வெள்ளி, ஏப்ரல் 06, 2012

மீண்டும் புயலைக் கிளப்பும் ராமசேது


"இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்து விடலாமா? என்பது குறித்து மத்திய அரசு தனது நிலையை இரண்டுவார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டும்'' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், ராமசேது விவகாரம் மீண்டும் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பத் துவங்கி இருக்கிறது.

இலகையின் தலைமன்னாருக்கும், இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் 30 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ள பகுதியே 'ராமசேது' என்றும் 'ராமர் பாலம்' என்றும் அழைக்கப்படுகிறது. மன்னார் வளைகுடாவையும் பாக் ஜலசந்தியையும் பிரிக்கும் இந்த ராமசேது பகுதியில் கடலின் ஆழம் 3 அடி முதல் 30 அடி வரை மட்டுமே உள்ளதால், இப்பகுதியில் பெரிய கப்பல்கள் செல்ல முடியாது.

நமது நாட்டில் தொன்றுதொட்டு நிலவும் பாரம்பரிய நம்பிக்கைப்படி, சீதையை மீட்க இலங்கை சென்ற ராமனின் சேனையால் கட்டப்பட்டது தான் ராமர் பாலம். இந்தப் பாலத்தை இந்துக்கள் புனிதமானதாகக் கருதுகின்றனர். ஆனால், ராமாயணத்தையே கேலி பேசும் சிலர், இந்தப் பாலம் குறித்த நம்பிக்கைகள் கற்பனையானவை என்கின்றனர். இந்த நாட்டில் ஹிந்துக்களின் நம்பிக்கைகள் எப்போதும் கிள்ளுக்கீரை தானே அவர்களுக்கு?

இந்தப் பாலம் உள்ள பகுதியில் கடலை ஆழப்படுத்தினால் பெரிய கப்பல்கள் செல்ல முடியும் என்ற சிந்தனையுடன்சேது சமுத்திரத் திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, ராமர் பாலம் பகுதியில் 30 மீட்டர் அகலத்துக்கு, 12 மீட்டர் ஆழத்துக்கு, அதன் இருபுறமும் 167 கி.மீ தூரத்துக்கு கடலை தூர்வாரி அகலப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றாமல், சேது கால்வாய் வழியாக வங்கக் கடலை நேராக அடைய முடியும். இதனால் 400 கிமீ தூரம் கடற்பயணம் மிச்சமாகும் என்று கூறப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 2,077 கோடி.

ஆனால், இத்திட்டத்தால் இயற்கைக்கு மாறான மாற்றங்கள் நிகழ்ந்து சூழல் பாதிக்கும் என்ற அச்சம் நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டது. மீனவர்களும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தவிர, ராமர்பாலம் ஹிந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கை என்பதால் இந்தப் பாலத்தை சேதப்படுத்தக் கூடாது என்று நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. இதற்காக இந்து இயக்கங்கள் நாடு தழுவிய பிரசார இயக்கத்தை முன்னெடுத்தன.

ஆனாலும் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல், காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலாவது பதவிக் காலத்தில், கடந்த 2005 , ஜுலை 2 ல் சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தொடங்கின. இதனை பிரதமர் மன்மோகன் சிங் மதுரையில் நடைபெற்ற விழாவில் துவக்கிவைத்தார். அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியும் காங்கிரஸ் தலைவி சோனியாவும் அவ்விழாவில் பங்கேற்றனர்.

பிறகு அப்போதைய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரும் திமுக பிரமுகருமான டி.ஆர்.பாலுவின் தீவிர முயற்சியால் கடலில் தூர் வாரும் பணி துவங்கியது. இதற்காக டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான நிறுவனமே பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதித்தது.

மேலும், ராமர் பால பகுதி வழியாக இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, தனுஷ்கோடி வழியாக இந்தத் திட்டத்தை மாற்று வழியில் நிறைவேற்றும் வாய்ப்புகள் குறித்து ஆராயுமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து மாற்றுப் பாதை குறித்து ஆராய சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்தார். இந்தக் குழு நீண்ட காலம் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்து விட்டது. ஆனால் அதை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்னும் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பச்செளரி கமிட்டி அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதைத் தொடர்ந்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் 6 வார காலம் அவகாசம் வழங்கியது.

இந் நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். தத்து, அனில் ஆர். தவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணிய சாமி நேரில் ஆஜராகி வாதிட்டார். அவர் கூறுகையில், ''சேது சமுத்திரத் திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். அதனால் அந்தப் பகுதியைத் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு மாற்றப்பட்டு விட்டன. கடந்த ஜனவரி மாதம் கூட இது குறித்து மத்திய அரசின் நிலையை உச்ச நீதிமன்றம் கேட்டது. ஆனால், இதுவரை மத்திய அரசு பதில் தெரிவிக்கவில்லை'' என்றார்.

இதையடுத்து பேசிய மத்திய அரசின் கூடுதல் தலைமை சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், ''குறிப்பிட்ட இடத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டுமானால் அதற்கு மத்திய அமைச்சரவைச் செயலாளரின் அனுமதியைப் பெற வேண்டும். அதே போல், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் பச்செளரி குழுவின் அறிக்கையை இறுதி செய்யவும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அவசர கதியில் ஆய்வுகளை நடத்த இயலாது'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட சாமி, ''பச்செளரி குழு அறிக்கையின் நகலை என்னிடம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்றார். இதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவலிடம் நீதிபதி தத்து, ''பழமையான ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவித்து விடலாமா? இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு துறைகளில் அறிவுரைகள் பெற்று தெரிவியுங்கள். அரசு பதில் அளிக்கத் தவறினால், அதன் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடத்தப்படும்'' என்றார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''சேது சமுத்திர திட்டம் தொடர்பான ஆய்வை முடிக்கவும் அறிக்கை தயாரிக்கவும் அதிக காலம் ஆகிறது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அதனால், பச்செளரி குழுவின் அறிக்கையை 6 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையின் நகலை சுப்பிரமணிய சாமிக்கு அளிக்க வேண்டும்'' என்று அறிவித்தனர் (28. 03.2012).

மறுநாள் (29. 03.2012) நடந்த தொடர் விசாரணையின்போது, ''ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிப்பது குறித்து நிபுணர்களுடன் அரசு ஆலோசித்து வருகிறது. எனவே கால அவகாசம் வேண்டும்'' என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் கோரினார்.

மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 2 வார கால அவகாசம் அளித்து உத்தரவிட்டார். மீண்டும் இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று விசாரணைக்கு வழக்கு வரும்போது மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ராமர்பாலம் விவகாரத்தில் மத்திய அரசின் அலட்சிய மனோபாவத்தைக் கண்டித்து பாஜக, அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் ஒருநாள் (29. 03.2012) முடங்கியது. அதிமுக தலைவி ஜெயலலிதா இவ்விவகாரத்தில் நாட்டு மக்களின் கருத்தை எதிரொலிக்கும் விதமாக பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார் (காண்க: பெட்டிச் செய்தி).

இந்நிலையில் ஐக்கிய முபோக்குக் கூட்டணி தலைவர் சோனியாவைச் சந்தித்த திமுக எம்பிக்கள், ''சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு உறுதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் அது தமிழக மக்களுக்கு தரப்பட்ட உறுதிமொழிக்கும் நம்பிக்கைக்கும் துரோகம் செய்வதாகவே அமையும்'' என்று கூறி மனு அளித்துள்ளனர். கடலில் இன்னும் தூர்வார வேண்டிய பகுதி 22 கிமீ தோற்றம் மட்டுமே (ராமர் பாலத்தை ஒட்டிய பகுதிகள்) என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர். அவர்களுக்கு சோனியா எந்த உறுதியும் அளிக்கவில்லை.

வழக்கம் போல பகுத்தறிவுக் குஞ்சுகள் சில, ராமர்பாலத்துக்கு எதிரான பிரசாரப் போரில் இறங்கி உள்ளன. பாமக தலைவர் ராமதாஸ், ராமர்பாலமே ஒரு கற்பனை என்று கூய் இருக்கிறார். திமுக கூட்டணித் தோழர்களும் இதே கருத்தை பிரதிபலித்துள்ளனர். ஆனால், சூழ்நிலை மாறிவிட்டதை அவர்கள் இன்னமும் அறியாமல் உள்ளனர். ராமர் பாலத்தில் கை வைத்தால், ஏற்கனவே சரிந்துவரும் காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படத் துவங்கி விடும் என்பதை திமுக தலைவராவது உணர்வது நல்லது. ஸ்பெக்ட்ரம் மோசடியில் பெற்றபுகழை நமது கலைஞர் மறந்திருக்க மாட்டார் என்றே நம்புவோம்.

ராமசேது விஷயத்தில் ஹிந்து மக்களைப் பகைத்துக்கொள்ள காங்கிரஸ் தயாரில்லை; அதே சமயம், ஹிந்து இயக்கங்களின் வெற்றியாக மத்திய அரசின் அறிவிப்பு மாறிவிடக் கூடாது என்று காங்கிரஸ் தயங்குகிறது. உச்ச நீதி மன்றம் கிடுக்கிப்பிடி போட்டுள்ள நிலையில் அக்கட்சியும் எந்த முடிவெடுப்பது என்று தெரியாமல் திகைக்கிறது.

இந்நிலையில், ராமர் பாலம் தூர் வாரிய வகையில் ரூ. 600 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது விஷயமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ஊழல் எதிர்ப்பு போராளியான சுப்பிரமணிய சாமி ஆவணங்களைத் திரட்டி வருகிறார். ஏற்கனவே பல ஊழல் புகார்களில் சந்தி சிரிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இந்த புகாரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. அதனால் தான், திமுக எம்பி.க்கள் சோனியாவை அவசரமாக சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன. உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் என்பதை ராசா விவகாரத்துக்குப் பிறகும் திமுக மறந்துவிட்டது போல.

இறுதியாக ஒரு விஷயம், ராமர் பாலம் நமது மண்ணின் மனத்தோடு கலந்தது. அதை தேசியச் சின்னமாக அறிவிப்பது காலத்தின் கட்டாயம். அதைத் தகர்க்க நினைப்பவர்கள் தான் மண்ணாவார்கள். தீர்க்கதரிசி மகாகவி பாரதி கூறியது போல, 'சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்பது' தான் தற்போதைய தேவை. இதற்கு மாறான எச்செயலில் மத்திய அரசு ஈடுபட்டாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனுமன் சேனைகள் தயாராகவே உள்ளன. ராமர் பாலத்தை அனுமன் நிச்சயமாகக் காப்பான்.


பெட்டிச் செய்தி:

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு 28.03 2012 அன்று எழுதிய கடிதத்தில் 'ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சேது சமுத்திர திட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதை தாங்கள் அறிவீர்கள். தமிழகத்தில் உள்ள 'ராமர் பாலம்' வரலாற்று ரீதியாகவும், தொல்லியல் துறை ரீதியாகவும், பாரம்பரிய மரபு நம்பிக்கை ரீதியாகவும் சிறப்புற்று உள்ளதால், சேது சமுத்திர திட்டத்தின் ஒரு பகுதியாக அது திகழ்வதால் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கலாகி உள்ளன.

கடந்த 2007-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் நான் இதுகுறித்து ஒரு மனுவையும் தாக்கல் செய்துள்ளேன். அதில் அரசியல் சட்டம் 32-வது பிரிவின் கீழ் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியிருந்தேன். இதில் முதல், இரண்டாவது பிரதிவாதியாக மத்திய அரசு, தரை வழி கப்பல் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சேது சமுத்திர திட்ட முனையம் ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தன. எக்காரணத்தை கொண்டும் சேது கால்வாய் திட்டத்தின் பெயரில் 'ராமர் சேது' என்ற ஆதம் பாலத்திற்கு சேதம் ஏற்படக் கூடாது என்றும், அதைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அந்த மனுவில் நான் குறிப்பிட்டிருந்தேன்.

இதற்கிடையில் கடந்த 2008-ம் ஆண்டு மத்திய அரசால் டாக்டர் ஆர்.கே.பச்செளரி தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவின் அறிக்கை மாநில அரசின் கருத்துகளை பெற அனுப்பப்பட்டது.

என்னுடைய அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகள் அந்த அறிக்கையை பரிசீலனை செய்து அதையொட்டிய கருத்துக் கோப்புகளும் அளிக்கப்பட்டு அவை, நிபுணர் குழுவின் அறிக்கையுடன் சேர்ந்து என் முன்னே பரிசீலனைக்கு உள்ளது. அதையொட்டி தமிழக அரசு மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்துக்கு ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளது.

இந்நிலையில் கடந்த 27-ம் தேதியன்று உச்சநீதிமன்றத்தின் முன் வந்த ராமர் பாலம் வழக்கில் நீதிபதிகள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு, தேசிய நினைவு சின்னம் குறித்து மத்திய அரசின் கருத்து என்ன என்பதை வரும் 29-ம் தேதிக்குள் (இன்று) பதில் உரைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

வரலாற்று ரீதியான, தொல்லியல் மற்றும் கலாச்சார அடிப்படையிலான சான்றுகள் அடிப்படையில் ராமர் பாலம் குறித்து பல்வேறு ஆட்சேபனைகள் வந்துள்ள சூழ்நிலையில் மத்திய அரசின் கருத்தை உடனடியாக உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். தாங்கள் எவ்விதத்திலும் தாமதம் செய்யாமல் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும். இதுகுறித்து தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத்தில் தனி மனு ஒன்றையும் தமிழக அரசு தாக்கல் செய்யும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

----------------------------------

விஜயபாரதம் (12.04.2012)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக