வெள்ளி, பிப்ரவரி 11, 2011

கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கலாமா?


சாயக் கழிவுகளின் ஓடையான நொய்யல் நதி

திருப்பூர் சாய, சலவை ஆலைகள் அனைத்தையும் மூடுமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு, தொழில்துறையின் ஆணிவேரில் கை வைத்திருக்கிறது. இப்போதுதான், தாங்கள் செய்த தவறின் முழுப் பரிமாணமும் திருப்பூர்க்காரர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. பல்லாயிரம் கோடி அந்நியச் செலாவணி பெற்றுத் தருவதற்காக, சொந்த மண்ணை நாசம் செய்ததன் பயனை இப்போது உணரத் துவங்கி இருக்கிறது திருப்பூர்.

இந்த அவலம் திடீரென வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. கடந்த 20 ஆண்டுகளாகவே நதிநீரை நாசம் செய்யும் சாய ஆலைகள் குறித்து எச்சரிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், தொழில்நலம் பேணும் கனவில் அந்த எச்சரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. விளைவு, ஜீவநதியான நொய்யல், இன்று சாக்கடைக் கழிவுகளும் சாயக் கழிவுகளும் பெருக்கெடுத்தோடும் கழிவுநீர் ஓடையாகி விட்டது. இந்த சீரழிவிற்கு சாய ஆலைகள் மட்டுமே பொறுப்பு என்று சொல்லிவிட முடியாது. சாக்கடையை நதியில் சேர்க்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்த அவலத்தில் பெரும் பங்குண்டு. ஆயினும், நதிநீரை பல வண்ணங்களில் மாற்றிய சாயக் கழிவுநீர் தான் அனைவர் கண்ணுக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது.

1985 க்குப் பிறகுதான் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பல மடங்காகப் பெருக ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வெண்ணிற உள்ளாடைகளுக்கு மட்டுமே பிரபலமாக இருந்த திருப்பூர், உலகத் தேவைகளைக் கண்டுகொண்டு வண்ணமயமான மதிப்பூட்டப்பட்ட பின்னலாடைகளை உற்பத்தி செய்யத் துவங்கியது. அப்போதுதான் சாய, சலவை ஆலைகளின் எண்ணிக்கை பெருகியது.

ஆரம்ப நாட்களில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என்ற ஒன்று இருப்பதே தொழில்துறையினர் அறியாத காலமும் இருந்தது. அந்த அளவுக்கு அரசும் அசட்டையாக இருந்தது. அதே சமயம், சுயதொழிலில் ஈடுபட்ட விவசாயக் குடும்பங்கள் தங்கள் நிலத்தை சாயப் பட்டறைகளாக்கி பணம் பார்க்கத் துவங்கின.

இன்று, எந்த விவசாயிகள் நொய்யல் பாதிக்கப்பட்டுவிட்டது என்று கூக்குரலிடுகிறார்களோ, அதே விவசாயிகளின் ஒரு பிரிவினர்தான் சாய ஆலைகள் அமைப்பதிலும் முன்னின்றனர். அவர்கள் யாருக்கும் இதன் பின்விளைவுகள் தெரிந்திருக்கவில்லை. கட்டுப்படுத்த வேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கோ, சாய ஆலைகள் பணம் காய்க்கும் மரங்களாகவே தெரிந்தன.

சாய ஆலைகளில் பயன்படுத்தப்படும் அதி அடர்த்தியான சாயங்கள், ரசாயனம் கலந்தவை. அவை எந்தவித சுத்திகரிப்பும் செய்யப்படாமல் வெளியேற்றப்பட்டு, கழிவுநீர் ஓடைகளிலும் நொய்யல் நதியிலும் கலக்கவிடப்பட்டன. சில இடங்களில் ஆழமான கிணறுகளிலும் கூட சாயக் கழிவுநீர் விடப்பட்டது. அதன் விளைவாக நிலத்தடிநீரும் பல இடங்களில் பாதிக்கப்பட்டது. பின்னலாடைத் துணிகளுக்கு சாயமிடுவதில் கிடைத்த லாபம் தொழிலதிபர்களின் கண்களை மறைத்தது.

திருப்பூர் பின்னலாடைகள் உலகப் புகழ் பெற்றபின் சாய ஆலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒருகட்டத்தில் 1,300 க்கு மேற்பட்ட சாய, சலவை ஆலைகள் செயல்பட்டன. அப்போதுதான் நொய்யல் மாசுபட்டது வெளி உலகிற்கு தெரியவந்தது. திருப்பூரை அடுத்த ஓரத்துப்பாளையத்தில் நொய்யல் நதியின் குறுக்கே கட்டப்பட்ட அணையில் தேங்கிய சாயக் கழிவுநீரால் அணையே நாசமானது. இதையடுத்து நொய்யல் நீர்ப் பாசன சங்கம் நீதிமன்றத்தில் திருப்பூர் சாய ஆலைகளுக்கு எதிராக வழக்கு தொடுத்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2006 டிசம்பரில், ''2007 ஜூலை 31 க்குள் அனைத்து சாய ஆலைகளும் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் (ஆர்.) எனப்படும் சவ்வூடு பரவல் முறையில் இயங்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்; இதுவரை நொய்யலை மாசு படுத்தியதற்காக அபராதம் செலுத்த வேண்டும். அந்தத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும்'' என்று உத்தரவிட்டது. அதன்படி இரு மாதங்கள் மட்டுமே சாய ஆலைகள் அபராதம் செலுத்தின. பிறகு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு 2009 , அக். 6 வரை கால அவகாசம் பெற்றன. மீண்டும் இந்த அவகாசம் 2010 , ஜன. 5 வரை நீடிக்கப்பட்டது. அதே சமயம் சாய ஆலைகள் பல இணைந்தும், தனியாகவும் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கத் துவங்கின.

இதில் சிக்கல் என்னவென்றால், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பல கோடி செலவிட வேண்டி வந்தது. செலவிட இயலாத 500 க்கு மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன. இதுவரை ரூ. 800 கோடிக்கு மேல் செலவிட்டு திருப்பூரில் 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களும், 147 தனியார் சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், இவற்றில் முழுமையான சாயக் கழிவு சுத்திகரிப்பு சாத்தியமாகவில்லை. விளைவாக, நொய்யலில் கழிவுநீர் கலப்பது குறையவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி 2100 டிடிஎஸ் அளவுக்கு மேல் கழிவுநீரின் உப்படர்த்தி இருக்கக் கூடாது. இதனை திருப்பூர் சாய, சலவை ஆலைகளால் நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து நொய்யல் விவசாயிகள் மீண்டும் (2010) உயர் நீதிமன்றத்தை நாடினர். அப்போது 'ஜீரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் நூறு சதவிகித சுத்திகரிப்பு செய்யாத சாய ஆலைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் விளைவாக சாய, சலவை ஆலைகளின் எண்ணிக்கை 754 ஆகக் குறைந்தது. இவற்றில் 496 ஆலைகள் ஒன்றிணைந்து 20 பொது சுத்திகரிப்பு நிலையங்களை நடத்துகின்றன. இதற்கு அரசும் உதவி செய்துள்ளது. எனினும் நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி சாய ஆலைகள் செயல்படவில்லை.

நீதிமன்றத்தை எப்படியாவது சரிக்கட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் ஒப்புக்கொண்ட 'ஜீரோ டிஸ்சார்ஜ்' இப்போது அவர்களுக்கே எதிரானது; வேறு வழியின்றி, சாயக் கழிவுநீரை கடலுக்கு கொண்டுசேர்ப்பதே இறுதியான தீர்வு என்று கூறத் துவங்கினர். திருப்பூர் தொழில்துறையின் மாபெரும் தாக்கத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளும் இதையே ஒப்பிக்கத் துவங்கின.

இது தொடர்பாக 2006 லேயே ரூ. 800 கோடி செலவில் திட்டம் மாநில அரசால் தீட்டப்பட்டது. திருப்பூர், பெருந்துறை, பவானி, ஈரோடு, கரூர் ஆகிய ஜவுளி நகரங்களிலும் பிரச்னையாக உள்ள சாயக் கழிவுநீரை கடலில் சேர்க்க 432 கி.மீ. தூரத்திற்கு குழாய் அமைக்க உள்ளதாக சட்டசபையிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு சுற்றுச்சூழல் நிபுணர்களும் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் திட்டம் சாத்தியமாகாமல் உள்ளது. தற்போது இத்திட்டத்தின் மதிப்பு ரூ. 1,400 கொடியாக அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், விவசாயிகளின் மறு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘’ஏற்கனவே அளித்த உத்தவுப்படி செயல்படாத அனைத்து சாய, சலவை ஆலைகளும் மூடப்பட வேண்டும்; இதனை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்; சாய ஆலைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கடந்த ஜன. 28 ல் உத்தரவிட்டது. அதன் விளைவாக, இப்போது அனைத்து சாய ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. ஈசன் முதுகில் விழுந்த பிரம்படி அனைவர் முதுகிலும் வலியை ஏற்படுத்தியது போல, திருப்பூரின் அனைத்து தொழில் துறையினர் மீதும் இதன் தாக்கம் துவங்கியுள்ளது.

ஏனெனில், பின்னலாடைத் தாயாரிப்பின் பல படிநிலைகளில் 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். சாய, சலவை ஆலைகள் ஸ்தம்பித்தால், தொடர் சங்கிலியாக இயங்கும் தொழில்துறை குலைவதை தவிர்க்க முடியாது. இப்போது, திருப்பூரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

இனி வரும்காலம் திருப்பூருக்கு எப்படி இருக்கும்? இக்கேள்விக்கான பதில் நிச்சயமற்றதாகவே உள்ளது. கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல, விபரீதம் அறியாமல் தொடர்ந்து இயற்கையை மாசுபடுத்தும் செயலில் சாய, சலவை ஆலைகள் இயங்கியதன் பயனை அறுவடை செய்யத் துவங்கி உள்ளன. இந்த விவகாரத்தில் எந்த பொறுப்புணர்வும் இன்றி வேடிக்கை பார்த்த அரசும், தற்போது கையைப் பிசைகிறது.

இயற்கையை சீரழித்து பெரும் லாபத்தால் நாம் பெறப் போகும் உயர்வு உண்மையில் படு பாதாளமே என்பதை இனியாவது தொழில்துறை உணர வேண்டும். சாயக்கழிவுக்கு தீர்வு காண்பதில், பல கோடி அந்நியச் செலாவணியும் வரியும் பெறும் அரசுக்கும் பொறுப்புண்டு. இதை அரசுகள் தட்டிக் கழிக்க முடியாது. தொழில்துறை நலிவால் பின்னலாடை நகரம் வீழ்ச்சி அடைவதையும் அரசு தான் தடுத்தாக வேண்டும். இதற்கும் யாரேனும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாக வேண்டுமோ?

------------------------------

நன்றி: விஜயபாரதம் (25.02.2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக