வெள்ளி, நவம்பர் 05, 2010

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர்...


அனுபவங்களே நமது வாழ்வை வழிப்படுத்துகின்றன. இன்பமும் துன்பமும் கலந்ததுவே வாழ்க்கை. வாழ்க்கையில் இரண்டையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும். இன்பங்கள் நமக்கு கிடைக்க ஏணிப் படியாக இருப்பவை, துன்பங்கள் தரும் படிப்பினைகளே.

ஒன்று நிகழ்ந்துதான் ஆக வேண்டும் என்பது நியதியானால், அதிலிருந்து கிடைக்கும் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். காட்டாற்று வெள்ளமாக வாழ்க்கைப் படகை இறைவன் இழுத்துச் செல்லும் சூழலிலும், ஒருவர் நிலைகுலையாத மனத்துடன் அதை ஏற்றால், அமைதியான தீவில் படகு நிலை சேரலாம். சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த சிறை அனுபவம் அப்படிப்பட்டது தான்

1990 - அயோத்தி இயக்கம் நாடு முழுவதும் மிக தீவிரமாக இருந்த காலகட்டம். ஹிந்து உணர்வு நாட்டில் பீறிட்டு எழுந்த காலகட்டமும் அதுவே. அயோத்தி நாயகன் ராமனின் ஜன்மபூமியை மீட்பதற்கான போராட்டம் கூர்மை அடைந்திருந்த நேரம். அயோத்தியில் அரசியல் தடைகளைத் தாண்டி சிலான்யாசம் (1989) நடந்து முடிந்திருந்த காலம் அது.

'இல்லம் தோறும் ராமஜோதி; உள்ளம்தோறும் தேசபக்தி' என்ற முழக்கத்துடன் அயோத்தியிலிருந்து கிளம்பிவந்த ராமஜோதி ரதங்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஹிந்து விழிப்புணர்வை உருவாக்கி வந்தன. இதன் உச்சமாக, அயோத்தியில் 1990, அக்டோபர் 30 -ல் கரசேவை நடக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் ஆட்சி, தங்களை மீறி அயோத்தியில் ஈ, காக்காய் கூட பறக்க முடியாது என்று கொக்கரித்தது. மத்தியிலோ, 'மதச்சார்பற்ற தன்மை'யைக் குத்தகைக்கு எடுத்த வி.பி.சிங் பிரதமர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அயோத்தியை யுத்தபூமி ஆக்கின. (அயோத்தி என்றாலே யுத்தம் இல்லாத இடம் என்று தான் பொருள்!)

நாடு முழுவதிலுமிருந்து கரசேவகர்கள் அயோத்தி சென்றனர். அவர்கள் பல இடங்களில் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். பலர் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகினர். அயோத்தி செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டன. எங்கும் காவல்துறையின் அதீத கட்டுப்பாடுகள். காவியுடை அணிந்திருந்தாலே கைது செய்யப்படும் நிலைமை. அயோத்தி செல்லும் ரயில்கள், பேருந்துகள் அனைத்தும் ரத்து. ஆனால், இந்த அராஜக தடைகளை மீறி, அன்புடன் உணவிட்டு கால்நடையாகவே பயணித்த கரசேவகர்களை ஆதரித்தனர் மக்கள்.

அனைத்துத் தடைகளையும் மீறி, குறிப்பிட்ட தினமான அக்டோபர் 30ல் அயோத்தியில், அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி பல்லாயிரக் கணக்கில் கரசேவகர்கள் திரண்டனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பலநூறு கரசேவகர்கள் பலியாகினர். சரயு நதிஎங்கும், கரசேவகர்களின் சடலங்கள் மிதந்தன. அந்த நிகழ்வே இந்திய அரசியலில் பாரதீய ஜனதா கட்சி முதன்மையான இடத்தைப் பிடிக்க வித்திட்ட நிகழ்வு என்றால் சற்றும் மிகையல்ல.

அப்போது தமிழகத்தில் திருவாளர் கருணாநிதியின் ஆட்சி. முலாயமுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க அவரும் கடும் நெருக்கடிகளை ஹிந்து இயக்கங்களுக்கு ஏற்படுத்திவந்தார். அதையும் மீறி ஹிந்து இயக்கங்கள் ராமஜோதி பிரசார இயக்கத்தை நடத்திவந்தன. நானும், எனது நண்பர்களுடன் அதில் தீவிரமாக ஈடுபட்டேன். எங்கள் ஊரான வடசித்தூருக்கு ராமஜோதி ரதம் வந்தபோது கிராமம் அதுவரை காணாத வரவேற்பளித்தோம். ரதம் வந்த நாளன்று மாலை முதலாகவே ஒலிபெருக்கி பிரசாரம் களை கட்டியிருந்தது. 'வந்துவிட்டது ராமஜோதி ரதம்' என்று சுமார் ஆறு மணிநேரம் சொல்லிக் கொண்டிருந்தோம். இரவு 10.30 மணியளவில் தான் ராமஜோதி ரதம் வந்தது. அப்போது கூடிய கூட்டத்தை இன்றும் எங்களால் மறக்க முடியாது. எங்கள் கிராமம் மட்டுமல்லாது அண்டைக் கிராமங்களில் இருந்தும் நூற்றுக் கணக்கான மக்கள் அருள்மிகு பிளேக் மாரியம்மன் கோயிலில் குழுமினர்.

ரதத்திலிருந்து பெற்ற ஜோதியை மற்றொரு அணையா தீபத்தில் ஏற்றி தனி வாகனத்தில் வைத்து இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு நாங்களே கொண்டு சென்றோம். ஒவ்வொரு கிராமத்திலும் கிடைத்த அற்புத அனுபவங்களை மறக்க முடியாது. ராமபிரான் மீதான கிராம மக்களின் பக்தி எங்களையும் மக்களையும் இணைத்தது. நாடு முழுவதும் நடந்துவந்த அறப்போராட்டத்தில் நாங்களும் எங்களால் இயன்ற மட்டிலும் தீவிரமாகப் பங்கேற்றோம்.

இந்நிலையில் தான், அக்டோபர் 22ம் தேதி, திடீரென நானும் எனது நண்பர்கள் திருவாளர்கள் இளங்கோ, பிரகாஷ், முரளி, கோபால், திருஞானம் உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்பட நாங்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு ஏற்கனவே ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹிந்து இயக்கத் தொண்டர்கள் எங்களுக்கு முன்னதாக கைதாகி சிறையில் இருந்தனர்.

அன்று முதல் நவம்பர் 5ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் வரை, 15 நாட்களும் கிடைத்த சிறை அனுபவம் எனது வாழ்வின் ஓரங்கம். அது எனக்கு மகிழ்வையும் தன்னம்பிக்கையையுமே அளித்தது. ஆனால், அந்தக் காலத்தில் என் வீட்டிலும் எனது நண்பர்களின் வீடுகளிலும் அடைந்த கஷ்டங்கள் தனி அத்தியாயம் ஆகத் தகுந்தவை.

கோவை சிறையில் 'வால்மேடு' பகுதியில் ஒரு வளாகத்தில் திறந்தவெளி சிறைக்கூடங்களில் நாங்கள் அடைக்கப்பட்டோம். உறங்க மட்டுமே சிறை அறைகளை தஞ்சம் புகுவோம். சிறைக்குள் தரக்குறைவான உணவு, சுகாதாரமற்ற சூழல், சிறைப்படுத்தப்பட்ட உணர்வு ஆகியவற்றை மீறி, தொண்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமாக அந்த நாட்கள் மாற்றப்பட்டன. திருவாளர்கள் மிசா நாராயணன், அர்ஜுன் சம்பத், முகாம்பிகை மணி உள்ளிட்டோர் சிறைக்குள் கலகலப்பான பயிற்சிமுகாம் சூழலை ஏற்படுத்தினர். தினமும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பாடல்கள், அளவளாவல்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், என்று சிறை நாட்கள் கழிந்தன.

சிறைக்குள் இருந்த உணர்வே கடைசி நாட்களில் முற்றிலும் மறைந்துவிட்டிருந்தது. தினசரி எங்களைப் பார்க்க ஊரிலிருந்து வரும் உறவுகள் அளிக்கும் தின்பண்டங்களைப் பகிர்ந்து உண்ணுவோம். இதனிடையே தான் அக்டோபர் 30 வந்தது. எங்களுக்கு நாட்டில் நடக்கும் சம்பவங்களைச் சொல்ல ஏற்பாடு இருந்தது. அதன் மூலமாக நாட்டில் மத்திய, மாநில அரசாங்கங்கள் நடத்திவரும் ஹிந்துவிரோத நடவடிக்கைகள் தெரிந்திருந்தன. கரசேவை தினத்தன்று, நாங்கள் வால்மேடு பகுதிக்குள் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினோம். எங்கிருந்தோ வந்த ராமர் படத்தை அலங்கரித்து சப்பரம் அமைத்து, ராமபஜனை பாடியபடி, ஊர்வலம் சென்றோம். கரசேவகர்களுக்கு எந்த துயரமும் நேரக்கூடாது என்று பிரார்த்தித்தோம்.

அதன் பிறகு நடந்தது சரித்திரம். கரசேவை தடை செய்யப்பட்டது; ரதயாத்திரை சென்ற அத்வானி பிகாரில் கைது செய்யப்பட்டது; வி.பி.சிங் அரசுக்கு பா.ஜ.க. ஆதரவை வாபஸ்; அயோத்தியில் பலநூறு கரசேவகர்கள் உயிரை அர்ப்பணித்தது; வி.பி.சிங் அரசு கவிழ்ந்து சந்திரசேகர் பிரதமர் ; என்று நீளும் சரித்திரம்.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க கருணாநிந்தி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, எங்களுக்கு ஐந்து நாட்கள் முன் கைது செய்யப்பட்டவர்களின் காவல் நீட்டிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தான் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் அனைவரும் நவம்பர் 5ம் தேதி நள்ளிரவு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விடுதலை செய்யப்பட்டோம்.

இன்று நானும் எனது நண்பர்களும் சிறை மீண்ட நாளின் இருபதாவது ஆண்டு நிறைவு நாள். அயோத்தி இயக்கம் அதன்பிறகு பல கட்டங்களைத் தாண்டிவிட்டது. அங்கிருந்த அடிமைச் சின்னமும் அகற்றப்பட்டவிட்டது. அந்த இடம் ராம்லாலாவுக்கே சொந்தம் என்று தீர்ப்பும் வந்துவிட்டது. அயோத்தி இயக்கம் காரணமாக பாரதீய ஜனதா கட்சி மத்திய ஆட்சியைக் கைப்பற்றவும் காலம் வழிகோலியது. இந்த அனுபவங்கள் நமக்கு படிப்பினைகள். இதனை மறந்துவிட்டு ஆட்சி மயக்கத்தில் பா.ஜ.க. செய்த சில தவறுகளின் பலனை தற்போது அனுபவிக்கிறது. ஆயினும் காலம் சக்கரமாகச் சுழல்வது. ராமன் ஆண்ட மண்ணில் ராமராஜ்யம் மலரும் நாள் விரைவில் வரும்.

நாங்கள் கைது செய்யப்பட நாளில், கைதுக்கு தப்பிய எனது நண்பர்கள் (இருவரும் சகோதரர்கள்) விஜயகுமாரும் குமாரும் நிகழ்த்திய சாகசம் மறக்க முடியாதது. கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களை மீறி, ''கைது செய்யப்பட ஹிந்து இயக்கத் தலைவர்களை விடுதலை செய்'' என்று சுவரெழுத்து பிரசாரம் செய்த இவர்கள், ''இந்த சிறு தூறலுக்கே இரும்புக்குடை என்றால், நாளைய நெருப்பு மழைக்கு எந்தக் குடை?'' என்று எழுதிய வாசகத்தை சிறையிலிருந்து வெளிவந்த பிறகு பார்த்து உணர்ச்சிவசப்பட்டோம். உண்மைதான், நாளைய நெருப்பு மழைக்கு இந்த 'மதச்சார்பின்மை'யைக் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் எந்தக் குடை இருக்கிறது?

********************************
சிறையிலிருந்து விடுதலை ஆனபின் நான் எழுதிய அனுபவ கவிதை இது...
ஜெயில் சோறு

கொட்டையாய் இருந்தது அரிசி -அதன்
கூடவே புழுங்கிய வாடை.
தொட்டதும் ஜில்லென இருக்கும்- மதியச்
சோற்றுக்கு நேற்றைய பாடை.

ஒருநூறு அசுகள் கொண்ட - பாடை
ஒன்றினைக் கைதிகள் கொணர்ந்து
தரும்போது பசியாய்த் தானிருக்கும்- பாழுந்
தொண்டையோ அனுமதி மறுக்கும்.

அச்சு அச்சாகவே இருக்கும்- அதில்
அங்கங்கே நெல்களும் தெரியும்.
மச்சமாய் கற்களும் தெரியும்- அதை
உண்டிடில் கற்குவியல் பிரியும்.

காற்படிக் கரண்டியால் மொண்டு - சாம்பார்
கைதி என்தட்டினில் ஊற்ற,
பாற்கடல் நடுவினில் பள்ளிகொண்டான் போல
படியச்சு கண்ணுக்குத் தெரியும்.

நீரினில் மோரினைக் கலக்கி - பல
நாள்படு புளிச்சுவை மிகவே
மோரென ஊற்றிடுவார்கள் - அதை
முகர்ந்திடில் கள்மணம் வீசும்.

ஏனடா ஜெயிலுக்கு வந்தாய்? என்று
கேட்டிடும் கேள்வியை அங்கு
தானடா நன்றாய் உணர்ந்தோம் - புழுச்
சோற்றினைக் கொட்டியபோது!

இருப்பினும் எம்மனம் முழுதும் -ராமர்
கோயிலில் இருந்தது எனவே
விருப்பமும் வெறுப்புமே அற்று - அதை
உவந்துணவாகவே கொண்டோம்...
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக