செவ்வாய், ஜூலை 09, 2013

இந்து சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு களபலி வெள்ளையப்பன்ஜி!


சு. வெள்ளையப்பன் (பலிதான தினம்: ஜூலை 1, 2013)

தமிழகத்தில் ஹிந்து இயக்கத் தலைவர்களும் நிர்வாகிகளும் தாக்கப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இப்பட்டியலில் அண்மையில் சேர்ந்துள்ளார், வேலூரில் கொல்லப்பட்ட இந்து முன்னணியின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன். 

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள துரைசாமியாபுரத்தைச் சேர்ந்த சு.வெள்ளையப்பன் (55).  இந்து முன்னணி மாநில செயலாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டுவந்தார். வேலூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் 20  ஆண்டுகளாகத் தங்கியிருந்த  இவர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்கள் அடங்கிய வேலூர் கோட்டத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். இயக்கப் பணிக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், முழுநேர ஊழியராக மிகவும் திறம்படப் பணியாற்றி வந்தார். 

ராக்கியில் துவங்கிய பந்தம்:


இவர் இந்து இயக்கங்களுக்கு அறிமுகமானது ஒரு சுவையான நிகழ்வு. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை, தாம்பரத்தில் காய்கறிக்கடை நடத்தி வந்தார் வெள்ளையப்பன். அங்கு காய்கறி வாங்க வந்த சங்க ஆதரவாளரான ‘தாம்பரம் அம்மா’ என்று அழைக்கப்படும் திருமதி ஹேமா அவர்கள் கையில் கட்டியிருந்த ‘ராக்கிக் கயிறு’ அவரைக் கவர்ந்தது. அவரிடம் அந்தக் கயிறு குறித்து வெள்ளையன் கேட்க, ராக்கிக் கயிறின் முக்கியத்துவத்தையும், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் அதன் பின்புலத்தையும் விளக்கினார் தாம்பரம் அம்மா. 

அப்போதே ஹிந்து இயக்கங்களின் சகோதரத்துவ முயற்சிகள் கண்டு மகிழ்ந்த வெள்ளையப்பன், தாமும் இப்பணியில் சேர கங்கணம் பூண்டார். சிறிது காலத்தில் குடும்பத்தை விட்டு, இந்து முன்னணியின் முழுநேர ஊழியராக அவர் பணியாற்றத் துவங்கினார். படிப்படியாக இயக்கப் பணிகளில் தீவிரம் காட்டி, மாநிலச் செயலாளராக உயர்ந்தார். அவரது இயக்கப் பணிக்கான களமையமாக வேலூர் மாறிப் போனது.

தடையை மீறி கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் (1981) மூலவர் சிலையை நிறுவி, இந்து மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணத்தை உருவாக்கிய வேலூரில், உள்ளூர் மக்களின் நெருங்கிய சகாவாக வெள்ளையப்பன் விளங்கினார். அவரது தீவிரச் செயல்பாடுகள் அப்பகுதியில் இந்து இயக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன.  

மாநிலச் செயலாளராக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வந்த வெள்ளையப்பன்,  கடந்த சில தினங்களாக, வேலூரிலேயே தங்கி இருந்தார். வேலூர்  ஜலகண்டேஸ்வரர் கோவிலை,  இந்து சமய அறநிலையத்துறை அண்மையில் கையகப்படுத்தியதைக்  கண்டித்து,  பல்வேறு போராட்டங்களை வெள்ளையப்பன் நடத்தி வந்தார். இப்போராட்டங்களுக்கு மக்களிடையே மகத்தான வரவேற்பு காணப்பட்டது.

கூலிப்படையின் கொலைவெறி:


இந்நிலையில் தான், கடந்த ஜூலை 1-ம் தேதி, மதியம்  3.15 மணி அளவில், பைக்கில், வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில்,  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வெள்ளையப்பன் மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். டாடா சுமோவில் வந்த  ஆறு பேர் கும்பல்  வெள்ளையப்பனை  வழிமறித்து,  பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளது.

அவரது உடலில்  26 இடங்களிலும்,  தலையில்  ஆறு இடங்களிலும் வெட்டு விழுந்துள்ளது. மிகக் கொடூரமான முறையில் வெள்ளையப்பனை வெட்டிச் சாய்த்துள்ளனர். அந்தக் கும்பல் தொழில்முறை கொலைகாரர்கள் என்பதும், உள்ளூர் எதிரிகளால் அடையாளம் காட்டப்பட்டு கூலிப்படையால் வெள்ளையப்பன் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர்-23 ம் தேதி,  பா.ஜ.க.  மருத்துவ அணி மாநிலச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி,  வேலூரில் உள்ள அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வந்தபோது,  ஓட  ஓட விரட்டிக்  கொலை செய்யப்பட்டார். அதே பாணியில், வெள்ளையப்பனும் கொலை செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் ரெட்டி கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தால் அடுத்த விபரீதம் அரங்கேறி இருக்காது. 

வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து,  5 பைப்  குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பிறகு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன. வெள்ளையப்பன் படத்துடன் கூடிய பத்திரிகை செய்தியும் சம்பவ இடத்தில் கிடந்துள்ளது.

கடைகள் அடைப்பு:


வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. இந்து முன்னணியின் அழைப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் ஜூலை 2–ம் தேதி பரவலாக கடையடைப்பு நடைபெற்றுள்ளது. வெள்ளையப்பன் படுகொலையை அனைத்து இந்து இயக்கங்களும் பாரதிய ஜனதா கட்சியும் வன்மையாகக் கண்டித்துள்ளன. 

கடந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்து இயக்க நிர்வாகிகள் தாக்கப்பட்டுள்ளனர்; டாக்டர் அரவிந்த் ரெட்டி முதல் வெள்ளையப்பன் வரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 6 பேர் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இதைக் கண்டிக்க வேண்டிய அரசியல் கட்சிகள் வாய்மூடி மௌனம் சாதிப்பது, யாரை திருப்திப் படுத்த? 

மக்களைக் காக்க வேண்டிய மாநில அரசு யாருக்கு பயந்து நடவடிக்கைகளைத் தவிர்க்கிறது? இந்து முன்னணி நிர்வாகி படுகொலைக்கு உடனடி விளைவாக மக்களே கடையடைப்புகளை பல இடங்களில் நடத்தி இருப்பதைக் கண்ட பிறகும் வாக்குவங்கி அரசியலில் அரசியல்வாதிகள் கன்மூடி இருக்கலாமா? 

- கேள்விகள் எழத் துவங்கி இருக்கின்றன. இந்த தேசத்தை அழிக்க முயல்வோரின் முதல் இலக்கு இந்து இயக்கங்கள் தான் என்பதிலிருந்தே, நாட்டைக் காக்கும் படை எது என்பது மக்களுக்குப் புரியத் துவங்கி இருக்கிறது. இதற்கு வித்திட்டு, பாரத மண்ணுக்காக இன்னுயிர் ஈந்த ஸ்ரீ வெள்ளையப்பனின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திப்போம். 

வெள்ளையப்பன் உடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் வேலூரில் அஞ்சலி செலுத்திய காட்சி உருக்கமானது. அங்கு வந்து கண்ணீர் சிந்திய ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறுப்பினரையே இழந்தது போலக் கதறினர். நெல்லை மைந்தனுக்கு வேலூரில் கிடைத்த மரியாதைக்குக் காரணம் அவரது இயக்கப் பணியே. அதனை இன்னமும் வேகமாக ஆற்றுவதே நாம் அவருக்குச் செலுத்தும் உன்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.


இந்து இயக்கத் தலைவர்கள் கண்டனம்:


ஆர்.எஸ்.எஸ். தென் தமிழகத் தலைவர் ஆர்.வி.எஸ். மாரிமுத்து:
தமிழகத்தில் தேசபக்தியை வளர்ப்பதற்கும், இந்து தர்மத்தைக் காப்பதற்கும் பாடுபட்டு வருபவர்களை பயங்கரவாதிகள் கொடூரமாக  வெட்டிக் கொலை செய்வதும், கொடூரத் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர்  வெள்ளையப்பன் வேலூர் பேருந்து நிலையம் அருகே பட்டப் பகலில் பயங்கரவாதிகளால் கொடூரமாக  வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
வெள்ளையப்பன் தனது வாழ்க்கையை சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தவர். தேசப்  பணிக்காக இடையாறாத பணி செய்து கொண்டிருந்தவர். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக காவல்துறை தவறிவிட்டது.
தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து இந்து இயக்கத் தொண்டர்கள் பயங்கரவாதிகளின்  கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி  வருகின்றனர். வேலூரில் பா.ஜ.கட்சியை சேர்ந்த அரவிந்த ரெட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார் (2012, அக்டோபர்-23). பா.ஜ.கட்சியை சேர்ந்த புகழேந்தி,  காளையார்கோயில்- படைவென்றான் அம்பலம் ஆகியோரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர்.  
மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆனந்த்தும் (2012, நவம்பர் 6),  நாகர்கோவிலில் பா.ஜ. மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தியும் (2013, ஏப்ரல் 21), குன்னூரில் இந்து  முன்னணியின் மாவட்டச் செயலாளர்கள் மஞ்சுநாத், ஹரி, நிர்வாகிகள் வெங்கட்ராஜ், ஜெயகுமார்  உள்ளிட்ட 4 பேரும் (2013, ஏப்ரல் 15) பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் காவல்துறையினர்  பயங்கரவாதிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை  எடுக்கவில்லை. 
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும் காலங்களில் சமூக விரோதிகளும், பயங்கரவாதிகளும் முழுமையாக கட்டுக்குள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பயங்கரவாதிகள் சுதந்திரமாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. 
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து உள்ளாகிவரும் இந்து இயங்கங்களின் தொண்டர்கள் தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கை   எடுக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி,  தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும்.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்:
இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் சு.வெள்ளையப்பன்,  தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்; ஏராளமான ஊழியர்களை உருவாக்கியவர். அவர் வேலூரில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது. 
இந்து சமுதாய ஒருங்கிணைப்புப் பணியில் கடந்த 16 ஆண்டுகளாக இந்து முன்னணியின் முழுநேர ஊழியராக பணியாற்றியவர். சங்கரன்கோவிலைச் சேர்ந்த வெள்ளையப்பன்  ஜலகண்டேஸ்வர் கோயில்  திருப்பணிகளில் சேவையாற்றி வந்தவர். சமீபத்தில் அறநிலையத் துறை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை எடுத்ததை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தியவர். 
சு.வெள்ளையப்பன் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். சமுதாயத்திற்கு ஒரு  பிரச்னை என்றால், அங்கு இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக முதல் நபராகப் பங்கேற்பவர்.  அத்தகைய நல்ல உள்ளம் படைத்தவரை கொடூர மனம் படைத்தவர்கள் கொன்றுள்ளனர். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை அரசிடம் இருந்து மீட்பதுதான் வெள்ளையப்பனின் கடைசி விருப்பம். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  
வெள்ளையப்பன் படுகொலைச் சம்பவத்தில், புலனாய்வுத் துறை முன்கூட்டியே தகவல் தெரிவிக்காவிட்டால் இது அவர்களுடைய திறமையின்மையைக் காட்டுகிறது. புலனாய்வுத் துறை எச்சரித்தும் பாதுகாப்பு கொடுக்காவிட்டால் அது போலீசாரின் திறமையின்மையையே காட்டுகிறது. வேலூரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.  காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இதுகுறித்து தனி கவனம் செலுத்த வேண்டும். இந்தப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, உடனடியாக கைது செய்து  தண்டிக்க வேண்டும்.  
பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:
வேலூரில் சென்ற ஆண்டு நடந்த பாரதீய ஜனதா மருத்துவ அணி மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனவே, போலீசார் அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுபோல வெள்ளையப்பன் கொலையிலும் குற்றவாளிகளை  உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ராமநாதபுரம்,  ஊட்டி,  மேட்டுப்பாளையம்,  நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் இந்து முன்னணி,  பாரதீய ஜனதா,  விச்வ இந்து பரிஷத் அமைப்புகளை சேர்ந்தோர் தொடர்ந்து  தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் கொலைகாரர்களின் புகலிடமாக உருவாகி வருகிறது. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். 

-----------------------------

விஜயபாரதம் (12.07.2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக