செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

தூக்குத் தண்டனை- ஒரு விவாதம்




அன்புள்ள நண்பர்களுக்கு,

மூவருக்கு மரண தண்டனை தொடர்பான குளவியின் கட்டுரை தமிழ் ஹிந்து இணையதளத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருப்பது ஒருவகையில் நமது ஹிந்து சமூகத்தின் ஜனநாயகத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. பலரும் எதிர்ப்பதுபோல குளவியாரின் ஒப்பீட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், சரித்திரம் ஒப்பீட்டுக்காகவே இத்தகைய வாய்ப்புகளை நம் முன் வழங்குகிறது. நாடாளுமன்ற தாக்குதலின் குற்றவாளியான அப்சலுக்கு சாமரம் வீசுபவர்கள் (மதச் சார்பின்மையின் காப்பாளர்கள்) ஏன் பேரறிவாளன் குழுவை கண்டுகொள்வதில்லை? என்ற கேள்வி இயல்பானது. இந்தக் கேள்விக்கான பதிலில்தான் இலங்கை தமிழினப் படுகொலைக்கான காரணமும் ஒளிந்திருக்கிறது.

எனினும், ஹிந்து நம்பிக்கைகளின் படி, குற்றம் செய்தவர் தண்டனை பெறுவதே நியதி. அதிலும் பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை விஷயத்தில் மன்னிப்புக்கே இடமில்லை. இப்போது தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்களை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் முழங்கும் வசனங்கள் உண்மையில், மேற்படி நபர்களைக் காப்பவையாக இல்லை என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். குறிப்பாக, 'இந்த மூவரைக் காக்க முடியாவிட்டால் தனித் தமிழ்நாடு உருவாகும்' என்பது போன்ற வசனங்களை மொழிபவர்களிடம் யாரும் நற்சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது. இவர்களை நாம் எக்காலத்திலும் ஆதரிக்க இயலாது.

தவிர, இம்மூவருக்காக மட்டும் இவர்கள் பரிந்து பேசுவதில்லை என்பதையும் நினைவில் கொள்வது நலம். தூக்குத் தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புபவர்கள் அதன் பின்விளைவை உணராமல் இல்லை. மனிதாபிமான முகமூடி அணிந்து இன்று இவ்வாறு குரல் எழுப்புவோர் பலரும், குஜராத் கலவரத்தின் போது, நரேந்திர மோடிக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தவர்கள். அதாவது தங்களது வசதிக்கேற்ப, தூக்குத் தண்டனையை எதிர்ப்பதே இவர்களது அரசியல். அந்த அடிப்படையில் இம்மூவருக்கும் மன்னிப்பு வழங்க முடியாது; கூடாது.

ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்துபவர்கள் இம்மூவருக்கும் நியாயம் கோரும்போது, இவர்கள் மீதான மனிதாபிமானக் கண்ணோட்டமும் அடிபட்டுவிடுகிறது. இவர்களுக்கு ஆதரவாக காஷ்மீர் பிரிவினைவாதிகளும் கைகோர்ப்பதைப் பார்க்கும்போது, தூக்குத் தண்டனையை நிறுத்தக் கூடாது என்றே கூறத் தோன்றுகிறது.

அப்சலும் கசாபும் பேரறிவாளனும் சாந்தனும் முருகனும் சட்டத்தின் முன் சமம். அவர்களை நாம் எந்த மதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. எனில், இந்த ஐவரையும் நாம் ஆதரிக்கக் கூடாது. அறியாமை, இளம் வயது, அரசியல் கொலை போன்ற காரணங்களுக்காக யாரையும் தூக்கிலிருந்து விடுவிக்க முடியாது.

எனினும் இவர்களது கருணை மனு இத்தனைக்காலம் கழித்து நிராகரிக்கப்பட்டதில் உள்ள பின்புல அரசியல் கண்டிக்கப்பட வேண்டியதே. அதற்கு குளவியின் ஒப்பீடுகள் அவசியமே. அதற்காக ‘சிறு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக தூக்குத் தண்டனையா?’ என்பது போன்ற கேள்விகளை எழுப்புவது, நமது அறியாமையே வெளிப்படுத்துகிறது. அறிவுப்பூர்வமாக அணுக வேண்டிய ஒரு விஷயத்து உணர்வுப்பூர்வமாக மாற்றவே அது வழிகோலும்.

பேரறிவாளன் எழுதிய (தொகுத்த) 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலை நான் படித்திருக்கிறேன். அதில் அவர் முன்வைக்கும் வாதங்கள் இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் பேரறிவாளன் குழுவுக்காக பரிந்து பேசுவதைக்கூட ஏற்க முடியும். ஆனால், அத்தகைய தர்க்கரீதியான பிரசாரம் தவிர்த்து, உணர்ச்சியைத் தூண்டும் அரசியல் வியாபாரிகளே தமிழகத்தில் தூக்கு எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறார்கள். அதன் விளைவே செங்கொடி போன்றவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து சாட்சியம் பெற காவல்துறை நடத்தும் அத்துமீறல்களை பேரறிவாளன் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம். அந்த அணுகுமுறையையும் தமிழகத்தில் நம்மால் காண முடியவில்லை. ஏனெனில், இங்குள்ள ஒவ்வொருவரும் தனது எதிராளிக்கு அத்தகையே அநீதி நிகழ்த்தப்பட வேண்டும் என்று உளமார விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் போடும் கோஷங்கள் வெறும் வெளி வேஷங்களே.

இந்நிலையில், தமிழ் ஹிந்து இணையதளத்தில் இக்கட்டுரை வெளியாகி இருப்பதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடாது. குளவியின் கருத்துக்கள் ஒரு கோணத்தில் நமது மனசாட்சியை உலுக்குகின்றன. ஆயினும் குற்றத்துக்கான தண்டனையை பெற வேண்டியவர்கள் பெறுவதே சரியானது. அதற்கென உள்ள மன்னிப்பு வாய்ப்புகள் காலாவதி ஆகிவிட்டது எனில், அத்தகைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த குற்றத்துக்கான தண்டனையையும் நமது மக்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

யாரை நம்பக் கூடாதோ அவர்களை நம்புவதும், யாரை நம்ப வேண்டுமோ அவர்களை ஏளனம் பேசுவதும், பேரறிவாளன் தரப்பில் ஆஜராகும் குழுக்கள் செய்துவரும் தவறுகள். அதற்கு கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படும் முட்டாள்தனமான கருத்துக்களும் காரணம். அவ்வகையில் பேரறிவாளன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் ஏமாற்றப்பட்டுள்ளன எனில் மிகையில்லை. அதற்காக, நாட்டின் இறையாண்மையை எதிர்த்து கோஷமிடும் அறிவிலித் தனத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

இவ்விஷயத்தில் ஆரம்பத்தில் குழப்பினாலும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜெயலலிதா தனது அரசியல் சாதுரியத்தைக் காட்டி இருக்கிறார். தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் கொண்டுவருவதாக அவையில் அவர் தெரிவித்திருக்கிறார். இதே போன்ற கோரிக்கையை காஷ்மீர் முதல்வர் கொண்டுவந்தால் ஏற்க முடியுமா என்பதையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

இப்போது வழக்கறிஞர்களின் தலையீட்டால் மூவரது தூக்குத் தண்டனைக்கு எட்டு வார கால இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் சி. நாகப்பன், எம். சத்யநாராயணன் ஆகியோர், தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் 11 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்திலேனும், சூழலின் நிதர்சனத்தை உணர்ந்து சட்டரீதியாக, இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து இவர்களை விடுவிக்க முயற்சிப்பதே விவேகம்.

- சேக்கிழான்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக