வெள்ளி, செப்டம்பர் 03, 2010

'காவி' தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா?

பரம்பரை காரணமாகவோ, கண்ணிலோ நரம்புகளிலோ கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவோ, மனிதர்களுக்கு நிறக்குருடு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களால், சில நிறங்களை பகுத்தறிய முடிவதில்லை. அதாவது நீல நிறம் சிலருக்கு நீல நிறமாகத் தோன்றாமல் போகலாம். சிலருக்கு பச்சை நிறம் கூட காவி நிறமாகவே தெரியும்.
- மருத்துவ என்சைக்ளோபீடியா- விலிருந்து.
-------------------------------------------------------------------------------------
கடந்த வாரம் (ஆக. 25 ) புதுதில்லியில் நடந்த, மாநில காவல்துறை தலைவர்கள் (டி.ஜி.பி) மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ''நாட்டில் காவி பயங்கரவாதம் (saffron terrorism) புதிய சவாலாக உருவெடுத்துள்ளது. பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு காவி பயங்கரவாதம் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய- உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள காவல்துறை தலைவர்கள் மாநாட்டில் சிதம்பரம் இவ்வாறு பேசி இருப்பது பலத்த கண்டனங்களை உருவாக்கி உள்ளது. தனது பேச்சுக்கு அவர் வேறு எந்த ஆதாரமும் காட்டவில்லை. போகிற போக்கில் காவி பயங்கரவாதம் பற்றி குறிப்பிட்டு, தனது மேதாவித் தனத்தையும் இத்தாலி அம்மையாரிடம் தனது விசுவாசத்தையும் காட்டியிருக்கிறார், ப.சி.

இது காவல்துறையை தவறாக வழிநடத்தவே என்பது வெளிப்படை. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பல முனைகளிலும் (விலைவாசி உயர்வு, வெளிநாட்டுக் கொள்கையில் தோல்வி, எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் அலட்சியம், அண்டை நாடுகளுடன் நட்புறவில் பாதிப்பு, கட்டுங்கடங்காத ஊழல், இன்னும் பல) பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்துவரும் நிலையில், மக்களின் கவனத்தை திசைதிருப்ப ப.சி. வீசிய கல்லாகவே இந்த புகார், தோற்றம் அளிக்கிறது.

எதிர்பார்த்தது போலவே, நாடு முழுவதும் ப.சி.பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் மூலமாக, ஊடகங்களின் கவனத்தைப் பெற்று, மத்திய அரசில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை ப.சி. இனம் காட்டிக் கொண்டுள்ளார். ம.பி. முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், தமிழகத்தின் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் போன்றோர் இதே விளையாட்டை இதற்கு முன் பலமுறை ஆடியிருக்கிறார்கள். சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை இஸ்லாமிய வெறியர்கள் குண்டுவைத்து தகர்த்தபோது (08 .08 .1993 ) சற்றும் கூச்சமில்லாமல், ‘இந்த குண்டை ஆர்.எஸ்.எஸ்.காரர்களே வைத்திருக்கக் கூடும்’ என்று வக்கணை பேசியவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். 2008 - ல் நாட்டில் ஹிந்து பயங்கரவாதம் பரவுவதாக அங்கலாய்த்தவர் திக்விஜய் சிங். அவர் வழிவந்த ப.சி.யும் அதே பாதையில் பயணிக்கிறார்.

ப.சி. யாரையும் தனது உரையில் குறிப்பிடவில்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகளை குறிவைத்தே அவர் பேசி இருக்கிறார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் சுரேஷ்ராவ் ஜோஷி கண்டனம் தெரிவத்தார். ''உள்துறை அமைச்சரின் பேச்சு, ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் வன்மமான முயற்சி'' என்று அவர் கண்டித்தார்.

ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளரான ராம் மாதவ், ''துணிவிருந்தால், காவி பயங்கரவாதம் என்றால் என்ன என்று ப.சி. தெளிவாக விளக்க வேண்டும். போகிற போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிக்கக் கூடாது'' என்று காட்டமாக விமர்சித்தார் .

பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும். ப.சி.யின் பிதற்றலை கடுமையாக விமர்சித்தது. அக்கட்சி, பொது நிகழ்வுகளிலும் நாடாளுமன்றத்திலும், ப.சி.யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. ''காவி நிறம் நமது நாட்டின் பாரம்பரிய சின்னம். அதை எப்படி ப.சி. மாசுபடுத்தலாம்? அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது அவரை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும்'' என்று கோரினார் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான பல்பீர் புஞ்ச்.

ப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது. அக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரான ஜனார்த்தன் த்விவேதி, ''பயங்கரவாதத்திற்கு எந்த நிறமும் கிடையாது. அதன் உண்மையான நிறம் கருப்பு மட்டுமே. எந்த வடிவில் இருந்தாலும் பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும்'' என்றதுடன், '' பாரதத்தின் பாரம்பரியத்திலும், சுதந்திரப் போராட்டக் காலத்திலும் காவி நிறத்திற்கு நிரந்தர இடமுண்டு. யாரும் வார்த்தைகளை பிரயோகிக்கும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்'' என்று ப.சி.க்கு அறிவுரை வழங்கினார்.

பா.ஜ.க.வின் உ.பி. மாநிலத் தலைவாரன் கல்ராஜ் மிஸ்ரா, ''காவி பயங்கரவாதம் என்ற பெயரில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது'' என்று கண்டித்தார். பா.ஜ.க.வின் அகில பாரதத் தலைவரான நிதின் கட்கரியோ, '' ஓட்டுவங்கிக்காக காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை ப.சி.பேச்சு நிரூபித்துள்ளது. சிறுபான்மையினரை குஷிப்படுத்த வேண்டும்; தாஜா செய்ய வேண்டும் என்பதே அக்கட்சியின் ஒரே நோக்கம். அதன் தொடர்ச்சியே இது'' என்று குற்றம் சாட்டினார்.

இவ்விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. பா.ஜ.க, சிவசேனை கட்சியினர், அமைச்சர் ப.சி. பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ''ப.சி.யின் பேச்சு, நாடாளுமன்ற அவையில் உள்ள பல உறுப்பினர்களை ஜாடையாக தாக்குகிறது. இந்தப் பேச்சால் அவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் மனம் புண்பட்டுள்ளது'' என்று மாநிலங்களவையில் அருண் ஜேட்லி பேசினார். வழக்கம்போல, மார்க்சிஸ்ட் கட்சியினரும் லாலு கட்சியினரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியை ஆதரித்தனர். திங்கள் கிழமையும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது.

நிலைமை சிக்கலாவதை உணர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும், அவர் பங்குக்கு, 'பயங்கரவாதத்திற்கு எந்த நிறமும் கிடையாது'' என்று மழுப்பினார். அதே சமயம் ''நாட்டில் சில இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தொடர்பு இருப்பதை மறுக்க முடியாது'' என்று வழக்கமான பிலாக்கனத்தைப் பாடினார்.

தங்களது இந்தப் பேச்சுக்கு பின்னணியில், மகாராஷ்டிராவின் மாலேகான் (செப். 2006), சம்ஜாதா எக்ஸ்ப்ரஸ் ரயில் (பிப். 2007), ஆந்திராவின் ஐதராபாத் மசூதி (மே 2007), ராஜஸ்தானின் ஆஜ்மீர் தர்கா (அக். 2007 ), குஜராத்தின் மொடாசா (செப். 2008), ஆகிய இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை காங்கிரஸ் கட்சியினர் காரணமாகக் காட்டுகின்றனர். உண்மை என்ன? இதற்கு, சில முன் நிகழ்வுகளுக்கு நாம் செல்ல வேண்டும்.

மாலேகான் குண்டுவெடிப்பு:

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் அருகிலுள்ள சிறு நகரம் மாலேகான். இங்கு, 2006 , செப். 8 -ம் தேதி பல இடங்களில் குண்டு வெடித்தது. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த பயங்கரம் தொடர்பாக 'சிமி' என்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பது ஆரம்பத்தில் தெரிய வந்தது.

ஆனால், சில நாட்களில் விசாரணையின் திசை மாற்றப்பட்டு, அபிநவ பாரத சங்கம் (வீர் சாவர்க்கர் விடுதலைப் போராட்டக் காலத்தில் நடத்திய அமைப்பு) இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக பெண்துறவி பிரக்யா சிங் தாகுர், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்.கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கே, ஹிந்து பயங்கரவாதம் குறித்த கட்டுக்கக்தைகள் பரவக் காரணமானது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆட்படுத்தப்பட்டு, ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க நிர்பந்திக்கப்பட்டனர். உண்மையான குண்டுவெடிப்பு குற்றவாளிகளைத் தவிர்த்த காவல்துறை, பெண் துறவியையும் முன்னாள் ராணுவ அதிகாரிகளையும் வழக்கில் குற்றம் சாட்டியது. இது ஏற்கனவே நாட்டில் மத துவேஷத்தைப் பரப்பிவரும் இஸ்லாமிய வெறியர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. அவர்களுக்கு நமது 'மதசார்பற்ற' ஊடகங்களும் பேருதவி செய்தன.

இவ்வழக்கில் இன்னும் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை முழுமையாக தாக்கல் செய்யப்படவில்லை. இவர்கள் இப்போதைக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மட்டுமே. இவர்கள் இதனை மறுத்து வருகின்றனர். இவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் இல்லாமல் மகாராஷ்டிரா காவல்துறை திணறி வருகிறது. இதுவரை மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் உறுதியான எந்த ஆதாரமும் அபிநவ பாரத சங்கம் மீது காட்டப்படவில்லை. ஆனால், இந்த வழக்கைக் காட்டியே நாட்டில் ஹிந்து தீவிரவாதம் பரவி வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

விஷயம் இத்துடன் நிற்கவில்லை. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் சம்ஜாதா ரயிலில் 2007 பிப்ரவரியில் நடந்த குண்டுவெடிப்பிலும் அபிநவ பாரத சங்கத்திற்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் கொடூரமான ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. இதில் 68 பேர் பலியாகினர்; 200 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சதியில் லஸ்கர்-எ-தொய்பா அமைப்பும் அல்-குவைதா அமைப்பும் தொடர்பு கொண்டிருப்பதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தகவல் அளித்தது. அண்மையில் அமெரிக்காவில் சிக்கிய டேவிட் ஹெட்லியும் தனது வாக்குமூலத்தில் இது தொடர்பான தகவல்களைக் கூறியுள்ளதாக தகவல். ஆனால், உண்மைக் குற்றவாளிகளைத் தவிர்த்து, இவ்வழக்கிலும் பெண்துறவி பிரக்யா சிங் தாகுர் சேர்க்கப்பட்டார்.

இதே போல, 2007 மே மாதம் ஐதராபாத் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பு (இதிலும் துவக்கத்தில் இஸ்லாமிய அமைப்பினர் கைது செய்யப்பட்டு, பிறகு பல்வேறு நிர்பந்தங்களால் விடுவிக்கப்பட்டனர்), 2007 அக்டோபரில் ஆஜ்மீர் தர்கா அருகில் நடந்த குண்டுவெடிப்பு, 2008 செப்டம்பரில் குஜராத்தின் மொடாசாவில் நடந்த குண்டுவெடிப்புகளிலும் அபிநவ பாரத சங்கம் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த அமைப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்பு இல்லை. என்றபோதும், குண்டுவெடிப்பு குற்றவாளிகளைத் தப்பவிட்டுvவிட்டு, அப்பாவி ஹிந்துக்களையும் முன்னாள் ராணுவ அதிகாரிகளையும் கைது செய்துள்ளதை ஆர்.எஸ்.எஸ். கண்டித்து வருகிறது. எனவே தான், அபிநவ பாரத சங்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். இணைத்துப் பேசப்படுகிறது.

சிறைக்குள் உள்ளவர்கள் எப்படி அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளில் ஈடுபடுவார்கள் என்ற சாதாரண ஞானமும் கூட இல்லாமல், காங்கிரஸ் காரர்களால் வழிநடத்தப்படும் காவல்துறையினர், பிரக்யா சிங் தாகுர் உள்ளிட்டோர் மீது வழக்குகளை தொடர்ந்து தொடுத்து வருகின்றனர். அதே சமயம் உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர். என்.டி.டி.வி. போன்ற சில ஊடகங்கள், தங்கள் வழக்கமான ஹிந்து விரோத பிரசாரத்திற்கு கிடைத்த அவலாக இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கின. ' காவி பயங்கரவாதம் ' என்ற வார்த்தையே என்.டி.டி.வி.யால் உற்பத்தி செய்யப்பட்டது தான்.

உண்மையில், அபிநவ பாரத் சங்கம் மீதான குண்டுவெடிப்பு வழக்குகள் புனையப்பட்டவையாகவே (fabricated ) காணப்படுகின்றன. கர்நாடகத்தின் பெங்களூரு நகரில் நடந்த குண்டுவெடிப்புகளில் கேரளத்தின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்ய முயற்சி நடந்தபோது கேரளத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. குற்றம் சாட்டப்பட்டதாலேயே மதானி குற்றவாளி ஆகிவிட மாட்டார் என்று முஸ்லிம் அமைப்புகள் கருத்து தெரிவித்தன.

இன்று, தமிழகத்திலும் கூட, மதானி கைதுக்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றன. இதே முஸ்லிம் அமைப்புகளும் காங்கிரஸ் கட்சியும் தான், எந்த குற்றமும் நிரூபிக்கப்படாத அபிநவ பாரத சங்கத்தைக் காரணம் காட்டி, நாட்டில் காவி பயங்கரவாதம் பரவி வருவதாக பிரசாரம் செய்கின்றன.

தமிழகத்தில் பல இடங்களில் குண்டு வைத்தவர்கள், மகா யோக்கியர்கள் போல, 'காணீர்... ஹிந்து பயங்கரவாதத்தின் கோர முகத்தை' என்று இதே தமிழகத்தின் பல பகுதிகளில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டுள்ளனர்.
அவர்களுக்குத் தான், ப.சி.யின் பேச்சு உதவியுள்ளது. குண்டு வைத்தவர்கள் உபதேசம் செய்வதும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்டப்படுவதும், உலகில் வேறு எங்கும் காணாத புதுமை. அது நம் நாட்டில் தான் நிகழ முடியும். ஹிந்துக்கள் ப.சி. கூறுவதுபோல குண்டு வைப்பவர்களாக இருந்திருந்தால், யாரும் இவ்வாறு ஹிந்துக்களுக்கு 'பட்டம்' சூட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

அந்தக் காலத்திலிருந்து (அதாவது நேரு காலத்திலிருந்து) இன்றுவரை காங்கிரஸ் தன போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இக்கட்சியின் சுயநல நடத்தையால் தான் நாடு துண்டானது. தற்போதும், நாட்டின் பல பகுதிகளில் பிரிவினை வாதம் தலைதூக்கியிருக்கிறது. காங்கிரஸ் திருந்தப் போவதில்லை என்பதையே ப.சி.யின் பேச்சு நிரூபித்திருக்கிறது.

நாட்டின் மீது நேசம் கொண்டவர்கள், இத்தகைய கிறுக்குத்தனமான பிதற்றல்களைக் கண்டும்காணாமல் இருந்துவிடக் கூடாது. நம்மால் இயன்ற முறைகளில், இத்தகைய பிதற்றல்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். அப்போது தான் நிறக்குருடு நோயால் பாதிக்கப்பட்ட அரசியவாதிகளிடமிருந்து நமது நாட்டை நம்மால் காக்க முடியும்.

--------------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி- 1

சிதம்பரத்திற்கு மூன்று கேள்விகள்:

* நாகலாந்தில் கிறிஸ்தவ பாதிரியார்களின் ஆதரவுடன் நடத்தப்படும் பிரிவினைவாதப் பிரசாரத்தையும், அங்கு நடக்கும் வன்முறைகளையும், வெள்ளைநிற (அது தான் கிறிஸ்தவர்களின் நிறமாம்!) பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?

* நாட்டின் பல மாநிலங்களில் தலைவிரித்தாடும் நக்சல் பாதிப்பு பகுதிகளில் சிவப்பு (அது தான் உங்கள் பாணியில் மாவோயிஸ்ட்களின் நிறம்) பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதையும் சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா?

* காஷ்மீரில் கல்லெறிந்தே பாதுகாப்புப் படையினர் பல்லாயிரம் பேரை படுகாயப்படுத்திய பாக். ஆதரவு கும்பல்களை பச்சை பயங்கரவாதிகள் என்று கூறும் துணிவு உங்களுக்கு உண்டா?
-------------------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி- 2


நிறத்தை மாற்றுவதும் லாபம் தான்!

இந்தச் செய்திக்கும் கட்டுரைக்கும் எந்த நேரடியான தொடர்பும் இல்லை. அரசுடமையாக்கப்பட்ட ஒரு தேசிய வங்கி அது. அதன் லோகோ அண்மையில் மாற்றப்பட்டது. எனவே, உலகம் முழுவதும் அந்த வங்கியின் பெயர்ப்பலகைகள் மாற்றப்பட வேண்டியதாயிற்று. அதற்கான பணி ஒப்பந்தம் முக்கிய மத்திய அமைச்சர் ஒருவரின் இளவலுக்கு வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் தான்... ரூ. 800 கோடி மட்டுமே! வங்கியின் பெயர்ப்பலகையின் நிறத்தை மாற்றுவதற்குத் தான் இந்த செலவு! ஒப்பந்தத்தைப் பெற்றவர் யார் என்று கேட்காதீர்கள். அது ....... ரகசியம்!
----------------------------------------------------------------------------------------------
.

1 கருத்து:

  1. mr sekilan awar aadaaram illamal solly irukka maattaar. pulanaaivu thahavalin padiye solliyeruppaaar. unmaikalai yarum maraikka mudiyaadu . ok. Example: Gujarath maanilathil Muslimkal paduholai seyyeppattadu. ----Summaa thaanthonrithanama eluthak koodathu ok ?

    பதிலளிநீக்கு