வெள்ளி, பிப்ரவரி 18, 2011

அதிமேதாவிகள் சபையில் அற்புதப் புனிதர்


''யோக்கியன் வர்றான்; செம்பைத் தூக்கி உள்ளே வை'' என்ற சொலவடை உண்டு. மத்தியில் அரசாளும் திருவாளர் புனிதமும் பொருளாதார மேதையுமான மன்மோகன் சிங் அண்மையில் தொலைக்காட்சி ஆசிரியர்களுக்கு அளித்த நேர்காணல், இந்த சொலவடையையே நினைவுபடுத்தியது. நாட்டையே உலக அரங்கில் தலைகுனியச் செய்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த பிரதமரின் பதில் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கும் என்று நேர்காணலில் பங்கேற்ற ஊடக நண்பர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கூட்டணி நிர்பந்தம் காரணமாக சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டியதாகிவிட்டது என்று பத்திரிகையாளர்களிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார், பிரதமர். இப்படி தகிடுதத்தம் செய்து ஆட்சியில் நீடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று ஒரே ஒரு கேள்வி கேட்க ஊடக நண்பர்களும் மறந்துவிட்டார்கள். அவர்கள் தான் 'நண்பர்கள்' ஆயிற்றே?

மாறாக, பிரதமர் தனது இயலாமையையும் கட்டுப்பட்ட தன்மையையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று அவரது நேர்மையை சிலாகிக்கின்றன சில ஊடகங்கள். சப்பைக்கட்டு கட்டும் மன்மோகன், இந்த நேர்காணலை எந்த தைரியத்தில் ஏற்பாடு செய்தார் என்பது இப்போது விளங்கி இருக்கும். அதிகரித்துவரும் அதிருப்தி, மத்திய அரசு மீதான நீங்க இயலாத கறைகள், விரைவில் கூடவுள்ள நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் ஆகியவற்றை உத்தேசித்து, காங்கிரஸ் ஆட்சியின் ஊடக நண்பர்கள் பிரதமருடன் இணைந்து நடத்தியுள்ள நாடகம் இது. இந்த ஊடகங்களைத் தான் மக்கள் 24 மணிநேர செய்தி அலைவரிசைகளில் கண்டு 'உச்' கொட்டுகிறார்கள். நாடு விளங்கிவிடும்.

பிப். 16 ம் தேதி தில்லியில் ஏற்பாடு செய்யப்பட இந்த 70 நிமிட சிறப்பு நேர்காணலில், பிரதமர் தனது இயலாமையை வெளிப்படையாகப் புலம்பியதோடு நிற்கவில்லை; விவசாயம், கல்வி, சுகாதாரப் பணிகளுக்காக மத்திய அரசு அளிக்கும் மானியங்களுடன் ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒப்பிட்டு, நியாயப்படுத்தி இருக்கிறார். அதாவது, நாட்டின் ஏழை மக்கள் வாழ உதவும் மானியங்கள் போன்றதுதான், பகாசூர தொலைதொடர்பு நிறுவனங்கள் கொள்ளைலாபம் பெற ராசா உதவிய வானவில் அலைக்கற்றை மோசடி ஒதுக்கீடு என்கிறார் மன்மோகன். ஒப்பிடக் கூடாத இருவேறு அம்சங்களை ஒப்பிட்ட பிரதமரை வியந்தபடி, நைச்சியமாக புன்னகைத்தபடி இருந்தார்கள் ஆங்கில ஊடக மேதைகள்.

இந்த நேர்காணலில் பங்கேற்ற ஊடக நண்பர்கள்: பிரணாய் ராய் (என்டிடிவி), ராமகிருஷ்ணன் (சன் டிவி), அர்னாப் கோஸ்வாமி (டைம்ஸ் நவ்), ராஜ்தீப் சர்தேசாய் (சிஎன்என் ஐபிஎன்), அருண் பூரி (ஆஜ் தக்), பிரசாந்த் ரகுவம்சம் (ஆசியா நெட்), பிரஞ்சால் சர்மா (ப்ளூம்பர்க்- யுடிவி), சுபாசிஷ் மொய்த்ரா (கொல்கத்தா டிவி), சஞ்சய் மஜூம்தார் (பிபிசி), சதீஷ் சிங் (ஜீ நியூஸ்) உள்ளிட்டோர். இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே நிறைவேற்றினார்கள். இவர்கள் அடிப்பது போல அடித்தார்கள்; பிரதமரும் அழுவதுபோல அழுதார். தங்களுக்கு கொடுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்ல யாருமே முயற்சிக்கவில்லை. ஒருவர் கூட, பிரதமருக்கு சங்கடம் தரும் கேள்வியைக் கேட்கவில்லை.

இந்த நேர்காணலில் மன்மோகன் சிங்கனார் தெளிவுபடுத்திய முக்கிய விஷயங்கள்:

1.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 'முதலில் வருவோருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் ராசா செயல்பட்டது எனக்கோ மத்திய அமைச்சரவைக்கோ தெரியாது. ராசா கூறியபடி எல்லாமே வெளிப்படியாக நடக்கின்றன என்பதை நம்பினேன்.

2. ராசா மீது புகார்கள் இருந்தபோதும் கூட்டணி நிர்பந்தம் காரணமாக மீண்டும் அவரை தொலைதொடர்புத் துறை அமைச்சராக்க வேண்டிவந்தது. கூட்டணி அரசியலால் எனது கைகள் கட்டப்பட்டிருந்தன. கூட்டணி தர்மத்திற்காக சமரசம் செய்ய வேண்டியதாகிவிட்டது.

3 . 2 ஜி ஒதுக்கீட்டால் ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்ற சி.ஏ.ஜி அறிக்கையை ஏற்க முடியாது. அரசு மானியங்களை இழப்பாகக் கருத முடியாதது போலவே இதையும் இழப்பாக கருதக் கூடாது.

4. நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராக தான் அஞ்சவில்லை. சீசரின் மனைவி சந்தேகத்திற்கு இடமற்றவளாக இருக்க வேண்டும் என்பதை ஏற்கிறேன்.

5. ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தல் நடத்த முடியாது. எனவே பதவி விலகுவது என்ற பேச்சிற்கே இடமில்லை.

6. யாரை அமைச்சராக்குவது என்ற அதிகாரம் என் கையில் இல்லை. கூட்டணி ஆட்சியில் கூட்டணித் தலைவர்கள் சொல்வதுபோலத் தான் நடக்க முடியும்.

7. ஊழல் குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் வருத்தம் அடையச் செய்துள்ளன; அதே சமயம் பொருளாதார் உயர்வு (?) மகிழ்ச்சி அளிக்கிறது.

- இவை, நமது மதிப்பிற்குரிய பிரதமரின் வாக்குமூலங்கள். மிகவும் உத்தமர் போலவும், நடந்துவிட்ட அநீதிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவர் போலவும், பேட்டி கொடுத்த மன்மோகன், இறுதியில் ஊடகங்களுக்கு விடுத்த வேண்டுகோள் தான் உச்சபட்ச நகைச்சுவை. ஊழல் விஷயங்களை ஊதிப் பெருக்கி நாட்டின் நற்பெயருக்கு (?) ஊடகங்கள் களங்கம் விளைவிக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார், பெயருக்கு பிரதமர் நாற்காலியில் ஒட்டிக்கொண்டிருக்கும் மன்மோகன் சிங்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை ஏற்க முடியாது (இவரிடம் யார் அனுமதி கேட்டார்களாம்?), காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது (தேசியக்கொடிக்கு கிடைத்த மரியாதை நினைவிருக்கிறதா?), தெலுங்கானா விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டும் (ஜெகன்மோகன் ரெட்டியுடனுமா?), வட கிழக்கு மாநிலங்களில் அமைதிக்கு வழி ஏற்பட்டுள்ளது (இத்தனை நாட்களாக அமைதி எங்கு போயிருந்தது?) என்றெலாம் தத்துப் பித்தென்று முழங்கினார் மன்மோகனார். அதை அப்படியே நேரலை ஒளிபரப்பில் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தன நமது செய்தி தொலைக்காட்சி அலைவரிசைகள். எந்தப் புத்திசாலியும் எதிர்க்கேள்வி கேட்கவில்லை. கேட்கப்பட்ட துணைக் கேள்விகளும் பிரதமர் மறந்துவிட்ட மழுப்பல்களை வெளிப்படுத்த உதவுபவையாக இருந்தன.

''பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. விரோத மனப்பான்மையுடன் செயல்படுகிறது; குஜராத் அமைச்சர் மீதான கைது நடவடிக்கைக்காக மத்திய அரசு மீது கோபம் கொண்டு நாடாளுமன்றத்தில் எங்களை தொடர்ந்து எதிர்க்கிறது'' என்ற மன்மோகனின் விளக்கத்தைக் கேட்டு சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், அதில் ஒளிந்துள்ள பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தும் தந்திரமும், மதச்சார்பின்மை நுண் அரசியலும் கவனிக்கப்பட வேண்டியவை. பா.ஜ.க. மீதான இந்த குறிப்பிட்ட தாக்குதல், சிறுபான்மையினர் ஆதரவு என்ற கேடயத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சி. நன்கு திட்டமிடப்பட்ட நேர்காணல் இது; மன்மோகனை வழிநடத்தியவர்களே தான் அவர் முன் அமர்ந்து கேள்வி கேட்டார்கள் என்பதை இந்த ஒரு விளக்கமே காட்டிவிட்டது.

நமது நாடு ஜனநாயக நாடு; இங்கு பிரதமருக்கே முற்றிலுமான அதிகாரம்; அவர் நினைத்தால் யாரையும் அமைச்சரவையில் சேர்க்கவோ, நீக்கவோ முடியும் என்றெல்லாம் நம்பப்பட்டு வந்தது. அதை தனது நேர்காணலால் தவிடுபொடி ஆக்கி இருக்கிறார் மன்மோகன் சிங். இதன்மூலமாக, ஊழல் குற்றச்சாட்டுகளாலும் எம்பி.க்களை விலைக்கு வாங்கியதாலும் இந்தியாவின் மிக மோசமான பிரதமர் என்ற அவப்பெயரை சுமந்துகொண்டிருந்த நரசிம்மராவை நல்லவர் ஆக்கிவிட்டார் மன்மோகன் சிங். ராவிடம் கூட நாட்டுநலன் குறித்த எண்ணமும் அதற்கான விழைவுகளும் தென்பட்டன. பின்னணியில் இருந்து இயக்கத் துடித்த இத்தாலிய அன்னையை ஒதுக்கிவைத்தபோது ராவின் ராஜதந்திரம் வெளிப்பட்டது. மன்மோகனிடம் வெளிப்படும் 'ராச'தந்திரம், அவரது இயலாமையை மட்டுமல்லாது, நாட்டுநலன் மீதான அக்கறையின்மையையும் அம்பலப்படுத்தியது.

தனது நேர்காணலில் ஸ்பெக்ட்ரம் ஊழலை நியாயப்படுத்த பலவாறு முயன்ற மன்மோகன் சிங், ஒரு இடத்திலும் கூட இப்போது 'சட்டம் தன கடமையைச் செய்து கொண்டிருப்பது' குறித்து மூச்சு விடவில்லை. ராசா கைது ஒரு அமைச்சரவை சகா மீதான பலத்த அடி என்பதை அவர் மறந்தும் சொல்லவில்லை; யாரும் நினைவும் படுத்தவில்லை. வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பல ‘கோடி கோடி’ கருப்புப்பணம் குறித்த சங்கடமான கேள்விகளோ, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை முன்னரே அமைத்து எதிர்க்கட்சிகளை சமாளித்திருக்கலாமே என்ற புத்திசாலிதனமான கேள்வியோ, இந்த நேர்காணலுக்கு சோனியா அம்மையாரிடம் ஆலோசனையோ பெற்றுவிட்டீர்களா என்ற தர்க்கப்பூர்வமான கேள்வியையோ எந்த அதிமேதாவியும் கேட்கவில்லை. வினவப்பட்ட கேள்விக்கே விளக்கெண்ணெய் பதில் சொன்ன பிரதமர், தானாக முன்வந்து நாட்டு மக்களை தெளிவடையச் செய்யப் போகிறாரா என்ன?

மொத்தத்தில் பிரதமரின் பிரத்யேக நேர்முகம், அவர் எதிர்பார்த்தது போல அவருக்கு எந்த நற்பலனையும் அளிக்காமல் கோமாளித்தனமாக முடிந்துவிட்டது. இதில் கிடைத்த ஒரே ஒரு லாபம், நாட்டு மக்களை குழப்பிவரும் ஊடக அறிஞர்களின் பொய்முகங்களை மீண்டும் ஒருமுறை தோலுரித்திருப்பது தான். நாட்டு மக்களை சில நாட்கள் திசைதிருப்ப முயன்ற காங்கிரஸ் கட்சிக்கு சேவகம் செய்து 'தங்கள் 'யோக்கியதை'யை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ஊடக வாலாக்கள். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

------------------------------

நன்றி: விஜயபாரதம் (01.03.2011)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக