திங்கள், ஏப்ரல் 02, 2012

இடைத்தேர்தலும் சில புலம்பல்களும்


சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்பார்த்தது போலவே அதிமுக வாகை சூடி இருக்கிறது. ஆயினும், அக்கட்சி பெற்ற அதிகப்படியான வாக்கு வித்தியாசம் எதிர்க்கட்சிகளை மிரள வைத்திருக்கிறது. இதன் காரணமாக விதம் விதமான புலம்பல்களைக் கேட்க நேரிட்டிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் தொகுதியின் எம்எல்ஏ.வாக இருந்த சி.கருப்புசாமி உடல்நலக்குறைவால் இறந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு மார்ச் 18 ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அப்பகுதியில் மதிமுக களப் பணியைத் துவக்கி இருந்தது. வைகோவின் சொந்த தொகுதி என்பதால், எப்படியும் இம்முறை இங்கு வெற்றி பெற்று சட்டசபையில் நுழைவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மதிமுக தொண்டர்கள் பணியாற்றினார். இந்தத் தொகுதியில் வைகோ மீது மக்களுக்கு சிறிது அனுதாபம் உண்டு

ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் சூழலே மாறிவிட்டது. அதிமுக சார்பில் எஸ்.முதுசெல்வியும், திமுக சார்பில் ஜவஹர் சூரியகுமாரும், மதிமுக சார்பில் சதன் திருமலைகுமாரும் களம் இறங்கினர். இத்தேர்தலில் தேமுதிக என்ன நிலை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு காரணம், கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கூட்டணி முறிவும் தான். ‘அதிமுகவின் சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கு தன்னுடன் கூட்டணி சேர்ந்ததே காரணம் என்று விஜயகாந்த் சொல்ல, ‘அவருடன் கூட்டணி வைத்ததற்காக வெட்கப்படுவதாக பதிலடி கொடுத்தார் ஜெயலலிதா; கூட்டணி உடைந்தது.

அப்போது, ஜெயலலிதா விஜயகாந்துக்கு ஒரு சவால் விடுத்தார். ‘அடுத்து நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தனியாக போட்டியிடும் துணிவு இருக்கிறதா? என்று கேட்டார் ஜெயலலிதா. அப்போதேஇடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெல்வது ஆச்சரியமல்ல என்றார் விஜயகாந்த். ஆயினும், முதல்வரின் சவாலை விஜயகாந்த் சந்திப்பாரா, அல்லது திமுக வேட்பாளரை ஆதரிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. கடைசியில், தேமுதிகவும் களம் கண்டது. அக்கட்சி சார்பில் முத்துக்குமார் போட்டியில் குதித்தார்.

சட்டசபைக்கு வெளியே அதிமுக அரசுக்கு எதிராக பிரசாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, கூட்டணியில் இருந்து கழன்றுகொண்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதும் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கடைசியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தலை வேடிக்கை பார்க்கப்போவதாக அறிவித்துவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தேமுதிகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது. பாரதீய ஜனதா கட்சி, தேர்தல் அனுபவம் பெறுவதற்கென்றே இந்தத் தேர்தலில் களம் புகுந்தது. போட்டியிடாமல் வேடிக்கை பார்ப்பதை விட, தோல்வி உறுதி என்ற தெரிந்தும் போட்டியிட துணிவு வேண்டும். அது பாஜகவுக்கு இருக்கிறது.

இந்தத் தேர்தலை தனது கௌரவப் பிரச்னையாகவே ஜெயலலிதா பார்த்தார். அதன் விளைவாக 32 அமைச்சர்கள் சங்கரன் கோவிலில் முகாமிட்டு பிரசாரம் செய்தார்கள். ஊர், ஊராக அதிமுக எம்எல்ஏ.க்கள், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விஜயம் செய்தார்கள். தொகுதி களைகட்டியது. இந்தப் பிரசாரத்தின் முன்னால் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் எடுபடவில்லை.

அதிமுகவுக்காக ஜெயலலிதாவே ஒருநாள் பிரசாரம் செய்தார். திமுக தரப்பில் ஸ்டாலினும், மதிமுக தரப்பில் வைகோவும், தேமுதிக தரப்பில் விஜயகாந்தும், பாஜக தரப்பில் பொன்.ராதாகிருஷ்ணனும் பிரசாரம் செய்தனர். பிரசாரம், வாக்கு சேகரிப்பு போன்ற நிகழ்வுகள் வழக்கமானவை. அதற்கு மேலான தேர்தல் நடைமுறைகளை முந்தைய திமுக அரசு உருவாக்கி இருந்தது. வாக்காளர்களை விலை பேசும் அந்த நடைமுறை இந்தத் தடவை அதிமுகவைத் தொற்றிக் கொண்டது. ஆயினும், திமுக போலல்லாமல், ‘சத்தமின்றி பணப்பட்டுவாடா நடந்தது.

திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத்தேரதல்களில் பணப்பட்டுவாடா வெளிப்படையாகவே நடந்தது. அதிமுக ஆட்சியில் அது மறைமுகமாக நடந்திருக்கிறது. லஞ்சம் பெற மக்கள் சமூகம் தயாராகிவிட்டால், நமது ஜனநாயகத்தைக் காக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. இந்த ஆபத்தான கலாசாரம் தமிழகத்தில் புரையோடிப் போய்விட்டது.

தேர்தல் களத்தில், மக்களுக்குvத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதிகள் அள்ளித் தெளிக்கப்பட்டன. இவை அனைத்தும் பலமுறை கேட்டவை தானே என்ற அலட்சிய மனோபாவத்துடன் மக்களும் கேட்டுக் கொண்டனர். தேர்தலுக்கு முன்னதாக மதக் கலவரத்தைத் தூண்டிவிடவும் முயற்சிகள் நடந்தன. இதை காவல்துறை கடுமையான அணுகுமுறையால் நசுக்கியது.

தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோதே திமுக தலைவர் புலம்பத் துவங்கிவிட்டார். தேர்தல் அதிகாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அவரும் ஆளும்கட்சியாக இருந்தவர் அல்லவா? கம்யூனிஸ்ட் கட்சிகள், அமைச்சரவையே சங்கரன்கோவிலுக்கு இடம் பெயர்ந்துவிட்டதாக புகார் கூறினர். ஆளும் கட்சி மீது அத்துமீறல் புகார் கூறாமல் இருந்தால் எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ள முடியுமா?

உண்மையில் களத்தில் இருந்த அனைவருக்குமே அதிமுக வெற்றி பெறப் போவது தெரிந்திருந்தது. அவர்களது எதிர்பார்ப்பு வேறு. திமுகவுக்கு எப்படியாவது இரண்டாமிடம் வந்துவிட்டால் போதும் என்பதே இலக்காக இருந்தது. ஏனெனில் அக்கட்சிக்கு அதிமுகவை விட பயங்கர எதிரி அங்கு மதிமுக தான். மதிமுக இரண்டாமிடம் பிடித்துவிட்டால் கருணாநிதிக்கு இதயமே வெடித்துவிடும் என்பதை திமுகவினரும் உணர்ந்துகொண்டு போராடினர்.

எப்படியும் இரண்டாமிடம் கிடைத்துவிடும் என்று திட்டமிட்டாலும், தேமுதிகவை விட அதிக வாக்கு பெறுவதே மதிமுகவின் கனவாக இருந்தது. விஜயகாந்துக்கோ, சவால் காரணமாக களம் இறங்கிவிட்டு குறைந்த வாக்குகள் பெற்றுவிடக் கூடாதே என்று கவலை. இவ்வாறு ஆளுக்கொரு யோசனையில் இருக்க, தேர்தல் நடந்துமுடிந்து விட்டது. மொத்த வாக்காளர்கள் 2,05,840 பேரில், 77.52 சதவீதம் பதிவானது.

மார்ச் 21 ம் தேதி ஒவ்வொரு கட்சியும் தனது தரம் என்ன என்று தெரிந்துகொள்ள நகம் கடித்துக்கொண்டிருக்க, எதிர்பார்த்தது போலவே அதிமுக அபார வெற்றி பெற்றிருக்கிறது. இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

எஸ்.முத்துசெல்வி (அதிமுக): 94,977

ஜவஹர் சூரியகுமார் (திமுக): 26,220

சதன் திருமலைகுமார் (மதிமுக): 20,678

.முத்துகுமார் (தேமுதிக): 12,144

எல்.முருகன் (பாஜக): 1,633

இவ்வாறாக, 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது; போட்டியிட்ட இதர 12 வேட்பாளர்களும் மனுத் தாக்கல் தொகையையும் (டெபாசிட்) இழந்தனர். ஏதோ ஒருவகையில் திமுக, மதிமுக கட்சிகளுக்கு நிம்மதி. ஆயினும் புலம்பல் தாங்கவில்லை.

திமுக தலைவர் தான் புலம்பும்போது என்ன பேசுகிறோம் என்பதையே மறந்துவிட்டார். ''ஆளும்கட்சி இடைத்தேர்தலில் வெல்வது அதிசயம் அல்ல; இந்த வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது; திமுக ஆட்சிக்காலத்தில் 14 இடைத்தேர்தல்களில் வென்றிருக்கிறோம். இதற்கு கவலைப்படத் தேவையில்லை'' என்றெல்லாம் கூறினார் கலைஞர். அதாவது திமுக ஆட்சிக்காலத்தில் தாங்கள் வென்றதெல்லாம் வாக்குகளை விலைபேசித்தான் என்கிறாரா?

வைகோவும் புலம்புவதில் சளைக்கவில்லை. சங்கரன் கோவிலில் ‘’ஊழல்பணம் கங்கையென பாய்ந்தது; எனவே தோல்விக்கு வருந்தவில்லை. மதிமுகவுக்கு கிடைத்த ஒவ்வொரு வாக்கும் விலைமதிக்க முடியாதது'' என்றார் அவர். விஜயகாந்தோ, ''மக்கள் கருத்துக்களை இடைத்தேர்தல்கள் பிரதிபலிப்பதில்லை; உழைப்புக்கும் பணத்துக்கும் இடைப்பட்ட போட்டியில் நாங்கள் தோற்றிருக்கிறோம்'' என்றார்.

அதாவது இவர்கள் அனைவருக்கும் இடைத்தேர்தல் நடத்துவது ஒரு சடங்கு என்று தெரிந்திருக்கிறது. பிறகு ஏன் தேர்தலில் போட்டியிட்டார்கள்? அவரவர் மனதில் ஆயிரம் ஆசைகள். தோற்ற பிறகு புலம்புவதை விட, தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தி கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கலாமே? அது தான் நடக்காது. ஏனெனில், இங்கு ஒவ்வொருவருக்கும் ஆளும் கட்சியை வீழ்த்துவதை விட, சக எதிர்க்கட்சியின் வீழ்ச்சியே தேவையாக இருக்கிறது. எல்லாம் முடிந்த பிறகு ஜனநாயகத்தைக் காப்பதாக ஒப்பாரி எதற்கு?

எந்த ஒரு ஆளும்கட்சியையும் போலவே இடைத்தேர்தலில் கௌரவப் பிரச்னையாகக் கருதி தீவிரமாக பணிபுரிந்த அதிமுக வென்றுவிட்டது. இந்த அளவு வித்தியாசத்தை ஜெயலலிதாவே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆயினும், இந்த வெற்றி அக்கட்சிக்கு அகந்தை அளித்துவிடக் கூடாது. இதற்காக அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள ரங்கநாதரை வணங்குவதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.


பெட்டிச்செய்தி

நாடு முழுவதும் மாற்றம்

பல மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தல்கள் வித்தியாசமான முடிவுகளை அளித்திருக்கின்றன.

கர்நாடகாவில் முதல்வரான சத்தானந்த கவுடா எம்பி பதவியை உதறிய சிக்மகளூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வென்று பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. குஜராத்தில் பாஜக வசம் இருந்த மான்சா சட்டசபைத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது.

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி பிரவம் இடைதேர்தலில் வென்று ஆட்சியின் உயிரைக் காத்துக்கொண்டுவிட்டது. ஓடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், அத்கார் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஆந்திராவில் இடைத்தேர்தல் நடந்த 7 தொகுதிகளில் ஆளும் காண்கிற படுதோல்வி அடைந்திருக்கிறது. தெலுங்கான ராஷ்டிர சமிதி 4 தொகுதிகளிலும், பாஜக, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சுயேச்சை ஆகியோர் தலா ஒரு தொகுதியிலும் வென்றுள்ளனர்.


------------------------

விஜயபாரதம் (06.04.2012)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக