சனி, ஆகஸ்ட் 04, 2012

ஜனாதிபதி தேர்தல்: முன்னும் பின்னும்

எதிர்பார்த்தது போலவே நாட்டின் 13 வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுவிட்டார், பிரணாப் முகர்ஜி. ஒட்டுமொத்த வாக்கு மதிப்பான 10,29,750 ல் பிரணாப் பெற்றது 7,13,763 . எதிர்த்துப் போட்டியிட்ட சங்மா பெற்றது 3,15,987. கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளுடன் ஜனாதிபதி ஆகி இருக்கிறார் பிரணாப்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதான உறுப்பினர்களான ஐக்கிய ஜனதாதளமும் சிவசேனையும் ஆதரிப்பதற்கு முன்னரே கூட பிரணாபின் வெற்றி ஊர்ஜிதமாகவே இருந்தது. மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டாலும், அவரது வெற்றி தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. எனினும், அவரை எதிர்த்து சங்மாவை களமிறக்கியதன் மூலமாக அரசியல் களத்தில் தனது நகர்த்தலை பாஜக தெளிவாகவே முன்வைத்தது.

முதலில் சங்மா பாஜகவின் வேட்பாளர் அல்ல. அதிமுக தலைவி ஜெயலலிதாவும், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளமும் முன்னிறுத்திய சங்மாவை தனது வேட்பாளராக பாஜக அறிவித்ததன் மூலமாக, பல அடிப்படைகளில் லாபம் பெற்றுள்ளது. முதலாவது லாபம், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த, பழங்குடியினத்தைச் சேர்ந்த, கிறிஸ்தவரான பூர்னோ சங்மாவை ஆதரித்ததில் பாஜகவுக்கு பல ஆதாயங்கள் உள்ளன. தன் மீது சுமத்தப்பட்டுவரும் மதவாத முத்திரையைக் களைய இந்த வாய்ப்பு பாஜகவுக்கு உதவி இருக்கிறது. அடுத்து, தனது முன்னாள் கூட்டாளிகளை மீண்டும் நெருங்கக் கிடைத்த அரிய வாய்ப்பாக ஜனாதிபதி தேர்தலை பாஜக மாற்றிக்கொண்டது. கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் சாதுரியம் தான் இத்தனைக்கும் காரணம்.

ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கலாம் என்ற சிந்தனை கூட பாஜக வட்டத்தில் எழுந்தது. ஆனால், அதனை மாற்றியமைத்தவர் அத்வானி. தோல்வி உறுதி என்றாலும் களத்தில் போராடுபவனே உண்மையான வீரன். அந்த அடிப்படையிலும் ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க பாஜக போராடியது. கூட்டல், கழித்தல்களின் கணிதமான அரசியல் களத்தில் இப்போதைக்கு காங்கிரஸ் வென்றிருக்கிறது. புதிய ஜனாதிபதி கண்டிப்பாக பிரதீபா பாட்டில் அளவுக்கு மோசமாக இருக்க மாட்டார் என்று உறுதியாகவே நம்பலாம். ஆனால், பிரணாபிடம் நாடு அதிகமாக எதிர்பார்க்க காரணம் இருக்கிறது.

அநியாயம் என்று தனக்குத் தோன்றினால் சொந்தக் கட்சியையே எதிர்க்கத் தயங்காதவர் என்பது பிரணாப் மீது ஊடகங்கள் சாற்றும் புகழ் மாலை. அதனால் தான், பன்முகத் திறமைகள் இருந்தபோதும், கட்சித் தலைமையால் மட்டம் தட்டியே வைக்கப்பட்டார் பிரணாப். ஆயினும், அவரது பொறுமைக்கு காலம் அற்புதமான பரிசை வழங்கி இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை அரசியல் நாகரிகம் காற்றில் பறந்தது துரதிர்ஷ்டமான விஷயமே. அதற்கு காங்கிரஸ் கட்சியே வழி வகுத்தது. பிரணாப் தான் தங்கள் வேட்பாளர் என்பதை காங்கிரஸ் முன்கூட்டியே அறிவித்திருந்தால் தேர்தலில் போட்டியே நடந்திருக்காது. அவ்வாறு முடிவு செய்த பிறகேனும், எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் கட்சி ஆலோசித்திருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. விளைவாக போட்டி ஏற்பட்டுவிட்டது.

தனது கூட்டணி தலைவரான சங்மாவை நேரில் அழைத்துப் பேசக் கூட சோனியா முயற்சிக்கவில்லை. வெற்றி பெறுவோம் என்ற ஆணவத்துடன் தான் காங்கிரஸ் நடந்துகொண்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மூலமாக நெருக்குதல் கொடுக்கப்பட்டதே தவிர, சங்மாவை நியாயமான முறையில் காங்கிரஸ் நடத்தவில்லை. அதன் விளைவாக, பிரணாபின் தவறுகளை சங்மா அம்பலப்படுத்தத் துவங்கினார்.

குறிப்பாக கொல்கத்தாவில் உள்ள தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராக இருந்த பிரணாப் அந்தப் பதவியை ராஜினாமா செய்யாமலே ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது பிரதானக் குற்றச்சாட்டாக எழுந்தது. ஆதாயம் தரும் பதவி எதிலும் ஜனாதிபதி வேட்பாளர் இருக்கக் கூடாது என்பதை சங்மா தரப்பு சுட்டிக் காட்டியவுடன், அவசர அவசரமாக அந்தப் பதவியில் இருந்து பிரணாப் முன்கூட்டியே ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தது காங்கிரஸ். ஆனால், அதற்கான பதவி விலகல் கடிதத்தில் இடம்பெற்ற பிரணாப் கையெழுத்தில் இருந்த மாற்றங்கள் காரணமாக, அது ஒரு மோசடி என்று சங்மா குற்றம் சாட்டினார். இவ்விஷயம் தேர்தல் ஆணையம் முன்பு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒருசார்பாகவும், அவசரமாகவும் தீர்ப்பானது.

இந்த விவகாரத்தில் சங்மாவுக்கு ஆதரவாக களம் இறங்கிய பாஜக, பிரணாப் தேர்வானவுடன் நாகரிகமாக இந்த சர்ச்சையில் இருந்து ஒதுங்கிவிட்டது. ஆனால், சங்மா இவ்விஷயத்தை எளிதாக கைவிடுவதாகத் தெரியவில்லை. அநேகமாக, அவர் நீதிமன்றங்களில் இவ்விஷயத்தை சர்ச்சை மிக்க விவாதம் ஆக்குவார் என்றே தெரிகிறது.

அதேபோல, ‘நாட்டின் நிதிநிலைமையை மோசமாக்கிய பிரணாபை ஜனாதிபதி ஆக்கியதே அவரிடமிருந்து நிதித்துறையை மீட்கத் தான்’ என்ற அவலமான நகைச்சுவை எதிர்க்கட்சிகளால் பரப்பப்பட்டது. பிரணாபின் நேர்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. நாட்டின் தலைமைப் பீடத்துக்குச் செல்லும் ஒருவர் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் பார்த்தால் இந்த விமர்சனங்கள் தேவையே. ஆனால், இம்முறை ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் சற்று சுவை குறைந்ததாக இருந்தது கவலை அளிப்பதே.

சரியோ, தவறோ, நமது நாடு ஜனநாயகத்தில் நிலைத்திருப்பது என்பதால், அந்த நடைமுறையில் தேர்வாகியுள்ள பிரணாப் மதிப்பிற்குரியவரே. இனிவரும் நாட்களில் அவரது செயல்பாட்டின் அடிப்படையில் தான் அவரை இனிமேல் நாம் மதிப்பிட வேண்டும். மற்ற பொம்மை ஜனாதிபதிகள் போலல்லாமல் பிரணாப் சுதந்திரமாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தவுடனே துணை ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகள் சூடு பிடித்திருக்கின்றன. சோனியாவால் ஜனாதிபதியாக ஆக்க விரும்பப்பட்ட இப்போதைய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியே மீண்டும் காங்கிரஸ் கட்சியால் களம் இறக்கப்பட்டிருக்கிறார். முஸ்லிம் வாக்குகளைக் கவரவே இந்த நாடகம். நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும், அதை மறைமுகமாக ஆதரிக்கும் இடத்சாரி கட்சிகளுக்கும் உள்ள வலுவைக் கணக்கிட்டால் அன்சாரி வெல்வது உறுதி. இருப்பினும், எதிர்க்கட்சிகள் ஜனநாயகக் கடமை என்ற அடிப்படையில் போராட வேண்டி இருக்கிறது. அதற்காகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை களம் இறக்கி இருக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் போலல்லாமல், துணை ஜனாதிபதி தேர்தலில் தே.ஜ. கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது. இந்தத் தோல்வியையும் தனக்கு ஆதாயமான வகையில் மாற்றி அமைக்கவே பாஜக முயற்சிக்கிறது. காங்கிரஸ் தரப்பில் புதிய முகம் நிறுத்தப்படாத நிலையில், நாட்டிற்கு நன்கு அறிமுகமான ஜஸ்வந்த் சிங்கை தனது வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக தலைமைப் பஞ்சம் எங்கிருக்கிறது என்பதையும் பாஜக அம்பலப்படுத்தி இருக்கிறது.

முகமது அலி ஜின்னா விவகாரத்தால் பாஜகவை விட்டு சிறிதுகாலம் விலகிய ஜஸ்வந்த் சிங்கை துணை ஜனாதிபதி வேட்பாளர் ஆக்கியதை காங்கிரஸ் குறை கூறி இருக்கிறது. ‘கட்சியை விட்டு விலக்கப்பட்ட ஒருவரைத் தான் பாஜக நம்பி இருக்கிறது’ என்று கேலி பேசி இருக்கிறார்கள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள். அவர்களுக்கு ஒரு பழமொழியை நினைவுபடுத்த வேண்டியது அவசியம். கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல் எறியக் கூடாது என்பதே அந்தப் பழமொழி. இப்போதைய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி, பிரதமர் பதவி கிடைக்காததால் 1984 ல் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியவர் தான் என்பதை காங்கிரஸ் எப்படி மறந்தது?

வரும் ஆக. 7 ம் தேதி நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் அன்சாரி வெல்வது இப்போதே உறுதியாகத் தெரிகிறது. ஹமீது அன்சாரிக்கு 450 எம்பிக்களுக்கும் அதிகமானோரின் ஆதரவு உள்ளது. எனினும், நெடிய அரசியல் சதுரங்கத்தில் பாஜகவின் நகர்த்தல் பின்னாளில் அதற்கு அனுகூலமாக மாற வாய்ப்பிருக்கிறது. அந்த நோக்கத்துடன் தான், தனது வேட்பாளருக்கு ஆதரவை அதிகரிக்க தீவிர முயற்சிகளை பாஜக மேற்கொண்டிருக்கிறது. இப்போதைக்கு பாஜக கூட்டணியில் 215 எம்பிக்களே உள்ளனர். இதனால் அதிமுக, பிஜு ஜனதா தளம், தெலுங்கு தேசம், மதிமுக, திரினாமூல் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முயற்சி நடக்கிறது. எதிர்காலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக அமைய, புதிய கட்சிகளுடன் விரிவடைய இத்தேர்தலும் உதவி இருக்கிறது.

அரசியல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. எந்த ஒரு தேர்தலுடனோ, நிகழ்வுடனோ அரசியல் களம் முற்றுப்பெறுவதில்லை. தொடர்ந்த, அயராத பயணமும், போராடும் குணமுமே களத்தில் வெல்ல அடிப்படைக் காரணிகள். ஜனாதிபதி தேர்தலிலும் , துணை ஜனாதிபதி தேர்தலிலும் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பாஜக இதை நிரூபித்திருக்கிறது.


-----------------------------------

விஜயபாரதம் (10.08.2012)
.
.

1 கருத்து: