சனி, பிப்ரவரி 05, 2011

பாடம் கற்குமா பா.ம.க?


புத்திசாலிகள் எப்போதும் புத்திசாலிகளாகவே இருக்க முடியாது என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தற்போது நிரூபித்து வருகிறது. வன்னியர் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட பா.ம.க. அதைக் காட்டியே இரு திராவிட கழகங்களை மிரட்டி இதுவரை மீன் பிடித்து வந்தது. ஆறு மாவட்டங்களை மட்டும் நம்பி இருக்கும் பா.ம.க.வை கூட்டணியில் சேர்ப்பதால் அக்கட்சிக்குத் தான் லாபம் என்பதை தாமதமாகவே இரு கழகங்களும் உணர்ந்துள்ளன. அதன் பயன்தான், பா.ம.க.வின் புத்திசாலிதனமான திட்டங்கள் பல்லிளிக்கத் துவங்கி உள்ளன.

எம்.ஜி.ஆர் ஆட்சி இருந்த வரை ராமதாசால் தலையெடுக்க முடியவில்லை. பிறகு ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தைப் பயன்படுத்தி முன்னணிக்கு வந்தது. 1989 முதல் தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க. 1991 ல் ஒரு எம்.எல்.ஏ.வுடன் தனது கணக்கைத் துவக்கியது. 1996 சட்டசபை தேர்தலில்தான் இது 4 எம்.எல்.ஏக்கள் ஆனது. அதே ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி.யும் கிடைத்தது.
.
பிறகு 1998 ல் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றதன் மூலமாக 4 எம்.பி.க்களைப் பெற்ற பா.ம.க, வாஜ்பாய் தலைமையிலான அரசில் அமைச்சர் பதவியையும் பெற்றது. பிறகு ஜெயலலிதாவின் கைங்கர்யத்தால் வாஜ்பாய் அரசு கவிழ, கூட்டணி மாறியது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தி.மு.க.வுடன் சேர்ந்து இடம் பெற்ற பா.ம.க., 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 5 எம்.பி.க்களைப் பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையிலும் பா.ம.க மீண்டும் இடம் பெற்றது.

2001 சட்டசபை தேர்தலில் மீண்டும் அணி மாறிய பா.ம.க, அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றது. அப்போது 18 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. இந்த உறவும் நிலைக்கவில்லை. 2004 நாடாளும்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. அணிக்குத் திரும்பிய பா.ம.க, இம்முறை 6 எம்.பி.க்களைப் பெற்றது. ராஜ்யசபா எம்.பி.யான அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசில் சுகாதாரத் துறை அமைச்சரானார். (நானோ எனது குடும்பத்தினரோ அரசியல் அதிகார பதவிக்கு வர மாட்டோம். அவ்வாறு வந்தால் என்னை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்கலாம் என்று சொன்னவர் ராமதாஸ்)
.
2006 சட்டசபை தேர்தலில் அதே அணியில் நீடித்த பா.ம.க, 18 எம்.எல்.ஏக்களைப் பெற்றது. அதன் பிறகு மீண்டும் தி.மு.க.வுடன் உறவு கசந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்குத் தாவிய பா.ம.க, தனது நம்பகத் தன்மையை இழந்தது. இம்முறை, போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோற்று மண்ணைக் கௌவியது பா.ம.க.

இந்தத் தோல்விதான் பா.ம.க.வின் சுயபலத்தை அம்பலப்படுத்தியது. அதன் விளைவே இப்போது இரு கழகங்களாலும் காங்கிரசாலும் புறக்கணிக்கப்படும் நிலையை பா.ம.கவுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறி சுயநலனுடன் செயல்பட்ட பா.ம.க தனது நம்பகத் தன்மையை இழந்து, கூட்டணிக்கு ஏங்கும் நிலையில் தற்போது தவிக்கிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் அடிப்படையிலேயே புதுவையிலும் கூட்டணியைத் தீர்மானித்து செயல்படும் பா.ம.க.வுக்கு அங்கு மட்டுமாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவுண்டு. தமிழகத்திலும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ம.க. ஆட்சிதான் என்று மருத்துவர் ராமதாஸ் முழங்கியதுண்டு. எல்லாமே கற்பனைக் கோட்டைகள் தான் என்பதை அக்கட்சியின் சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.

கொள்கையற்ற அரசியல், சுயநலம் மிகுந்த செயல்பாடு, ஜாதி வட்டத்தை மீறாமல் நடிக்கும் பாசாங்கு, ஆட்சியதிகாரத்தில் கிடைக்கும் லாபத்தை அடையத் துடிக்கும் அல்பத்தனம் என, பா.ம.க.வின் சுயரூபம் நாள்தோறும் வெளிவந்து, ராமதாசை ‘கோமாளி’ என்ற நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது.

அவ்வப்போது மதுவிலக்குக் கொள்கை பிரகடனம், திரைநாயகர்கள் மீது தாக்குதல், இலங்கைத் தமிழரின் துயரம் குறித்த கண்ணீர், தனித்தமிழ் குறித்து ஆலாபனை என்று அக்மார்க் திராவிட கட்சியாகத் திகழ்ந்தாலும், பா.ம.கவுக்கென்று உள்ள குறுகிய வட்டத்தை மீறி அக்கட்சியால் வளர முடியவில்லை. இதற்கு, அக்கட்சித் தலைவரின் அதிகார வேட்கையுடன் கூடிய தாவல்களும் காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஆனாலும் தமிழகத்தில் வாக்குகள் சிதறுவதால் எதிரணியினர் அடையும் லாபத்தைத் தவிர்க்க பா.ம.க.வுக்கு இரு கழகங்களும் வலை வீசுகின்றன. எனவேதான் ராமதாசின் குயுக்தியான மூளையும் வேகமாக வேலை செய்கிறது. இரு கட்சிகளுடனும் இறுதிவரை பேரம் பேசி அதிகபட்ச தொகுதிகளையும் இன்னபிற வசதிகளையும் பெற மருத்துவர் அய்யா திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்.
.
தில்லி சென்ற தி.மு.க தலைவர் கருணாநிதி, தங்கள் கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது என்று சொன்ன சில மணி நேரத்தில், '' கூட்டணி குறித்து பா.ம.க. இன்னும் முடிவு செய்யவில்லை'' என்று கூறி மு.க. முகத்தில் கரி பூசினார் ராமதாஸ். இதையடுத்து, அப்படியானால் அப்படித்தான் என்ற பாணியில் வெறுத்துப்போய் அறிவித்தார் தமிழகத்தின் அதிபயங்கர ராஜதந்திரியான மு.க. திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்தால் கசக்காமல் இருக்குமா?

ஆனாலும் அ.தி.மு.க. வட்டாரத்திலிருந்து பா.ம.க.வுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை. கருணாநிதியின் அவேச பல்டியால், 'உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா'' என்று இடிந்த்போயிருக்கும் ராமதாசை அ.தி.மு.க.அரவணைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஏனெனில், இப்போது பேரம் பேசுவதற்கான வலுவை பா.ம.க இழந்துவிட்டது.
.
இந்நிலையில், பா.ம.க.வை கூட்டணியில் சேர்க்க சோனியா எதிர்ப்பு தெரிவிப்பதாக வதந்தி பரவி வருவது ராமதாசை குலை நடுங்கச் செய்துள்ளது. (ஒருவேளை, கிடைத்த கமிஷனில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஆ.ராசா போல சோனியாவுக்குக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டாரோ அன்புமணி?)

மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது நடத்திய திருவிளையாடல்களே சோனியாவின் எதிர்ப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அன்புமணி தில்லி சென்று பலரை தாஜா செய்து சோனியாவை அமாதானப்படுத்த முயற்சித்ததாகவும் இதுவரை பலனில்லை என்றும் கூறுகிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களைப் பெறவே காங்கிரஸ் இந்த நாடகத்தை நடத்துவதாகவும் தகவல். இதுவரை கூட்டணி மாற்ற நாடகங்களை நடத்தி பயனடைந்து வந்த பா.ம.க.வுக்கு இது புதுசு. இப்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கும் பா.ம.க, அநேகமாக தனித்துப் போட்டியிடும் சூழல் இந்த சட்டசபை தேர்தலில் வைக்கலாம். தனித்து ஆட்சி அமைப்போம் என்ற பா.ம.க.வின் கனவு இப்படி மாறும் என்று மருத்துவர் அய்யா கனவு கண்டிருக்க மாட்டார். என்ன செய்வது, எல்லோரும் எப்போதும் முட்டாள்களாக இருந்து அவரை புத்திசாலி ஆக்க மாட்டார்கள் அல்லவா?

இந்தக் கட்டுரையின் நீதி:
அடுத்தவன் தோளில் சவாரி செய்பவன் அதிகப் பிரசங்கித்தனம் செய்யக் கூடாது.

2 கருத்துகள்: