வெள்ளி, மே 18, 2012

கட்சிகளுக்கு ஒரு 'லிட்மஸ் சோதனை'


வேதியியலில் ' லிட்மஸ் சோதனை' என்ற அடிப்படை சோதனை ஒன்று உண்டு. ஒரு திரவம் அமிலத் தன்மை கொண்டதா, காரத்தன்மை கொண்டதா என்பதை அறிய உதவுவது லிட்மஸ் தாள். திரவத்தின் தன்மைக்கு ஏற்ப லிட்மஸ் தாள் நிறம் மாறி அதன் இயல்பைக் காட்டிக் கொடுக்கும்.

அரசியலுக்கும் வேதியியலுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழக்கூடும். அரசியல் வானில் உலவும் பல்வேறுபட்ட கட்சிகளின் மனப்போக்கை அறிய சில நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தேறுகின்றன. அந்த நிகழ்வுகள் கிட்டத்தட்ட 'லிட்மஸ் சோதனை' போலவே இருப்பதை பலர் அறிவதில்லை. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போதும், முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போதும் நமது அரசியல் கட்சிகளின் சாயம் வெளுக்கிறது. அதே போன்ற மற்றொரு பொன்னான வாய்ப்பு ஜனாதிபதி தேர்தல் மூலமாக இப்போது வரவிருக்கிறது.

நாட்டின் முதன்மையான பதவியான ஜனாதிபதி பதவி அலங்காரப் பதவியாக இருந்தாலும், அரசின் கௌரவத்துக்கு சின்னமாகத் திகழ்வது. ஆளும் கட்சியைச் சார்ந்தவரே ஜனாதிபதியாக முடியும் என்பது தான் இதுவரையிலான யதார்த்தம். ஆனால், இம்முறை காட்சி மாறி இருக்கிறது. மக்களவையில் மட்டுமே கூட்டணி மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட எம்.பி.க்களால் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மாநிலங்களவையில் வலுவின்றி உள்ளது. தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடப்பதால், மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் வாக்குகளில் பெரும்பகுதி காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய நிலையில் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்கள் 13 . இவற்றில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாநிலங்கள் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், ஆந்திரா, கேரளா ஆகியவை மட்டுமே. மாறாக, பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் 9 மாநிலங்களிலும், அதிமுக, சமாஜ்வாதி, பிஜு ஜனதாதளம் கட்சிகள் ஆளும் தமிழகம், உ.பி, ஒடிசா ஆகியவற்றிலும் அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் இவர்களது வாக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சி நினைக்கும் வேட்பாளர் ஜனாதிபதி ஆவது சிரமம். இது தான் தற்போதைய நிதர்சன நிலைமை.

அதே சமயம் பாஜக கூட்டணி மட்டுமே தனியே வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதும் உண்மை. அதாவது ஆளும் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியோ, தனித்து வேட்பாளரை நிறுத்தி பலத்தை பரிசோதிக்கும் நிலையில் இல்லை. இவ்விரு கட்சிகளும் இணைத்து ஜனாதிபதி- துணை ஜனாதிபதி பதவிகளைப் பங்கிட்டுக் கொண்டால் மட்டுமே இரு கட்சிகளின் வேட்பாளர்களும் வெல்வது சாத்தியம். ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. இரு கட்சிகளும் எதிர்த் துருவங்களாக விளங்கும் நிலையில், ஆணவப் போக்குடன் காங்கிரஸ் செயல்படும் நிலையில், சமரச முயற்சிக்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில், துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியையே ஜனாதிபதி ஆக்க காங்கிரஸ் முயன்றது. இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் கூறினர். ஆனால், இந்த முன்னுதாரணம் அவ்வபோது காங்கிரஸ் கட்சியாலேயே மீறப்பட்டுள்ளதை பாஜக சுட்டிக் காட்டி இருக்கிறது. இடதுசாரி சார்புள்ள அன்சாரியை களம் இறக்கினால் வெல்ல முடியும் என்ற காங்கிரஸ் கணக்கு, மம்தாவால் பிசகிப் போக வாய்ப்பு உள்ளது.

எனவே 'மேற்கு வங்கத் தங்கம்' பிரணாப் முகர்ஜியையே களம் இறக்கலாமா என்று காங்கிரஸ் யோசிக்கிறது. இதற்கு சோனியா சம்மதம் இதுவரை கிடைக்கவில்லை. இந்திரா காந்தியைப் போலவே சோனியாவும் பிரணாபை முழுவதும் நம்ப மறுப்பது தான் சிக்கலுக்குக் காரணம். இது போதாதென்று, 'உயந்த பதவிக்கு செல்ல வாய்ப்புள்ள' பிரணாப் முகர்ஜிக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் கட்சிக்கு கடுப்பேற்றி இருக்கிறார்!

ஆரம்பத்தில் ‘காங்கிரஸ் நிறுத்தும் எந்த வேட்பாளரையும் எதிர்ப்போம்; அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மாட்டோம்’ என்று எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விவாதிக்காமல் சுஷ்மா அறிவித்த இம்முடிவை ஐக்கிய ஜனதா தளம் விமர்சித்தது. உடனே, இதனால், காங்கிரஸ் கட்சியின் கரம் ஓங்கி விட்டதாக காங்கிரஸ் கூலிக்கு மாரடிக்கும் செய்தி நிறுவனங்களும் ஆங்கில பத்திரிகைகளும் சித்திரங்களைத் தீட்டின. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வெல்வது நிச்சயம் என்பது போலவே செய்திகள் வருகின்றன. இதில் விசித்திரம் என்னவென்றால், காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்கும் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது.

சுஷ்மா சொன்னது பாஜகவின் நிலைப்பாட்டையே. இது தொடர்பாக இப்போதுதான் தனது கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக விவாதிக்கத் துவங்கி இருக்கிறது. இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமையே மீண்டும் களம் இறக்கலாமா என்ற யோசனையும் எதிர்க்கட்சிகள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது. கலாமிடமே இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் உறுதியான தகவல் எதையும் சொல்லவில்லை. அதே சமயம், தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அவர் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.

தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டின் பதவிக்காலம் ஜூலை 25 ல் முடிகிறது. ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தாக வேண்டும். அதற்குள் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு இன்னமும் நாள் இருக்கிறது என்றாலும், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை நடத்தவும், வேட்பாளர்களின் தகுதி குறித்த விவாதங்களுக்கும் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிப்பு அவசியம். இதை துவக்கி வைக்க வேண்டியது ஆளும் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கடமை. அக்கட்சியோ, பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் பாஜக கூட்டணிக் கட்சிகளும், காங்கிரசுக்கு எதிரான மாநிலக் கட்சிகளும் இணைந்து வியூகம் வகுத்து செயல்பட்டால் வெற்றி கிடைப்பது உறுதியாகும். நாட்டு மக்கள் மனம் கவர்ந்த கலாமையே மீண்டும் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால், காங்கிரஸ் கட்சியும் வழிவிடும். நாட்டுக்கும் அது நல்லதாக அமையும். துணை ஜனாதிபதி பதவிக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் பெயர் அடிபடுகிறது. இவ்விரு பதவிகளும் எதிர்க்கட்சிகள் வசமானால், ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை சரிப்படுத்த முடியும். இது ஒரு பொன்னான வாய்ப்பு.

ஆனால், காங்கிரஸ் கட்சி இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அக்கட்சி எந்தெந்த வழிகளில் கட்சிகளை மடக்க முடியுமோ அவ்வகையில் எல்லாம் முயற்சிக்கும். ஏற்கனவே சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி, பகுஜன் சமாஜ் கட்சிகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதில் காங்கிரஸ் திறமை வெளிப்பட்டிருக்கிறது. பாஜக கூட்டணியிலும் கூட காங்கிரஸ் கட்சியின் கரம் நீளலாம். காங்கிஸ் கட்சியின் காவல் நாயான சி.பி.ஐ,யை துஷ்பிரயோகம் செய்வதன் மூலமாகவும், வாக்குகளை விலை பேசுவதன் வாயிலாகவும், தனது செல்வாக்கை உயர்த்த காங்கிரஸ் கண்டிப்பாக முயற்சிக்கும். இந்த 'லிட்மஸ் சோதன'யில் எந்தெந்தக் கட்சிகள் தாக்குப் பிடிக்கும் என்பதே இன்றைய முக்கியமான வினா.

இவ்விஷயத்தில் நிர்கதியாக இருப்பவை இடதுசாரிக் கட்சிகள் தான். அவற்றின் வலிமை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளதால், அவை இப்போது தத்தளிக்கின்றன. கடைசியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க ஏதாவது காரணம் கண்டுபிடிக்கவே அக்கட்சிகள் பாடுபடும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிராந்திய எதிர்க்கட்சிகளும் கரம் கோர்ப்பதை இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அதன் விளைவு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர்.

ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல் போன்ற மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே 'ஊழல்' காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்.

சென்ற ஜனாதிபதி தேர்தலில் நடந்தது போன்ற தவறான தேர்வு இம்முறை நேரிட்டுவிடக் கூடாது. நாட்டு நலனில் அக்கறையுள்ள, நாட்டின் அரசியல் நிலவரத்தை கூர்ந்து அவதானிக்கும் திறனுள்ள, இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் தான் இம்முறை ஜனாதிபதி ஆக வேண்டும். இதை சாதிக்க வேண்டியவர்கள் எதிர்க்கட்சிகள் தான். அவர்கள் இந்த சோதனையில் வெல்வார்களா? நாடு காத்திருக்கிறது.


கடைசித் தகவல்: ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவை ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக, சங்மா சார்ந்த தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இந்த அறிவிப்புக்கு வரவேற்பில்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தைச் சேர்ந்தவர், கிறிஸ்தவர் ஆகியவை சங்மாவின் பலங்கள். சோனியாவை எதிர்த்தவர், பிற்பாடு மகளுக்காக அவருடன் சமரசம் செய்து கொண்டவர், அரசியல் செல்வாக்கு அதிகம் இல்லாதவர் ஆகியவை இவரது பலவீனங்கள். இனிவரும் நாட்களில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கும் போதுதான், களத்தில் சங்மா இருப்பாரா என்பதே தெளிவாகும்.


-----------------------------------

விஜயபாரதம் (25.05.2012)

காண்க: தமிழ் ஹிந்து
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக