படம் சோழர்காலத்தில் துவங்குகிறது. சோழ வம்சத்தின் கடைசி மன்னன் தமிழகத்தைவிட்டு கடல்வழியாக தப்பி ஓடுகிறானாம். அவன் அடைக்கலமானது வியட்நாம் அருகிலுள்ள சிறு தீவு. அங்கு சென்ற ஆராய்ச்சியாளர் ஒருவர் காணாமல் போவதுடன் படம் துவங்குகிறது. இந்த இடத்தில், 'இத் திரைப்படம் சோழர், பாண்டியர்களை குறிப்பிடவில்லை' என்று சமத்காரமாக ஸ்லைடு போட்டு விடுகிறார்கள்.
காணாமல் போன ஆராய்ச்சியாளரைத் தேடி, அரசு, அமைச்சர்கள் ஏற்பாட்டில் ஒரு குழு வியட்நாம் செல்கிறது. அதன் தலைவி, கட்டிளம் குமாரியான ரீமா சென். காணாமல் போனவரின் புதல்வி (ஆண்ட்ரியா)வும் கையில் ஒரு ஓலைச் சுவடியுடன் செல்கிறாள். எடுபிடி உதவிக்கு, கதாநாயகன் கார்த்தி செல்கிறார். தமிழ் கதாநாயக இயல்புப் படி, இரு நாயகிகளையும் கலாய்க்கிறார், கார்த்தி. (பாக்கெட்டிலேயே காண்டம் வைத்திருப்பதாக ஒரு வசனம் வேறு).
ஏழு தடைகளைத் தாண்டித் தான் சோழன் வசிக்கும் ரகசிய இடத்தை அடைய முடியுமாம். எல்லாம் அந்த ஓலைச் சுவடியில் இருக்கிறது! கடல் பயங்கரம், நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள், விஷப் பாம்புகள், பயங்கர வீரர்கள், புதைமணல், பசி தாகம் அனைத்தையும் தாண்டினால் தான் அந்த இடத்துக்கு போக முடியுமாம்! போகும் வழியில், உடன் வந்தவர்களை கொசுக்கள் போல சாகக் கொடுத்துவிட்டு மூவர் மட்டும் சோழ ராஜாவின் மயான பூமிக்கு சென்று விடுகிறார்கள். அதற்குள் இரண்டு ஆபாச டூயட் வேறு. (காய்ச்சலுக்கு இதில் புது வைத்தியம் சொல்கிறார் டாக்டர் செல்வராகவன்).
இவர்கள் மூவரும் கஷ்டப்பட்டு செல்வதைப் பார்த்து புளகாங்கிதம் அடையும் நேரத்தில், படத்தின் இறுதியில், ஹெலிகாப்டரில் பாராசூட்களில் இந்திய ராணுவ வீரர்கள் அதே இடத்தில் சாகசமாக இறங்குகிறார்கள்! அவர்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் வெடிகுண்டுகளுடன், சோழ வம்சாவளி மக்களை வேட்டையாடுகிறார்கள். அப்போது தான் தெரிகிறது, சோழர்களின் பரமவைரியான பாண்டியரின் குலச்செல்வி தான் ரீமா என்பது. அவர் அங்கு போவதே அமைச்சர் பாண்டியன் உள்ளிட்ட பாண்டிய வம்சாவளியினரின் திட்டம் தானாம்! அதுவும் பாண்டியரின் குலதெய்வ சிலையை மீட்கத் தானாம். (தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்க்காக இந்த கற்பனைக் காவியத்தைப் படைததிருப்பதாகவும், இதில் லாஜிக் பார்க்கலாமா என்றும் செல்வராகவன் கேட்டிருக்கிறாருங்கோ! )
கிறுக்கல்கள் பார்த்திபனுக்கு, இதில் சோழர்களின் கடைசி மன்னன் வேடம்; 'நிறைவாகவே' செய்திருக்கிறார். மக்களை அடிமைகளாக நடத்துகிறார்; அந்தப்புரத்தில் ஆட்டம் போடுகிறார் (ரீமாவும் அவரை மயக்கி அங்கு சல்லாபிக்கிறார்). அவ்வப்போது தாயகம் திரும்பும் கனவுடன் வசனம் பேசுகிறார். தாயக கனவுப் பாடலும் உண்டு. சோழ மக்கள் பஞ்சைப் பராரிகளாக, முகம் முழுவதும் கரியைப் பூசிக்கொண்டு, இறைச்சிக்காக அடித்துக்கொண்டு செத்து சுண்ணாம்பு ஆகிறார்கள். அவரது லிங்க தரிசன வசனம் போதும், செல்வராகவனை இனம் காட்ட. ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் பார்த்திருந்தால், தூக்கு மாட்டி செத்திருப்பார்கள்.
இதில் கதாநாயகன் பல்லிளித்தபடி இரு நாயகிகளிடமும் வழிகிறான்; அடிக்கடி சென்சார் செய்யப்பட 'மௌன' சொற்களை உதிர்க்கிறான். கடைசியில் சோழ இளவரசனோடு மாயமாகிறான். படம் அடுத்த பாகம் வந்தாலும் வரலாம். இந்த அரைவேக்காடுகள் இந்து தொன்மங்களை நினைத்தபடி பயன்படுத்தி இருப்பது, கார்த்தி ரீமாவிடம் வாங்கிய கன்னத்து அறையை விட வலி தருகிறது. இந்த மாதிரி ஒரு படத்தை வேறு மொழிகளில் எடுத்திருந்தால் அங்கு பிரளயமே நடந்திருக்கும். நாம் ஜடங்களாக, வெ(ற்)றிப்படத்தை பார்த்து விசில் அடித்துக் கொண்டிருக்கிறோம்.
சோழனையும் பாண்டியனையும் விட்டுத் தள்ளுங்கள், கற்பனையாகவே இருந்து தொலையட்டும். இந்திய ராணுவம் எவ்வாறு வியட்நாம் சென்று ஆயிரக் கணக்கில் மக்களை சுட்டுத் தள்ளுகிறது? அதுவும், யாருக்கும் தெரியாத ரகசிய ஆபரேசன் என்று வேறு கதைக்கிறார் ரீமா. பக்கத்தில், பத்தடி தூரத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் அட்டூழியத்தை தட்டிக் கேட்காத இந்திய அரசு, ஒரு ஆராயச்சியாளருக்காக படையை அனுப்புமா? அவர்கள் கண்டமேனிக்கு சுட்டுத் தள்ளுவார்களாம்- இந்த இணைய உலகத்தில். லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, எதை வேண்டுமானாலும் அளக்கலாமா? இதை எப்படி சென்சார் போர்டு அனுமதித்தது?
அண்டை நாடான சீனாவிலும் இதே போன்ற சரித்திர கற்பனை தழுவிய படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் எங்கேனும் இப்படி பிதற்றல்கள் வந்ததுண்டா? ஹாலிவுட் (அபோகலிப்டா) போன்ற படங்களைப் பார்த்து நகல் எடுக்கும்போது, நம்மூருக்கு பொருந்துவது போலவேனும் செய்ய வேண்டாமா? தமிழ் பண்பாடு பற்றி மேடையில் முழங்கும் 'மானமிகு'க்கள் யாரும் இந்த படத்தின் பைத்தியகாரத் தனமான சித்தரிப்புகளைக் கண்டுகொள்ளாதது ஏன்? சோழனும் பாண்டியனும் எந்த ஜாதி என்று தெரியாமல் போனது தான், கண்டுகொள்ளாததன் ரகசியமா?
ஆயிரக் கணக்கான நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், கலைஞர்களின் ஆற்றல் விழலுக்கு இறைத்த நீராகி இருக்கிறது. அதிலும் வேதனை, வருங்காலத் தலைமுறையை ஏற்கனவே நமது சரித்திரப் புத்தகங்கள் தவறாக வழிநடத்தி வருகையில், இத்தகைய படங்கள் மேலும் தடம் மாற்றுகின்றன. மக்கள் ஜடங்கள் ஆகி வருகிறார்கள் என்பதற்கு, செல்வ ராகவனின் 'ஜடங்களில் ஒருவன்' அற்புதமான சாட்சி.
நன்றி: தமிழ் ஹிந்து (23.01.2010)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக