சனி, ஆகஸ்ட் 21, 2010

முச்சந்தியில் அ.தி.மு.க.


அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.
(குறள் 437)
- என்பது, திருக்குறள் பொருட்பாலில், அரசியல் என்ற வகைப்பாட்டில் அறிவுடைமை என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய அமுத மொழி.

அறிவுடையவர்களால் எதிர்காலத்தில் நிகழப் போவதை அறிய இயலும்; அறிவில்லாதவர்களால் அவ்வாறு அறிய இயலாது என்பதே இதன் பொருள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலார்க்கு வள்ளுவர் கூறிய இலக்கணம் இன்றும் பொருத்தமாகவே உள்ளது.

சென்ற ஜூலை 13ம் தேதி கோவையில் மிக பிரமாண்டமாக அ.தி.மு.க நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தைக் கண்டபோது மேற்கண்ட குறளே நினைவில் வந்தது. கடுமையான விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, மின்வெட்டு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவற்றுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை கோவையில் நடத்தியதற்குக் காரணம் உண்டு. கடந்த ஜூன் 23 - 27ல் கோவையில் செம்மொழி மாநாடு நடத்தி, தனது ஆற்றலையும் ஆதரவுத் தளத்தையும் முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு பதிலடியாக, அதை விட அதிகக் கூட்டத்தைக் கூட்டி தனது சக்தியை நிரூபிக்கவே, கண்டன ஆர்ப்பாட்டத்தை கோவையில் அ.தி.மு.க தலைவி நடத்திக் காட்டியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகானாங்களில் தொண்டர்கள் வந்து குவிந்தனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொண்டர்கள் குவிந்ததால், கோவை மாநகரம் ஆர்ப்பாட்ட நாளில் திக்கித் திணறியது. காவல் துறை போதிய ஏற்பாடுகளைச் செய்யாததால், கடும்போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்த கோவை வ.உ.சி மைதானம் நிரம்பி, அதன் பக்கவாட்டில் உள்ள சாலைகளும், அவிநாசி நெடுஞ்சாலையும் தொண்டர்களால் வழிந்தது. அந்த வகையில், ஜெயலலிதாவின் திட்டம் நிறைவேறிவிட்டது.

உண்மையிலேயே இது மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் தான். ஆனால், இவ்வளவு பெரியக் கூட்டத்தைத் திரட்டிய அ.தி.மு.க தலைவி, தனது பேச்சில் தொண்டர்களுக்கு சரியான அரசியல் கண்ணோட்டத்தைத் தரத் தவறினார். "கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தேர்தலுக்குத் தயாராகுங்கள்'' என்று ஆர்ப்பாட்டத்தில் முழங்கினார் ஜெயலலிதா.

தனது பேச்சில் தமிழகத்தை ஆளும் தி.மு.கவையும், கருணாநிதி குடும்பத்தையும் மட்டுமே அவர் சாடினார். மத்திய அரசு குறித்து ஒரு வார்த்தை கூட அவரிடமிருந்து வரவில்லை. விலைவாசி உயர்வு, பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், தி.மு.க அரசைத் (மைனாரிட்டி அரசு) தாங்கிப் பிடிக்கும் காங்கிரஸ் போன்ற மத்திய அரசு தொடர்பான எந்த விஷயத்தையும் ஜெயலலிதா விமர்சிக்கவில்லை. இதுஅ.தி.மு.க தொண்டர்களுக்கு குழப்பத்தையே அளித்தது.

தற்போதைய அடிப்படைப் பிரச்சினைகளான இவற்றை விட்டுவிட்டு, மணல் கொள்ளை, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், செம்மொழி மாநாடு, குடும்ப ஆதிக்கம் பற்றி மட்டுமே விலாவாரியாகப் பேசினார் ஜெயலலிதா. இதன் மூலம், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வாய்ப்பை ஜெயலலிதா இழந்துவிட்டார்.

அ.தி.மு.க கூட்டணியில் தற்போது இருப்பதாக நம்பப்படும் ம.தி.மு.க, மா.கம்யூ, இந்திய கம்யூ,கட்சிகளை மரியாதை நிமித்தமாகக் கூட தனது பேச்சில் அ.தி.மு.க தலைவி குறிப்பிடவில்லை. இது முற்றிலும் தி.மு.க ஆர்ப்பாட்டம் என்பதால், அவர்கள் அழைக்கப்படவும் இல்லை. இதன் மூலம் தற்போதைய அ.தி.மு.க கூட்டணியை வலுப்படுத்தும் வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க தொண்டர்கள் பலரும் "அ.தி.மு.க -காங்கிரஸ் கூட்டணிக்கு அம்மா தயாராகி விட்டார்'' என்று பேசிச் சென்றதைக் காண முடிந்தது. தனது நம்பகமான கூட்டணியும், ஊழல்கூட்டாளியுமான தி.மு.கவை கைகழுவி விட்டு அ.தி.மு.கவுடன் காங்கிரஸ் எப்படி கைகோர்க்கும் என்பது புலப்படவில்லை. இந்த ஊசலாட்டத்திற்கு ஜெயலலிதாவே வித்திட்டிருக்கிறார்.

இதற்கு மாறான காட்சியை, திருப்பூரில் ஜூலை 12ம் தேதி நடந்த மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் காண முடிந்தது. அதில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், மத்தியில் ஐ.மு.கூட்டணி ஆட்சி அமைய உதவிய தி.மு.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகளை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். கூட்டணி சகாவான தி.மு.கவின் திட்டங்களையும் அவர் பாராட்டினார்.
ராஜதந்திரிகள் எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்கின்றனர்; ராஜதந்திரம் இல்லாதவர்களோ, நண்பர்களையும் எதிரிகளாக்கிக் கொள்கின்றனர். இதற்கு சிதம்பரம், ஜெயலலிதா இருவரின் பேச்சுக்களே உதாரணம்.

மிகப் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தி, தனது சக்தியைக் காட்டிய அ.தி.மு.க தலைவி, தனதுஅரசியல் மதியூகத்தை அங்கு காட்டத் தவறிவிட்டார். நாளைக்கு கிடைக்கும் பலாவை விட இன்றைய களாக்காயே மேலானது என்பதையும் அவர் மறந்துவிட்டார்.

தி.மு.கவுக்கு உதறல் ஏற்படுத்துவதற்காக காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள ஜெயலலிதா, தனது தற்போதைய கூட்டணிக் கட்சிகளிடையேயும் சஞ்சலம் ஏற்படுத்திவிட்டார். தொண்டர்களுடனும் மக்களுடனும் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய தொடர்பு இல்லாததன் விளைவாகவே இந்தத் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.

அ.தி.மு.கவின் முன்பு தற்போது மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கூட்டணியைத் தொடர்வது; முடிந்தால் பா.ம.க., தே.மு.தி.கவை தன்னுடன் சேர்ப்பது. இரண்டாவது, தேசிய அளவில் பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.கவுடன் சேர்வது. மூன்றாவது, தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை உடைத்து, காங்கிரசுடன் கைகோர்ப்பது. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது புலப்படாமல் முச்சந்தியில் அ.தி.மு.க தடுமாறுவது தெளிவாகத் தெரிகிறது.
அரசியல் களம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனால், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுந்தம் போக முடியாது. இதை ஜெயலலிதாவுக்கு யாரேனும் சொல்வது நல்லது.

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்குபவனே நல்ல தலைவன். தி.மு.கவுக்கு எதிரான மாற்றுசக்தியாக உள்ள ஜெயலலிதா, தன்னை நம்பியுள்ள மக்களுக்கு நம்பகமான பாதையைக் காட்ட வேண்டும்.
அதை விட்டுவிட்டு, தானும் குழம்பி, மக்களையும் குழப்பினால், வெற்றிக்கனி எட்டாமலேபோய்விடும். அ.தி.மு.கவின் சக்தி விழலுக்கு இறைத்த நீராகிவிடக் கூடாது.

தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
(குறள்: 472)
- என்பதும் வள்ளுவர் வாக்கு (அரசியல் தெரிந்து செயல்வகை).

"ஆராய்ந்து தேர்ந்த இனத்துடன், செய்ய வேண்டிய செயலைத் தேர்ந்தெடுத்து, நன்கு திட்டமிட்டுச் செய்வோருக்கு, கிட்டாத அரிய பொருள் ஏதுமில்லை' என்பதே இதன் பொருள்.

நன்றி: விஜயபாரதம் (30.07.2010)

.

1 கருத்து: