ஞாயிறு, நவம்பர் 28, 2010

நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!


நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. முதல்வர் நிதிஷ் குமார் வெற்றிவாகை சூடுவார் என்று பலரும் கூறியிருந்தாலும், கடைசிநேரம் வரை 'மின்னணு வாக்குப் பதிவு இயந்திர' உபயத்தால் சந்தேகம் இருந்தது. அப்படியே வென்றாலும்கூட முந்தைய நிலையைவிட பலம் குறையலாம் என்று 'மதச் சார்பற்ற' ஊடகங்களால் பரப்பப்பட்டு வந்தது. அனைத்து ஹேஷ்யங்களையும் மீறி, மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 206 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க. கூட்டணி வென்று, நாட்டையே வியக்க வைத்துள்ளது.

இந்த மகத்தான வெற்றிக்கு நிதிஷ்குமார் தான் அடிப்படைக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்ப்பாட்டமில்லாத ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடு, குற்றவாளிகளை கருணையின்றி ஒடுக்கியது, ஊழலுக்கு வாய்ப்பளிக்காதது, யாரும் அணுகக் கூடிய எளிமை ஆகிய அம்சங்கள் நிதிஷ் குமாரின் வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன. அவருக்கு பக்கபலமாக பா.ஜ.க. உதவியுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலத்தில் பலரும் அறியாத பா.ஜ.க.வின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி இருப்பதையும் பதிவு செய்தாக வேண்டும். நிதிஷுக்கு கூறப்பட்ட அனைத்து சிறப்பம்சங்களும் இவருக்கும் உண்டு.

1999- ல் சென்னையில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழுவுக்கு சுஷில்குமார் மோடி வந்திருந்தபோது ‘விஜயபாரதம்’ வார இதழுக்காக அவரை பேட்டி எடுத்தது நினைவுக்கு வருகிறது. அப்போது பீகாரின் முடிசூடா மன்னராக லாலு வீற்றிருந்தார்; ஜாதி அரசியலும் மதச்சார்பின்மை கோஷமும் அவரது ஊழல்களை மறைக்க போதுமானவையாக இருந்தன. ஆயினும், ‘லாலுவை மிக விரைவில் வீழ்த்துவோம்’ என்று நம்பிக்கையோடு சொன்னார் மோடி. அந்த நம்பிக்கை பலிக்க 2005 வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. 2005 ல் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ்- மோடி கூட்டணி, தங்கள் சுயநலமற்ற, வெளிப்படையான ஆட்சியால், அதை தக்கவைத்துக் கொண்டதுடன், முந்தைய வெற்றியை முறியடிக்கும் சாதனையையும் படைத்துள்ளது!

பாரத சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் மகத சாம்ராஜ்யம், தற்போது பீகார் என்று அழைக்கப்படும் பகுதியில்தான் தோன்றியது. பாடலிபுத்திரம் (தற்போதைய பாட்னா) தான் அர்த்தசாஸ்திரம் தந்த சாணக்கியரை உலகுக்கு அளித்தது. நாலந்தாவும், விக்கிரமசீலாவும் இங்கு உயர்ந்தோங்கி விளங்கிய பலகலைக்கழகங்கள். மகான் புத்தரும் மகாவீரரும் தோன்றிய புண்ணிய பூமி பீகார். அத்தகைய பீகார்- விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் வலுவான தளமாக விளங்கிய பீகார் - 'மாட்டுத் தீவன ஊழல்' புகழ் லாலு பிரசாத் யாதவ் வசம் சிக்கிக் கொண்டு 15 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்தது. அப்போது தான் வாராது வந்த மாமணியாக நிதிஷ்குமார் லாலுவுக்கு சரியான மாற்றாக உருவானார்.

சமதா கட்சித் தலைவாரக இருந்த அவரை பீகார் மக்களுக்கு முதல்வராக அடையாளம் காட்டியவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய்தான். தனது அமைச்சரவையில் இடம் பெற்ற நிதிஷை 2000 - ம் ஆண்டு தேர்தலின்போது முதல்வராக பொறுப்பேற்குமாறு அவர்தான் அறிவுறுத்தினார். ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாததால், ஒரு வார காலத்தில் அவர் பதவி விலக வேண்டி வந்தது. பீகார் மக்களுக்கு நன்மை விளைய மேலும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?

லாலுவின் காட்டாட்சி, யாதவ ஜாதி அபிமானம், கட்டுக்கடங்காத ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் வெறுப்புற்ற பீகார் மக்கள், 2005 தேர்தலில் லாலுவை (அவரது பினாமியாக ஆண்ட மனைவி ராப்ரி தேவியை) வீட்டுக்கு அனுப்பி, நிதிஷை முதல்வராக்கினர். சுஷில்குமார் மோடி துணை முதல்வரானார்.

நிதிஷ் அரசு, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை முதல் கடமையாகக் கொண்டது. அதன் விளைவாக, தாதாக்கள் ராஜ்யமாக இருந்த பீகாரின் தோற்றம் மாறியது. அதிகாரபலம் கொண்டவர்களையும்கூட குற்றவாளிகள் எனில் தயங்காமல் சிறைக்குள் தள்ளியது, நிதிஷுக்கு மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தியது. ஆட்சியில் களங்கமின்மை, மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, தான் சார்ந்த (குர்மி) ஜாதிக்கு அப்பாற்பட்டு செயல்பட்டது, மத்திய அரசின் பாராமுகத்தையும் தாண்டி வளர்சிப்பநிகளில் காட்டிய கவனம் ஆகியவை, நிதிஷை மக்கள் நாயகனாக உயர்த்தின. ஆயினும் அவர் என்று அடக்கத்தின் எளிய வடிவமாகவே காட்சியளித்தார்.

அதன் விளைவே தற்போதைய இமாலய வெற்றி. சென்ற தேர்தலில் 143 இடங்களில் வென்ற தே.ஜ.கூட்டணி, நல்லாட்சிக்கான பரிசாக மீண்டும் ஆட்சியை, நான்கில் மூன்று பங்குக்கு மேல் (206 /243) பெரும்பான்மையுடன் தற்போது வென்றுள்ளது. குறிப்பாக நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றுள்ளது. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வோ, போட்டியிட்ட 102 தொகுதிகளில் 91 இடங்களைக் கைப்பற்றியுள்ளது! இவர்களின் வெற்றிவிகிதம் 84 சதவிகிதம்!

மாறாக லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் 22 (54), பஸ்வானின் லோக் ஜனசக்தி 3 (10), இளவரசர் ராகுலின் காங்கிரஸ் 4 (9) இடங்களில் மட்டுமே வென்றன. (அடைப்புக் குறிக்குள் முந்தைய தேர்தலில் வென்ற இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன). ஒருகாலத்தில் பீகார் அரசியலில் முத்திரை வகித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப் பெரும் தோல்வியை இத் தேர்தலில் சந்தித்துள்ளன.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றபோதும் இப்போதும் அடக்கமாகவே நிதிஷ் காட்சி தருகிறார். ''இந்த வெற்றிக்கு எந்த மாயமும் மந்திரமும் காரணமில்லை. மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது'' என்கிறார் நிதிஷ். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் தலைவர்களுள் ஒருவரான அருண் ஜேட்லியோ, ''இந்த வெற்றி சிறந்த நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றி'' என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன் பீகாரில் வலம் வந்து கொக்கரித்த ராகுல் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் வரைமுறை மீறி, 'மத்திய நிதியை நிதிஷ் அரசு பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது'' என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன் சிங், ''பீகார் வளர்ச்சிக்கு மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணி புரியும்'' என்று இப்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் நிதிஷ் பெருமளவில் எந்த மாற்றத்தையும் பீகாரில் நிகழ்த்திவிடவில்லை. 15 ஆண்டுகால லாலு தர்பாரால் சீரழிந்த பீகாரை அவ்வளவு சீக்கிரம் சீர்திருத்திவிடவும் முடியாது; ஆனால் அதற்காக உண்மையாக உழைத்தார். நிலைகுலைந்திருந்த காவல்துறையை மேம்படுத்தியது, அரசு அலுவலகங்கள் முறைப்படி இயங்கச் செய்தது, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது ஆகியவற்றால் பீகாரின் சூழலில் படிப்படியான மாற்றத்தை அவரால் கொண்டுவர முடிந்தது. நிதிஷின் ஆட்சி, பீகாரில் மாற்றம் நிகழ்வதை உறுதிப்படுத்தியது.

இயன்ற வளர்ச்சிப்பணிகளை செய்த நிதிஷ், பீகாருக்கு தன்னால் அரிய பணிகளை செய்ய முடியும் என்று அவற்றின் மூலமாக நிரூபித்தார். தங்கள் முதல்வர் நாணயமானவர் என்ற நற்பெயரை நிதிஷ் பெற்றார். அதுவே அவரது வெற்றிக்கு அடிப்படையானது.
தவிர ஆட்சியில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதை அவர் தவிர்த்தார். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வை அரவணைத்துக்கொண்டு, ஊடகங்கள் நிகழ்த்திய 'மதவாதப் பூச்சாண்டி' விஷமப் பிரசாரத்தைக் கண்டுகொள்ளாமல், நல்ல கூட்டணி சகாவாக தன்னை அவர் நிலைநாட்டினார். சிற்சில உரசல்கள் ஏற்பட்டபோதும், அதனால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குபவர்களாக அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் சுஷில்குமார் மோடியும் விளங்கினர். ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் சரத் யாதவுக்கு கூட்டணியின் உறுதிப்பாட்டில் பெரும் பங்குண்டு என்பதை கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். நல்லாட்சியுடன் நல்ல கூட்டணியும் அமைந்ததால், மகத்தான வெற்றி இப்போது சாத்தியமாகி இருக்கிறது.

நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே நல்லது நடக்கும் என்பதற்கு பீகார் முதல்வர் நல்ல உதாரணம். நாட்டுமக்கள் நலன் கருதி உழைப்போருக்கு பீகார் தேர்தல் முடிவுகள் நற்செய்தி எனில் மிகையில்லை.

பெட்டிச் செய்தி- 1
ஊடகங்களின் லாலு மனப்பான்மை

பீகார் தேர்தல் முடிவுகளை வெளியிட்டபோது தங்கள் பாரபட்ச அணுகுமுறையை பெரும்பாலான ஊடகங்கள் மீண்டும் வெளிக்காட்டின. இந்த மகத்தான வெற்றி குறித்த செய்திகளை வெளியிடும்போதுகூட, ஊடகங்கள் குசும்பு செய்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பீகார் தேர்தல் பிரசாரத்திற்கு வராததால் தான் வெற்றி கிடைத்தது என்று பிரசாரம் செய்த ஊடகங்கள், பீகாரிலேயே உள்ள சுஷில்குமார் மோடியின் அரும்பணியை கூறாமல் தவிர்த்தன.

பா.ஜ.க.வைக் கட்டுக்குள் வைத்த நிதிஷ் மதச்சார்பின்மையைக் காத்ததால்தான் இந்த வெற்றி கிடைத்ததாம். ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றி சதவிகிதம் 82 %; உடனிருந்த பா.ஜ.க.வின் வெற்றி விகிதமோ 89 %. இதை சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாரில்லை.

சில ஊடகங்கள் 'சரியான தலைமையின்றித் தள்ளாடும் தே.ஜ.கூட்டணிக்கு புதிய தலைவர் கிடைத்துவிட்டார்' என்று பா.ஜ.க.வை பக்கவாட்டில் குத்தின. ஆனால், அதிலுள்ள விஷமத்தைப் புரிந்துகொண்ட நிதிஷ்குமார், 'பிரதமர் பதவியை நோக்கி நான் பயணிக்கவில்லை' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி, ஊடகங்களின் திருக்கல்தனத்தை மட்டுப்படுத்தினார்.

நிதிஷும் பா.ஜ.க.வும் சேர்ந்து நிகழ்த்திய அரசியல் அற்புதத்தை நிதிஷின் தனிப்பட்ட சாதனையாகவே பல ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. தேர்தல் முடிவுக்குப் பிறகு வாய் திறந்த லாலு, ''நிதிஷுக்கு வாழ்த்துக்கள்; ஆனால் பா.ஜ.க.வுக்கு வாழ்த்து கூற மாட்டேன்'' என்று சொன்னது தான் நமது ஊடகங்களைக் காணும்போது நினைவில் இடறுகிறது.


பெட்டிச் செய்தி- 2
நடந்துள்ள நல்ல நிகழ்வுகள்:

பீகார் சட்டசபைக்கு ஆறுகட்டமாக தேர்தல் நடந்தது. அக். 31 -ல் துவங்கிய தேர்தல் நவ. 20 -ல் முடிவுற்றது. மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலையும் மீறி, நக்சல் ஆதிக்கமுள்ள பல பகுதிகளிலும் கூட, மக்கள் அச்சமின்றி ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். குறிப்பாக நக்சல் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்களிலும் கூட மக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடி வந்து வாக்களித்துள்ளனர்.

இதில் மிகவும் முக்கியமான அம்சம், தேர்தலில் பெண்களின் உற்சாகமான பங்கேற்பு. பெண்களில் பெரும்பகுதியினர் நிதிஷுக்கே வாக்களித்துள்ளனர். மகளிர்நலத் திட்டங்களில் நிதிஷ் காட்டிய அக்கறைக்குக் கிடைத்த பரிசு இது. இத்தேர்தலில்தான், 33 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!

இத் தேர்தலில் லாலு குடும்பத்தினர் எவருமே வெற்றி பெறவில்லை. அரசியலையே குடும்பச் சொத்தாக்கிய லாலுவுக்கு மக்கள் கொடுத்துள்ள அடி இது. லாலுவின் மனைவியும் முன்னாள் பினாமி முதல்வருமான ராப்ரி தேவி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோற்றார். லாலுவின் மைத்துனர் சாது யாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.

தலித் மக்களை பகடையாக்கி அரசியல் நடத்திய ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர்கள் இருவரும் லோக்ஜனசக்தி சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினர். சிறையில் இருந்தபடி அரசியல் நடத்திவந்த பப்பு யாதவ் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சிறைத் தண்டனைக் குற்றவாளி ஆனந்தின் மனைவி லவ்லி ஆனந்தும் தோல்வியுற்றார்.

2005 தேர்தலின்போது தே.ஜ.கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் லாலுவுக்கு எதிரான வாக்குகள். இம்முறையோ, நிதிஷ் அரசு மீதான நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் வாக்குகள் கிடைத்துள்ளன. இது ஆக்கப்பூர்வமான விஷயம். 2005 -ல் மொத்த வாக்குகளில் 38 சதவிகிதம் பெற்ற தே.ஜ.கூட்டணி, 2010 -ல் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. லாலு, காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்பப்பட்ட யாதவர்களும் முஸ்லிம்களும் கூட, நல்லாட்சி என்ற அடிப்படையில் மத, ஜாதி எல்லைகளைத் தாண்டி வாக்களிதுள்ளதும் இத் தேர்தல் கூறும் பாடம்.

இனிமேலும், முஸ்லிம் வாக்குகள் போய்விடுமே என்று பயந்து அரசியல் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையை பீகார் தேர்தல் முடிவு போக்கியுள்ளது என்றால் தவறில்லை. நல்லாட்சி நடத்தினால், இஸ்லாமியர்களும் மதத்தைத் தாண்டி சிந்தித்து செயல்படுவார்கள் என்பதற்கு ஏற்கனவே குஜராத்தில் மோடியின் வெற்றி நிரூபித்தது. அதனை நிதிஷின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.


பெட்டிச் செய்தி- 3
நிதிஷ்குமார்- ஓர் அறிமுகம்:

பீகாரின் பக்தியார்புரில், கவிராஜ் ராம்லக்கன் சிங் - பரமேஸ்வரி தேவிக்கு, 1951, மார்ச் 1 -ல் பிறந்தவர் நிதிஷ்குமார். இவரது தந்தை விடுதலைப் போராட்ட வீரர்; நவீன பீகார் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த அனுக்ரக நாராயண் சின்ஹா என்ற காந்தீயவாதியின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்தவர் ராம்லக்கன் சிங். ஆரம்பத்திலிருந்தே காந்தீயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நிதிஷ், மதுவையும் புகைபிடித்தலையும் தொடாதவர். எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பில் பட்டம் பெற்ற நிதிஷ், மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டார். சோஷலிசக் கொள்கையுடன் அரசியல் நடத்திவந்த ராம் மனோகர் லோகியா, கர்ப்பூரி தாகூர் ஆகியோரை தனது அரசியல் குருவாகக் கொண்டார்.

இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலையை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தில் (1974 - 1977) நிதிஷ் பங்கேற்றார். அவரது இளமைத் துடிப்பு அரசியலில் அவரை பிரபலப்படுத்தியது. 1980 -ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அவர், அதனால் நிலைகுலையவில்லை. அவரது அரசியல் பயணம் எதிர்பார்ப்பின்றி தொடர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. 1985 -ல் முதல்முறையாக சுயேச்சையாகப் போட்டியிட்டு பீகார் சட்டசபை உறுப்பினர் ஆனார். 1987 -ல் லோக்தளத்தின் இளைஞர் பிரிவு தலைவரானார்.

1989 -ல் ராஜீவின் போபர்ஸ் ஊழலை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய வி.பி.சிங்கின் தலைமையில் ஜனதாதளம் உதயமானது. அதில் லோக்தளம் இணைந்தது. அப்போது பீகார் ஜனதாதளத்தின் பொதுச்செயலாளர் ஆனார் நிதிஷ். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற அவர், வி.பி.சிங் அமைச்சரவையில் விவசாயத் துறை இணை அமைச்சர் ஆனார். அடுத்து வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2004 வரை அவர் உறுப்பினராகத் தேர்வானார்.

ஆட்சிகள் மாறிய சூழலில், ஜனதா தளத்தின் முன்னணித் தலைவராக உயர்ந்த அவர், பீகாரில் லாலுவின் மோசமான ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் சமதா என்ற கட்சியாகப் பிரிந்தார். சமதா கட்சி வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் நிதிஷ் ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து, விவசாயத் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். 1999 -ல் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் நிதிஷ். பிறகு சமதா உள்ளிட்ட ஜனதா கிளைகள் இணைத்து ஐக்கிய ஜனதாதளம் உருவானபோது அதன் நாடாளுமன்றத் தலைவரானர் நிதிஷ்.

2001 -ல் நடந்த பீகார் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது பிரதமர் வாஜ்பாய் அறிவுரைப்படி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஒருவார காலத்தில் பதவி விலகினார். பிறகு பீகாரில் லாலுவின் ஆட்சியை அகற்ற தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

2005 -ல் நடந்த தேர்தலில் 143 தொகுதிகளில் வென்று தே.ஜ.கூட்டணி சார்பில் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ், பீகாரில் சீர்குலைந்திருந்த ஆட்சி நிர்வாகத்தை செம்மைப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி மாநிலத்தை அழைத்துச் சென்றார். அதன் விளைவாக 2010 சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீதும் மூன்றாவது முறையாக பீகார் முதல்வர் ஆகியிருக்கிறார்.

இவரது மனைவி மஞ்சு குமாரி சின்ஹா, பள்ளி ஆசிரியை. இவர் அண்மையில் (2007) இறந்தார். இவரது மகன் நிஷாந்த் பொறியியல் பட்டதாரி. அரசியலில் குடும்ப உறுப்பினர்கள் நுழைவதை நிதிஷ் ஊக்குவிக்கவில்லை. ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ் மிக எளிமையானவர்; யாரும் இவரை சிரமமின்றி அணுக முடியும்.

அரசியல் என்பது பிழைக்கும் வழியல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான மார்க்கம் என்று நம்பும் இயல்பான அரசியல்வாதி நிதிஷ்குமார்.

-------------------------------------
நன்றி: விஜயபாரதம் (10.12.2010)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக