியில் கசிந்தது எப்படி என்ற விசாரணையும் தொடங்கி இருக்கிறது. சி.பி.ஐ முன் ஆஜரான ராடியா தன்னிடமுள்ள அனைத்து தகவல்களையும் வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு, கைமாறிய கமிஷனின் அளவு ( ரூ. 60 கோடியாம்!) குறித்து விளக்கிவிட்டு, ஊடகங்களுக்கு பளிச் புன்னகையுடன் தரிசனம் கொடுத்துவிட்டு, வீடு திரும்பிவிட்டார்.
இவருடன் பேசி அம்பலத்திற்கு வந்த ஊடக அறிஞர்கள் வீர் சாங்க்வி, பர்காதத் ஆகியோரிடம் அதற்கான எந்த வெட்கமும் இல்லை. பிற ஊடகங்களும் மிகவும் ஜாக்கிரதையாக அந்த விஷயத்தையே மறந்துவிட துடிக்கின்றன.
ஓர் அமைச்சரின் நியமனத்தில் ராடியா போன்ற இடைத்தரகர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அதனைப் பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. மௌனம் சம்மதத்தின் அறிகுறியா? பதில் சொல்ல முடியாத இக்கட்டா?
தொலைதொடர்புத் துறை அமைச்சராக்க வேண்டி, கருணாநிதி குடும்பத்திற்கு தயாநிதி மாறன் (தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறல்லவா?) ரூ. 600 கோடி கொடுத்ததாக ராடியா தொலைபேசி பதிவில் கூறப்படுகிறது. இதற்கு இதுவரை கருணாநிதியோ, மாறனோ எந்த மறுப்பும் தெரிவிக்காதது ஏன்? குறைந்தபட்சம், வாங்கிய பணத்திற்கு நாணயமாக தொலைதொடர்புத் துறையை பேரனுக்கு பகுத்தறிவுப் பகலவன் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் தடுத்தது எது? என்பதையேனும், ‘கலாகார்’ இப்போது சொல்லலாம். ஏனெனில் இது வாக்குமூலங்களின் காலம்.
நீல நிறம்:
நிறங்களில் குறைந்த அலைநீளம் கொண்டது நீலம். எனினும், வண்ணங்களில் நீலத்தின் பங்களிப்பு அடிப்படையானது- 'தலித்' ராசாவின் பங்களிப்பு இல்லாமல் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தேற வாய்ப்பில்லை என்பது போல. உச்சநீதிமன்றத்தின் கெடுபிடிகளாலும், மானத்தை வாங்கும் கேள்விகளாலும், மத்திய புலனாய்வுத் துறை அரைகுறை மனதுடன் எடுத்துள்ள நடவடிக்கைகளில் முதன்மையானது, ராசா மற்றும் அவரது நெருங்கியவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. நடத்தியுள்ள (டிச. 8, 15) சோதனை. ராசாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரியா உள்ளிட்ட அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடந்திருக்கிறது.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ராசாவின் நாட்குறிப்பேடுகளில் பல ரகசியங்கள் கிடைத்துள்ளதாக ஊடகங்கள் கிளப்பி விடுகின்றன. ராடியா தொலைபேசி பேச்சுக்கள் பதிவில் செய்யப்பட்ட 'திருக்கல்கள்' இதிலும் நிகழ்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது. ஏனெனில், மத்திய அரசின் கையாளாக சி.பி.ஐ. மாறி ஆறு ஆண்டுகள்
(ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்துதான்) ஆகிவிட்டன. இதிலும் குறிப்பிட வேண்டிய அம்சம்: ராசா அமைச்சராக இருந்தபோது, தொலைதொடர்புத் துறை செயலராக பதவிவகித்து, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்ட பி.ஜே.தாமஸ் வீட்டில் மறந்தும்கூட சி.பி.ஐ கால் வைக்கவில்லை. அவர்தான் தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி) ஆணையர் ஆயிற்றே!
தனது வீட்டில் நடந்த சோதனை குறித்து இதுவரை ராசா எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார். இந்த சோதனையே கண்துடைப்பு நாடகமாக இருக்கலாம். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று வழக்கம் போல காங்கிரஸ் பெரியதோரனையுடன் விளக்கம் அளிக்கிறது. இதுவரை சட்டம் ஏன் தன் கடமையைச் செய்யவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதிலே இல்லை.
விஷயம் இத்துடன் முடியவில்லை. ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா என்பவரின் வீட்டிலும் சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளது. ராசா மத்திய வனத்துறை அமைச்சராக இருந்தபோது (2004) இவர் துவக்கிய 'கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்' நிறுவனத்தில் அனில் அம்பானியின் குழுமத்தில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் (இதுவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய நிறுவனம்) முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக ராசாவின் மனைவி பரமேஸ்வரி இருந்திருக்கிறார். பிறகு விலகிவிட்டார். தற்போது ராசாவின் அண்ணன் கலிய பெருமாள் இதன் இயக்குனராக உள்ளார். அதாவது, 'கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்' ராசாவின் பினாமி அமைப்பு என்பதும், இந்நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பும் உறுதியாகி உள்ளன. சாதிக் பாட்சாவுக்கு வெளிநாடுகளிலும் கிளை நிறுவனங்கள் உள்ளன. அவை மூலம் லஞ்சப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல். தற்போது சாதிக் பாட்சா கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையில் தான் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது. இன்னும் ராசாவிடம் சி.பி.ஐ (டிச. 15 நிலவரம்) விசாரிக்காதது, ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.
ராசாவின் வீடுகளில் சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரி டி.ஐ.ஜி. வினிதா தாகூர், ''ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த வலுவான் ஆதாரங்கள் சிக்கியுள்ளன. சில அதிகாரிகளும் தனியார் நிறுவன பிரதிநிதிகளும் பிறரும் சேர்ந்து, அலைக்கற்றை ஒதுக்கீடு கோரும் மனுதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் கிரிமினல் சதியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது'' என்று கூறி இருக்கிறார். இதற்குப் பிறகே ரத்தன் டாடா மத்திய அரசால் களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
பச்சை நிறம்:
பச்சை பச்சையாய் பொய் பேசுபவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வானவில்லுக்கு வண்ணம் சேர்க்கும் நிறம் பச்சை என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்- வானவில் ஊழலில் கருணாநிதியின் பங்களிப்பு போல.
ஆரம்பத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், 'தலித் என்பதால் ராசாவை குற்றம் சாடுகிறார்கள்' என்றவர் நமது தமிழினத் தலைவர். முந்தைய பா.ஜ.க ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே தன் அன்புத் தம்பி (ஐம்பது ஆண்டுகளில் சம்பாதித்ததை ஒரே மாதத்தில் சம்பாதித்துக் கொடுத்தவர் அல்லவா?) செயல்பட்டிருப்பதாகவும் செம்மொழி கொண்டான் விளக்கம் அளித்தார். பிறகு, 'ராசாவை நீண்ட நாட்களாகத் தெரியும்; அவர் தப்பு செய்யவே வாய்ப்பில்லை' என்றார்.
அம்மையார் மீது குற்றம் சுமத்தப்பட்டவுடன் அவர் பதவி விலகினாரா என்று எதிர்க் கேள்வி கேட்ட அவர், மதவாதிகளின் பூச்சாண்டிகளுக்கு மத்திய அரசு பணியக் கூடாது என்று உபதேசமும் செய்தார். பிறகு திடீரென்று, ''ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்றால் அதனை ராசா மட்டும் செய்திருக்க முடியுமா என்று கேட்டார். இதைத் தானே அய்யா நாடும் கேட்டுக் கொண்டிருக்கிறது?'' ராசாவுடன் கூட்டுக் களவாணிகளாக இருந்தவர்கள் யாரென்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டால், வர்ணாசிரமத்தைத் தாக்கத் துவங்கி விடுகிறார்.
அதே கலாரசிகர், இப்போது (டிச. 7), 'குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவைத் தூக்கி எறிவோம்' என்று முழங்கி இருக்கிறார். ராசா வீடுகளில் நடந்த சி.பி.ஐ.சோதனையை அடுத்து, நிருபர்களுக்கு அவர் அளித்த கேள்வி- பதில் இதோ...
கேள்வி: சி.பி.ஐ.சோதனையை அவமானமாகக் கருதுகிறீர்களா?
பதில்: அப்படி நினைக்கவில்லை. ஆனால், அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டிலேயே இருக்கிறார்கள்.
கேள்வி: கட்சியிலிருந்து ராசா ஓரங்கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?
பதில்: அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால், அதற்குப் பின் அவரைத் தூக்கி எறிவோம். அதுவரை அவரை கைவிட திமு.க.தயாரில்லை.
- இது தான் கருணாநிதியின் பதில். அதாவது ராசாவை கைகழுவ கருணாநிதி தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. ஆனால், கனிவான மொழியில் பேசும் சாமர்த்தியம் கொண்ட 'அன்புத்தம்பி'யை அவ்வளவு எளிதாக கைகழுவ முடியாது என்பதால்- திக்கித் திணறி ஏதேதோ உளறுகிறார் மு.க. இவரது உளறல்கள் நாட்டிற்கு புதியதல்ல என்றாலும், வானவில் மோசடியில் இது புதிய திருப்பம் என்று ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
தொடர்ச்சி: ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்- 2
-------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (24.12.2010)..
// பச்சை பச்சையாய் பொய் பேசுபவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வானவில்லுக்கு வண்ணம் சேர்க்கும் நிறம் பச்சை என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்- வானவில் ஊழலில் கருணாநிதியின் பங்களிப்பு போல//
பதிலளிநீக்கு)))).//