வியாழன், ஆகஸ்ட் 19, 2010

சாயம் வெளுக்கும் செங்கொடி


கடுமையான விலைவாசி உயர்வு, இதுவரை காணாத லட்சம் கோடி ஊழல், அமெரிக்காவுக்கு நாட்டை விற்கத் தயாராகும் காங்கிரஸ் அரசு, .... என பல்வேறு அரசியல் பிரச்னைகள் நாட்டை அலைக்கழித்துக் கொண்டிருக்க, தங்கள் கட்சியிலிருந்து ஒரு எம்.எல்.ஏ., நீக்கப்பட்டது ஏன் என்று விளக்கக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது மா. கம்யூ. கட்சி.

அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்தைத் தடுக்க மாபெரும் தியாகம்(?) செய்ததாக முழங்கிய அதே கட்சி, தங்கள் கோட்டையென நம்பிக் கொண்டிருந்த தொழில் நகரம் திருப்பூரில் கிடைத்த அதிர்ச்சியான அனுபவத்தால் நிலைகுலைந்து போய்விட்டது.

திருப்பூர் தொகுதி மா.கம்யூ. எம்.எல்.ஏ கோவிந்தசாமியின் தமிழக அரசு சார்பான நடவடிக்கைகளை அடுத்து, அவர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்களும் நீக்கப் பட்டுள்ளனர். இந்த நீக்கத்துக்கு காரணம் என்ன என்று, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 4 வரை திருப்பூரில் அரசியல் விளக்கப்பொதுக்கூட்டங்களை நடத்தி இருக்கிறது மா.கம்யூ.

இதுநாள்வரை சகாவாக, தோழராக இருந்த கோவிந்தசாமி மீது, இந்தக் கூட்டங்களில் மா.கம்யூ.தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள், தங்களுக்குத் தாங்களே சகதி பூசிக் கொள்வதாகக் காட்சி தருகின்றன. இந்த விபரீத நிலைக்கு யார் காரணம்? அரசியல் என்பதே சுயநல லாபங்களின் கணக்கீடாக மாறி வரும் நிலையில், மா.கம்யூ. கட்சி மட்டும் விதிவிலக்காகி விட முடியாது. இந்த வீழ்ச்சியில் கோவிந்தசாமிக்கு பங்குள்ளது போலவே, மா.கம்யூ. கட்சிக்கும் சம பங்குண்டு.

திருப்பூரில் சாதாரண பனியன் தொழிலாளியாக இருந்த சி. கோவிந்தசாமி 1968ல் சி.ஐடி.யு தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். தொழிற்சங்கத்தில் தீவிர ஈடுபாடு காட்டியதன் விளைவாக மா.கம்யூ.கட்சியில் 1974ல் உறுப்பினரானார். தனது கடும் உழைப்பாலும், அனைவருடனும் பழகும் பண்பாலும் கட்சியைத் திருப்பூரில் வளர்த்த கோவிந்தசாமி, கட்சியுடன் தானும் வளர்ந்தார்.

மாவட்டக்குழு உறுப்பினர், மாநிலக்குழுஉறுப்பினர், கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் போன்ற பதவிகள் கோவிந்தசாமியை நாடிவந்தன.1986ல் திருப்பூர் நகராட்சி உறுப்பினர் ஆனார். 1989ல் திருப்பூர் எம்.எல்.ஏ., ஆனார். 2006ல் இரண்டாவது முறையாக வென்று மீண்டும் திருப்பூர் எம்.எல்.ஏ.,ஆனார். அவரது வெற்றிப் பயணம் கட்சிக்கு மகிழ்ச்சியையே தந்து வந்தது. எனவே தான், மா.கம்யூ., எம்.எல்.ஏக்களின் (9 பேர்) சட்டப் பேரவைக்குழுத் தலைவராக அவர் 2006ல் நியமிக்கப்பட்டார்.

அப்போது, தி.மு.கவுடன் நெருங்க, கோவிந்தசாமியை ஒரு கருவியாக மா.கம்யூ பயன்படுத்திக் கொண்டது. அவரது கோரிக்கைகளை தமிழக முதல்வர் உடனடியாக நிறைவேற்றி வந்தார். ''தி.மு.க எம்.எல்.ஏக்களின் கோரிக்கைகளைக் கூட கண்டு கொள்ளாத முதல்வர், மா.கம்யூ எம்.எல்.ஏ கோவிந்தசாமி என்ன கேட்டாலும் செய்து கொடுத்து விடுகிறார். இது பொறாமையாக இருக்கிறது'' என்று திருப்பூரில் நடந்த அரசு விழாவில் மு.க.ஸ்டாலினே கூறும் அளவுக்கு, இந்த உறவுப்பாலம் வலுவடைந்தது.
அதன் விளைவாகவே, திருப்பூர் புதிய மாவட்டம் உருவாக்கம், திருப்பூர் மாநகராட்சியாக தகுதி உயர்வு, அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகள் வரன்முறையாக்கச் சட்டம் போன்ற பல சாதகமான அம்சங்கள்திருப்பூருக்கு கிடைத்தன. மா.கம்யூ. கட்சியும் இதன் பலனை அனுபவித்தது.

2008ல் இந்நிலை மாறியது. தி.மு.க மா.கம்யூ., உறவில் விரிசல் விழுந்தது. 'ஐயா'வை வெறுத்தால்தான் 'அம்மா'வை நெருங்க முடியும் என்பது தமிழக அரசியல் சாசன விதி என்பதால், கருணாநிதியுடனான நெருக்கத்தை மா.கம்யூ. தலைவர்கள் குறைக்கத் துவங்கினர். ஆனால், முதல்வரின் செல்லப்பிள்ளையாக கோவிந்தசாமி நீடித்தார். அப்போதுதான் முதல் கீறல் விழுந்தது.

கோவிந்தசாமிக்கு சில கைமாறுகளைக் கருணாநிதி செய்து கொடுத்ததாக கட்சிக்குள் பேச்சு எழுந்தது. திருப்பூரில் எட்டு மணிநேரத்துக்கு மேற்பட்ட 'ஓவர்டைம்' வேலை தொடர்பாக சச்சரவு ஏற்பட்டபோது முதலாளிகளுக்கு ஆதரவாக கோவிந்தசாமி செயல்பட்டதாக சலசலப்பு ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் திருப்பூர் தொழில்துறையினரிடம் ரூ. 25 லட்சம் வசூலித்து, தமிழக அமைச்சரிடம் கோவிந்தசாமி எம்.எல்.ஏ. வழங்கியதாக கிசுகிசுக்கப்பட்டது.

அதையடுத்து, 2008 ஜூன் மாதம் மா.கம்யூ சட்டப் பேரவைக் குழுத் தலைவர் பதவியிலிருந்து கோவிந்தசாமி நீக்கப்பட்டு, பதிலாக, பாலபாரதி நியமிக்கப்பட்டார். கட்சியின் மாநிலக் குழுவில் இருந்தும் கோவிந்தசாமி நீக்கப்பட்டார். அப்போதே கட்சி திருப்பூரில் உடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோவிந்தசாமி கண்ணியம் காத்தார்.

அன்று முதலாகவே, கட்சிக்குள் அவர் ஒதுக்கப்பட்டு வந்தது, இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2 ஆண்டுகள் பொறுமை காத்த கோவிந்தசாமி, சரியான நேரத்தில், தமிழக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு விழா நடத்துவதாக அறிவித்து, கட்சிக்கு கஷாயம் கொடுத்தார்.

தி.மு.க அரசை எதிர்த்து (இது எதிர்க்கும் பருவம்) அரசியல் போராட்டங்களை நடத்தி வரும் மா.கம்யூ,அ.தி.மு.க கூட்டணிக்கு போயஸ்கார்டன் வாசலில் காத்திருக்கும் நிலையில், கோவிந்தசாமியின் அறிவிப்பு கடும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. விளைவாக, எச்சரிக்கை அறிவிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கோவிந்தசாமியும் அவரது ஆதμவாளர்களும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.

இதை எதிர்பார்த்திருந்த (கட்சியே நீக்கினால் தான் எம்.எல்.ஏ பதவி பறிபோகாது) கோவிந்தசாமியும், தமிழக அரசு ஆதரவாளராக மாறிவிட்டார். தற்போது, 'குறைந்தபட்ச நேர்மை இருந்தால் எம்.எல்.ஏ பதவியை கோவிந்தசாமி ராஜினாமா செய்ய வேண்டும்' என்று மா.கம்யூ. அறிவுறுத்தி உள்ளது. சாத்தான் வேதம் ஓதும் கதை தான் நினைவில் வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த கோவிந்தசாமி, ''42 ஆண்டு கட்சிப் பணிக்கு கிடைத்த பரிசாக இதை ஏற்கிறேன். மா.கம்யூ. எம்.எல்.ஏவின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றியது கட்சிக்கு பெருமை அல்லவா அளிக்க வேண்டும்? இதற்காக பாராட்டுவிழா நடத்துவது எப்படி தவறாகும்?'' என்று கேட்டிருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் திருப்பூரில் கோவிந்தசாமிக்கு ஆதரவு பெருகி வருவது, கட்சிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் விளைவாகவே, கோவிந்தசாமி மீது அவதூறுப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அவதூறுகள் கட்சியையே கேவலப்படுத்துகின்றன என்று பதிலடி கொடுத்திருக்கிறார் கோவிந்தசாமி. கடந்த பிப்ரவரியில் தற்கொலை செய்துகொண்ட மா.கம்யூ. தலைவர்களுள் ஒருவரான உ.ரா.வரதராஜன் போலவே தானும் நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டதாக கோவிந்தசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மா.கம்யூ. கட்சிக்கு இந்த விஷயத்தில் தனித்த வரலாறே உண்டு. திரிபுராவின் நிருபன் சக்கரவர்த்தி, கேரளாவின் கௌரியம்மாள், மேற்குவங்கத்தின் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் மீதான அவதூறு பிரசாரங்களில் செங்கொடித் தோழர்களே முன்னின்றனர் என்பது வரலாறு. அதே நிலைதான் தற்போது திருப்பூரில் காணப்படுகிறது. கம்யூனிஸ்டுகளின் ஜனநாயகம் சந்தி சிரிக்கிறது.

கோவிந்தசாமி செய்தது சரியா, தவறா என்பது இங்கு பிரச்னையல்ல. அதை அக்கட்சி கையாளும் விதம்,ஜனநாயகம் மீதான நம்பிக்கை கொண்டோருக்கு கவலை தருகிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரை எதிர்த்து நடத்தும் விளக்கப் பொதுக் கூட்டத்துக்கு பொதுச்செயலர் பிரகாஷ் காரத்தே வருகிறார் என்பதிலிருந்து, அக்கட்சியின் வன்மம் புரியும்.

"மா.கம்யூ. கட்சியை அழிக்க பிரகாஷ் காரத்தே போதும்' என்று சோம்நாத் சாட்டர்ஜி கூறியிருக்கிறார்.வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றது போல இருக்கிறது இக்கருத்து. மொத்தத்தில் செங்கொடியின் சாயம், 'குறைந்தபட்சம்' திருப்பூரில் வெளுக்கத் துவங்கிவிட்டது.
-----------------------------------------------------------------------
நன்றி: விஜயபாரதம் (13.08.2010)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக