செவ்வாய், ஜனவரி 03, 2012

ஹசாரேவை முட்டாள் ஆக்கிய காங்கிரஸ்

மருத்துவமனையில் ஹசாரே


பொதுவாகவே காங்கிரஸ் கட்சிக்காரர்களைப் பற்றிய 'பழம் தின்று கொட்டை போட்டவர்கள்' என்ற சொலவடை ஒன்று உண்டு. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது காங்கிரஸ் கட்சி- பயனற்ற லோக்பால் மசோதாவை (காங்கிரஸ் வடிவம்) மக்களவையில் நிறைவேற்றியதுடன், மாநிலங்களவையில் அதையும் ஒத்திவைத்து, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது காங்கிரஸ்.


முதலாவதாக, ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த மாறுபாடும் இல்லை என்று வரப்போகும் ஐந்து மாநிலத் தேர்தலில் பிரசாரம் செய்ய ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டது காங்கிரஸ் கட்சி. அரசு கொண்டுவந்த லோக்பால் சட்டத்தை கடுமையாக்க எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை உதாசீனப்படுத்தி, தான் நினைத்தபடி பல்லில்லாத ஒரு சட்டத்தை பெயரளவில் கொண்டுவந்தது காங்கிரஸ். இதன்மூலமாக, லோக்பால் சட்டத்துக்காக போராடிவரும் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் முகத்தில் ஒரு வண்டி கரியைப் பூசி இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.


இரண்டாவதாக, இந்த மசோதாவை மாநிலங்களவையிலும் நிறைவேற்றினால் தான் செல்லுபடியாகும் என்பதால், விவாதத்தை இழுத்தடித்து, கடைசியில் நேரமின்மை காரணமாக அடுத்த கூட்டத் தொடரில் இதை நிறைவேற்றுவோம் என்று முழங்கி, ஒத்திவைத்தது காங்கிரஸ். உண்மையில் மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை வலு இல்லை; எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்களை மக்களவையில் நிராகரித்தது போல மாநிலங்களவையில் நிராகரிக்க முடியவில்லை. வாக்கெடுப்புக்கு மசோதா வந்தால் அரசு நிச்சயமாகத் தோல்வியுறும் என்பதால் ஜகா வாங்கியது அரசு.


மொத்தத்தில் லோக்பால் மசோதாவை பாதி நிறைவேற்றிவிட்டு, மீதி நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறது காங்கிரஸ். காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் இருக்க, மன்மோகன் சிங்கோ, சோனியாவோ கவலைப்பட வேண்டியதில்லை. ஹசாரேவையும் பாஜகவையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.


அதாவது காங்கிரசின் திட்டம் தெளிவானது. ஊழலுக்கு எதிராக வலிமையான சட்டம் கொண்டுவருவதென்பது தன் தலையில் தானே கொள்ளிக்கட்டையால் சொரிந்து கொள்வது தான் என்பது அக்கட்சிக்குத் தெரியும். எனவேதான், லோக்பால் சட்டத்துக்காகப் போராடும் ஹசாரே குழுவினர் குறித்த அவதூறுப் பிரசாரத்தில் அக்கட்சி இறங்கியது. ஹசாரே நாடாளுமன்றத்தை விட உயர்ந்தவர் அல்ல என்று காங்கிரஸ் வாயாடிகள் செய்தியாளர் சந்திப்புகளில் முழங்கினர். ஆனால், நாடு நெடுகிலும் ஊழலுக்கு எதிராக, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக ஏற்பட்ட அலையைக் கண்டு மிரண்டது காங்கிரஸ். எனவே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலே லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று, ஹசாரேவுக்கு அஞ்சி அறிவித்தது மத்திய அரசு. இதற்காக கூட்டத் தொடர் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.


எனினும், பல்வேறு உபாயங்கள் மூலமாக குளிர்காலக் கூட்டத் தொடரின் நாட்களை திட்டமிட்டு வீணாக்கியது காங்கிரஸ். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு மசோதாவைக் கொண்டுவர முயன்று தோல்வியுற்றாலும், அதன் மூலமாக அவை நாட்களைக் குறைத்து காங்கிரஸ். பிறகு ப.சி. விவகாரம் அவை நாட்கள் வீணாக உதவியது (2 -ஜிக்கு நன்றி!) மொத்த கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்களை வீணடித்துவிட்டு, இறுதியில் தான் லோக்பால் மசோதாவை அரைகுறை மனதுடன் கொண்டுவந்தது அரசு.


எதிர்பார்த்தது போலவே, எந்தச் சத்தும் இல்லாததாக அரசு வடிவமைத்த லோக்பால் மசோதா இருந்தது. மத்தியப் புலனாய்வுத் துறை அதில் இடம் பெறவில்லை. மாநிலங்களில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பதில் மத்திய அரசின் தலையீடு, லோக்பால் உறுப்பினர்களின் தேர்வு, லோக்பாலுக்கு கடிவாளம் போல நாடாளுமன்றத்தில் ஏற்பாடு போன்ற அம்சங்களும் ஏற்புடையதாக இல்லை. இவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக பல திருத்தங்களைக் கொண்டுவந்தன. ஆனால், அவற்றை அரசு ஒரு பொருட்டாகக் கருதவில்லை. வழக்கம் போல, காங்கிரசுக்கு வால் பிடிக்கும் முலாயமும், லாலுவும், எதிர்ப்பது போல பேசிவிட்டு வெளிநடப்பு செய்ய, ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு தருணத்தில், அதில் பாதி உறுப்பினர்களின் ஆதரவுடன் லோக்பால் மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிவிட்டது அரசு.


ஆனால், லோக்பால் சட்டத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்க வேண்டுமானால் மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தாக வேண்டும். அந்தப் பெரும்பான்மை தனக்கு இல்லை என்பது அரசுக்கு நன்றாகவே தெரியும். போதாக்குறைக்கு, கூட்டணிக் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் லோக் ஆயுக்தா அமைப்பதை மாநிலங்களின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்று கூறி அரசின் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தவிர காங்கிரஸ் உறுப்பினர்கள் 13 பேரும் 'திட்டமிட்டபடி' அவையில் அப்போது இல்லை. எனவே லோக்பால் சட்டத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து வழங்கும் மசோதாவை வாக்கெடுப்புக்கு விட்டபோது, எதிர்பார்த்தபடியே அது தோல்வி அடைந்தது.


காங்கிரசின் நண்பர்களான யாதவ்கள் இருவரும் வெளிநடப்பு செய்த நிலையில், பாஜக, இடதுசாரிகள் நடப்பு வடிவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 250 வாக்குகளுடன் 542 பேர் கொண்ட மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது அந்த மசோதா (டிச. 27). குறைந்தபட்சம், அரசின் பெரும்பான்மை வலுவான 272 என்ற எண்ணிக்கையைக் கூட இம்மசோதா ஆதரவாகப் பெறவில்லை. அந்த அளவுக்கு அரசு அலட்சியம் காட்டியது.


ஆக, லோக்பால் சட்டத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வடிவம் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போலத் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிகழ்வுகள் ஹசாரேவுக்கு பெரும்விரக்தியை ஏற்படுத்தியதும் வியப்பில்லை. காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார் அண்ணா.


இந்நிலையில், மாநிலங்களவையில் லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்து விவாதத்தை துவங்கியது அரசு. விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு அவசியம் என்பது நடைமுறை. மாநிலங்களவையிலும் நிறைவேறினால் மட்டுமே, அது செயல்பாட்டுக்கு வர முடியும். ஆனால், மாநிலங்களவையில் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 97 மட்டுமே. அதிலும், திரிணாமூல் காங்கிரசின் 6 உறுப்பினர்கள் நடப்பு வடிவத்தை எதிர்த்தனர்.


மாறாக எதிர்க்கட்சி வரிசையில் பாஜக கூட்டணியின் பலம் 102 ; இடதுசாரிகளின் பலம் 19 . மாநிலங்களவையில் மசோதா வெல்ல வேண்டுமானால், 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த பலம் அரசுக்கு இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்தது. ஆனாலும் வீம்புக்கு மசோதாவைத் தாக்கல் செய்தது காங்கிரஸ். அதன் நோக்கம் மசோதாவை நிறைவேற்றுவது அல்ல; அதை வைத்து நாடகம் ஆடுவதே என்பதற்காகவே இந்த விளக்கம்.


இந்த மசோதாவுக்கு 24 திருத்தங்களை பாஜகவும் 37 திருத்தங்களை திரிணமூல் காங்கிரசும் கொண்டுவந்தன. அவற்றில் சில மட்டும் ஏற்கப்பட்டன. பிற கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நூறுக்கு மேல் இருந்தன. இதன் மீதான விவாதத்தில் பேசிய பாஜக தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி, அரசு கொண்டுவந்துள்ள மசோதாவை எதிர்ப்பதன் காரணங்களை தெளிவாக விளக்கினார்.


''ஊழல் விவகாரங்களை விசாரணை செய்யும் அமைப்புகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. இதேபோல், லோக்பால் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் அரசு சார்புடையவர்களாகவே இருக்கிறார்கள். இதனால், லோக்பாலும் மத்திய அரசின் கைப்பாவையாகவே செயல்படும். இந்த மசோதா கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக உள்ளது. அரசியல் சாசனத்தில் பெரும் குழப்பம் ஏற்படும். லோக்ஆயுக்தா நியமனம் குறித்து மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ளன. இதன்மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட முயற்சிக்கிறது. சி.பி.ஐ. அமைப்பை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சி.பி.ஐ. இயக்குநர் தீர்வுக் குழுவில் லோக்பாலும் இடம்பெற வேண்டும்'' என்றார் அவர்.


ஆனால், பாஜக நாடகமாடுவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. 'லோக்பாலுக்கு ஆதரவு என்று ஹசாரே கூட்டத்தில் முழங்கிவிட்டு நாடாளுமன்றத்தில் அதை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கிறது பாஜக' என்றார் காங்கிரசின் அபிஷேக் சிங்வி. ஹசாரே கோருவது போன்ற வலிமையான லோக்பால் சட்டத்துக்காகவே பாஜக போராடிய நிலையில், அதன் எதிர்ப்பை திசை திருப்ப முயன்றது காங்கிரஸ். எதிர்பார்த்தது போலவே, விவாதம் நீண்டது. அப்போது, கூட்டத் தொடரை மேலும் ஒருநாள் நீடிக்க விருப்பமின்றி, அடுத்த நிதிநிலை கூட்டத்தொடரில் மசோதாவை மீண்டும் கொண்டுவரலாம் என்று கூறி நழுவியது அரசு. அதாவது, மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு முன்னதாகே தனது தோல்வியை அரசு ஒப்புக் கொண்டுவிட்டது. மொத்தத்தில் லோக்பால் மசோதா காங்கிரஸ் விருப்பம் போலவே மாநிலங்களவையில் நிறைவேறவில்லை (டிச. 28).


இப்போது, மசோதா நிறைவேறாததற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று புகார் கூறுகிறது காங்கிரஸ். நல்ல வேளையாக ஹசாரே குழுவினர் அரசின் இந்த பித்தலாட்டத்தை உணர்ந்தே உள்ளனர். ''இந்த அரசை நம்ப முடியாது என்பதை மத்திய அரசு தெளிவாக காட்டியுள்ளது. இம்மசோதாவிற்கான வாக்கெடுப்பை மத்திய அரசு சந்திக்கத் தயாராக இல்லை என்பது ஆரம்பத்திலேயே தெரிந்துவிட்டது. லோக்பால் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு அரசிடம் இருந்தது. ஆனால் அரசோ தன்னுடைய பணியைச் செய்யத் தவறிவிட்டது. ஒருவருக்கு பற்கள் இல்லாவிடில் எப்படி இருக்குமோ அதேபோல் தற்போது உள்ள மசோதாவுக்கு பற்கள் இல்லை'' என்று ஹசாரே குழுவைச் சேர்ந்த கிரண் பேடி கூறி இருப்பது குறிப்பிடத் தக்கது.


எதிர்க்கட்சிகள் திருத்தம் கொண்டுவருவதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், கூட்டணிக் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் மசோதா குறித்த நிலைக்குழு விவாதத்தில் மசோதாவுக்கு ஒப்புக்கொண்டுவிட்டு, சில்லறைக் காரணங்களுக்காக எதிர்த்தது ஏன்? அது தான் காங்கிரஸ் கட்சியின் நாடகம்.


இது மம்தா பானர்ஜியும் பிரணாப் முகர்ஜியும் சேர்ந்து நடத்திய நாடகம். அதே போல, லாலுவையும் முலாயமையும் காங்கிரஸ் அவ்வப்போது மிகச் சிறந்த ஊறுகாயாகப் பயன்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. இறுதியில் மசோதாவை நிறைவேற்றாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போடும் தனது வழக்கமான நடைமுறையைத் தொடர்கிறது.


இந்த நாடகத்தால் மிகவும் ஏமாற்றப்பட்டிருப்பவர் அண்ணா ஹசாரே. அவரது உண்ணாவிரதப் போராட்டம் வலுவிழந்து போனதற்குப் பின்னணியில், காங்கிரஸ் கட்சியின் தொடர்ந்த அவதூறுப் பிரசாரம் காரணமாக உள்ளது. ஆரம்பம் முதற்கொண்டே அவரிடம் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதில் குழப்பமான மனநிலை இருந்தது. லோக்பால் சட்டத்துக்காக குரல் கொடுப்பதை விட தற்போதைய ஊழல் மயமான மத்திய அரசை வெளியேற்றுவதே சரியான தீர்வாக இருக்கும் என்பதை அவர் உணரவே இல்லை. ஒவ்வொரு முறையும் தனது அழைப்புக்கு லட்சக் கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்ற அவரது கணக்கு பிசகியதன் பின்னணியில் காங்கிரஸ் ஆதரவு ஊடகங்களும் உள்ளன.


காங்கிரஸ் கட்சி ஏதாவது சதி செய்து லோக்பாலை நிறுத்திவிடும் என்றே பாஜகவும் இடதுசாரிகளும் எதிர்பார்த்தனர். அவர்கள் தாங்கள் எதிர்க்கட்சி என்ற முறையில் நாடாளுமன்ற அவைகளில் திறமையாகவே செயல்பட்டார்கள். ஆனால், மக்களவையில் தனது பெரும்பான்மையால் எதிர்க்கட்சிகளை ஓரம்கட்டிய காங்கிரஸ், மாநிலங்களவையில் தனக்கு பெரும்பான்மை இல்லாததால் ஓட்டம் எடுத்தது. அரசு நினைத்திருந்தால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் தனது பெரும்பான்மையைக் கொண்டு லோக்பால் மசோதாவை நிறைவேற்றி இருக்க முடியும். அதையும் அரசு விரும்பவில்லை. மொத்தத்தில் நாட்டு மக்களுக்கும் நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறது காங்கிரஸ்.


இதற்கு பதிலடியாக ஐந்து மாநிலத் தேர்தலில் 'துரோகிகளுக்கு' எதிராக பிரசாரம் செய்யப்போவதாக கூறி இருக்கிறார், ஹசாரே. அவரிடம் இன்னும் தெளிவு ஏப்ரடா வேண்டும். 'துரோகிகளுக்கு' என்று கூறுவதை விட ‘’காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்’’ என்று தெளிவாகவே அவர் அறிவிப்பது நாட்டுக்கு மிகவும் நல்லது. இனியாவது நிதர்சனத்தை அவர் உணர்வாரா?


-------------------------
விஜயபாரதம் (13.01.2012)


.

1 கருத்து:

  1. லோக்பால் பற்றிய பி.ஜே.பி. -ன் தெளிவில்லாத நிலைப்பாட்டினை அனைவரும் அறிந்து கொள்ள இந்த மசோதா ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்ததில் மகிழ்ச்சி. பொதுவாக எந்த அரசியல் கட்சியும், அரசியல்வாதியும் இந்த மசோதா வருவதை விரும்பவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. லல்லுபிரசாத் யாதவை தவிர மற்ற அனைவரும் பூசி மெழுகுகின்றனர். அவர் மட்டுமே இந்த மசோதா நிறைவேறினால் அனைத்து எம். பி. க்களும் பார்லிமென்ட் வளாகத்திற்கு பதில் திஹார் வளாகத்திற்குத்தான் செல்ல வேண்டியிருக்கும் என உண்மைய போட்டு உடைத்துவிட்டார்.

    லோக்பால் வருவதை வரவேற்பதாக நாடகமாடும் பி.ஜே.பி. அது வராமல் தடுப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டது.

    உண்மையிலேயே பி.ஜே.பி. - க்கு சமூக அக்கறை இருக்குமானால் முதலில் லோக் ஆயுக்தா அனைத்து மாநிலங்களிலும் அமைவதற்கு உண்டான வழிமுறைகளை பி.ஜே.பி. செய்ய முன்வரவேண்டும்.

    பதிலளிநீக்கு