செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

காங்கிரஸில் நிலவும் தலைமைப் பஞ்சம்



ஜனாதிபதி
தேர்தல் முடிந்தவுடன் எதிர்பார்த்தது போலவே மத்திய அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த மாற்றத்தால் அரசின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. 'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழியை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அதிலும் குறிப்பாக, கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ப.சிதம்பரத்துக்கு மீண்டும் நிதி அமைச்சகத்தை அளித்திருப்பது இந்த அரசின் மீதான நம்பகத்தன்மையை மேலும் குலைப்பதாகவே உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டபோது, 'நிதி அமைச்சகத்தைக் காப்பற்ற பிரதமர் எடுத்த நடவடிக்கை இது' என்று கேலியாக ஊடக வட்டாரத்தில் செய்திகள் வலம் வந்தன. அதேபோலத் தான் இப்போது உள்துறையை ப.சிதம்பரத்திடம் இருந்து காப்பாற்ற அவரது துறையை மாற்றி இருக்கிறார் போல.

தவிர, மின்துறையில் செயல்படாத சுஷில் குமார் ஷிண்டேவை உள்துறை அமைச்சர் ஆக்கி இருக்கிறார் பிரதமர். அவர் உள்துறை அமைச்சரான அதே நாளில் பூனாவில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. வழக்கம் போல இந்த குண்டுவெடிப்பும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தான் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், நமது மத்தியப் புலனாய்வு அமைப்பு வழக்கம் போல, இதிலும் ஹிந்து தீவிரவாதிகளைத் தேடிக் கொண்டிருக்கிறது. அப்போது தானே, பயங்கரவாதிகள் சாவகாசமாகத் தப்பிச் செல்ல முடியும்?

மற்றொரு செயல்படாத அமைச்சரான வீரப்ப மொய்லிக்கு (நிறுவன விவகாரங்கள் துறை) கூடுதல் பொறுப்பு கொடுத்து மின்துறை அமைச்சராக்கினார் பிரதமர். அவரது நேரம், அவர் தனது அலுவலகத்தில் கால் வைத்த முகூர்த்தம் முதற்கொண்டு நாள் முழுவதும் வட மாநிலங்கள் முழுவதும் மின்தொடரில் ஏற்பட்ட சிக்கலால் மின்தடை ஏற்பட்டு மக்கள் விழி பிதுங்கினர். மின்சாரப் பகிர்மான தொடர்களில் பல்லாண்டுகளாக கவனம் செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்தபோது, நாட்டின் பெரும்பகுதி - குஜராத் நீங்கலாக - இருளில் ஆழ்ந்திருந்தது.

ஆக, ஒரு துறையில் சொதப்பினால் அதை விடச் சிறந்த துறைக்கு மாற்றுவது உறுதி என்பதால் காங்கிரஸ் கட்சிக்குள் சொதப்பல் திலகங்களே அணி வகுத்திருக்கிறார்கள். இனி வரும் நாட்களில், வாயாடி அமைச்சரான கபில் சிபலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வேறு துறை கிடைக்கக் கூடும். நாடாளுமன்றத்தில் வாயே திறக்காத அதி புத்திசாலியான ராகுலுக்கு விரைவில் நல்ல பதவி காத்திருப்பதாக ஊடகத் தகவல்.

தமிழகத்தைச் சேர்ந்த வாசனுக்கும் மு.க.அழகிரிக்கும் கூட, அவர்கள் வகித்துவரும் துறைகளை விட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை ஒதுக்கலாம். ஏனெனில் கப்பல் போக்குவரத்து துறையும், ரசாயனம் மற்றும் உரத்துறையும் இவர்களிடம் சிக்கிக்கொண்டு படாதபாடு படுகின்றன. இவர்களை வேறு துறைகளுக்கு மாற்றினால் இத்துறைகளுக்கு நல்லது. இவர்கள் புகும் புதிய துறைகளைப் பற்றி ஆறு மாதம் கழித்து கவனித்துக் கொள்ளலாம். அப்போது மீண்டும் அதைவிடச் சிறந்த துறைகளுக்கு இவர்களை மாற்றினால் பிரச்னை தீர்ந்தது!

மொத்தத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைப் பஞ்சம் தலைவிரித்தாடுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அரசின் தலைவரான பிரதமரிடமே தலைமைப் பண்பு இல்லாதபோது பிற துறை அமைச்சர்களிடம் அதை எதிர்பார்ப்பது நியாயமில்லை. ஆனால், காங்கிரசையும் நாட்டையும் காக்கவென்றே அவதரித்து இந்தியாவுக்கு வந்துள்ள சோனியா அம்மையாரின் தலைமைப் பண்பை உலக ஊடகங்கள் புளகாங்கிதத்துடன் மெச்சிவரும் நிலையில், அவரது அடிபொடிகளிடம் கொஞ்சம் கூட தலைமைப்பண்பு தென்படாதது கவலை அளிக்கும் விஷயமே.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக சுப்பிரமணியன் சாமியால் குற்றம் சாட்டப்பட்டவர் ப.சிதம்பரம். இவர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருக்கிறார் சாமி. அதே ப.சி.யை தொலைதொடர்புத் துறைக்கான அமைச்சர் குழு தலைவராக நியமிக்கிறார் பிரதமர். ப.சி. நிதி அமைச்சராக இருந்தபோது தான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு நிதி அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியது என்பது புகார். அதே ப.சி.யை மீண்டும் அதே துறையில் நியமித்திருக்கிறார் பிரதமர்.

இதற்கு ஆ.ராசாவையே மீண்டும் தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆக்கி இருக்கலாம். அவர் மட்டும் என்ன பாவம் செய்தாராம்? நமது 'கலாகார்' கூறியது போல தலித்தாகப் பிறந்தது தான் அவர் செய்த பாவமா? ராசாவுக்கு ஒரு நீதி, சிதம்பரத்துக்கு ஒரு நீதியா? நியாயப்படி இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டிய கருணாநிதி ஏன் அமைதி காக்கிறார் என்று யாராவது கனிமொழியிடம் கேட்டுச் சொன்னால் நன்றாக இருக்கும்.

மத்திய அரசில் மட்டுமல்ல, பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் தலைமை பரிதாபமாகப் பல்லிளிக்கிறது. ராஜஸ்தானிலும் மகாராஷ்டிராவிலும் மாநில முதல்வர்களுக்கு எதிராக நித்தமும் போர்க்கொடி உயர்த்தப்படுகிறது. ஆனால், கர்நாடகாவில் பாஜக சிண்டைப் பிய்த்துக் கொண்டிருப்பதில் காட்டும் அக்கறையில் சிறு பாகத்தைக் கூட நமது 24 மணிநேர செய்த அலைவரிசைகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் விவகாரத்தில் காட்டக் காணோம்.

டில்லியிலும் கூட ஷீலா தீட்சித் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. திறமையானவர் என்று ஒருகாலத்தில் பெயர் எடுத்த அதே ஷீலா இப்போது திறமையற்றவர் என்று சொந்தக் கட்சியினராலேயே வசை பாடப்படுகிறார். ஆக, விரைவில் ஷீலாவுக்கும் மத்திய அமைச்சர் பதவி காத்திருக்கிறது. இதில் சிக்கல் என்னவென்றால், டில்லியில் ஷீலாவை விட்டால் பேர் சொல்லும் வகையில் வேறு எந்த காங்கிரஸ் காரரும் இல்லை என்பது தான். இப்போதைக்கு சி.டி. சர்ச்சையால் அபிஷேக் சிங்வி தான் பிரபலம். அவரையே நியமிக்க வேண்டியது தான்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே களேபரங்கள் நடந்து கொண்டிருப்பதை உணராமல், தன் பங்கிற்கு கூட்டணி தலைவரான சரத் பவாரும் அண்மையில் வரிந்து கட்டியது தான் பயங்கர தமாஷ். 'பந்தியிலேயே இடம் இல்லை என்ற நிலையில் இல்லை ஓட்டை' என்று சொன்ன கதையாக, அமைச்சரவையில் இரண்டாவது இடம் யாருக்கு என்ற சர்ச்சையை கிளப்பி இரண்டு நாட்களுக்கு தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தார் பவார். அதுவும் முகர்ஜியால் காலியான இடத்துக்குத் தான் அடிதடி! அந்த இடத்துக்கு அந்தோணியை அம்மையார் நியமனம் செய்ததைப் போருக்க முடியாமல் கர்ஜித்தது மராட்டிய சிங்கம். பிறகு என்ன 'பவர் பாலிடிக்ஸ்' நடந்ததோ தெரியவில்லை, சிங்கம் அமைதியாகி விட்டது.

அருண் நேரு போன்ற காங்கிரஸ் அடிவருடிகள் பத்திரிகைகளில் எழுதும் கட்டுரைகளில் எப்படியாவது காங்கிரஸ் கட்சியை தூக்கிப் பிடிக்க முயன்றாலும், காங்கிரஸ் போலவே தான் அந்தக் கட்டுரைகளும் பல்லிளிக்கின்றன. ஒரு கட்டுரையில் அருண் நேரு கூறியிருந்த ஜோக்: மத்திய அமைச்சரவையில் இருக்கும் பல அமைச்சர்கள் முதல்வராக அனுபவம் பெற்றவர்கள் என்பது. அந்தோணி, வீரப்ப மொய்லி, எஸ்.எம். கிருஷ்ணா, சுஷில்குமார் ஷிண்டே, சரத் பவார், குலாம் நபி ஆசாத், பரூக் அப்துல்லா, என்று பட்டியலும் அவர் வாசித்திருந்தார்.

இவர்களில் அந்தோணி தவிர பெரும்பாலான அமைச்சர்கள் தங்கள் துறையில் சொதப்பியவர்கள் மட்டுமல்ல, ஊழலும் புரிந்தவர்கள். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் திறமையை இத்தாலிக் கப்பலில் வந்த வீரர்கள் கேரள மீனவர்களைச் சுட்டுக் கொன்ற போதே பார்த்துவிட்டோம். இலங்கையில் நடக்கும் அட்டூழியங்களுக்கு மௌன சாட்சியாக விளங்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு டெசோ மாநாட்டில் தலைமை தாங்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

எது எப்படியோ, நாட்டுக்கு நல்ல காலம் இப்போது இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது. பணவீக்கம் அதிகரிப்பது குறித்து கவலைப் பட ஆளில்லை. இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி அடைவது குறித்து கவலைப்படும் அமைச்சரையும் காணக் கிடைக்கவில்லை. உள்நாட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் விதமான உணவு தானிய ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் அதே அரசு, தேங்காய் விலை வீழ்ச்சிக்கு வித்திடும் பாமாயில் இறக்குமதிக்கு முண்டியடிக்கிறது. இவை சில உதாரணங்கள் மட்டுமே. அடுத்த ஆட்சி அமைக்கப்போவது காங்கிரஸ் அல்ல என்பது தீர்மானமாகத் தெரிந்துவிட்ட நிலையில், கிடைத்தவரை 'கல்லா' கட்டப் பார்க்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். இதை மக்களிடம் கொண்டு சென்று பிரசாரம் செய்ய வேண்டிய பாஜக செயலற்றிருப்பது தான் கொடுமை.

போதாக்குறைக்கு, ஊழல் எதிர்ப்புப் போராளியான அண்ணா ஹசாரே அரசியல் மாற்றத்துக்காக களத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்திருக்கிறார். இதனால் அச்சம் அடைய வேண்டிய காங்கிரஸ் கட்சி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு அவரை வசை பாடுகிறது. நாட்டு மக்களின் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் பிளவுபட்டால் தானே அம்மையாரின் அடிமைகளின் ஆட்சி (மத்தியில் இருக்கும் ஆட்சி; மாநிலத்தில் இருக்கும் ஆட்சி அல்ல) மீண்டும் மலர முடியும்? ஆனால், நாட்டு மக்களின் மனநிலையில் காங்கிரஸ் கட்சியின் அபிலாஷைகளுக்கு வேட்டு வைப்பதற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கி விட்டன.

ஆக, அதிகாரப்பசையால் பிணைக்கப்பட்ட சுயநலவாதிகளின் கூடாரமான காங்கிரஸ் கட்சியை பெரு நிறுவனங்களும் வெளிநாட்டு அன்னையும் அற்புதமாக வழி நடத்துகிறார்கள். முன்னாள் காங்கிரஸ் காரரான பழ.நெடுமாறன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல, அன்னியர் ஏ.ஓ.ஹியூமால் துவக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சரிதத்தை மற்றொரு அன்னியரான சோனியாவால் தான் முடித்துவைக்க முடியுமோ, என்னவோ?

------------------------------------------


ரசம் போன கண்ணாடியில்
பிரதிபலிக்கும் முகங்கள்...


அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய் அண்மையில் மத்திய அரசின் இயலாமையை வெளிப்படையாக விமர்சித்தது பலரால் கண்டுகொள்ளப்படவில்லை. தங்கள் மாநிலத்தில் வங்கதேச ஊடுருவல் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்த்த கோகோய், அதற்கு காரணம் மத்திய அரசு தான் என்ற குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். இதுபோன்ற சான்றிதழை சொந்தக் கட்சியைச் சேர்ந்த முதல்வரிடமிருந்தே பெறுவது பாக்கியம் அல்லவா?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் ஆளுநரான, பழுத்த காங்கிரஸ்காரரான என்.டி.திவாரியின் சுயரூபம் மரபணு சோதனையில் பல்லிளித்தபோது, கொஞ்சம் கூட காங்கிரஸ் கட்சி அலட்டிக்கொள்ளவில்லை. அவரது வேடம் ஆந்திர ஆளுநர் மாளிகையிலேயே அம்பலமானபோதும், இப்போது தான் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர இந்தியாவின் சரித்திரத்தில் இடம் பெராக் வேண்டிய தீர்ப்பை அளிக்கச் செய்த திவாரி இப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையை நோண்டாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்னை சோனியாவிடம் இதற்கு எந்த பதிலும் காணோம்.

----------------------------------------------
விஜயபாரதம் (17.08.2012)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக