.
சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது - என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். ஸ்பெக்ட்ரம் ஊழல் சந்தி சிரித்த பின்னும், மத்தியில் உள்ள ஊழல் காங்கிரஸ் அரசு, தவறுகளை மறைக்க மேலும் மேலும் தவறுகளையே செய்து வருவது, நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மேலும் மேலும் கவலை அளிக்கிறது.
ஆ.ராசா பதவி விலகலுடன், நாடாளுமன்ற பொது கணக்குக் குழு விசாரணையுடன், ஸ்பெக்ட்ரம் ஊழலை ஊற்றி மூடிவிட காங்கிரஸ் துடிப்பதன் பின்னணி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும். அதனை உணர வேண்டுமானால், ஆதியோடந்தமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு துவங்கி ஆராய வேண்டும். தனது தலைமையிலான அமைச்சரவையில் உள்ள ஒருவர் நிகழ்த்திய முறைகேடுகள் தெரிந்திருந்தும் 'ஏதோ ஒரு காரணத்தால்' அமைதி காத்த பிரதமர் மன்மோகன் சிங்கை இனியும் ' ஊழல் கறைபடாதவர்' என்று ஊடகங்கள் பாராட்டாமல் இருந்தால் நல்லது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக். 1 என்று தொலைதொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதையேற்று மத்திய தொலைதொடர்புத் துறைக்கு வந்த விண்ணப்பங்கள்: 575. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசி தேதி என்று (யாருடைய உத்தரவுப்படியோ) அமைச்சக வட்டாரங்கள் அறிவித்தன. அதன்படி 232 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,651 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், இந்த உரிமங்களை ஒரு மாதத்திற்குள் விற்று கொள்ளை லாபம் பார்த்தன, பல 'லெட்டர்பேடு' நிறுவனங்கள்.
உதாரணம்: 2008, ஜன. 10 ம் தேதி, 122 - 2ஜி உரிமங்கள் வழங்கப்பட்டன. 13 மண்டலங்களில் உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம், தனது உரிமங்களில் சரிபாதியை ரூ. 7,195 கோடிக்கு வேறொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. தற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
யுனிடெக் நிறுவனம் பெற்ற உரிமங்களும் ஸ்வான் போலவே அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டுள்ளன. ஒரு கணக்கீட்டின்படி, ஸ்பெக்ட்ரம் ஊழலால் மத்திய ஊழல் கூட்டாளிகள் பெற்ற பணப்பயன் ரூ. 70 ஆயிரம் கோடி என்று தெரிகிறது. இத்தொகை முழுவதும் வெளிநாடுகளில் மூலதனமாக்கப்பட்டுள்ளதாகவும் கேள்வி.
இந்த ஊழலில் ராசா உள்ளிட்ட தி.மு.க. தரப்பு முறையற்ற வகையில் பலகோடி லாபம் சம்பாதித்தது எவ்வளவு உண்மையோ, அதே அளவு மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசின் சூத்திரதாரிகளும் சம்பாதித்துள்ளனர் என்பதும் உண்மை. இல்லையென்றால், ''2ஜி உரிம விநியோகத்தில் நியாயமாகச் செயல்பட வேண்டும்'' என்று ராசாவுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மன்மோகன், இத்தனை ஊழல் நடந்த பின்னும் கண்டும்காணாமல் இருந்திருக்க முடியாது.
ஒன்று, ஊழலில் கிடைத்த பல கோடிகள் சரிசமமாகப் பங்கிடப்பட்டிருக்க வேண்டும். அல்லது, ராசாவை முன்னிறுத்தி பலகோடி லாபம் ஈட்டிய மிகவும் 'சக்தி வாய்ந்த' வேறு யாரோ ஊழலின் பின்னணியில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சி.ஏ.ஜி. அறிக்கை, சி,பி,ஐ விசாரணை, உச்ச நீதிமன்ற கண்டனம், எதிர்க்கட்சிகளின் போர்க்குரல், ஊடகங்களின் விமர்சனம் அனைத்தையும் தாண்டி, ஆ.ராசாவால், கடைசிக் கட்டம் வரை பதவியில் நீடித்திருக்க முடியாது. காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்ட காமன்வெல்த் விளையாட்டு ஊழல், கார்கில் வீரர்களின் வீடு ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விலக்கிவைத்த பிரதமரால், ஆண்டிமுத்து ராசாவை விலக்க முடியாமல் திணற வேண்டி இருந்திருக்காது.
வேறு வழியின்றியே, அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் ராசா, கனிமொழி, ஊடகத் தரகர்கள் பர்கா தத், வீர் சாங்வி ஆகியோர் நிகழ்த்திய உரையாடல்களை வேறொரு வழக்கு வாயிலாக வெளிப்படுத்தி, தி.மு.க.வுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கோட்டினை சிறிய கோடாக்க அதன் அருகில் பெரிய கோடு போடும் உத்தியே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன்மூலமாக, தேசிய அளவில் தி.மு.க. மீது அனைத்து கறைகளையும் பூசி, திரைமறைவில் இயங்கியோர் தப்பிக்க முயற்சிக்கின்றனர் என்று கருத அதிக வாய்ப்புகள் உள்ளன.
'யாரோ' தன்னை காப்பாற்றிவிடுவார் என்று கடைசிவரை நம்பியிருந்த ராசாவுக்கு, 'அல்வா' கொடுத்தது காங்கிரஸ். அதைவிட, தொலைதொடர்புத் துறை தி.மு.க.வுக்கே மீண்டும் வழங்கப்படும் என்ற கருணாநிதியின் எதிர்பார்ப்பில் பிரதமர் மண்ணைப் போட்டது, 'இருட்டுக்கடை அல்வா' கதையாகிவிட்டது. (தற்போது இத்துறை கபில் சிபல் பொறுப்பில் உள்ளன!) ஆக, கூட்டணி தர்மத்திற்காக இத்தனை நாட்கள் மன்மோகனார் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை என்பது நிதர்சனம்.
அலைக்கற்றை ஏல மோசடியில் தொடர்புடைய நிறுவனகள் குறித்து மத்திய தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள பல தகவல்கள், ஊழலின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. போலி பெயர்களில் இயங்கும் பினாமி நிறுவனங்கள் குறித்து மத்திய அரசின் இதர துறைகளுக்கு (குறிப்பாக வருமான வரித்துறையை கொண்டுள்ள நிதி அமைச்சகத்திற்கு) தெரியாமல் இருந்திராது. நீரா ராடியா நிகழ்த்திய ஆட்சிபேர விவகாரங்கள் அனைத்தும் பிரதமருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். இப்போது வெளியாகியுள்ள தொலைபேசிப் பேச்சு பதிவுகளில் சில இடங்கள் தெளிவின்றி இருப்பதிலும் கூட மத்திய அரசின் திருவிளையாடல் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, ராசா பதவி விலகல் முடிவல்ல, ஆரம்பமே என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதும் அவசியம்.
ஆக மொத்தத்தில், ஆ.ராசாவை பலிகடாவாக்கி பெருமுதலைகளும், அரசை ஆட்டுவிப்பவர்களும் தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தை மறுக்க முடியாது. நாடாளுமன்றம் 10 நாட்களுக்கு மேல் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டும் கூட, நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை ஏற்க மத்திய அரசு தயங்குவது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
உச்சநீதி மன்றம் இத்தனை கண்டித்தும் சுரணை இல்லாதவர் போல நடிக்கும் பிரதமரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய காலம் வரும். இந்த ஊழலில், மத்திய அரசை பின்னிருந்து ஆட்டுவிக்கும் சோனியாவின் பங்கையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இப்போதைக்கு ராசா மாட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் உண்மையான 'ராசா'வும் 'ராணி'யும் மாட்டலாம். உப்பைத் தின்றவர்கள் என்றாவது தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்.
------------------
நன்றி: விஜயபாரதம்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக