வடகிழக்குப் பருவக் காற்றும் தென்மேற்குப் பருவக் காற்றும் மாறி மாறி வீசுவதுதான் இயற்கை. பருவக் காற்றின் திசைக்கேற்ப காற்றாலைகளைத் திருப்பி வைத்துக் கொள்வது வழக்கம். அதே காற்றாலைகள் காற்றின் திசையைத் தீர்மானிக்க முடியுமா?
இயற்கையில் இது சாத்தியமில்லாமல் இருக்கலாம். அரசியலில் எதுவும் சாத்தியமே. ஒரே தேநீர்க் கோப்பை மூலம் மத்திய அரசைக் கவிழ்க்க முடியும் என்பதை 13 மாத வாஜ்பாய் ஆட்சி வீழ்ந்தபோது நாடு கண்டது. சில சமயங்களில் வால்கூட நாயை ஆட்டுவதுண்டு.
இதற்கு சமீபகால தமிழக உதாரணங்கள், பா.ம.கவின் காடுவெட்டி குருவும், காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் தான். அரசியல் சதுரங்கத்தில் திசையை அவதானிக்க முடியாத குதிரைகளின் நேர்த்தியான ஆட்டம் பிரமிக்க வைப்பதாகவே என்றும் இருந்து வருகிறது.
இந்த நீண்ட பீடிகை எதற்கு என்ற கேள்வி எழலாம். தமிழக தேர்தல் களத்தை மாற்றியமைக்க வாய்ப்புள்ளவர்கள் மேடைகளில் முழங்கத் துவங்கிவிட்டார்கள் என்னும் போது, உயர்வு நவிற்சி இன்றி அரசியல் வானை அலச முடியாது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நெஞ்சில் பட்டதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் நேர்மை உண்டு. அதன் காரணமாகவே தி.மு.க., தலைவர் கருணாநிதியாலும், அ.தி.மு.க தலைவி ஜெயலலிதாவாலும் அவ்வப்போது வசைபாடப் படுபவர். இவரும் சளைத்தவரல்ல; நேரமறிந்து தாக்குவதில் வல்லவர் தான். சமீபத்தில் நிகழ்ந்த இளங்கோவனின் முழக்கம் கூட, சரியான தருணத்தில் வீசப்பட்ட கல் தான்.
தமிழக அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன் வைப்பதில் இளங்கோவன் என்றும் தயங்கியதில்லை. கூட்டணிக் கட்சி என்பதற்காக தி.மு.க மீது கருணை காட்ட வேண்டிய அவசியமும் (ஆட்சியில் தான் பங்கு கிடையாதே?) அவருக்கு இல்லை. இயல்பாகவே பேச்சாற்றல் (கலைஞர் பார்வையில் வாய்த்துடுக்கு) கொண்ட இளங்கோவனும் தங்கபாலு போல வெறும் வாயை மென்று கொண்டிருக்க முடியுமா?
தி.மு.க அரசு சிறுபான்மை அரசாகக் கோலோச்ச ஊன்றுகோலாக உள்ளது காங்கிரஸ். அந்தக் கட்சியின் முதுகெலும்பு உள்ள தலைவராக காங். தொண்டர்களால் கருதப்படுபவர், அவ்வப்போது காமராஜர் ஆட்சி கோஷம் வாயிலாக காமராஜரை நினைவுபடுத்துபவர் இளங்கோவன் மட்டுமே. தி.மு.க அரசின் தோல்விகளை காங்கிரஸ் மேடையில் பட்டியலிட்டுவிட்டு, கூட்டணிக் கட்சியான தி.மு.கவை வழிநடத்தவே இதைக் கூறுவதாகக் கூறும் சமத்காரம், ஈ.வி - கே சம்பத்தின் இளவலுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது.
சம்பத்தையே விழுங்கி ஏப்பம் விட்ட செம்மொழி கொண்டானுக்கு இது புரியாதா? எனவே தான், ‘இளங்கோவன் கூட்டணியை வலிப்படுத்துகிறார்’ என்று புலம்பி இருக்கிறார். மத்தியில் நிலவும் இடியாப்பச் சிக்கல்களுக்கு மத்தியில், தமிழகத்தில் இளங்கோவனின் தனி ஆவர்த்தனத்தால் வலிமிகுந்து நொந்திருக்கும் கருணாநிதி குறித்து சிந்திக்க சோனியாவுக்கு நேரமும் இல்லை.
இனிமேல் சோனியா அம்மையாரிடம் காவடி தூக்கி பிரயோசனம் இருக்குமா என்ற சந்தேகமும் கருணாநிதிக்கு வந்துவிட்டது போல. தூத்துக்குடியில் நடந்த தி.மு.க பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தியை விமர்சித்த கழகப் பேச்சாளர் வாகை முத்தழகனுக்கு ‘கடுக்காய்’ கொடுத்திருப்பதிலிருந்தே, சாணக்கியரின் நடுக்கம் புரிகிறது.
ஆனால் இளங்கோவன் இதை விடுவதாக இல்லை. சென்னையில் ஆக-8ல் நடத்தப்பட்ட காமராஜர் பிறந்த தின விழாவில் (அரசியல்வாதிகளுக்கு ஆண்டு முழுவதும் பிறந்தநாள் கொண்டாடலாம்), முன்னொரு காலத்தில் காமராஜரை கடுமையாக வசைபாடிய தி.மு.க-வை ஒரு பிடி பிடித்தார். “காமராஜரை படிக்காதவர், ஆங்கில அறிவு இல்லாதவர் என்று விமர்சித்தவர்களின் வாரிசுகள், இன்றைக்கு தில்லியில் படும் திண்டாட்டத்தை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சாடினார், சுலோசனா சம்பத்தின் மகன்.
இது அழகிரியைப் பற்றிச் சொல்லப்பட்டது தான். உரத்துறை அமைச்சராக இருந்து கொண்டு பல மாதங்களாக நாடாளுமன்றம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்காத அழகிரியைத் தான் இளங்கோவன் தாக்கினார் என்பது உடன் பிறப்புகளுக்கும் தெரியும். ஆனால் இளங்கோவன் வீட்டு போர்டிகோவைத் தாக்க முடியாது. இவரென்ன பழ.கருப்பையாவா? பழ.நெடுமாறனா? இப்போதைக்கு கையைப் பிசைவதுதான் உத்தமம். இதை ஜெயலலிதா கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட தன்னை தி.மு.க-வினர் திட்டமிட்டுத் தோற்கடித்து விட்டனர் என்ற கோபம் இளங்கோவனுக்கு உண்டு. அந்தப் புகைச்சல் இப்போது மீண்டும் புகையத் துவங்கிவிட்டது. “தமிழகத்திலுள்ள காங்கிரஸ்காரர்களை நிரந்தர அடிமைகளாக வைத்திருக்கலாம் என்று இங்கு ஆள்பவர்கள் நினைக்கின்றனர். அது நடக்காது” என்று கூறிய இளங்கோவனின் இலக்கு தெளிவாகவே தெரிகிறது.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி முறிந்தால் உடனடி நஷ்டம் தி.மு.கவுக்கே என்பதாலும், காங்கிரசுடன் கை கோர்க்க அ.தி.மு.க தயாராக உள்ளதாலும், கருணாநிதி தடுமாறுகிறார்.
இதேவேளையில், காடுவெட்டி குரு மூலம் அவதூறுப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு கூட்டணியை முறிக்கும் பரிசோதனையில் இறங்கி இறக்கிறார் மருத்துவர் ராமதாஸ். காடுவெட்டிகுருவை தமிழக அரசு கைது செய்தால், போயஸ் கார்டனுக்கு செல்ல அன்புமணியும் தயார்!
எனவே தான் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று வேதாந்தம் பேசியிருக்கிறார், காற்றின் திசையை மாற்றத்துடிக்கும் ராமதாஸ். கடந்த ஜூலை மாத கோவை ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பக்கம் சாய்ந்தவர் போலவே அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா பேசினார். இப்போது, ‘ஃ’ வடிவில் தாவும் குதிரைகளும் அங்குமிங்கும் தாவி அரசியல் களத்தைச் சூடாக்கிக் கொண்டுள்ளன.
இறுதியில் என்ன நிகழும்? இதை யாராலும் தீர்மானிக்க இயலாது. இந்த ஆட்டத்தில் குதிரைகள் பலி கொடுக்கவும் படலாம்; குதிரைகளாலேயே எதிரணி ராஜாவுக்கு ‘செக்’ வைக்கவும் படலாம். பெட்டிகள் பேசும் காலத்தில் காற்றின் திசைமாற்றத்தைக் காற்றாடிகளால் மாற்ற இயலாமலும் போகலாம்.
.
எது எப்படியாயினும், இளங்கோவனின் அதிரடி முழக்கம் காலத்தின் கட்டாயமே. கருணாநிதி சிறிது காலத்துக்கு யாருக்கும் பதில் கொடுக்காமல் இருப்பது உத்தமம். இதுவே காற்றாடி ஜோதிடம் கூறும் பலன்.
-------------------------------
நன்றி: விஜயபாரதம் (27.08.2010)
நன்றி: விஜயபாரதம் (27.08.2010)
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக