ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

சும்மா விடுமா அப்பாவிகள் சாபம்?



''ஆடி அடங்கும் வாழ்க்கையடா - ஆறடி நிலமே சொந்தமடா!''

- இது திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பரும் கவிஞருமான சுரதா எழுதிய திரைப்பாடல். 'நீர்க்குமிழி' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை அவர் கேட்காமல் இருந்திருக்க முடியாது. உலகம் முழுவதும் ஆண்டவனும் ஒருநாள் மண்ணுக்குள்தான் போயாக வேண்டும். அவன் புதைக்கப்படும் இடத்தின் அருகிலேயே முந்தைய காலத்தில் பிச்சைக்காரன் புதைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், அந்த மண் மீது மனிதனுக்கு ஆசை குறைவதே இல்லை.

அந்த மண்ணாசை தான் இப்போது கருணாநிதியையும் அவரது கட்சியினரையும் பந்தாடிக் கொண்டிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன் ஆட்சியை இழந்த திமுக இப்போது அடுக்கடுக்கான நிலப்பறிப்பு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் ஆளும் கட்சியினரின் அரசியல் பழிவாங்குதல் என்ற கருணாநிதியின் பிலாக்கணத்தை அக்கட்சித் தொண்டனே கூட நம்பவில்லை. அந்த அளவிற்கு கடைசி ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் திமுக பிரமுகர்கள் 'ஆடி' இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்த மமதையாலும், எதிர்க்கட்சியான அதிமுக செயலற்று இருந்ததாலும், திமுகவினர் ஆடிய ஆட்டம் சாதாரணமானதல்ல. இதனை ஒவ்வொரு சிற்றூரிலும் கூட மக்கள் அனுபவித்தார்கள். குறிப்பாக, வார்டு உறுப்பினர்கள் முதற்கொண்டு சட்டசபை உறுப்பினர்கள் வரை, தங்களுக்கு மக்கள் வழங்கிய அதிகாரம் சொத்து சேர்க்க என்பதாகவே புரிந்துகொண்டார்கள். முதல்வர் கருணாநிதியின் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளும் நடத்திய அதிரடி சொத்து சேர்ப்பு திமுகவினர் பெரும்பாலோரையும் நிலம் மீது பற்றுக் கொள்ளச் செய்தது.

மத்திய அரசில் பங்கு வகிப்பதால் கிடைத்த லாபங்களை பத்திரப்படுத்த கழகத்தின் முதன்மைக் குடும்பம் சொத்துகளைக் குவிக்கத் துவங்கியதே, இதற்கெல்லாம் அடிப்படையானது. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பல்லாயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சொத்தாக வாங்கிக் குவித்தனர் முதன்மைக் குடும்பத்தினர். அதற்கு உதவியவர்கள் முந்தைய அமைச்சரவையில் இருந்த நம்பகமான துணைவர்கள். ஒவ்வொரு நகரிலும் உள்ள முக்கிய வணிக மையங்களையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும் விவசாயப் பண்ணைகளையும் வாங்கிக் குவித்தவர்கள், முடங்கிய பஞ்சாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களையும் விலைபேசினார்கள். ஆட்சி அதிகாரம் அளித்த கம்பீரமான பாதுகாப்புடன், அவற்றை குறைந்த விலைக்கு பேசி முடித்தார்கள். இப்படித்தான் திமுகவினரின் சொத்துக்குவிப்பு துவங்கியது.

கழகத்தின் ஆணிவேர்க் குடும்பமே இவ்வாறு சொத்து சேர்க்க முனைந்தவுடன் சல்லிவேர்க் குடும்பங்களும் அதே பாணியில் சொத்துக்களை சேர்க்கத் துவங்கின. சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோட்டில் என்.கே.கே.பி.ராஜா, கோவையில் பொங்கலூர் பழனிசாமி, திருப்பூரில் செல்வராஜ், சென்னையில் பரிதி இளம்வழுதி, அன்பழகன், மதுரையில் அழகிரி கோஷ்டியினர்.. என்று மாநிலம் முழுவதும் அதிகார அத்துமீறல்கள் தொடர்ந்தன.

ஆரம்பத்தில் கோடிகளைக் கொட்டி நிலங்களை வாங்கியவர்கள், பிற்பாடு, கடனில் மூழ்கிய சொத்துக்கள், தாவா உள்ள சொத்துக்களை திட்டமிட்டு அபகரிக்கத் துவங்கினர். இதில் 'பவர் ஆப் அட்டர்னி' முறையில் கபளீகரம் செய்யப்பட நிலமோசடிகள் பல. பத்திரப் பதிவாளரின் உதவியுடன் கூடிய போலிப்பத்திர மோசடிகளும் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கு எதிரான அப்பாவிகளின் புகார்கள் அம்பலம் ஏறவில்லை. ஆட்சியில் திமுக இருந்ததால், மிரட்டி நிலங்களைப் பறித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது. அதே காவல்துறை தான் இப்போது திமுக பிரமுகர்களை விரட்டி விரட்டி கைது செய்கிறது. இந்த வழக்குகள் இல்லாம் சட்டரீதியாக நீதிமன்றங்களில் வெற்றிபெறுவது சந்தேகமே என்றாலும், இப்போதைக்கு, திமுகவினர் இதனால் நிலைகுலைந்து விட்டது தெளிவாகவே தெரிகிறது.

தேர்தலில் வென்ற அதிமுக, திமுகவினர் நிகழ்த்திய பல அத்துமீறல்களை சரிசெய்யத் துவங்கியபோது, இந்த நிலப்பறிப்பு மோசடிகள் குறித்த புகார்கள் புற்றீசல் போல வெளியாகின. இதையடுத்து, இது தொடர்பான புகார்களை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இப்பிரிவில் குவிந்த புகார்கள் காவல்துறையினரையே மலைக்கச் செய்தன. இவ்வாறு புகார் அளிக்க வந்தவர்கள் பெரும்பாலோர் அரசியல் பலமில்லாத அப்பாவிகளாகவே இருப்பதை பார்க்கும்போது, நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மிகுகிறது.

குறிப்பாக, சேலத்தில் ஒரு குடியிருப்பே (அங்கம்மாள் காலனி) அமைச்சர்தரப்பால் காலி செய்யப்பட்ட அநியாயம் நடந்திருக்கிறது. அதற்கு கோட்டாட்சியரும் பதிவாளரும் துணை போயிருக்கின்றனர், பெருந்துறையில் 80 க்கு மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி ஒரே இரவில் ஆறு ஏக்கர் நிலம் அமைச்சர் கோஷ்டியால் ஆக்கிரமிக்கப்பட்டது. காவல்துறை வேடிக்கை பார்த்திருந்தது. இதுபோன்ற அத்துமீறல்கள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன. ஜூலை இறுதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் நிலமோசடி சிறப்பு விசாரணைப் பிரிவில் 2,500 க்கு மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருந்தன. அவற்றில் ஆதாரம் வலுவாக உள்ள 200 மோசடிகள் மீதே வழக்கு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைகள் தொடரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவிப்பது இயல்பே.

ஆரம்பத்தில், 'பொய்வழக்குகளை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, அதற்கு வாய்ப்பில்லாமல் நிலமோசடி வழக்குகளிலேயே திமுகவினர் பலரும் சிறை சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில், இப்போது புலம்பத் துவங்கி இருக்கிறார்.

இந்நிலையில், நிலமோசடிகள் குறித்து விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் நிறுவ உத்தரவிட்ட அரசாணையை எதிர்த்து திமுக வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார்கள். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரும் செய்திருக்கிறார்கள்.

‘நிலமோசடி புகார்களில் சிக்கும் அதிமுகவினரை விசாரித்து அனுப்பிவிடும் காவல்துறையினர், திமுவினரை மட்டுமே கைது செய்கிறார்கள்’ என்று அங்கலாய்த்திருக்கிறார் கருணாநிதி. முந்தைய ஆட்சியில் திமுகவுக்கு சாதகமாக இருந்த காவல்துறை இப்போது அதிமுகவினருக்கு சாதகமாகச் செயல்படுவது உண்மையானால், அது யாருடைய குற்றம்? முந்தைய ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால் கருணாநிதிக்கு இன்றைய புலம்பும் நிலை வாய்த்திருக்காது. இன்றைய அதிமுக அரசு தவறு செய்தால் அதற்கு அடுத்த ஆட்சியில் திமுக பழி வாங்கட்டும். அதற்காக, திமுகவினர் செய்த முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் காவல்துறை இருக்க வேண்டுமா?

இப்போது சாத்தான் வேதம் ஓதுவதுபோல, முன்னாள் முதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ''புகாரே இல்லாமல் திமுகவினர் கைது செய்யப்படுகின்றனர். வழக்குப் பதிவு செய்யும் முடிவைக் காவல் துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வரும் கட்டளைகளைக் கேட்டு இரவோடு இரவாக அள்ளித் தெளித்த அவரசக் கோலத்தில் காரியங்கள் நடைபெறுகின்றன. நிலப்பறிப்பு புகார்களுக்கு அதிமுக அரசு அளித்து வரும் ஊக்கமும், முன்னுரிமையும் விரும்பத்தகாத விளைகளை ஏற்படுத்தும். அவற்றில் தொடர்ந்து ஆர்வம் காட்டும் மனோபாவம் காவல்துறையில் வளர்ந்துவிடும்'' என்று அதில் அவர் எச்சரித்திருக்கிறார்.

தற்போதைய நிலமோசடி வழக்குகள் தொடர்ந்தால், 'ஆட்சியாளர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாதளவு கட்டப் பஞ்சாயத்துகள் முளைக்கும். எல்லாக் காலங்களிலும் அரசியல் கட்சிகளைப் பழிவாங்கிட உதவும் ஆயுதமாக அது மாறிவிடும்' என்றும் கருணாநிதி பயமுறுத்தி இருக்கிறார். 'கொலை,கொள்ளை குற்றங்களைப் புலனாய்வு செய்வதுபோல நிலப்பறிப்பு புகாரிலும் அரசியல் கலப்பில்லாமல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அனுமதிக்கப்பட வேண்டும்' என்று அறிவுரை வேறு கூறி இருக்கிறார். சிறுதாவூர் விவகாரத்திலும் கொடநாடு விவகாரத்திலும் 'அரசியலே இல்லாமல் (?) காவல்துறையை இயங்கச் செய்த மகாத்மா' இந்த ஆலோசனையைக் கூறுகிறார்!

முன்னதாக கோவையில் ஜூலையில் நடந்த திமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'நிலப்பறிப்பு வழக்குகளால், தற்போதைய அரசின் நல்ல திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்' என்று ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மையுடன் அறிவுறுத்தியதை இங்கே நினைவுகூரலாம்.

கெஞ்சியும் பார்க்கிறார், மிரட்டிப் பார்க்கிறார், சட்டரீதியாகப் போராடவும் ஒருபக்கம் முயற்சி செய்கிறார், புலம்பி அனுதாபத்தை சம்பாதிக்கவும் வழிதேடுகிறார், ... இப்படி எந்தத் திசையில் சென்றாலும் வழி அடைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கும் நிலையில், 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி என்னதான் செய்வார்? சுற்றிவரும் அப்பாவிகள் சாபம் சும்மாவிடுமா கழகத்தை?

''மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை; மனிதன் மீது மண்ணுக்கு ஆசை... மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது.. இதை மனம் தான் உணர மறுக்கிறது...''

- இதுவும் கருணாநிதியின் உற்ற நண்பர் வைரமுத்து, ‘முத்து’ திரைப்படத்தில் எழுதிய மற்றொரு திரைப்பாடல். இதையும் முத்துவேல் கருணாநிதி கண்டிப்பாகக் கேட்டிருக்கலாம். இதுபோல இன்னும் பல பாடல்கள் இருக்கலாம். அவற்றை நிராதரவாக அமர்ந்து கேட்க வேண்டிய காலகட்டத்தில் தான் திமுக தலைவர் இருக்கிறார்.



--------------------------
விஜயபாரதம் (26.08.2011)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக