சனி, செப்டம்பர் 04, 2010

சம்பளத்தை உயர்த்திக்கொண்ட 'சாணக்கியர்கள்'...


'வறுமைக்கோடு' என்ற வார்த்தை அரசியலில் பிரபலம். அதென்ன வறுமைக்கோடு? மாத வருமானம் ரூ. 1,410 க்கு கீழ் இருப்பவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் என்று உலக வங்கி இலக்கணம் நிர்ணயித்திருக்கிறது. இந்த வருமானம் ஒரு குடும்பத்தை நடத்த தற்காலத்தில் போதாதது. எனவே இது வறுமைக்கோடாகிறது.

இதையும் இந்திய அரசு குறைத்துள்ளது. மாதம் 25 நாட்களுக்கு ரூ. 50 என்ற குறைந்தபட்ச சம்பளம் ஈட்டுபவர்கள் (மாதம் ரூ. 1,250 ) வறுமைக்கோட்டுக்கு கீழ் வர மாட்டார்கள். இந்த அடிப்படையில் தான் பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட வறுமை ஒழிப்பு திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

உண்மையில், மாதம் ரூ. 500 கூட சம்பாதிக்க முடியாத பரிதாப வறுமையில் உழல்வோரின் எண்ணிக்கை இந்தியாவில் பல கோடி. இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? ஆந்திரத்தில் எலிக்கறியை உணவாகக் கொண்ட விவசாயிகளின் கதைகளை நாம் அறிவோம். தொழில் நசியும் இடங்களில் கஞ்சித்தொட்டி திறந்து கஞ்சி வார்க்கும் காட்சிகளும் நம் நாட்டில் ஆங்காங்கே தென்படுகின்றன.

இந்த நிலைமைக்கு காரணம் என்ன? ஆங்கிலேயன் நம்மை ஆண்டபோது நமது செல்வ வளங்கள் சுரண்டப்பட்டன. அதனால் பஞ்சம் தலை விரித்தாடியது. இப்போது சுதந்திர பாரத அரசு தானே மக்களை ஆள்கிறது? மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் தானே நம்மை ஆள்கிறார்கள்? இப்போதும் அதே பஞ்சமும் நோயும் நம் மெய்யடியார்க்குத் தொடர்கிறதே, ஏன்?

அண்மையில், தங்கள் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள நாடாளுமன்றத்தில் நமது மக்கள் பிரதிநிதிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களைக் கண்ட எவரும், நமது ஏழ்மையின் காரணத்தை புரிந்துகொள்வார்கள். எந்த மக்களைக் காப்பதாக பிரமாணம் எடுத்து எம்.பி.க்களாக சென்றார்களோ, அந்த மக்களை மறந்துவிட்டு, தங்கள் சம்பளத்தை உயர்த்த இரண்டு நாட்கள் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்தார்கள், நமது மாண்புமிகு மக்கள் பிரதிநிதிகள்.

ஊருக்கெல்லாம் உணவளிக்கும் விவசாயி, தனக்கு ஒரு மூட்டை நெல் கிடைத்தால் போதும் என்று கருத மாட்டான். விதைநெல்லை விதைத்தால் தான் அறுவடை செய்ய முடியும்; விவசாயம் செய்ய முடியும்; அப்போது தான் உலகை வாழவைத்து தானும் வாழ முடியும் என்பதை பாமர விவசாயி உணர்ந்திருக்கிறான். நாட்டைக் காப்பதாக முழங்கும் பிரதிநிதிகளோ, தங்களுக்கு சம்பளம் கிடைத்தால் போதும் என்று போராடி, தங்களுக்கு தாங்களே ஊதியத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

எம்.பி.க்களின் மாத சம்பளம் படிகளுடன் சேர்த்து ரூ. 1.40 லட்சத்தை எட்டிவிட்டது. இனி நாட்டில் எங்கும் வறுமை இருக்காது. மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ்கிறார்கள் என்று நாடாளுமன்றத்தில் வாசித்துக் கொள்ளலாம். ஏற்கனவே எம்.பி.க்கள் எங்கு சென்றாலும் வாகன ஊர்வலம் பின்தொடரும். இனி அந்த வாகனங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்திக் கொள்ளலாம். கிழிந்த வேட்டியை மறைத்தபடி கும்பிடு போட, மக்கள் அப்போதும் முன்வருவார்கள்.

சம்பள கமிஷன் படுத்திய பாடு:

சென்ற ஆண்டு ஆறாவது சம்பள கமிஷன் தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்தது. அரசு ஊழியர்களின் ஊதியத்தை எந்த அளவுக்கு உயர்த்தலாம என்பதற்கான மதிப்பீட்டு பரிந்துரை அது. விலைவாசி உயர்வு காரணமாக, அரசு ஊழியர்களுக்கு கணிசமாக சம்பளத்தை உயர்த்த ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்தது.

அரசின் முதுகெலும்பான ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்திராத கட்சிகள் தேர்தலில் வெல்ல முடிவதில்லை. எனவே சம்பள கமிஷன் பரிந்துரையை மத்திய அரசும் ஏற்றது. அதன் விளைவாக கீழ்நிலை அலுவலக உதவியாளர் கூட, படிகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரத்திற்கு மேல் ஊதியம் பெறும் நிலை ஏற்பட்டது. உயர்நிலை அதிகாரிகளும் ரூ. ஒரு லட்சம் வரை ஊதியம் பெற்றனர்.

மத்திய அரசைத் தொடர்ந்து, மாநில அரசுகளும் மாநில அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தின. விலைவாசி உயர்வைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட இந்த அரசு ஊழியர் சம்பளப் பெருக்கமே, உண்மையில் நாட்டில் விலைவாசி உயர்வுக்கு மேலும் காரணமானது.

நாட்டின் பணவீக்கத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் வித்திட்ட அரசு ஊழியர் சம்பள உயர்வு, மக்கள் பிரதிநிதிகளின் கண்களையும் உறுத்தியது. தங்களுக்கு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு குறைவாக (ரூ. 14,000 ) வாங்குவது எம்.பி.க்களுக்கே அவமானமாகிவிட்டது. எனவே தங்கள் சம்பளத்தை உயர்த்த கொடி பிடித்தார்கள். பக்கவாட்டில் எத்தனை வருமானம் வந்தாலும் அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் வருமானத்தைத் தானே கணக்கில் காட்ட முடியும்?

ஒருவகையில் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையில் நியாயம் இருந்தது. முன் எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தையே தொடர்ந்து வாங்க வேண்டும் என்பது ஏற்க முடியாத ஒன்றே. ஆனால், தங்கள் சம்பளத்தை உயர்த்த அவர்கள் கையாண்ட வழிமுறை சற்றும் நியாயம் இல்லாதது.

ஏற்கனவே அற்ப அரசியல் காரணங்களுக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிலைகுலையச் செய்யப்படும் நிலையில், சம்பளத்தை உயர்த்துவதற்காக எம்.பி.க்கள் குரல் எழுப்பினார்கள். தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அதே வழிமுறையான, நாடாளுமன்றத்தை நிலைகுலையச் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள். இதில் கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றார்கள். இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் இருந்து விலகி இருந்தார்கள்.

ஆசைக்கு அளவில்லை...

எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக, மத்திய அரசு இறங்கி வந்தது. எம்.பி.க்களின் மாத சம்பளத்தை ரூ. 14,000 த்திலிருந்து ரூ. 50,000 ஆக உயர்த்துவதாக அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. தவிர, எம்.பி.க்களின் மாதாந்திர அலுவலகப் படியை ரூ. 20,000 த்திலிருந்து ரூ. 40,000 ஆக அரசு உயர்த்தியது. எம்.பி.க்களின் தொகுதிப்படியும் ரூ. 20,000 த்திலிருந்து ரூ. 40,000 ஆக உயர்த்தப்பட்டது. இது 300 சதவிகித சம்பள உயர்வாகும்.

ஆனால், இதனை எம்.பி.க்கள் ஏற்கவில்லை. தங்களுக்கு கீழ் பணி புரியும் அரசு செயலாளர் கூட மாதம் ரூ. 80,000 சம்பளம் வாங்குகையில், அவர்களைவிட ஒரு ரூபாயாவது அதிகமாக தங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அதாவது ஐந்து மடங்கு ஊதிய உயர்வை அவர்கள் எதிர்பார்த்தார்கள். சம்பள உயர்வு குறித்து தங்களிடம் ஆலோசிக்காமல் அமைச்சர் அறிவித்துவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

இதன் விளைவாக ஏற்பட்ட அமளியை அடுத்து, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அப்போது மைய மண்டபத்தில், ஒத்திகை நாடாளுமன்றத்தை நடத்திய எம்.பி.க்கள், சம்பள உயர்வு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இந்த ஒத்திகை நாடாளுமன்றத்தின் இணை பிரதமர்களாக, லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோரும், துணைத் தலைவராக அனந்தகுமாரும் செயல்பட்டார்கள்! இடதுசாரி எம்.பி.க்கள் தவிர அனைத்து எம்.பி.க்களும் இதில் பங்கேற்று உரிமைக்கு குரல் கொடுத்தார்கள்.

எம்.பி.க்களின் போராட்டம் குறித்து கட்சித் தலைவர்கள் அத்வானி, சரத் யாதவ், நிதிஷ் குமார், பிருந்தா காரத் ஆகியோர் கவலை தெரிவித்தார்கள். இந்த வழிமுறை ஏற்புடையது அல்ல என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அதற்குள், அரசும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. சம்பளத்தை ரூ. 50,000 க்கு மேல் உயர்த்த முடியாது என்ற அரசு, எம்.பி.க்களின் மாதாந்திர அலுவலகப் படி, தொகுதிப் படிகளை தலா ரூ. 5,000 உயர்த்த சம்மதித்தது. ஆக மொத்தத்தில், ஒவ்வொரு எம்.பி.யும் ரூ. ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாத சம்பளம் பெறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவும் போதாது என்று நமது மாண்புமிகு பிரதிநிதிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் பல சலுகைகள்:

எம்.பி.க்கள் பெறும் மாத சம்பளம் மட்டுமே ரூ. 1.40 லட்சம். இது தவிர, மேலும் பல சலுகைகள் அவர்களுக்கு உண்டு. எம்.பி.க்கள் வாகனம் வாங்க இதுவரை வழங்கப்பட்ட ரூ. ஒரு லட்சம் வட்டியில்லாக் கடனுதவி, ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சாலை வழியாக பயணம் மேற்கொள்ளும் எம்.பி.க்களின் வாகனப் படியும், கி.மீ.க்கு ரூ. 13 இலிருந்து ரூ. 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்கள் மட்டுமல்லாது, அவர்களின் மனைவி அல்லது கணவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விமானங்களில் முதல்வகுப்பில் பயணம் செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில் பயணங்களில் எம்.பி.க்களுக்கு சலுகை உள்ளது. இதெல்லாம் போதாது என்று, எம்.பி.க்களின் மாதாந்திர ஓய்வூதியமும் ரூ. 8,000 லிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் ஊதிய உயர்வைக் கண்டு இதேபோன்ற ஊதிய உயர்வு வழங்குமாறு டில்லி சட்டசபையிலும், டில்லி மாநகர் மன்றத்திலும் தற்போது குரல்கள் எழுந்துள்ளன. இதை ஏற்று, டில்லி சட்டசபையில் எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை 200 சதவிகிதம் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துவிட்டது. இதே போன்ற கோரிக்கைகள் இனிவரும் காலங்களில், அனைத்து மாநில சட்டசபைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் எழுப்பப்படலாம்.

அரசியலை சமுதாய சேவையாக ஏற்று, தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாட்டுக்காக போராடிய பலர் மக்கள் பிரதிநிதிகளாக வீற்றிருந்த அதே நாடாளுமன்றத்தில், தங்கள் சம்பளத்தை உயர்த்த சுயநல பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் தார்மிக வீழ்ச்சிக்கு இதைவிட வேறு மோசமான அடையாளம் தேவையில்லை.

ஊழல் குறையுமா?

எம்.பி.க்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதால், அவர்கள் ஊழலில் ஈடுபடுவது குறையும் என்பது சிலரது வாதமாக உள்ளது. இது சாத்தியம் தானா?

ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி அரசு ஊழியர்களின் சம்பளம் இரு மடங்கு உயர்த்தப்பட்டபோதிலும், லஞ்சம் வாங்கி சிக்கும் உயர் அதிகாரிகள் முகத்தை மூடியபடி கைதாகிச் செல்வதைக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம். சம்பளம் உயர்ந்துவிட்டதால், அரசு அலுவலகங்களில் லஞ்சமும் ஊழலும் ஒழிந்துவிட்டதா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது. ஒரு ஜாதிச் சான்றிதழுக்காக வட்டாட்சியர் அலுவலகம் சென்றாலே இந்த உண்மையை உணர முடியும்.

உண்மையில், இந்த சம்பள உயர்வு, அரசு ஊழியர்களை மேலும் செலவாளிகளாக்கி, அவர்களது பணத்தாசையை அதிகரித்துள்ளது. எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் பரிகசிக்கப்படும் நிலையையே ஆறாவது சம்பள கமிஷன் ஏற்படுத்தியுள்ளது. சேரச் சேர, மேலும் சேர்க்கத் தூண்டுவது பணத்தின் இயல்பு. இதற்கு அரசு அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ விதிவிலக்கில்லை.

இடைத் தரகர்களாக மாறிவரும் மக்கள் பிரதிநிதிகளின் மனப்போக்கை மாற்றும் மருந்தாக இந்த சம்பள உயர்வு இருக்கப் போவதில்லை. இந்த சம்பளத்தை விட பல நூறு மடங்கு சம்பாதிக்கும் திறன் கொண்டவர்கள், நமது மாண்புமிகு பிரதிநிதிகள். பினாமி பெயரில் சேர்க்கப்படும் சொத்துக்கள் இல்லாத பிரதிநிதி, மக்களாலேயே இப்போது பிழைக்கத் தெரியாதவராகத் தான் பார்க்கப்படுகிறார். ஒரு ஓட்டுக்கு ரூ. 5,000 விலை பேசப்படும் காலத்தில், இந்த 'துக்குனியூண்டு' சம்பள உயர்வு, எம்.பி.க்களைப் பொருத்த வரை, யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே இருக்கும்.

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கவே லஞ்சம் வாங்கும் எம்.பி.க்கள் தலைமுறையில் நாம் வாழ்கிறோம். தொங்கு நாடாளுமன்ற காலகட்டத்தில் நல்ல விலைக்குப் போகும் எம்.பி.க்களை நரசிம்ம ராவ் காலத்திலேயே பார்த்துவிட்டோம். எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி எவ்வாறெல்லாம் சுய மேம்பாட்டு நிதியாக மாறுகிறது என்பதும் நாம் அறிந்தது தான். இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளின் சம்பள உயர்வு ஊழலை ஒழித்துவிடும் என்று எண்ணினால் அது பகல் கனவாகவே இருக்கும்.

இது தான் மக்களாட்சியா?

இதில் வேதனை என்னவென்றால், எம்.பி.க்களின் சம்பள உயர்வை அவர்களே தீர்மானித்திருப்பது தான். ஆறாவது சம்பள கமிஷன் போல, எம்.பி.க்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஒரு குழு அமைத்து, அதன் பரிந்துரையை நீதித்துறை, நிர்வாகத் துறையில் அனுபவம் மிக்கவர்கள் பரிசீலித்து, பிறகு முடிவு அறிவிக்கப் பட்டிருந்தால் நியாயமாக இருந்திருக்கும். அதற்கு மாறாக, சட்டத்தை உருவாக்குபவர்களே, சட்டத்தின் மாட்சியை மீறும் வகையில், சுயநலத்துடன் செயல்பட்டிருக்கிறார்கள். இந்நிலை ஏற்கத் தக்கதல்ல.

நாட்டின் மக்கள் படும் அவலம் கண்டு உள்ளம் உருகுபவர்களே மக்கள் பிரதிநிதிகளாக தகுதி படைத்தவர்கள். நாட்டின் கடைக்கோடியில், கந்தல் உடையுடன் ஒருவேளை உணவுடன், இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வாழும் அந்த எளிய மனிதனை நினைத்துப் பார்த்து, மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வேண்டும். ஜாதியும் மதமும், சுயநல அரசியலும் கொலு வீற்றிருக்கும் இக் காலகட்டத்தில், இது சாத்தியமில்லை என்று பலர் நினைக்கலாம். அவர்களுக்காகவே வாழ்ந்துகாட்டி மறைந்திருக்கிறார், மகாத்மா காந்தி. அவரை, ‘சம்பளமாக வழங்கப்படும்’ ரூபாய் நோட்டுகளில் மட்டும் தரிசித்தால் போதாது.

சம்பளத்தை உயர்த்திகொள்வது சாணக்கியம் ஆகிவிடாது. வீடு முழுவதும் கம்பளிகள் குவிந்திருந்த போதும், மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்படுவதை தான் பயன்படுத்தக் கூடாது என்று கூறி, வெறும் தரையில் குளிரில் நடுங்கியபடி படுத்திருந்த சாணக்கியன் அமைச்சனாக நாட்டை வழிநடத்திய மண் இது. அவரால் தான் மகத்தான மகத சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது. சுயநலவாதிகளால் அத்தகைய சாதனைகளைப் படைக்க முடியாது.

உலகிலேயே அதிக ஏழைகள் (45.60 கோடி பேர்) வாழும் நாடு இந்தியா என்று உலக வங்கி சொல்கிறது. இது நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவிகிதம். இந்திய அரசின் புள்ளிவிபரமோ, நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 26 கோடி என்று கூறுகிறது. புள்ளிவிபரங்கள் மாறுபடலாம். ஆனால், நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை மாறவில்லை. இவர்களுக்கு நாடு என்ன செய்யப்போகிறது? இவர்களுக்கு சேவகம் செய்யவே மக்கள் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுத்து நாடாள அனுப்புகிறோம். இதை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

-------------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி

பெறற்கரிய பேறு...

எம்.பி.க்களின் மாத சம்பளம்: ரூ. 50,000
மாதாந்திர தொகுதிப் படி: ரூ. 45,000
மாதாந்திர அலுவலகப் படி: ரூ. 45,000
மொத்தம்: ரூ. 1.40 லட்சம்.
பிற சலுகைகள்:
வாகனம் வாங்க வட்டியில்லா கடன்: ரூ. 4 லட்சம்
சாலைப் பயணத்திற்கு வாகனப் படி: ரூ. 16 / கி.மீ.
நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் நாட்களில் தனி படி.
விமானத்தில் துணைவருடன் முதல் வகுப்பு பயணம்
ரயில் பயணத்திலும் சலுகைகள்
மாதாந்திர ஓய்வூதியம்: ரூ. 20,000 .

-------------------------------------------------------------------------------------
நன்றி: விஜயபாரதம் (10.09.2010)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக